வாழ்த்துதல்களின் கொண்டாட்டங்களின் உண்மை நோக்கம் என்ன ?


வாழ்த்துக் கூறுதல் என்பது ஒரு நல்ல செயலை எதிர்நோக்கியிருக்குமாறு சொல்வது. நல்ல செயல் நடக்கும் என்று நம்பிக்கை சொல்வது. தேர்வில் தேர்ச்சி அடைவாய், தொழிலில் வெற்றி பெறுவாய், வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதை எல்லோரும் உண்மையிலேயே உள்ளத்திலிருந்து சொல்கிறார்களா என்றால் இல்லை. திருமணத்திற்குச் செல்கிறார்கள் அங்கே எத்தனை பேர் மணமக்களை உள்ளப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள். போகிறார்கள், விருந்து எப்படி இருந்தது என்று பேசுகிறார்கள், சைட்டடிக்கிறார்கள், பெண்கள் மற்ற பெண்களின் உடை, நகை ஒப்பனை குறித்து ஒப்பிடுகிறார்கள். மணமக்களின் உடை, நகை, புறத்தோற்றம், ஒப்பனை குறித்து விவாதிக்கிறார்கள். சீதனம் எத்தனை சொத்து இத்தனை இத்யாதிகள் பற்றிப் பேசுகிறார்கள். கலைகிறார்கள். 

ஆண்கள் பழைய நண்பர்களுடன் இணைந்து சரக்கடிப்பதற்காகவே திருமணத்திற்கு வருகிறார்கள். திருமண "வரவேற்பு" காலையில் நடக்கிறதென்றால் முந்தைய இரவே அடித்த போதை தெளியாமல் மல்லாந்து கிடக்கிறார்கள். எல்லாம் முடிந்து கடைசி பந்தியில் உண்டு விட்டுப் போகிறார்கள். திருமணத்திற்கு வந்து வாழ்த்துவதெல்லாம் அவர்கள் நோக்கமில்லை. 

அனைவரும் வந்து வாழ்த்தினால் மணமக்கள் நன்றாக வாழ்வர் என்ற நம்பிக்கையில்தான் இவர்கள் அழைக்கபடுகின்றனர். வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வே திருமணம். இவர்கள் இப்படி இருக்கையில் என்ன நடந்து விடுகிறது என்பது புரியவில்லை. எல்லாமே சம்பிரதாயத்திற்காகவும், பகட்டுக்காகவும் எந்திரத்தனமாக நடந்தேறுகிறது. 

இந்த புத்தாண்டு வாழ்த்துக்களும் அப்படித்தான். எல்லாரும் சொல்கிறார்கள் எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்த்து பரிமாறிக் கொள்கின்ற நாள் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் நல்லதாகத் தோன்றவில்லை. சரக்கடிப்பதற்கு ஏற்ற நாளாகத்தான் இதை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதுவும் சரியாக 12 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, அல்லது அழைத்து வாழ்த்துச் சொல்வது,  நண்பர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது போலத்தான். அதை சொல்பவர்களும் மகிழ்கிறார்கள், வாழ்த்து பெறுகின்றவர்களும் மகிழ்கிறார்கள். வாழ்த்தாமல் இருந்து விட்டால் இருவரும் சங்கடப் படுகிறார்கள். 

இரு இணைபிரியா நண்பர்கள் என்ன நினைவு வைத்தா சொல்கிறார்கள். எல்லோருக்கும் செல்பேசியின் காலண்டர், ஃபேஸ்புக்கிலோ நோட்டிஃபிகேசன் வந்து விடுகிறது. டெம்ப்ளேட் செய்தியையோ வாழ்த்தையோ தட்டி விடுகிறார்கள். பிறகு ட்ரீட் ஆரம்பமாகிறது. இதில் அன்பு எங்கே இருக்கிறது. 

புத்தாண்டில் வாழ்த்துத் தெரிவித்தால் அவ்வருடம் முழுதும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. வாழ்க்கை ஏற்படுத்தும் துயரங்கள் இவ்வருடத்தில் முடியும் என்ற நம்பிக்கையில் அனைவரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால் வாழ்க்கை என்னவோ பழைய மாதிரிதான் பெரும்பான்மையினருக்கும் தொடரப் போகிறது. அந்த சில நிமிட மகிழ்ச்சிக்காகத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா ? 

மற்ற எந்த நாளாக இருந்தாலும் பேருக்கு வீட்டில் கொண்டாடி விட்டு, வெளியில் இரகசியமாய் சரக்கடிப்பார்கள். ஆனால் புத்தாண்டில் மட்டும்தான் சரக்கடித்து விட்டு பொதுவிலேயே ஆட்டம் போடலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது. கோவையில் இந்த புது வருடத்தின் முதல் நாள் மட்டும் நான்கரைக் கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது. வழக்கத்திற்கு ஒரு நாளில் 3 கோடிக்கு மட்டுமே இருந்த விற்பனை ஒன்றரைக் கோடிக்கு அதிகமாகியிருக்கிறது, இது போன்ற போதையில் சமூகத்தை ஆழ்த்துவதற்குத்தான் ஒரு மண்ணுக்காகாத இந்த பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் பிரபலப்படுத்தப் பட்டு பொதுவாக்கப்படுகின்றன.

ஒரு நல்ல செயலைத் தொடங்கவோ அல்லது தம், தண்ணி, கஞ்சா போன்ற கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கும் ரிசொல்யூசன்களை எடுக்க ஒரு சாக்காக இந்த ஆண்டுப் பிறப்பைச் சொல்லிக் கொள்கிறார்கள். அதை விட நினைப்பவர்கள் உண்மையிலே அதுதான் நோக்கமென்றால் அக்கணமே தொடங்க வேண்டியதுதானே. அதற்கென்ன வேண்டிக் கிடக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு. இது ஆங்கிலப் புத்தாண்டே இல்லையாம், லத்தீன் புத்தாண்டு வேறயாம். தமிழ்ப்புத்தாண்டு என்பது எப்படி சமஸ்கிருதத் திணிப்போ அது போல. இப்படி பெயரும் பெயர்க்காரணமுமே எல்லாருக்கும் தவறாகப் பரப்பப் பட்டு கொண்டாடப் படுகிறது. 

யாரோ எப்படியோ கொண்டாடினாலோ மகிழ்ச்சியாக இருப்பதால் நமக்கென்ன வயிற்றெரிச்சல் வந்து விடுகிறது. ஆனால் அப்படியில்லை. இவை நம்மீதும் திணிக்கப்படுகிறது. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இது போன்ற கொண்டாட்டங்களிலெல்லாம் நம்மையும் ஈடுபடுத்துகிறார்கள் அல்லது நாமே பங்கெடுக்க வேண்டியதாகிறது. பொங்கள் தவிர தீபாவளி, பிறந்த நாள், ஜனவரி 1 போன்றவறையெல்லாம் கொண்டாடுவது எனக்கு அறவே பிடிக்காது ஆனால் நண்பர்களும், உறவினர்களும் கையை குலுக்கியோ, கைபேசியால் அழைத்து நம் வாயிலிருந்து வாழ்த்தைப் புடுங்கி விடுகிறார்கள். பிடிக்காது, நம்பிக்கையில்லை, விருப்பமில்லை என்று என்ன சொன்னாலும் விடுவதில்லை. இவர்கள் விளக்கம் சொன்னால் மனத்தை வேறு புண்படுவதாகக் கூறுவார்கள். நாளும் புதிதாக நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். ஒவ்வொருவரிடம் சலிக்காமல் நாம் கொள்கை விளக்கம் அளித்துக் கொண்டா இருக்க முடியும் ?

மனிதர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்வூட்டிக் கொள்ளவும் உற்சாகமாக செயல்படவும் கொண்டாட்டங்கள் கேளிக்கைகள் இன்றியமையாத தேவைகள். ஆனால் சமூகத்திற்கும், தனிமனித சீரழிவுக்கும் வழிகொள்ளும் இவ்வகை திடீர் மிகை உணர்ச்சிக் கொண்டாட்டங்கள், காலத்திற்கொவ்வாத மதப் பண்டிகைகள், நுகர்வுப் பண்பாட்டைப் ஊக்குவிக்கும் போலிக் கொண்டாட்டங்கள் என்ன பயனைத் தரும் என்று பார்த்தால் ?? இவைகளைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. 

Download As PDF
Bookmark and Share

Post Comment

தொகுப்புகள்

எழுதுவதன் தொடர்ச்சி விட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏதாவது எழுத வேண்டியிருக்கிறது. எழுதவதில் கிடைக்கும் உணர்வும் ஒரு இன்றியமையாத காரணம். பணிச்சுமையும், வாசிப்பே இல்லாத நிலையும், அயர்ச்சியும் இணைந்து வலைப்பூவின் பக்கமே வரவிடுவதில்லை. முடிந்தவரையில் இணைய வாசிப்பு மட்டுமே தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்தப் பதிவில் பிற இடங்களில் வாசித்தவை மட்டும். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு தட்டத்தின் மராயத்து என்றொரு மலையாளப்படம் பார்த்தேன். தமிழ்த்திரைப்படம் போல் இருந்து விடுமோ என்று தொடக்கத்தில் திரைக்காட்சிகள் அச்சத்தைத் தந்தாலும் போகப் போக மலையாளத் திரைப்படத்தின் இயல்பு வந்து விடுகிறது. சின்னச் சின்னத் திருப்பங்கள், மெலிதான நகைச்சுவை, நெகிழ்ச்சிகள், சுவாரஸ்யம், வசனம் என்று எல்லாவகையிலும் நன்றாக இருந்தது.  மலையாளத் திரையுலகைப் பொறுத்தவரையில் மிகச்சிறப்பான அல்லது புதுமையான திரைப்படம் இல்லையெனினும் காணக்கூடியதே. இதுவரை எந்த மலையாளப்படமும் என்னை ஏமாற்றாமல் மனநிறைவைத் தந்துள்ளன. இதுவும் கூட.

பாலியல் வன்முறை பிற குற்றங்களும் தண்டனைகளும் :

தருண் தேஜ்பால் அல்லது நரேந்திர மோடி உளவு பார்த்தது மாதிரியான விவகாரங்களில் பாலியல் வன்முறையை எதிர்ப்பது என்பதைக் காட்டிலும் தத்தமது எதிரிகள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் மட்டுமே பெண்களுக்கு ஆதரவாகப் பேசுவதும் தான் போற்றும் தலைவரோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களோ ஈடுபட்டால் கள்ள மௌனம் காப்பதுதான் தெரிகிறது. பாலியல் ரீதியான வன்முறைகள், அணுகுமுறைகள் தவறு என்பதைக் காட்டிலும் யார் செய்கிறார்கள் என்பதில்தான் எதிர்ப்பும் ஆதரவும் வெளிவருகிறது. மாட்டியது தெஹல்கா ஆசிரியர் என்றதும்தான் பல பேர் பெண்ணியவாதிகள் என்பதே தெரியவருகிறது. 

பெண்களைக் கிண்டல் செய்ததற்காக. என்னுடைய அலுவலகத்தில் மூன்று பேர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்  மூன்றில் ஒருவர் Team Lead. அவர் தனது கீழே இருப்பவர்களைக் கண்டிக்காத குற்றத்துக்காகவும் அவர்களை காப்பாற்றும் நோக்கில் பேசியதாலும் அவரும் நீக்கப்பட்டார். அவர் அச்செயலில் ஈடுபடாத போதும் அவரை நீக்குவதற்கான கெடுவாய்ப்புகள் ஏற்கெனவே அவரது முந்தைய நடவடிக்கைகளிலிருந்து  இருந்தன. 

அலுவலகம் முழுவதும் இதைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் செய்தது தவறு என்ற ரீதியில் சிலர் மட்டுமே பேசினார்கள் மற்றவர்கள் யாருக்கும் தெரியாமல் செய்திருக்கலாம் என்ற ரீதியில்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆக இவர்களுக்கெல்லாம் இது தவறு என்று புரியப்போவதுமில்லை. அதனால் தண்டனைகள் இது போன்ற செயல்களுக்காவது உடனடியாக நிறைவேற்றப்படுவது குறைந்தபட்சம் அச்சத்தையாவது வரவழைக்கும். Eve Teasing  என்பது ஆண்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட இயல்பான செயலாகவே பேசப்படுகிறது. அது தவறே இல்லை என்பது போல்தான் எல்லாரும் நடந்து கொள்கிறார்கள். ஒருவர் அதனை செய்யாதவராயினும் கூட இருப்பவர்களால் அவரும் சேர்ந்து பாதிக்கப்படுவது நடக்கிறது.  பாலியன் வன்முறையும் கிட்டத்தட்ட அதே போலத்தான். தருண் தெஜ்பால், ஏ. கே கங்குலி என பெரிய கண்ணியவான்கள், கனவான்கள் எல்லோரும் கை நனைத்தவர்களாகவே இருப்பதைப் பார்த்தால் ஒரு ஆண் கூட நம்பத்தக்கவன் அல்ல என்றே தோன்றும்.

கோவையில் தன் மனைவி இறந்து விட்டதாகக் காட்ட தன்னிடம் வந்த ஒரு பெண்ணைக் கொலை செய்த வழக்கறிஞர் ஒருவரை கோவளத்தில் வைத்துப் பிடித்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்குத் தெரிந்த ஒருவன் பேசியதாகக் கூறினார். சில பத்தாயிரங்கள் தந்தால் கொலை செய்வதற்குத் தயாராக இருப்பதாக ஒருவன் சர்வ சாதரணமாகப் பேசினான், பணத்தைக் கொடு நான் போட்டுத் தள்ளிட்டு கொஞ்ச நாள் தலை மறைவாக இருந்து விட்டு பின்பு சரணடந்து விடுகிறேன். நீ ஜாமீனில் எடுத்து விடு என்றானாம். சட்டத்தின் மீது குடிமகனுக்கு எவ்வளவு அச்சமும் மதிப்பும் என்று அதிர்ச்சியாக இருந்தது. இப்படி பணத்துக்காக ஒவ்வொருவனும் கொலை செய்ய ஆயத்தமானால் என்னவாகும் இந்த  நாடு என்று தோன்றியது. :((((

தமிழகத்தின் மீதான ஓர வஞ்சனை:

ஒரிரு மாதங்களுக்கு முன்பு குங்குமத்தில் ஒரு கட்டுரையை வாசித்தேன். ஒரு செயற்கைக்கோள் ஆய்வு நிலையம் அமைக்கும்படியான இடம் தமிழகத்தில் இருப்பதாகவும், அதன் மூலம் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புக்கள் உருவாக்கும்படியுமான திட்டம் எனினும் அது இந்திய வானியல் ஆராய்ச்சி மையத்தின் மலையாளிகள் ஆதிக்கத்தின் காரணமாக தமிழ்நாட்டுக்கு வருவது தடுக்கப்பட்டது என்பதாகவும் படித்தேன். 


கெயில் என்ற நிறுவனத்தின் பங்குகள் 57% நடுவண் அரசினுடையவை என்று இத்தகவல் கூறுகிறது. இதன் மூலம் இந்திய அரசு எத்தகையது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். 

https://www.facebook.com/photo.php?fbid=667286226636854&set=a.320897871275693.79991.236784116353736&type=1&relevant_count=1



அடுத்தது தமிழ் நாட்டிற்கான வளர்ச்சித் திட்டத்தைப் பாருங்கள். 



https://www.facebook.com/photo.php?fbid=314274975379746&set=a.278920168915227.1073741825.278864095587501&type=1

https://www.facebook.com/deltamethane
Download As PDF
Bookmark and Share

Post Comment

இவர்கள் இப்படித்தான் - எப்போது திருந்துவார்கள் ?

எங்கள் ஊரில் இப்போதுதான் சாக்கடையைக் கட்டியிருக்கிறார்கள். இன்னும் ஈரம் கூடக்காயவில்லை. தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வரிசையாகக் கடைகள் இருக்கின்றன. எந்தவொரு கடையிலிருந்தும் முதலடி வெளியே வைத்தால் சாக்கடைக் கால்வாய்தான். இதையே சௌகரியமாக எடுத்துக் கொண்டு கடையிலிருக்கும் குப்பையையெல்லாம் கூட்டி சாக்கடையிலேயே கொட்டுகிறார்கள் அல்லது கடையிலிருந்து கூட்டி வெளியே தள்ளி விட்டால் அது நேராக சாக்கடைக் கால்வாயிலேயே விழுகிறது. கடைகள் என்றாலே எத்தனைகுப்பைகள் சேரும் என்று சொல்லவேண்டியதில்லை. இப்படி இருந்தால் எப்படி சாக்கடை நீர் போகும் என்று தெரியவில்லை. வீடுகளிலிருந்து குப்பையைக் கட்டி வெளியே வீசுகிற சிலரும் சாக்கடைக் கால்வாயிலேயே வீசுகிறார்கள். இன்னும் சில தெய்வங்களுக்கு தண்ணீர் தேங்கி நின்றாலே அல்லது சாக்கடையைப் பார்த்தாலே பத்து நாள் சேமித்த எச்சிலைக் காறித் துப்பாமல் இருக்க முடியாது. அதைத் தூய்மை செய்பவன் ஒரு மனிதன் என்று நினைத்தால்தானே. அங்கே வீசக் கூடாது என்று தெரியாதா இல்லை குப்பையை நடந்து போய் கொட்டுவது கௌரவக் குறைச்சல், நிக்கற இடத்திலிருந்தே விட்டெறிவதுதான் ஸ்டைல். குப்பையை கைகளால்தான் மனிதர்கள் அள்ளிச் செல்கின்றனர். அதில் எச்சில் துப்பக் கூடாது என்பதற்கெல்லாம் பெரிய மகாத்மா மாதிரி சிந்திக்கிறவர் மட்டுமே செய்ய வேண்டுமா ? அதான் நமக்கெல்லாம் தெரியாதே. அதே போல் பொதுக்கழிவறைக்குச் சென்றால் தண்ணீர் ஊற்றாமல் வருவது, ஃபளஷ் செய்யாமல் வருவது, சிறுநீர் கழிக்குமிடத்து பபிள் கம்மை துப்பி வைப்பது,(ஆமா எதுக்கு ஒண்ணுக்குப் போகும்போது அடுத்தவனுடையதை எட்டிப் பாக்கறது - தேசியப்பழக்கம்), பின்பு கழிவு நீர் தேங்கி நாறினால் அரசாங்கத்தைத் திட்டுவது, துபாயைப்பார் அமெரிக்காவைப் பார் என்று கத்த வேண்டியது.  இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி மாற்றுவது.
Download As PDF
Bookmark and Share

Post Comment

வாசிப்பு - கமலின் கலப்படங்கள்


எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன். கமலின் ரசிகர்களைப் போலவே அவர் குறித்த உண்மைகள் தெரியாத வரையில் அவர் எனக்கொரு அதிசயமாகவே இருந்தார். சகலகலா வல்லவர் என்ற பிம்பம் அவரைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தாலும் அது எந்தளவுக்கு உண்மை என்பது அவர் பல படங்களின் கதைகளையும், காட்சிகளையும் திருடி அல்லது தழுவி எடுத்திருப்பதைக் கொண்டு முடிவு செய்து கொள்ளலாம்.  அதை செய்ததற்காக அவர் வெட்கமோ வருத்தமோ அடையவில்லை. ஒரு முறை பேட்டியில் கூறினார் எனது சிப்பிக்குள் முத்து திரைப்படத்திலிருந்துதான் ஃபாரஸ்ட் கம்ப் என்ற படத்தை எடுத்தார்கள் (உண்மையா ?). நாம் அவர்களிடமிருந்து காப்பியடிக்கிறோம், அவர்கள் நம்மிடமிருந்து அடிக்கிறார்கள் என்று சொன்னார்.

அவர் மீதான போலிக் கற்பிதங்கள் உடைந்தும் பிரமிப்புகள் அகன்ற பின்னும், அவரது கவிதைகள், வசனங்களில் வரும் சிறிய நகைச்சுவைத் துணுக்குகள் என்று பல விடயங்களில் இன்னும் கமல்ஹாசனை எனக்குப் பிடிக்கத்தான் செய்கிறது. மகனை மட்டும் திரைப்படத்தில் களமிறக்கி விடுவது, மகள் என்றால் மணமுடித்துக் கொடுப்பது என்றிருக்கும் நிலையில் தனது மகளையும் திரைத்துறைக்கு அனுமதிக்கும் துணிச்சலும் நேர்மையும் உள்ள சில நடிகர்களில் கமலும் ஒருவர். நடிகன் என்பதைத் தாண்டி, பாடல், கதை, வசனம், இயக்கம் என்று மற்ற இடங்களிலும் தனது முத்திரையைப்பதித்தவர். யாரென்றாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அதுவும் கலைஞன், படைப்பாளி என்றால் விமர்சனம் நேர்மையென்றால் ஏற்றுக் கொண்டு மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும் அதுதான் அழகு. என்ன நமக்குப் பிடித்தவர் என்பதால் விமர்சனம், உண்மை எல்லாம் கசக்கத்தான் செய்யும்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். "எனது பெயரைச் சொல்லும்போது பத்மஸ்ரீ கமல் என்று சொல்லாதீர்கள், பத்மஸ்ரீ  விருது வாங்கியவர்கள் அதை பெயருடன் இணைத்துப் பயன்படுத்தக்கூடாது என்று விருது வாங்கியவர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்". இதே கமல்தான் தனது பெயருக்கும் முன்பு உலகநாயகன் என்றும் மனசாட்சியில்லாமல் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்தப் பெயருக்கு நிச்சயம் தகுதியில்லாதவரே.

உலகத் திரைப்படங்களிலின் கதைகளை எடுத்து தனது பெயரில் போட்டுக் கொள்வது, அதை மற்றவர்கள் புகழ்வதை ஏற்றுக் கொள்வது என்ன வகையான மனநிலை என்பது தெரியவில்லை. குறைந்த பட்சம் நன்றி கூட எழுத்துப்பூர்வமாகப் போடாமல் தனது பெயரில் போட்டுக் கொள்வதெல்லாம்.... !!

கமல்ஹாசனை யாருக்கெல்லாம் பிடிக்கிறது, யாருக்கெல்லாம் பிடிக்காது. பிடித்தவர்களை விட பிடிக்காதவர்கள்தான் அதிகமிருப்பார்கள். கடவுள் இல்லையென்று சொல்வதால் பிடிக்காது, உதட்டு முத்தம் கொடுப்பதால் பிடிக்காது. இந்து மதத்தை கிண்டல் செய்வதால் பிடிக்காது. இஸ்லாமியர் மீதான காழ்ப்புச் சித்தரிப்புகளால் அவர்களுக்குப் பிடிக்காது. திருமணமின்றி இணைந்து வாழ்வதால் பிடிக்காது. இதில் சில பிடிக்காதுகள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர் மீதான தனிநபர் வெறுப்பிலிருந்து வருவதால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவேண்டியதில்லை. அதெல்லாம் மனநோயாளிகள் பிதற்றல் என்று கடந்து விடலாம்.

ஆனால் அவர் மீது அறிவாளர் (Intellectual) முத்திரை குத்தப்படுவதால், பிம்பம் கட்டமைக்கப்படுவதால் அவர் மீதான கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். தரமான படங்கள், உலகத்தரத்தில் திரைப்படம் என்றெல்லாம் அவரே முன்னிலைப்படுத்திக் கொண்ட கருத்து என்பதால் இன்னும் அவசியமாகிறது. 

கமலின் கலைலப்படங்கள்
 
கமல் மீதான நேர்மையான, அதே நேரம் மிகவும் கடுமையான, எள்ளலும் நிறைந்த விமர்சனத்துடன் ஒரு நூலைப் படிக்க நேர்ந்தது. கமலின் கலப்படங்கள் என்ற இந்த நூலை இப்போதுதான் படித்தேன், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 


தமிழில் தரமான படங்கள் வரவேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதை எழுதியவர் B.R. மகாதேவன். இவர் இந்த நூலுக்கு முன்பே மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவையும் திரைப்படக் கலைஞர்கள், படைப்புகளின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களே என்று தெரிய வருகிறது. ஒரு திரைப்படத்தைத் விமர்சனம் செய்ததோடு அல்லாமல் அந்தத் திரைப்படம் இப்படி இருந்திருக்கலாம் என்று அதற்கு மாற்றான கதையையும் இவர் எழுதியிருக்கிறார்.

கமல் நடிப்பு மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என்று பங்களிப்பு செய்த திரைப்படங்களான, ஹேராம், விருமாண்டி, தேவர் மகன், அன்பே சிவம், குணா, குருதிப் புனல் ஆகிய ஆறு படங்களின் விமர்சனத்தையும், அப்படங்களுக்கு தான் திரைக்கதையாசிரியராக இருந்திருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்றும் ஒரு கதையையும் சில காட்சிகளையும் சற்றே மாற்றியும் எழுதியிருப்பது சிறப்பாக இருக்கிறது. அட  இப்படியும் கூட எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. என்ற ஏக்கமும் தோன்றுகிறது.

உதாரணத்திற்கு

விருமாண்டி படத்தில் நெப்போலியன் எதிரியிடம் தனியாகப்போய் மாட்டிக் கொண்டும், கையில் துப்பாக்கியிருந்து அரிவாளுடன் இருப்பவனை சுடுவார், அடுத்த தோட்டாவை லோட் செய்வதற்குள் பசுபதி வெட்டிக் கொன்று விடுவார். கையில் இருக்கும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு  அரிவாள் வைத்திருப்பவனிடம் மாட்டிக் கொள்வதா ? துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கலாமே ... என்று ஒரு காட்சியில் இருக்கும் அபத்தத்தை விமர்சிப்பது முதல்

ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவனே காவல்துறையின் கைதியாக  இருக்கும்போதும், இரண்டாம் நிலையில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு அஞ்சாமல், தீவிரவாத இயக்கத்தை அழிக்கவே முடியாதா என்று குருதிப் புனலின் கதையின் அடிப்படையையே கெள்வி கேட்கும் வரையில் ..

கமல்ஹாசனின் திரைப்படங்கள் பல மொழிப் படங்களின் திருட்டு என்பதோடல்லாமல், பல இடங்களில் தமிழ்த் திரைப்படங்களின், தமிழ் நாயகர்களின் அபத்தமான வழமைகளிலிருந்து வேறுபட்டதில்லை என்று சொல்கிறது. நேற்று வந்தவர்களெல்லாம் தரமான படங்கள் கொடுக்க முடிந்தபோதும், திரைப்படத் துறையில் அரை நூற்றாண்டாக இருக்கும் கமலால் ஏன் முடியவில்லை என்றும் எண்ணத் தோன்றுகிறது.

எல்லாவகையிலும் சிறப்பாக எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படத்தை அல்லது கதையை எப்படிப் பார்க்க வேண்டும், விமர்சிக்க வேண்டும், அல்லது இயக்க வேண்டும் என்ற ஒரு கோணத்தை ஏற்படுத்துகிறது இந்நூல். திரைப்பட விரும்பிகள், விமர்சகர்கள் படிக்க வேண்டிய நூல். முக்கியமாக திரைப்படம் விமர்சனம் எழுதுகிறவர்கள், கமல் ரசிகர்கள் படிக்க வேண்டிய நூல்.

நூலின் பெயர்:
கமலின் கலைலப்படங்கள்
160 பக்கங்கள்
விலை ரூ 120

ஆசிரியர்
B.R. மகாதேவன்.

நிழல் வெளியீடு
ப.திருநாவுக்கரசு,
31/48, ராணி அண்ணாநகர்,
சென்னை - 600 0078
கைப்பேசி 94444-84868
மின்னஞ்சல் : arasunizhal@gmail.com

Download As PDF
Bookmark and Share

Post Comment