மீண்டும் ஒரு கடைசிக் கவிதை

கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் 
கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் 
பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும்
கடைசியாக ஒரு முறை நம்முடைய காதல் பற்றிக்
கவிதையில் எழுதி விட வேண்டும்

என்னுடைய கடைசி ஆயுதமாக கவிதையைத் தேர்ந்தெடுத்தேன்
அதில் உன் நினைவினை நிரந்தரமாகப் புதைத்து விடத் துணிந்தேன்
அக்கவிதை முடிவது போலவே நீயும் உன் நினைவுகளும்
என்னிடமிருந்து அகல வேண்டும் என்று வேண்டியும் கொண்டேன்

ஒரே ஒரு கவிதையில் நீ என்னில் செலுத்திக் கொண்டிருக்கும் 
வேதனைகளை எல்லாம் சொற்களில் வடித்து இறக்கி வைத்து 
விடலாம் என்றெண்ணி எழுத முயன்று கொண்டிருந்தேன்

அந்தக் கவிதையோ முடியாமல் நீண்டு கொண்டே சென்றது
நான் இதுவரை எழுதிய கவிதைகளில் அழகானதாகவும் இருந்தது 
அந்த உணர்வுகளைக் கொடுத்த உனது நினைவுகள் மீண்டும்
எய்ந்தவனையே பதம் பார்க்கும் அம்பாக என் மீதே பாய்கின்றன

அக்கவிதையின் வாயிலாக நான் என்னுடைய காதல்
புது பரிமாணம் கிடைக்கப் பெற்றதாக உணர்கிறேன் 
இதோ இன்னொரு சாக்குக் கிடைத்து விட்டது 
உன்னை நினைத்துக் கொண்டிருக்க

இத்தகைய உணர்வினைக் கொடுத்தவள் இவள் என்றே 
உன் மீது மீண்டும் காதல் கணக்கில்லாமல் ஏறுகிறது
என்னையும் கவிஞனாக்கி விட்டாளிவள் என்று ஏற்றத் தோன்றுகிறது
அட இவள் இல்லாமல் போனால்தான் என்ன ?
இவள் தந்த காதல் இல்லை இவளை நினைத்ததால் வந்த காதல்
அது கொடுத்த பேரின்பத் திளைப்புகள்தான் போதாதா வாழ்நாள் முழுதும்

எதிர்காலத்தில் உன் கணவன் உன்னைக் கண்டுகொள்ளாத பொழுதில்
ஒரு காலத்தில் என்னை ஒருவன் எப்படியெல்லாம் காதலித்தான்
தெரியுமா என்று வெறுப்பேற்றக் கூட நானும் என் காதலும் பயன்படலாம் 

உன் மீதான இந்தக் காதல் இருக்கிறதே இல்லை இல்லை
உன் மீதான போதை இருக்கிறதே 

ஏன் இப்படி கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இருக்கிறது ?
ஏன் கொஞ்சம் கூடக் குறையவே மாட்டேன் என்கிறது ?
ஏன் என்னை நிம்மதியாய் இருக்க விடாமல் செய்கிறது ?
ஏன் கற்பனையின் உச்சத்தில் என்னை ஏந்திச் செல்கிறது ?

இந்தக் காதல் ஏன் எனது மற்றக் காதல்களைப் போலக் காலத்தால்
காணாமல் போக முடியவில்லை ?
ஏன் என்னுடைய மற்ற மையல்களைப் போல உன் மேல் கொண்ட மையல்
மட்டும் மறைந்து போகவில்லை ? 

மற்றவை எனது உடலுணர்ச்சியின் விளைவாய வந்திருக்கக் கூடும்
உன் மீதான மையலோ என் உயிரிலிந்தே வந்திருக்க வேண்டும்

அப்படி என்னதான் உன்னிடம் கண்டு விட்டேன் நான் 
என்னால் விண்டு விடவே முடியவில்லையே !
தயவு செய்து என்னை விட்டு விடக் கூடாதா
நான் பிழைத்துப் போகிறேன்

இல்லாத கடவுளிடம் வேண்டுவதைப் போல உனக்குத் தெரியாத
உன்னிடமே கேட்டுக் கொண்டிருக்கிறேன் நான்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment