பிரபாகரன், பாலச்சந்திரன் குறித்த காணொளிகள் வெளியிடப்படுமா ?

பிரபாகரனும் அவரது குடும்ப உறுப்பினர் உட்பட அனைத்து சரணடைந்த புலிகளின் தலைவர்களும் சித்ரவதையின் பின்னர்தான் கொல்லப்பட்டனர் என்பது ஓரளவுக்கு அனைவருமே ஊகித்துணர முடியும். தற்போது செய்திகள் கிளப்பப்படுவதைப் பார்த்தால் வீடியோக்கள் நிறைய சேனல் 4 இடம் இருப்பது போல் தெரிகிறது. அதற்கு வெள்ளோட்டமாக இசைப்பிரியாவின் உடலை சற்றே அருகில் இருந்து படம் பிடித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது ஏறக்குறைய இதற்கு முன்பு வெளியிடப்பட்ட புகைப்படங்களை விடவும் மிகவும் அருகில் காணக்கூடியதாகவும் கொலையின் கொடூரத்தை காட்டுவதாகவும் இருந்தது. மேலும் அவர்களிடமுள்ள காணொளிகளில் பிரபாகரன் உள்ள காட்சிகளும் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதை நினைக்கையிலேயே எனக்கு ஈரக்குலை நடுங்குகிறது. கடாஃபி கொல்லப்படுவதை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு வேளை வெளிவரும் பட்சத்தில் அது முன்னெப்போதுமில்லாத வகையில் கொடூரமாகவே இருக்கும். இதற்கு முன் வெளியிடப்பட்டிருந்த புலிகள் தளபதி ரமேஷ் விசாரணை செய்யப்படும் காணொளியும் குறிப்பிட்ட செய்திகளைக் கொண்டு வெட்டப்பட்டு சில பகுதிகள் மட்டுமே வெளியிடப்பட்டன. அது போலவே இம்முறையும் செய்யக்கூடும். எப்படியென்றாலும் இதயத்தைத் திடப்படுத்திக் கொள்ள இயலவில்லை. இதை வைத்து புதிய போர்க்குற்றம் வீடியோ அதிர்ச்சி பரபரப்பு கொடூரம் என்று தலைப்பில் போட்டு வணிகமாக்கவும் சிலர் தயங்கவில்லை. 

 பல வீடியோக்களும், புகைப்படங்களும்  வந்து கொண்டேயிருக்கின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள பாலச்சந்திரன் புகைப்படம் ஏற்கெனவே இரு ஆண்டுகளுக்கு முன்பே வெளியானதுதான். தமிழரங்கம் இணையத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பே போர் முடிந்த சில நாட்களிலேயே வெளியிடப்பட்டது. மேலும் பிரபாகரன் படுகொலையைப் பற்றி எழுதப்பட்டிருந்த கட்டுரையைக் காட்டி செய்திகளில் ஜெயா தொலைக்காட்சி மட்டுமே ஒளிபரப்பியது. மற்றவை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் அல்லது மர்மம் நிலவுகிறது என்றே செய்தி வெளியிட்டன. பிரபாகரன் கொலை செய்யப்பட்டபின் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வந்து விட்டன. பிரபாகரன் நிர்வாணப்படுத்தப்பட்டதும், சித்ரவதையின் பின்னர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டதும் இதுவரை கிடைத்த புகைப்படங்களிலேயே அறியலாம். சரணடைந்த புலிகள் விசாரிக்கப்படும்,  படுகொலை செய்யப்படும் காட்சிகள் நிச்சயமாக வீடியோவும் எடுக்கப்பட்டிருக்கும். அது நிச்சயம் பல பேரின் கைகளில் இல்லாமல் இருக்காது. அது வெளிவரவும் சாத்தியமில்லை. அது அவர்களுக்கு  அவர்களே தோண்டும் சவக்குழியாகும்.

இது குறித்து நான் எழுதிய கட்டுரையும் அதன் இறுதியில் பிரபாகரன் உடல் சோதனை காணொளியும் உள்ளது.

பிரபாகரன் படுகொலை பாலச்சந்திரன் படுகொலை குறித்து தமிழரங்கம் தளத்தில் வெளியான கட்டுரைகள்.


ஆனால் சேனல் 4 இதைத் தற்போது வெளியிடப்படவேண்டிய நோக்கமென்ன ? இலங்கை அரசுக்கெதிராக மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் தமிழ் உலகின் கவனத்தைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது. இதற்கும் முன்பு சில போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. 10 பேர்கள் கைகள் கட்டப்பட்டு கீழே உட்கார வைக்கப்பட்டிருந்தனர். இசைப்பிரியா உட்பட இன்னும் பலர் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தனர் இவை வெளியிடப்பட்டது எப்போது தெரியுமா மகிந்த ஏதோ உரை நிகழ்த்துவதற்காக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக்த்திற்கு வரவேற்கப்பட்டிருந்தார். அங்கே இந்த போர்க்குற்றக் காட்சிகளின் வெளியிட்டதன் விளைவாக தமிழர்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பில் அங்கே மகிந்தனுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

இதன் விளைவாக அவர் தனது உரையை நிகழ்த்தாமலே வெளியேற நேர்ந்தது. அந்த ஆத்திரத்தில் நாடு திரும்பிய மகிந்த ஈழத்திலிருந்த தமிழ் மக்களைக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்க்கெதிராக ஜனாதிபதியை அவமதித்ததற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வைத்து தமது அரிப்பைத் தீர்த்துக் கொண்டார். இப்படி மகிந்தாவின் இங்கிலாந்து வருகையின் போதே சேனல் 4 அந்த போர்க்குற்றக் காட்சிகளை வெளியிட்டு எதிர்ப்பைத் தூண்டியது. தற்போது அதே போல் இலங்கைக்கெதிராக மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுக்கத் துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே இந்த போர்க்குற்ற ஆவணங்களை வெளியிடக்கூடும் என்று தோன்றுகிறது. மேலும் இந்த தீர்மானத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை. இலங்கை தண்டிக்கப்படும் பட்சத்தில் போரினை தயாரித்து வழங்கிய இந்தியாவும் இதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக போர்க்குற்றம், மனித உரிமை நாடகமாடும் மேற்குலகும் அமெரிக்காவும் அதைத்தான் ஆஃப்கானிலும், ஈராக்கிலும், ஈரானிலும் செய்து வருகின்றன. மேலும் ஈழப்போருக்கு 200 கோடிகளை இங்கிலாந்து வழங்கியதும் எப்போதோ வெளிவந்த உண்மை. போரின்போது புலிகள் தொடர்பான உளவுத் தகவல்களை அமெரிக்கா வழங்கியதும் இரகசியமில்லை. புலிகளுக்கே இது தெரிந்திருந்தது. புலிகளை அழிக்க வேண்டுமென்பது அனைத்து நாடுகளின் தேவையாக இருந்ததுதான். தற்போது இலங்கையின் மீதான ஆதிக்கம் செய்யவதற்கு ஏற்பட்ட பங்காளிச் சண்டையில் மேற்குலகும், அமெரிக்காவும் ஒரு புறமும் இந்தியா, சீனா இரஷ்யா, இரான் போன்ற நாடுகளும் எதிரெதிர் நிலையில் நிற்கின்றன. போர்க்குற்றம் மறுவாழ்வு என்ற தமிழர்க்கான நீதி இதில் சிக்கி சின்னாபின்னமாகிறது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்