ப்ரேமம் பிரமாதமா ?

ப்ரேமம் படம் எல்லாரும் புகழும் படமாக இருக்கிறது. இது வரை மலையாளப்படங்கள் இந்தளவுக்கு நம்மாட்களிடம் எட்டியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதிகமாக அறியப்பட்ட படங்கள் என்றால் அது மறு உருவாக்கப் படங்களே. அதுவும் தமிழில் அது எடுக்கப்படுவதால் மட்டுமே அந்தப் பெயரைத் தெரிந்து கொண்டிருப்பார்கள். இவையில்லாமல் தமிழில் மிகக்குறைந்த அளவான ரசிகர்களே மலையாளப்படத்தை விரும்பிப் பார்க்கின்றனர். அவை ஆஹா ஓஹோ என்ற ஆர்ப்பாட்டமின்றி, எதார்த்தமாகவும், எளிமையாகவும், மென்மையாகவும் இருப்பதால், அதைப் பார்க்கும் பொறுமை தமிழர்களுக்கு இல்லை. அதே நேரம் சிறந்த மலையாளப்படங்களை ஏறக்குறைய எல்லாப் படங்களுமே உரிய அங்கீரத்தைப் பெற்று விடுகின்றன. அதைத் தந்து விடுகின்ற மலையாள ரசிகர்கள் தமிழ்ப்படங்களை பார்க்கின்றனர், தமிழ்ப்படங்களுக்கான சந்தையாகவும் இருக்கின்றனர் என்பது முரண்நகை. 


சமீபத்தில் திருஷ்யம் என்ற மலையாளப்படம் அதிகமான தமிழ்நாட்டு ரசிகர்கள் பார்த்திருக்கக் கூடும் என்று கருதுகின்றேன். ஆனால் அதைவிட பலரும் கொண்டாடும் படமாக இருக்கிறது ப்ரேமம். நிறையப் பேர் பேசுவதயும், சொல்வதையும் கேட்டேன். பாடலைக் கேட்பதும், முணுமுணுப்பதுமாகவும் இருந்தனர். அடடா தமிழர்களின் ரசனையும், தரமும் இவ்வளவு மெருகேறிவிட்டதா என்றும் வியந்தேன். என்ன எல்லாரும் புகழும் அளவுக்கு அந்தப் படம் இருக்கிறதா என்று, அந்தப் படம் பார்க்க வேண்டிய பட்டியலில் இணைந்து விட்டது. இது போலவே செல்லுலாய்ட், உஸ்தாத் ஹோட்டல் போன்ற சில புகழ் பெற்ற படங்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன். இது வரை பார்ப்பதற்கான பொறுமை எனக்கு வரவில்லை. ஆனால், ப்ரேமம் படம் ஒரு நண்பரின் மூலமாகக் கிடைக்கப் பெற்றதும், அதைப் பார்த்தும் விட்டேன். இதை உடனே பார்த்து விட இன்னொரு காரணம் இது தமிழிலும் மறு உருவாக்கம் செய்யப்போகிறார்களென்றும், அதில் தனுஷ் நடிக்கிறார் என்றதும் அந்தக் கொடுமையை அனுபவிக்கும் வாய்ப்பு இருப்பதாலும் அதைத் தவிர்க்க வேண்டியும்தான். 

