அறிவியல் பட்டதாரிகளுக்கான வேலைகள் குறித்த சிறுகுறிப்புகள்


உயிர் அறிவியல் (Life Science) பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகளும் அதன் இயல்புகளும் பற்றிய ஒரு சிறு எளிய அறிமுகமாக எழுதியுள்ளேன்.

Medical Transcription 

Trnanscription  என்பதன் தமிழ்ச்சொல் எடுத்துஎழுதுதல் என்று கொடுத்திருக்கிறார்கள். Medical Transcription  பணிகளை வழங்க பல்வேறு சிறு சிறு நிறுவனங்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை பலவும் உள்ளன. நமக்கு என்ன வேலையென்றால் ஆங்கிலத்தில் பேசிய உரையாடலை பதிவு செய்யப்பட்டிருக்கும். அதை  சரியாக விளங்கிக் கொண்டு அதை எழுதத் தெரிந்திருக்க வேண்டும். ஓரளவுக்காவது ஆங்கிலப் புலமை இருக்க வேண்டும், அமெரிக்க ஆங்கிலம் புரியும் அளவிற்கு. நோய்களின் பெயர்கள், மருந்து, மாத்திரைகள் பெயர்கள் இவைகளை சரியாகக் கவனித்து அதை தட்டச்சு செய்ய வேண்டும். Medical Transcription  என்ற பிரிவில் இந்த பணிகள் செய்து கொடுக்கப் படுகின்றன.

Business Transcription

Business Transcription எனப்படுவது ஒரு நிறுவனத்தின் கொடுக்கல், வாங்கல், வணிக, நிதி விவகாரங்கள் ஆகியவை குறித்த விவரங்களைப் பற்றி எடுத்து எழுதுவதாகும். 

இது போன்ற நிறுவனங்களில் வேலைக்குச் சேர்வதிலுள்ள பிரச்சனைகள் 

பொதுவாக, நம்மிடம் ஒப்பந்தம் (ஓரிரு வருடங்களுக்கு ) போடச் சொல்வார்கள். நமது சான்றிதழ்களைக் கையளிக்கச் சொல்வார்கள். காரணம் நாங்கள் பணம் பெறாமல் பயிற்சியளிக்கிறோம், நீங்கள் இடையில் நின்றுவிட்டால் எங்களுடைய நேரமும், உழைப்பும் வீணாகிவிடும் என்பார்கள். பணியில் சேர்ந்த பின்பு 4 லிருந்து 6 மாதம் வரை பயிற்சிக்காலம் என்பதால் ஊதியமாக ரூ 4 அல்லது 5 ஆயிரம் வரையில் கிடைக்கும். உங்களது செய்ல்தன்மையைப் (performance) பொறுத்து ஊதிய உயர்வுகள் எதிர்பார்க்கலாம்.  நீங்கள் இரவு நேர வேலை பார்க்க வேண்டிய நிலைக்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் சான்றிதழையும் கொடுத்துவிட்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுவிட்டு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே விலக விரும்பினாலும் சிக்கலாகிவிடும். ஒப்பந்தகாலம் முடிய வேறு வேலைக்கு முயற்சி செய்யமுடியாது, வேலையை விடவும் முடியாது என்று தீர்மானம் எடுத்துக்கொண்டால் மட்டும் சேருங்கள். 

இதிலுள்ள பெரிய தடை முன்அனுபவம் இருந்தால்தான் சில இடங்களில் எடுத்துக் கொள்வார்கள். Medical Transcription பயிற்சி வகுப்புகள் அதிக அளவில் நடந்து வருகின்றன. அவற்றில் சேர்ந்துகொண்டும் வேலைவாய்ப்பினைப் பெற இயலும்.  பயிற்சி முடிந்தவுடன் வேலைவாய்ப்பு அளிக்கும் சில நிறுவனங்களும் உள்ளன.

Medical Coding and Medical Billing

Medical Coding (மருத்துவ குறிமுறையாக்கம்??) பணி என்பது, மருத்துவத்துறையில் ஒரு நோய் இருப்பதை உறுதிப்படுத்தும் முறை (diagnoses), கண்டறியும் முறை குறித்த வழிமுறைகள், நோய்க்கான சிகிச்சை முறைகள் பற்றிய வரையரைகளை,  குறிப்பிட்ட (குறிமுறையாக்க) எண்களுக்கு மாற்றுவது. ஒவ்வொரு நோய்க்கும், சிகிச்சை முறைக்கும் குறியீடாக வரையறை செய்யப்பட்ட எண்கள் (universal medical code numbers) உள்ளன. சரியாக கண்டுபிடித்து மாற்றுவது இந்தப் பணியின் நோக்கம். 

Medical billing 

மருத்துவமனைகள், மருத்துவர்கள் ஆகியோர்க்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்குமிடையேயான பரிமாற்றங்கள் பற்றிய விவகாரங்களைக் குறித்தது. மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகள் தமது மருத்துவ செலவை மருத்துவக் காப்பீடு மூலமாகவே செலுத்துவார்கள். நோயாளி மருத்துவரைக் கலந்தாலோசனை முதல் அவர் வீட்டிற்கு அனுமதிக்கப் படும் வரையில் நடந்த சிகிச்சைகள், செலவு, நோயாளியின் உடல்நிலை ஆகியவை குறித்த அறிக்கையைத் தயாரித்து அதை மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திற்கு அளித்து அவரது சிகிச்சைக்கான தொகையை மருத்துவமனைக்கு கையளிப்பது வரையில் மேற்பார்வை செய்வது இந்தப்பணியின் நோக்கம்.

நான் மேலே Medical Transcription பணிகளுக்குச் சொன்ன முன்னனுபவம் என்ற சொல்லை இதிலும் கேட்க நேரிடும். பயிற்சியளிக்கும், பயிற்சியுடன் வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும் உள்ளன.

BPO, KPO - நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள்

இவையிரண்டிலுமே மருத்துவம் தொடர்பான (உ.ம் Healthcare BPO) அல்லது வேறுதுறைகள் தொடர்பான நிறுவனங்களுக்கு Outsourcing செய்யும் நிறுவனங்கள் உள்ளன. 

BPO (Business Process Outsourcing) நிறுவனங்களின் வேலை என்பது Data Entry என்ற அளவிலேயே இருக்கும். ஒரு இடததிலிருப்பதைத் (தகவல்கள்) தொகுத்து இன்னொரு இடத்தில் நிரப்புவது என்றவாறு இருக்கும். 

KPO (Knowledge Process Outsourcing) நிறுவனங்களும் அடிப்படையில் BPO நிறுவனங்களின் இயல்பையே கொண்டிருக்கும். BPO என்பது வெறும் Data Entry ஆக இருக்கும், KPO என்பது Data Entry என்பதுடன் அதிலுள்ள தகவல்களை சரிபார்த்தல், தரப்படுத்துதல், நீக்குதல், சேர்த்தல், ஒப்பிடல் என்று சில ஆராய்வுகள், அலசல்களைக் கொண்டு அதனடிப்படையில் முடிவெடுத்து நிரப்புவது அல்லது விபரங்கள், அறிக்கைகள் தயாரிப்பது இப்பணியின் இயல்பாகும். இதில் இணையத்தேடல் இன்றியமையாத ஒரு பகுதியாக இருக்கும்.

இவை போன்ற பணிகளுக்கான  நேர்காணலுக்குச் செல்லும் போது தட்டச்சு செய்யவாவது தெரிந்திருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 25 சொறகள் அடிக்கும் அளவிற்காவது ஆயத்தமாக இருக்கவும்.




Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 5


கல்லூரியில் படிப்பை முடித்து வெளியே வந்ததும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு வேலையில் அமரும் வரை தலைவலிதான். அதுவும் நமது நணபர்களில் ஒவ்வொருவராக வேலை கிடைத்துச் செல்லச் செல்ல மன அழுத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டே செல்லும். உயிர்நுட்பவியல் படித்தவர்களுக்கு இந்த அனுபவமிருக்கும்.  கல்லூரியில் படிக்கிற காலத்திலெல்லாம் நண்பர்கள், உறவினர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என பலரும் "நீங்க எதப் பத்திப் படிக்கிறீங்க ?, படிச்சா எந்த மாதிரியான வேலை கிடைக்கும் ?" போன்ற கேள்விகளுக்கு முகம் கொடுத்திருப்பார்கள். நானும்தான். சும்மாவாச்சும் எதையாவது சொல்லித் தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது மருந்து கம்பெனியில் வேல கிடைக்கும் என்று அள்ளிவிட்டு சமாளித்து வந்தேன்.

உண்மையில் என்ன வேலைகளில் சேரமுடியும், அல்லது கிடைக்கும் என்பது குறித்து யாருக்கும் தெரியாது.படிக்கிறவர்கள் மட்டுமல்ல் பாடம் நடத்துகிற விரிவுரையாளர்களாலேயே சொல்ல முடியாது. அவர்களே வேறு வேலை கிடைக்காமல்தான் இங்கு வந்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் வேறென்ன சொல்ல முடியும் ?. நான் இளநிலை மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது, அதற்கு முந்தைய வருடம்தான் ஒரு பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு விரிவுரையாளராகச் சேர்ந்திருந்தார். அவர் அப்போதுதான் முடித்தவர் என்பதால் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு பேசவும் பழகவும் ஏதுவாக இருந்தது. அப்பவெல்லாம் பல்கலைக்கழக்த்தில் படித்தவர் என்றால், பெரிய அறிவாளியாகவும் இருக்க வேண்டும், படிக்கும்போதே வேலை கிடைத்து விடுமென்றும் நம்பிய காலம். ஏன் சார் இந்த வேலைக்கு வந்தீங்க ? என்று கேட்டேன். அவர், " என்னடா பண்றது, வீட்ல சும்மா இருக்க முடியல. வண்டிக்குப் பெட்ரோல் போடவாவது காசு வேணும்ல? என்றார். 


கலை அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு இந்த நிலையென்றால், பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் எங்களைக்காட்டிலும் சிரமப்பட்டுப்படித்திருப்பார்கள், செலவும் கூடுதலாகவே செல்வாகியிருக்கும். அவர்களுக்கும் இதே நிலைதான். பலபேர் இப்படிப் புலம்புவார்கள். "பேசாமப் பொண்ணாப் பொறந்திருக்கலாண்டா. படிப்ப முடிச்சமா, கல்யாணத்தப் பண்ணி வ்ச்சிருவாங்க. இப்படித் தெருத்தெருவா அலைய வேணாம்". 


பல நூற்றுக்கணக்கான அறிவியல் இளையர்களும் (BSc), அறிவியல் நிறைஞர்களும் (MSc) எல்லா மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும், படிப்பை முடித்த கையோடு, பெட்டியுடன் வந்திறங்கி டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூர், ஓசூர், சென்னை, கோவை போன்ற நகரங்களிலும், சிறுநகரங்களிலும் வாடகைக்கு அறைகளைப் பிடித்தும், நண்பர்களுடன் ஒண்டிக்கொண்டும், உறவினரின் வீட்டில் இருந்துகொண்டும்,  resume - ஐக் கையில் கொண்டு தெருதெருவாக முட்டிதேய நடந்து கொண்டிருக்கிறார்கள். இது எந்தவொரு பட்டதாரிகளுக்கும், படிப்புகளுக்கும் பொருந்தும். வேலை வாய்ப்புக் கண்காட்சியில் அரைகிலோமீட்டர் நீளத்திற்கு வரிசையில் காத்திருந்து நொந்து நூலாகிவிட்டு ஏண்டா படித்தோம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

இதெல்லாம் அவநம்பிக்கையூட்டவோ, குழப்பவோ சொல்லவில்லை. மொத்தமாக வேலை ஒன்றுமே கிடையாது என்பதும் இல்லை. ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. பல பேருக்கு சிரமமாகத்தான் உள்ளது. இதுதான் நிலை என்பது ஓரளவிற்கு எல்லொருக்கும் தெரிந்ததுதான். அதனால் உயிர்நுட்பவியல் போன்ற படிப்புகளில் சேரவிரும்புகிறவர்கள் ஒன்று பண வசதியுடைவராக இருப்பவர்களானால் வெளிநாடு சென்றுவிடுவார்கள், இல்லை மிகவும் நன்றாகப் படிப்பவர்கள் ஏதாவது ஆராய்ச்சிக் கல்வியில் சேர வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் கிடைத்து விடும். குடும்பச் சுமையில் பங்கெடுக்க வேண்டிய நடுத்தர மாணவர்கள் பிரமாதமாகப் படிக்கவும் இயலாமல்  அல்லது பணவசதியுமில்லாமல் அதிக நாட்களுக்கு அப்பாவின் காசில் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் நிலைக்கு ஆளாக வேண்டும். என்து சொந்தக் கருத்து என்னவென்றால் , இது போன்றவர்கள் இளநிலைப் பட்டம் முடித்தவுடன் வேலை தேடத்தொடங்குவதுதான் சிறந்தது. 

இதை ஏன் கூறுகிறேனென்றால் அதிகம் வேலைவாய்ப்பை வழங்கும் துறைகள்  தகவல் தொழில்நுட்பத்துறையும், அதை சார்ந்தியங்கும், சேவைத்துறையும் தான். இவற்றில் பெரும்பாலானவை தமது வேலைக்குத் தேவையான  தகுதியாக ஒரு இளநிலைப் பட்டத்தையே அளவுகோலாக வைத்துள்ளனர். சில நேர்காணல்களில் என்னை வெளியேற்றியதற்குக் காரணம் என்னுடைய முதுகலைப் பட்டமே. ஏனென்றால்  கூடுதல் தகுதியாம் (over qualification ). இன்னும் சில இடங்களில் நீங்கள் உயிர்நுட்பவியல் படித்தவர்கள். வேறு நல்ல வேலை கிடைத்தால் இதை விட்டுவிடுவீர்கள். அதனால் உங்களை நம்பி வேலை கொடுக்க முடியாது என்றும் சொன்னார்கள். அதாவது நான் சும்மா தற்போதைக்கு இதுல சேர்ந்திட்டு வேற "நல்ல" வேலை கிடைத்துச் சென்று விடுவேனாம். வேலை தரமுடியாது என்பதைக் காட்டிலும் இந்தக் காரணம் ரொம்பவே மோசமான உறுத்தலாக இருந்தது.

அதனால்தான் சொல்கிறேன். இளநிலை படித்தவுடன் வேலை தேடத் துவங்கினால் ஒரிரு வருடங்களுக்குள் எதாவதில் நுழைந்து நிலைத்து விடலாம். ஆனால் பின்பொருநாளில் நாம் படிக்காமல் விட்டு விட்டோமென்று வருந்தக் கூடாது. யாரையும் குற்றம் சொல்லக்கூடாது. வேலை பார்த்துக் கொண்டே இன்னும் விருப்பமிருந்தால் தொலைதூரக் கல்வியில் படிக்கலாம். ஏனெனில் கையில் காசைப் பார்த்துவிட்டு பின்பு வேலையை விட்டுவிட்டு படிப்பதற்கெல்லாம் மனம் வராது. நாம் வேலை தேடும் வரையில்தான் நமது பட்டத்திற்கு மதிப்பு. ஒரு இடத்தில் வேலையில் சேர்ந்துவிட்டால் பின்பு வேலை அனுபவச் சான்றிதழுக்குத்தான் மதிப்பு. அதுதான் உங்களது தகுதியைச் சொல்லும்.  

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 4


உயிர்நுட்பவியல் போன்ற அறிவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவருக்கான வேலைவாய்ப்புகள் குறித்துப் பார்ப்போம்.

1 . இந்தியாவில PHD
இந்தியாவில நீங்கள் PHD  தொடர வேண்டும் என முடிவெடுத்தால் ஆபத்து அதிகம். IIT போன்ற சிறந்த அரசு கல்வி நிறுவனங்களில் கிடைத்தால் தாராளமாகத் தொடரலாம். அல்லது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஒரு சில கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களில் JRF, SRF போன்றவற்றில் இடம் கிடைத்தால் நிலைத்துக் கொள்ளும் சாத்தியம் உண்டு. இதற்கு சிறந்த மதிப்பெண் சராசரியும், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவும் வேண்டும். மற்றபடி நான் கேள்விப்பட்டவரையில் பல்கலைக்கழகங்களில் PHD செய்பவர்கள் மூக்கால் அழுகிறார்கள். சிலர் 5 வருடங்களுக்கு மேலாகியும் முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து இந்தப்பக்கம் தலைவைத்துப் படுத்துவிடக்கூட வேண்டாமென்று எச்சரிக்கிறார்கள். மரபியலில் (Genetics) PHD முடிக்க 8 வருடங்கள் ஆகும் என்றும் கேள்விப்பட்டேன். இதில்லாமல் வழிகாட்டியின் (Guide) இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டும், கண்ணியமற்ற முறையில் நடத்துவார்கள் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள். உளஅரசியலையும் சமாளித்தாக வேண்டும். என்னுடைய கல்லூரி விரிவுரையாளருக்குத் தெரிந்த பேராசிரியரொருவருக்கு PHD  மாணவராக சேரவேண்டுமெனில் மகிழுந்து (Car)  ஓட்டத் தெரிந்திருக்க வேண்டுமாம்.

2. வெளிநாடுகளில் மேற்கல்வி, ஆராய்ச்சியைத் தொடர்வது ;

நீங்கள் வசதியானவராக இருந்தால் மேலைநாடுகளில் ஆராய்ச்சி, வேலைவாய்ப்புகள் இந்தியாவில் உள்ளதைக்காட்டிலும் அதிகம். வெளிநாடு செல்லும் எண்ணமிருந்தால் இளநிலைப் பட்டம் பெற்றவுடன் சென்றுவிடுவது நல்லது. நீங்கள் முதுநிலைப் பட்டம் பெற்றிருந்தாலும் அங்கே சென்று மீண்டும் ஒரு முறை முதுநிலைப்பட்டம் படிக்க வேண்டும். இங்கே 2 வருடங்களை வீணாக்க வேண்டாம்.

அல்லது நேரடியாக ஆராய்ச்சிக்கல்வியில் இடம் பெறவேண்டுமானால் முதுகலைப்பட்டம் பெற்ற பின்பு நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் ஆராய்ச்சி குறித்து ஒரு அறிக்கையை உருவாக்க வேண்டும். அதில ஆராய்ச்சியின் தலைப்பு, நோக்கம், செய்முறை குறித்த வெள்ளோட்டமான விளக்கங்கள் இருக்க வேண்டும். இதை நீங்கள் மேற்கொள்ளப்போகும் ஆராய்ச்சிகள் எந்த கல்வி, ஆராய்ச்சி நிறுவங்கள் வழங்குகின்றன என்பதைத் தெரிந்துகொண்டு அவர்களிடம் அனுப்ப வேண்டும். உங்களது திட்டம் அவர்களுக்குப் பிடித்திருந்தால் உங்களை அள்ளிக் கொள்வார்கள். Stipend உடன் ஆராய்ச்சியையும், கல்வியையும் தொடரலாம். இதில் நன்கு பதிப்பெண்கள் பெற்றிருந்தவர்கள்,  வருடக்கணக்காக படித்து தமது அறிவைப் பெருக்கியும் விண்ணப்பித்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெயருக்காக விண்ணப்பித்து அதிர்ஸ்டவசமாக இடம் கிடைத்தவர்களும் இருக்கிறார்கள்.

3. கல்லூரி விரிவுரையாளராவது;

பெரும்பாலானோரின் கடைசிப் புகலிடமாகவும், பலரின் விருப்பமான தேர்வாகவும் இருக்கிறது கல்லூரி விரிவுரையாளர் பணி. நிறைய தனியார் கல்லூரிகளில் எப்போதும் பணியிடம் காத்திருக்கும். ஓரளவு பாடம் குறித்த அறிவும், ஆங்கிலமும் இருந்தால் போதுமானது. இவைகளில்லாமலும் மாவாட்டிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. சிரமமின்றி வேலையும் கிடைக்கும். ஊதியம் ரூ 6000 முதல் 8000 வரை கிடைக்கும். ஊதிய உயர்வு இருக்காது. ஒரு வேளை நீங்கள் துறைத்தலைவராக (HOD) உயரும்போது கிடைக்கும். ஒரு நாளைக்கு 3 அல்லது 5 வகுப்புகள் இருக்கும். வாரவிடுமுறை, பருவத்தேர்வு விடுமுறை என அனைத்து வகையான விடுமுறை நாட்கள் உண்டு. இருட்டும் முன்பே வீட்டுக்கும் போய்விடலாம். இது பெண்களால் பெரிதும் விரும்பப்படும் பணியாக இருக்கிறது.  மாணவர்கள் எதாவது ஐயம் கேட்டால் சமாளிக்கவாவது தெரிந்திருக்க வேண்டும். அப்படியே பகுதி நேர PHD செய்யலாம்.

இவையல்லாமல் பொதுவான வேலைவாய்ப்புகள் என்று பார்த்தால்,

Medical Transcription
Medical Representative
Medical Coding
Pharma  நிறுவங்களில் Marketing Executive

போன்ற பணிகள் உள்ளன. மேலும் சில உயிர்நுட்பவியல், இரசாயன நிறுவனங்கள், ஆராய்ச்சிக்கான உபகரணங்கள், வேதிப்பொருகள், இரசாயனத் திரவங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு outsourcing செய்யும் சேவைத்துறை நிறுவனங்களில் வேலை கிடக்கும் வாய்ப்புகள் உண்டு.

பயோகான் போன்ற பெரும் நிறுவனங்களில் ஏறக்குறைய ரூ 9௦௦௦௦ வரை செலுத்தி பயிற்சி கொடுத்து வேலையும் கொடுக்கும் ஒரு திட்டம் இருந்தது. இது போன்ற நிறுவனங்களில் ரூ 3௦௦௦௦ - 50000 வரை கொடுத்து வேலைக்குச் சேர்கிறார்கள். சம்பளம் ரூ 6௦௦௦ வரையில் கிடைக்கும். வேலைப்பளு தாங்காமல் ஓடியும் போய்விடுகிறார்கள். இது போன்று முன்பணம் வாங்காமல் வேலைக்குச் சேர்க்கும் சில நிறுவனங்கள் நமது சான்றிதழ்களைக் கேட்கிறார்கள் கூடவே ஓரிரு வருட கட்டாய ஒப்பந்தமும் போட்டுக்கொள்ள வேண்டும்.ஒப்பந்தக் காலம் முடிந்து அவர்களின் விருப்பப்படிதான் நாம் தொடர்ந்து வேலை செய்வதும் அல்லது வெளியேறுவதும் நடக்கும்.   சட்டப்படி ஒப்பந்தம் கோரக்கூடாது எனினும் வேலையில்லாப்பட்டதாரிகளின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 3



ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கிய கதைதான் இந்த படிப்புகள், அவை தரும் வேலைவாய்ப்புகள் குறித்த விளம்பரங்கள். இது போலத்தான் உயிர்நுட்பவியலும் விளம்பரப்படுத்தப்பட்டது. கொஞ்சம் அதிகமாக மேலே போய் தகவல்தொழில்நுட்பத்துறைக்கு அடுத்த அளவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறை என்ற்வாறு செய்திகள் நிரம்பி வழிந்தன. பல்மருத்துவர், பலகாரக்கடைக்காரர் எனப் பலதரப்பட்ட மனிதர்களும் "நல்ல கோர்ஸ் எடுத்திருக்கீங்க தம்பி" என்று கூறியதிலிருந்தே எந்தளவிற்கு இது போய்ச்சேர்ந்திருந்தது என்பதையும் கண்டேன். ஆனால் படிக்கிற காலத்திலேயே இதெல்லாம் தேறாது என்பதைக் கண்டுகொண்டோம். 

நான் இரண்டாமாண்டு படித்தபோது, முதுகலைப்பட்டம் முடித்து பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த senior ஒருவர் "75% வச்சிருக்கேன். வேல ஒண்ணுமே இல்லடா. தயவு செஞ்சு வேற எதாவது படிச்சுத் தொலைங்க" என்று புலம்பிச் சென்றுவிட்டார். போதாக்குறைக்குக் கல்வி ஆலோசகரான ஒருவர் வந்து எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை அளிக்கும் உயர்கல்வி குறித்த ஆலோசனை வகுப்பொன்றை நடத்தி, உயிர்நுட்பவியல் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது, எனவே வேறுபடிப்புகளைத் தேர்வு செய்யுங்கள் என்று குண்டைப் போட்டுவிட்டுச் சென்று விட்டார். இளங்கலையில் life science  படித்த் சிலர் MBA - வை தேர்ந்தெடுத்துத் தப்பிவிட்டார்கள்.

அடுத்த கூத்து, இள்நிலை (BSc) தாவரவியல் (Botany) பிரிவில் படிப்பதற்கு அதிகம் பேர் சமீபகாலங்களில் ஆர்வம் காட்டாததினால், சென்னை மாநிலக்கல்லூரியிலும், கிறித்தவக் கல்லூரியிலும் சில பாடங்களில் மட்டும் மாற்றங்கள் செய்துவிட்டு தாவர உயிரியியல் மற்றும் தாவர உயிரிநுட்பவியல் (Plant Biology & Plant Biotechnology)  என்று மாற்றி வைத்துவிட்டார்கள். 

பொதுவாக life science  பயிலும் மாணவர்களுக்கு இளங்கலை கல்லூரிக்காலங்களில் PHD  ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டுமென்ற ஆவல் இருக்கும். பின்பு முதுகலைப் பட்டம் முடிப்பதற்குள் அது போய்விடும். காரணம் PHD மாணவர்களின் அனுபவங்களைக் கண்டும் கேட்டும் பயந்து விடுவார்கள். ஏதாவது பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டப் படிப்பில் இடம் கிடைத்தால் அது எதிர்காலத்தில் ஆராய்ச்சி, அல்லது வேலைகளில் சேர்வதற்கு முன்னுரிமை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தோம். அதுவும் ஒருவிதமான உண்மையற்ற கருத்துதான் என்று பின்னாட்களில் நண்பர்களின் அனுபவத்தினால் சொல்லக்கேட்டேன். 


நம் நாட்டில் PHD  ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டுமென்றால் ஒரு அனுபவம் வாய்ந்த பேராசிரியர் நமக்கு வழிகாட்டியாக (guide) இருக்க வேண்டும். அவர் பல்கலைக்கழகத்திலோ அல்லது அரசு, தனியார் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்தால் நன்று. அவருக்குக் கீழேயே நமது ஆராய்ச்சியைத் தொடங்கலாம். இது போன்ற நிறுவங்களில்தான் JRF ( Junior Research Fellow ), SRF(Senior Research Fellow) மற்றும்  PHD  மாணவர்களுக்கான் உதவித்தொகையும் கிடைக்கும். வேலை பார்த்துக்கொண்டே மேற்படிப்பைத் தொடர்வது போல. இது போன்ற வாய்ப்புகள் குறைந்தபட்ச்மாக் நாம் பல்கலைக்கழகத்தில் முத்கலைப்பட்டப் படிப்பில் இடம் பெற்று அதிலேயே முடித்திருக்க வேண்டும். நுழைவுத்தேர்களில் தேர்ச்சி பெற வேண்டும். 


உயிர்நுட்பவியல் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகளில் மிகவும் மதிப்பு வாய்ந்தது டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வாகும். இந்தியா முழுவதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இதை எழுதுவார்கள். வெவ்வேறு மாநிலங்களிலுள்ள பல்வேறு பல்கலைக்கழக்ங்களில் சில் இடங்கள் மட்டும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒதுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3 இடங்களும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் 3 இடங்களும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒதுக்கப்பட்டிருந்தன. மொத்தம் இந்தியா முழுக்க முப்பது இடங்கள் மட்டுமே, நுழைவுத்தேர்வு இந்திய அளவில் பல்லாயிரம் பேர்கள் எழுதுவார்கள். அத்ற்கு ரூ. 1000 வரை செலவாகும்

அடுத்ததாக் சென்னைப் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வுகள் இரு பிரிவாக நடக்கும். பல்கலைக்கழக்த்தின் சார்பாகவும், மேனேஜ்மென்ட் கோட்டாவிலும் என இருவேறு தேர்வுகள் நடக்கும். இரண்டிலும் 20 இடங்கள் மட்டுமே. இதற்கும் ஏறக்குறைய ஆயிரம் பேர் வரையில் எழுதுவார்கள். அறிவியல் பிரிவில் இத்தனை பேர் போட்டியிடும் படிப்பு உயிர்நுட்பவியல் மட்டுமே ! அடுத்ததாக பாரதியார் பல்கலைகழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி  அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்ற வரிசையில் நுழைவுத்தேர்வுகளில் போட்டி இருக்கும். இவைகளில் பெரிய மனிதர்களின் பரிந்துரைகளின் மூலம் இடங்களைப் பிடித்து விடுவார்கள், வெறும் கண்துடைப்பிற்காக நுழைவுத்தேர்வுகளை நடத்துகிறார்கள் என்ற செவிவழிச்செய்தியும் உண்டு. 

இதற்கு மேலும் இதையெல்லாம் தாண்டி இதில் இடம் கிடைக்க 80 - 85 % அளவிலான மதிப்பெண் சராசரியாக இருக்க வேண்டும். துறைசம்பந்தமான நுட்பமான அறிவும் கொண்டிருக்க வேண்டும். நுழைவுத்தேர்விலும் சிறப்பான மதிப்பெண் பெற வேண்டும். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 2

பள்ளியில் படிக்கிற காலத்தில் மருத்துவமோ, விவசாயமோ அல்லது ஏதாவதொரு அறிவியல் தொடர்பான துறைகளில் மேற்படிப்பு தொடரவேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. மேனிலைப்பள்ளியில் உயிரியியல், கணிதம் பிரிவில் படித்தேன்( 1 st group ).  கணிதம் சுட்டுப்போட்டாலும் வராது என்பதாலும் உயிரியல் எனக்கு விருப்பமான பாடம் என்பதாலும், பொறியியலில் சேர்வதைத் தவிர்த்துவிட்டு கலை அறிவியல் கல்லூரிகளில் ஏதாவ்தொன்றில் உயிர்நுட்பவியல் சேர்ந்து விடுவது என்று முடிவு செய்தேன்.

கல்லூரிகளில் சேர்வதெனில் ஓரளவாவது தரமான, பரவலாக அறியப்பட்ட கல்லூரிகளில் படிப்பது நல்லது என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கு ஓரளவிற்கு இவ்விதி பொருந்தும். அவைகளில் ஒரு சில மட்டுமே வளாகத்தேர்வுக்கு பெரிய நிறுவனங்களைக் கொண்டு வருகின்றன. கலை அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு(MBA, MCA தவிர்த்து) படிப்பு தொடர்பான வேலைவாய்ப்பும், நிறுவனங்களும் அரிது ஆகையால் எந்தக் கல்லூரியில் படித்தாலும் பெரிய வேறுபாடில்லை.ஆனாலும் மொத்தமாக நிராகரிக்க முடியாதபடி சில கல்லூரிகளில் சேவைத்துறை (BPO), அழைப்பு நடுவம்(Call Center) ஆகியவற்றுக்கான வேலைவாய்ப்புகளுக்கான சில கல்லூரிகளில் நேர்முகத் தேர்வுகளும் நடக்கின்றன.

சென்னையில் லயோலா, மாநிலக் கல்லூரி, கிறித்தவக்கல்லூரி, திருச்சியில் செயின்ட் ஜோசப், பிஷப் ஹீபர், கோவையில் பூசாகோ (PSG) போன்ற சில கல்லூரிகளில் படிப்பது வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெறமுடியும், நமது திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இயலும், அங்கு படிப்பதே ஒரு பெருமைஎன்றெல்லாம் கேள்விப்பட்டுள்ளேன். ஒரளவிற்கு இது உண்மை. இவைகளில் சேர்வது மிகவும் கடினம், மிக அதிக மதிப்பெண்கள் அல்லது பெரிய புள்ளிகளின் பரிந்துரை (நன்கொடையும்) தேவை. மேற்படி சமாச்சாரங்கள் நமக்கு உதவாதென்பதால் அடுத்த சுற்றில் ஓரளவு பெரிய பெயர் பெற்ற கல்லூரியில் சேர்ந்து விடத் தீர்மானித்தேன். பொதுவாக இவைகளில்தான் ஆய்வகங்கள் வசதிகளுடன் இருக்கும்.  ஊர்ப்பக்கம், கிராமத்திலிருந்து வரும் பெற்றோர்கள், மாணவர்கள் தனியார் கல்லூரிகளின் பிரம்மாண்டக் கட்டிடங்களிலேயே பிரமித்து விடுவார்கள், சேரவும் முனைவார்கள். இது போன்ற கல்லூரி நிறுவனங்களின் சொந்தக்காரர்கள் பெரும் தொழிலதிபர்களாக, அரசியல்வாதிகளாக, பினாமிகளாக, இருப்பார்கள். சில சமயம் முன்னாள் சாராய வணிகர்களாக, கட்டப்பஞசாயத்துக்காரர்களாகவும் இருப்பார்கள். இதனால்தான் பணம் வெள்ளமெனப் பாய்ந்து அறக்கட்டளைகளையும், கல்லூரிகளையும் நிறுவியிருப்பார்கள். இவர்களின் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் கட்டிடங்கள் அமெரிக்க, ஐரோப்பியப் பலகலைககழகங்களுக்கு நிகராகக் காணப்படும்.

முதன் முதலில் சேர்வதற்காக நான் கல்லூரிக்குள் செல்லும் போது வாயிற்காவலர், “இங்கே எல்லாமே இருக்கும் போங்க, குழந்தையை LKG -ல சேர்த்தா PHD முடிக்கிற வரைக்கும் எல்லா வசதியும் இருக்குது” என்று சொல்லியனுப்பினார். பெரிய படிப்புனு எல்லாரும் சொல்றாங்க, மதிப்பெண் பத்தாது என்று சொன்னாலோ, 40 பேர் முன்னாடி ஏதாவது நேர்காணல் வைத்து ஆங்கிலத்தில் கேள்வி எதுவும் கேட்டு விட்டாலோ என்ன செய்வது என்று அச்சத்துடனேயே சென்றேன்.  அப்படி எதுவும் நடக்கவில்லை. உள்ளே சென்றபோது சுடச்சுட வெவ்வேறு படிப்புகள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. மதிப்பெண் எவ்வளவு என்று கூடக் கேட்கவில்லை. சேர்க்கை முடியப்போகிறது, நாளைக்கு வந்தால் கூட இடம் கிடைக்காது என்கிற பாணியில் பேசினார்கள். பிறகென்ன தயக்கம் சேர்வதற்கு? சேர்ந்தாயிற்று.

சேர்ந்த பின்புதான் தெரிந்தது, அதே வசனத்தை (சேர்க்கை முடியப்போகிறது, நாளைக்கு வந்தால் கூட இடம் கிடைக்காது) பலரிடம் சொல்லியிருக்கிறார்கள். வகுப்பில் 40 வதாக சேர்ந்தவரிடமும் அதே வசனம் பேசியிருக்கிறார்கள், அவனுக்குப் பிறகு 50 பேரைச் சேர்த்துவிட்டார்கள். அவ்வருடம் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 91. கல்லூரி வேலைநாள் தொடங்கும் முன்பே நாளைக்கே  சேர்க்கை முடிந்து விடும் என்றவர்கள் கல்லூரி தொடங்கி சில மாதங்கள் வரையும் சேர்த்துக் கொண்டே இருந்தார்கள். கேரளாவிலிருந்து நிறையப் பேர் வந்திருந்தனர்.கட்டிடங்களின் பிரம்மாண்டமும், ஆய்வகங்களின் மினுமினுப்புமே அவர்களையும் ஈர்த்திருக்கக்கூடும். அதுதான் காரணம் என்று அவர்களே பின்னாட்களில் சொன்னார்கள். அம்மாணவர்களின் அப்பாவோ, சிற்றப்பாவோ, மாமாவோ ஏதோவொரு கல்விக்கண்காட்சியில் இக்கல்லூரியின் prospectus - ஐ வாங்கிப் பார்த்தார்கள். பின்பு இதிலேயே சேர்ந்து விடுமாறு வலியுறுத்தினார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

கேரளா மாணவர்களினால்தான் பல தமிழகக் கல்லூரிகளின் வண்டியே ஓடுகிறது. கேரளக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் தரம் தமிழகத்துடன் ஒப்பிடும்போது மிகவும் மோசம். எனவே அவர்கள் இங்கு படிக்க விரும்புகிறார்கள்.  ஓரளவு வசதியுள்ள நடுத்தரவர்க்கத்தினரின் பிள்ளைகள் பெரும்பாலும் தமிழ்நாட்டில்தான் படிக்கின்றனர். இவர்கள் தவிர ஆந்திர, வட இந்திய மாணவர்களும் உள்ளனர். வட இந்திய மாணவர்களைச் சேர்க்க சில கல்லூரிகளின் நிர்வாகங்கள் தத்தமது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பணம் கொடுத்து முகவர்களாகவும் பயன்படுத்துகின்றனர்.

கடந்த 10 வருடங்களில்தான் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வரத்துவங்கினார்கள். நான் சேர்ந்தபோது மணிப்பூரிலிருந்து மாணவர்கள் கூட்டமாக வந்திருந்தார்கள். அவர்களை அமுக்கக் கல்லூரியின் முகவர்கள் மிகப்பெரும் கதையை அவிழ்த்து விட்டுள்ளனர். அக்கல்லூரி ஈரோட்டிற்கு அருகிலுள்ளது. இதை சென்னையிலிருந்து 10 நிமிட பேருந்துப் பயணத்தில் சென்றுவிடலாம் என்பதாக அளந்திருக்கிறார்கள். இவர்களும் சென்னைக்குப் பக்கத்தில்தானெ என்று நம்பிவந்து விட்டார்களாம். எப்படி இணையத்தில் கூட தேடிச் சரிபார்க்காமல் வந்தார்களோ?

இப்படி கோழி அமுக்குவது போல் ஆட்களை வளைத்து வளைத்துப் போடுவதால்தான் தொடர்ந்து பல கிளைகளையும் தொடக்குகிறார்கள். தனியார் கல்லூர்க்ளின் அறக்கட்டளைகள் பலவும் பள்ளி தொடங்கி கலை அறிவியல், பொறியியல்,   பல் மருத்துவம், பாலிடெக்னிக், ஐடிஐ, ஆசிரியர் பயிற்சிப்பள்ளி என மருத்துவம் தவிர்த்து அனைத்துப் துறைக்கல்வியையும் "வழங்குகின்றன". வருடம் முழுக்க புதுபுதுக் கட்டிடங்கள் திறக்கப்படுகின்றன. சென்னையிலுள்ள SRM  கல்லூரி வட இந்தியாவில் புகழ் பெற்றதைத் தொடர்ந்து அங்கும் (டெல்லி) ஒரு கிளை தொடங்கப்பபட்டது.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment