காதல் வலியது


ஜியாவின் இறப்பைக் கேள்வியுற்றபோது இவளுக்கெல்லாம் என்ன குறைச்சல் என்று நினைத்தேன். லண்டனில் பிறந்து வளர்ந்து பின்பு நடிப்பதற்காக இந்தியா வந்து பிரகாசிக்க முடியாமல் தோல்வியடைந்து, காதல் கசந்து பின்பு தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வியால் தற்கொலை, கொலை செய்வதெல்லாம் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களிடம் உள்ள வழக்கம். இப்படி பணக்கார பிரபலங்கள் கூட இப்படி செய்து கொள்கிறார்களா என்று தோன்றியது. இது போன்ற தோல்விகளை அதுவும் காதல் தோல்விகளை ஒரு பொருட்டாகவா அவர்கள் கருதுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்களும் அதே உணர்வுகள் உருவானவர்கள்தான் போலும். 

ஜியா கான் / நஃபிஸா கான்
18 வயதில் அமிதாப் நடிக்கும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவான "நிஷப்த்" படத்தில் அறிமுகமாகிறார். பின்பு அமீர்கானின் "கஜினி" (தமிழ் - கஜினியில் நயன்தாராவின் வேடத்தில்) நடித்தார். இப்படி பெரிய நடிகர்களுடன் முதலிரண்டு படங்களில் நடித்தும் அவள் எதிர்பார்த்தது போல் நல்ல வாய்ப்புக்கள் எதுவும் அதற்குப் பிறகு வரவில்லை. இரு வருடங்களுக்கு முன்பு ஹௌஸ்ஃபுல் (Housfull) படத்தில் சிறுவேடம் மட்டுமே கிடைத்தது. அறிமுகமாகி ஆறு வருடங்கள் ஆகி விட்டது. இன்டீரியர் டிசைனர் ஆகலாம் என்று முடிவெடுக்கிறார். ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்கிறார்.  அதுவும் தோல்வியில் முடிகிறது. பின்பு தனது காதலனுடன் நடந்த சண்டையில் வீட்டிலேயே துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொள்கிறார்.

பட வாய்ப்புக்கள் எதுவும் இல்லாததால் ஏற்பட்ட மனவருத்தத்தில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். ராம் கோபால் வர்மா தன்னை சந்திக்க ஜியா வந்ததாகவும், "இத்தனை வருடங்களாக நான் கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு என்ன குறை எனக்கு ஏன் வாய்ப்புக்கள் வரவில்லை என்று தெரியவில்லை என்று கூறினாள். ஆனால் அவளுக்குப் பொருத்தமான பாத்திரம் தன்னுடைய படங்களில் இல்லாததால் அவளை நடிக்க வைக்க முடியவில்லை அதனால் அவளிடம் காத்திருக்கும்படியும் கூறினேன்" ஆறு வருடங்களாக மிகப்பெரிய வாய்ப்புகள் ஏதும் வராததால் மனமுடைந்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் தற்போது ஒரு படம் ஒப்பந்தமாகியிருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் ஜியாவின் தங்கை சொல்லியிருக்கிறார். அதனால் அவள் தனது திரைப்பட வாழ்க்கையில் தோல்வியடைந்தது மனமுடையவில்லை, அவள் குடிக்கு அடிமையாகவுமில்லை என்று கூறியிருக்கிறார்.

தனது ட்விட்டரில் தன்னைப் பற்றி நடிகை, கவிஞர், இசைக் கலைஞர், கனவு காண்பவள், வாழ்க்கையை ரசிப்பவள் என்று எழுதி வைத்திருக்கும் ஒரு 25 வயதுப் பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்று சொன்னால் நம்ப முடியவில்லை. ஆனால் உண்மை காரணம் காதல் தோல்வி.

காதலில் தோல்வி என்பதற்காக உயிரை விடுமளவிற்கு காதல் வலிமையான உணர்வா ? கொலை செய்வது, அமிலம் ஊற்றுவது போன்ற பிசாசுகளைப் பற்றியெல்லாம் பேசவே தேவையில்லை. அவரவர் உயிரையே மாய்த்துக் கொள்ளுமளவுக்கா காதல் வலியது ?  அங்கங்கே படித்த படிக்கும் செய்திகள் அப்படித்தான் சொல்கின்றன. சில செய்திகள் எத்தனை நாட்களானாலும் மறப்பதில்லை. ஆள் ஊர் பெயர் மறந்தாலும் அந்த நிகழ்ச்சியின் வீரியம் அதை மறக்க முடியாமல் செய்து விடுகிறது. ஜியா  ஒரு பிரபலம் அல்லது நடிகை என்பதால் எனக்கு தனிப்பட்ட கரிசனம் ஏற்படவில்லை.

ஒரு செய்தியில் தம்பதியினர் இறப்பைப் பற்றியது கணவர் இறந்த அந்நாள் நண்பகலிலேயே மனைவியும் இறந்து விடுகிறார். இவர்களிருவரும் 80 வயதைக் கடந்தவர்கள்.

மனைவி இறந்த துக்கம் தாளாமல் தூக்குப் போட்டுக் கொண்ட கணவர்

இன்னொரு செய்தியில் வட இந்தியாவில் லாரி ஒட்டுநராகச் சென்ற தன் கணவர் இறந்த செய்தி கேட்டு கர்ப்பிணியாக இருக்கும் மனைவி தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்தார்.