எல்லாரும் நன்றாக இருக்கிறதாகக் கூறி வந்தாலும் ஒரே ஒரு தோழி மட்டும் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். பரவாயில்லையே பிடிக்காத ஒருவரும் இருக்கிறாரே என்று தோன்றியது. படம் பார்த்தேன். எனக்கு அவ்வளவாக மனதைத் தொடவில்லை. படம் நன்றாக இல்லை என்று சொல்ல மாட்டேன். பெரும்பான்மையினருக்கு மிகவும் பிடிக்கவும் கூடும். ஆனால் என்னைப் போன்ற சிலருக்குப் பிடிக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. எனக்கு அவ்வளவாகப் பிடிக்காமல் போனதன் காரணம் என்ன ? ஒரு படம் மிகவும் சிறந்த கதை, திரைக்கதை, வசனங்களால் நிரப்பப்பட்டிருக்கலாம். ஆனால் கதை, அதிலிருக்கும் கதை மாந்தர்கள், அவர்களை சித்தரித்த விதம் போன்ற சில காரணங்களால்தான் ஒரு படம் பிடித்து விடும் படம் மிகவும் மெதுவாக நகர்ந்தாலும், பொறுமையை சோதித்தாலும் கூட. ஆனால் எல்லாமே சிறப்பாக இருந்தாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் கூட நமக்குப் பிடிக்காமல் போகும். தோல்வியடைந்த உத்தம வில்லன் படம் கமல் ரசிகர்களில் ஒரு தரப்பினரால் மிகவும் ரசிக்கப்பட்டது. பாலா படங்கள் என்றால் ஒரு சிலர் வெறுப்பது மாதிரி உதாரணம் சொல்லலாம்.

சரி ப்ரேமம் படம் எதைப் பற்றியது. ஒரு இளைஞனின் மூன்று பருவங்களில் வந்த காதல்கள் பற்றியது.  ஜோசப் என்ற ஆணின் வாழ்வில் வரும் காதல்- அவனால காதலிக்கப்படுவதாக வருகின்ற மேரி, மலர் மற்றும் செலின் ஆகிய மூன்று பெண்கள். அவன் பள்ளி மாணவனாக இருக்கும் போதும், கல்லூரியில் இருக்கும் போதும், பின்பு முப்பது வயதில் பணியிலிருக்கும்போதும் வரும் காதல், ஈர்ப்பு பற்றிய கதையை மிகவும் சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள். மலையாளத்தின் சிறந்த இளம் நடிகரான நிவின் பாலிதான் நாயகன். இந்த மூன்று பருவக் கதை என்றாலே நமக்கு ஆட்டொகிராஃப் நினைவுக்கு வரும். இன்னும் பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. அட்டக் கத்தி படம் போலவும் இருந்ததாக சிலர் கூறினார்கள். நான் அந்தப் படம் பார்க்கவில்லை. 

மூன்று பருவக் காதல் கதையில் மூன்று அழகான பெண்கள் வருகின்றார்கள். இது போதாதா நம் இளைஞர்களுக்கு நடக்கறத அப்படியே காட்டிருக்காங்கடா என்று உருகுகிறார்கள். அதில் அவன் கல்லூரிப் பருவக் காதலியாக வருகிறவர் ஒரு தமிழ்ப் பெண் (படத்திலும் தமிழ்ப்பெண்ணாகவே). படத்தில் அவரது பெயர் மலர். நம் தமிழ்நாட்டு விடலைகள், வாலிபங்கள் ப்ரேமம் படத்தைக் கொண்டாடுவதற்கும், மலர் மிஸ், மலர் மிஸ் என்று கசிந்துருகுவதற்கும், மலரே நின்னைக் காணாதிருந்நால் பாடலை முதல் வரியை மட்டும் முக்கி முக்கி முணுமுணுப்பதற்கும், திரும்பத் திரும்ப படத்தை பார்த்துத் தீர்ப்பதற்கும் காரணம் மலர் ஆக வரும் சாய் பல்லவிதான் காரணம். சாய் பல்லவியின் இயல்பான நடிப்பும், நடனமும் அற்புதம். இந்தக் கல்லூரிக் காதல் பருவக் காட்சிகள், மலரை மயமாகக் கொண்ட காட்சிகளில் தமிழில்தான் வசனம் வருகிறது. அது போக இரண்டு தமிழ்ப்பாடல்கள் இருக்கின்றன. இதெல்லாம் சேர்ந்து தமிழ் ரசிகர்களிடம் இந்தப்படத்தை ரசிக்க வைத்திருக்கிறது. 

இது வரை மலையாள நடிகைகளே கனவுக் கன்னிகளாக இருக்கின்றார்கள் தமிழ்நாட்டில். பெரும்பான்மை நடிகைகளாவும், கதாநாயகிகளாகவும் இருப்பவர்கள் மலையாளிகளே. போதாக்குறைக்கு நடிகர்களும் ஒருபாடு மலையாளிகளே. இப்படி இருக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தமிழ்ப்படத்தில் நடிகையாக வெற்றி பெறுவதே நடக்காது. இந்நிலையில் மலையாளப்படத்தில் நடித்து மலையாளிகளை மலரே மலரே என்று ஏங்க வைத்த இயக்குநருக்கு நன்றி. இதே சாய் பல்லவி தமிழில் நடித்திருந்தால் கதாநாயகனுக்கு தங்கையாகவோ, இரண்டாவது கதாநாயகியாகவோ நடித்து நாசமாகப் போயிருப்பார். மலையாளப் படத்தில் நடித்ததால் சொல்லிக் கொள்ளும்படி ஒரு படம் கிடைத்தது. இதற்கு மகிழ்கிறேன். 

படத்தின் கதை 2002- இல் பள்ளிப்படிப்பும் 2005 - இல் கல்லூரிப் படிப்பும் முடித்த ஒரு இளைஞனின் கதை. அதாவது பத்து/15 வருடங்களுக்கு முன்னர் நடந்ததிலிருந்து காட்டுகிறார்கள். பள்ளிப்பருவக் கதையில் வரும் பள்ளி மாணவி மேரி. புட்டுக் கன்னமும், கேரளத்திற்கே உரித்தான பரந்த கருங்கூந்தலும் இவரது அழகின் சிறப்பம்சம். அவளைக் காதலிக்கும் பத்துக்கணக்கான மாணவர்கள். அதில் ஒருவனாக நம் நாயகன் ஜோசப். அந்தக் காதல் புட்டுக் கொள்கிறது. இந்தக் காட்சிகள் அழகான நகைச்சுவை. மலையாளம் தெரிந்தால் வேகமாக பேசிச் செல்லும் நகைச்சுவை நறுக்குகளைப் புரிந்து அள்ளிப் பருகலாம் சிரித்து மாயலாம். பச்சை நிற பின்புலமும், பட்டாம் பூச்சிகளும் கண்களுக்குத் தெவிட்டாத இன்பம், இசை செவிக்கு இன்பம். 

அடுத்து கல்லூரிக் காதல் காட்சிகள், மலரின் வருகை, காதல், இனிய பாடல், கல்லூரிச் சண்டைகள், படத்தின் மிகச்சிறந்த காதல் காட்சிகள், பாடல்கள், நகைச்சுவைக்காட்சிகள் இதில் வருகின்றன. இதில் எனக்குப் பிடித்த ஒரு கதாபாத்திரம், விமல் சார்- ஆக வரும் கல்லூரி விரிவுரையாளர். காஞ்சனா - 2 கோவை சரளாவுக்குப்பிறகு என்னைத் தொண்டை வலிக்கச் சிரிக்க வைத்தவர் இவரே. இங்கே முற்றிலும் சாய் பல்லவியின் ஆதிக்கம். இவர் மிகவும் சிறிய பெண்ணாக இருக்கிறார். இவரை பள்ளி மாணவியாக நடிக்க வைத்திருக்கலாமோ என்ற உலக யோசனையும் தோன்றியது. முகப்பருவும் சிரிப்பும் இவரது சிறப்பு. நடிப்போ அதனினும் சிறப்பு. 

விமல் சார்
ஒரு பெண் எப்போது அழகாக இருப்பாள் ?. காலையில் குளித்து விட்டு கோயிலுக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு, பேருந்துக்குக் காத்திருக்கும்போதோ, அல்லது பணியிடத்துக்குச் செல்லும் போதுதான். இல்லையென்றால் ஒப்பனையில்லாத மற்ற சராசரி நாட்களிலும்தானே. ஒரு பெண் எப்போது அழகாக இருக்கமாட்டாள் என்றால் அவளது திருமணத்தின் போது போடப்படும் ஒப்பனையினால்தான். பெண்களை அவர்களாகவே காட்டினால்தான் எவ்வளவு அழகு. கிறுக்குகளாகவும், அசடுகளாகவும், "ஹலோ" என்ற வசனத்தை எல்லாப் படங்களிலும் பேசும், சற்றும் பொருந்தாத நவீன உடைகளும், அவிழ்த்து விட்ட கூந்தலை தேவையே இல்லாமல் காதோரம் ஒதுக்கி விட்டுக் கொண்டு பேசும் தமிழ்ப்பட தவளைகள் நினைவுக்கு வருகிறார்கள். அதனால் மலையாளப் படத்தில் வரும் பெண்கள் இயல்பாக அழகாக இருக்கிறார்கள். ப்ரேமத்தின் மலரும் அப்படியே. 

அடுத்ததாக 30 வயதான ஜோசப் ஒரு கேக் கடையில் வேலை செய்கிறான். அங்கே வரும் ஒரு பெண்ணுடன் ஏற்படும் நட்பு, ஈர்ப்பு. பின்பு அந்த உறவும் உடையும் நிலையில் இறுதியில் அவன் யாரை மணக்கிறான் என்பதெல்லாம் சுவையான திருப்பங்கள். இந்த மூன்று பருவக் காதல்கள்தான் ப்ரேமம்.

இந்தப் படம் எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்று சொல்கிறேன். சில வருடங்களாகத் தமிழ்ப்படங்களில் முகச்சவரம் கூட செய்யாமல் இருக்கும் பொறுக்கிகளையே கதாநாயகனாகக் காட்டுகிறார்கள். அவனைக் காதலிப்பதற்கென்றே கதாநாயகி என்ற ஒரு பாத்திரம் வருகிறது. அடுத்த சீர்கேடாக தொடர்ந்து குடிக்கும் காட்சிகளும், சாராயக்கடையில் போதையைப் போற்றிப் பாடும் குத்துப்பாடல்களும் இருக்கின்றன. அடுத்ததாக எந்தவொரு அடிப்படையும் இல்லாம பெண்களை விமர்சித்துப் பாடப்படும் காதல் தோல்விப் பாடல்கள். இவையெல்லாம் என்னால் அறவே ஏற்றுக்கொள்ளாத விடயங்கள் இவை மூன்றுமே ப்ரேமம் படத்திலிருக்கின்றன. 

கல்லூரி விடுதியில்/ நண்பர்களது அறையில் எப்போதும் குடித்துக் கொண்டும் ஊதிக் கொண்டும் இருக்கிறார்கள். இடையிடையே மாணவர்கள் குழுச்சண்டையிலும் (Cangwar) ஈடுபடுகிறார்கள். அது முறுக்கேற்றும் பின்னணிப் பாடலுடன் நாயகத்தனமாகக் காட்டப்படுகிறது. ரசிகர்கள் பூரிக்கிறார்கள். முதல் வருட இளைய மாணவர்கள் கல்லூரிக்கு முதல்நாளில் வரும்போது பகடி வதை(Ragging) செய்கிறார்கள். நாயகனே இவையனைத்தையும் முன்னின்று செய்கிறான். அவனுக்கு மலரின் அறிமுகமே இந்தப் பகடி வதையின் போதுதான் நிகழ்கிறது. போதாக்குறைக்கு வகுப்பிலேயே குடித்து விட்டு வந்தமர்கிறார்கள். மிகவும் தெளிவானவராகவும், பக்குவமானவராகக் காட்டப்படும் மலர் இந்தப் பொறுக்கியிடம் காரணமே இல்லாமல் காதல் வயப்படுகிறார். அதுவும் குடிபோதையில் "நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்" என்று சொல்லிவிட்டு விழுந்து விடுகிறான். அவ்வளவுதான் மலருக்கு மலர்கிறது காதல். இதைத்தான் என்னால் ஏற்க முடியவில்லை. ஒரு மலையாளப்படம் தமிழ்ப்படத்தளவுக்கு தாழ்ந்து விட்டதா ? 
பொறுக்கித்தனம் ரசனைக்குரியதல்ல
எப்படி மாணவர்களுக்கு இளைஞர்களுக்கும் அந்த வயதில் பீடி, சிகரெட், சரக்கு, கஞ்சா பழக்கங்கள், முரட்டுத்தனம் போன்றவை நாயகத்தனமாக இருக்கிறதோ, அது போலவே காதலும் இருக்கிறது. அது இயல்பான காதலாக இல்லை, ஒரு பெண்ணை கரெக்ட் செய்யும் வீரமாகவே செய்கிறார்கள். இப்படித்தான் இந்தப் படத்திலும் காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் காட்டப்படும் ஜோசப்பின் வயதில்தான் நானும் பள்ளி, கல்லூரி படித்தேன். என்னுடன் படித்த நண்பர்களை இந்தப் படம் நினைவூட்டியது. அவர்களும் இவர்களைப் போலத்தான் திரிந்தார்கள். அதையெல்லாம் இனிய போழுதுபோக்காக என்னால் கருத முடியவில்லை. தாங்கமாட்டாத எரிச்சலுடன்தான் அவர்களுடனெல்லாம் கழிக்க வேண்டி வந்தது. அதையெல்லாம் படத்தில் காட்டினாலும் எனக்குப் பிடிப்பதில்லை. மற்றபடிக்கு படம் குப்பை என்றெல்லாம் சொல்ல வில்லை. எனக்கு இது மாதிரியான காட்சியமைப்புகளில் உடன்பாடில்லை. அதை ரசிக்கும் மனநிலை எனக்கு இல்லை. நாயகன் என்றால் என்ன செய்தாலும் சரியாகாது. என்னுடைய உறுத்தல் இது மட்டுமே. மற்றபடிக்கு படம் எல்லோரும் ரசிக்கும்படிதான் இருக்கிறது. 

இந்தப் படத்தை தமிழில்/தெலுங்கில் எடுக்கக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில், மீம் (meme) போராளிகள் கூவி வருகின்றனர். மலையாளப்படம் தமிழிலோ அல்லது தெலுங்கிலோ எடுத்தால் அதைக் குதறிக் கொன்றுவிடுவார்கள் தமிழ் தெலுங்கு இயக்குநர்கள் என்பது உண்மைதான். இருந்தாலும் மலையாள வெற்றிப்படங்களை நம்பித்தான் தமிழகத்தின் எல்லா நடிகர்களுமே தமது சரிந்த சந்தையைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாக மலையாளப்படக் கதைகள்தான் தமிழ்நாட்டின் பல நாயக பிம்பங்களை விழுந்துவிடாமல் காத்து வருகின்றன. எல்லாவகை நடிகர்களுக்குமான கதைகள் அங்கே உருவாகின்றன. அதைக் காசு கொடுத்து வாங்கித்தான் பல நட்சத்திரங்கள் இங்கே மின்னுவதைப் போலக் காட்டிக் கொண்டிருக்கின்றன. 

அதே நேரம், How Old Are You ? படத்தை தமிழில் எடுக்காவிட்டால் எத்தனை பேர் அந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள். ப்ரேமம் ஒன்றும் தமிழில் எடுக்கக் கூடாத அளவுக்கு புனிதமான படமில்லை. மாதம் ஒரு அற்புதமான படத்தை மலையாளிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அதெல்லாம் காண்பதற்கு நல்வாய்ப்பு இல்லை. அவைகளுடன் ஒப்பிடும்போது ப்ரேம் பத்தோடு பதினொன்றுதான். மலையாளப்படம் என்றாலே பலான படம் என்றளவுக்கு தெரிந்து வைத்திருந்த தமிழ்த் தவளைகள் இப்போதுதான் விழிக்கத் தொடங்கியிருக்கின்றன. கடைசியாக ஷகிலாவின் கிண்ணாரத் தும்பிகள் பார்த்துவிட்டுத் தூங்கியவை, ப்ரேமம் பார்த்து விட்டு தமிழ் ப்ரேமம் வேண்டாம் என்கின்றன. அதே நேரம் நிவின் பாலிக்குப் பதிலாக நம்ம தமிழ் நடிகர்களை இதில் என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்