அணு உலை - ஜப்பான் மூடுகிறது தமிழகம் திறக்கிறது !!


ஐன்ஸ்டீன்கள் வாழும் தமிழ்நாடு உலக அதிசயம். ஆனால் உலகத்திலேயே தமிழர்களைப் போல ஒரு அதிசயப் பிறவிகளைப் பார்க்க முடியாது. எப்படித்தான் இவ்வளவு துணிச்சலுடன் இருக்கிறார்களோ தெரியவில்லை. இன்னும் 10 நாள்களில் அணு உலையத் திறக்கப் போகிறோம் என்று முதல்வர் அறிவித்து விட்டார். போராட்டக்காரர்கள் தம் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திய வண்ணம் இருக்கிறார்கள். இன்னும் காவலர்கள் அங்கு வன்முறையைத் தூண்டக் காத்துக் கொண்டிருக்கிறார்கள், என்னவெல்லாமோ செய்து பார்க்கிறாரகள். சுற்று வட்டாரத்திலுள்ள ஊர்களின் பஞ்சாயத்துத் தலைவர்கள் சிலரை சில நூறுகோடிகள் உங்கள் கிராமங்களுக்கு நலத்திட்ட உதவி என்று ஆசைகாட்டி அவர்களை விலைக்கு வாங்கியுமுள்ளனர். பட்டினிப்போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. ஏனென்றால் கடந்த 9 மாதங்களாகப் பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  பல பெண்களின் உடல்நிலை மோசமாகியிருக்கிறது




போதாக்குறைக்கு கேரள முதலவர் தமக்கு 500 மெகாவாட் தேவையென அம்மாவுக்குப் போட்டியாகக் கடிதம் எழுதியிருக்கிறார் பிரதமருக்கு.  இது நிச்சயம் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படும். ஏனென்றால் கூடங்குளம் முழு மின்சாரத்தையும் தமிழகத்திற்குக் கிடைக்காது என்று கடிதம் எழுதிய அம்மாவுக்கும் தெரியும் மற்றும் பிரதமர், அணு உலை ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என அனைவருக்கும் தெரியும். இதனுடன் ஒப்பிடுகையில் கேரளாவின் கோரிக்கை நியாயமானதால் அது நிறைவேற்றப்படும். இதை எதிர்த்து அம்மாவை ஒருத்தனுன் கேள்வி கேட்க முடியாது. இதை கேரளாவிற்கு எதிரான மனப்பான்மையைத் தூண்டுவதற்காகக் கூறவில்லை. ஏனெனில் கூடங்குளம் போராட்டத்திற்கு இந்திய அளவில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருக்கின்றனர். வேறொரு மாநிலத்திலிருந்து போராட்டம் குறித்துப் பயிற்சி பெறவும் கூடங்குளத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் அணு உலை எதிர்ப்பு என்பது சுற்றுச்சூழல் இயற்கை மீதான பாதுகாப்பு என்ற உணர்விலிருந்து வருவதாகும். அணு உலை கூடங்குளத்திலிருந்து வேறொரு இடத்திற்கோ  வேறொரு மாநிலத்திற்கோ மாற்ற வேண்டுமென்பதல்ல கோரிக்கை. அணு உலை என்பது ஆப்கானிஸ்தானோ பாகிஸ்தானோ அமெரிக்காவோ உலகின் எந்த இடத்திலும் இருக்கக் கூடாது என்பது தான் உண்மையான அணு உலை எதிர்ப்பாக இருக்க முடியும்.


மாறாக ஜப்பானில் அணு உலை மூடப்பட்டதை ஜப்பானியர்கள் ஒரு வருடப் போராட்டத்தின் வெற்றியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்க்காக தமது இன உணர்வைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் அதிமுக ஆதரவாளனாம். அதாவது அம்மாவின் எதேச்சாதிகாரத்தனத்தையும், திமிரையும் துணிச்சல் என்று துதிபாடும் அறிவாளிகளைப்போலத்தான் அவனும். அவன் சொல்கிறான், ஒரு நாள் இல்லை ஒரு நாள் உதயகுமாரைப்போட்டுத் தள்ளி விடுவார்களாம். எனென்றால் அவன் (உதயகுமார்) இப்ப அமைதியா இருப்பான், கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் பணத்த வாங்கிட்டுப் பிரச்சன பண்ணுவானாம். அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் இன்னும் நடப்பதையே அறியவில்லை அந்தப் புண்ணியவான். அணு உலை ஆதரவாளர்களிடம் ஒரு வித வெறியைக் கண்டால் ஈரக்குலை நடுங்குகிறது. அது என்ன எழவு போராட்டக்காரர்களைக் கண்டாலே அத்தனை வெறுப்போ ?


இன்னும் சில அறிவாளிகள் தற்போது மின்வெட்டு நீங்கிய பின்பு சித்தம் தெளிந்து வெறி அடங்கியவர்களாக கூடங்குளம் மின்சாரம் மொத்தமும் தமிழ்நாட்டுக்கில்லையாமே என்று அதிர்ச்சி காட்டுகிறார்கள். இந்த லட்சணத்தில் அணு உலை ஆதரவு இருக்கிறது. அப்படியே அணு உலை வெடித்தாலும் அவனுகதான சாவானுக என்ற எண்ணமும் உள்ளே பலருக்கு இருக்கிறது. இதைவிட முட்டாள்தனமான எண்ணம் வேறெதுவும் இருக்க முடியாது. ஒரு உதாரணம் ரஷ்யாவின் ஷெர்னோஃபில் விபத்து நடப்பதற்கு ஒரு  மாதத்திற்கு முன்பு SOVIET LIFE என்ற இதழுக்குப் பேட்டியளிக்கும் போது கூறினார் "இந்த அணு உலையை இயக்குவது கார் ஓட்டுவதை விடப் பாதுகாப்பானது" அதைத்தொடர்ந்து பேட்டியொன்றில் இந்திய அணுசக்திக் கழகத்தில் தலைவராக இருந்த ராஜா ராமண்ணா கூறியது "அணுகுண்டைப்போல அணு உலை வெடிக்கும் என்பது முட்டாள்தனமானது. இன்றைய தொழில் நுட்பமானது பல பாதுகாப்பு சாதங்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவதால வெடிப்பதைத் தடுக்கவல்லது". இன்னொன்று அணு உலை வெடிப்பு என்பது வெடிகுண்டு வெடித்து அடங்குவதைப் போல வெடித்து அழிவை உண்டாக்கி விட்டு உறங்கிவிடாது. அது தொடர்ந்து அழிவை வெளியிடும் கதிரியக்கமாக. அதைத் தொடர்ந்து விபத்தைத் தடுக்க வெடித்த உலையானது தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தாமல் அதை அழிக்க அல்லது மூட ரஷ்யா செலவிட்ட தொகை 1800 கோடி இதில் 5 இலட்சம் பேர் ஈடுபட்டனர். இதன் விளைவாக 1986-2004 வரையில் 9,8500 பேர் புற்று நோய் பாதிப்பினால் இறந்தார்கள் என்று ரஷ்ய அரசே அறிக்கை வெளியிட்டது. அத்தனை பேருக்கு எப்படிப் புற்று நோய் வந்தது. ரஷ்யாவிலிருந்து 2700 கிமீ தொலைவிலிருந்த இங்கிலாந்தின் 382 பண்ணைகளிலும் அங்கிருந்த 2,26,500 ஆடுகள் மீதும் கதிர்வீச்சுப் பரவியது. கதிர்வீச்சின் அளவு 8% ஆசியாவிலும், 6% ஆஃப்ரிக்காவிலும், வட அமெரிக்காவில் 0.6% அளவு என பல கண்டங்களிலும் பரவியது.

தற்போது விபத்து நடந்த ஃபுகுஷிமா விலிருந்து, வெளியேறிய கதிரியக்கம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இனி உலகத்திலேயே தூய்மையான உண்வோ நீரோ என்று எதுவும் கிடையாது என்கிறார். அணு உலை மின்சாரம் வேண்டுகிறவரகளுக்கு நச்சுடன் கூடிய உணவைத் தரவேண்டும் என்கிறார் கியோட்டொ பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியரும், அணு உலை நிபுணருமான ஹிரோகி கோய்டே. 



அணு உலை ஆதரவாளர்கள் என தூங்குவது போல் நடிக்கிறவர்களை எழுப்ப முடியாது. அவர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்ளவே முயல்வதில்லை. அது குறித்த அக்கறையும் ஆர்வமுமில்லை. இதனால்தான் 25 வருடங்களுக்கு முன்பே இலங்கையிலிருந்தும் கூடங்குளம் திட்டத்திற்கு எதிர்ப்பு வந்தது ஏனெனில் அது இலங்கையையும் பாதிக்கும். 

நேர்மையிருந்திருந்தால் போபால் விபத்தும் அதைத் தொடர்ந்த 25 வருட நிகழ்வையும் கொஞ்சம் தெரிந்திருந்தாலே போதும் அணு உலைகளை எதிர்ப்பதற்கும், அரசாங்கத்தின் நம்பிக்கைத் துரோகமும் விளங்கியிருக்கும். பிறகெப்படி ஷெர்னோபில், ஃபுகுஷிமா இவையெல்லாம் காட்டிப் பயமுறுத்தினாலும் அவர்கள் மாறப்போவதில்லை. நாளை கூடங்குளத்தில் விபத்து நேர்வதற்குக் காரணமாக இருக்கப்போவது இந்த அணு உலையை திறப்பதுதானே ஒழிய வேறு காரணங்கள் இருக்க முடியாது. ஆனால் இதை மறைத்து ஏதாவது ஸ்விட்சை ஆன் பண்ண மறந்து விட்டார்கள், பூகம்பம், மழை, சுனாமி என இயற்கை செயற்கை காரணங்களைச் சொல்லும் தினமலரும் அதன் விசுவாசிகளும், தற்போது போல வாயு பகவான் வருண பகவான் என்று சொல்ல மாட்டார்கள்.


சிங்கள் இராணுவத்திடமிருந்து தமிழக மீனவர்களைக் காக்க விரும்ப்பாத இந்தியா 5000 கிமீ தொலைவிற்கு அணு ஆயுதத்தை எடுத்துச் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றி கரமாக ஏவியுள்ளது. பத்தாம் நம்பர் சிங்கள ராணுவத்தை எதிர்க்காத தமிழர்களைக் காக்காத இந்தியா இந்த அணு ஆயுதத்தை ஏவி சீனாவிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் என நம்புகிறவர்கள் நம்பட்டும். பாதுகாப்புக்காகவும் அணு எதிரிகளை அழிக்கவும் அணு நல்ல வல்லரசுகள் நல்ல அரசாங்கங்கள் நல்ல நாடுகள் நல்ல உலகம்.

அடுத்ததாக பயங்கரவாதத் தாக்குதல், இராணுவ நிபுணர்களைப் போல சீனப் பூச்சாண்டி காட்டுகிறவர்கள் நியாயமாகப் பார்த்தால் இதை எதிர்த்திருக்க வேண்டும், ஒரு வேளை இலங்கையை வளைக்கத் தொடங்கிவிட்ட சீனர்கள் தமிழகத்தின் தாக்குதல் இலக்காக முதலில் கூடங்குளம் அணு உலையைத்தானே  தேர்ந்தெடுப்பார்கள்.


ஃபிரான்சில் பசுமை அமைதி இயக்கத்தவர் ஒருவர் அணு உலைகளுக்குள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவது மிக எளிது என்பதையும் நடத்திக் காட்டியுள்ளார். ஃபிரான்சிலேயே அப்படியென்றால் நம்நாட்டில் ??! 





ஆனாலும் தமிழ்நாட்டானுங்களுக்கு துணிச்சல் அதிகமப்பா !! எனக்கு அப்படியில்ல. எனக்கு சின்ன வயசிலிருந்தே ஒரு ஆசை ஜப்பானைப் போல நம்ம எப்ப மாறுவம்னு ஏற்கெனவோ ஜாதி என்ற விடயத்தில் மட்டும் நாம் ஜப்பானியருடன் ஒன்றித்திருந்தோம் தற்போது அணு உலையிலும் அவர்களைப் போலவே மூடுவதில் அல்ல திறப்பதில் எத்தனை பட்டாலும் திருந்தப்போவதில்லை.

கூடுதல் வேண்டுகோளாக டெசோ தலைவருக்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறையிருந்தால் அணு உலையின் மீது அவர் பார்வை படட்டும். அதை நிறுத்தட்டும். ஈழத்தை அடுத்த மாசம் வாங்கிக் கொடுத்து விடலாம்


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்