திருப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)


சமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் விற்கப்பட்ட அந்நூல் வேறு எதைப் பற்றியகுறிப்புகளுடன் இருக்கப் போகிறது குதிரையைத் தவிர. வேடிக்கை என்னவென்றால், அந்நூலின் முதல் பக்கத்தில் இந்நூல் விற்பனைக்கன்று சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு மட்டும் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. என்ன சங்கம் விவசாயிகள் மற்றும் குதிரை வளர்ப்போர் சங்கம் திருப்பூர் மாவட்டம்(FARMERS & HORSE BREEDERS ASSOCIATION TIRUPUR DISTRICT). விற்பனைக்கு இல்லை என்று விதித்திருந்தும் எப்படி விற்பனைக்கு வருகிறது ? விலையைக் காட்டிலும் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்தால் விதிமுறை தளர்ந்து விடுகிறது. 

அப்படியென்ன ரகசியம் இதில் இருக்கிறது எனில் குதிரை வளர்க்க விரும்புவோர், வாங்க விரும்புவோர், குதிரை வைத்திருப்போர்களுக்கான குறிப்புகள் அடங்கிய நூல்தானிது. சந்தைக்கு வருகிறவரெல்லாம் குதிரை வாங்கவா முடியும், ஒருபாடு பேர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருகிறார்கள். வருகிறவர்கள் குதிரை வாங்காமல் சந்தைக்குப் போனதற்கான அடையாளமாய், போனால் போகிறதென்று ஒரு சாட்டையையோ அல்லது இது போன்ற ஒரு நூலையோ வாங்கிச் செல்வர் போலிருக்கிறது. 


நூலின் மொழிநடை நூறு வருடங்களுக்கு முந்தியதாகத் இருக்கிறது. குதிரையில் இத்தனை சமாச்சாரங்கள் இருக்கிறதா என்று தோன்றியது. மேலும் வருணாசிரம தருமம் என்ற ஒரு சமாச்சாரத்தைக் கேட்டிருப்போம். அது மனிதர்களுக்கு மட்டும்தானென்றிருந்தேன், ஆனால் மனிதப் பிறவிகள் குதிரைகளின் பிறப்புக்கும் அப்படியொரு விதியை வகுத்து இருக்கிறார்கள் என்று இந்நூலின் மூலம் அறிந்தேன். இதில் வருண பேதம் என்பது குதிரைகளின் நிறத்தை வைத்து கூடும், கூடாது என்று சில விதிகள் கணித்து வைத்திருக்கிறார்கள். பெண் பார்ப்பதற்கு தேவையான தகுதிகளை விட குதிரை வாங்கும் போது இன்னும் அதிகமானவற்றைப்பார்த்து ஆய்ந்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது அந்நூல்.

குதிரை பிறந்த (குட்டி போட்ட) கணத்திலிருந்து அந்த கணிப்புத் தொடங்குகிறது. இன்னின்ன நாட்டில் அல்லது ஊரில் பிறந்த குதிரைகள் இப்படியெல்லாம் இருக்கும், இதனால் அதன் முதலாளிக்கு இலாபமுண்டாகுமா அல்லது கெடுதல் உண்டாகுமா என்றெல்லாம் கணிக்கப்பட்டுள்ளது.

குதிரை எந்த ஊரைச் சார்ந்தது அல்லது நாட்டைச் சார்ந்தது என்பதைப் பொறுத்து அதன் வேகம், திறமை, வலிமை குறித்துச் சொல்கிறது இந்நூல். எந்த நேரத்தில் பிறந்தது என்பதைப் பொறுத்து அதை வாங்குகிறவருக்கு, அல்லது வைத்திருப்பவருக்கு ஏற்படும் மாற்றங்கள் - நன்மைகள், தீமைகள் என்று வரையறுக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று - குறிப்பாக சித்திரை மாதத்தில் குதிரை பிறந்தால் அல்லது பிறந்த குதிரையை வைத்திருந்தால், வாங்கினால் அல்லது வளர்ந்த்தால் அந்தக் குதிரைக் காரன் நட்டமடைவான். எனவே பரிகாரமாய அக்குதிரையை பரதேசிகளுக்கு தானமளித்திட வேண்டும் இல்லையெனில் குதிரையின் காதுகளை அறுத்து விட வேண்டுமாம் (:.
                                        
குதிரைகளின் வயதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்றால், அதன் பற்களின் நிறத்தை வைத்து முடியுமாம். பற்களின் நிறம் மாறும், ஒவ்வொரு நிறமும் மூன்று வருடங்கள் நிலைக்கும் இவ்வாறு ஒன்பது விதமான நிறங்களிருக்கின்றனவாம். காலிகா, அறளிகா, குளிகா, காஜா, மாக்கா, சிங்கா, ஊலிகா, லங்குனி, மற்றும் பெஸ்தி  ஆகியன குதிரைகளின் பற்களின் நிறங்கள். ஒவ்வொரு நிறத்திற்கு குறிப்பிட்ட வயதாக கணிக்கிறார்கள்.

குதிரை வாங்கும் நபரின் முன்பாக அக்குதிரை லத்தி போட்டால் அது நன்மை தரும் குதிரை, எனவே வாங்கலாமாம், சிறுநீர் கழித்தால் அக்குதிரையை வாங்கக்கூடாதாம்.

அடுத்து குதிரையின் ஜாதியறிவது எப்படி என்று விளக்குகிறார்கள்.

குதிரையை நீரின் (நீர் நிலை) முன் விட்டு அதன் மறுவினையைக் கொண்டு ஜாதி பிரிக்கிறார்கள். பிரம்ம க்ஷத்ரிய வைசிய சூத்திர ஜாதியறிதல் இவ்வாறு ;


பிரம்ம ஜாதி -

நீரைக் கண்டவுடன் கண்வரையில் நீரில் தலையை மூழ்க விட்டு நீரைப் பருகும்.
இந்திரியக் கட்டுப்பாடு, நல்ல குணம், புத்திசாலி, குற்றமற்ற நடை
போரில் முன்செல்லாமல் பின்வாங்கும்

க்ஷத்திரிய ஜாதி -

மூக்கு வெளியே தெரியும் படிக்குத் தண்ணீர் குடிக்கும். கோபமும், பராக்கிரமமும் வாய்ந்தது. பெரிய உருவமுடையது. போரில் தனது எஜமானனைக் காக்கும், எதிரிகளைக் குதறி துவம்சம் செய்யும். போருக்குத் தகுதியானவை

வைசிய ஜாதி -

வாய் பட்டும் படாமலும் நீர் பருகும், நீரைக் கண்டு அஞ்சியே நடக்கும். இயற்கைச் சீற்றம் தாங்கும். ஓய்வில்லாது உழைக்கும் முரட்டு வேலைக்கு ஆனது.. சவாரிக்கும், கீழ்ப்படியவும் ஆகாதது.

சூத்திர ஜாதி -

சவுக்காலடித்தாலொழிய நீரில் கால் வைக்காது. அச்சமும் அயோக்கியத்தனமும் உடையது. எஜமானனைக் கீழே தள்ளி கடித்துக் கொன்று விடும்

இதில் சூத்திர ஜாதிக் குதிரையை மட்டும் வாங்கக் கூடாது. வாங்குவோர் நட்டமடைவர். இன்ன பிற மூன்று ஜாதிக் குதிரைகளையும் வாங்கலாம் அதிலும் வைசிய ஜாதிக்குதிரை கடின வேலைக்கும் மட்டும் உதவும். முதலிரண்டு ஜாதிகளுமே வாங்கத் தக்கவை.. பெருமைக்குரியவை.

குதிரைகளின் சுழியை வைத்தும் சில பண்புகளைக் கணிக்கலாமாம்.

குதிரைகளின் ராசி வகைகள் -  காத்திராசி, பத்தவிராசி, கீரிராசி

என்றெல்லாம் அந்நூல் விவரித்துச் செல்கிறது. வருண பேதமும் இருக்கிறது, இதில் குதிரையின் வண்ணங்களின் கலவையைக் கொண்டு பிரிக்கிறார்கள். வால் மட்டும் வெள்ளை மற்ற இடங்கள் கருப்பு, ஒரு கால் மட்டும் கருப்பு மற்ற பாகங்கள் வெண்மை, அல்லது பிடரி கண் முடிகள் மட்டும் கருப்பு இன்ன பிற இடங்கள் வேறு நிறம் என்று ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பெயராக வைத்திருக்கிறார்கள். குதிரைகள் இப்படியாக பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டேன். இதிலிருந்து என்ன புரிகிறதோ அதைப் புரிந்து கொள்ளுங்கள் நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. 
                                                                                                           
Download As PDF
Bookmark and Share

Post Comment

போயே விட்டேன் வாங்கியே விட்டேன் !



இன்றுதான் கடைசி நாள் என்றோ ஞாயிற்றுக் கிழமை போன்றே தெரியாதவாறு கூட்டமில்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. நண்பகல் வேளை என்பதாலா அல்லது வாசகர்கள் மொத்தமே அவ்வளவுதான் என்று தெரியவில்லை
 

இம்முறை வாழ்க்கையிலேயே அதிக அளவாக ரூ 1500 க்கு நூல்களை அள்ளி வந்தேன் திருப்பூரில் நடந்த நூல்கள் கண்காட்சியின் இறுதி நாளிலே. இந்த வருடமாவது குறும்படங்கள் பார்க்கலாம். கலை நிகழ்ச்சிகள் காணலாம். சொற்பொழிவுகள் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. சென்ற வருடம் நடந்த கண்காட்சி ஏதோ நேற்றைக்குத்தான் நடந்தது போலிருந்தது ஆனால் அதற்குள் ஒரு வருடம் ஆகி விட்டிருக்கிறது.
 

கண்காட்சிக்குச் சென்று நூல்களை வாங்கலாமா வேண்டாமா என்று எண்ணுமளவுக்கு சோம்பேறித்தனமாக இருந்தது. நல்ல வேளையாக சென்று வாங்கி வந்தது நல்லதாகப் போய்விட்டது. பணம் முக்கால்வாசி தீர்ந்து விட்டதாலும், சென்ற வருடம் வாங்கிய நூல்களிலேயே பாதி படிக்காமல் உறங்கிக் கொண்டிருப்பதாலும் இம்முறை கொஞ்சம் அதிகமாக வாங்கியும் ஆசை தீராத நிலையிலும் பத்து பதிப்பகங்களுக்குள் நுழையாமல் கூட திரும்பி விட்டேன்.

ரூ 250 க்கும் மேல் நூல்கள் வாங்கினால் நூல் ஆர்வலர் என்ற சான்றிதழ்கள் தருவார்கள். பட்டப்படிப்பில் வாங்கிய சான்றிதழ்களே வெட்டியாகக் கிடக்கும் போது, இது போன்ற தம்பட்டங்கள் எதற்கென்றுதான் போன வருடமே வாங்கவில்லை. இம்முறையும் வாங்கவில்லை.

வாங்கிய நூல்கள்

அனொனிமா (முகம் மறைத்தவள்) 

ஜெர்மனியில் ரஷ்யப் படைகள் புரிந்த பாலியல் வன்முறைகள் குறித்தது. இது குறித்த கட்டுரையை கீற்றுவில் படித்ததிலிருந்தே வாங்க வேண்டுமென்ற தவிப்பு இருந்தது. இந்நூலைப் பற்றி இருப்பதாகக் கேள்விப்பட்டு வாங்க வேண்டும் என்றேதான் போனேன். இரண்டு பதிப்பகங்களில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இறுதியில் எதிர்பாராவிதமாக எதிர் வெளியீட்டகத்தில் வைத்திருந்தார்கள்.

அன்னி ஃப்ராங்க் டைரிக் குறிப்புகள் 
 
இது பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஜெர்மனியில் நாஜிக்களின் கொடூரத்தை தனது நாட்குறிப்பேட்டில் பதித்த சிறுமியின் குறிப்புக்கள். இதுவும் எதிர் வெளியீடு. இந்த இரண்டு நூல்களின் முக்கியமானவை என்பதால் வாங்கிவிட்டேன்.

அமைதியின் நறுமணம் - ஐரோம் ஷர்மிலாவின் கவிதைகள்

ஐரோம் ஷர்மிளாவுக்கு என்னால் வேறு என்ன கைம்மாறு செய்யமுடியும் ? அவரது கவிதைகளைப் படிப்பதை விட. அவர் மீது கொண்ட மதிப்பினால் வாங்கினேன்.

ஈரான் - ஒரு குழந்தைப் பருவத்தின் கதை

இதை சென்ற வருட கண்காட்சியின் போதே எடுத்துப் பார்த்து விட்டு காமிக்ஸ் போன்ற நூல் நூறு ரூபாயாக இருக்கிறது. ஆங்கிலத்தில் வேறு இருக்கிறதே என்று அரை மனதுடன் வைத்து விட்டு வந்து விட்டேன். இம்முறை தமிழில் வைத்திருந்தார்கள் வாங்கி விட்டேன்.

சிறுவர் இலக்கியம் என்ற பெயரில் இருந்த சில மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் வாங்கினேன்.

நீ எறும்புகளை நேசிக்கிறாயா ?

வானவில் பறவையின் கதை


இவையெல்லாம் போக குழந்தைகளுக்கான பெயர்கள் என்ற தலைப்பில் மட்டும் மூன்று நூல்களை வாங்கினேன். உடன்பிறப்பின் குழந்தைக்கு பெயரிட வேண்டியிருப்பதால்.

இது போக தலைப்புகள் கொண்டே சிலவற்றை வாங்கினேன். விலையையும் கருத்தில் கொண்டேதான்.

அறியப்படாத தமிழகம் - தொ பரமசிவன்

ஹரப்பா வேதங்களின் நாடா ?

1857

சாமிகளின் பிறப்பும் இறப்பும்

சூஃபி - விளிம்பின் குரல்

எங்கெ செல்கிறது கல்வி ?

தமிழர் மறந்த மரபுக் கலைகள்

கோட்சேயின் குருமார்கள்

தலித் முஸ்லிம்

ஆயிஷா

பெட்ரோல் அரசியல்

ஈராக் - வரலாறும் அரசியலும்

இஸ்லாம் - நேற்று இன்று நாளை

பெரியார்  தமிழுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இரண்டகம் செய்தாரா ?

அழியட்டும் ஆண்மை

தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம் பெரியாரும் ம.பொ.சி.யும்

கமலின் கலப்படங்கள்

ஈரானிய சினிமா


இத்தனையும் அடுத்த வருட கண்காட்சிக்குள் படித்து விட வேண்டும் என்று வழக்கம் போலவே முடிவு செய்திருக்கிறேன். பார்ப்போம். இம்முறையும் வால்கா முதல் கங்கை வரை நூலை எடுத்துப் பார்த்து விட்டு விலை காரணமாக வைத்து விட்டேன். பின்பு வாங்கிக் கொள்ளலாம் என. இது போல் ஒவ்வொரு முறையும் பல நூல்களை விலை காரணமாகவே வாங்க முடிவதில்லை.

ஒரு பயணக் கட்டுரையோ அல்லது கண்காட்சி குறித்தோ ஒரு கட்டுரை வரையுமளவிற்கு எழுத்தாளுமை இன்னும் எனக்கு வரவில்லை என்பதையே காட்டுகிறது. பத்து வருடங்களுக்கும் மேலாக பொது மக்கள் திரள் ஊடகம் தவிர பல்வேறு மாத இதழ்களும், நூல்களும், விமர்சனங்களும் இலக்கியங்களும் வாசித்து வருகிறேன். இருப்பினும் எனக்குள் பெரிய அளவில் எழுத்து அளவிலோ சிந்தனை அளவிலோ முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

சிறு வயதிலிருந்தே தமிழார்வம் அதிகமாக இருந்தது. அது ஆக்கப் பூர்வமாக  இல்லாமல் வெறும் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்ற அளவிலேயே இருந்தது. படிக்க நிறைய நேரமும் ஆர்வமும் இளம் பருவமும் இருந்த போது நூல்கள் வாங்குவதற்குப் போதுமான வாய்ப்பு வசதிகள், பணமும் இருக்க வில்லை. இப்போதும் பணம் ஒன்றும் பெரிதாகப் புழங்க வில்லை. கல்லூரி முடிந்ததிலிருந்தே இணையத்திலேயே அதிகம் வாசிக்கும் நிலையாக இருக்கிறது. பிபிஓ பணிச்சுமை, மன அழுத்தத்தின் காரணமாகவும் வாசிப்பு கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விட்டது, எப்போதாவது மட்டுமே வாசிக்க இயலுகிறது.

இருந்தும் எப்படியாவது இதிலிருந்து மீண்டு விடவே எத்தனிக்கிறேன். ஒவ்வொரு நூலையும் படித்து அதைப் பற்றியாவது எழுதி வலைப்பூவை ஒப்பேத்தி விடுவதாகத் திட்டம். அடுக்கி வைக்கப்பட்ட நூல்களின் மேலுள்ள அட்டையில் ஆன்னி ஃப்ராங்க் என்னைப்பார்த்து "நீ படிச்சுக் கிழிச்சுட்டாலும் என்று" என்று கிண்டலாக சிரிப்பதாகத் தோன்றுகிறது.  

Download As PDF
Bookmark and Share

Post Comment

தமிழகத்தில் மராட்டிய பாணியில் பரவும் வட இந்தியர் வெறுப்பு மனோபாவம் !!

ற்போது தமிழகத்தில் வட இந்திய எதிர்ப்பு மனோபாவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. உதாரணமாக தற்போது நடந்த என்கவுன்டர் என்ற மோதல் கொலையின் பின்னால் அதற்குக் கிடைத்த பரவலான வரவேற்பு. இந்த கொலைகளுக்குக் கிடைத்த வரவேற்புக்கு என்ன காரணம் தமிழ்திரைப்பட நாயகத்தனமான ஒரு மனோபாவம் அதாவது தவறு செய்தால் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் சட்டம், மனித உரிமை, முறையான விசாரணை இது போன்று நேரத்தை செல்வழிக்காமல் இருப்பதுதான் இது போன்ற குற்றங்கள் குறைய வழிவகுக்கும் என்ற பாணியிலானவை. இன்னொரு காரணம் என்னவெனில் அவர்கள் வட இந்தியர்கள் என்பது மட்டுமே. தற்போது தமிழகத்தில் வட இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகமாகி வருகிறது.

வட இந்தியாவிலிருந்து அதிகமானவர்கள் இங்கு இடம்பெயர்ந்து கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகமானவர்கள் தமிழகத்தின் பெருநகரங்களில் நடைபெறும் கட்டிட வேலைகள், சாலைகள், பாலங்கள் அமைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களல்லாமல் கல்வி கற்க வந்தவர்கள், வேலை தேடி வந்தவர்கள், போர்வைகள் விற்பவர்கள் போன்ற வெவ்வேறு வகையிலான பொதுவாகவே அயலவர்கள் அந்நியர்களுக்கு எதிரானவர்களுக்கு இருக்கும் மனோநிலை தற்போது இந்த வட இந்தியர்களுக்கு எதிராக அதிகமாக இருக்கிறது. அங்கங்கே இவர்களால் நடத்தப்படும் சிறு சிறு குற்றங்கள் முதல் பெரிய குற்றங்கள் வரை இவர்களுக்கு எதிரான குற்றவாளி மனப்பான்மையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதால் ஹிந்தியைத் தவிர வேறு மொழியை அறியாதவர்கள். தமிழகத்தில் யாருக்கும் இந்தி பெரிய அளவில் தெரியாததால் அங்கங்கே ஏற்படும் சங்கடங்கள், இடைஞ்சல்கள் என இவர்கள் மீது அனைவரும் எரிச்சலைக் காட்டுகிறார்கள். குறிப்பாக பேருந்து நடத்துனர்கள் சாதாரணமாகவே நம்மூர்களில் நடத்துனருடன் சண்டைபோடாமல் இறங்கவே வாய்ப்பிருக்காது. சில்லைறை கொடுக்கல் வாங்கலில் இருந்து சரியாக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவது அல்லது நிறுத்தாமல் போவது, வேகமாக இறங்க ஏற, எல்லோரையும் உள்ள போகச்சொல்லியே வாழ்க்கை வெறுத்துப்போவது, போதாக்குறைக்கு ஏற்றப்பட்ட பேருந்துக் கட்டணம் என ஏற்கெனவே உச்சகட்ட எரிச்சலில் இருக்கும் நடத்துனர்களுக்கு மந்தமாக எதிர்வினை புரியும் வட இந்தியர்கள், நன்கு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். மொழியும் புரியாமல் பேசவும் தெரியாமல், பல  இடத்திலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இங்கிருக்கும் மலையாளிகளின் மீது பொழியப்பட்ட வெறுப்புணர்வு வாசகங்கள், தாக்கப்பட்ட அவர்களது நிறுவங்கள் என தமது கையாலாகாத்தனத்துக்கும், கோழைத்தனத்துக்கும் எவனோ ஒரு அப்பாவியின் மீது வீரத்தைக் காட்டும் மொன்னைகள்தான் இது போன்ற பொதுவான அடிப்படையே இல்லாத ஒரு குறிப்பிட்ட குழுவினரின் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவனுங்க அப்படித்தான் என்ற வெறுப்பை விதைக்கிறார்கள். அது போலத்தான் வட இந்தியர்கள் என்றாலே திருடர்கள் என்ற வகையில் இதுவும் பரவுகிறது. மற்றபடி மற்றவனை பகடி செய்யும் விதத்தில் தமிழ்நாட்டுக்காரர்கள் எவ்வகையில் குறைந்தவர்கள் இல்லைதான். கோவையின் பீளமேடு பகுதியில் வசிக்கும் நைஜீரிய இளைஞர்கள் அப்பகுதி மக்கள் தம்மை இனரீதியாகக் கிண்டல் செய்து வருவதாக ஒரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சில மாதங்களுக்கும் முன்பு தினத்தந்தியில் படித்தேன்.

இவர்கள் செய்த சில செயல்கள் இதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன, கோவையின் புறநகர்ப்பகுதி ஒன்றில் 3 வட இந்தியர்கள் ஒரு மாட்டுக் கன்றை புணர முயற்சி செய்திருக்கிறார்கள். அது கத்தாமல் இருக்க மண்வெட்டியின் கைப்பிடியை அதன் வாயில் விட்டு அடைக்க முயற்சி செய்ய மரண் பீதியில் அது கத்தி மாட்டுகன்றின் சொந்தக்காரர் வந்து பார்த்து பின்பு ஊர்வலமாக அம்மூவரையும் கொண்டுபோய் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இன்னொரு நிகழ்வில் இரு ராஜஸ்தானிகளிடையே ஏற்பட்ட குழுச்சண்டையில், ஒருவனை அடிக்க இன்னொருவன் ஆளை நியமித்திருந்தான், அவன் குறிப்பிட்ட இடத்தில் அடிக்கப்படவேண்டியவன் வந்து கொண்டிருப்பதை தகவல் தர அடியாள் தாக்குவதாகத் திட்டம், இது சொதப்பி திரைப்படங்களில் வருவது போல் நம்மவர் ஒருவர் அவ்வழியில் வந்திருக்கிறார். அவரை தவறுதலாகத் தாக்கிவிட்டான் பின்பு அவனை நையப்புடைத்துவிட்டார்கள்.

இப்படியாகப் பல நிகழ்வுகள் அங்கங்கே. தற்போது ஒரு நிகழ்வு திருடன் எனக் கருதி பள்ளிக்கரணையில் வட இந்தியனைப் போல் தோற்றமுடைய ஒரு இளைஞனை கும்பலாகக் கூடி அடித்து நொறுக்கியிருக்கிறார்கள், ஆனால் அவனோ மனநிலை சரியில்லாத ஆந்திராவைச் சேர்ந்தவன். இதற்கெல்லாம் என்ன செய்ய ?

முதலில் இந்த கும்பல் வன்முறையின் நோக்கம்தான் என்ன ஒருத்தன் சிக்கியவுடன் என்னவென்றே தெரியாமல் வந்து அடிப்பதுதான். அதிலும் சாலையில் ஏதாவது விபத்து நேர்ந்துவிட்டால் யார்மீது தவறு என்றெல்லாம் நின்று பேசவோ யோசிக்கவே எல்லாம் முயல்வதே இல்லை ஆ ஊ ன்னா கைவைக்க வேண்டியது. இது கொலைவரை நீள்கிறது. இதனால்தான் ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால் உயிருக்கும் அடிக்கும் பயந்தே ஓட்டுநர்கள் தப்பியோடிவிடுகிறார்கள். திருடன் என்ற ஐயத்தின் பேரில் இது போன்று கும்பலாக சேர்ந்து அடிப்பதால் பல அப்பாவிகள்தான் சாகிறார்கள். மன நிலை சரியில்லாதவர்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படிக் கும்பலாக அடிப்பதை, கொல்வதை வீடியோ எடுக்கிறார்கள் நூற்றுக் கணக்கானோர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்ன காட்டுமிராண்டித்தனமிது ?

சும்மாவாச்சுக்கும் இம்மாதிரி வட இந்தியர்களை வெறுப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். இது நம் மாநிலத்திலிருந்தும் எல்லா மாநிலங்களுக்கும் சென்று கூலி வேலை பார்க்கும் தமிழகத்தவர்கள் இருக்கிறார்கள். இதே போல் அம்மாநிலத்தவர்கள் வன்முறையில் இறங்கினால் என்னவாவது ? மலையாளிகள் ஆதிக்கம் பெருகிவிட்டது, வட இந்தியர் எண்ணிக்கை பெருகிவிட்டது என்பதற்காக கோபப்படுகிறவர்கள் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருக்கும் நம்மவர்கள் நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படி ஊரை விட்டுப் பிழைப்புத் தேடிப்போகக் காரணம் அவர்களின் தன்னலமல்ல. உலகமயம்தான் இப்படி எல்லோரையும் குடும்பத்தை விட்டு ஊரூராக அலைய வைத்துள்ளது. மேலும் அவர்கள் கொத்தடிமைகள் போல்தான் வேலை வாங்கப்படுகிறார்கள். குறைவான நேரமே உறங்குகிறார்கள். குறைவான ஊதியமே அவர்களுக்குக் கிடைக்கிறது. வேலையில்லாதவர்களும் உண்டு. இவர்களால்தான் பெரும்பாலான சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. போதாக்குறைக்கு திருப்பூர், சென்னை வங்கிக்கொள்ளைகளைத் தொடர்ந்து இவர்கள் மீதான குற்றப்பரம்பரை மனப்பான்மை காவல்துறைக்கும் அதிகரித்து இவர்களைத் தனியாக கணக்கெடுத்து சோதனை செய்வது என்ற நிலைவரை கொண்டு வந்து விட்டுள்ளது.

இது போன்ற நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் தமிழகமும் மகாராஷ்ட்ர, கர்நாடக மாநிலங்களைப் போல் சகிப்புத்தன்மையற்றவர்கள் பட்டியலில் இடம்பெறக்கூடும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

திருப்பூர் நூல்கள் கண்காட்சி 2012 - என் கனவு நிறைவேறியது !!

கடந்த பத்து நாட்களாக நடந்த திருப்பூர் அறிவுத் திருவிழா இன்றுடன் முடிவடைந்தது. அடியேனின் பணிச்சூழல் காரணமாக கடந்த வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களாக பணி நிமித்தமாக அலுவலகத்திலேயே கிடக்க வேண்டியிருந்தது. அதனால் திருவிழா முடியுந் தருவாயில் நேற்றுத்தான் செல்ல முடிந்தது.

அதுவும் காலையில் 11 மணிவாக்கில் சென்றுவிட்டு 2 மணியளவில் திரும்பி வந்துவிட்டேன் முந்தைய நாள் இரவில் விழித்திருந்து அமெரிக்கத் துரைமார்களின் அலுவல்களை முடித்துவிட்டு உறங்காமல் வந்திருந்தேன். அதற்கு மேல் தாக்குப்பிடிக்க இயலாது. முகநூலில் திருப்பூர் கண்காட்சியைக் குறித்த செய்திகளைக் குறையாமல் வழங்கினார்கள். அதன் மூலம் ஒரு வித மன நிறைவு அடைந்திருந்தேன்.

அவ்வப்போது கிடைத்த செய்திகளைக் கொண்டு முன்கூட்டியே எந்தெந்த நூல்களை வாங்க வேண்டுமென்று கிட்டத்தட்ட முடிவு செய்தே வைத்திருந்தேன். இதுவரையில் நடந்த கண்காட்சிகளில் வாங்கியதைக் காட்டிலும் இம்முறையே அதிக அளவில் நூல்களை அள்ளிச் சென்றேன். சென்னையில் நான்கு வருடங்களுக்கும் மேல் இருந்த போதும் இரண்டு முறை கண்காட்சி குறித்து அறிந்த போதும் அதற்கு செல்ல முடியவில்லை. வேலை தேடும் படலத்தில் ஒரு முறையும், விடுமுறையில்லாமல் வேலை செய்த காலத்திலும் வந்திருந்த நூல்கள் கண்காட்சிக்குச் செல்ல முடியாமைக்கு பொருளாதாரமின்மையே முதன்மைக் காரணமாக இருந்தது.

ஆனால் தற்போது கையில் சில ஆயிரங்கள் வைத்திருந்ததால் துணிச்சலாக நூல்களை வாங்குவதற்கென்றே ஆயிரம் ரூபாய்க்கு மேலாக செலவு செய்ய முடிந்தது. உண்மையில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவது இது முதன் முறை பல வருடங்களாக நூல்களின் மேலிருந்த அடங்காத ஆர்வம்தான். 10 வருடங்களுக்கு முன்பென்றால் கூட வாங்கியிருப்பேன் காசு இல்லாததுதான் பிரச்சனை. நான் மனநிறைவு அடைந்தது எனக்குப் பிடித்த என்று சொன்னால் சரியாக இராது, நான் வாங்க வேண்டிய கடமையாக நினைத்த சில நூல்களை வாங்கினேன்.

தம்முடைய வணிக நோக்கங்களுக்காக அல்லாமல், மனிதகுல மேன்மைக்காகவும், ஒரு இலட்சியத்திற்காகவும் நடத்தும் வெளியீட்டகங்களின் பதிப்புகளை தவறாமல் வாங்க வேண்டுமென நினைப்பேன்.  இதில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், பூவுலகின் நண்பர்கள் போன்ற மாத இதழ்கள் அவர்களின் வெளியீடுகள் போன்றவை. இவைகளுக்கு நான் சந்தாதாரராக இல்லாத காரணம் என்னுடைய ஊருக்கு அஞ்சல்காரர் வரவே மாட்டார். எங்கள் பகுதிக்கு நான்கு ஊர்களுக்கும் சேர்த்து ஒரே ஒருவர்தானிருக்கிறாராம். எப்போதாவது மட்டுமே வருவாராம். ஏற்கெனவே சில முறை அவருடைய கொண்டு சேர்க்கும் முறையை கண்டுணர்ந்து அனுபவித்தவன் என்பதால சந்தா செலுத்தவில்லை. முடிந்த வரையில் வெளியில் சென்று வாங்கி விடுவது வழக்கம். பூவுலகின் நண்பர்கள் எங்கு கிடைக்கிறது என்று தெரியவில்லை.

வெவ்வேறு பதிப்பகங்கள் இருந்தாலும் ஒரு சில கடைகளுக்குள் மட்டுமே நுழைவதற்கு விரும்புகிறார்கள். சில கடைகள் காற்று வாங்கின. சிலர் என்னவென்று தெரியாமல் வந்து சுற்றிப்பார்த்து விட்டுப் போனார்கள். நான் தேடும் கடைகள் அத்தகையவையே. முதலில் ஒரு பதிப்பகத்தில் சென்று பெயர் நினைவில்லை, தாண்டவக்கோன் என்பவர் இயக்கிய குழந்தைகளுக்கான ஐந்து குறும்படங்கள் கொண்ட டிவிடி ஒன்றை வாங்கினேன். பார்த்து விட்டுக் கருத்து சொல்லவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார் அங்கிருந்தவர்.

இன்னும் பல்வேறு இடங்களில் போய் சில நூல்களை வாங்கினேன். வாங்காமல் விட்டதும் உண்டு. மறந்தததும் உண்டு தற்போதைக்கு  வேண்டாமென்றதும் உண்டு. வாங்காம விட்டவை என்று பார்த்தால்,

"ஈரான்" என்ற காமிக்ஸ் அது குறித்து இன்னும் கேள்விப்பட்டதில்லை ஆனாலும் விடியல் பதிப்பகத்தினரின் வெளியீடு என்பதால் மட்டும் ஒரு வித ஆர்வமிருந்தது. பின்பு வாங்கலாம் என்று வந்துவிட்டேன். அடுத்ததாக ஃபிடல் காஸ்ட்ரோவின் "என் வாழ்க்கை" என்ற விடியல் பதிப்பக நூலொன்று நானூற்றைம்பது ரூபாயென்பதால் அதையும் தள்ளிப் போட்டுவிட்டேன்.  இது மாதிரி பல நூல்களை எடுத்துப்பார்த்து விட்டு, "ம்ஹூம்", "ப்ச்" சரி பின்னாடி பார்க்கலாம் என்று வைத்து விட்டே செல்ல வேண்டியிருந்தது. ஷோபா சக்தியின் "குழந்தைப் போராளி" "கறுப்பு அடிமைகளின் கதை" (ஏற்கெனவே படித்துவிட்டேன் என்றாலும்), தமிழ் கணினி தொடர்பான நூல்கள், தமிழ் நாள்காட்டி மற்றும் சில தமிழுணர்வு சார்ந்த நூல்கள் போன்றவை  இவையில் சில. பெரியார் குறித்த எந்த நூலையும் இம்முறை வாங்கவில்லை. கலப்பை வெளியீட்டகத்தின் "கெட்ட வார்த்தை பேசுவோம்' என்ற நூலை வாங்க வேண்ட்மென்று நினைத்திருந்தேன் ஆனால் மறந்தே போனது.

ஒரே நூலை வெவ்வேறு வெளியீட்டகங்களின் கடைகளில் காணமுடிந்தது. பொதுவாகப் பார்த்தால் கார்ல் மார்க்ஸ். ஃபிடல், சேகுவேரா, பெரியார் குறித்த நூல்களை பல் இடங்களில் காணமுடிந்தது. இதற்கு மகிழ்வதா வருந்துவதா என்றே தெரியவில்லை. நிச்சயம் மகிழ முடியாது. சே இளைஞர்களின் நவீன உடைகளின் சின்னமானது போல் இது போன்ற புரட்சிக்காரர்களும் நூல் வணிகர்களிடம் சிக்கி விட்டார்கள் என்றே வருந்துகிறேன். அடுத்து பிரபாகரன் படம் போட்ட பல வகையான நூல்கள். ஆங்கிலப் புதினங்கள் நான்கு எடுத்தால் ரூ 200 என்று ஒரு கடையில் விளம்பரம், எனக்கும் ஆங்கிலம், ஆங்கிலப் புதினங்களுக்கும் ஏழாம் பொருத்தம், அது குறித்து அ னா ஆவண்ணா கூடத் தெரியாது. சில வருடங்களுக்கு முன் அய்ன் ரேண்ட்- இன் The Fountainedhead- ஐ படிக்க முயன்று படுதோல்வி அடைந்தேன். ஆங்கில புதினங்கள் வாசிக்க ஆங்கிலம் வேண்டும். நமக்குப் போதாது. மூன்று சொற்களுக்கொருமுறை அகராதியைப் புரட்டினால் அந்த புதினத்தைப்  படித்து முடித்த மாதிரிதான்.  ஒரு பத்தி முடித்து அடுத்ததைப் படிக்கத் துவங்கினால் மறந்து விடுகிறது முந்தைய பத்தி. அதனால்தான் ஆங்கிலம் எதுவும் வாங்கவில்லை.

நான் வாங்கியவை சில :

விடியல் பதிப்பகத்தில் -

 பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்
உயிரிகள் தோன்றியவிதம் - சார்லஸ் டார்வின்
குணா பாசிசத்தின் தமிழ் வடிவம்
பெயரிடப்படாத நட்சத்திரங்கள்

தலித் முரசு -

நான் யார்க்கும் அடிமையில்லை - வே. மதிமாறன்
பாரதி பக்தர்களின் கள்ள மௌனம் - வே. மதிமாறன், மருதையன்
மற்றும் பாலை திரைப்படத்தின் டிவிடி.

பூவுலகின் நண்பர்கள் வெளியீடுகளைத்தான் அதிகம் வாங்கினேன். ஒரு மாத இதழை வேண்டாமென்று திருப்பிக் கொடுத்தேன். கடைக்காரர் பாதிவிலைக்கு எடுத்துக் கொள்ளச் சொன்னார்.  பூவுலகின் நண்பர்கள் வெளியீடுகளில் கூடங்குளம் போராட்டம் குறித்த அனைத்து நூல்களையும் வாங்கி விட்டேன்.

பாரதி புத்தகாலயத்தில் நிறைய வாங்கினேன். பட்டியல் நீளமானது.

"ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்" வாங்கினேன்.

"சோளகர் தொட்டி" வாங்கி விட்டேன்.

இவையனைத்தையும் படித்து முடித்தால் மீதி பாவமும் தீர்ந்து விடும்.
Download As PDF
Bookmark and Share

Post Comment