உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 1

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? இதை தேர்ந்தெடுத்துப் படித்தால் எதிர்காலம் நன்றாக  இருக்கும் என்ற விளம்பரங்கள் மலிந்துவிட்ட நிலையில் பெரும்பான்மையான பட்டப்படிப்புகள் கல்வி நிறுவனங்களின்  வெறும் வணிக நோக்கத்திற்காகவே இருப்பதாகவே தோன்றுகிறது. அதில் ஒன்று உயிரிநுட்பவியல் அல்லது உயிரித்தொழில் நுட்பவியல் என்ற சொல்லுக்குக் கவர்ச்சி அதிகம். எங்கள் பள்ளியில், கல்லூரியில் படித்தால் தரமான கல்வி வளமான எதிர்காலம் என்று கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவங்களைப் போல் விளம்பரம் செய்து கொண்டிருக்கின்ற அளவில் கல்வி வணிகப் பொருளாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனை பணத்தைக் கொட்டியழுது படித்து முடித்தும் வேலையில்லாமல் போவது. அது குறித்து எனது அனுபவத்திலிருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. 
  
உயரகல்வியில் மருத்துவம், பொறியியல் தவிர்த்து அதிகம் பேர் படிப்பது அல்லது படித்தது (குறிப்பிடத்தக்க அளவில் கடந்த 10 வருடத்தில்) கணினி அறிவியல் தொடர்பான பிரிவுகள், அறிவியல் துறைகள் எனக் கொண்டால் அதில் முதலில் வருவது உயிரிநுட்பவியல் (Biotechnology ). இந்தப் படிப்பு கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டுமின்றி பொறியியல் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. இந்த உயிரிநுட்பவியல் பிரிவில் பயின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் வேலைவாய்ப்புகளின் அவர்களுக்கு இடஒதுக்கீடு தருமளவில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லா கிராமங்களிலும் ஒர் உயிரிநுட்பவியல் பட்டதாரி இருக்கக்கூடும்.

மருத்துவம், பொறியியல் பயில இடம் கிடைக்காதவர்கள், படிக்க விரும்பாதவர்கள், அல்லது அதிகம் செலவு செய்து படிக்க முடியாதவர்களின் புகலிடமாக இருக்கிறது உயிரிநுட்பவியல்.  சில காலமாகவே உயிரிநுட்பவியல் இந்தியாவில் எதிர்காலத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கிவிடும் எனும் கருத்துக்கள் பரப்பபட்டன. கல்லூரிகளின் விளம்பரங்கள் தமது கல்வி நிலையங்களில் உயிரிநுட்பவியல் துறை சிறந்த உள்கட்டமைப்புடைய நவீன ஆய்வகங்களுடன் கொண்டுள்ளது என்று காட்டிக் கொள்வதில் கவனமாக இருந்தன. ஊடகங்கள் அவ்வப்போது உயிரிநுட்பவியல் மூலம் வரப்போகும் வேலைவாய்ப்புகளைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டன. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்திற்கு அடுத்தளவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக உயிரிநுட்பவியல் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் உயிரிநுட்பவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் வளர்ந்த நாடுகளில் மட்டுமே குறிப்பிட்ட அளவில் இருகிறது. இந்தியாவில் மிகச்சிறு அளவிலேயே இருகிறது. 


பெங்களூரு நகரில்தான்  உயிரிநுட்பவியல் நிறுவனங்கள் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கில் உள்ளன.  சென்னை , ஹைதராபாத், டெல்லி போன்ற மற்ற பெருநகரங்களில் மிகச் சொற்பமான எண்ணிக்கையில் உள்ளன. இவை  மென்பொருள், சேவைத்துறை நிறுவங்களில் நடப்பதுபோல் அதிகளவான நேர்காணல்களை நடத்துவதில்லை.இவைகளில் சேர்வதற்கு முன் அனுபவம் தேவை. மேலும் தக்க நபர்களின் பரிந்துரையும் தேவை. சில சிறிய நிறுவனங்களில் சேர இயலும் ஆனால் ஊதியம் என்று பார்த்தால்  பெரிய அளவில் கிடைக்காது, ரூ 3000 தொடங்கி 6000 வரையில் இருக்கும். இது போன்ற ஆய்வகங்களில் வருடக்கணக்கில் இருந்தாலும் பத்தாயிரத்தைப் பார்க்க முடியாது. நேர்முகத்தேர்வுக்காக செல்லும் போது சில நிறுவனங்களின் வாயிற்காவலாளியே "உயிரிநுட்பவியல் பட்டதாரிகளுக்கு தற்போதைக்கு தேவையில்லை" என்று திருப்பியனுப்பியதும் உண்டு. வேலைவாய்ப்புத் தகவல்களைத் தரும் சில இணையத்தளங்களில் சில நிறுவனங்களின் நேர்முகத்தேர்விற்கான் தகுதிகள் என்ற இடத்தில் "உயிரிநுட்பவியல் பட்டதாரிகள் தவிர", உயிரிநுட்பவியல் பட்டதாரிகள் தேவையில்ல" (biotech graduates are not required) என்ற வாசகங்களும் இருந்ததுண்டு. 


மேற்படி முதுகலைப்பட்டம் பெற்ற பின்பும் வேலை கிடைக்காமல் இருப்பதொன்றும் புதிதில்லைதான். ஆனால் உயிரிநுட்பவியல் படிப்பதற்கு ஆகும் செலவு மிக அதிகம். அனைத்துக் கல்லூரிகளிலும் உயிரிநுட்பவியல் பிரிவில் படிப்பிற்கான கட்டணமே அதிகம். சில கல்லூரிகளில் கட்டாய நன்கொடையும் உண்டு. 5 வருடங்கள் முன்பு நான் படிக்கும் போதே இளங்கலைப்பட்டம் முடிக்கவே ஒரு இலட்சத்திற்கும் மேலாக செலவானது. முதுகலைப் பட்டத்திற்கோ பருவக் கட்டணமாக குறைந்தபட்சம் 20000 தொடங்கி 50000 வரையில் கல்லூரிகளைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். இது தவிர ஒவ்வொரு வருடமும் ஆய்வகத்தில் உடைந்த கண்ணாடிக் குடுவைகள் , பயன்படுத்திய இரசாயனத் திரவங்கள் ஆகியவற்றுக்காக ஆயிரக்கணக்கில் அபராதம் பெறப்படும்.

எத்தனை செலவு செய்து படித்தாலும் வேலைக்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இது உயிரிநுட்பவியல் மட்டுமன்றி உயிர்த்தகவலியல்,  உயிரிவேதியியல், நுண்ணுயிரியியல்   போன்ற பிரிவுகளுக்கும் இது பொருந்தும்.   
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தந்தை பெரியார் - 132



இன்று தந்தை பெரியார் ஈ. வெ. இராமசாமியின் 132 - வது பிறந்த நாள். தற்போது நடக்கும் நிகழ்வுகளைக் காணும்போது அவர் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்றுதான் பேராசைப்படுகிறேன். எங்கெங்கு காணினும் சாதியின் அவலமும், மூடநம்பிக்கைகளும். படித்தவர்கள் நிரம்பிய இக்காலத்திலேயே நாம் சொல்லத்தயங்கும் பல முற்போக்குக் கருத்துக்களை பாமரர்கள், அறிவிலிகள், தற்குறிகள் நிரம்பிய அக்காலத்திலேயே சொன்னதோடல்லாமல் அத களத்தில் போராடி நிறைவேற்றிக் 
காட்டியவர் பெரியார்.

சாதி ஒழிப்பு, கடவுள், மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, விதவை மறுமணம், இன உணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை என பனமுகம் காட்டிய மிகப்பெரும் ஆளுமை மிக்க தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரே தகுதி படைத்த மனிதர் பெரியார். இன்று தமிழர்க்குத் தலைவராகத் தமது தொண்டர்களால் புகழப்படும் பத்துக்கணக்கான் தலைவர்கள் இருந்தும் பெரியாருக்கு முன் அவர்களுக்கு நிற்கும் தகுதி கூட இருக்கவில்லை. நானறிந்த வரையில் மனசாட்சிப்படி பேசியும், எழுதியும் அவ்வாறு வாழ்ந்தும் காட்டிய ஒரு மாமனிதன் பெரியார். 

அவர் ஒருமுறை கூறினார். இன்னும் பல வருடங்களுக்குப் பின் வரும் தலைமுறையைச் சார்ந்த மக்கள் என்னைப் பற்றிக் கூறும்போது பெரியார் என்ற மூடநம்பிக்கையாளர் இருந்தார் அவர் இருக்காத கடவுளை ஒழிக்கப் பாடுபட்டார்". அதாவது இன்னும் சில காலத்தில் கடவுள் என்ற மூட நம்பிக்கை அழிந்துவிடும், அந்நாளில் மக்கள் கடவுளை மூடநம்பிக்கையாகவே கருதுவார்கள் எனும் பேராசை உடையவராக் இருநதிருக்கிறார். ஆனால் நடக்கும் மதக்கலவரங்களையும், பிள்ளையார் ஊரவலங்களையும், வாஸ்து, சோதிடம், தீமிதித்தல் , நரபலி போன்றவற்றைக் காண்கையில் அவர் இன்னும் வாழ்ந்திருந்தால் கூட இவைகளை ஒழித்திருக்க முடியாது போலும். 

பெரியாரின் வாழ்க்கையே ஒரு முரண்நகையாக உள்ளது. அவருக்கு இருந்த செல்வத்தின் அளவுக்கு அவர் தெருவில் நடக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால் அவர் ஏறக்குறைய 60 ஆண்டுகள் மக்களுக்காக ஊர் ஊராக பயணம் மேற்கொண்டார். மக்களுக்காகப் பேசினார். எழுதினார், போராடினார், சிறை சென்றார். கடைசிவரை எளிய மனிதனாகவே வாழ்ந்தார். கடவுள் இல்லை என்று சொன்னாலே பெரியாரின் பெயர் வரும். ஆனால் அவர் தமது இளமைககாலத்தில் அதாவது திருமணம் முடிந்த பிறகு துறவியாக வட இந்தியாவுக்குச் சென்றார். புராண, வேத, இதிகாசங்கள் பற்றி கற்றதாலும், அங்கு அவர் கண்ட போலித்தனங்கள் ஆன்மிகம், கடவுள் போன்றவற்றின் பெயரால் நடக்கும் சமூகப்பகைமையையும் உணர்ந்தார். மேலும் மக்கள் படும் துயரங்களுக்குக் காரணம் கடவுளல்ல மனிதர்களே என்றறியாமல் மக்கள் மூடநம்பிக்கை களில் சிக்கியிருப்பதைக் கண்டு வெதும்புகிறார்.  

ஆரம்பத்தில் இந்து மதத்தை சீர்திருத்தத்தான் எண்ணினார் பெரியார். ஆரம்பத்தில் கடவுள் மறுப்பையும் வலியுறுத்தவில்லை. ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு விளையும் அனைத்து வகையான் துனபங்களுக்கும் சாதி அமைப்பே காரணமாக உள்ளதாகவும் அதைத் தாங்கும் அமைப்பாக உள்ள இந்து மதத்தை ஒழிப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதாலும், சாதிகளைத தாங்கிப்பிடிக்கும் கடவுளையும் எதிர்க்கிறார். கோயிலைப் பீரங்கியால் தகர்த்து சாலை அமைக்கச் சொன்ன இந்துமத எதிர்ப்பாளர்,  இறைமறுப்பாளரான பெரியார்தான் தாழ்ததப்பட்ட இந்துக்கள் கோயிலுக்குள் நுழையும் உரிமைக்காகப் போராடினார். ஆண்கள் இரண்டு வைப்பாட்டிகள் வைத்துக்கொண்டால் பெண்கள் நான்கு வைப்பாட்டன்கள் வைத்துக் கொள்ள வேண்டு என்ற "ஆம்பளைச் சிங்கம்" பெரியார்.

அவர் கன்னடர் என்பதால் தமிழ் மொழியை இகழ்ந்தார் என்பதும் பொய்யாகும். அவருக்கு தனது தாய்மொழியான கன்னடத்தைக் காட்டிலும் தெலுங்கு அதிகம் பழக்கமானதாக இருந்தது. திராவிடம் என்ற சொல்லைப் பார்ப்பன எதிர்ப்பாகவே கையாண்டார். தமிழின் பெயரால் தமிழரின் பெயரால் மதவாதிகள், உயர்சாதியினரின் ஆதிக்கம் நிலவியதாலேயே தமிழர் என்பதற்குப் பதிலாக திராவிடம் என்ற ஆற்றல்மிகு சொல்லைப் பயன்படுத்தினார்.இதனாலேயே திராவிடர் என்ற சொல் கசந்தது. மேலும் அவர் தமிழல்லாத மற்ற திராவிட மொழிகளைத் தனி மொழியாகவே காணவில்லை, தமிழின் சிதைந்த வடிவமாகவே காணுகிறார். இதற்கு சான்று அவர் மொழி குறித்துப் பேசியபோது, பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"தமிழ்மொழியும், அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும்கூட தமிழைச் சேர்ந்ததே என்றும்; அந்தக் கருத்தைக்கொண்டே “திராவிடம்’ என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும், ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன. நாட்டிலும் இதை வெகுகாலமாகவே ஒப்புக்கொண்டு வழக்கத்திலும் கொண்டு வந்திருக்கிறோம்.

வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும், மக்களையும் குறிக்கப் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேசம் சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப் படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆனால், தெலுங்கு நாட்டாராகிய ஆந்திரர்களும், கன்னட நாட்டாராகிய கன்னடியர்களும், மலையாள நாட்டாராகிய மலையாளிகளும் இதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பதுபோல் – தமிழும் ஒரு மொழி என்றுதான் சொல்லுகிறார்களே ஒழிய, இவையாவும் தமிழ்தான் என்பதை ஒப்புக் கொள்ள வெட்கப்படுகிறார்கள்; சிலர் மறுக்கவும் செய்கிறார்கள்.

காரணம், அவர்களது மொழிகளில் ஆரியச் சொற்கள் பெரும்பான்மையாகக் கலந்துவிட்டன. ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இடநெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கு கூடி வாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்திய போக்குவரத்து வசதிக்குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள், தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மதத் தத்துவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும்படிச் செய்து, அதன்மூலம் தமது கலை, ஆச்சார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்திவிட்டனர். அந்த வடமொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும், அந்தந்த மக்களுக்குத் தமது மொழி, தமிழ் அல்லாத வேறு மொழியாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன். உதாரணமாக, இங்கு (சென்னையில்) “தோட்டத்திற்குப் போகிறேன் என்றால், வயலுக்கு, விளைநிலத்துக்குப் போகிறேன் என்று அர்த்தம், “கொல்லைக்குப் போகிறேன்’ என்றால், “கக்கூசுக்குப் போகிறேன்’ என்று அர்த்தம். சோழநாட்டில் தோட்டத்துக்குப் போவதென்றால், கச்கூசுக்குப் போவதாகவும், கொல்லைக்குப் போவதென்றால் வயலுக்குப் போவதாகவும் அர்த்தம் செய்து கொள்ளுவார்கள். ஒரே தமிழ்ச் சொல் இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருளில் வழங்குகிறது. ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருந்தால், ஒவ்வொரு சொல்லும் ஒரு மொழியாகிவிடுமா?

முன்பு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, நான் மலையாளத்துக்கு வியாபார விஷயமாய் சென்றபோதெல்லாம் நான் சிறிது அழுத்தியும், குறுக்கியும், மடித்தும் பேசிய தமிழை அங்குள்ளவர்கள் புரிந்து கொண்டுதான் இருந்தார்கள். நான்கு மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அநேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும்; அகராதி கொண்டு மெய்ப்பிக்கவும் முடியும். சமீபகாலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை."


             தமிழைக் காட்டுமிராண்டி மொழியெனக் கூறிய பெரியார் எழுத்துச் சீர்திருத்தமும் செய்தார். கட்டாய இந்தித் திணிப்புப் போராட்டத்திலும் முன்னோடியாக இருந்தார்.   வாழ்நாள் முழுவதும் பார்ப்பணியத்தைக் கடுமையாக எதிர்த்த பெரியார் தனிப்பட்ட முறையில் பகையின்றி அவர்களுடன் நட்பு பாராட்டினார் உதாரணம் இராஜாஜி. 

இவ்வாறு பல சாதனைகளைச் செய்த பெரியாரின் கலகங்களுக்கு எதிராக விளைந்தது எதிரிகளைக் காட்டிலும் அவருடன் இருந்து பிரிந்து சென்ற அவரது வாரிசுகளே என்பது மிகையாகாது. "கடவுள் இல்லை, இல்லவே இல்லை" என்று முழக்கமிருந்த போதே தம்பிமார்கள் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று சமரசம் செய்து கொண்டார்கள். அவர் ஒழிக்க விரும்பிய பேராயக் கட்சியின் ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதே பெரியாரின் வாரிசு என்று தம்மை அறிவித்துக் கொள்ளும் கலைஞரின் தி.மு.க. காலமெல்லாம் அவர ஒழிக்கப் போராடிய பாரப்பனர்களின் அபிமானத்திற்குரிய ஒருவர், தம்மை சட்டமன்றத்திலேயே பாப்பாத்திதான் என்ற ஒருவர் அண்ணா, திராவிடம் என்ற சொற்களைக் கட்சிப் பெயராகக்  கொண்ட கட்சியின் தலைவராக உள்ளார். ஈழப்பிரச்சனையின் போது பெரியார் தி.க. - உடனான மோதலில் பெரியாரின் சிலையை உடைத்தனர் தி.மு.க.வினர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தொடங்கிய தி.மு.க. வைச் சேர்ந்த ஒருவரின் மகனே இந்தித் திணிப்பின் அடையாளமான இந்திய ரூபாயின் சின்னத்தை வடிவமைத்திருப்பது காலத்தின் அலங்கோலம். 


பெரியாரின் கருத்துக்கள் இன்றும் தேவையாக உள்ளன. அவரின் எழுத்துக்களைப் படித்தால் ஏதோ இன்று நடப்பதப் பார்த்துவிட்டு எழுதியதைப் போன்று உள்ளது. எடுத்துக்காட்டுகள்

(வாக்கு அரசியல் குறித்து ) இறுதிப் பேருரையிலிருந்து

அரசியல் ஓட்டுப் பொறுக்கிகள் !

ஓட்டு என்றால் எதைக் கொடுக்கிறான் ? பெண்டாட்டி தவிர, எல்லாவற்றையும் கொடுக்கிறானே ! முன்னேற்றக் கழகத்துக்குக் கூட கோயில் கட்டும் வேலை தான் முக்கியம் !
இன்னும் கொஞச நாள் போனால் பெண்டாட்டியயும் கொடுத்துவிட்டு ஒட்டு வாங்கும் நிலை வந்துவிடும். எனென்றால் அவர்களுக்கு உத்தியோகம், பதவிதான் பெரிது!

பேராயக்கட்சி குறித்து

அடுத்தாற்போல் ஒழிய வேண்டியது காங்கிரசு; அது ஒழிந்து விட்டது. இனிமேல் தேறாது! இப்பவே இரண்டு பேரும் தொங்குகிறார்களே! இரண்டாகப் பிரிந்தது; ஒன்றுக்கொன்று மானங்கெட்டுத் திரியுது; இப்ப மீண்டும் சேர்ந்தால் என்ன ஆகப்போகுது? காங்கிரசிலே என்ன இருக்கிறது ? எவன் ஆதரிப்பான் காங்கிரசை ? மானங்கெட்டவனைத் தவிர!





Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

காஷ்மிர் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற இந்திய இராணுவம்

காஷ்மிர் போராட்டம் மூன்றாவது மாதமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது எரிகிற நெருப்பின் எண்ணெய் ஊற்றியது போல இணையத்தில் வெளியான ஒரு காணொளியால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காசுமிரில் இந்திய துணைராணுவம், மத்திய ரிஸர்வ் காவல்படை மற்றும் காசுமிர் காவல்துறைகளால் காசுமிரிகளுக்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காஷ்மிர் இந்தியாவின் ஈழம், அல்லது பாலஸ்தீன் என்று கூறும் அளவுக்கு உச்சமடைந்துள்ளன.

இராணுவமோ அல்லது காவல்துறையோ தமது கைதிகளை நடத்தும் விதம் பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், அவை காணொளியாகவோ, அல்லது புகைப்படங்களாகவோ வெளிப்படுகையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஈராக்கில் அமெரிக்க, இங்கிலாந்து இராணுவத்தின் போர்க்குற்றங்கள், பால்ஸ்தீனில் இஸ்ரேலின் போர்க்குற்றங்கள், ஈழத்தில் சிங்கள பேரினவெறி இராணுவத்தின் போர்க்குற்றங்கள் போன்றவை உதாரணங்கள். இதில் சில குற்றமிழைத்தவர்களே பெண்களை வன்புணர்ச்சி செய்யும்போதோ அல்லது ஆண்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யும்போதோ இரசித்து அதை புகைப்படமாக எடுத்து அவை பின்பு ஊடகங்களில் வெளிவரும்போது அவர்களின் அருவருப்பூட்டும் வக்கிரம் வெளிப்படுகிறது. 

தம்மிடம் சிக்கிய கைதிகளை எந்தவித மனித உரிமையுமின்றி நடத்துவதில் இராணுவமோ அல்லது காவல்துறையோ விதிவிலக்கல்ல. அதுவும் காஷ்மிர் போன்ற போராட்டம் நடக்கும் பகுதிகளில் இராணுவத்திற்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ள இடங்களில் நடக்கும் அவலங்களை சொல்லி மாளாது. தீவிரவாதிகள், போராட்டக்காரகள் மீதான் கோபத்தினை பொதுமக்கள் மீதும் கைதிகள் மீதும் காட்டுவது இவர்களின் வாடிக்கை. பெண்களாக் இருந்தால் பாவாடையைக் கிழிக்க அலையும் ஆக்ரமிப்பு இராணுவங்கள், ஆண்கள் மீதும் பல்வேறு வகையான சித்ரவதைகளை ஏவுகின்றன. நிர்வாணப்படுத்துவது அதில் மிக முக்கியமானது. அதற்கு எந்த இராணுவமும் விதிவிலக்கல்ல. இந்திய இராணுவம் சிங்கள இராணுவத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.

தற்போது வெளிப்பட்டுள்ள காணொளியில்  நான்கு காஷ்மிர் இளைஞர்கள் நிர்வாணமாக் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்கள் தமது உடைகளைக் கைகளில் வைத்துள்ளனர். காவலர்கள் அவர்களைக் கைகளை மேலே உயர்த்தியவாறு நடக்குமாறு கட்டளையிட்டு அவரகள் கைகளால் தமது ஆணுறுப்பை மறைக்காதவாறு செய்கிறார். மூன்று நிமிடங்கள் வரை ஓடும் இக்காட்சியில் சுற்றியிருக்கும் பெண்கள் அழுவதும் இடம் பெற்றுள்ளது. இதை இளைஞர்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லும் இராணுவ வீரரே படம் பிடித்துள்ளார். 



இக்காட்சி யூட்யூப், ஃபேஸ்புக்கில் 8 - ம் தேதி இரவு முதல் 9 - ம் தேதிவரையில் காணப்பட்டது. தற்போது நீக்கப்பட்டு விட்டது. "சகோதரர்களே தயவுசெய்து பாருங்கள், சகோதரிகளே தயவுசெய்து பார்க்காதீர்கள்" என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் இடம்பெற்றிருந்தது. இது பல இந்தியதேச பக்தரகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காஷ்மீரில் கலவரக்காரர்களின் வன்முறைகள், கல்லெறிதல், தீவைப்புகள் போன்றவையே செய்திகளாக இந்திய ஊடகங்கள் வெளியிடுவதால் இராணுவத்தின் வெறியாட்டங்கள் மறைக்கப்படுகின்றன.  




தெளிவற்ற காட்சியாகவே ஓடும் இது எடுக்கப்பட்ட இடமும், காலமும் சரியாக அறியப்படவில்லை. எனினும் கடைசி 2 அல்லது 3 வருடங்களில் எடுக்கபபட்டதாகவே தெரிகிறது. காஷ்மிர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் இதை வெளியிட்ட யூட்யூப், ஃபேஸ்புக் மற்றும் இதைப் பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என்றிருக்கிறார். ப. சிதம்பரமோ இதன் நம்பகத்தன்மையை கேள்வியெழுப்பியுள்ளார். இது இந்திய இராணுவத்தை இழிவு செய்வதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் காணொளியில் காவலர், இராணுவத்தினரின் சீருடை தெளிவாகத் தெரிகிறது என்றும் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதைப்படம் பிடித்தவர் ஹிந்தியில் பேசுவதும் பதிவாகியுள்ளது. நிர்வாணமாக்கப்பட்ட இளைஞர்களின் முகம் அவமானத்தாலும், வேதனையினாலும் நிரம்பி இருந்தது. காவலரின் குரல் பின்வருமாறி ஒலிக்கிறது.

"நட, நட, நட  நடந்துகொண்டே இரு, sisterfuckers"

"கைகளைத் தூக்கு, இல்லையென்றால் அடிப்பேன்"

"உன்னுடைய காலணிகள் மிகவும் நன்றாக உள்ளன, sisterfuckers" ( பின்பு வேறொரு குரல் கேட்கிறது - ஏன் உன் காலணிகள் மிகவும் அழுக்காக உள்ளன)

"உங்கள் உடைகளை மடித்து, கைகளில் எடுத்து, மேலே தூக்குங்கள்" ( கைகளால் உடலை மறைக்காமல் இருக்க)

"இந்த sisterfuckers காலையிலிருந்து நம்மை இவனுங்க பின்னால் ஓட வைத்து விட்டார்கள்"

"இவர்களைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்"

இதன் மூலம் இந்திய இராணுவத்தின் கோரமுகம் மீண்டும் அம் பலமாகியிருக்கிறது.






Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பாகிஸ்தானின் மிகப்பெரும் தாலிபன் இயக்கம்

கடந்த 80 வருடத்தில் இல்லாத மழைவெள்ளத்தால் நிலைகுலைந்துள்ள பாகிஸ்தானின் அடுத்தடுத்த பேரழிவை விளவிப்பவை தாலிபன் இயக்கங்களின் தாக்குதல்கள் . இம்மாதம் 3 - ம் தேதி நடத்திய தாக்குதலில் ஏறத்தாழ 70 பேரும் 6 - ம் தேதியில் நடந்த தாக்குதலில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்றுள்ள இயக்கம் தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அல்லது பாகிஸ்தான் மாணவர் இயக்கம். மேலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கும் என்று எச்சரித்துள்ளது. கடைசியாக நடந்த தாக்குதல்களில் 4 பள்ளிக்குழந்தைகள் கொல்லப் பட்டதற்கு அதன் செய்தித் தொடர்பாளர் அஸம் தாரிக் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான்

அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானை ஆக்ரமித்தபோது இவர்கள் பாகிஸதானின் வடமேற்குப் பகுதிகளில் தஞசம் புகுந்தவர்களுடன் சேர்ந்து உருவானதே இவர்களின் இயக்கம். முன்பு தாலிபன் ஆதரவாளர்களாக மட்டும் இருந்த இக்குழுக்கள் தம்மை தாலிபன்களாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள பழங்குடியினத் தலைவரகளுக்கு மாற்றாக நிறுவிக கொண்ட இவர்கள் அங்கு தமது ஆட்சியையும் நிறுவிக் கொண்டனர். அவ்வப்போது இராணுவத் தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். 2005 - ல் பாகிஸ்தான் இவர்களைத் தடை செய்தது. பின்பு பாகிஸ்தான் இராணுவம் இவர்கள் மீது போர் தொடுத்தது முதல் அதிபயங்கரத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

தாலிபான்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதி




ஷியா முஸ்லிம்களின் ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தியதிலிருந்தே இவர்களின் அடிப்படையைத் தெரிந்து கொள்ளலாம். தியோபந்தி ( Deobandi ) சுன்னி இசுலாமியப் பிரிவு இவர்களின் அடிப்படைவாதமாக உள்ளது. ஆச்சரியமூட்டும் வகையில் தியோபந்தி பிரிவு தொடங்கப்பட்ட இடம் தற்போதைய இந்தியாவின் உத்தர பிரதேசத்திலுள்ள சாஹரன்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இந்திய துணைக்கண்டடத்தில் சுன்னி மரபினைப் பரப்பும் மதரசா தொடங்கப்பட்ட இந்நகரின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. ஹிந்தியிலும் உருதுவிலும் இது "தேவ்பந்த்" (Devband) எனப்படுகிறது. அடுத்த ஆச்சரியம் இவர்களின் தோழமை அமைப்புகள காசுமிரில் இந்திய இராணுவத்திற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வந்தாலும் இவர்கள் ஈடுபடவில்லை. காசுமிர் ஜிஹாத் தங்களின் இலட்சியத்திற்கு உதவாது என்கிறார் தாரிக். இவர்களின் எதிரிகளின் பட்டியலில் உள்ளவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இசுரேல் மற்றும் பாகிஸ்தான் அரசும் இவர்களின் முதன்மையான எதிரி. மேலும் ஷியா முஸ்லிம்களையும் தமது எதிரிகளாக் அறீவித்துள்ளது. இந்தியாவின் "ரா" உதவி பெறும் அமைப்பாக தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் அமைப்பை பாகிஸ்தான் அரசு பரப்புரை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

பாகிஸ்தான் இன்னும் இசுலாமியமயமாக வேண்டுமென்பதே இவர்களின் நோக்கம். ஷாரியா தவிர வேறு எதையும் இவர்கள் ஏற்பதில்லை. ஜிஹாதிகளின் பொதுவான நோக்கங்களான் மேற்கு நாடுகளின் பிடியிலிருந்து இசுலாமிய நாடுகளின் விடுதலை, முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஷாரியத்- ஐ நடைமுறப்படுத்துவது என்பதே இவர்களின் கொள்கை. பாக். மட்டுமின்றி உலகளாவிய புனிதப் போரும் அடங்கும். இவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைமுறைப்படுத்தியுமுள்ளனர். வங்கிகளைக் கொள்ளையடிப்பது, பெண்கள் பள்ளிகளைத் தகர்ப்பது, பெண்களுக்குக் கிடைக்கும் அரசு நிதிகளைக் கிடைக்காமல் செய்வது, முகச்சவரம் செய்வதைத் தடை செய்வது இவர்களின் சட்டங்கள். மேலும் ஷியா முஸ்லிம்களை கண்ணியமற்ற முறையில் நடத்துவதும் இவர்களின் நடைமுறை. மேலும் சிறுபான்மையினரான் கிறித்தவர்கள், ஹிந்துக்கள், சீக்கியரை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றுவது இவர்களது கொள்கையிலுள்ளது. இவர்க்ளின் அட்டூழியத்தால் இதுவரையில் 3 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர். துப்பாக்கியும் புனிதப்போருமே உலகில் அமைதியைக் கொண்டு வரும் சமாதானம் பேச்சுவார்த்தைகள் உதவாது என்பது இவர்களின் சாரம்.


பாகிஸ்தான் அரசுக்கு உதவி

கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இழப்பீடாக TTP இயக்கம் பாகிஸ்தான் அரசுக்கு 20 மில்லியன் டால்ர்கள் அளிக்க முன்வந்தது. மாறாக் பாகிஸ்தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் உதவிகளை மறுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. பின்பு பாகிஸ்தான் அரசு வெளிநாட்டின் உதவிகளை மக்களின் நலனுக்காக பயன்படுத்தவில்லை என்றது.

ஆஃப்கானிஸ்தானின் எல்லையோரங்களிலுள்ள பாகிஸ்தானின் கிராமங்களில் அமெரிக்க, நேட்டோ படைகள் தாக்குதல் நடத்துகின்றன. மேலும் தாலிபன்களின் தலைமறைவாக் இருப்பதற்கு பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளே புகலிடமாக விளங்குகின்றன. தாலிபன்கள் ஆஃப்கானிஸ்தானில் நடத்தும் போருக்கும் இங்கிருந்தே கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இதனால் அமெரிக்க அரசுக்கு ஆதரவாக பாகிஸ்தானிலிருக்கும் தாலிபன்களை ஒடுக்குவதற்கு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு தாலிபன் அமைப்புகளும் ஆஃப்காகானிலும், பாகிஸ்தானிலும் போரை நடத்தி வருகின்றன. தாலிபன்களுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தானுக்கு இந்தியாவும் உதவிகள் செய்து (பாகிஸ்தானுக்குப் போட்டியாக) தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள விரும்புகிறது. இதனால் தாலிபன்கள் அங்கு பணிபுரியும் இந்தியர்களை கடத்துவது, கொல்வது போன்ற நிகழ்வுகளும் நடந்தன. இந்திய தூதரக்த்தின் மீதான தாக்குதலையும் நடத்தினர்.

ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க, நேட்டோ படைகள் பொதுமக்களின் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதலினால் பலரைத் தாலிபான்களின் சேரவைத்துள்ளது. தாலிபன்களுக்கெதிரான் போரின் பெயரால் திருமண வீடுகள் தொடங்கி இழவு வீடுகள் வரை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடைபெறுவதால் வெறுப்புற்ற ஆஃப்கானியர்கள் தாலிபன்களுக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். பாகிஸ்தானின் எல்லைப் புறங்களில் நடக்கும் அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதல்கள், பாகிஸ்தானின் அமெரிக்க ஆதரவு நிலை இவற்றால் வெறுப்புற்ற பாகிஸ்தானின் சில் இயக்க்ங்கள் தாலின்களை ஆதரிக்கின்றன. இவ்வாறாக பெருமளவிலான் ஆதரவைப் பெற்றுள்ள் தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தானின் ஆற்றல் வாய்ந்த இயக்கமாக பல்லாயிரம் வீரர்களைக் கொண்டுள்ளதாக வளர்ந்துள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 20000 - க்கும் மேலான வீரர்களைக் கொண்டுள்ள இயக்கமாகும்.

பாகிஸ்தானின் அமெரிக்க முதலீடுகளைக் குறிவைத்து தாக்குவதில் கவனம் செலுத்தும் TTP யின் ஆற்றலுக்கு ஓர் உதாரணம், கடந்த 2009 - ல் டிசம்பர் 28 - ல் கராச்சி நகரில் ஒரு பேரங்காடிகள், வணிக வளாகங்கள் கொண்ட ஒரு கட்டிடத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பல கடைகள் அழிக்கப்பட்டு ஏறக்குறைய 10000 பேர் வெலையிழந்தனர்.



தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் - தலைவர் ஹகிமுல்லா மெசுத்

இவர்கள் தம்மை தாலிபான்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டாலும் ஆஃப்கானின் தாலிபன்களிலிருந்து வேறுபட்டுத் தனித்தே செயல் படுகின்றனர். தாலிபன்களின் தலைவரான முல்லா ஓமரின் தலைமையிலல்ல. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இதன் தலைவரான் பையத்துல்லா மெசுத் கொல்லப்பட்டார். பின்பு ஹகிமுல்லா மெசுத் என்பவர் தலைவராக நியமிக்கப் பட்டார்.தாலிபன்கள் இயக்கங்கள் தலைவர்கள் கொல்லப்படுவதால் எவ்விதப் பின்னடைவையும் அடைவதில்லை. பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டும், பிடிபட்டும் இன்னும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன. தலைவர்கள் கொல்லப்படுவதாலும் இராணுவ நடவடிக்கைகளாலும் தாலிபான்களை அடக்க முடியாது என்பதே தற்போது நிலவரமாக உள்ளது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment