ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா செல்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை நாகூரில் இருந்து எர்ணாகுளம் சென்ற ரயிலில், திருச்சியில் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் என்ஜினில் இருந்து 4வது பெட்டியில் (முன்பதிவு செய்யப்படாத பெட்டி) ஏறினர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு மாணவிகளிடம் வேறு ஒரு கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டனர். மாணவிகள் அவர்களைத் திட்டவே, முதியவர் ஒருவர் மாணவிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அவரை, "வேலையைப் பார்த்துக் கொண்டு மரியாதையாக ஊர் போய்ச் சேர்; இல்லாவிட்டால் ரயிலில் இருந்து வெளியே தூக்கி வீசிவிடுவோம்' என்று மிரட்யது அந்தக் கும்பல். சக பயணிகளில் ஒருவர் எண் 100க்கு தொடர்பு கொண்டு நிலைமையைக் கூறினார். "இப்பகுதி எங்கள் எல்லைக்குள் வராது; ஆனால் ரயில் கரூர் ரயில் நிலையத்தை அடைந்தவுடன் ஆர்பிஎப் போலீஸார் வருவார்கள்' என்று பதில் அளிக்கப்பட்டது. அடுத்து ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களிலும் ஆர்பிஎப் போலீஸாரை எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. கோவையில் உள்ள ஆர்பிஎப், மாநகர போலீஸாரைத் தொடர்பு கொண்டும் பயனில்லை. ஒவ்வொரு ரயில்நிலையத்திலும், கூட்ட நெரிசல் மற்றும் கடுமையான மழையைக் காரணம் காட்டிய போலீஸார், இறுதிவரை வரவே இல்லை. ÷ரயிலில் சிலர் வம்பில் ஈடுபடுவது குறித்து தகவல் தெரிவித்தும் ரயில்வே போலீஸார் உதவிக்கு வராதது, பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைவிடக் கொடுமை, வம்பு செய்த மாணவர்களை, ஒரேயொரு முதியவர் தவிர வேறு யாரும் தட்டிக் கேட்காததுதான். ரயில் முழுவதும் இருந்த பயணிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இந்த அநாகரிகம் நிகழ்ந்திருக்காது. இதைச் செய்யத் தவறிய மக்களாலும், தக்க நேரத்தில் உதவிக்கு வராத போலீஸாலும் என்ன பயன்?
மேற்படிச் செய்தியில் காவல்துறை வரவில்லை என்பதில் எனக்கு எவ்வித அதிர்ச்சியும் சினமும் இல்லை. எனக்குக் கொலைவெறியை வரவைப்பது கல்லூரி மாணவர்கள் என்ற போர்வையில் கொட்டமடிக்கும் இந்தப் பொறுக்கிகள்தான். நான் கல்லூரியில் படித்த கால்த்திலிருந்தே இந்தக் கருமங்களைக் கண்டும் கேட்டும் வந்தாலும் ஒவ்வொரு முறையும் ஆத்திரம் அடக்க முடியாமல் வருகிறது.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளின் குறிப்பிடத்தக்க அளவில் கேரள மாணவர்கள் உள்ளனர். பொறியியல் மட்டுமின்றி கலை அறிவியல் கல்லூரிகளின் கல்லா நிரம்புவதிலும் இவர்களின் பங்குள்ளது. கேரள கல்லூரிகளின் தரமின்மை, வசதிகளற்ற தன்மை, குறைந்த எண்ணிக்கையின் காரணமாகவும் பெரும்பான்மையான மலையாளிகள் தமிழ்நாட்டில் படிக்கவே விரும்புகின்றனர். கோவை மட்டுமல்லாது, ஈரோடு, நாமக்கல், சேலம் என பல மாவட்டங்களிலுமுள்ள கல்லூரிகளிலும் உள்ளனர். மாத இறுதியில் கல்லூரி விடுமுறையின்போது, சிறப்பு விடுமுறை நாட்களின் போதும், பெரும்பான்மையான கல்லூரிகளில் ஒரே சமயத்தில் விடுமுறையளிக்கப் படுவதால் இச்சமயங்களில் கேரள மாணவர்களால் இரயில் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. பேருந்தில் செல்ல ஆகும் செலவும் காலமும் அதிகமென்பதால் இரயிலில் செல்லவே பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். இருக்கும் விடுமுறையில் பாதி நாட்கள் வருவதற்கும் போவதற்குமே கழிந்துவிடும் என்பதாலும்தான்.
இதுதான் நம்மாளுங்களுக்குக் கொண்டாட்டம்!. இதற்கென்றே ..........யைக் கையில் பிடித்துக் கொண்டு அலையும் தெருபொறுக்கிக் கும்பல் தன் வேலையில் களமிறங்கி விடுவார்கள். நான் இதை(பெண்கள் கூட்டமாக இருக்கும் இது போன்ற இடங்களில் குறுக்கே புகுந்து செல்வது, முடிந்த வரை எவ்வளவு தடவ முடியுமோ அவ்வளவும் செய்து விடுவது, எங்கெங்கெல்லாம் கைவைக்க முடியுமோ அங்கெல்லாம் கை வைத்து விடுவது) ஈரோட்டில் கண்டிருக்கிறேன். இதுவே கோவை, சேலம் இரயில் நிலையங்களிலும் நடக்கக் கூடும். நான் படித்த காலத்தில் ஒரு முறை என் நண்பனின் (கேரளாவைச் சேர்ந்த)தோழியை ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து இரயிலில் ஏற்றி விடச் சென்றிருந்தேன். உடன் வேறு நண்பர்களும் இருந்தனர். வண்டி நடு இரவில் வரும்(சரியான நேரம் நினைவில்லை) அதுவரையில் காத்திருக்க வேண்டும். அந்த வட்டாரத்திலிருந்த பல கல்லுரியிருந்தும் பல கேரளாவைச் சேர்ந்த மாணவ, மாணவியர் காத்துக் கிடந்தனர்.
இப்போது நான் கூறவிருப்பது தமிழ்நாட்டில் கல்வி பயில வந்த கேரள மாணவர்களைப் பற்றியது. இது போன்ற ஊருக்குப் போகும் நாட்களில் தலைவர்கள் அனைவரும் சரக்கில்தான் இருப்பார்கள்.10 பேர்கள் கொண்ட கூட்டம் கூட்டமாக அலைவார்கள். மார்கழி மாததில் சண்டையிடும் நாய்களுக்குச் சற்றும் குறைவில்லாமல் குழுச் சண்டையில் ஈடுபடுவார்கள். இவை பல வகையாக நடக்கும். ஒரே கல்லூரியின் இரு குழுக்கள், அல்லது பொறியியல், கலை அறிவியல் பிரிவுகளுக்கிடையேயான சண்டை, வெவ்வேறு கல்லூரிக் குழுக்களுக்கிடையேயான சண்டை என பல வகைப்படும். இது சில நேரம் குழுச்சண்டையாக இராமல் எவனோ ஒருவனை மட்டும் சுற்றி வளைத்து அடிப்பது என்பதாகவும் இருக்கும். இது போன்ற ஒரு காட்சியை ஒரு கும்பல் அரங்கேற்றிக் கொண்டிருந்தது. சுற்றியிருந்தவர்க்ள் அவர்களை வசைபாடிக் கொண்டிருந்தனர்.
இரயில் வந்து விட்டது. அனவரும் இடம் பிடிப்பதற்காக மொய்த்துக்கொண்டு நின்றனர். நானும் ஒரு பையை வைத்துக் கொண்டு நின்றேன். எனக்கு அடுத்த பெட்டியில் இடம் பிடிக்க பல மாணவிகள் முண்டியத்துக் கொண்டு நின்றிருந்தார்க்ள். அப்போது எனது கல்லூரியில் படிக்கும் ஒருவன் வந்தான். அவன் எனக்கு ஜூனியர். வந்த வேகத்தில் அந்தப் பெண்களின் பின்னால் போனவன் திடீரென ஒர் பெண்ணின் பின்புறத்தைப் பிடித்து நசுக்கினான். பின்னர் சாதாரணமாக என்னிடம் வந்து "ஹாய் அண்ணா" என்று சொல்லிவிட்டுக் கடந்து சென்று விட்டான். (அவன் முதல் வருட மாணவன்) எனக்கு மலத்தின் மேல் நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பின்பு திரும்பி வரும்போது ஒரு நண்பனிடம் கேட்டேன்.
"என்ரா இப்பிடியெல்லாம் பண்ரானுங்க? என்றேன்.
"சரக்குடா! ஒண்ணுமே தெரியாது." என்றான் அவன்.
இன்னொரு நண்பன்(மலையாளி) ஒருமுறை இது பற்றிக் கூறிக் கொண்டிருந்தான். இது போன்று செய்வதை பெண்கள் ரசிப்பார்கள், இதற்காக ஏங்குவாரகள் (சுருக்கமாக "அரிப்பெடுத்து அலைவார்கள்") என்றான். இததனைக்கும் அவன் அது போன்ற காலித்தனத்தில் ஈடுபட்டவனல்ல. பின்னாட்களில் பல நண்பர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து வேதனைப் பட்டேன். பலர் இதனை சாதரணமாகவே கூறினர். இதற்காக இக்கேவலத்தைச் செய்யாதவர்களிடம், செய்பவர்கள் குறித்து எந்தவொரு அருவருப்பும் சினமும் அவர்களிடம் இல்லை.
பெண்கள் இதற்காக ஏங்குவார்கள் என்பதெல்லாம் பச்சையான வக்கிரம். சரக்கடித்தால் எதுவும் தெரியாது என்பதும் அயோக்கியத்தனம். தண்ணியடித்தவன் எப்பொதும் தவறான பேருந்தில் ஏறியதும் இல்லை. சகோதரியின் முந்தானையைப் பிடித்ததும் இல்லை என்கையில் இது மட்டும் சரியாக நடக்குமா?. இது போன்ற பெண்கள் மீதான் பாலியல் வன்முறைகள் ஆண்களின் இயல்பான கிளுகிளுப்பான சமாச்சாரம் என்ற பொதுவான கருத்தாகவே உள்ளது. இது போன்ற பொறுக்கித்தனங்கள் செய்வது நாயகத்தனமெனச் சித்தரித்த பாய்ஸ், 7G ரெயின்போ காலனி போன்ற திரைப்படங்கள் உதாரணம். இதை செய்பவர்கள் யாரும் பரம்பரைப் பொறுக்கிகள் அல்ல. இலட்சங்களைக் கட்டி கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவரகள். சிலர் இருபது வயது கூட நிரம்பாதவர்கள். கல்லூரிக்கு வரும்போது பால்மணம் மாறாது வந்தவர்களில் சிலர் நாளாக மது, புகை, போதை உட்பட அனைத்துப் பழக்கங்களுக்கும் ஆளாவது போலவே இதையும் செய்கின்றனர்.இன்னும் சில வீரர்கள் காதலிப்பவர்களாகவும் இருந்தனர்.
இது மட்டுமின்றி பெண்களின் அனுமதியின்றி அவர்கள் அறியாத வகையில் படமெடுத்தல், தம்பதியினரின் உடலுறவுக் காட்சியினை உளவு கேமராக்கள் மூலம் படம் பிடித்து இணையத்தில் உலவ விடுவது போலவே இது மிகவும் தண்டனைக்குரிய குற்றமாகும். தனக்கு தெரியாத எந்தவொரு பெண்ணையும் பாலியல் ரீதியாக பார்க்கும் ஆணாதிக்க வக்கிரமே இதன் மூல காரணம். இந்த நாதாரிகளையெல்லாம் தூக்கிப் போட்டு கும்ம வேண்டுமென்பதே என் விருப்பம்.
Download As PDF