சமீபத்தில் இரு தற்கொலை செய்திகள் கேட்டு வருந்தினேன்.
முதலாவது இலங்கைத் தமிழர்க்கு நேர்ந்த துயரம் கேட்டு ஒரு இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தற்கொலை செய்து கொண்டார். இப்பேர்ப்பட்ட மனிதர்களும் நம்முடன் வாழ்கிறார்கள். தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு துணிந்துவிட்டவர்கள் கொஞ்சம் வாழ்ந்தால் இன்னும் எத்தனையோ செயல்களைச் செய்ய முடியும். உயிருக்கே துணிந்தவரகள், வேறு எதைத்தான் செய்யத் துணியமாட்டார்கள். வாழவே தகுதியில்லாத, வாழவே கூடாத கொலைகாரர்களெல்லாம் மகிழ்ச்சியாக பவனிவரும் வேளையில் நீங்கள் ஏன் சாகவேண்டும். இவர்கள் சாவதால் தன்னலவாதிகளான அரசியல் தலைவர்கள் மாலை போட்டு இரங்கல் தெரிவித்தும் பயன் பெறுகிறார்கள். தமிழர்களுக்கு மட்டுமே தற்கொலை செய்துகொள்வதும், இரங்கல் தெரிவிப்பதுமே தொழிலாகிப் போனது. பொறியியல் முடித்து, வேலையில் இருந்தவர், இப்படி தற்கொலை செய்வதால் இலங்கைத் தமிழர்களுக்கு என்னதான் விடிந்துவிடும் ? உங்கள் குடும்பத்தினர் சிக்கல் இன்னும் அதிகமாகும். மற்றபடி துரும்பைக் கூட நகர்த்த முடியாது. இதற்காக தற்கொலை செய்து கொண்டவர்களது ஈகத்தை கொச்சைப்படுத்துவதாக பொருளில்லை. போர் நடந்த போது முத்துக்குமார் தொடங்கி 17 பேர்வரையில் தீக்குளித்து தம்மை மாய்த்துக் கொண்டார்கள். அது போர்நடந்த சூழலி உணர்ச்சிகரமாக இருந்ததெனக் கொள்ளலாம். இதில் கேவலம் அவர்களது ஈகமும் தன்னலவாதக் கட்சிகள் எவ்விதம் தமது லாபத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் எனபதையும் நாம் கண்டோம். இது போல் தற்கொலை செய்து கொள்ள அரசியல் கட்சிகள் அப்பாவிகளைத் தூண்டுவதாகவும் தெரிகிறது.
இரண்டாவது, கோவையைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தவறாக வந்த அழைப்பில் தொடங்கி, அலைப்பேசியிலேயே காதலை வளர்த்துள்ளார். பேசிய பெண்ணின் குரல் மிகவும் இனிமையாக இருந்ததாம். பின்பொருநாள் இருவரும் சந்தித்துள்ளனர், முதன்முறையாக. அப்போது குரல் இனிமையாக இருந்ததை வைத்து ஆளும் அழகாக இருப்பாள் என்று கணக்குப் போட்டிருந்திருக்கிறார். ஆனால் அந்தப் பெண் அழகாக இல்லையென்பதைக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறார். இதை நண்பர்களிடமும் சொல்லிப்புலம்பியிருக்கிறார். பின்பு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம். என்ன அபத்தமிது ? காதலி அழகாக இல்லை என்பதற்காக தற்கொலை செய்வதா ? என்னதான் சொல்வது இதற்கு ? அழகை விமர்சிக்கலாமா வேண்டாமா தெரியவில்லை. இருந்தாலும் சிலவற்றைச் சொல்லவேண்டும்.
அழகை மட்டுமே நேசிப்பது காதலா ? ஒரு பெண்ணுடன் பழகினால்தான் (அவள் So called அழகாக இல்லாவிட்டாலும்) அவள் அழகியாகத் தெரியும் அதிசயம் தெரியும். இது என்னுடைய சொந்த அனுபவம் கூட. ஆண்களுக்கோ கண்களுக்கு அழகாக இருந்தால்தான் பழகுவதற்கே விரும்பும் மனநோய். உருவம் பார்த்துத்தான் நட்பு கொள்ளலாமா என்றே சிந்திக்கிறார்கள். ஒரு பெண்ணை மதிப்பிட வைத்திருக்கும் ஒரே சொல் அவள் அழகற்றவள். ஆண்களின் மொழியில் அல்லது வழக்கு மொழியில் சொல்லப் போனால அட்டு ஃபிகர், மொக்க ஃபிகர், சப்ப ஃபிகர். இப்படியாக போகிறது கதை.
