சின்னப் பெருமை

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஏப்ரல் 29 ஆம் நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள். அந்த நாளே எனது பிறந்தநாளும் என்பதில் அற்பத்தனமான ஒரு மகிழ்ச்சி என்னுள் எழுகிறது. அவரை தமிழ் தேசியக் கவி என்றும் கூறலாம். தமிழுணர்ச்சி ததும்பும் பாடல்களை எழுதியவர். அவரைப் பற்றி இன்னும் முழுவதும் அறியாமல் இருப்பது வெட்கமாக இருக்கிறது.  அவரைப் பற்றி சில செய்திகள். 


-அவர் பிறந்த நாள் - 29-04-1891

-இவரது மிகச் சிறந்த வரியாகக் குறிப்பிட வேண்டிய பாடல்களில் எனக்குப் பிடித்தவை

தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
இன்னொன்று,

கொலைவாளினை எடடா
கொடியோர் செயல் அறவே 

பெரியார் ஏற்றுக் கொண்ட கவிஞர் - பெரியாரை ஏற்றுக் கொண்ட கவிஞர்

பாவேந்தரின் படத்தைத் திறந்து வைக்கும் பெரியார்

டெல்லி இந்தி ஏகாதிபத்தியம் இந்தியா முழுவதும் இந்திமயமாக்கும் வெறியில் இருக்கும் இவ்வேளையில் இந்தப் பாடல் இன்றும் பொருந்துகிறது.

தில்லி ஒழிக!

செந்தமிழ் நாட்டைத் தில்லி ஒழிக்குமுன்
தில்லிதன்னை ஒழிக்க வேண்டும் நாம்.

குந்திச் சிறிய கதைபேசித் திரியும்
குள்ளத் தலைவர் குற்றம் செய்தனர்

இந்திச் செய்தியில் நடந்த தெப்படி?
இன்பத் தமிழை மாய்ப்பதும் கண்டோம்!
பைந்தமிழ் நாட்டுக் குள்ள அதிகாரம்
பத்தில் ஒன்றும் பலித்ததா நமக்கு?

நாட்டினை ஆண்ட தமிழா அடிமைகள்?
காட்டு மிராண்டிக் கழுதையா ஆள்வது?
நாட்டையும் மொழியையும் நசுக்குதல்
கண்டும்;
நாய்வாழ்க் கையைநாம் நாடுதல் நல்லதா?

புலவர் உள்ளனந் எதற்குத்தாம்
உள்ளனர்?
பொன்னுளார் உள்ளனர் எப்பயன்
கண்டோம்?
கலைஞர் வாழ்கின்றார்; எதற்காக
வாழ்கின்றார்?
கைவிலங் குக்கு மெருகு போடவா?

சோறுண்ணுகின்றோம்;
நாயுண்ண வில்லையா?
துன்பமற்ற தலைமுறை செய்வோம்
ஆறு பாய்ந்தெனத் தமிழர்கள்
பாய்க!
அழிக்கும் பகையை
அழிப்பதற்கே!
 

ஆங்கிலத்தைக் கற்க வற்புறுத்திய பெரியாருக்கு எதிராகவும், அவரது எழுத்துச் சீர்திருத்தத்திற்கு எதிராகவும் தனது எழுதுகோலைச் சீறியிருக்கிறார் புரட்சிக்கவிஞர். பெரியார் ஏற்றுக் கொண்ட ஒரே கவிஞர் பாரதிதாசன் மட்டுமே என்பது இங்கே தனிச்சிறப்பு. பெரியாரின் கொள்கைகளையும் தனது பாட்டில் வடித்தவர் புரட்சிக்கவிஞர்.

தமிழால் தமிழர் ஆயினர் அன்னவர்
தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.

தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்;
தமிழால் தலைமை அடைந்த #அவர்கள்
'தமிழில் ஏதுளது' என்று சாற்றுவர்.

தமிழைப் பேசித் #தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
'தமிழால் பயன் ஏது?" என்று சொன்னார்.

தமிழர் வாழத் தக்கவை ஆன
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்;
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரைநூற் றாண்டாய் அறிவு புகட்டினர்

அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
தமிழர் தலைவர் தமிழாற் பேசியும்
தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்
தமிழர் தங்கு தடையின்றி உணர்ந்தனர்
உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க.

இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!
அன்றியும் அருமைத் தமிழே அன்றி
வேறுமொழி எமக்கு வராதென விளம்புவர்.
தமிழே தலைவ ராக்கியது, மற்றும்

தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை
எவரும் மறுக்க இயலா தன்றோ?
இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்!

தலைவரைச் செய்தது தமிழ்இலக் கியமே
தமிழினம் படைத்தது தமிழ்இலக் கியமே
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது? வண்டமிழ் இலக்கியம்!

தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்;
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்
எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!
 

தமிழ் இலக்கியங்கள் ஒரு குப்பை என்று சொன்ன பெரியாருக்கு எதிராக எழுதியதுதான்.

நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி

என்ற கவிதை.  அவரின் அடுத்த பிறந்த நாளுக்கு இன்னும் சிறப்பான முறையில் எழுத வேண்டும்

செய்திகள். படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து எடுத்தவை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

சத்யராஜ் டக்கால்டி


நடிகர் சத்யராஜ் பாகுபலி படத்திற்காக, கன்னட இனவெறி கிறுக்குகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். 9 வருடங்களுக்கு முன்னர் தான் பேசியதற்காக வருத்தம் தெரிவித்த சத்யராஜ் தான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் இல்லையென்றும் கூறியுள்ளார். 9 வருடங்களுக்கு முன்னர் பேசிய பேச்சுக்காக இப்போது திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் இறங்குகிறவர்கள் எந்த இலட்சணத்தில் இருப்பார்கள் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளில் போராடியிருப்பார்கள் என்று நினைத்தால் பாவமாக இருக்கிறது.

இப்போது சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததற்காக அவரை எல்லாரும் பாராட்டுகிறார்கள். அவர் தமிழனை விட்டுக் கொடுக்கவில்லை. படத்தில் பணியாற்றிய ஆயிரம் குடும்பங்களுக்காகத்தான் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அவர் இனமுரசு, பெரியாரியர், பகுத்தறிவுவாதி, தமிழ் உணர்வாளர் என்கின்றனர். ஏன் வருத்தம் தெரிவித்து விட்டு தமிழனாக இருப்பதே இறப்பதே பெருமை என்று சொல்லி விட்டார். என்னென்ன அட்டூழியம் செய்தாலும் செய்து முடித்து விட்டு பாரத் மாத்தா கீ ஜே என்று சொல்கிறவர்கள் தேசபக்தனாவதைப் போலத்தான் இதுவும் இருக்கிறது. தமிழனாக இருப்பதே தமிழன் என்பதே அவருடைய நிலையை நிர்ணயித்து விடுகிறது தமிழ்நாட்டில்.


இதே போல் நடிகர் ரஜினியின் படத்திற்கு பிரச்சனை வந்த போது ரஜினி வருத்தம் தெரிவித்தார். தான் கன்னட மக்களைக் குறிப்பிடவில்லை என்றும், வன்முறை செய்தவர்களைத்தான் உதைக்க வேண்டும் என்று கூறினேன் என்று கூறினார். ஏன் சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தில் மட்டுமா ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறது. ரஜினியின் படத்திலும்தானே இருந்தார்கள். இத்தனைக்கும் சத்யராஜ் பக்க கதாபாத்திரம் மட்டுமே. ரஜினியின் படம் என்றால் சொல்ல வேண்டியதில்லை. பாகுபலி சத்யராஜின் படம் என்றில்லாத போதும் சத்யராஜ் நடித்த காரணத்திற்காக அதை தடை செய்யச் சொன்னார்கள். அப்படியிருக்க கன்னடர்களை எதிர்த்த ரஜினி படத்தின் மீதான எதிர்ப்பு எப்படி இருந்திருக்கும் ? எனவே சத்யராஜின் பிரச்சனையை விட ரஜினிக்குத்தான் அழுத்தம் அதிகம். அவர் கேட்க விரும்பாவிட்டாலும், திரையரங்க அதிபர்கள், சங்கத் தலைவர்கள், விநியோகிப்பாளர்கள், படத் தயாரிப்பாளர், துணை நடிகர்கள் மற்றும் திரைப்படத்திற்குப் பின்னால் வேலை செய்த அனைவரின் வாழ்க்கைக்கும் சேர்த்துத்தானே ரஜினியும் மன்னிப்புக் கேட்டார். என்ன ரஜினி கன்னடனாகப் போனதால் அவரைத் திட்டுவதற்கு அருமையான காரணம் கிடைத்து விட்டது.   தன் படத்தில் பணியாற்றிய தமிழ்த் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் சேர்த்துத்தான் ரஜினி மன்னிப்புக் கேட்டிருப்பார் என்பது உண்மையிலேயே யாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஒரு கன்னடன் கன்னடர்களிடம் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டான் என்ற உணர்ச்சிதான் மேலோங்கியிருந்திருக்கிறது.

