தற்போது முல்லை பெரியாறு பிரச்சனை எதில் போய் முடியுமென்றே தெரியவில்லை. தற்போது எனக்கும் ஒருவேளை அணை வலுவின்றி இருக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுவிட்டது. அந்தளவுக்கு இருக்கிறது கேரளா அரசின் பரப்புரைகள். அங்கே அணையை உடைத்தே ஆகவேண்டுமென்ற கருத்து அனைவருக்கும் போய் சேர்ந்திருக்கிறது. இல்லையென்றால் இவ்வளவு ஆதரவு இருக்குமா ? நான்கு மாவட்டங்கள் மூழ்கி விடுமேன்றால் யார்தான் அஞ்ச மாட்டார்கள் ?
தமிழ் நாட்டவர்கள் சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒருவேளை முல்லைப் பெரியாறு அணை உடைந்து போனாலும் இடுக்கி அணை அதை தாங்கிக் கொள்ளும் என்று. ஆனால் கேரளத்தவர்கள் அஞ்சுவது முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடுமென்று மட்டுமல்ல மாறாக தொடர்ச்சியாக உள்ள மற்ற அணைகளும் உடைந்து இறுதியாக இடுக்கி அணையும் உடைவதால் ஏற்படும் அழிவைக் குறித்தே அஞ்சுகின்றனர்.
இருபக்கத்து அரசியல்வாதிகளும் இந்தப் பிரச்சனையை சூடாக வைத்து ஆதாயம் தேடுகிறார்கள். குறிப்பாக கேரள அரசியல் கட்சிகள் வெளியே அன்பொழுகப் பேசிவிட்டு அங்கே இனவெறியைத் தூண்டிவிடும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். படிப்படியாகக் காய் நகர்த்தியே அணையத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருகின்ற வேலையைத்தான் கேரளா கடந்த 30 வருடங்களாகச் செய்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையை தம் வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவர்கள் காவல் துறையின் லத்திக் கம்புகளுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். மற்றவர்களோ தமது சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாகவும், ஒரு சில இனவெறியர்களின் செயலுக்காகவும் ஏதுமறியாத மலையாள இனத்தவரையே வசைபாடி வருகின்றனர். அதே போல்தான் அங்குள்ளவர்களும் செய்கின்றனர். இணைய உலகில் அதிகமாக இது நடக்கிறது. தமிழர்கள் மிக மோசமான இனவாதிகள் என்பதையே இணையதளமெங்கும் விரவிக் கிடக்கும் வெறுப்புணர்வு காட்டுகிறது. இது இரு மாநிலங்களிலும் இனரீதியான தாக்குதல்களுக்கு வழிவகுத்துள்ளது. இது போன்று செய்பவர்கள் உண்மையில் விவசாயம் பாதிக்கப்படுமென்ற ரீதியில்தான் கோபப்படுகிறார்களா என்றால் இல்லை. அதே போல் மலையாள இனவெறியர்களும் இந்தப் பிரச்சனைகளுக்கிடையே தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள எத்தனிக்கின்றனர். இந்திய அளவில் தமக்கான ஆதரவை திரட்டியுள்ளனர். அணை உடைக்கப் பட வேண்டியதே என்ற கருத்தை நிலை நாட்டியுள்ளனர்.
முத்தாய்ப்பாக சி பி ரோய் என்ற முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்புக் குறித்துப் போராடி வந்த குழுவின் தலைவரையே விலக்கியுள்ளனர். காரணம் அவர் சொன்ன எளிய மாற்று வழியானது இரு மாநிலத்தவர்க்கும் உகந்ததாக இருந்த போதிலும் அணையை உடைக்க வேண்டுமென்ற கருத்தில் உடன்பாடில்லாததால்தான். இது குறித்து விரிவாக அறிந்துகொள்ள இங்கே செல்லவும்.
http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_27.html
http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_416.html
http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_416.html
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அங்குள்ள சில நல்ல உள்ளங்களுக்கு பிடிக்காததைத் தொடர்ந்து அவர் விலக்கப்பட்டுள்ளார். அவர்களும் மக்களிடையே அச்சத்தைத் தூண்ட தமிழ்நாட்டில் பேசப்படும் கருத்துக்களையே தெரிவிக்கிறார்கள். மத்திய அரசு தமிழகத்திற்கு ஆதரவாக இருக்கிறதென்று. இந்திய அரசு உண்மையில் எந்த மாநிலத்துக்குத்தான் ஆதரவாக இருந்திருக்கிறது. இது போன்ற விவகாரங்களைத் தீராத பிரச்சனையாக்கி வைத்திருக்கிறது. அது எப்போதும் இவைகளைத் தீர்த்து அமைதிகாண வழிதேடியதேயில்லை.
அங்கு அவர்களுக்கு இந்திய அளவில் அறிவாளர்கள் இதழ்கள், மற்ற ஊடகங்களின் ஆதரவு இருக்கிறது. இந்திய அரசின் ஆதரவு உட்பட. தமிழக அளவில் பார்த்தால் இது அனைத்துத் தரப்பினரையும் சென்று சேரவில்லை. கூடங்குளம் அணு உலை அதற்கும் குறைவு. தற்போது நடக்கும் அத்தனை பிரச்சனைக்கும் காரணமாக யோக்கிய சிகாமணி போல் வேடிக்கை பார்க்கும் நடுவண் அரசை மட்டுமே குற்றம் சொல்ல முடியும். கூடங்குளம் எதிர்ப்பு உச்சத்தில் இருந்த நிலையில் இதைக் கிளறி விட்டு திசை திருப்பி உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பையே மதிக்காத கேரளா அரசை ஒன்றுமே செய்யாமல் சும்மாவாச்சும் கூட அதட்டாமல் விட்டிருக்கிறதென்றால் அதற்கென்ன பொருள் ? ஆனால் ஓரிரு வருடங்களுக்கு முன்பு சேதுக் கால்வாய் பிரச்சனையோ அல்லாதோ வேறெதுவோ சரியாக நினைவில்லை அதற்கு தமிழக அரசு அடையாள வேலை நிறுத்தம் செய்தது. அதற்கு உச்ச நீதி மன்றம் விடுமுறை நாளிலேயே நீதி மன்றத்தைத் திறந்து வைத்து தமிழக அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தது.
ஆனால் காவேரி பிரச்சனையில் கர்நாடகத்தையும் முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரளவையும் கண்டிக்கவேயில்லையே ஏன் ? எதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மையைப் பற்றி வகுப்பெடுக்கும் அமைச்சர்கள் அதை தமிழ் நாட்டுக்கு மட்டுமே வைத்திருக்கிறார்கள் போலும். இதே அணு உலை மேற்கு வங்கம் கேரளம் ஆகிய மாநிலங்களால் நிராகரிக்கப்பட்டு தமிழகத்தின் தலையில் கட்டப்பட்டது. இப்போது மட்டுமே போராட்டம் நடப்பதாக காட்டிக் கொண்டாலும் 25 வருடங்களாக நடந்து வருகிறது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் ஒரு கருத்தை உருவாக்குகிறார்கள். இதற்காக சில ஆயிரம் கோடிகள் செலவு செய்ததாகவும் அத்தனையும் விரயமாகிவிடுமென்றும் கூறுகிறார்கள்.
அணு உலை நிறுவத் தேவையான ஆய்வுகள், அதன் முடிவுகள் எதுவும் உவப்பானதாகவும் இல்லை, அனைத்து மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகி நிற்கிறது. அதை விரைவில் செயல்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் அறிவித்து விட்டார். அதைத் திறக்கும்வரையில் முல்லைப் பெரியாறு விவகாரத்தை ஆறப்போடாமல் வைத்திருப்பதுதான் திட்டம் போலிருக்கிறது.
மிக்க நன்றி ...
பதிலளிநீக்குநன்றி தமிழ்மலர் உங்கள் தளத்தில் படித்துத்தான் பலவும் தெரிந்து கொண்டேன்
பதிலளிநீக்கு