இப்படிப் பல செய்திகள் அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.

நடிகைகள் போன்ற பணக்காரர்கள் காதல் தோல்வியடைந்தால் துடைத்து விட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கி விடுவார்கள். ஆனால் காதல் தோல்விகளால் தற்கொலை செய்து கொண்ட நடிகைகள் இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் ஷோபா, ஃபடாபட் ஜெயலட்சுமி, விஜி, சில்க் ஸ்மிதா, ப்ரத்யுஷா, மோனல் என்று நீள்கிறது. சின்னத்திரை, துணை நடிககள் யார் யாரோ தெரியவில்லை.

அம்மாவோ அப்பாவோ இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை

அண்ணனோ தம்பியோ இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை

அக்காவோ தங்கையோ இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால்யாரும் தற்கொலை செய்வதில்லை

நண்பர்கள் இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால் யாரும் தற்கொலை செய்வதில்லை.

சில தற்கொலைகள் நடந்திருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே இருக்கின்றன.

ஆனால் தான் காதலித்த நபரோ, வாழ்க்கைத் துணையோ அல்லது அவர்களது பிரிவோ ஏற்படுத்தும் மனவேதனை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது.

காதலுக்காக பெற்றோரையே விட்டுவிடத் துணிகிறார்கள்

சொத்தை விட்டுவிடத் துணிகிறார்கள்

மதம் மாறி கடவுளையும் மாற்றிக் கொள்கிறார்கள்.

காதல் உண்மையில் மகத்தானதுதான்.

காதல் இருக்கட்டும். என்னுடைய நண்பனொருவனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியைக் கேட்டால் இன்னும் கொஞ்சம் தலை சுற்றும்.  அவன் மற்ற சராசரி ஆண்களைப் போல் பெண்களுடன் பேசுவதில் எவ்வித கிளுகிளுப்பும் பரவசமும் கொள்ளாதவன், பெண்களுடன் பழகுவதையே வெறுத்தவன். திருமணமே வேண்டாம் என்று இருந்தவன். இறுதியாக பெண் தேடும் படலம் தொடங்கிய போது, வெவ்வேறு இடங்களிலிருந்தும் அவனுக்கு வரன்கள் வந்தன. இறுதியாக ஒரு இடத்தில் திருமணமும் முடிவாகியிருந்தது. இதற்கு முன்பும் பல பேருடன் பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருந்தது. அதனால் மாப்பிள்ளை தேடிய சில பெண்கள் இவனுடன் அவ்வப்போதுஅலைபேசியிலும் பேசியிருக்கிறார்கள். வெவ்வேறு காரணங்களால் அவர்கள் யாரும் கூடி வரவில்லை.

இப்போது ஒரு பெண்ணுடன் இவனுக்கு நிச்சயமான பிறகும், இன்னும் மூன்று பெண்கள் தன்னையே திருமணம் செய்து கொள்ளும்படி அவனை வற்புறுத்தினார்கள். திரும்பத் திரும்ப அலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். அவனுக்கு ரொம்பவும் சங்கடமாகப் போய்விட்டது. இதில் ஒன்று மிகப் பெரிய தொகையாக சீதனம் கொடுப்பதற்கும் முன் வந்தார்கள். அந்த மூன்று பேரில் இன்னொரு பெண் இவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்த பின்னர் தூக்க மாத்திரையை விழுங்கி விட்டாள். இதில் வேடிக்கை என்னவென்றால் அம்மூவரும் இவனை நேரில் கூடக் காணாதவர்கள். புகைப்படத்தில் கண்டதோடு சரி, அலைபேசியில் பேசியது மட்டுமே அவர்களுக்கிடையிலான தொடர்பு. இதையும் என்னால் நம்ப முடியவில்லை.

ஆண்கள் சிலர் ஒரே சமயத்தில் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பார்கள், பொழுது போக்குவார்கள். ஆனால் என்னுடைய நண்பன் வேறு விட இயல்புடையவன். பேசியே மயக்குமளவுக்கு இவனிடம் சரக்குமில்லை. பெரிய பணக்காரனுமில்லை. நல்ல ஊதியம் வாங்கும் பணியிலுமில்லை. அரசாங்க வேலையுமில்லை, சாதாரண தனியார் நிறுவனத்தில்தான் பணி புரிகிறான். இதையெல்லாம் தாண்டி அந்தப் பெண்கள் இவனிடம் எதை விரும்பினார்கள், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் இன்னும் புரியவில்லை. இதையேதான் அவனும் என்னிடம் சொன்னான். நானும் அவனிடம் சொன்னேன். இருவரும் சிரித்துக் கொண்டோம். பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் மனம் மாறலாம். ஆனால் தூக்க மாத்திரையை விழுங்குமளவிற்கு திடீரென்று தோன்றும் அவநம்பிக்கைக்குக் காரணமென்ன ?

பெண்கள் என்றால் காதலித்து ஏமாற்றுகிறவர்கள், பணத்திற்கு ஆசைப்படுகிறவர்கள் என்று சொல்பவர்கள்தான் சிந்திக்க வேண்டும். காதல் நாம் நினைப்பதை விட வலியது.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்