அவரை எதிர்த்தவர்கள் கன்னட அமைப்பினர் என்றபோதும் அவரது படத்தை வாங்கி ஓட்டும் திரையரங்கு முதலாளிகள் கன்னடர்கள்தானே, அவர்களுக்கு மட்டும் கன்னட உணர்வு இல்லையா ?

ரஜினி படத்தை வெளியிடுகிறவர்கள், படத்தில் பணியாற்றியவர்கள் எனப் பெரும்பான்மைத் தமிழர்களின் குடும்ப வாழ்வும்தானே ரஜினியின் படத்தில் இருக்கிறது. அதற்குத்தானே ரஜினியும் மன்னிப்புக் கேட்டார் என்றால் ஒத்துக் கொள்வார்களா ? இப்போது சத்யராஜ் மற்றவர்களுக்காகத்தான் மன்னிப்புக் கேட்டார் என்பவர்கள்.

நான் தொடர்ந்து தமிழர்களின் பிரச்சனைக்குக் குரல் கொடுப்பேன், என்னால் பிரச்சனை வரும் என்று நினைப்பவர்கள் என்னை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று சத்யராஜ் சொன்னது வீரம்தான் நேர்மைதான் என்று ஒத்துக் கொள்கிறேன். அதை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினி வருத்தம் தெரிவித்த போது இந்த சத்யராஜ் என்ன சொன்னார் ? நானாக இருந்தால் மன்னிப்புக் கேட்டிருக்க மாட்டேன், எனது சம்பளத்தை விட்டுக் கொடுத்திருப்பேன் என்றார். இப்போது இவரும் மன்னிப்புதானே கேட்டிருக்கிறார் ? என்னவோ ரஜினி மன்னிப்புக் கேட்டதை வைத்து தமிழ்நாட்டின் தன்மானமே அடகுவைக்கப்பட்டதைப் போலல்லவா பேசினார். ரஜினிக்கு இதுமாதிரியெல்லாம் வாயடிக்கத் தெரியாது. உளறி மாட்டிக் கொள்வதால் ரஜினியைப் போட்டு கும்மிவிட முடிகிறது.

உண்மை என்ன. சத்யராஜ்-க்கு ரஜினியைப் பிடிக்காது, அதனால்தான் அன்று கன்னட இனவெறியைக் கண்டிப்பது போல் இவரைத் திட்டினார். பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்ளும் சத்யராஜ் தன்னை நடிகன் எம்ஜிஆரின் ரசிகன் என்பதில் பெருமைப்படுவார். அதெப்படி ஒரு பகுத்தறிவுவாதி ஒரு நடிகனுக்கு ரசிகன் என்பதைப் பெருமையாகச் சொல்வார் ? மேடையில் ஏறினாலும் சரி அவரது படங்களிலும் சரி அவ்வப்போது எம்ஜிஆரைப் போல பாடியோ நடித்தோ பேசியோ சலிப்பேற்றுவார். அதிலும் எம்ஜிஆரைக் குறிப்பிடும்போது புரட்சித் தலைவர் என்றுதான் குறிப்பிடுவார்.  தன்னையும் சில படங்களில் புரட்சித் தமிழன் என்று போட்டுக் கொண்டார். எம்ஜிஆர் என்ன புரட்சிக்குத் தலைமை வகித்தார் என்று யாராவது சொல்லுங்களேன்.

சரி அதாவது போகட்டும். சத்யராஜ் தனது படங்களில் மக்கள் நடிகனுக்கு கொடி பிடிப்பதையும், தலைவனாக்குவதையும் விமர்சனம் செய்வார். கிண்டலடிப்பார். நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைவதற்காக விஜய் மக்கள் இயக்கம் என்று ஒரு விழா நடத்தினார். தனது கட்சி அல்லது இயக்கக் கொடியை அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் பதினாறு பல்லையும் காட்டிக் கொண்டு அந்த விழாவை சிறப்பிக்கக் கலந்து கொண்டார். தனது படத்தில் மக்களைக் கிண்டலடித்து நடிகனைத் தலைவனாக்காதே, நடிகனைக் கொண்டாடாதே உன் வேலையைப் பார் என்றெல்லாம் உபதேசித்து விட்டு ஒரு நடிகனைத் தலைவனாக சித்தரித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் எப்படி இன முரசு ஆக முடியும் ?

எனக்கு எம்ஜிஆருக்கு அப்பறம் விஜய்தாங்க என்பார். இவருக்கு பிடித்த நடிகர் எம்ஜிஆர் பிறகு விஜய் ஆம். அதாவது மறைமுகமாக எம் ஜிஆருக்குப் பின்னர் விஜய்தான். முன்னாள் சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் நாளைய சூப்பர் ஸ்டார் விஜய். நடுவில் இருக்கும் ரஜினி ஒர் ஆளே இல்லையாம். ரஜியின் பஞ்ச் வசனங்களை தனது படங்களில் கிண்டலடிப்பார் சத்யராஜ்.  (பேரக் கேட்டாலே அதிருமா நீ என்ன பூகம்பமா ?)

பெரியார் பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டேண்டா என்று கேட்டார். பெரியாரியவாதி சத்யராஜ் தங்கநகை விளம்பரத்தில் நடிக்கிறார். சின்ன வேறுபாடுதான்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

விவசாயிகளை இழிவு செய்த விஜய பாரதம்

டெல்லியில் கடந்த ஒரு மாதமாக தமிழக விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. அவர்கள் தங்களை எந்தளவு தாழ்த்திக் கொள்ள முடியுமோ அதைவிடக் கீழான நிலைக்கும் சென்று போராடுகிறார்கள். அவர்கள் செய்யும் போராட்டங்களையெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை.ஆயினும் அவர்கள் கோரிக்கைகள் செவிமடுக்கப் பட்டு விடவில்லை. இந்த நிலையில் அவர்களைக் கேவலப்படுத்தி நடிகர்கள் என்று கிண்டலடித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது, R.S.S. - இன் இதழான விஜயபாரதம். இவர்களின் மனநிலையை எதனுடன் ஒப்பிடுவது என்று யாராவது சொல்ல முடியுமா ?

 படம் உதவி - ஃபேஸ்புக்

.

Download As PDF
Bookmark and Share

Post Comment

இரு கொலைகள் ஒரு காரணம்


இரு வேறு நாடுகளில் இரண்டு வேறு பேர் கொல்லபட்டனர். இரண்டிற்கும் ஒரே காரணம் மதவெறி அல்லது மதநம்பிக்கை. இரண்டு பேரும் அந்த மதவெறிக்குக் காரணமான மதத்தைப் புண்படுத்தியதாகவோ, அல்லது இழிவு படுத்தியதாகவோ ஆதாரம் இல்லை. இருப்பினும் அவர்கள் செய்யாத செயலை, செய்தார்கள் என்ற நம்பிக் கொண்டு அல்லது நம்பியதாக நடித்துக் கொண்டு ஒரு பெருங்கூட்டம் அல்லது சிறு கூட்டம் அவர்கள் தனிமனிதனாக இருந்த போது அடித்துக் கொன்றுள்ளது. இந்த மதவாதம் மத நம்பிக்கை என்ற கூறு கெட்ட மூடத்தனம் ஒரு கூறு கெட்ட கூட்டத்தின் மொத்த வடிவமாக மாறும்போது பொய்யும் உண்மையாகிறது. கொலைவெறியே இவர்கள் மூச்சாகிறது. மனிதம் மண்ணோடு மண்ணாகி விடுகிறது.

முதல் கொலை இந்தியாவில் நடந்தது. இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. ஆனாலும் இந்தக் கொலை மதத்தின் பெயரால், மத நம்பிக்கையை இழிவுபடுத்துவதாகச் சொல்லி ஒரு கொடுமையான மனிதர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் நிகழ்த்தியுள்ளது இந்து மதவெறிக்கூட்டம். ஜனநாயக நாடு என்று சட்டத்தில் இருந்த போதும் பெரும்பான்மை என்ற காரணத்தைக் கொண்டு போலியான ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு அதை ஒட்டு மொத்தமான மக்களுக்குமான ஒரு நம்பிக்கையாகக் காட்டி பத்து தெருப்பொறுக்கிகளை வைத்து பட்டப்பகலில் பகிங்கரமாக பொது இடத்தில் வைத்து ஒருவரை அடித்துக் கொல்ல முடியும். ஆனாலு அந்த இயக்கம் தடை செய்யப்படாது. அந்தக் கொள்கையும் கண்டிக்கப்படாது. அவர்களுக்குத் தண்டனையும் கிடைக்காது. இந்தியாவில் பெரும்பான்மை மதத்தினர் மாட்டிறைச்சி உண்டாலும் தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் மீது அதே காரணத்தை வைத்து தாக்குதல் நடத்திக் கொல்லவும் முடியும். இதெல்லாம் ஒரு ஜனநாயகமா ? ஆம்.

ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் பசு காவலர்கள் என்று ஒரு கூட்டம் பால் பண்ணை முதலாளி ஒருவர் மாடுகளை கொண்டுவந்த போது வழிமறித்துத் தாக்கியுள்ளது. காரணம் அவர்கள் பசுக்களைக் கடத்தி வதை செய்பவர்கள் என்று ஐயமாம். அவர்கள் தாங்கள் பால்பண்ணை நடத்துகிறவர்கள் என்று ஆதாரங்களைக் காட்டிய பிறகும் அதை நம்பாமல் அவர்களைத் தாக்கியுள்ளது அவர்களிடமிருந்து 35000 ரூபாயையும் பறித்துக் கொண்டது. 50 வயதான அந்த பால் பண்ணை முதலாளியைக் கிழவா ஓடு என்று விரட்டி விட்டு பின்னர் துரத்தித் தாக்கியுள்ளது. இதனால் படுகாயமுற்ற அந்த நான்கு பேர்களில் அந்த 50 வயது நபர் உரிய சிகிச்சையின்றியும் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தார். இந்த கும்பல் தாக்கிய ஐவரில் ஒருவர் இந்து மதத்தைச் சார்ந்தவர். அவரை தப்ப அனுமதித்த கும்பல், முஸ்லிம்கள் நான்கு பேரை மட்டும் கொடூரமாகத் தாக்கியுள்ளது. தாத்ரியில் இது போல்தான் ஒரு வருடத்திற்கு முன்னர், மாட்டுக்கறி வைத்திருந்த குற்றத்திற்காக ஆட்டுக்கறி வைத்திருந்த அக்லக் என்றவரைக் கொன்றார்கள்.



இரண்டாவது கொலை பாகிஸ்தானில் நடந்துள்ளது. பாகிஸ்தான் ஒரு மதவெறி நாடு, மத விமர்சனம் செய்தாலே தேசதுரோகம், மதநிந்தனை என்று வாழ்நாள் சிறை அல்லது சாவு தண்டனைதான் கிடைக்கும் இதற்கு மேல் பெரிய விளக்கம் வேண்டியதில்லை. பெரிய காரணம் வேண்டியதில்லை. அவர் இறைவனை நிந்தித்தார். இஸ்லாத்தை இழிவுபடுத்தினார் என்ற வகையிலான வதந்தி மட்டும் போதும் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் காட்டுமிராண்டிகள் கூடி விடுவார்கள் அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்துடன் ஒரு உயிர் துடிக்கத் துடிக்கக் கொல்லப்படும். இது அரசாங்கம் நடத்தாது, மக்களே நடத்துவர்.


பாகிஸ்தானின் மர்தானில் உள்ள வாஹிகான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இதழியல் மாணவர் முஹம்மத் மாஷால் கான் இறைவனை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார், அதுவும் அந்தப் பல்கலைக்கழக்த்தைச் சார்ந்த மாணவர்களாலேயே. இந்தக் கேடுகெட்ட மதவெறி என்று ஒழியும் ? இது இருக்கும் வரை மனிதம் தழைக்கவே தழைக்காது.  மாணவர் மஷால் கான் தாக்கப்படும் கொடூரக் காணொலி. மனவலிமை இல்லாதவர்கள் தயவு செய்து காணவேண்டாம்.

                   

Download As PDF
Bookmark and Share

Post Comment