கற்பழிப்பு என்ற சொல்லின் பொருள்தான் என்ன ?

தற்போது  டெல்லி நிகழ்வு பரபரப்பான பேசப்படு பொருளாகியிருப்பதால் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வரை எல்லா இடத்திலும் கற்பழிப்பு என்ற சொல்லைக் காணவும் கேட்கவும் வேண்டியிருக்கிறது. எல்லோரும் சொல்லி  வைத்த மாதிரி கற்பழிப்பு கற்பழிப்பு என்று எழுதித் தள்ளுகிறார்கள். அதன் பொருள்தான் என்ன ? ஒரு சொல்லின் பொருள் தவறு என்று தெரிந்த பின்னும் இன்னும் திரும்பத்திரும்பப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன ? அறியாமையா இல்லை அலட்சியமா ?

ஒரு சொல்லில் மூலம் வரலாற்றையெ மாற்றிச் சொல்லி விட முடியும். பல உதாரணங்கள் இதற்குக் குறிப்பிடலாம்.

ஆரியர் வருகை முகலாயர் படையெடுப்பு - ஆரியரும் படையெடுத்துத்தானே வந்தார்கள் ?

கொலம்பஸ் அமெரிக்காவைக் "கண்டுபிடித்தார்" - அது அங்கேதானே இருந்தது பிறகென்ன கண்டு பிடிப்பது. இந்த கவர்ச்சியான செய்தியில் கொலம்பஸ் என்ற கொலைகாரன் வரலாறு வரை பல செய்திகள் மறைக்கப்படுகின்றன.

அன்னை இந்திரா காந்தி - இவரது உண்மையான பெயர் இந்திரா கான் என்று இருந்திருக்க வேண்டும். இவர் மணந்தது ஒரு பார்சி முஸ்லிமை. இவரது கான் என்ற (முஸ்லிம்) குடும்பப் பெயர் இந்தியாவை ஆள்கின்ற குடும்பத்திற்கு வரக்கூடாது என்பதற்காக காந்தி தனது பெயரை விட்டுக்கொடுத்தார்.

அடுத்து அண்ணல் காந்தியடிகள் மஹாத்மா காந்தியடிகள் என்று பல இடங்களில் பெயர் சொல்லி புகழ்கிறார்கள். காந்தியை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர், ஜாதியை ஒழிக்கப் பாடுபட்டவர் என்றும் பல பிரச்சனைகளுக்கு சர்வரோக நிவாரணியாக எடுத்துக் காட்டுகிறார்கள். மராட்டியத்தைச் சேர்ந்த ஜாதி எதிர்ப்பாளர் ஜோதிராவ் பூலே என்பவரைத்தான் முதன் முதலில் மகாத்மா என்று அழைத்தனர். அதே போல் அம்பேத்கர் அண்ணல் என்று அழைக்கிறோம். இவர்களது பட்டப்பெயரை காந்திக்குத் தாரை வார்த்து விட்டதால் மேற்கண்டவர் யாரேன்றே எவருக்கும் தெரியாது. அதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளுக்குப் போராடிய பல போராளிகளை இருட்டடிப்பு செய்கின்றனர்.

ஜப்பானில் அணு குண்டு வீசியதை மறக்கடிக்க கொண்டாடப்படும் உலக நட்பு நாள்.

இப்படிப் பலவாறு சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது கற்பழிப்புக்கு வருவோம்.

                                                         

இதைத் தெரிந்துதான் பயன்படுத்துகிறீர்களா இல்லை அறியாமலா ? நான் சொல்வது பாலியல் வன்முறை, வன்புணர்ச்சி, வன்கலவி, வல்லாங்கு என்று பல சொற்கள் இருக்கின்றன. இருப்பினும் தொடர்ந்து கற்பழிப்பு என்றே எல்லாரும் சொல்கின்றனர்.

ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று எழுதுவது தேவையில்லாததும், தவறானதும் ஆகும். ஆனால் ஆர்வத்தினால் அப்படி எழுதுகின்றனர். இதை மட்டும் ஏன் இப்படி ? இன்னொன்று பெண்களை ஃபிகர் என்றுதான் எழுதுவேன் என்று அடம் பிடிக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் போய் கற்பழிப்பு என்று சொல்ல வேண்டாமே என்று சொல்ல சலிப்பாக இருக்கிறது.

இந்த கற்பு என்பதே பெண்களை அடக்கி வைத்து ஆண்கள் ஊர்மேய்வதற்கு உருவான ஒரு கருத்து. இதை இன்னும் பயன்படுத்துவதன் உள்நோக்கம் என்ன ? ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் போது அவளை ஒரு விபத்தைச் சந்தித்தவளாகவே நடத்த வேண்டும் அல்லாது களங்கப்பட்டவள் என்ற குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடாது. ஒரு வெறிநாய் கடித்து விட்டால் ஏற்படும் பரிதாப உணர்ச்சி மட்டுமே ஏற்பட வேண்டும். அய்யய்யோ வாழ்க்கையே போச்சே என்ற நிலையை ஏற்படுத்துகிறார்கள்.

முதலில் கற்பு என்றால் என்ன ? அதை எப்படி அழிக்க முடியும். கன்னித்தன்மை பறிபோனதைச் சொல்கிறார்களா ? கன்னித்தன்மை போனால் அது எப்படி கற்பழிப்பாகக் கருத முடியும். சரி பருவமடையாத குழந்தைகள் கூட வன்முறைக்கு ஆளாகிறார்கள் அதை எப்படி கற்பழிப்பு என்று சொல்கிறார்கள். கற்பு என்பது மனம் தொடர்பானது என்று கதை சொல்வார்கள். குழந்தைகளுக்கு பாலியல் குறித்தும் அதன் ஒழுக்கும் நேர்மை கலாச்சாரம், கற்பு இதெல்லாம் என்னவென்றே தெரியாது. பிறகெப்பப்படி பாலியல் வன்முறையின் போது அவர்களின் கற்பு அழியும்.

கற்பு, ஒழுக்கம், நடத்தை, கள்ளக்காதல் எனப் பல சொற்களும் பெண்களைக் குறிவைத்தே எழுதப்படுகின்றன. இந்த டெல்லி நிகழ்வு பெரிய பரபரப்பானதால், பலரும் உச் கொட்டினார்கள். இதில் நாளும் பார்வைகளாலும், பேச்சுக்களாலும் பெண்களை வன்முறை செய்து வரும் பலரும் இதைப் பற்றி பேசினார்கள் கோபப்பட்டார்கள்.

என்னுடைய நட்பு வட்டாரத்தில் ஒரு உள்ளம் இனிமே அந்தப் பொண்ணு வாழ்றதே வேஸ்ட்(மானம் போயிடுச்சாம் எல்லாருக்கும் தெரிஞ்சிரிச்சாம்) என்று திருவாய் மலர்ந்தது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பாதிப்பேராவது இப்படித்தான் நினைத்திருப்பார்கள். இப்படிச் சொல்ல வைப்பது என்ன வகையான மனப்பான்மை. கற்பழிப்பு என்ற கருத்துப் பொதிந்த சொல்லை பயன்படுத்துவதும் ஒரு காரணமில்லையா ?

ஆணுக்கும் கற்பு உண்டு என்று காளை மாட்டில் பால் கறக்கச் சொல்கிறார்கள். குப்புசாமி கற்பழிக்கப்பட்டார் என்று செய்தியைத் தலைப்பாகப் போட்டால் எல்லாரும் சிரிப்பானுகளா இல்லையா ? பிறகெதற்கு இந்த நோக்காடு ?

மாற்றுத்திறனாளர்களை ஊனமுற்றவர் என்றும், திருநங்கைகளை அலி என்றும் எழுதுங்களேன் பார்ப்போம், அதை மட்டும் பக்குவமாக மாற்றிக் கொண்டு எழுதும்போது இதை எழுதுவதற்கு மட்டும் ஏன் வலிக்கிறது.

ஏதோ ஒரு இடத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் பட்டியல் பார்த்தென் அதில் பெண்களுக்கான பெயர்களில் கற்பு என்று இருந்தது.

கற்பழிப்பு என்று எழுதுவதை நிறுத்துவது அவ்வளவு கடினமா என்ன ? நிறுத்துங்களேன். எத்தனை முறைதான் மெனக்கெட்டுச் சொல்வது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஆகையினால் பெண்ணுடலை சிதைக்கிறோம்


உன்னை வன்புணர்ந்தது என் குற்றமல்ல
நீ இரவில் சுற்றுவது எனக்கு உறுத்துகிறது
நீ உடலைக் காட்டுவது எனக்கு விறைக்கிறது

உன்னை இடிப்பதென்னுரிமை
இரவு விடுதிக்குச் செல்வது உனதுரிமை என்றால்
உன்னை உரசுவது எனதுரிமை
ஊர்சுற்றுவது உனதுரிமை என்றால்


உன்னை வன்புணர்ந்தது என் குற்றமல்ல
நீ எதிர்த்துப் பேசியதால் எனக்குக் கோபம் வந்தது
உன்மேல் அமிலம் ஊற்றியது என் குற்றமல்ல
நீ காதலை மறுத்ததால் எனக்கு எனக்கு வெறி வந்தது
மகளாய் இருந்தாலும் உன்னை வெட்டுவது என் குற்றமல்ல
நீ மாற்றானை காதலித்ததால் என் மானம் போனது

நீ ஏமாந்ததற்கு நான் பொறுப்பல்ல
இசைந்ததால் உன்னை மென்புணர்ந்தேன்
மறுத்தால் வன்புணர்வேன்

என் கண்கள் உன்னை மேய்வதற்கு நான் காரணமல்ல
நீ தெருவில் நடப்பதே காரணம்
நீ வயதுக்கு வராத சிறுமியாய் இருப்பது என் குற்றமல்ல
மதுவில் மயங்கியிருந்த என்னிடம் சிக்கியதே உன் குற்றம்

நாங்கள் இச்சை தீர்க்க உங்களைப் புணரவும்
மானம் காக்க உங்களைக் கொல்லவும்
வரம் பெற்றவர்கள்

எங்கள் கொண்டாட்டத்தை காஸநோவா 
என்று சிறுமைப்படுத்திக் கொண்டோம்
உங்கள் திண்டாட்டத்தையோ தேவடியா
என்று பெருமைப்படுத்தினோம்

நீங்கள் பாதுகாப்பாய் இருக்க கற்பை உங்களுக்காக
விட்டுக் கொடுத்திருக்கிறோம் நாங்கள்
கால்களுக்கிடையில் வைத்து காத்துக் கொள்ளுங்கள்
என்றாவதொருநாள் என்னினத்தைச் சார்ந்த ஒருவன்
உங்கள் உயிரை எடுத்தாவது அதை அழிக்கும் வரையில்

யான் கற்றதன் சாரம் இதுவே
எங்களால் மாற்றவியலாததாகும்
ஆம் இயற்கையாக
நீங்கள் பெண்கள் நாங்கள் ஆண்கள் 

ஆகையினால் வன்கலவி செய்கிறோம்
எம்மைப் பிறப்பித்த உம் உறுப்பை சிதைப்பதில்
உம்மீதான எம் உரிமையை
நாங்கள் உயிர்ப்பிக்கிறோம்


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment