புளித்த மாவும் அரைத்த மாவும் !

இந்த வாரம் குமுதம் படித்தேன். வார வாரம் படிப்பதுதான். இருபது வருடங்களாகவே படிக்கிறேன் என நினைக்கிறேன். சில வருடங்களாகத்தான் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் வருவதையும் அப்படியே நம்பவேண்டியதில்லை என்ற தெளிவு வந்திருப்பதாலும் அதை விமர்சித்து எழுதுவதற்கு வலைப்பூவும் இருப்பதாலும் சிலவற்றைப்படித்தால் புலம்பாமல் இருக்க முடியாது என்பதாலும் இதை எழுதுகிறேன்.

குமுதத்தில் அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்த்தால் அதிகம் திரைப்படங்கள், நடிகைகள், பிரபலங்கள் குறித்துத்தான். பிரபங்கள் வீட்டு திருமணங்கள், இன்ன பிற விழாக்கள் மருந்துக்குக் கொஞ்சம் அரசியல், அப்போதைய சூடான விவாதங்கள் குறித்து சிறு அளவிலும் குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வப்போது சில மனிதநேய, சாதனை, வேதனை, அதிசயம் என்கிற ரீதியில் சில ஆர்வமூட்டும் மசாலாவும் இணைக்கப்படும். அதிகமாக முதன்மைப்படுத்தப்பட்டு வெளிவருவது நடிகைகளின் கவர்ச்சிப்படங்கள்தான். படம்போடுவதற்கு ஒரு நியாயம் வேண்டுமென்பதற்காக பக்கத்திலேயே ஒரு கிசுகிசுவையும் எழுதுவார்கள் அது நாயைக் குளிப்பாட்டிய செய்தியாகவும் இருக்கலாம்.

தற்போது தமிழினத்தை அவமானப்படுத்திய காஜல் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். காஜல் தன்னை தென்னிந்திய நடிகை என அழைப்பதை விரும்பமாட்டேன் என்றாராம் உடனே தமிழ், தெலுங்கு திரையுலகினர் கொந்தளித்து விட்டனராம். இதில் இவர்கள் கொந்தளிக்க என்ன இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை. ஒருவேளை அவர் தென்னிந்தியப்படங்களில் நடிகைகளை கண்ணியமாக மட்டுமே நடிக்க வைப்பார்கள் என்று சொல்லியிருந்தால் கூட இவர்கள் பொங்கியிருக்கலாம் ஒரு நியாயம் இருந்திருக்கும். ஆனாலும் குமுதம் போன்றவர்கள் இருக்கும்வரையில் தமிழனின் தன்மானம் தாழ்ந்து விடாது என நம்பலாம். இதற்கு முன்பு இது போன்று தமிழர்களை அவமானப்படுத்தியவர்கள் ஆர்யா, அதற்கு முன்பு ஜெயராம். இது போன்ற ஒரு பைசாவுக்கு உதவாத செய்திகளை வைத்து உசுப்பேத்தி அதில் குளிர்காய்வதுதான் இவர்களுக்கு வேலையே.

அது தொலையட்டும், இப்போது இந்த காஜலை வைத்து ஒரு செய்தி இருந்ததல்லவா அதில் பாரதிராஜா காஜலை நடிக்க வைத்த வரலாற்றை சொல்லி அவரை சாடியும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். இந்தக்கட்டுரைக்கு காஜலின் செக்ஸியான படங்களைப் போட்டிருக்கிறார்கள் அதுதான குமுதத்தின் தனி பாணியே. இந்த செய்தியைக் படிக்கும் போது தமிழர்களுக்கு தன்மான உணர்ச்சி வருமா இல்லை வேற எதாவது வருமா என்று குமுதம்தான் சொல்ல வேண்டும். இதுமட்டுமல்ல ஸ்டார் சமையலில் வருபவர்கள் இறக்கமாக சேலையைக் கட்டியபடிதான் வரவேண்டும் என்ற சட்டமா ? சமயல் செய்யும்போது தோசைக்கல்லில் எதாவது இருக்கிறதோ இல்லையோ பாதித் தொப்புளாவது தெரியாமல் புகைபடம் போட மாட்டார் சித்ராமணி. அடுத்து க்ளிக் கலாட்டாவில் வரும் திரைப்பட விழாக்களில் எடுத்த படங்களைப் போட்டு அதில் எழுதப்படும் வாசகங்கள் அனைத்தும் மூன்றாந்தரம். அதில் வரும் புகைப்படங்கள் நவீன அரைகுறை, ஒளிபுகும் ஆடைகளணிந்த பெண்களை பலவித கோணங்களிலும் மிக அருகிலும் எடுத்தவையாக இருக்கும். அதில் இடும் வசனங்கள் இப்படி இருக்கும். "பெரிசா இருக்கு", "ரெண்டுமே நல்லா இருக்கு", "பிளவு தெரியுது கூட்டணியில", சின்னதா இருந்தாலும் பளிச்னு இருக்கு" இந்த மாதிரியானவை. ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள் ?

நடிகையின் படமில்லாவிட்டால் வாங்கமாட்டார்கள் என்று அரசு பதில்களில் எழுயிருந்தார்கள் எப்போதோ. அரசு பதில்களில் பெண்கள் குனிந்திருக்கும் படங்களுக்குத்தான் முன்னுரிமை கிடைக்கும். போதாக்குறைக்கு நடிகைக்களைப்பற்றி அரசுவின் பதில்களும், நான் நடிகைகளின் வாலிபால் போட்டியில் பந்தை மட்டும்தான் பார்ப்பேன், மார்க்கெட் தொங்கிப்போச்சு இப்படியெல்லாம் போகும். 

இதெல்லாம் புதிதில்லைதான், இருப்பினும் இதே குமுதம்தான் கோவையில் சிலமாதங்களுக்கும் முன்பு இரு குழந்தைகள் கொல்லப்பட்ட போது, பத்திரிகைகள் ஆபாசப்படம் போடக்கூடாது என்று எழுதியது, ஏன் இப்படி குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது ? நீங்கள் எபபோது மாறப்போகிறீர்கள் ?

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. நல்ல பதிவு. என் மனதில் இருப்பதை அப்படியே புலம்பித்தள்ளிட்டீங்க.

    படம் போட்டு அதுக்கு ஒரு விளக்கமும் போட்டுட்டு குமுத எழுத்தாளர் ஒரு கேள்வியும் போடுவார் பாருங்க............. அப்படியே பத்திக்கிட்டு வரும். புனைவு எழுதுவதில் கில்லாடிகள் இவர்கள்:(

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி கோபால்

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பதிவை எனக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றிகள். பல தலைப்புகளில் அருமையாக பல பதிவுகளை எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சீன்க்ரியேட்டர், பாராட்டியதற்கு மகிழ்ச்சிகள்

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்