பெண்ணை அழகாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் ஆணாதிக்கமாகவே கருதமுடியும். ஆணாதிக்கமென்றால் என்ன ? தான் (ஆண்) எப்படியெல்லாம் இருக்கத் தேவையில்லையோ வேண்டியதில்லையோ அப்படியெல்லாம் இருக்க வேண்டுமென பெண்ணை எதிர்பார்ப்பது. அது போல்தான் அழகும். ஆணுக்கு அழகு தேவையில்லை ( வேறு எதுதான் தேவை? ஒன்றுமே தேவையில்லை என்றுதானே நினைக்கிறார்கள்) , பெண் மட்டும் அழகாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறான். இந்த என்னமோ சொல்வாங்களே மென்மை, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, மசிரு, மட்ட என்பதைப் போல அவைகளையெல்லாம் தள்ளி பெண்களுக்கான மதிப்பீடுகளில் இந்த அழகு முதலிடம் பிடித்திருக்கிறது.
அழகு என்றால்தான் என்ன ? முதலில் வருவது சிவப்பு நிறம். இதிலேயே பாதிபேர் வரமாட்டோம். நல்ல முகவெட்டு, சீரான பல்வரிசை, அளவான உயரம், உடல்வாகு. இது எல்லோர்க்கும் அமையாது. யாரும் வேண்டுமென்றோ அழகில்லாமல் பிறக்க விரும்பவில்லை. என்ன செய்வது ? பிறந்த உருவத்துடன்தான் வாழமுடியும். நாட்டில் பாதிப்பேர் அழகில்லாமல்தான் இருக்கிறார்கள். எல்லோரும் திருமணம் செய்து கொண்டுதான் வாழ்கிறார்கள்.
சரி அப்படியே அழகா இருந்தாலும் நாள் முழுவது இருந்து கொஞ்சிக்கொண்டே இருக்கமுடியுமா ? அழகாக இருப்பதால் ஊரில் இருக்கும் நாய்களெல்லாம் நோட்டமிடும். அந்த அழகு எத்தனை நாளைக்குத்தான் இருக்கும் ? திருமணம், குழந்தை என்றான பிறகு குண்டாகி அழகே போய்விடுகிறது. எல்லோரும் மோனிகா பெலுச்சியில்லையே ! பிறகென்ன செய்வது ? ஆண்கள் வேறு அழகிகளைத் தேடத் தொடங்குகிறார்கள். சில நயன்தாராக்களும் இருக்கிறார்கள் அவர்களுக்காக !.
எல்லா ஆண்களும் தன்னுடைய துணை அழகாக இருக்க வேண்டுமென பேராசைப்படுகிறார்கள். காரணம் அவர்கள் அழகான பெண்களை மட்டுமே பெண்களாக மதிக்கிறார்கள். அழகில்லாத பெணகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை.(அழகான பெண்களையும் மனிதர்களாக மதிப்பதில்லை ஃபிகராக அதாவது துய்க்கப்பட வேண்டிய பொருளாக மட்டுமே கருதுகிறார்கள்.) அழகில்லாத பெண்களை காதலிப்பவர்களை காதலிப்பவர்களை மணந்து கொண்டவர்களை இவர்கள் கேலி செய்கிறார்கள்.
சில வக்கிரங்கள்
உம்மூஞ்சிக்கு சரியான ஜோடிதான்டா அது.
இதெல்லாம் ஒரு ஃபிகர்னு சுத்திட்டிருக்கியேடா ?
உனக்கு டேஸ்ட்டே இல்லையாடா?
சத்தியமா சூப்பரா இருக்குதுடா நம்புடா
இந்த ஃபிகருக்குத்தான் இத்தனை பில்டப்பு குடுத்தியா ?
இவ பின்னாடிதான் இத்தன நாள் அலஞ்சியா?
இதே மறைமுகமாக பேசினால்...
யப்பா அவன் ரொம்ப பெரிய மனசுக்காரன்டா! எப்படித்தான் அந்த மூஞ்சிகூட குடும்பத்த நடத்துறானோ ?
அடத்தூ சரியான அட்டு அது. பாத்தாலே வாந்தி வந்திரும் அது கூட போய் .
ரெண்டும் அழகோ அழகு கொஞ்சிக்கறதப் பாத்தா எட்டி ஒதக்கலாம்னு இருக்கும்.
இன்னும் சிலர் சாலையில் செல்வோர்க்கெல்லாம் ஜோடிப்பொருத்தம் பார்த்து விமர்சனம் செய்வார்கள்.
ஆணும் பெண்ணும் நடந்து சென்றால் உடனே ஒரு கருத்துச் சொல்லாவிட்டால் இவர்களுக்கு அடங்காது. அவர்கள் அண்ணன் தங்கையாக இருக்கலாம். நண்பர்களாக இருக்கலாம், உறவினராக இருக்கலாம், காதலராகவோ, இணையர்களாகவோ இருக்கலாம்.
அந்த ஆண் அழகற்றவனாக இருந்தால் என்ன சொல்வார்கள்.
இந்த மூஞ்சிக்கேல்லாம் எப்பேர்ப்பட்ட ஃபிகர் கிடைச்சிருக்கு பாரு!
அந்த பெண் அழகில்லாமல் இருந்தால்
இதெல்லாம் ஒரு மூஞ்சினு தள்ளிட்டுப் போறாம் பாரு!
இது போன்ற வசனங்களையெல்லாம் கேட்டுக் கேட்டு எனக்கு இன்னும் தாழ்வு மனப்பான்மை அதிகமானது. வெள்ளையானவர்களின் அருகிலிருந்து புகைப்படம் எடுத்துக்ககொள்ளும்போதோ (ஒரு புகைப்படத்தினைப் பார்த்து அப்படியே ப்ளாக் அண்ட் வொய்ட் படம்பார்த்த மாதிரி இருக்குடா! என்றார்கள்) அல்லது நண்பியுடன் நடந்து போகும்போதோ எந்த கருமம் என்ன நினைக்குமோ என்றெல்லாம் கவலைப்படத் தோன்றுகிறது.
ஒரு நண்பன் சொன்னான். வெளி நாட்ல சர்வே எடுத்தாங்களாம். அதில நெறயா பொண்ணுங்க கருப்பா இருக்கற ஆணைத்தான் பிடிக்கும்ணு சொன்னாங்களாம்." இதில் அவன் சொன்ன "பொண்ணுங்க" என்பதன் பொருள் அழகான பெண்கள். அவர்கள் ஏற்றுக் கொள்வது இருக்கட்டும், இவன் கருப்பாக இருக்கும் பெண்களை இவனுக்கு பிடிக்காததால்தான் அழகான பெண்கள் கருப்பான தன்னை விரும்பவேண்டுமென நினைக்கிறான். வெளிநாடுகளில் வெள்ளை ஆண்கள் நீக்ரோ பெண்களை மணப்பதோ இவன் கண்களுக்கு அதிசயமாகத் தெரியவில்லை. அதற்காக அங்கு நிறபேதம் இல்லை என்று சொல்ல வரவில்லை. இவனது மனப்பான்மைக்குக் காரணம் அவன் மட்டுமல்ல. சமூகத்தில் அழகானவர்க்கு கிடைக்கும் அங்கீகாரமும்தான் காரணம். அதனால்தான் வரப்போகும் மனைவி கருப்பாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறான்.
பெரும்பாலும் அழகான பெண்களே காதலிக்கப்படுகிறார்கள், காதலிக்கிறார்கள். சராசரி பெண்களெல்லாம் காதலிக்கப்படுவதில்லை. இவர்கள் எப்படிக் காதலிக்கத் தொடங்குகிறார்கள் என்று பார்த்தால், போகவர பெண்களையெல்லாம் சைட்டடிக்க வேண்டியது அதிலொரு ஃபிகரை வட்டம் கட்டி, அதை இலக்காக வைத்து, மடக்க வேண்டியது. பின்பு அவளை அவனவன் தராதரத்திற்கு ஏற்ப காதலிப்பதோ, திருமணம் செய்துகொள்வதோ, அல்லது நட்பு பாராட்டுவதோ, கடலை போட்டு பொழுதைப்போக்குவதோ, அல்லது அனுபவித்துவிட்டு கழட்டிவிடுவதோ நடக்கிறது.
அழகாக இருக்கும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் எத்தனை என்று அவர்களுக்குத்தான் வெளிச்சம். சாலையில் நடந்தால் அனைவரது கண்களும் வன்கலவிக்கு ஒப்பாக மொய்க்கும். பேருந்துகளிலும், நெரிசல்களிலும் புட்டங்களும், மார்புகளும் கசக்கப்படும். ஆண்களின் கலைக்கண்ணோட்ட விமர்சனத்துக்கு ஆளாகும். பொது இடங்களில் பார்க்கும் பெண்களையெல்லாம் இப்படித்தான் பார்க்க வேண்டுமென்பது ஆணுரிமையாகக் கருதுகிறார்கள் (தங்களுடைய ஃபிகர்கள் ரசிக்கப்படுவதை மட்டும் விரும்பவில்லை). பெண்களும் இதை ஆண்களின் இயலபே அப்படித்தான் என்று சாதாரணமாகக் கருதி விடுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவதையெல்லாம் கொஞ்சம் கேட்டால் அழுதே விடுவார்கள், ஏன்தான் அழகாய் இருக்கிறோமென்று.
இது சில சமயம் ஆண்களுக்கும் நேர்கிறது பெண்கள் அளவுக்கல்ல என்றாலும். வழக்கம் போல இதற்கும் நான் திரைப்படங்கள், விளம்பரங்கள், ஊடகங்களையே சாடும் சடங்கையே நடத்த வேண்டியிருக்கிறது. இந்த விளம்பரங்கள்தான் பெண்களை அழகாகவே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றன. 6 வாரங்களில் "சிவப்பழகு" நிறமேன்மை போற்றும் "ஃபேர் அண்ட் லவ்லி" மாதிரியான அழகுசாதனப்பொருட்களின் விளம்பரஙகள் சக்கை போடு போடுகின்றன. இது போன்ற முகப்பூச்சு, சோப், வாசனைத் திரவிய விளம்பரங்களில் அழகான பெண்களை சிரிக்கவைத்து காட்டுகிறார்கள். இதைப் பயன்படுத்தினால் அழகாகலாம் என்கிறார்கள். என்ன கொடுமையிது ? உண்மையில் ஒப்பனையில்லாமல் இவர்கள் எப்படியிருப்பார்கள் என்பது அவர்களது ஒப்பனைக்கலைஞர்களுக்கே தெரியும். இது போன்ற விளம்பரத்தில் சிவப்புநிறமில்லாத அசினும், ப்ரியாமணியும் நடிக்கிறார்கள். ரஜினியும், விஷாலும் நடிக்கட்டும் நான் நம்புகிறேன்.
தமிழ்ப்படங்களைக் காணுமளவுக்கு எனக்குத் துணிச்சல் இல்லை, இருப்பினும் சில நேரம் பார்க்க வேண்டிய கட்டாயத்தினால் சிலவற்றைப்பார்க்க வேண்டியிருக்கிறது. பார்த்தீங்கனா வேலைக்குப்போகாம ஊர்சுத்துறவன், தண்ணியடிச்சுட்டு ரவுசு பண்றவன், காத்தாடி உடறவன், சாவக்கட்டுக்குப் போறவன், பொம்பளப் பொறுக்கி இந்தமாதிரியான ஆண்களையெல்லாம் நயன், தப்ஸி, சமந்தா, தமன்னா, காஜல் மாதிரியான முழங்கைகள் கூட சிவந்திருக்கும் வெள்ளைத்தோல் பணக்கார அழகிகள் தேடி வந்து காதலிப்பார்களாம், அறிவுரை கூறித் தேற்றுவார்களாம். அட ராமா !
இது போன்ற மனநிலையில் வாழும் ஆண்களுக்கு இந்தத் மாதிரியான படங்கள் மிகவும் பிடிக்கின்றன. நமக்குத்தான் நடக்காது படத்திலாவது பார்க்கலாம் என்று தேற்றிக் கொள்கிறார்கள். இதில் குறிப்பிடத்தகுந்த விடயம் என்னவென்றால் இதில் நாயகிகள் அனைவரும் அழகாக இருப்பார்கள். நாயகர்கள் மட்டும் சராசரியாக இருப்பார்கள். அப்படியிருந்தும் அவர்கல் பெரிய இடத்து பணக்கார ஃபிகர்களை மடக்குவதே சாதனையாக ரசிகனால் வியந்து பார்க்கப்படுகிறது. அதே நேரம் சராசரி பெண்கள் இந்த அழகிகளுடன் தோழியாக வந்து நாயகியின் அழகு இன்னும் அதிகமாகக் காட்டப்படுகிறது. இதல்லாமல் அழகற்ற பெண்களை வைத்து சில அயோக்கியர்கள் செய்யும் நகைச்சுவை அருவருப்பின் உச்சம், சந்தானம், விவேக், கவுண்டமணி, வடிவேலு போன்றவரகளெல்லாம் மேலை நாடுகளில் இருந்திருந்தால் நிறவெறிக் கருத்துக்கும், மாற்றுத் திறனாளிகளைக் கிண்டலடித்தற்கும் வழக்கே தொடுத்திருப்பார்கள்.
இவர்கள்தான் இப்படியென்றால் தபூசங்கர் பாணியில்
"உன் கண்ணில் உள்ளதடி மின்சாரம்
நீ ஆக வேண்டுமடி என் சம்சாரம்
பொன்னகை எதற்கடி எனக்கு
உன் புன்னகை போதுமடி "
என்றெல்லாம் காதல் கவிதை எழுதுகிறவர்களும் பழைய ருஷ்ய பெண்களின் ஓவியங்கள், ஜப்பானிய, சீனத்து இளம்பெண்கள், வெள்ளைக்கார இளைஞிகளை, அல்லது அனுஷ்கா போன்ற அப்போதய பிரபல நாயகிகளின் புகைப்படங்களைப் போடுகிறார்கள். இந்தக் கவிதைகளை நானும் ரசிக்கிறேன். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இவையெல்லாம் காதலியின் உடல் வனப்பை, அழகை கவிதையாக, ஓவியமாக, வாசனையாக மிகைப்படுத்திப் போற்றுவதாகவே, காதலியை, காதலை போற்றாமல் உள்ளன, அதற்கு அந்த புகைப்படங்கள் சாட்சி சொல்கின்றன. இப்படியும் ஒரு பார்வை இருக்கிறது என்று சொல்ல வருகிறேன். (கவிதை குத்துமதிப்பாக எழுதினேன் உண்மையில் யாராவது எழுதியிருந்தால் பொறுத்துக் கொள்ளவும் சுட்டினால் நீக்கி விடுகிறேன்.)
இப்படியாக பெண்ணின் அழகே எல்லா இடத்திலும் முதன்மைப்படுத்தப்படுகிறது. அழகில்லாததாலேயெ பெண்களின் திருமணமும் நடக்காமல் தள்ளிப்போகிறது. அதனால்தான் இந்த "அழகு' என்ற சொல்லே எனக்கு ஆபாசமாகத் தெரிகிறது. (அழகானவரகள் மன்னிக்க எனக்கு வேறு வழியில்லை). இந்த அழகு பற்றிய மயக்கமெல்லாம் குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்காது. அழகான பெண்ணை காதலித்து மணந்தவர்கள், காதலிப்பவர்கள் காதலிக்குத் தெரியாமல் இன்னொரு ஃபிகரிடம் வழிவதும், மடக்குவதற்கும் எத்தனிப்பதும் இயல்பாகவே இருக்கிறது. காதலிக்கும் போது கையை அறுத்துக் கொண்டவரகள், பல் பேருடன் சண்டை போட்டவரகள், வீட்டினருடன் போராடித் திருமணம் செய்தவர்கள் இப்படியாக அனைத்து நண்பர்களையும் நானறிவேன். அனைவரும் மனைவிக்குத் தெரியாமல், இன்னொரு ஃபிகருடன் "நட்பை" வைத்துக் கொண்டுள்ளார்கள், கொள்ள விரும்புகிறார்கள். இதற்குத்தான் பெண்கள் அழகாக இருக்க வேண்டுமென ஆண்கள் விரும்புகிறார்கள். பெண்கள் அழகாக இருக்க வேண்டியதும் இல்லை, அழகாக இருப்பதும் அவரக்ள் கையில் இல்லை என்ற நடைமுறை எதார்த்தத்தையும் ஒத்துக் கொள்ள வேண்டும் ஆண்களும் சரி பெண்களும் சரி. எனவே அழகென்பதே உருவத்தில் (மட்டும்) அன்று, பண்பில், அன்பில் கூட காணமுடியும் என எல்லோரும் சொல்வதையே சொல்லி முடிக்கிறேன்.