மொக்கையின் மொக்கைகளைக் கட்டுடைத்துத் தெறிக்க விட்ட நீயா நானா.

திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளையோ, சென்டிமென்ட் காட்சிகளையோ பார்க்கும்போது ஒரு வேளை அது ரசிக்க முடியாமல் போனாலோ அல்லது தனக்குப் பிடிக்காத நடிகரின் படமாக இருந்தாலோ 

"இதெல்லாம் தமிழ்ப்படத்துலதான் நடக்கும்"

"தமிழ்ப்படம்னாலே அப்படித்தான்"

"யப்பா இந்தத் தமிழ்சினிமாக்காரன் திருந்தவே மாட்டான்"

இப்படியான சலிப்பான, மேதாவித்தனமான வசனங்களைக் கேட்க முடியும். தனக்குப் பிடிக்காத படமென்றால ஐன்ஸ்டீன் அளவுக்கு ஆராய்ந்து குறை சொல்ல அறிவிலிகளால் கூட முடியும். இங்கே கமல் படத்தை விமர்சிக்கும்போது ரஜினி ரசிகனுக்கும் பகுத்தறிவு பிறக்கும். விஜய் படத்தை விமர்சிக்கும்போது அஜித் ரசிகனும் பகுத்தறிவுவாதியாவான். சூர்யா படத்தை விமர்சிக்கும்போது விஜய் ரசிகனுக்கும் ஆறாவது அறிவு வேலை செய்யும். 

ஆனால் இந்த மேதாவிகள் அனைவரும் ஒன்று பட்டு ரசிக்கும் காட்சிகள் எதுவாக இருக்கும். வேறு என்ன பெண்களைக் கிண்டல் செய்யும் வசனங்கள். தேவையில்லாமல் திட்டும் பாடல்கள் ஆகியவற்றை ரசிக்கும்போதுதான். பெண்களைக் குறை சொல்வதை, பொண்ணுங்கன்னா இப்படித்தான் பண்ணுவாளுங்க மச்சான், இந்தக் காலத்துப் பொண்ணுங்கல்லாம், மச்சி இப்பல்லாம் பொண்ணுங்க என்றெல்லாம் தொடங்கும் அபத்த வசனம் போன்றவற்றில் இவர்கள் அனைவரும் தலைவர் பேதமின்றி ஒருமித்து ரசிக்கின்றனர். 

சந்தானம், சூரி, சிவகார்த்திகேயன் தனுஷ் போன்ற மொக்கைத் திலகங்கள் திரைப்படங்களில் ஊத்தை வாயால் உளறுவதையே உண்மை போல எல்லா இடங்களிலும் நம்புகின்றனர். ஆண்கள் தங்களுக்கிடையே பேசிக்கொள்ளும்போதும், அடுத்தவர்களிடம் பேசும்போதும், ஏன் பெண்களுடன் பேசும்போதும் கூட இதையே மிகச்சாதரணமாக உண்மை போலப் பேசித் திரிகின்றனர். இந்த இடத்தில் மட்டும் இந்தத் தமிழ் சினிமாவே இப்படித்தான் என்று யாரும் சிந்திக்க மாட்டார்கள். எம்ஜிஆர் ரசிகன் தொடங்கி சிம்பு ரசிகன் வரை இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் என்ற மொக்கைத்தனத்தில் ஒன்று படுவார்கள். 


இந்நிலையில் இந்தக் கருத்துக்களை வைத்திருப்பவர்கள் பெண்கள் இரண்டு கேள்வி கேட்டால் பதில் தெரியாமல் முழிப்பார்கள். எதற்காக ஒரு கருத்தினை சொல்கிறோம் என்றே தெரியாமல் சும்மா பொண்ணுங்களே இப்படித்தான் என்ற கருத்தை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் என்பது இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் தெரியும். முக்கால்வாசிப் பேர் இப்படித்தான் திரிகிறார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் இவர்களைத் தெறிக்க விட்டதைக் கண்டு களியுங்கள்.
புகைப்படம் - நன்றி ஃபேஸ்புக்
இதில் கேள்வி கேட்டு பின்னியெடுத்த பெண்ணை, கேவலப்படுத்தும் நோக்கில் ஃபேஸ்புக் மொக்கைகள், சொந்தமாக யோசிக்கத் தெரியாமல், தமிழில் கூட எழுதத் தெரியாத கிறுக்குகள், மீம் என்ற பெயரில் கிண்டலடித்துத் திரிகின்றன. அவள் கேட்ட கேள்விக்கு இந்த முட்டாள்களிடம் பதிலே இல்லை. அந்த வெறுப்புதான். ஏதோ படங்களின் பிரபலமான வசனம் பேசும் திரைச்சொட்டையும்(Screenshot), இந்தப் பெண்ணின் படத்தையும் இணைத்து தங்கள் சொந்தக் கழிவுகளைக் கலாய்ப்பதாகக் கருதிக் கொண்டு கழிந்து வைத்துக் கொண்டுள்ளனர். ஆகவே எனது முதன்மைப் பாராட்டு இந்தப் பெண்ணுக்குத்தான். 



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ப்ரேமம் பிரமாதமா ?

ப்ரேமம் படம் எல்லாரும் புகழும் படமாக இருக்கிறது. இது வரை மலையாளப்படங்கள் இந்தளவுக்கு நம்மாட்களிடம் எட்டியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதிகமாக அறியப்பட்ட படங்கள் என்றால் அது மறு உருவாக்கப் படங்களே. அதுவும் தமிழில் அது எடுக்கப்படுவதால் மட்டுமே அந்தப் பெயரைத் தெரிந்து கொண்டிருப்பார்கள். இவையில்லாமல் தமிழில் மிகக்குறைந்த அளவான ரசிகர்களே மலையாளப்படத்தை விரும்பிப் பார்க்கின்றனர். அவை ஆஹா ஓஹோ என்ற ஆர்ப்பாட்டமின்றி, எதார்த்தமாகவும், எளிமையாகவும், மென்மையாகவும் இருப்பதால், அதைப் பார்க்கும் பொறுமை தமிழர்களுக்கு இல்லை. அதே நேரம் சிறந்த மலையாளப்படங்களை ஏறக்குறைய எல்லாப் படங்களுமே உரிய அங்கீரத்தைப் பெற்று விடுகின்றன. அதைத் தந்து விடுகின்ற மலையாள ரசிகர்கள் தமிழ்ப்படங்களை பார்க்கின்றனர், தமிழ்ப்படங்களுக்கான சந்தையாகவும் இருக்கின்றனர் என்பது முரண்நகை. 


சமீபத்தில் திருஷ்யம் என்ற மலையாளப்படம் அதிகமான தமிழ்நாட்டு ரசிகர்கள் பார்த்திருக்கக் கூடும் என்று கருதுகின்றேன். ஆனால் அதைவிட பலரும் கொண்டாடும் படமாக இருக்கிறது ப்ரேமம். நிறையப் பேர் பேசுவதயும், சொல்வதையும் கேட்டேன். பாடலைக் கேட்பதும், முணுமுணுப்பதுமாகவும் இருந்தனர். அடடா தமிழர்களின் ரசனையும், தரமும் இவ்வளவு மெருகேறிவிட்டதா என்றும் வியந்தேன். என்ன எல்லாரும் புகழும் அளவுக்கு அந்தப் படம் இருக்கிறதா என்று, அந்தப் படம் பார்க்க வேண்டிய பட்டியலில் இணைந்து விட்டது. இது போலவே செல்லுலாய்ட், உஸ்தாத் ஹோட்டல் போன்ற சில புகழ் பெற்ற படங்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன். இது வரை பார்ப்பதற்கான பொறுமை எனக்கு வரவில்லை. ஆனால், ப்ரேமம் படம் ஒரு நண்பரின் மூலமாகக் கிடைக்கப் பெற்றதும், அதைப் பார்த்தும் விட்டேன். இதை உடனே பார்த்து விட இன்னொரு காரணம் இது தமிழிலும் மறு உருவாக்கம் செய்யப்போகிறார்களென்றும், அதில் தனுஷ் நடிக்கிறார் என்றதும் அந்தக் கொடுமையை அனுபவிக்கும் வாய்ப்பு இருப்பதாலும் அதைத் தவிர்க்க வேண்டியும்தான். 

எல்லாரும் நன்றாக இருக்கிறதாகக் கூறி வந்தாலும் ஒரே ஒரு தோழி மட்டும் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். பரவாயில்லையே பிடிக்காத ஒருவரும் இருக்கிறாரே என்று தோன்றியது. படம் பார்த்தேன். எனக்கு அவ்வளவாக மனதைத் தொடவில்லை. படம் நன்றாக இல்லை என்று சொல்ல மாட்டேன். பெரும்பான்மையினருக்கு மிகவும் பிடிக்கவும் கூடும். ஆனால் என்னைப் போன்ற சிலருக்குப் பிடிக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. எனக்கு அவ்வளவாகப் பிடிக்காமல் போனதன் காரணம் என்ன ? ஒரு படம் மிகவும் சிறந்த கதை, திரைக்கதை, வசனங்களால் நிரப்பப்பட்டிருக்கலாம். ஆனால் கதை, அதிலிருக்கும் கதை மாந்தர்கள், அவர்களை சித்தரித்த விதம் போன்ற சில காரணங்களால்தான் ஒரு படம் பிடித்து விடும் படம் மிகவும் மெதுவாக நகர்ந்தாலும், பொறுமையை சோதித்தாலும் கூட. ஆனால் எல்லாமே சிறப்பாக இருந்தாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் கூட நமக்குப் பிடிக்காமல் போகும். தோல்வியடைந்த உத்தம வில்லன் படம் கமல் ரசிகர்களில் ஒரு தரப்பினரால் மிகவும் ரசிக்கப்பட்டது. பாலா படங்கள் என்றால் ஒரு சிலர் வெறுப்பது மாதிரி உதாரணம் சொல்லலாம்.

சரி ப்ரேமம் படம் எதைப் பற்றியது. ஒரு இளைஞனின் மூன்று பருவங்களில் வந்த காதல்கள் பற்றியது.  ஜோசப் என்ற ஆணின் வாழ்வில் வரும் காதல்- அவனால காதலிக்கப்படுவதாக வருகின்ற மேரி, மலர் மற்றும் செலின் ஆகிய மூன்று பெண்கள். அவன் பள்ளி மாணவனாக இருக்கும் போதும், கல்லூரியில் இருக்கும் போதும், பின்பு முப்பது வயதில் பணியிலிருக்கும்போதும் வரும் காதல், ஈர்ப்பு பற்றிய கதையை மிகவும் சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள். மலையாளத்தின் சிறந்த இளம் நடிகரான நிவின் பாலிதான் நாயகன். இந்த மூன்று பருவக் கதை என்றாலே நமக்கு ஆட்டொகிராஃப் நினைவுக்கு வரும். இன்னும் பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. அட்டக் கத்தி படம் போலவும் இருந்ததாக சிலர் கூறினார்கள். நான் அந்தப் படம் பார்க்கவில்லை. 

மூன்று பருவக் காதல் கதையில் மூன்று அழகான பெண்கள் வருகின்றார்கள். இது போதாதா நம் இளைஞர்களுக்கு நடக்கறத அப்படியே காட்டிருக்காங்கடா என்று உருகுகிறார்கள். அதில் அவன் கல்லூரிப் பருவக் காதலியாக வருகிறவர் ஒரு தமிழ்ப் பெண் (படத்திலும் தமிழ்ப்பெண்ணாகவே). படத்தில் அவரது பெயர் மலர். நம் தமிழ்நாட்டு விடலைகள், வாலிபங்கள் ப்ரேமம் படத்தைக் கொண்டாடுவதற்கும், மலர் மிஸ், மலர் மிஸ் என்று கசிந்துருகுவதற்கும், மலரே நின்னைக் காணாதிருந்நால் பாடலை முதல் வரியை மட்டும் முக்கி முக்கி முணுமுணுப்பதற்கும், திரும்பத் திரும்ப படத்தை பார்த்துத் தீர்ப்பதற்கும் காரணம் மலர் ஆக வரும் சாய் பல்லவிதான் காரணம். சாய் பல்லவியின் இயல்பான நடிப்பும், நடனமும் அற்புதம். இந்தக் கல்லூரிக் காதல் பருவக் காட்சிகள், மலரை மயமாகக் கொண்ட காட்சிகளில் தமிழில்தான் வசனம் வருகிறது. அது போக இரண்டு தமிழ்ப்பாடல்கள் இருக்கின்றன. இதெல்லாம் சேர்ந்து தமிழ் ரசிகர்களிடம் இந்தப்படத்தை ரசிக்க வைத்திருக்கிறது. 

இது வரை மலையாள நடிகைகளே கனவுக் கன்னிகளாக இருக்கின்றார்கள் தமிழ்நாட்டில். பெரும்பான்மை நடிகைகளாவும், கதாநாயகிகளாகவும் இருப்பவர்கள் மலையாளிகளே. போதாக்குறைக்கு நடிகர்களும் ஒருபாடு மலையாளிகளே. இப்படி இருக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தமிழ்ப்படத்தில் நடிகையாக வெற்றி பெறுவதே நடக்காது. இந்நிலையில் மலையாளப்படத்தில் நடித்து மலையாளிகளை மலரே மலரே என்று ஏங்க வைத்த இயக்குநருக்கு நன்றி. இதே சாய் பல்லவி தமிழில் நடித்திருந்தால் கதாநாயகனுக்கு தங்கையாகவோ, இரண்டாவது கதாநாயகியாகவோ நடித்து நாசமாகப் போயிருப்பார். மலையாளப் படத்தில் நடித்ததால் சொல்லிக் கொள்ளும்படி ஒரு படம் கிடைத்தது. இதற்கு மகிழ்கிறேன். 

படத்தின் கதை 2002- இல் பள்ளிப்படிப்பும் 2005 - இல் கல்லூரிப் படிப்பும் முடித்த ஒரு இளைஞனின் கதை. அதாவது பத்து/15 வருடங்களுக்கு முன்னர் நடந்ததிலிருந்து காட்டுகிறார்கள். பள்ளிப்பருவக் கதையில் வரும் பள்ளி மாணவி மேரி. புட்டுக் கன்னமும், கேரளத்திற்கே உரித்தான பரந்த கருங்கூந்தலும் இவரது அழகின் சிறப்பம்சம். அவளைக் காதலிக்கும் பத்துக்கணக்கான மாணவர்கள். அதில் ஒருவனாக நம் நாயகன் ஜோசப். அந்தக் காதல் புட்டுக் கொள்கிறது. இந்தக் காட்சிகள் அழகான நகைச்சுவை. மலையாளம் தெரிந்தால் வேகமாக பேசிச் செல்லும் நகைச்சுவை நறுக்குகளைப் புரிந்து அள்ளிப் பருகலாம் சிரித்து மாயலாம். பச்சை நிற பின்புலமும், பட்டாம் பூச்சிகளும் கண்களுக்குத் தெவிட்டாத இன்பம், இசை செவிக்கு இன்பம். 

அடுத்து கல்லூரிக் காதல் காட்சிகள், மலரின் வருகை, காதல், இனிய பாடல், கல்லூரிச் சண்டைகள், படத்தின் மிகச்சிறந்த காதல் காட்சிகள், பாடல்கள், நகைச்சுவைக்காட்சிகள் இதில் வருகின்றன. இதில் எனக்குப் பிடித்த ஒரு கதாபாத்திரம், விமல் சார்- ஆக வரும் கல்லூரி விரிவுரையாளர். காஞ்சனா - 2 கோவை சரளாவுக்குப்பிறகு என்னைத் தொண்டை வலிக்கச் சிரிக்க வைத்தவர் இவரே. இங்கே முற்றிலும் சாய் பல்லவியின் ஆதிக்கம். இவர் மிகவும் சிறிய பெண்ணாக இருக்கிறார். இவரை பள்ளி மாணவியாக நடிக்க வைத்திருக்கலாமோ என்ற உலக யோசனையும் தோன்றியது. முகப்பருவும் சிரிப்பும் இவரது சிறப்பு. நடிப்போ அதனினும் சிறப்பு. 

விமல் சார்
ஒரு பெண் எப்போது அழகாக இருப்பாள் ?. காலையில் குளித்து விட்டு கோயிலுக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு, பேருந்துக்குக் காத்திருக்கும்போதோ, அல்லது பணியிடத்துக்குச் செல்லும் போதுதான். இல்லையென்றால் ஒப்பனையில்லாத மற்ற சராசரி நாட்களிலும்தானே. ஒரு பெண் எப்போது அழகாக இருக்கமாட்டாள் என்றால் அவளது திருமணத்தின் போது போடப்படும் ஒப்பனையினால்தான். பெண்களை அவர்களாகவே காட்டினால்தான் எவ்வளவு அழகு. கிறுக்குகளாகவும், அசடுகளாகவும், "ஹலோ" என்ற வசனத்தை எல்லாப் படங்களிலும் பேசும், சற்றும் பொருந்தாத நவீன உடைகளும், அவிழ்த்து விட்ட கூந்தலை தேவையே இல்லாமல் காதோரம் ஒதுக்கி விட்டுக் கொண்டு பேசும் தமிழ்ப்பட தவளைகள் நினைவுக்கு வருகிறார்கள். அதனால் மலையாளப் படத்தில் வரும் பெண்கள் இயல்பாக அழகாக இருக்கிறார்கள். ப்ரேமத்தின் மலரும் அப்படியே. 

அடுத்ததாக 30 வயதான ஜோசப் ஒரு கேக் கடையில் வேலை செய்கிறான். அங்கே வரும் ஒரு பெண்ணுடன் ஏற்படும் நட்பு, ஈர்ப்பு. பின்பு அந்த உறவும் உடையும் நிலையில் இறுதியில் அவன் யாரை மணக்கிறான் என்பதெல்லாம் சுவையான திருப்பங்கள். இந்த மூன்று பருவக் காதல்கள்தான் ப்ரேமம்.

இந்தப் படம் எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்று சொல்கிறேன். சில வருடங்களாகத் தமிழ்ப்படங்களில் முகச்சவரம் கூட செய்யாமல் இருக்கும் பொறுக்கிகளையே கதாநாயகனாகக் காட்டுகிறார்கள். அவனைக் காதலிப்பதற்கென்றே கதாநாயகி என்ற ஒரு பாத்திரம் வருகிறது. அடுத்த சீர்கேடாக தொடர்ந்து குடிக்கும் காட்சிகளும், சாராயக்கடையில் போதையைப் போற்றிப் பாடும் குத்துப்பாடல்களும் இருக்கின்றன. அடுத்ததாக எந்தவொரு அடிப்படையும் இல்லாம பெண்களை விமர்சித்துப் பாடப்படும் காதல் தோல்விப் பாடல்கள். இவையெல்லாம் என்னால் அறவே ஏற்றுக்கொள்ளாத விடயங்கள் இவை மூன்றுமே ப்ரேமம் படத்திலிருக்கின்றன. 

கல்லூரி விடுதியில்/ நண்பர்களது அறையில் எப்போதும் குடித்துக் கொண்டும் ஊதிக் கொண்டும் இருக்கிறார்கள். இடையிடையே மாணவர்கள் குழுச்சண்டையிலும் (Cangwar) ஈடுபடுகிறார்கள். அது முறுக்கேற்றும் பின்னணிப் பாடலுடன் நாயகத்தனமாகக் காட்டப்படுகிறது. ரசிகர்கள் பூரிக்கிறார்கள். முதல் வருட இளைய மாணவர்கள் கல்லூரிக்கு முதல்நாளில் வரும்போது பகடி வதை(Ragging) செய்கிறார்கள். நாயகனே இவையனைத்தையும் முன்னின்று செய்கிறான். அவனுக்கு மலரின் அறிமுகமே இந்தப் பகடி வதையின் போதுதான் நிகழ்கிறது. போதாக்குறைக்கு வகுப்பிலேயே குடித்து விட்டு வந்தமர்கிறார்கள். மிகவும் தெளிவானவராகவும், பக்குவமானவராகக் காட்டப்படும் மலர் இந்தப் பொறுக்கியிடம் காரணமே இல்லாமல் காதல் வயப்படுகிறார். அதுவும் குடிபோதையில் "நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்" என்று சொல்லிவிட்டு விழுந்து விடுகிறான். அவ்வளவுதான் மலருக்கு மலர்கிறது காதல். இதைத்தான் என்னால் ஏற்க முடியவில்லை. ஒரு மலையாளப்படம் தமிழ்ப்படத்தளவுக்கு தாழ்ந்து விட்டதா ? 
பொறுக்கித்தனம் ரசனைக்குரியதல்ல
எப்படி மாணவர்களுக்கு இளைஞர்களுக்கும் அந்த வயதில் பீடி, சிகரெட், சரக்கு, கஞ்சா பழக்கங்கள், முரட்டுத்தனம் போன்றவை நாயகத்தனமாக இருக்கிறதோ, அது போலவே காதலும் இருக்கிறது. அது இயல்பான காதலாக இல்லை, ஒரு பெண்ணை கரெக்ட் செய்யும் வீரமாகவே செய்கிறார்கள். இப்படித்தான் இந்தப் படத்திலும் காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் காட்டப்படும் ஜோசப்பின் வயதில்தான் நானும் பள்ளி, கல்லூரி படித்தேன். என்னுடன் படித்த நண்பர்களை இந்தப் படம் நினைவூட்டியது. அவர்களும் இவர்களைப் போலத்தான் திரிந்தார்கள். அதையெல்லாம் இனிய போழுதுபோக்காக என்னால் கருத முடியவில்லை. தாங்கமாட்டாத எரிச்சலுடன்தான் அவர்களுடனெல்லாம் கழிக்க வேண்டி வந்தது. அதையெல்லாம் படத்தில் காட்டினாலும் எனக்குப் பிடிப்பதில்லை. மற்றபடிக்கு படம் குப்பை என்றெல்லாம் சொல்ல வில்லை. எனக்கு இது மாதிரியான காட்சியமைப்புகளில் உடன்பாடில்லை. அதை ரசிக்கும் மனநிலை எனக்கு இல்லை. நாயகன் என்றால் என்ன செய்தாலும் சரியாகாது. என்னுடைய உறுத்தல் இது மட்டுமே. மற்றபடிக்கு படம் எல்லோரும் ரசிக்கும்படிதான் இருக்கிறது. 

இந்தப் படத்தை தமிழில்/தெலுங்கில் எடுக்கக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில், மீம் (meme) போராளிகள் கூவி வருகின்றனர். மலையாளப்படம் தமிழிலோ அல்லது தெலுங்கிலோ எடுத்தால் அதைக் குதறிக் கொன்றுவிடுவார்கள் தமிழ் தெலுங்கு இயக்குநர்கள் என்பது உண்மைதான். இருந்தாலும் மலையாள வெற்றிப்படங்களை நம்பித்தான் தமிழகத்தின் எல்லா நடிகர்களுமே தமது சரிந்த சந்தையைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாக மலையாளப்படக் கதைகள்தான் தமிழ்நாட்டின் பல நாயக பிம்பங்களை விழுந்துவிடாமல் காத்து வருகின்றன. எல்லாவகை நடிகர்களுக்குமான கதைகள் அங்கே உருவாகின்றன. அதைக் காசு கொடுத்து வாங்கித்தான் பல நட்சத்திரங்கள் இங்கே மின்னுவதைப் போலக் காட்டிக் கொண்டிருக்கின்றன. 

அதே நேரம், How Old Are You ? படத்தை தமிழில் எடுக்காவிட்டால் எத்தனை பேர் அந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள். ப்ரேமம் ஒன்றும் தமிழில் எடுக்கக் கூடாத அளவுக்கு புனிதமான படமில்லை. மாதம் ஒரு அற்புதமான படத்தை மலையாளிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அதெல்லாம் காண்பதற்கு நல்வாய்ப்பு இல்லை. அவைகளுடன் ஒப்பிடும்போது ப்ரேம் பத்தோடு பதினொன்றுதான். மலையாளப்படம் என்றாலே பலான படம் என்றளவுக்கு தெரிந்து வைத்திருந்த தமிழ்த் தவளைகள் இப்போதுதான் விழிக்கத் தொடங்கியிருக்கின்றன. கடைசியாக ஷகிலாவின் கிண்ணாரத் தும்பிகள் பார்த்துவிட்டுத் தூங்கியவை, ப்ரேமம் பார்த்து விட்டு தமிழ் ப்ரேமம் வேண்டாம் என்கின்றன. அதே நேரம் நிவின் பாலிக்குப் பதிலாக நம்ம தமிழ் நடிகர்களை இதில் என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சிறியதாய் சில பெருந்தவறுகள்

சிறிய விடயங்களில் ஏற்படும் தவறுகளை நாம் பெரியதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் அந்தச் சிறிய தவறுதான் எத்தனை பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு முறை என் மனைவி ஒரு ஞெகிழிப் பையை மிக இயல்பாக சாக்கடையினுள் எறிந்தார். அங்கே ஏன் வீசறே ? என்றேன். வேற என்ன செய்யறது ? என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னொரு முறை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு வயதான பெண் மாடி வீட்டிலிருந்து வெளியே வந்து, குப்பைகளை ஒரு ஞெகிழிப் பையில் இட்டு நிரப்பி முடிச்சுப் போட்டு அதை அப்படியே சாக்கடைக்குள் வீசிவிட்டுச் சென்றார். சாக்கடை நம் வீட்டிற்குள் வரவில்லையே என்ற எண்ணம்தான். கொஞ்சம் நடந்து போய் குப்பையில் குப்பைத்தொட்டியில்தான் போட வேண்டும் என்ற அடிப்படை அறமே (அறிவெல்லாம் நிறைய இருக்கிறது) இல்லாதவர்கள் முழு மாடாக வளர்ந்து நிற்கிறார்களே நாம் என்னதான் செய்வது. இது ஏன் என்று முதலிலிருந்து விளக்க வேண்டுமா ? சாக்கடை அடைத்துக் கொண்டால் ஒரு மனிதன்தான் இறங்கி அடைப்பை நீக்க வேண்டும். அதற்கு உன்னைப் போன்றவர்கள் குப்பை வீசுவதுதான் காரணம் என்று விளக்கிச் சொன்னால்தான் தெரியுமா ?. இதற்காக ஒவ்வொருவரிடமும் சண்டைதான் போட்டுக் கொண்டிருக்க முடியுமா ?. விதிமுறைகளை மதிப்பவன் அடிப்படை மனிதநேயத்துடன் நடப்பவர்களையெல்லாம் பகடி செய்து விட்டோ அல்லது வேற்று கிரக வாசியைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டோ அல்லது மகாத்மாவாக்கிவிட்டோ இது போல் பலர் அலட்சியமாக செய்யும் தவறுகள் எத்தனை விளைவுகளுக்குக் காரணமாகின்றன. இதற்கெல்லாம் யார் தண்டனை கொடுப்பது ? யார் அவர்களுக்கு உணர்த்துவது ? விடிவே இல்லை. சரி தமிழுக்கு வருகிறேன்.

படம் - நன்றி கூகிள்
இது போன்றே இன்னொரு வழக்கமும் இருக்கிறது. சிறு அலட்சியமும், அதிகப்பிரசிங்கித்தனமும் எப்படி பேரழிவை உண்டாக்குமோ (கடலூர், சென்னை பேரழிவு போல) அது போல விளங்கும் தமிங்கிலப் புற்று நோய்தான். தமிழ் நாட்டில்தான் தமிங்கிலம் என்ற வகை உயிரினம் வாழ்ந்து வருகின்றது. இந்த உயிரினம் பலருக்குள்ளும் இருக்கிறது. நான் வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும், அனைத்து இடங்களிலும் தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளவன் அல்ல. ஆனாலும் எல்லாவிடங்களிலும் இயன்ற வரையிலும் தமிழே மணக்க வேண்டும் என்ற பேராவல் உடையவன். அதே நேரம் தற்காலத்தின் நடைமுறை சாத்தியங்களையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எந்த இடத்தில் ஆங்கிலம் தவிர்க்க முடியாது என்றும் எனக்குத் தெரிகிறது. ஆனால் வேண்டுமென்றே திணிக்கப்பட்டுப் பேசப்படும் ஆங்கிலம்தான் என்னை ஆத்திரத்தில் ஆழ்த்துகிறது. இது தனிமனிதர்கள் செய்யும் தவறுகள் தொடங்கி பெரிய தொலைக்காட்சி அலைவரிசைகள், நாளிதழ்கள், வார இதழ்கள் வரை செய்யும் தமிழ்க்கொலைகள், தமிழைக் கொன்று வளரும் தமிங்கிலம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தமிழைப் பயன்படுத்த முடியாத மிகவும் கடினமான தருணத்தில்தானே, இடத்தில்தானே ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் இல்லையா ? இங்கே என்ன நடக்கிறது. ஆங்கிலத்தால் சொல்ல முடியாத இடத்தில் மட்டும் தமிழைப் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக Dilemma, Cliche, De javu போன்ற சொற்களுக்கு தமிழில் நேரடியான சொற்கள் இல்லை அல்லது இன்னும் உருவாக்கப்படவில்லை அல்லது பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை என்றும் சொல்லலாம். 

இது போன்ற சொற்கள் தவிர்த்து, மிக எளிமையான சொற்களுக்குக் கூட வேண்டுமென்றே ஆங்கிலத்தைப் பிதுக்கி மேதாவித்தனத்தைக் காட்டுவதுதான் சகிக்கவே முடியாத்தாக இருக்கிறது. மம்மி(அம்மா), டாடி(அப்பா), ஆன்ட்டி(அக்கா/அத்தை/சித்தி), லைஃப்(வாழ்க்கை), வைஃப்(இல்லை), ஹேப்பி(மகிழ்ச்சி), குட்(நல்லது), ஓகே(சரி) பாய்ஸ்(பசங்க), ட்ரோலிங்(கிண்டல்), மேரேஜ்(திருமணம்), ஃபங்க்சன், பஸ், சாங்ஸ் இப்படித் தொடர்கிறது தமிழ்க் கொலை. ஏன் இவற்றை தமிழில் சொன்னால் தேய்ந்தா விடும் ? இல்லை தன்மானம் குறையுமளவுக்கு பழங்காலச் சொற்களுமல்ல. ஆனாலும் இவை ஆங்கிலத்திலேயே சொல்லப்படுகின்றன. நான் தற்போது தொலைக்காட்சிகள் பார்ப்பதையே அறவே நிறுத்தியாகி விட்டது. அவ்வப்போது தொலைக்காட்சியைக் கடந்து செல்லும்போதும், கட்டாயமாக பார்க்க வேண்டிய இடங்களில் கவனித்ததில் நினைவில் இருப்பதைப் பற்றியும்தான் நான் பேசுகிறேன். இவையெல்லாம் ஒரே நாளில் நிகழவில்லை. தாங்கள் வருடக்கணக்காக தமிழில் சொல்லி வந்த சொற்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தில் மாற்றிப் பேசி சுய இன்பம் காண்கிறது தமிங்கில இனம்.

இதற்கெல்லாம் என்ன காரணம், பண்பாட்டு மாற்றங்கள் மட்டும்தானா ? தமிழை வைத்துக் கல்லாக் கட்டி தமிழையே அழித்து வருகின்றவை, தொலைக்காட்சி அலைவரிசைகள்தான். பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே திரைப்படக் கழிவுகளும், நடிகர்களைப் பற்றியதுமாகத்தான் இருக்கின்றன. இதைத் தொகுத்து வழங்குகிறவர்கள் பங்கெடுப்பவர்கள் கான்வென்டில் படித்த தவளைகள். வெறும் இணைப்புச் சொல்லாக மட்டும் தமிழைப் பயன்படுத்துகிறவர்கள். நடிகர்களைப் புகழ்வது மட்டுமே இவர்களுக்கு வேலை. நடிகர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. ஒரே சார் மயம்தான். அந்த சார் இந்த சார். ஃப்ன்டாஸ்டிக்கா இருந்துச்சு, சூப்பர்பா பண்ணார். டிரைக்டர் சார் சொன்னார். ம்யூசிக் போட்டார் என்று ஆங்கிலச் சொற்களின் பின்னான் "ஆ" சேர்த்து பண்ணுச்சு, இருந்துச்சு, நொட்டுச்சு, புடுங்குச்சு என்றுதான் எல்லா இடத்திலும் பேசுகிறார்கள். இவர்களை தனது முன்மாதிரிகளாகவும், கனவு நாயகர்களாகவும், பொழுது போக்குக்காகவும் கருதுகிறவர்கள் இதையே பெரிய "புதுமைத்துவம்" என்று கருதி முடிந்த வரை ஆங்கிலத்தில் அசிங்கப்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று சொல்லிவிட்டு, திரைப்படம் என்று சொல்லாமல் சினிமா என்றே பயன்படுத்துகிறார்கள் இணைய எழுத்தாளர்கள். அம்மா என்பதை விட அதிகமாக சினிமா என்ற சொல் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. ஏனென்றால் சினிமாவுக்கு இன்னும் தமிழ்ப்பதம் கண்டுபிடிக்கப்படவில்லை பாருங்கள். 

இதில் ஆங்கிலத்திலேயே படித்து, ஆங்கிலம் பேசுமிடத்தில் வேலை பார்த்து அதனால் அப்படிப் பேசிப் பழகியவர்கள் கொஞ்சம் பேர்தான். ஆனால் இவர்களைத்தான் தமிழார்வலர்கள் அதிகமாக விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் தமிழை இழிவும் செய்து புறக்கணிப்பவர்கள் இது போன்ற மேட்டுக்குடித் தமிழர்கள் இல்லை. அரைவேக்காட்டு நடுத்தரத் தமிழர்களைத்தான் நான் குறை சொல்வேன். சாலைகளெங்கும் போகும்போது இருபக்கமும் இருக்கும் கடைகளின் பெயர்களைக் கவனியுங்கள். பெயர்ப்பலகைகளைக் கவனியுங்கள். உணவகம், அச்சகம், கடை, அடுமனை என்றெல்லாம் 95 விழுக்காடு கடைகளில் எழுதியிருக்க மாட்டார்கள். எல்லாமே ஏதாவது சாமி பெயரில் இருக்கும். ஆனால் ஹோட்டல், பிரிண்டிங் பிரஸ், ஸ்டோர்ஸ், பேக்கர்ஸ் என்று எழுதியிருப்பார்கள். இந்த அறிவாளிகளுக்கு என்னதான் தேவை, ஆங்கிலத்தில் எழுதினால் போதாதா ? ஆங்கிலத்தை ஏன் தமிழில் எழுத வேண்டும் ? ஏனென்றால் Hotel, Press, Bakery என்று ஆங்கிலத்தைத் தமிழ் எழுத்துக்களில் எழுதினால் மட்டுமே படிக்கத் தெரிந்த அறிவாளிகள் ஆங்கிலத்தில் எழுதினால் "உ" "ஊ" தான்.. உங்கள் கடைக்கு வந்து வாங்கப்போகிறவர்கள் தமிழ்நாட்டுக்காரர்தான். நீங்கள் ஒன்றும் ஜப்பானிலோ சைனாவிலோ அமெரிக்காவிலோ கடை வைக்க வில்லை. இத்துப் போன தமிழன்தான் வரப் போகின்றான். பிறகெதற்கு ஆங்கிலத்தின் பெயரை தமிழ் எழுத்துக்களில் எழுதி தமிழை அழிக்கிறீர்கள். ஒரு மொழியைப் பேச வேண்டும் கற்க வேண்டுமென்றால் அதை முறைப்படி வேறு வழிகளில்தான் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு இடையிடையே ஒரு சொல்லைப் புகுத்துவதும் தேவையில்லாத இடத்திலும் ஆங்கிலத்தைப் புகுத்துவதும் என்ன வகை தமிழ்(தாய்மொழி) வெறுப்பு மனநோய் ? குமரன் சில்க்ஸ், ஸ்ரீதிவ்யா பேக்கரி போன்ற பெயர்கள் சில எடுத்துக்காட்டுகள்.

நான் ஒன்றைக் கணித்து வைத்திருக்கிறேன் அது சரியா என்று தெரியவில்லை. இது போன்ற கடைகள், சிறிதும் பெரிதுமான கடைகள், மளிகைக் கடைகள், ஆலைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இது போன்றவற்றை நடத்துகிறவர்களுக்கு வயது எத்தனை இருக்கும் ? நிச்சயமாக 20 ஆக இருக்காது. 30, 40, 50, 60 இப்படி இருக்கும். இவர்களெல்லாம் ஆங்கில வாசனையே இல்லாத அரசுப் பள்ளிகள், தமிழ்வழிக் கல்வி கற்ற நபர்களாக இருப்பர். இவர்கள் தங்களுக்குத் தெரியாத ஆங்கிலம்தான் பெரிது என்றெண்ணிக் கொட்டாவி விட்டவாறே அரைவேக்காடு ஆங்கிலத்தில் பேசியும் பெயர்வைத்தும் தமிழ்ப் புறக்கணிப்புத் துரோகம் செய்வோர்களாக இருக்கின்றனர். மிகச்சிலரே ஊட்டி கான்வென்ட், இன்டர்நேசனல சிலபஸ் வகையான ஆங்கிலக் கல்விகள் கற்றவர்களாக இருப்பர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற தமிழகத்திற்கு வெளியே, இந்தியாவிற்கு வெளியே உலக அளவிலான வணிகம், சேவை, பணிப்பு, நியமம் வகையான நிறுவனங்கள் நடத்துகிறவர்களை விட்டு விடுகிறேன். அவர்களிடம் போய் தமிழில் தொழில் செய்யுங்கள் என்று சொல்ல முடியாது. ஆங்கிலம் என்பது ஏறக்குறைய உலக மொழியாக இருக்கிற காரணத்தால் அவர்கள் ஆங்கிலத்தில்தான் பெயர்வைக்க முடியும் தங்களுக்குள்ளேயான தகவல், ஆவண பரிமாற்றங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் செய்து கொள்ள முடியும். ஆனால் தமிழகத்திற்குள்ளேயே தமிழர்களிடம் மட்டுமே, அதுவும் தனது தெருவுக்குள்ளேயே பணி, வணிகம், தொழில் செய்யும் பிராணிகளுக்கு எதற்கப்பா ஆங்கிலப் பித்து. அதையும் தப்புத் தப்பாக எழுதி மானத்தை வாங்குகிறார்கள். இவர்களிடம் ஒவ்வொருவரிடமும் போய் சண்டை போட்டா தமிழைக் காக்க முடியும். சொல்லுங்கள். தமிழை வளர்ப்பது எவ்வளவு தேவையே அதை விடத் தேவை இருக்கும் தமிழை அழியாமல் காப்பதும். யாரிடமிருந்து தமிழர்களிடமிருந்துதான் என்பது என்ன ஒரு தர்மசங்கடம் பாருங்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment