இந்த அப்பாடக்கர் அப்படிங்கற சொல்லைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிய சந்தானம் அத யாருக்குச் சொன்னாருனு படம் பாத்த எல்லார்க்குமே தெரியும். படத்துல நயனோட அப்பாவா வர்றவர் வெட்டிப்பயல் ஆர்யாவ அடிக்கடி கேப்பாரு "தம்பி நீங்க அப்படி என்னதான் பண்றீங்க"ன்னு. அவரு கேட்டதுல ஒரு நியாயமிருக்கு, ஏன்னா தன்னோட மருமகனோட தம்பி அதில்லாம தன்னோட ரெண்டாவது பொண்ணுக்கு நூலு விடறதுனால பொண்ணோட அப்பாவா அந்த அக்கறையும் பயமும் இருக்கணும். ஆனா இந்த அப்பாடக்கருங்க இருக்காங்களே அதாங்க நம்மளோட மாமா, மச்சான், சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, தாத்தா, பாட்டி தூரத்து சொந்தம், பக்கத்து சொந்தம், தெரிஞ்சவங்க, வேண்டியவங்க, அதில்லாம இவங்களோட சொந்தக்காரங்க, இவங்களோட கூட்டாளிக இப்படி எல்லாருமே ஒரு மாதிரியாத்தான் அலையராங்க போல.
(எச்சரிக்கை இது முற்றிலும் என்னுடைய சொந்த புலம்பல் மட்டுமே ரொம்ப அறுவையா இருக்கும். பெரிய சுவாரசியமாகவோ நகைச்சுவையோ இருக்காது. இவைகளை எதிர்ப்பார்ப்பவர்கள் இந்த இடுகையைப் படித்து ஏமாந்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்)
இப்ப நீங்க ஒரு ஆணா இருந்தீங்கன்னா நான் சொல்றத நீங்களும் கொஞ்சமாவது அனுபவச்சிருப்பீங்க. முக்கியமா உங்களுக்கு 20 லிருந்து 30 வயதில இருக்கற ஆளா இருந்தா இன்னும் நல்லா தெரிஞ்சிருப்பீங்க. நீங்க கல்லூரியில் படிப்ப முடிக்கற நாட்களிலிருந்து ஒரு விதமான அழுத்தத்தை இவங்க உங்களுக்குக் கொடுத்துட்டே இருப்பாங்க.
உங்க வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்களோ இல்ல நீங்க வழியில எங்கயாவது மாட்டிகிட்டீங்கனாக்க இப்படித்தான் கேட்டு சாகடிப்பாங்க முக்கியமா உங்க கூட யாராவது இருக்கும் போதுதான் மாட்டுவீங்க. இந்த மாதிரி கேட்கறவங்க பெரும்பான்மையா படிக்காதவங்களா இருக்காங்க. படிச்சவங்களா இருந்தாலும் நிலவரம் தெரியாதவங்களா இருக்கிறாங்க. இவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் டாக்டரு, வக்கீலு, இஞ்சினீயரு, வாத்தியாரு, கவுருமெண்டு இவ்வளவுதான். பெரும்பான்மையானவங்க படிக்கிறது இது எதுவுமே இல்ல. பொறியியல் குறிப்பிட்ட சிலர், மருத்துவம் மிகச்சிலர், இது போக அதிகம் பேர் படிக்கிறது கணிணி தொடர்பான துறைகள், மத்தவங்க பிகாம், பிபிஏ, பிபிஎம், இன்னும் பாலிடெக்னிக், டிப்ளமோ, சில அறிவியல் தொடர்பான படிப்புகள்தான். இதுல எங்கயாவது வேலைக்கு உத்தரவாதம் தர்ற படிப்பு எதுன்னு கேட்டா எதுவுமே இல்லன்னுதான் சொல்ல முடியும். ஐஐடி, இன்னும் சில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், சில பெரிய கல்லூரிகள் இவைகளில் படிச்சா மட்டும்தான் நேர்காணல்ல கலந்துக்கற வாய்ப்பே கிடைக்கும். இல்லன்ன பொட்டியக் கட்டிட்டு சென்னைக்கோ பெங்களூருவுக்கோ போயி தெருத்தெருவா அலஞ்சாதான் ஏதாவது மாட்ட வாய்ப்பு இருக்கு. நல்லா படிங்க மாட்ட வாய்ப்பு இருக்கு உறுதியா கிடைக்கும்னு சொல்ல முடியாது. இதுதான் நிலவரம். இதெல்லாம் படிச்சு முடிச்சப்பறம்தான் நமக்கே தெரியும். இந்த லட்சணத்துல சோத்துக்கு வந்தமா தின்னுட்டுப் போனமான்னு இல்லாம
என்ன படிக்கற ?,
எதப்பத்தி படிக்கற ?
என்ன மாதிரி வேல கெடைக்கும் ?
கவுருமென்ட்டு வேல கெடைக்குமா ?
இப்படியெல்லா கேட்டுட்டு அப்படியே பேச்சுவாக்கில "இந்தக் காலத்துலெல்லாம் எங்கங்க வேல கெடக்குது. எல்லாரும் டிகிரி படிச்சிட்டு வேலைக்குப் போகனும்னா நடக்கறதா ? கம்முனு படிக்க வைக்கிற செலவுக்கு தொழில பாத்துகிட்டாலாச்சு கைக்காசு மிச்சமாகும்.
இந்த மாதிரி கொளுத்திப்போட்டுட்டு போக வேண்டியது. கெடச்ச இடத்திலெல்லாம் நோண்டி நொங்கெடுக்க வேண்டியது. இங்க எங்களுக்கு டங்குவாரு அந்து போகுது.
போதாக்குறைக்கு நான் படிச்சது உயிர்நுட்பவியல் (Biotechnology) இத படிச்சா என்ன வேல கிடைக்கும்ன்னு யாருக்குமே தெரியாது. இவங்களுக்கு நான் பதில் சொல்ல பட்ட பாடு இருக்கே யப்பப்பா !! அத ஏங் கேக்கறீங்க !
அதாவது பரவால்ல வேல கிடைக்காம சுத்திட்டிருந்தப்பத்தான் உச்ச கட்ட மனஅழுத்தமே வந்திரும். ஒவ்வொரு முறையும் நேர்காணலுக்குப் போயிட்டு வெளியே வரும்போது ஒரு மாதிரியா இருக்கும். வெறுமையா இருக்கும். ரெஸ்யூமை தூக்கிட்டு சாலையில போறப்ப வர்றப்ப எல்லோரும் நம்மளையே பாக்க்ற மாதிரி கூச்சமா இருக்கும். நேர்காணல்ல நாலு சுவத்துக்குள்ள நாப்பது பேர்க்கு நடுவுல மானம் போறது தனிக்கதை.
அதுவும் நான் படிச்சு முடிச்சப்ப சரியா உலக பொருளாதார தேக்கம் வந்தது. 2008 இல். அப்ப இருக்கறவங்களுக்கே வேலை எப்ப வேணா போகுன்ற நிலைமைதான் இருந்துச்சு. என்னதான் நாம முக்குனாலும் ஒரு சிலருக்குத்தான் ஓரளவுக்கு மனநிறைவான வேலையே கிடைக்குது. ஒருவேளை வேலை நமக்குப் பிடிக்கலன்னாலும் ஊதியமாவது ஓரளவுக்கு வந்தால் கூட போதும். ஆனா பாருங்க இது எத்தன பேருக்கு அமையும்.
தகவல் தொழில் நுட்பத்துறையில் இருக்கறவங்களுக்கு ஓரளவுக்கு காலூன்றி விட்டார்கள் என சொல்லலாம். பணிச்சுமை மிகவும் அதிகம்தான். இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே சமாளிக்க முடியாதளவுக்கு இருக்கு சிலர் பரவால்ல என்கிற மாதிரிதான் சொல்கிறார்கள். இருந்தாலும் அவர்கள்தான் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவு முன்னேற்றப்பாதையில் இருக்கிறார்கள் எனலாம்.
ஆனா இந்த பிபிஓ என்கிற சேவைத்துறை இருக்கிறதே அதுதான் நான் சொல்ல வர்றதே. சேவைத்துறையில் மிக எளிமையா வேலை வாங்கிரலாம், ஆரம்பத்திலேயே 10000 வரையில் அல்லது அதுக்கு மேல வரைக்கும் கிடைக்கும், ஆனா முன்னேற முடியாது தகவல் தொழில்நுட்பத்துறையில் இருப்பது மாதிரி என்பார்கள். ஆனால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பிபிஓ பணியில் சேர்வதும் மிகவும் சிரமமானது. ஒரு சிலருக்குத்தான் அதிர்ஷ்டமே இருக்கும். திறமையும் வேண்டும் சில நேரத்தில் அதிர்ஷ்டம் மட்டுமே வேண்டும்.
இதில்லாமல் சிறு சிறு நிறுவனங்களின் பிபிஓக்களில் சேர்ந்தால் தொலைந்தீர்கள். நேந்து விட்ட காளைமாதிர்தான். கொத்தடிமைதான். கொத்தடிமை என்னும் சொல்லுக்கு முழுப்பொருளையும் அனுபவித்து உணரலாம். கண்வலிக்க கணிணியைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். நாளும் பணிச்சுமை, உற்பத்தி இலக்கு (target) இருக்கும். இவையெல்லாம் எல்லாப் பணிகளிலும் இருப்பதுதான் எந்த வேலையும் எளிதானதல்ல என்பதும் சரிதான். ஆனால் பிபிஓ வில் இவையெல்லாம் இன்னும் தனித்துவமானது. இருமடங்கு வேலை பாதி ஊதியம் என்ற அளவில்தான் இருக்கும். இதில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே உங்கள் இயல்பே மாறிவிடும். உடல் நலம் மனநலமும் குன்றி விடும். எனக்கே பார்த்தீங்கன்னா முன்பெல்லாம் நிறைய நூல்களை விரும்பிப் படிப்பேன். அப்போ வாங்கக் காசில்லைன்னு வேலைக்குப் போய் சம்பாதிச்சு நிறைய வாங்கி வச்சுப் படிச்சு அறிவாளியாயிரலாம்னு கணக்குப் போட்டிருந்தேன். குடுக்கிற சம்பளம் வாயக்கும் வயத்துக்குமே சரியாப்போச்சு அது வேற. ஆன எதையும் புதுசா படிக்கவே தோன்றுவதில்லை, நூல்களும் வாங்குவதில்லை. நூலகத்திற்கும் போவதில்லை. பள்ளி, கல்லூரியில் படிக்கிறப்பவெல்லாம் ஓரளவு கவிதைகள் எழுத வரும் ஏன்னா நானொரு தமிழ் ஆர்வக்கோளாறு. ஆனால் இப்ப சுத்தம்.
நான் நான்கு வருடம் முன்பே வலைப்பூவை அறிந்திருந்தேன். மூன்று வருடத்திற்கு முன்பே வலைப்பூ எழுத தொடங்கி விட்டேன். இரண்டு முறை வலைப்பூவை எழுதும் எண்ணத்தைக் கைவிட்டு அதை அழித்தும் விட்டேன். இது மூன்றாவது வலைப்பூ ஏதோ ஒரு மனநிலையில் இதை மட்டும் அழிக்காமல் வைத்திருக்கிறேன். மாதம் ஒரு இடுகை கூட எழுத இயலவில்லை. இதுதான் எனது மாற்றம். சேவைத்துறைக்கு நன்றி.
இப்படி பைத்தியம் புடிக்கற அளவுக்கு வேலை பார்த்தாலும் உங்களால ரூ 10000 கூட வாங்க முடியாது. பெரும்பான்மையான சிறு பிபிஓ நிறுவங்களின் சம்பளம் பத்தாயிரம் அல்லது அதுக்கு மேல இருக்காது. எனக்குத் தெரிந்து 5000 - 8000 வரை சராசரியாக. இதில் இன்னொரு செய்தி என்னன்னா இதில் வேலை நேரம் இரவாகத்தான் இருக்கும். பகல் நேரம் பெண்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டியிருக்கும். ஊக்கத்தொகை ஒரு ஆயிரமோ இரண்டாயிரமோ அதிகமாகக் கிடைக்கும். அவ்வளவுதான் நான் 4000 ரூபாய் சம்பளத்தில் ஒரு 6 மாதங்கள் வரையில் இரவு நேர பணியில் இருந்திருக்கிறேன். ஊதியம்தான் குறைவே ஒழிய வேலையெல்லாம் சும்மா ஙொக்காமக்கான்னு இருக்கும். எப்படா காலைல 5 மணியாகும்னு இருக்கும். இந்த மாதிரி 5000க்கும் 6000க்கும் வேலை பார்ப்பவர்கள் அதுவும் இரவு நேரம் 50 கிலோ மீட்டர்கள் வரை பயணித்து வந்து பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். என்ன செய்ய வெற வழியில்ல. போதாக்குறைக்கு எப்ப வேண்டுமானாலும் வேலையிலிருந்து துரத்தியடிக்கப்படும் அபாயம். சனிக்கிழமை விடுமுறையும் கிடையாது.
மீண்டும் அப்பாடக்கர்களுக்கு வருவோம். இப்படியெல்லாம் செத்துச் சுண்ணாம்பாயி வேல பார்த்தா இவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றால்
எதுக்கு அந்த வேலைக்குப் போற ?
(வேற வேல கிடக்கல இது கூடவா தெரியாது)
உடனே எடுத்து விடவேண்டியது கம்பியூட்டரு வேலன்னா 50000, 60000 கிடைக்கும்னு சொல்றாங்க ?
இப்படியெல்லாம் கேட்டா என்ன செய்யறது.
இந்த முண்டங்கள்தான் குழந்தைகளைப் படிக்க வைக்கும்போதே ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கச் சொல்லி அச்சுறுத்தும் வன்முறையாளர்கள். அதிகம் சம்பாதிக்கத் துப்பில்லாதவனை மதிப்பின்றி பார்க்கிறார்கள். எல்லோராலும் முதலிடத்திற்கு வரமுடியாது என்ற எளிய உண்மையைக் கூட உணராதவர்கள். எத்தனை நாள்தான் இவர்களுக்கு பதில் சொல்லப் பயந்தே ஓடி ஒளிவது. யாராவது எதார்த்தமாகக் கேட்டால் கூட குத்துகிறது.
இது போதாதென்று சில நண்பர்களும் அப்பாடக்கர் அவதாரமெடுக்கிறார்கள். ஒரு குழுவிலிருக்கும் ஒரு நண்பனுக்கு மற்றவர்களை விட மிக் உயர்ந்த இடத்தில் பணி கிடைத்துவிட்டால் நமக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையும் அவர்களிடம் ஒரு அந்நியத்தன்மையும் வந்து விடுகிறது.
என்னடா மச்சி ஃபேஸ்புக்ல அப்டேட்டெ பண்றதில்லையா ?
வேற வேலைக்கு ட்ரை பண்ற ஐடியாவே இல்லையா ? என்றும் கடுப்பேத்துகிறார்கள். ஃபேஸ்புக்கில் அப்டேட்டுமள்விற்கு ஒண்ணுமில்ல என்று தெரிந்தும் கேட்டால் என்ன செய்வது.
இப்போது திருமணச்சந்தையில் விலைபோகாத சரக்குகளாக இருப்பவர்கள் இவர்கள்தான்.(நானும்தான்( எல்லாம் ஒரு சுய பச்சாதாபம்தான்)). 10000 கூட சம்பாதிக்க இயலாதவனை நம்பி யார்தான் பெண் தருவார்கள். என்னுடைய நண்பி ஒருத்தி கூட எனக்காகப் பரிதாபப் பட்டார்.
"அச்சச்சோ உங்களுக்கெல்லாம் யாரு பொண்ணு கொடுப்பா?" என்று.
அது சரிதான யாரு குடுப்பா ?. படிச்சு முடிச்ச ரெண்டு வருடங்களில் ஓரளவுக்காவது சம்பளத்துல வேல உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவுதான் கடைசி வரை சிங்கியடிக்க வேண்டியதுதான். ஒரு சிலருக்கு மட்டும் மிக விரைவிலேயே அது அமைந்து விடும். நம்மள விட ஏழெட்டு வருடம் பின்னால பொறந்த முண்டங்களெல்லாம் வந்து நம்முடனேயே வேலை பார்க்கிறதுகள். என்னை பெருசு என்று வேறு ஓட்டுகிறார்கள். அது சரிதான தொப்பை வருது, முடி நரைக்குது, முடி கொட்டி சொட்டை விழுது வேற எப்படிக் கூப்பிடுவார்கள். என்னத்த சொல்றது ??. திருமண வயசு ஆகிட்டதால இனி பொண்ணு பார்க்கற வைபவம் வந்துச்சுன்னா அப்பதான் இருக்கு கச்சேரியே. இன்னும் எத்தனை வகையான அப்பாடக்கர்களிடம் சிக்கி சின்னபின்னமாவதோ ?
அப்பாடக்கர் என்கிற வார்த்தை சென்னை தமிழில் பேசப்படும் ஒரு வார்த்தை.சந்தானம் கண்டு பிடித்த வார்த்தை இல்லை.
பதிலளிநீக்குநன்றி ! சந்தானம் பிரபலப்படுத்தியது என்றுதான் நான் சொல்லியிருக்க வேண்டும்.
பதிலளிநீக்கு