மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்யும் நிலையில் கேரளாவில் உள்ள சபரிமலையில் நுழைய இந்துப் பெண்களுக்கு உரிமை உண்டு என்ற நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை இந்துக்களின் எதிரிகள், துரோகிகள் என்று சொல்லப்படுகின்றவர்கள் வரவேற்கின்றனர்.
இந்துப் பெண்கள் இந்துக் கோயிலுக்குள் செல்ல ஒரு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை நியாயமாகப் பார்த்தால் கொண்டாட வேண்டியதுதானே ? மசூதிக்குள் பெண்கள் செல்ல முடியுமா ஆனால் கோயிலுக்குள் இந்துப் பெண்கள் செல்ல முடியும் என்று மார்தட்டுவதை விட்டு விட்டு ஏன் இப்படி எதிர்க்கிறார்கள் என்று புரியலையே ?
முதன் முதலில் உடன்கட்டை ஏற்றும் பழக்கம், விதவைகள் மறுமணம், தேவதாசி முறை ஒழிப்பு தடை செய்யப்படும்போதும் மதம் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றுக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கப்பட்டவைதான்.
நன்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இப்போது இதை எதிர்ப்பவர்கள் இன்னும் சில வருடங்கள் கழித்து சபரிமலை போன்ற கோயில்களில் இந்துப் பெண்கள் வழிபாடு செய்ய முடியும். ஆனால் மசூதிகளில் முஸ்லிம் பெண்கள் தொழுகை நடத்த முடியுமா ? இந்து மதத்தில் இருக்கும் ஜனநாயகம் மற்ற மதத்தில் இல்லை என்று பெருமை பேசுவார்கள். இப்படித்தான் எல்லாக் காலத்திலும் சீர்த்திருத்தவாதிகள், இந்து மத எதிர்ப்பாளர்கள், மனித்நேயர்கள், ஜனநாயகவாதிகள், முற்போக்கு வாதிகளால் போராடிக் கொண்டு வந்த மாற்றங்களையெல்லாம் இந்துமதம் தன்னகத்தே கொண்டுள்ள பெருமையைப் போல் பார்த்தாயா எங்க மதத்தின் ஜனநாயகத்தை என்று சொல்லி நம் முதுகிலேயே குத்துவார்கள்.
மோடியின் ஆட்சி படுதோல்வியடைந்து விட்டது. மோடியின் ஆதரவாளர்களே என்ன சொல்லி ஆதரிப்பது என்று தெரியாமல் சக மோடி ஆதரவாளர்களிடம் கூட மோடியின் மகிமையை விளக்கிச் சொல்லி அதாவது தற்போதைய மொழியில் சொன்னால் முட்டுக் குடுக்க வேண்டிய நிலையில் அதை அவர்களும் நம்பினாலும் நம்ப முடியாத நிலையிலும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விருப்பக் குறியைச் சொடுக்கும் நிலையிலும் வாட்ஸப்பில் பகிரவும் வேண்டிய நிலையிலும் உள்ளனர்.
எனவே இது போன்ற எந்த ஒரு சிறு பிடி கிடைத்தாலும் அதைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி விட்டுத்தான் வேறு வேலையைப் பார்க்க முடிகிறது. ஏனென்றால் அதைத் தவிர அவர்களுக்கு வேறு அரசியல் தெரியாது. தெரிந்தாலும் உண்மையான இந்துக்களின் பிரச்சனைகளுக்காகப் போராட அவர்களும் விரும்புவதில்லை.
சில செய்திகளைத் தொடர்ந்து சொல்வதன் மூலம் அதை உண்மையென நம்ப வைக்கிறார்கள்.
* இந்து மதம் ஆபத்தில் உள்ளது. (எனவே இந்து மத்தைக் காப்பாற்ற பாஜகவை ஆதரிக்க வேண்டும்)
* தீராவிடர்கள், நாசகார கம்யூனிஸ்டுகள், மதமாற்றும் கிறித்தவ மிஷனரிகள், முஸ்லிம் ஜிகாதிகள் ஆகியோர் இந்து மதத்தை அழிக்கிறார்கள்.
* நாட்டின் வளர்ச்சிக்காக போடும் திட்டங்களை சீனாவிடம் பாகிஸ்தானிடம் பணம் வாங்கிக் கொண்டு எதிர்க்கிறார்கள், போராட்டத்தைத் தூண்டுகிறார்கள்.
மதமாற்றம் என்பதினை என்னவோ இந்திய இறையாண்மைக்கே எதிரானது போல் ஏற்றி விடுகிறார்கள்.
ஊடகங்கள் எல்லாம் மோடிக்கு எதிரானவை, கிறித்தவர்கள் வசம் இருக்கின்றன. எல்லாமே இந்துக்களுக்கு எதிராக நடக்கிறது.
இந்துக்கள் இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்களும் கிறித்தவர்களும் எல்லா உரிமைகளையும் சிறுபான்மை என்ற பெயரில் இந்துக்களை அவர்களின் கலாச்சாரத்தை அழிக்கிறார்கள் இந்த நாட்டுக்கே எதிரான செயல்களைச் செய்கின்றனர்.
இவை பற்றிய கருத்துக்களைச் சுற்றித்தான் சாமானியர்களிடம் அவர்களின் அரசியல் கட்டுரைகளைப் பரப்புகிறார்கள். இப்படி இருப்பவர்கள் சபரிமலை தீர்ப்பைக் கண்டால் விடுவார்களா பிடித்துக் கொண்டார்கள். மதவெறியைத் தூண்டுவதைத் தவிர இவர்களுக்கு கவனத்தைப் பெறும் அறிவோ அறமோ இல்லை.
எனவே இந்துக்களின் பாரம்பரிய வழக்கங்களில் நீதிமன்றம் தலையிடலாமா ? முஸ்லிம்களின் மசூதிகளில் பெண்களை அனுமதிக்க நீதி மன்றம் தீர்ப்பு வழங்குமா என்று எதுகை மோனையாக கேட்டு அனத்துகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர்தான் முத்தலாக் தீர்ப்பு கூட வந்தது நீதிமன்றம்தான் வழங்கியது. முஸ்லிம்கள் ஒன்றும் இப்படிக் குதிக்கவில்லையே. இதெல்லாம் மக்களுக்கு நினைவிருக்காது என்ற துணிச்சலில்தான் இவர்கள் இப்படி முஸ்லிம்களுக்கு தீர்ப்பு சொல்ல முடியுமா கிறித்தவர்களுக்குச் சொல்ல முடியுமா என்று கத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பங்கெடுத்த ஜல்லிக் கட்டு ஆதரவுப் போராட்டத்தைக் கூட இவர்களால் நேர்மையாக ஆதரிக்க முடியவில்லை. எல்லாப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் திமுக அதிமுக கட்சியை வெறுப்பவர்களைக் கூட இவர்களால் ஆதரவாளர்களாக வெல்ல முடியாமல் மக்களிடமிருந்து அவர்களது கொள்கைகளைப் போலவே அந்நியப் பட்டு நிற்கின்றனர்