திருப்பூர் நூல்கள் கண்காட்சி 2012 - என் கனவு நிறைவேறியது !!

கடந்த பத்து நாட்களாக நடந்த திருப்பூர் அறிவுத் திருவிழா இன்றுடன் முடிவடைந்தது. அடியேனின் பணிச்சூழல் காரணமாக கடந்த வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களாக பணி நிமித்தமாக அலுவலகத்திலேயே கிடக்க வேண்டியிருந்தது. அதனால் திருவிழா முடியுந் தருவாயில் நேற்றுத்தான் செல்ல முடிந்தது.

அதுவும் காலையில் 11 மணிவாக்கில் சென்றுவிட்டு 2 மணியளவில் திரும்பி வந்துவிட்டேன் முந்தைய நாள் இரவில் விழித்திருந்து அமெரிக்கத் துரைமார்களின் அலுவல்களை முடித்துவிட்டு உறங்காமல் வந்திருந்தேன். அதற்கு மேல் தாக்குப்பிடிக்க இயலாது. முகநூலில் திருப்பூர் கண்காட்சியைக் குறித்த செய்திகளைக் குறையாமல் வழங்கினார்கள். அதன் மூலம் ஒரு வித மன நிறைவு அடைந்திருந்தேன்.

அவ்வப்போது கிடைத்த செய்திகளைக் கொண்டு முன்கூட்டியே எந்தெந்த நூல்களை வாங்க வேண்டுமென்று கிட்டத்தட்ட முடிவு செய்தே வைத்திருந்தேன். இதுவரையில் நடந்த கண்காட்சிகளில் வாங்கியதைக் காட்டிலும் இம்முறையே அதிக அளவில் நூல்களை அள்ளிச் சென்றேன். சென்னையில் நான்கு வருடங்களுக்கும் மேல் இருந்த போதும் இரண்டு முறை கண்காட்சி குறித்து அறிந்த போதும் அதற்கு செல்ல முடியவில்லை. வேலை தேடும் படலத்தில் ஒரு முறையும், விடுமுறையில்லாமல் வேலை செய்த காலத்திலும் வந்திருந்த நூல்கள் கண்காட்சிக்குச் செல்ல முடியாமைக்கு பொருளாதாரமின்மையே முதன்மைக் காரணமாக இருந்தது.

ஆனால் தற்போது கையில் சில ஆயிரங்கள் வைத்திருந்ததால் துணிச்சலாக நூல்களை வாங்குவதற்கென்றே ஆயிரம் ரூபாய்க்கு மேலாக செலவு செய்ய முடிந்தது. உண்மையில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவது இது முதன் முறை பல வருடங்களாக நூல்களின் மேலிருந்த அடங்காத ஆர்வம்தான். 10 வருடங்களுக்கு முன்பென்றால் கூட வாங்கியிருப்பேன் காசு இல்லாததுதான் பிரச்சனை. நான் மனநிறைவு அடைந்தது எனக்குப் பிடித்த என்று சொன்னால் சரியாக இராது, நான் வாங்க வேண்டிய கடமையாக நினைத்த சில நூல்களை வாங்கினேன்.

தம்முடைய வணிக நோக்கங்களுக்காக அல்லாமல், மனிதகுல மேன்மைக்காகவும், ஒரு இலட்சியத்திற்காகவும் நடத்தும் வெளியீட்டகங்களின் பதிப்புகளை தவறாமல் வாங்க வேண்டுமென நினைப்பேன்.  இதில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், பூவுலகின் நண்பர்கள் போன்ற மாத இதழ்கள் அவர்களின் வெளியீடுகள் போன்றவை. இவைகளுக்கு நான் சந்தாதாரராக இல்லாத காரணம் என்னுடைய ஊருக்கு அஞ்சல்காரர் வரவே மாட்டார். எங்கள் பகுதிக்கு நான்கு ஊர்களுக்கும் சேர்த்து ஒரே ஒருவர்தானிருக்கிறாராம். எப்போதாவது மட்டுமே வருவாராம். ஏற்கெனவே சில முறை அவருடைய கொண்டு சேர்க்கும் முறையை கண்டுணர்ந்து அனுபவித்தவன் என்பதால சந்தா செலுத்தவில்லை. முடிந்த வரையில் வெளியில் சென்று வாங்கி விடுவது வழக்கம். பூவுலகின் நண்பர்கள் எங்கு கிடைக்கிறது என்று தெரியவில்லை.

வெவ்வேறு பதிப்பகங்கள் இருந்தாலும் ஒரு சில கடைகளுக்குள் மட்டுமே நுழைவதற்கு விரும்புகிறார்கள். சில கடைகள் காற்று வாங்கின. சிலர் என்னவென்று தெரியாமல் வந்து சுற்றிப்பார்த்து விட்டுப் போனார்கள். நான் தேடும் கடைகள் அத்தகையவையே. முதலில் ஒரு பதிப்பகத்தில் சென்று பெயர் நினைவில்லை, தாண்டவக்கோன் என்பவர் இயக்கிய குழந்தைகளுக்கான ஐந்து குறும்படங்கள் கொண்ட டிவிடி ஒன்றை வாங்கினேன். பார்த்து விட்டுக் கருத்து சொல்லவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார் அங்கிருந்தவர்.

இன்னும் பல்வேறு இடங்களில் போய் சில நூல்களை வாங்கினேன். வாங்காமல் விட்டதும் உண்டு. மறந்தததும் உண்டு தற்போதைக்கு  வேண்டாமென்றதும் உண்டு. வாங்காம விட்டவை என்று பார்த்தால்,

"ஈரான்" என்ற காமிக்ஸ் அது குறித்து இன்னும் கேள்விப்பட்டதில்லை ஆனாலும் விடியல் பதிப்பகத்தினரின் வெளியீடு என்பதால் மட்டும் ஒரு வித ஆர்வமிருந்தது. பின்பு வாங்கலாம் என்று வந்துவிட்டேன். அடுத்ததாக ஃபிடல் காஸ்ட்ரோவின் "என் வாழ்க்கை" என்ற விடியல் பதிப்பக நூலொன்று நானூற்றைம்பது ரூபாயென்பதால் அதையும் தள்ளிப் போட்டுவிட்டேன்.  இது மாதிரி பல நூல்களை எடுத்துப்பார்த்து விட்டு, "ம்ஹூம்", "ப்ச்" சரி பின்னாடி பார்க்கலாம் என்று வைத்து விட்டே செல்ல வேண்டியிருந்தது. ஷோபா சக்தியின் "குழந்தைப் போராளி" "கறுப்பு அடிமைகளின் கதை" (ஏற்கெனவே படித்துவிட்டேன் என்றாலும்), தமிழ் கணினி தொடர்பான நூல்கள், தமிழ் நாள்காட்டி மற்றும் சில தமிழுணர்வு சார்ந்த நூல்கள் போன்றவை  இவையில் சில. பெரியார் குறித்த எந்த நூலையும் இம்முறை வாங்கவில்லை. கலப்பை வெளியீட்டகத்தின் "கெட்ட வார்த்தை பேசுவோம்' என்ற நூலை வாங்க வேண்ட்மென்று நினைத்திருந்தேன் ஆனால் மறந்தே போனது.

ஒரே நூலை வெவ்வேறு வெளியீட்டகங்களின் கடைகளில் காணமுடிந்தது. பொதுவாகப் பார்த்தால் கார்ல் மார்க்ஸ். ஃபிடல், சேகுவேரா, பெரியார் குறித்த நூல்களை பல் இடங்களில் காணமுடிந்தது. இதற்கு மகிழ்வதா வருந்துவதா என்றே தெரியவில்லை. நிச்சயம் மகிழ முடியாது. சே இளைஞர்களின் நவீன உடைகளின் சின்னமானது போல் இது போன்ற புரட்சிக்காரர்களும் நூல் வணிகர்களிடம் சிக்கி விட்டார்கள் என்றே வருந்துகிறேன். அடுத்து பிரபாகரன் படம் போட்ட பல வகையான நூல்கள். ஆங்கிலப் புதினங்கள் நான்கு எடுத்தால் ரூ 200 என்று ஒரு கடையில் விளம்பரம், எனக்கும் ஆங்கிலம், ஆங்கிலப் புதினங்களுக்கும் ஏழாம் பொருத்தம், அது குறித்து அ னா ஆவண்ணா கூடத் தெரியாது. சில வருடங்களுக்கு முன் அய்ன் ரேண்ட்- இன் The Fountainedhead- ஐ படிக்க முயன்று படுதோல்வி அடைந்தேன். ஆங்கில புதினங்கள் வாசிக்க ஆங்கிலம் வேண்டும். நமக்குப் போதாது. மூன்று சொற்களுக்கொருமுறை அகராதியைப் புரட்டினால் அந்த புதினத்தைப்  படித்து முடித்த மாதிரிதான்.  ஒரு பத்தி முடித்து அடுத்ததைப் படிக்கத் துவங்கினால் மறந்து விடுகிறது முந்தைய பத்தி. அதனால்தான் ஆங்கிலம் எதுவும் வாங்கவில்லை.

நான் வாங்கியவை சில :

விடியல் பதிப்பகத்தில் -

 பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்
உயிரிகள் தோன்றியவிதம் - சார்லஸ் டார்வின்
குணா பாசிசத்தின் தமிழ் வடிவம்
பெயரிடப்படாத நட்சத்திரங்கள்

தலித் முரசு -

நான் யார்க்கும் அடிமையில்லை - வே. மதிமாறன்
பாரதி பக்தர்களின் கள்ள மௌனம் - வே. மதிமாறன், மருதையன்
மற்றும் பாலை திரைப்படத்தின் டிவிடி.

பூவுலகின் நண்பர்கள் வெளியீடுகளைத்தான் அதிகம் வாங்கினேன். ஒரு மாத இதழை வேண்டாமென்று திருப்பிக் கொடுத்தேன். கடைக்காரர் பாதிவிலைக்கு எடுத்துக் கொள்ளச் சொன்னார்.  பூவுலகின் நண்பர்கள் வெளியீடுகளில் கூடங்குளம் போராட்டம் குறித்த அனைத்து நூல்களையும் வாங்கி விட்டேன்.

பாரதி புத்தகாலயத்தில் நிறைய வாங்கினேன். பட்டியல் நீளமானது.

"ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்" வாங்கினேன்.

"சோளகர் தொட்டி" வாங்கி விட்டேன்.

இவையனைத்தையும் படித்து முடித்தால் மீதி பாவமும் தீர்ந்து விடும்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்