கௌசல்யா - தமிழ்நாட்டின் மகள்

சமீபத்தில் திருப்பூர் நீதி மன்றம் உடுமலை சங்கர் ஆணவக்கொலை வக்கில் தொடர்புடைய 6 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. நம் ஜனநாயகத்தின் மீது வைத்துள்ள மிகச்சிறிய நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக இதைப் பார்க்க வேண்டும். இன்னும் எத்தனையோ வழக்குகளுக்கு தீர்ப்பு வராத நிலையிலும் இந்தத் தீர்ப்பை ஒரு சிறந்த முன்னோடியாகப் பார்க்க வேண்டும். எத்தனையோ ஆணவக் கொலைகள் நாளிதழ்களிலும் வருகின்றன. இந்த வாட்சப் காலத்தில் ஒரு கூட்டமே கூடி ஒருவரயோ அல்லது இருவரையுமோ அடித்துக் கொல்வதைக் கூட சுற்றி நின்று ஜாதிவெறி பிடித்த மனநோயாளிகள் கூட்டம் படம்பிடித்துக் கொண்டு இருக்கும் காட்சிகளைக் கூட காண்கிறோம். அப்படி இருக்கும் நிலையில் இந்தியாவிலே ஜாதிய எதிர்ப்பு சிந்தாந்தம் வலுவாக இருக்கும் (ஜாதிவெறியும் வலுவாகத்தான் இருக்கிறது) தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள ஆணவக் கொலைக்கு தூக்கு தண்டனை என்பதையும் நாம் பார்க்கிறோம். இந்தியாவில் இது வரை இப்படி ஒரு தீர்ப்பு ஆணவக் கொலைக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. தமிழகம் அதில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது.

இதற்கு மூலகாரணமாக இருந்தது கண்காணிப்புக் கருவியில் பதிவாகி வெளியான சங்கரும் கௌசல்யாவும் வெட்டப்படும் காணொலிக் காட்சிகள் மட்டுமல்ல, மறுபிறவி எடுத்து அதற்காகப் போராடிய கௌசல்யா என்ற அற்புதமான பெண்ணின் துணையும் கூட. தனது கண்ணெதிரே கணவனைப் பறிகொடுத்து, தானும் வெட்டுக்களை வாங்கி, உயிர் காப்பாற்றப்பட்டு, பின்னர் தற்கொலைக்கு முயன்று தன்னைத் தேற்றிக் கொண்டு பெரியாரிய, தன்னார்வக் குழுக்களின் உதவியால் புது மனிதியாக மாறி தன் கணவனை கூலிப்படை வைத்துக் கொலை செய்த, தனது தந்தைக்கே தூக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் மனித நேயப் போராளியாக மிளிர்கிறார், ஆளுமையாக வரலாறு படைத்திருக்கிறார் கௌசல்யா. அவரின் செயல்களை நினைக்கையில் அவர் மேல் நமக்கு பேரன்பும், பாசமும், பெருமிதமும் பெருகி வருகிறது. 

இந்தத் தூக்கு தண்டனை அறிவிப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்குக் கூட வழியில்லாமல் இருக்கிறது கௌசல்யாவின் குடும்பம். இப்படி ஒரு குடும்பத்தை நாசமாக்கியிருக்கிறது ஜாதி வெறி. இதற்கெல்லாம் கொஞ்சமும் கவலையில்லாமல் கூச்சப்படாமல் கௌசல்யாவை அசிங்கப்படுத்து வேலையை ஜாதி வெறி இழிபிறவிகள் செய்து வருகின்றனர். ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியிலிருக்கும் குடும்பப் பெண் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்வது உயிருக்கே உத்தரவாதமில்லாத செயலாக இன்றும் இருக்கிறது. இப்படி ஒரு குடும்பம் ஜாதிவெறியில் ஆணவக் கொலை செய்து தூக்கு தண்டனை வாங்கியிருக்கிறது, இதற்காக கொஞ்சமும் கவலையோ துயரமோ இல்லாமல் கௌசல்யாவை இழிவு செய்து மீம்களையும் கருத்துக்களையும் ஃபேஸ்புக்கிலும் வாட்சப்பிலும் பரப்பி வருகின்றனர். 

இது மாதிரியான மன நோயாளிகள்தான் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி மாதிரியான ஆட்களை தற்கொலைக்கோ அல்லது சொந்த மகளையே ஆள் வைத்து வெட்டுவதற்கோ தூண்டி விடுகிறவர்கள். இந்தமாதிரியான ஆட்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்துதான் ஜாதியை, தான் கௌரவம், குடும்ப மானம் என்றெல்லாம் கருதி அடிப்படை மனிதநேயத்தைத் தொலைத்து ஜாதிவெறி மனநோயை சரி என்று நம்பி கொலை செய்யத் துணிகிறார்கள். ஜாதிய சமூகத்தில் ஜாதிக்கு பயப்படும் மனிதர்கள், தான் சமூகம் என்றும் ஊர் உலகம் என்று நம்பும் இது மாதிரியான ஆட்கள்தான் ஜாதி வெறியை வாழவைக்கும் இழிபிறவிகள். இவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், பக்கத்து ஊர்க்காரர்களாக இருக்கலாம், அங்காளி பங்காளிகளாக இருக்கலாம். இவர்கள்தான் அடுத்தவர்களை தூண்டிவிடுவது, சீர் செனத்தி கொடுப்பதை பெருமை பேசுவது, பொண்ணு வயசுக்கு வந்துட்டாளா இல்லையா என்று கேட்பது முதல், பையன் என்ன சம்பளம் வாங்கறான், பையனுக்கு இன்னும் கல்யாணமில்லையா, கல்யாணமாய் இத்தனை நாளாயும் குழந்தை இல்லையா, அந்தக் கோயிலுக்குப் போகணும், இந்த டாக்டரைப் பாக்கணும், நான் சொல்றா ஜோசியகாரரைப் பாருங்க என்றெல்லாம் ஆலோசனை சொல்வது,  அடுத்தவன் குடும்பத்தைப் பற்றி கிசுகிசு பேசுவது, இது போன்று பெண்ணின் தனிப்பட்ட படங்களை சமூகத்தில் தனது கழிவுக் கருத்துக்களுடன் பகிர்ந்து கொள்வது, போலித்தனமாக உச் கொட்டுவது இப்படிப் பல வகைப்படுவர். 

இது மாதிரியான ஊருக்கு 4 பேர்களாக இருக்கும் ஜாதிவெறி மனநோயாளிகள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் ? சின்னச்சாமி போன்றவர்கள் ஊர் என்ன சொல்லுமோ ?, நம்ம சனம் என்ன சொல்லுமோ ? சொந்தக்காரவுக என்ன சொல்லுவாகளோ என்றெல்லாம் மன அழுத்தம் கொள்ளாமல், சிறிது காலத்தில் கௌசல்யாவின் முடிவை அங்கீகரித்திருக்கக் கூடும். இப்போது கொலைகார சின்னச்சாமி மட்டும் தூக்கு மேடையில், சின்னச்சாமியின் ஜாதிவெறியைக் கூட்டிய ஜாதிக்காரர்கள் எல்லாம் கௌசல்யாவைத் திட்டிக் கொண்டும் சின்னச்சாமியின் ஈகத்தை மெச்சிக் கொண்டும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் தங்கள் ஜாதி சனத்துடன். 

இப்படியெல்லாம் திரியும் ஒரு பெண், தனது பெத்த தகப்பனுக்கே தூக்கு தண்டனை வாங்கித் தந்து விட்டாள் என்று பொருமுகின்றனர். அனைவரும் சங்கர் வெட்டப்பட்ட அதிர்ச்சியில் இருக்கும்போதே, மேல் ஜாதிப் பெண்களைத் தொடுகின்றவனுக்கு அப்படித்தான் வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் அதிகமாக இருந்தனர். இப்போது கௌசல்யாவின் அப்பாவுக்கு தூக்கு உறுதியானவுடன் கௌசல்யாவை ஏசுவதற்கு வசதியாகப் போய்விட்டது. ஆனால் உண்மையென்ன ? சின்னச்சாமி தூக்குமேடைக்குச் செல்லக் காரணமே இது மாதிரி அவர் சார்ந்த சொந்தங்களும், சமூகமும்தான். இந்த எடுபட்ட ஜாதிய சமூகம்தான் அவரை அனைத்து வகையான உறவுகளையும் இப்படித்தான் இருக்க முடியும் என்று கட்டாயப்படுத்துகிறது. தனது மகள் அதை மீறியதால் சமூகத்தில் தனக்கு மரியாதை போய்விடும் என்று எண்ண வைக்கிறது. எனவே ஒரு தனி மனிதன் ஜாதியால், ஜாதிவெறியால், ஜாதிப்பாசத்தால் நிகழ்த்தும் வன்முறைக்கு ஜாதிதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் ஜாதி இங்கே புனிதமாகி கௌசல்யாவை ஏசுகிறது. 

நம் முன்னோர்களெல்லாம் பொறியியல் படிக்கவில்லை என்பதற்காக கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி கௌசல்யாவை பொறியியல் படிக்க வைக்காமல் இருக்கவில்லை. நாம்தான் படிக்காத தற்குறியாக இருந்து விட்டோம் தம் பிள்ளைகளாவது படிக்கட்டும் என்று படிக்க வைக்கிறார்கள். ஆனால் படித்து விட்டு, பட்டம் வாங்கி விட்டு வேலைக்கும் போய் விட்டு இருந்தாலும் நம்மைப் போலவே ஜாதியச் சாக்கடையில்தான் வாழவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களின் மனநோய் விந்தையிலும் விந்தையல்லவா ?. நம் மகனோ மகளோ நம்மைப் போல் படிக்காத தற்குறியாக இருக்கக் கூடாது, ஆனால் நம்மைப் போல் ஜாதிவெறியனாகவே இருக்க வேண்டும். இப்படியெல்லாம் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ள முடியாத நம்பிக்கைகளால் நிறைந்ததுதான் ஜாதி. அதன் அடிப்படை தந்நலமும், போலிப் பெருமையும், மனிதநேயம் இல்லாமையும்தான். 

தேவர் ஜாதியினர்தான் தனது ஜாதிக்காரனுக்கு தூக்குதண்டனை வாங்கித்தந்ததால் கௌசல்யாவைத் திட்டுகின்றனர் என்று பார்த்தால், கொங்கு வேளாளக் கவுண்டர்கள், வன்னியர்கள், மாதிரி இன்ன பிற ஆண்ட பரம்பரைப் போலிப் பெருமையில் மூழ்கி இருக்கும் மனநோயாளிகளும் சேர்ந்து கௌசல்யாவை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய கீழ்மையைக் காட்டி வருகின்றனர். 

கௌசல்யா தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இருக்கின்றன. அதை தூக்குதண்டனை வெளியான அன்று "சங்கர் இறந்ததிலிருந்து நான் நிம்மதியின்றி இருந்தேன். இத்தீர்ப்பு எனக்கு நிம்மதி அளித்தது என்று கௌசல்யா கூறியிருந்தார். இந்த செய்தியின் கீழே கௌசல்யா நிம்மதியின்றித் தவித்தபோது க்ளிக்கியது" என்று கீழ்க்காணும் படங்களைப் பகிர்ந்திருந்தார்கள். அதை எல்லா ஜாதியிலிருக்கும் நாடகக் காதல் என்ற கதையை நம்புகிற, தலித்கள் மேல் ஜாதிப் பெண்களை மணந்து கொண்டு பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கின்றனர் என்று நம்பும் ஜாதிவெறியர்கள் தத்தமது ஃபேஸ்புக்கில், வாட்சப் குழுமங்களில் பகிர்ந்து தனது இழிவைப் பதிவு செய்து கொண்டனர். இங்கே இருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள். அவர் முகத்தில் சிரிப்பையும் தாண்டி ஒரு சோகம் தெரிந்துகொண்டுதான் இருக்கிறது. 

                                                      

                                                 

                                                  

அதாவது கௌசல்யா இப்போது ஜீன்ஸ் அணிகிறார். கூந்தலை வெட்டி விட்டார். அதாவது கெட்டுப்போய்விட்டாராம்.  ஆண்களுடன் ஊர் மேய்கிறார். அதற்கும் மேல் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அதாவது இன்னும் முக்கால்வாசி ஆண்களுக்கு பெண்கள் ஆண் நண்பர்களுடன் பழகுவது, கைகோர்ப்பது, சேர்ந்து புகைப்படம் எடுப்பது, நெருங்கி நின்று தற்படம் (Selfie) எடுப்பது இதிலெல்லாம் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்தக் கொடுமையையெல்லாம் எங்கே போய் சொல்லி அழ ?.

பின்னே என்ன ஒரு கணவனை இழந்த பெண் எப்படி இருக்க வேண்டுமாம் ? மொட்டை அடித்து, வெள்ளைச் சேலை உடுத்தி, முக்காடு போட்டு மூலையில் அமர்ந்து கொண்டு மூக்கைச் சிந்திக் கொண்டு இருக்க வேண்டுமோ ? பெண்களை அடக்கி வைக்க நினைக்கும் உங்கள் புத்தி அப்படித்தானே போகும்.

அவர் பொறியியல் பயின்றவர், செத்துப் பிழைத்த பின்னர் பெரியாரியம் பயின்றவர். அவர் அப்படித்தான் இருப்பார். அப்படி மகிழ்ச்சியாக இருந்ததால்தான், துணிவாக இருந்ததால்தான், சராசரிப் பெண்களின் அடையாளமான நீண்ட கூந்தலைத் துறந்து, ஜீன்ஸ் அணிந்து மனிதநேயராக சிந்திக்கத் தொடங்கியதால்தான் இப்படி அவர்களுக்கு தண்டனை வாங்கித்தந்து இன்று அதை நியாயப்படுத்தி பேசவும் முடிகிறது. அவர் அப்படித்தான் உடையணிவார், நண்பர்களுடன் ஊர் சுற்றுவார், சிரித்துக் கொண்டே புகைப்பத்திற்குக் காட்சி தருவார். மேடைகளில் பேசுவார், நடனம் ஆடுவார் இதற்கு மேல் அவர் திருமணமும் கூட செய்து கொள்வார். அதற்கு இப்போது என்ன ? அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்ல முடியுமா ? என்ன நடந்தாலும் ஜாதிவெறியால மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் திருந்த முடியாது. உங்களிடம் நல்ல பெயர் எடுக்க தன் வாழ்க்கையை ஏன் அவர் வீணாக்க வேண்டும். முடிந்தால் மனிதர்களாக மாற முயற்சி செய்யுங்கள். யார் யாரை காதலிக்க வேண்டும் யார் யாரை காதலிக்கக் கூடாது என்று சொல்வதெல்லாம் ஒரு பண்பாடாம் அதுதான் மதமாம் கலாச்சாரமாம். இதையெல்லாம் இவர்கள் கட்டிக் கொண்டு அழ இருப்பவர்கள் சாக வேண்டுமாம். 

இந்த மாதிரி அயோக்கியர்கள் தம் திருமண உறவுகளில் எப்படி நடந்து கொள்வார்கள் ? ஏங்க பொண்ணு ஏழையா இருந்தா பரவால்லை, நம்ம சாதியா இருந்தா போதும் என்றா சொல்கிறார்கள். அது தமது பையனுக்கோ/பெண்ணுக்கோ வரன் அமையாமல் பல வருடங்கள் இருந்தால் மட்டுமே இறுதியாக சொல்லும் வாக்கியம். இதுவும் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கேரளா. அங்கே போய் பெண் எடுத்தால் யாரும் ஜாதி கேட்க மாட்டார்கள், கல்யாணப் பொண்ணு கேரளா என்றால் அத்துடன் கேள்விகள் முடிந்து விடும். 

பொண்ணுக்கு எத்தனை பவுன் போட்டாங்க ? பையனுக்கு என்ன சம்பளம் ? எத்தனை ஏக்கரா தேறும்? தாய்மாமன் என்ன செய்தார் ? என்றுதானே எல்லா சாதிசனமும் கேட்கிறது. ஆக இங்கே ஜாதிக்கு மரியாதை இல்லை. பணத்துடன் கூடிய ஜாதிதான் மதிப்புப் பெறுகிறது. பணத்தால்தான் ஜாதியே மதிப்புப் பெறுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஒருவர் தனது குடும்ப்பத்துடன் கந்துவட்டிக் கொடுமை தாளாமல் மாவட்ட ஆட்சிய அலுவலகத்தில் தீக்குளித்தார். குடும்பமே அழிந்தது. அந்த இறந்தவரின் குடும்பமும், கந்து வட்டி கொடுத்தவரும் ஒரே ஜாதி என்று கேள்விப்பட்டேன். இதனால் அந்தக் குறிப்பிட்ட ஜாதியினரின் மானம் போனதாக எந்த ஜாதிவெறியனும் கவலை கொள்ளவில்லை. ஆனால் ஒரு பெண் தான் விரும்பிய வேறு ஜாதிக்காரனுடன் திருமணம் செய்தால் மட்டும் ஜாதி மானம் போய்விடும். அதற்கு அவர்களைக் கொன்று தானும் தூக்கு மேடைக்குச் சென்று செத்தால்தான் ஜாதி கௌரவம் காப்பாற்றப்படும். அடுத்த ஜாதிக்காரன் கரு தன் ஜாதி வயிற்றில் வளர்வது கேவலம் என்றால் அடுத்த ஜாதிக்காரன் விடும் மூச்சைக் கூடத்தான் சுவாசிக்கிறார்கள். வேற சாதிக்காரன் விட்ட காத்தை நான் சுவாசிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு மூச்சை நிறுத்திப் பாருங்களேன். 

என் பங்குக்கு நானும் ஏதோ என்னால் முடிந்த மீம்கள்

                  


                  

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment