திமுக படுதோல்வி நிச்சயம் ஜனநாயகத்தின் அல்லது மக்களின் வெற்றியில்லை.


தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பாரா வண்ணம் அதிமுக விற்கு மிகப்பெரும் வெற்றியை ஈட்டித்தந்திருக்கிறது. திமுக விற்கு வரலாறு காணாத தோல்வியைத் தந்ததோடு மட்டுமல்லாமல் தேமுதிக என்ற திரைப்பட நடிகரின் கட்சியை விட குறைவான வெற்றியைத் தந்து எதிர்கட்சிக்கான தகுதி கூட இல்லாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மிகப்பெரும் மக்கள் ஆதரவுடன் இளைஞர்களால் ஆதரிக்கப்பட்டு வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் கேவலம் இரு நடிகர்களின் கட்சிகளின் முன் படுதோல்வியடைந்துள்ளது. பெரியாரின் வழிவந்தவர்கள் என்றெல்லாம் சொல்வதற்கான தகுதியெல்லாம் இதற்கு முன்பும் சரி இதற்கு மேலும் சரி கிடையவே கிடையாது இவர்களுக்கு.

இதற்குக்காரணமென்ன ? அனைத்துத் தரப்பு மக்களின் வெறுப்புக்காளானதும் அதற்காக பெரிதும் அலட்டிக் கொள்ளாததும்தான். (அவர்களுக்கென்னப்பா !!? சுருட்டியதை வைத்து ஒரு தலைமுறைக்கே ஓட்டலாம்.) கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரை திமுக ஒப்பீட்டளவில் மக்கள் செல்வாக்குடன்தான் இருந்தது. அதிலும் இரு வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் கூட திருமங்கலம் தேர்தலில் கூட மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதில் தேமுதிகவினால் டெபாசிட் கூட பெறவில்லை. கடந்த தேர்தலில் நடுவணரசில் வேண்டிய துறைகளைப் பெறுவதற்கு பேராயக் கட்சியை அச்சுறுத்துமளவிற்கு இருந்தது திமுக. தொடர்ந்து வழங்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகள் உட்பட பலதிட்டங்கள் மூலமாக நன்றாகவே ஆட்சி நடத்துவதைப்போன்றே ஒரு பிம்பத்தை உண்டாக்கி வைத்திருந்தது. ஆனால் இதே காலகட்டத்தில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைத் தடுக்காமல் பித்தலாட்டம் ஆடி துரோகம் செய்ததைக் கொண்டு தமிழுணர்வாளர்கள், ஈழத்தமிழரிடையே இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பையும் அழித்துக் கொண்டார் கருணாநிதி. (குறிப்பாக ஒரு செய்தி ஈழப்போரின் உச்சநிலையில் இருந்த போதுதான்,  கலைஞர் தொலைக்காட்சியின் சகோதர அலைவரிசையான சிரிப்பொலி தொடங்கப்பட்டது. அப்போது வலையுலகம், சிற்றிதழ்கள், மக்கள் ஊடகங்களில் மட்டுமே ஈழத்துச் செய்திகளின் சோகம் உணரப்பட்டது.) ஈழ ஆதரவாளர்கள் திமுக பேராயக்கட்சி கூட்டணிக்காக மிகப்பெருமளவில் பரப்புரைகள் நிகழ்த்தியபோதும் பெரிய மாற்றமொன்றும் நிகழவில்லை. பாராளுமன்றத்திற்கான தேர்தலிலும், திருமங்கலம் தேர்தலிலும் நடுவணரசுக்கு எதிரான மனநிலை நிலவிய போதிலும் அக்கூட்டணிதான் வெற்றி பெற்றது. சில மாதங்களுக்கு முன் என் நண்பன் சொன்னது நினைவிலிருக்கிறது. அவன் ஒரு திமுக காரன். "இனிமேல் அதிமுக அவ்வளவுதான், பேசாமல் ஜெயலலிதா தோல்வியை ஒப்புக்கொண்டு, கருணாந்தியிடமிருந்து ஒரு 1000 கோடியை வாங்கிக் கொண்டு அரசியலில் இருந்து விலகிக் கொள்வது உத்தமம்" என்றான். இந்நிலையில் அதிமுக வின் வெற்றியானது எதிர்பாராத அதிசயம்தான். 

மேலும் (2) குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அரசியல் பதவிகளிலும், இன்ன்பிற தொழில்களிலும் (திரைப்பட தயாரிப்பு, இயக்கம், இவரே கதை வசனம் எழுதுவது உட்பட ) போன்ற நடவடிக்கைகளினால் அனைவரின் வெறுப்புக்கும் ஆளாகியிருந்தது. மேலும் திரைப்படவுலகில் குடும்பத்தினரின் ஆதிக்கம் காரணமாக அனைவரும் மௌனமாகப் புழுங்கிக் கொண்டிருந்தனர். தொடர்மின்வெட்டுக்கள்,  விலைவாசி என இரு முக்கியக் காரணிகள் மட்டுமே மக்களை நேரடியாகப் பாதித்தன. இலவசத் திட்டங்களும் பெரும்பான்மையானவர்களைக் கவர முடியவில்லை. இதற்கு திமுக அரசு முழுப்பொறுப்பாக முடியாது எனினும் அதற்கான வெறுப்பையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அலைக்கற்றை ஊழல் மூலம் இந்திய அளவில் எதிர்ப்பைச் சம்பாதித்தது. ஈழப் பிரச்சனையில் இந்திய அரசுக்குக் காவடி தூக்கியதன் மூலம் தமிழின உணர்வாளர்கள், அறிவு ஜீவிகள் என பல முனைகளிலும் ஆதரவை இழந்து போனது. 

இதில் யாரும் ஜெயலலிதா வெற்றி பெற்றதைக் கொண்டாடவில்லை. அனைவரும் கருணாநிதி ஒழிந்தார் என்கிற ரீதியில்தான் மகிழ்ச்சியை வெளிக்காட்டுகின்றனர். ஏனெனில் தமிழகத்தில் இதுகள் இரண்டைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை. இது தமிழக மக்களின் வெற்றியென்று சொல்ல முடியாது. ஏனெனில் வீழ்ந்தது மட்டுமல்ல வென்றதும் தமிழ்மக்களின் எதிரிகள்தான். அதாவது சுருக்கமாகச் சொன்னால் நரி வீழ்ந்தது ஓநாய் வென்றது எனலாம். இரண்டுமே அசைவ உண்ணிகள்தான், அதாவது ஊழல் பேர்வழிகள்தான். மேலும் இது வரலாறு காணாத வெற்றி என்று அதிமுக விற்கு மட்டுமே பெருமைதான், மக்கள் ஏதோவொரு வெறுப்பில்தான் திமுகவைத் தூக்கி குப்பையில் வீசி விட்டனர். ஆனாலும் வந்திருக்கும் ஆட்சி இன்னும் மோசமாகத்தானிருக்கும் என்றும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதற்கு திமுக வை விட தமிழகம்தான் அதிகமாக லோல்படப்போகிறது என்பதும் உண்மை. ஒரு தமிழின துரோகியால் பாதிக்கப்பட்ட தமிழகம் பார்ப்பன பாசிசத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

என்னவோ இது ஜனநாயகத்தின் வெற்றி, மக்களுக்குக் கிடைத்த வெற்றி, குடும்ப ஆதிக்கத்திற்கு மக்களின் எதிர்ப்பு, ஈழத்துரோகத்திற்கு பதிலடி, அதிமுக, தேமுதிக கூட்டணியின் தேர்தல் வியூகம், திமுகவின் அலட்சியம், ஊடகங்களின் ஆதரவு என தத்தமது அரசியலுக்கேற்ப தலைவர்கள் இதற்கு சாயம் பூசியிருந்தாலும் பொதுமக்களின் வாழ்க்கையில் எதிர்கொண்ட சராசரிப் பிரச்சனைகளே திமுக எதிர் மனநிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது சரியாக 15 வருடங்களுக்கு முந்தைய அதிமுகவின் தோல்விக்கு இணையானது. அந்த ஆட்சி தற்போது முடிந்த திமுக ஆட்சியை விடக் கேவலமாக இருந்தது. அதிமுக வின் தலைவர்கள் தொகுதி மக்களாலேயே துரத்தப்படுமளவிற்கு, பச்சக் குழந்தைகள் கூட ஜெயாவை வசைபாடுமளவிற்கு அட்டூழியம் செய்தவர்கள்தான் தற்போது வெற்றி பெற்றவர்கள்.

இத்தனைக்குப் பிறகும் சிறு நிம்மதி என்னவெனில்

திமுகவின் கூட்டணியிலிருந்த தாழ்த்தப்பட்ட, உயர்த்தப்பட்ட சாதிகளின் பெயரில் இருந்த கட்சிகள் படுதோல்வியடைந்திருப்பதுதான். சிலர் என்னவோ ஜெயலலிதா புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்தது போல் அவரைப் புகழ்கிறார்கள். திமுகவின் மீதான வெறுப்பைக் காட்டுவதற்கு தமிழகத்திற்கு வேறு நாதியில்லை, அதாவது மாற்று அரசியலுக்கான களமே மிகச் சிறியதாக மக்கள் செல்வாக்கின்றி இருக்கும் நிலையில்தான் அதிமுக அதை அறுவடை செய்து கொண்டது. இது மம்தா பானர்ஜியைப் போல போராடிப்பெற்ற வெற்றியெல்லாம் கிடையாது. குளிரூட்டி அறையிலிருந்து கொண்டே அறிக்கையை தொலைக்காட்சியில் வெளியிடுவது, கொடநாட்டில் ஓய்வெடுப்பது, பெருநகரங்களைக் குலுங்கவைக்கும் கூட்டத்தைக் கூட்டி மாநாட்டில் யாரோ எழுதியதைப் பார்த்து வாசிப்பது, கூட்டணித் தலைவர்களை அலைமோத வைப்பது என நோகாமால் நோம்பி கொண்டாடி விட்டார் புரட்சித்தலைவி. சன் குழுமத்தின் தயாரிப்பு என்பதற்காக வேட்டைக்காரன் படம்தான் நான் நடித்த படங்களிலேயே பெரிய வெற்றிப்படம் என்று டக்கால்டி பேசிய விஜய் கூட, அவர்களுடன் மோதல் ஏற்பட்ட பின் திமுகவை எதிர்த்தார். இவரெல்லாம் அதிமுக வை ஆதரித்தார்.

கருணாநிதியை வீட்டுக்கனுப்பி, அம்மாவை அரியணையில் ஏற்றியதில் ஏன் நாம் நிம்மதியடையக் கூடாதெனில்,

1. ஈழத்தின் இன்னல் தீரப்போவதில்லை

2. மீனவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதமில்லை.

3. பெட்ரோல், டீசல் விலை ஏறாமல் இருக்கப்போவதில்லை.

4. விலைவாசி குறையப்போவதில்லை.

5. ஊழலற்ற ஆட்சி நடக்கப் போவதில்லை

6. திமுகவிரின் தொழில்கள் சிறு பாதிப்புகளுடன் தொடர்ந்து நடைபெறும், கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து என எதுவும் நடைபெறும்.

7. தண்ணீரைக் காசு கொடுத்துக் குடிப்பதும், ஒண்ணுக்குப் போக இரண்டு ரூபாய் கொடுப்பதும் மாறப்போவதில்லை.

8. குப்பைத் திரைப்படங்கள் வெளியிடப்படாமல் இருக்கப்போவதுமில்லை.

9. நகரமயமாக்கம் என்ற பெயரில் ஒரு சில பகுதிகள் மட்டும் வீங்க வைத்து அதையே வளர்ச்சி என்று சொல்லாமல் இருக்கப்போவதில்லை.

10. முக்கியமாக அரசு மதுபானக் கடைகளை மூடப்போவதில்லை.

11. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வருவதும், கல்வி தனியார்மயமாகி கல்வி வள்ளல்கள் கொள்ளையடிப்பதும், அரசுக்கல்லூரிகளின் நிலங்களை முதலாளித் தெய்வங்களுக்கு கூட்டிக் கொடுப்பதும், அரசுக்கல்லூரிகளின் மீதான கண்டுகொள்ளாமையும், தரமில்லாத கல்வியும், வேறுவேறான பாடத்திட்டங்களின் மூலமாக அனைவருக்கும் சம்மான கல்வி கிடைக்காமையும் மாறப்போவதில்லை.

12. அனைத்துப் பள்ளிகளுக்கும் ஆசிரியர் போதாமை, கல்லூரிகளுக்கு விரிவுரையாளர், பேராசிரியர் போதாமை, அரசு கல்வி நிலையங்களின் தரம், வசதி, நிதியுதவிகள் தராதது என எதுவும் மாறப்போவதில்லை.

13. விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கு விலையை நிர்ணயம் செய்யும் உரிமையைப் பெறப்போவதில்லை. தொழிலாளர்களும் தமது உரிமையைப் பெறபோவதில்லை.

14. கர்நாடகத்தில் பேய்மழை பெய்யாத வரை, காவிரி நீரும் விவசாயிகளுக்குக் கிடைக்கப்போவதில்லை, முல்லைப் பெரியாரும்தான்.

15. கல்வி எனும் பிறப்புரிமை அனைவருக்கும் கிடைக்கப்போவதில்லை, கற்ற அனைவருக்கும் வேலை கிடைக்கப்போவதில்லை.

16. வெளிநாட்டு நிறுவனங்களின் விதையை விதைத்து, அவர்களின் உரங்களைப் பயன்படுத்தி, அவர்கள் பொட்டலங்களில் விற்கும் நொறுக்குத் தீனிகளைத் தின்று, நம் மண்ணின் நீரை உறிஞ்சி பொட்டலங்களிலும், புட்டிகளிலும் அடைத்தும், சாராயமாகவும், மென்பானங்களாகவும் மாற்றியும் நம்மிடமே விற்றும் சுதந்திரத்தினை ஒரு வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்களிடம் அளிக்கும் கொள்கையை இந்த ஆட்சி மாற்றம் மாற்றி விடுமா ? 

தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட போதே பிளாக்கர்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது கூட ஒரு அபாய எச்சரிக்கைதானோ ? இன்றோ பெட்ரோல் விலையும் உயர்ந்து விட்டது.

இன்னும் எத்தனை காரணங்களைத்தான் அடுக்குவது ? அல்லது இல்லாதோர்க்கு ஒரு வேளை சோறாவது உத்தரவாதம்தான் தர முடியுமா இந்த ஆட்சி மாற்றம். பிறகெதற்கு நாம் இதற்கு மகிழ்வதும், வருந்துவதும் ?

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

6 கருத்துகள்:

  1. அருமை நண்பரே,பார்க்கலாம் இந்த அரசு இந்த பிரச்ச்னைகளில் என்ன செய்கிறது என்றுநன்றி

    பதிலளிநீக்கு
  2. நம்பிக்கையே வாழ்க்கை. சென்ற அ தி மு க ஆட்சி மீதி பெரிய குறை எதுவும் இல்லை. இப்போது அதைவிட சிறந்த ஆட்சி அமைய வாழ்த்துவோம்! (நம்புவோம்)

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீதர்14/5/11 8:33 AM

    தாங்கள் கூறி உள்ள பதினாறு பேற்றையும் செய்யாத திமுக அரசு திரும்ப வர வேண்டும் என்ற உங்கள் எண்ணம் மெய்பித்திருந்தால்?

    அதனால் இது ஜனநாயகத்தின் மற்றும் மக்களின் வெற்றி தான்.

    பதிலளிநீக்கு
  4. சார்வாகன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    பந்து வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ஸ்ரீதர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி! திமுக அரசு திரும்ப வர வேண்டும் என்பது என் விருப்பமல்ல , ஆட்சி மாற்றம் வெறும் கண்துடைப்புதான் அதனால் பிரச்சனைகள் பெரிய அளவில் எதுவும் மாறாது என்பதை மட்டும்தான் சொன்னேன்

    பதிலளிநீக்கு
  5. "வீழ்ந்தது மட்டுமல்ல வென்றதும் தமிழ்மக்களின் எதிரிகள்தான். "
    "மக்கள் ஏதோவொரு வெறுப்பில்தான் திமுகவைத் தூக்கி குப்பையில் வீசி விட்டனர். ஆனாலும் வந்திருக்கும் ஆட்சி இன்னும் மோசமாகத்தானிருக்கும் என்றும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதற்கு திமுக வை விட தமிழகம்தான் அதிகமாக லோல்படப்போகிறது என்பதும் உண்மை. "

    - அருமையான அலசல்!

    பதிலளிநீக்கு
  6. \\ஒரு தமிழின துரோகியால் பாதிக்கப்பட்ட தமிழகம் பார்ப்பன பாசிசத்தை தேர்ந்தெடுத்துள்ளது.//

    மிகவும் சரியான அலசல் கட்டுரை.

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்