#Metoo எதிர்ப்புப் புரட்சியாளர்கள்

ஒருவர் தனக்கு நடந்த கொடுமையை வெளியே சொன்னால் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்று பாருங்கள். 

இப்படிப்பட்ட நகைப்படங்களை உருவாக்கியவர்கள்தான் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகளுக்கு எதிராக கருத்து சொல்கிறவர்கள்.

மனநோய் முற்றிய அறிவாளிகள்








Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ராட்சசன்

காதல் காட்சிகள், பாடல்கள், நம்ப முடியாத சண்டைக்காட்சிகள் அதிகம் இல்லாத தொய்வில்லாத விறுவிறுப்பான திரைப்படம். படம் பார்க்காதவர்கள், விறுவிறுப்புடன் கதை தெரியாமல் படத்தை சுவைக்க நினைப்பவர்கள் மேற்கொண்டு இதைப் படிக்க வேண்டாம்.

இருந்தாலும் தமிழ்ப்படங்களில் தொடர்ந்து வரும் அபத்தங்களை காண முடிந்தது. 

விஜியிடம்(அமலா பால்) இருக்கும் குழந்தை அவருடையது இல்லை. அவளுடைய அக்காவுடைய குழந்தை. இதன் மூலம் நாயகியின் கன்னித்தன்மை உறுதி செய்யப்பட்டு, தமிழ்ப்படநாயகன்/தமிழ் ரசிகர்களின் மனம் கோணாமல் கதை செய்யப்பட்டுள்ளது.

பள்ளியில் சரியாக படிக்காத மாணவிகளை அச்சுறுத்தித் துய்க்கும் கணக்கு வாத்தி இன்பராஜ் பள்ளிக்கூடத்தின் வகுப்பறைலேயே வகுப்பு முடிந்ததும் அதுவும் பகலிலேயே செய்வானாம். நம்ப முடியாத காட்சியமைப்பு. இந்த வாத்தியால் பாதிப்புக்குள்ளான மாணவி ஷர்மி அவன் அழைக்கும்போதே எதிர்க்காமல் 11வது தேர்ச்சி அடைய வேண்டும் என்ற தந்நலத்துக்காக பணிந்து விட்டு இன்னொரு மாணவியைத் தேடி காவல்துறை வந்தபோதுதான் தன்னை வற்புறுத்தித் துய்த்தவனைக் காட்டிக் கொடுக்கிறாள். எனவே ஷர்மி ஒரு விபச்சாரி என்றுதான் கருத முடியும். (#metoo எதிர்ப்பாளர்களின் கருத்துக்கு நன்றி). ஷர்மி என்ற அந்த மாணவியைப் போலவே வேறு வழியில்லாமல்தான் பாலியல் சுரண்டலை  ஏற்றுக் கொள்ளும் பெண்கள் தான் பாதுகாப்பான வாழ்க்கையில் இருக்கும்போதுதான் #Metoo என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்ல முடியும். அதைக் கூடப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.  ஆனால் படத்தில் இது மாதிரி நடந்தால் பரிதாபப்படுவார்கள். 



ஷர்மியை மருட்டி அனுபவித்தது போல் நம்ம கதாநாயகன் அருணின் மாமா மகளான அம்முவையும் அனுபவிக்க நினைக்கிறான் இன்பராஜ். கதாநாயகனின் மாமா மகள் என்பதற்காக கதவைச் சாத்தியவுடன் தொடங்காமல் அச்சிறுமி அழுவதையும் சம்மதிக்கவும் 1 லிருந்து 5 வரை எண்ணுகிறான். அப்பதானே நாயகன் வந்து மாமா மகளின் கற்பைக் காக்க முடியும்.  அதே போல் நாயகன் வந்து காப்பாற்றியும் விடுகிறார். 

கொலையாளியின் ஃப்ளாஷ்பேக்கில், தொடர்கொலைகளுக்கான காரணம் பிடிபடவேயில்லை. கிறிஸ்டோபர் ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்பட்ட தனது அழகற்ற தோற்றத்தினால் பள்ளியில் அனைவராலும் ஒதுக்கப்பட்டாலும், தன்னை நட்புடன் ஆதரிக்கும் சோஃபியா என்ற பெண்ணிடம் காதல் வயப்படுகிறான். அதை அவளிடம் சொல்ல அவள் மறுக்கிறாள். அவனிடமிருந்து விலகுகிறாள். அவன் திரும்பத் திரும்ப அவளிடம் வற்புறுத்த பொறுமையை இழக்கும் அவள் கிறிஸ்டோபர் ஆண்மையற்றவன், திருமணம் செய்ய தகுதி இல்லாதவன் என்று அழுது கொண்டே ஆத்திரத்தின் உச்சியில் கூறிவிடுகிறாள். 

அவன் வீட்டில் தனது உடலைக் கண்ணாடியில் கண்டு அழுகிறான். அவனது அம்மா மேரி அவனைத் தேற்றி பள்ளிக்கு அனுப்புகிறார். பள்ளியில் அவனது வகுப்பு மாணவர்கள் சுவரிலும் கரும்பலகையிலும் அவனைக் கேலியாக வரைந்து அவனை மொட்டை (ஆண்மையற்றவன்) என்று பரிகசித்துக் கைகொட்டிச் சிரித்து அவனை அவமானப்படுத்தி துரத்துகின்றனர். இப்படி எல்லா ஆண்களும் பெண்களும் ஒன்று கூடி நின்று ஒரு உடல் குறைபாடுடையவனைக் கிண்டல் செய்வார்கள் என்று நம்ப முடியவில்லை.


                                   
அந்த மனநோயாளி கிறிஸ்டோபர் எதற்கு பள்ளி மாணவிகளைக் கொலை செய்கிறான் என்பதே புரியவில்லை. அவனை அவமானப்படுத்தியவர்கள் அவனுடம் படித்த மாணவ மாணவிகளே. அவர்களைத் தேடிப்போய்க் கொல்லாமல் இந்தச் சிறுமிகளைக் கொல்வது ஏன் என்றுதான் புரியவில்லை. ஆறாது சினம் படத்தில் கொலையாளி தனக்குக் கேடு செய்தவர்களின் இணையர்களைக் கொல்வான். அதிலாவது ஒரு சிறிய "அடிப்படை (அ)நியாயம்" இருந்தது. இவனை ஆண்மையற்றவன் என்று கேலி செய்தவர்கள் மாணவிகள் மட்டுமல்ல மாணவர்களும் கூடத்தான். மாணவர்கள்தான் இவனை அவமானப்படுத்தி உடையை உருவி ஓட விடுவார்கள். அதற்கு சிறுவர்களைத்தானே கடத்த வேண்டும், கொல்ல வேண்டும். 

                            

சிறுமிகள் என்றால்தானே அதிக பதட்டத்தையும் ஆத்திரத்தையும் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்த முடியும் என்பதற்காக இருக்கலாம். 

மேரி ஏன் அந்தச் சிறுமியைக் கொல்வதற்கு மகனைத் தூண்டினார் என்பதும் இவனும் இவளுடைய அம்மாவும் ஒரு சிறுமியைக் கொன்ற குற்றத்திலிருந்து எப்படி வெளியே வந்தார்கள் என்பதும் புரியவில்லை.  இவன் காதலை மறுத்த அந்த சோபியாவை கொலை செய்வதற்கு இவனது அம்மா மேரியும் உதவுகிறார். அவன் கொல்வதை ரசிக்கிறாள். என்ன அம்மாவோ ? பள்ளியில் மற்றவர்கள் கிறிஸ்டோபரை அவமானப்படுத்தியதற்கு சோஃபியா காரணம் என்பதாகவும் தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த சோபியா தான் ஆத்திரத்தில் பேசிவிட்டதாகவும், அடுத்த நாள் காய்ச்சல் காரணமாகத்தான் பள்ளிக்கு வரவில்லை என்றும் கூறுகிறாள். இருப்பினும் மேரியும், கிறிஸ்டோபரும் அவளைக் கொல்கின்றனர். ஆண்களின் கோபத்திற்கும், புறக்கணிப்புக்கும் இப்படியெல்லாம் பெண்களைக் கொல்ல வேண்டுமென்றால் எத்தனை பெண்கள் சாக வேண்டுமோ ? 

அந்த மேஜிக் நடத்தும் மேரியைப் பாக்க ரெமோ படத்தில் வரும் நர்சைப் போலவே இருக்கிறார்இன்னும் எத்தனை ஃப்ளாஷ்பேக்-களில்தான் ஊட்டி கான்வென்ட் பள்ளியைக் காட்டப் போகிறார்களோ ?

அருண் (விஷ்ணு விஷால்) வெங்கட்டின் துப்பாக்கி முனையில் கொலையாளி சிக்கி இருக்கும்போது யோசிக்காமல் சுடச் சொல்கிறான். ஆனால் அவனே கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டே அந்தக் கொலையாளிடம் பேச்சு நடத்துகிறான் அருண். அப்பதான க்ளைமாக்ஸ் சண்டை வைக்க முடியும் என்று தோன்றுகிறது.

இவன் மேஜிக் செய்பவன் பியானோ வாசிப்பவன் என்றெல்லாம் திறமை வாய்ந்த கலைஞனாக இருந்தாலும், ஆறாத சிறுவயது அவமானங்களை அனுபவித்திருந்தாலும் சிறுமிகளைக் கொடூரமாக கொலை செய்வதால் இவன் மீது கரிசனமே கொள்ள முடியாத கதை மாந்தனாக இருக்கிறான் ராட்சசன் கிறிஸ்டோபர். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

#எனக்கும் என்ற #Metoo இயக்கம் - முற்போக்குவாதிகளின் முரட்டுப் பிடிவாதம்


இந்த #Metoo இயக்கம் அதன் ஹாஸ்டாக் மூலம் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய நண்பர்களின் மனப்போக்கு குறித்து ஒரு தெளிவு கிடைத்தது. இன்னும் 500 ஆண்டுகளுக்கு தமிழ் நாட்டில் ஜாதி ஒழிய வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். 500 ஆண்டுகளுக்குப் பின் ஜாதி ஒழிந்து சமத்துவம் கிடைத்தாலும் பெண்களின் நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை போல் தெரிகிறது. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் பெண்களின் பாலியல் வன்முறைக்கான புரிதலை ஆண்களுக்கு ஏற்படுத்த முடியாது என்பது தெரிகிறது. 

சமூக வலைத்தளங்களிலும் சரி, சமூகத்திலும் சரி ஏதாவது ஒரு விவகாரமோ விவாதமோ பொதுத்தளத்தில் வருகிறது என்றால் மிக மோசமான வகையில் கிண்டலடிக்கப்படுகிறது. இது ஜனநாயகத்தில் அடக்கம் என்றாலும் கூட அதன் விளைவுகளை நோக்குகையில் அது தவிர்க்கப்பட வேண்டியதே என்று தோன்றுகிறது. ஏனெனில் விதவிதமான கருத்துக்கள் மோதும்போதுதான் நியாய அநியாயங்கள் அறியப்பட்டு உண்மை புலப்படும். ஆனால் வெறுமனே போன்மிகள்(Memes) உருவாக்குகிறேன் பேர்வழி என்று வடிவேலு, கவுண்டமணியின் படங்களைப் போட்டு எதுகை மோனையாக ஒரு பிரச்சனையை நக்கலடிப்பதால் என்ன விளைகிறது. பொழுதுபோக்குக்காக சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் உண்மையான சமூகப் பிரச்சனையை உணராமல் அதை நக்கலடித்து அதன் அடிப்படையையே மாற்றுகின்றனர். அதை ஒரு பிரச்சனையாகவே அவர்கள் பார்க்க மறுக்கின்றனர். 

பாலியல் வன்முறைக்கு எதிரான #Metoo ஏன் இந்தளவுக்கு கிண்டலடிக்கப்படுகிறது. சில சமாச்சாரங்கள் உணர்வுப்பூர்வமாகவே அணுகப்பட வேண்டும். ஆனால் இந்தளவுக்குக் கிண்டலும் நக்கலும்?.  ஒருவர் ஏன் இறைமறுப்பாளராகிறார் ? மதம் மனிதன் மீதான கொடுமையைச் செய்வதால்தானே ? முற்போக்குவாதம், இறைமறுப்பு போன்ற பிறப்பினால் அல்லாமல், தானாக விரும்பி ஏற்றுப் பின்பற்றும் கொள்கைகளைக் கொண்டவர்கள் முதலில் மனிதநேயராக இருக்க வேண்டும். ஆனால் முற்போக்குவாதியாக இருந்து கொண்டே ஜாதிவெறியர்களும் மதவெறியர்களும் முற்போக்குவாதம் பேசும் பெண்களை கேவலப்படுத்துவது போல் செய்கின்றனர். பாலின அடிப்படையில் அடக்கு முறையை அனுபவிப்பவர்கள் ஆண்களை விடவும் பெண்களே. பெண்கள் ஒரு நிலைக்குச் செல்ல வேண்டுமானால் ஆண்களை விட அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதில் பாலியல் ரீதியிலான சுரண்டல்கள், கேலிகள், புறக்கணிப்புகள் மிகவும் சாதாரணம். இதெல்லாம் அறிந்தும் கூட முற்போக்குவாதிகள் #நானும்கூட (#Metoo) என்ற பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்களின் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். 

பெண்கள் பாலியல் வன்முறைக்கு எதிராக #Metoo சொன்னால் அதை ஆதரிக்க மாட்டேன் என்கின்றனர். ஆனால் பெண்கள் சபரி மலைக்குப்போவதை நான் ஆதரிப்பேன் என்கிறார்கள். ஏன்  அவர்கள் சமத்துவ, சமூக நீதி ஆதரவாளர்கள். ஆக பெண்கள் முட்டாள்தனத்திற்கு வேண்டுமானால் சமத்துவம் என்று ஆதரவு தரலாம். ஆனால் பெண்கள் பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வுக்காக ஒரு போராட்டம் நடத்தினால் அதை நக்கல் செய்யலாம். நல்லவேளை பழக்க தோஷத்தில் இத்தனை வருடங்களாக ஐயப்பன் கோயிலுக்குப் போகாத பெண்கள் இப்போது மட்டும் ஏன் போக வேண்டும் என்கிறார்கள் என்று யாரும் கேட்கவில்லை.

சபரி மலையில் பெண்கள் நுழைவுக்கு வழக்கு நடத்தி வென்ற காவிகள் பெண்களை வைத்தே பெண்கள் சபரிமலைக்குச் செல்வதை எதிர்த்து விளம்பரப் போராட்டம் நடத்துவதைப் போல் நான் பெண்களுக்கு ஆதரவானவன், பாலியல் வன்முறைக்கு எதிரானவன் என்று சொல்லிவிட்டு #Metoo க்கு எதிராக பெண்களே எழுதியவற்றை பகிர்ந்து தனது பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்களின் சிறிய முன்னெடுப்பைக் கூட எட்டி உதைத்து தனது வெறுப்பைக் காட்டுகின்றனர். பாப்பாத்திக்கு நடந்தது பாலியல் வன்முறை என்றால் கூட அதை ஏற்கமாட்டேன். குற்றச்சாட்டு சொன்னவரையே தேவடியா தேவடியா என்று திட்டுவது எல்லாம் என்ன வகை மனிதம் என்பது தெரியவில்லை. 

இப்படித் திட்டுகிறவர்கள் சிலர் ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் தனது அடையாளப்படமாக, சே குவேராவையும், அண்ணலையும், பெரியாரையும், கலைஞரையும், ஸ்டாலினையும், பிரபாகரனையும் வைத்துக் கொண்டிருந்தார்கள். எப்படி கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல்? நீங்கள் திட்டுவதால் உங்கள் தலைவர்களுக்கல்லவா கெட்ட பெயர் ? முற்போக்குவாதிகள் மீதான மரியாதையே குறைந்து விட்டது. அண்ணல் பெண்களுக்கு செய்ததென்ன ? ஆ பெரியார் பேசாத பெண்ணியமா ? பெண்களுக்கு 33% என்று கலைஞர் கொண்டு வராத திட்டமா ? என்றெல்லாம் பெண்ணியத்தைப் புகழ்ந்து கொண்டு பெண்களே தங்களுக்காகப் பேசும்போது அதை ஆதரிக்காமல் பெண்களை இழிவு செய்வதில் ஜாதிவெறியர்களுக்கும் சங்கிகளுக்கும் சற்றும் இளைத்தவர்களல்ல இவர்களில் சிலர். 

பரியேறும் பெருமாள் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும், பரியனின் அப்பா பெண் வேடமிட்டு கரகாட்டம் ஆடும் கலைஞர். அவரை பரியனின் கல்லூரியில் வேட்டியை அவிழ்த்து ஓட விடுவார்கள். எல்லோரையும் கலங்கச் செய்யும் காட்சி இது. கரகாட்டத்தில் பெண்களுடன் ஆபாசமாக ஆடினாலும் அவரை அவமானப்படுத்தும் நோக்கில் வேட்டியை உருவினால் அதை அவமானமாகவே கருதுவோம். ஆபாசமாக ஆடுகிறவனுக்கு என்ன மான அவமானம் என்று யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் இதே இடத்தில் ஒரு பெண்ணை வைத்துப் பார்த்தால் எத்தனை பேர் அதை அவமானம் என்று ஏற்றுக் கொள்வர் ? 

#Metoo எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புக்கள்:

சின்மயி குற்றம் சாட்டுவது பார்ப்பன சதி. அவர் ஒரு பாப்பாத்தி. வைரமுத்து மீது அபாண்டமாக புகார் சொல்கிறார். ஆண்டாள் விவகாரத்தை வைத்து அவரைப் பழி வாங்குகின்றனர். அவர் ஏற்கெனவே பொய் குற்றச்சாட்டு கூறியவர். வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்து அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன் ?

அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து சொன்னது, Highyengar என்று ஜாதிப் பெருமை பேசியது, மீனவர்களைப் பற்றிக் கூறியது பற்றி ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறேன்.  2004 - இல் ஜெயலலிதா ஆட்சி. ஒரு வேளை அப்போது குற்றம் சுமத்தியிருந்தால் மட்டும் ஆதரித்திருக்கப்போகிறார்களா பார்ப்பன எதிர்ப்பாளர்கள். இதே வைரமுத்து அல்லாமல் எஸ்.வி. சேகர், எச். ராசா மீது குற்றம் சுமத்தியிருந்தால் கதை வேறாக இருந்திருக்கும். எனவே இதை எப்பாடு பட்டாவது பாஜகவுடன் முடிச்சுப் போட்டுவிடப் பார்க்கிறார்கள். அதைக் கொண்டே பார்ப்பன எதிர்ப்பு மூலம் #Metoo வை எதிர்த்துக் கொண்டே சமாளித்து விடலாம். 

நடிகை ஸ்ரீரெட்டி #Metoo சொன்னபோது சிரித்தவர்கள் சின்மயிக்கு மட்டும் பொங்குகிறார்கள்

அதைச்செய்தவர்கள் இதைச்செய்கிறார்கள், அதைச் செய்யாதவர்கள் இதைச் செய்கிறார்கள் என்ற எதுகை மோனை தனக்குப் பிடிக்காத எல்லோரையும் ஒரே கோட்டில் நிறுத்தப் பயனபடும் வசனம். ஸ்ரீரெட்டிக்கு சிரித்தவர்கள் இப்போதும் சின்மயி சொன்ன #Metoo வுக்கு சிரிக்கிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு ஆதரித்தவர்கள்தான் சின்மயிக்கும் ஆதரிப்பார்கள். ஸ்ரீரெட்டி ஆந்திரா என்பதால் இங்கே பெரிதாகத் தெரியவில்லை. வைரமுத்து, சின்மயி நம்ம ஊர் பிரபலம் என்பதால் இங்கே பரபரப்பானது. ஸ்ரீரெட்டி மட்டுமல்ல தனுஸ்ரீ தத்தா சொன்ன போதும் யாரும் இங்கே கண்டுகொள்ளவில்லை.


இது பார்ப்பன சதி. மேலும் படுக்கையைப் பகிர்ந்து விட்டு காரியம் சாதித்துக் கொண்டு இப்போது புகார் சொல்வது தேவிடியாத்தனம். வைரமுத்து மீது வன்மம் கொண்ட பார்ப்பன சதி.

RSS ஆதரவாளராக மட்டுமன்று, அவர் ஒரு RSS பயங்கரவாதியாகவோ, ISIS பயங்கரவாதியாகவோ இருந்தால் கூட ஒரு பெண்ணாக அவர் மீது பாலியல் வன்முறையை ஏற்க/ஏவ முடியாது. அவர் பார்ப்பனப் பெண்ணாக இருப்பதால் பாலியல் சீண்டல்களை எதிர் கொண்டிருக்க முடியுமா ? அவர்களுக்கு மட்டும் என்ன கொம்பா இருக்கிறது ? இவ பாப்பாத்தி இவளை நாம சீண்டக்கூடாது என்றுதான் ஆண்கள் நினைக்கிறார்களா ? மேலும் சின்மயி வைரமுத்து மட்டுமன்றி பிற 5 பார்ப்பனக் கலைஞர்கள் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறார். அதே போல் சின்மயி அல்லாது வேறு சில பெண்களும் வைரமுத்து மீது குற்றம் சாட்டியுள்ளனர். இது பார்ப்பன சதி என்பது சொல்பவர்களின் தனிப்பட்ட வன்மத்துக்கான சாதகமான பொய்.  வைரமுத்து ஒன்றும் திராவிட சித்தாந்தவாதியல்ல. கலைஞருக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால் திராவிடப் பகைவர்களான பாஜக வின் தருண் விஜய், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்து பாராட்டித் தள்ளியவர். இவருக்கு முதன் முதலாக ஆதரவு தெரிவிக்கிறேன் என்று தேவையில்லாமல் சின்மயிக்கு எதிராக கருத்து சொல்லி இதை ஆரிய திராவிட பிரச்சனையாக மாற்றியவர் சுப. வீரபாண்டியன். எனவே இப்பிரச்சனையில் முதலிலேயே சின்மயிக்கு எதிராக பார்ப்பன/மேட்டுக்குடி/வேசி என்ற கருத்துக்களை நம்பியவர்கள் அதை நிரூபிக்கவே முனைகின்றனர். 


#Metoo என்பது படுத்து காரியம் சாதித்துவிட்டு பின்னர் கூவும் தேவிடியாத்தனமல்ல. மிகவும் நெருங்கியவர்களால் ஏற்படுவது, காதலர்கள், நண்பர்கள், அயலவர்கள், அண்டை வீட்டினர், பொது இடங்கள், பணியிடங்கள், கல்வியகங்கள், அரசுதனியார் அலுவலகங்களில், இணையர்களால் அவர்களது அண்ணன், தம்பி, அப்பா, சிற்றப்பா, மாமா, தாத்தாக்களால் ஏற்பட்ட சிறிய பாலியல் சீண்டல்கள், தொல்லைகள், வற்புறுத்தல்கள், மருட்டல்கள், ஏமாற்றி துய்ப்பது, ஆசை வார்த்தை காட்டித் துய்ப்பது, போர்ன் படங்கள், வீடியோக்கள் அனுப்புவது, அனுப்பச் சொல்வது இப்படிப் பல வகையும் அடங்கும். சிறு குழந்தையாக இருந்த போது ஏற்பபட்ட மோசமான அனுபவம், பெண்களால் ஆண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் என்று பலவும் இதில் அடங்கும். 

இது ஆண்களுக்கு எதிரான "பெண்ணியம்" இல்லை. பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் + பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியவர்கள் என்ற பிரச்சனை மட்டுமே. பாலினம் குறித்ததல்ல. இதைச் செய்தவர்கள் கண்டந் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட வேண்டியவர்களும் அல்ல. ஆளானவர்கள் நம் பரிதாபத்துக்கு உரியவர்களும் அல்ல. எல்லா இடத்திலும் நீக்கமற நடக்கும் ஒரு இழிசெயலுக்கு எதிரான விழிப்புணர்வு, செய்பவர்களுக்கு ஒரு அச்சத்தையும், செய்யப்படுகிறவர்களுக்கு ஒரு ஆறுதலையும் தரக்கூடிய கருத்தாக்கத்தின் பரவல். செய்தவர்கள் சிறைக்குச் செல்வது மட்டுமல்லாமல், வருத்தம் தெரிவித்தல், மன்னிப்பு கோருதல், சமரசம் போன்ற தீர்வுகளும் வருகின்றன.

அப்பவே சொல்லாமல்  இத்தனை வருடங்கள் கழித்து சொல்வதால் இது பொய் ?

கூடங்குளம் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியவர்கள் கேட்ட கேள்விதான் இது. ஏன் அப்போதே எதிர்க்காமல் இப்போது எதிர்க்கிறீர்கள் என்றார்கள். எதையும் எதிர்ப்பதற்கு உகந்த காலமும் வேண்டுமே. அதற்கான உளவியல் பலம் வேண்டுமே. இப்போது புகார் சொல்பவர்களுக்கு நடந்ததெல்லாம் நேற்று நடந்தததில்லை. பல வருடங்களுக்கு முன்னர் நடந்ததே. 

14 வருடக்கணக்கில் ஒத்துக்கொண்டு ஒரு நாள் எதிர்த்தால் அது தவறா ? விருப்பமில்லாமல் நம் மீது நடக்கும் எல்லாவற்றையும் உடனே எதிர்த்து விடும் வலிமையும் சூழலும் எல்லாருக்கும் வாய்க்கிறதா ? கணவனாக இருந்தால் கூட அது விருப்பமில்லாமல் தொடர்ந்து செய்தால் பெண் சட்டத்தை நாடலாம் அல்லவா ? ஒரு முறை விருப்பமில்லாமல் நடந்த உடனே ஒரு பெண் போய் சட்டத்தில் முறையிடுவாரா ? பல நாட்கள் பார்த்து சலித்த பின்னர் வேறு வழியின்றி பொறுக்க முடியாமல்தானே வழக்கு போட முடியும் ?. அவர்களால் உடனே சொல்ல முடியவில்லை, அதற்கான இடமும் பக்குவமும் சமூகத்திடம் இருப்பதாக அவர்களும் நம்பவில்லை என்பதற்கு இந்த சமூகம்தான் வெட்கப்பட வேண்டும்.

2000 வருடங்கள் பார்ப்பன அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடாமல் பார்ப்பனியத்தை அனுபவித்துக் கொண்டு இருந்த திராவிடர்கள் ஏன் கடந்த 150 வருடங்களாக மட்டும் போராடுகின்றனர் ?. இலங்கை சுதந்திரமடையும் முன்பே சிங்கள இனவெறிக்கு ஆளான ஈழத்தமிழர்கள் ஏன் 1970 க்கும் மேல்தான் ஆயுத இயக்கங்களைத் தொடங்கினார்கள் ?. இந்து மதத்துக்குள்ளையே இருந்து இந்து மத விடுமுறை நாட்களில் விடுமுறையையும் அனுபவித்துக் கொண்டு/ ஜாதி சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு ஜாதியை/இந்து மதத்தை எதிர்ப்பது எப்படி நேர்மையோ அப்படியே காலம் கடந்து வெளிப்படும் பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டும் சரியானதே. ஊதியம் கொடுக்கும் முதலாளிக்கு எதிராக தொழிலாளிகள் சங்கம் அமைத்துப் பல வருடங்களுங்களுக்குப் பின்னர் போராடுவதில்லையா ?

உண்மையான நேர்மையான பெண்ணாக இருந்தால் அப்போதே அறைந்திருக்க வேண்டும்.

அதாவது பொண்ணுன்னா நெருப்பு மாதிரி இருக்கோணும். சுருக்கமா நம்மூர்ல கற்புக்கரசி, கண்ணகி, உத்தமி என்ற பெயர்படி எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கக் கூடத் தேவையில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்கள் எத்தனையோ இருக்க எப்படி இவர்களால் மனசாட்சி இல்லாமல் கேட்க முடிகிறதோ. அது நேரும் போது உடனே எதிர்வினை ஆற்றுமளவிற்கா எல்லா பெண்களும் இருக்கிறார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்தும், அவமானத்திலிருந்தும் மன அளவில் மீள்வதற்கே காலம் எடுக்கும். உயிர், உடல், உடைமை, பணி, மானம் என்ன எல்லாவற்றிற்கும் ஆபத்து நேரும். அச்சுறுத்தல் வரும். ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதிகளே. 

சில வருடங்களுக்கு முன்னர் டெல்லியில் ஓடும் பேருந்தில் தன்னை கிண்டலடித்ததை ஒரு பெண்(இந்தியாவின் மகள்) துணிச்சலுடன் எதிர்த்தாள். அவளை விட 7 குறைந்த ஒரு வெறிநாய் உட்பட 4 பேர் அவளை கொடூரமாக வன்கலவி செய்து அம்மணமாக வீதியில் வீசிச்சென்றனர். அவள் உயிருக்குப் போராடி இறந்தாள். குற்றம் செய்த போது அவனுக்கு 17 வயது நிரம்பவில்லை என்று 3 வருடங்கள் அவனைச் சிறையில் வைத்து சிறுவன் என்று அவனை விடுவித்து தையல் இயந்திரம் ஒன்றையும் பிழைப்புக்குக் கொடுத்து அனுப்பியது இந்திய நீதி. அவன் இந்நேரம் எத்தனை பேரின் முலைகளை ரவிக்கைக்கு அளவெடுக்கிறேன் என்று பிடித்தானோ தெரியவில்லை. இந்தக் கேவலத்தில் சமூக இருக்கும் போது நல்ல பெண்ணாக இருந்தால் உடனே எதிர்த்திருக்க வேண்டுமாம்.

ஆளுநர் மீதான பாலியல் புகார், எழுவர் விடுதலை, ரஃபேல் ஊழல், தூத்துக்குடி படுகொலை, குத்கா ஊழல், எடப்பாடி ஊழல் ஊடகங்கள் திசை திருப்புகின்றன.

தான் பொங்கும்போது அனைவரும் பொங்க வேண்டும். தான் கலாய்த்து நக்கலடிக்கும்போது எல்லோரும் சிரிக்க வேண்டும் என்று எல்லா இணையப் போராளிகளும் சொல்வதுதான். தனக்குப் பிடிக்காத விடயம் ஒன்று பொதுவான விவாதமாகும்போது இது ஊடகங்களின் விபச்சாரம், பணக்காரர்களுக்கு நடந்தால் மட்டுமே ஊடக வெளிச்சம் கிடைக்கிறது என்று பினாத்துவது இந்துத்துவர், திராவிடர், தமிழ்தேசியர், நடுநிலையர்கள், அரசியல் சார்பற்றவர்கள், நடிகர்களின் ரசிகர்கள் என்று எல்லாத் தரப்பினர்க்கும் கைவந்த கலை. ஊடகங்கள் எப்போதும் எதையுமே பரபரப்பாக்குவது தெரிந்ததுதான். எல்லா நாளிலும் ஊடக செய்திகளின் மூலமாகத்தானே நமது அரசியலைப் பேசுகிறோம். நாட்டின் பிரச்சனைகள் மக்களின் பிரச்சனைகள் எப்போதும் இருக்கின்றன. அவைகளை ஊடகங்களின் மூலமாகத்தான் அறியப்பெறுகிறோம். 

ஆனால் தனக்குப் பிடிக்காத ஒரு தலைப்பையோ, நபரையோ குறித்து ஒரு செய்தியோ விவாதமோ ஒரு வாரத்துக்கு செய்தி ஊடகங்களிலோ சமூக வலைத்தளங்களிலோ முன்னிலையில் இருந்தால், இந்த விபச்சார ஊடகங்களுக்கு வேறு வேலையே இல்லை என்று சலித்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் எப்போதுமே புரட்சிகரமாக மக்கள் பிரச்சனைகளை மட்டும் பேசிக் கொண்டிருப்பதில்லை. அதே விபச்சார ஊடகங்கள் தரும் பொழுது போக்குத்தனமான செய்திகளை தனது நகைச்சுவைக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்போது மட்டும் நாட்டின் இன்ன பிற பிரச்சனைகளை மறந்து ஹா ஹா என்று எமோஜிகள் போட்டுக் கொண்டு வடிவேலு படம் போட்டு கருத்து சொல்வார்கள். 

உதாரணத்துக்கு நடிகர் சிவகுமார் தற்படம் எடுக்க முயன்ற ஒரு இளைஞனின் அலைபேசியைத் தட்டி விட்டது, அமைச்சர் ஜெயகுமாருக்கு குழந்தை பிறந்தது, சபரிமலையில் பெண்கள் மறுக்கப்பட்டது, எச். ராசா எகத்தாளம் பேசுவது, தமிழிசையைக் கலாய்ப்பது, ரஜினி, கமல், உளறல்களையெல்லாம் பொருட்படுத்தி விமர்சிப்பது, அஜித், விஜயைய்க் கலாய்ப்பது, டீசர்களுக்கும், முன்னோட்டக் காட்சிகளுக்கும், பாடல் வெளியீட்டிற்கும், கருத்து சொல்வது, ஷகிலா, சன்னி லியோன் ஆகிய ஓய்வு பெற்ற போர்ன்ஸ்டார்களைப் பற்றிப் பேசி நான் ரசனையான ஆளாக்கும் என்று காட்டிக் கொள்வது இந்த மாதிரி அலப்பரைகளெல்லாம் எதில் வரும் ? செய்தியை முழுவதும் கூட படிக்காமல் எதுகை மோனையாக நிலைத்தகவல்/ட்விட் இடுவது, பொய்களைப் பரப்புவது, அரசியல் தலைவர்கள், பிரபலங்களை ஒருமையில் பேசுவது, த்தா, ஓத்தா, ங்கொம்மா, ங்கோத்தா, தேவிடியா என்றெல்லாம் கூச்சப்படாமல் எழுதுவது, இப்படியெல்லாம் செய்யும் சமூக வலைத்தள புரட்சியாளர்கள் எப்படி ஊடகங்களை மட்டும் நேர்மையாக இருக்க வேண்டுகிறார்கள்? 

இவர்கள் ஏன் எழுவர் விடுதலை, ரஃபேல் ஊழல், தூத்துக்குடி படுகொலை, குத்கா ஊழல், எடப்பாடி ஊழல் பற்றிப் பேசாமல் ஏன் இதைப் பேசுகிறார்கள் ? எழுவர் விடுதலை, ரஃபேல் ஊழல், தூத்துக்குடி படுகொலை, குத்கா ஊழல், எடப்பாடி ஊழல் போன்ற செய்திகள் மக்களிடமிருந்து திசை மாற்றப்படவில்லையா ? எல்லோரும் ஆயுத பூஜையைக் கிண்டலடித்துக் கொண்டும்,  பட்டேல் சிலையை, அய்யப்பனைக் கிண்டலடித்துக் கொண்டும் இருக்கவில்லையா ?

திரைப்படத்துறையில் இதெல்லாம் சாதாரணம். திரைப்படத்துறையில் இருக்கும் பெண்கள் படுக்கையில் விழுந்தால் மட்டுமே முன்னேற முடியும். எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு இப்போது விளம்பரத்துக்காக கூவுகிறாள்கள்.

திரைப்படத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டால் அதை எதிர்க்க வேண்டுமா இல்லை ஆதரிக்க வேண்டுமா ? அதனால் பாதிக்கப் பட்டவர்கள்தானே அதை எதிர்த்துப் போராட குரல் கொடுக்கவோ முடியும் ? பாலியல் மட்டுல்ல வேறு எந்த புகார் சொன்னாலே சொல்லும் பெண்களுக்கு முதலில் கிடைப்பது வேசிப் பட்டமே. அதிலும் திரைப்படத் துறையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அதில் ஈடுபடும் எல்லாப் பெண்களையுமே வேசிகள் என்றுதான் பெரும்பான்மையினர் நினைக்கின்றனர். எனவே ஒருவர் வேசிப்பட்டம் கிடைக்கும் என்று தெரிந்தும் விளம்பரத்தை விரும்புவாரா ? இல்லை நான் விபச்சாரத்தை எதிர்ப்பதை உயிர் மூச்சாகக் கொண்டவன் என்றால் விபச்சாரிகள் பங்குபெறும் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள். அதை வைத்து பகிரப்படும் கருத்துக்கள், பாடல்கள், மீம்களை புறக்கணியுங்கள். விபச்சாரம் செய்தால்தான் திரையுலகம் அதில்தானே கவுண்டமணி, வடிவேலு எல்லாம் வந்தார்கள். வடிவேலுவை வைத்துத்தானே நாம் மோடியைப் பொளந்து கட்டுகிறோம். 

#Metoo இயக்கம் மேலை நாடுகளில் நடிகைகளால்தான் அறியப்பட்டது. மேலை நாட்டு நடிகைகள் எப்படிப் பட்ட பண்பாடு கொண்டவர்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. ஹாலிவுட் நடிகைகள் மட்டுமல்ல, போர்ன்ஸ்டார்கள் கூட கூறியிருக்கிறார்கள். இங்க இன்னமும் சினிமாக்காரின்னா தேவிடியாளுங்க என்ற கதையைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதாரம் இல்லாமல்தான் சொல்கிறார்கள். இதில் பொய் புகார்களில் ஆண்கள் பழிவாங்கப்படலாம்.

பாலியல் சீண்டல்களை எல்லாம் ஆதாரத்துடன் நிறுவ முடியாது என்பதால்தான் இந்த #Metoo இயக்கமே வருகிறது. எத்தனையோ ஆதாரங்கள் இருந்தும் கொடுங்குற்றவாளிகள் அதிகாரம் மிக்க பதவிகளில் தலைவர்களாக வலம் வரவில்லையா ? ஆம். விரும்பி இசைந்து விட்டு ஆண்களை மாட்டி விடும் வாய்ப்பும் இருக்கிறது. இதில் அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. இதில் மட்டுமல்ல தீண்டாமை வன்கொடுமைச் சட்டம், வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை புகார் என அனைத்திலும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் உண்டு. அதற்காக அச்சட்டங்கள், குற்றங்கள் இல்லை, கூடாது என்று சொல்லலாமா? சிலர் பொய் சொல்லிப் பழி வாங்குவதால் எல்லாரும் அப்படி என்றாகுமா ?

அதிகமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் விளிம்பு நிலைப் பெண்களை விட்டு மேட்டுக்குடி பெண்களுக்குத்தான் #Metoo கைகொடுக்கிறது.

நாங்கள் #Metoo சொல்கின்ற பெண்களை ஆதரிக்க மாட்டோம். #Metoo சொல்லாத பெண்களை ஆதரிப்போம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சிலர் பீட்டா என்றால் என்னவென்றே தெரியாமல், அடிமாடுகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு போகும் படத்தை வைத்துக் கொண்டு இதையெல்லாம் பீட்டா எதிர்க்காமல் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறது என்று கூத்தடித்தனர். பீட்டா ஜல்லிக்கட்டை மட்டுமா எதிர்த்தது ? மாடு மட்டுமல்ல எவ்வித அசைவ உணவுகளையும் எதிர்ப்பவர்கள்தான் பீட்டா இயக்கத்தினர். அதைப்போலவே #Metoo வெறுப்பாளர்களும் வசை பாடுகின்றனர். இது பார்ப்பன மேட்டுக் குடியினரின் பொழுதுபோக்கு. உழைக்கும் பெண்களுக்கு இது ஒத்து வராது என்று தள்ளி விடுகின்றனர். 

ஜாதிவெறியாலோ, மதவெறியாலோ பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாலோ, வெட்டிக் கொல்லப்பட்டாலோ இல்லை தற்கொலை செய்து கொண்டாலோதான் அதை ஒரு குற்றமாகக் கருதி இந்த முற்போக்குவாதிகள் ஆதரிப்பார்கள். நாளும் நடக்கும் சிறிய அளவிலான நிகழ்வுகளை ஒரு பொருட்டாக ஏற்க மாட்டார்கள். இவர்களின் ஆதரவைப் பெற நீங்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் போலும். #Metoo வை ஆதரித்தால் விளிம்பு நிலைப் பெண்கள் பாலியல் கொடுமை செய்யப்பட்டால் வரவேற்கிறோம் என்று பொருளா ? பிரபல/மேட்டுக்குடி பணக்காரப் பெண்களே தங்கள் கொடுமைகளை வெளியே சொல்லும் நிலையே இப்போதுதான் வந்திருக்கிறது. அதற்கே விலைமகள் பட்டம்தான் கிடைக்கிறது. அந்த லட்சணத்தில் இருக்கிறது பாலியல் சமத்துவம். தயாரிப்பாளருடன் படுத்தால்தான் பட வாய்ப்பு என்பதும், மேஸ்திரியுடன் படுத்தால்தான் செங்கல் சுமக்கும் சித்தாளாக வாய்ப்பு என்பது ஒன்றுதான். அதை விட்டு விட்டு #Metoo சொல்பவர் உத்தமியா ? தமிழச்சியா ? தலித் பெண்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தாரா ? தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்தாரா ? ஜப்பானில் அணுகுண்டு வீசியதைக் கண்டித்தாரா என்று அவரது கற்பைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். #Metoo சொல்பவர் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டவர் என்ற "தகுதி"யை மட்டும் கொண்டிருந்தால் போதும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment