நேற்று நடந்த தந்தி டிவி விவாதத்தைப் பார்த்தபின்பு எனக்கு இருந்த ஐயம் பல மடங்கு உறுதியாகிவிட்டது. இந்த ஒரு நிகழ்ச்சி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அது போல என்று சொல்லலாம்.
எந்த விவாதமென்றாலு பாஜகவைச் சேர்ந்த இருவரோ ஒருவரோ வந்து விடுகிறார்கள். இல்லையென்றால் இந்து இயக்கம் என்ற பெயரில் ஏதாவது ஒரு இயக்கத்தைச் சார்ந்தவர் ஒருவர் வந்து அமர்ந்து கொள்கிறார்கள்.
கொஞ்சம் கருத்து நிறைய சத்தம் என்பதே இவர்கள் கொள்கை. ஆனால் கடைசி வரையில் விவாதத்தின் மையப்பொருள் அல்லது கேள்விக்கு இவர்களிடம் பதில் இருக்காது. இதற்கு முன்னர் நடந்த ஒரு விவாதத்தில் எழுத்தாளர் ஞாநியிடம் ஒரு இந்து மதவெறியர் முகத்தில் கரியைப் பூசுவதாக மருட்டினார். அதன் பிறகு ஞாநி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்காவிட்டால் இனிமேல் விவாதத்தில் பங்கேற்க இயலாது என்று பதிந்தார்.
நேற்று ஞாநி, இன்று மனுஷ்ய புத்திரன். இந்த விவாத நிகழ்ச்சிகளில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், நீயா நானா நிகழ்ச்சியின் பாணியில் ஒரு விடயம் தெளிவாக இருந்தாலும் அதை வேண்டுமென்றே குழப்பியடிப்பதற்கு ஒரு மொன்னைத்தனமான கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்பது, இல்லையென்றால் அது சரியா இது சரியா என்று எதுகை மோனையாகக் கேட்டு விவாதத்தினிடையே மாற்றுக் கருத்தாளர்களை மோத விட்டு தனது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக் கொள்வது இந்தத் தொலைக்காட்சிகளின் தந்திரமாக இருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மன்னிக்கணும் நேரம் முடிந்து விட்டது என்று இடைமறிக்கும் நெறியாளர்கள், இடையிடையே விளம்பரங்கள், பின்பு அவசர அவசரமாக முடிவுரை எழுதுவது என்று தொடர்கிறது. நாட்டிற்குத் தேவையான ஒரு விடயம் பற்றி சில நிபுணர்கள் பேசுகிறார்கள் என்றால் அதற்கு மொத்தமே அரைமணி நேரம்தான் போலும், அதே நேரம் திரைப்படக்குப்பைகளை வணிகம் செய்வதற்கென்றே தினுசு தினுசான பெயர்களில் நிகழ்ச்சிகளை வழங்கவும், செய்திகளை வழங்கவும் இவர்கள் தவறுவதில்லை.
தாலியைப் பற்றிய விவாதம் என்றவுடனேயே புதிய தலைமுறை அலுவலகத்தில் இந்துவெறிப் பயங்கரவாதிகள் குண்டு வீசினார்கள். (இவர்களால் பயங்கரவாதிகள் என்று ஏசப்படும் முஸ்லிம்களே கூட பர்தா விவாதம் என்றபோது விஜய் டிவிக்கெதிராக ஆர்ப்பாட்டம்தான் ஜனநாயக முறையில் நடத்தினார்கள்.) இருந்தாலும் பெருந்தன்மையாக அதே பயங்கரவாதக் கருத்துக்களை ஆதரிக்கும் கூட்டத்தினரைக் கூட்டி வந்து விவாதம் நடத்துகிறார்கள் நம் ஊடக வணிகர்கள். இவர்களிடம் எந்த விதமான சமூக ஆர்வமும் இல்லை. நடக்கும் நிகழ்வுகளை மசாலா தடவி அதை ஒரு பொழுதுபோக்குச் சரக்காக மாற்றி மனிதர்களை அசை போட வைத்து மனிதாபிமான உணர்வின்றி அதை ரசிக்கவோ, சிரிக்கவோ வைப்பதுதான் இவர்களின் நோக்கம். எனவேதான், கார் மோதல் பத்துப் பேர் பலி, இன்டர்நெட்டில் நடிகையின் வீடியோ, 2 வயதுச் சிறுமி கற்பழிப்பு என்றெல்லாம் தலைப்பு வைத்து நாளிதழ்களையும் வார இதழ்களையும் விற்கிறார்கள். இந்த வகை செய்திகளில் நிபுணத்துவம் பெற்ற தந்தி நாளிதழின் காட்சி ஊடகமான தந்தி டிவியில்தான் இந்தக் கூத்து நடக்கிறது. சிவசேனா என்ற பெயரில் இயக்கம் நடத்துகிறவரையெல்லாம் கூப்பிட்டுக் கும்மியடிக்கிறார்கள். ஏன் இப்படி ? இந்த மாதிரி கிறுக்குப் பயல்கள் கத்துவதால் பலபேர் என்னவென்று சேனலை மாற்றாமல் பார்ப்பார்கள். இன்னும் சில பேர் அவர்களைப் போலவே மதவெறியனாக மாறுவார்கள் தவிர வேறு என்ன நடந்து விடப் போகிறது.
இந்த நிகழ்ச்சியில் கூட என்ன நடக்கிறது பாருங்கள். மூன்றாவதாகப் பேசிய பாஜகவின் வெங்கடேசனிடம் கொஞ்சம் இடையிடையே மறித்து தொல்லை செய்து விட்டும், மனுஷ்யபுத்திரன் பேசும் போது ஆல் அவுட் அட்டாக் செய்யும் ஹரிஹரனின் தந்திரம் பாருங்கள். அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முற்படும் போதும், அல்லது அந்த பதிலைப் புரிந்து கொண்ட போதும் திரும்பத் திரும்ப மொன்னையான கேள்வியைக் கேட்டு விவாதிப்பவனின் பொறுமையை சோதித்து அவனைக் கத்த வைக்கும் தந்திரம். பார்க்கும் நமக்கே பற்றிக் கொண்டு வருகிறது.
இந்த இந்துத்தவாதிகள் ஒன்றுமே தெரியாதது போல் நடிப்பார்கள். தாத்ரி கொலை, எழுத்தாளர் கல்புர்கி கொலை போன்ற தொடர்ந்த மதவெறிப் பயங்கரவாதக் கொலைகளைக் கண்டித்து தனது விருதுகளைத் திருப்பித் தந்து அமைதியான, அதே நேரம் மூக்குடைக்கும் விதமாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் இடது சாரிகள், இந்துக்களை மட்டும் எதிர்ப்பார்கள், இஸ்லாமியர்களை எதிர்ப்பதில்லை, மத்திய அரசைக் குறை சொல்வதே வாடிக்கை. இது வரை எத்தனையோ கொலை நடந்திருக்கிறது அப்போதெல்லாம் யாரும் எதுவும் செய்யவில்லை என்று லாவணி பாடிவிட்டு என்னவோ பயங்கரமாக மடக்கிவிட்டதைப் போல இறுமாப்புச் சிரிப்புடன் சாய்ந்தமர்கின்றனர். அதற்கு அவ்வப்போது வெவ்வேறு விதங்களில் எதிர்ப்பு பதியப்பட்டு வந்திருக்கிறது என்று சொல்ல முனையும் மனுஷ்யபுத்திரனை எப்படியெல்லாம் மடக்குகிறார்கள் பாருங்கள். எப்போதெல்லாம் இது போன்ற நிகழ்வுகளை நாமும் வெவ்வேறு வகையில் எதிர்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். போன காங்கிரஸ் அரசையும், திமுகவையும் எப்படியெல்லாம் போட்டுத் தாக்கினோம். இந்த உத்தமசிகாமணிகளும் அதை செய்தவர்கள்தானே ?
ஏன் நாம் கேட்கலாமே ? இதுவரை RSS பயங்கரவாதிகள் பாபர் மசூதியை இடித்தார்கள், குஜராத்தில் 2 ஆயிரம் பேர்களைக் கொன்றார்கள் வேறு எதுவும் செய்யவில்லை ஏன் என்று ? அதற்கு காவி பயங்கரவாதிகள் என்ன சொல்வார்கள் ? இல்லையே நாங்கள் மசூதியை இடித்தோம் ? குஜராத்தில் இனப்படுகொலை செய்தோம் வேறு எதையும் செய்ய வில்லை என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம். எப்போதும் பொதுக்கூட்டம் போட்டு முஸ்லிம்களைத் திட்டினோம், அவர்கள் மீது இந்துக்களுக்கு வெறுப்பு வரச் செய்தோம், அவர்கள் மீது பல கலவரங்கள் நடத்தினோம், மாலேகானில் குண்டு வைத்தோம், கேரளாவில் வைத்துக் கொண்டிருக்கிறோம். ஃபேஸ்புக், ட்விட்டரில் இன்னும் வெறுப்புப் பரப்புரை செய்து கொண்டிருக்கிறோம். இப்படிப் பல வகையில் படு பாதகச் செயல்களில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து குஜ்ராத், பாபர் மசூதி மட்டுமே செய்தோம் என்று சொன்னால் எங்கள் மனம் புண்படாதா என்று கண் கலங்கிவிடுவார்கள் இல்லையா ?
அதையேதான் நாங்களும் சொல்கிறோம். நீங்கள் உளறுவதிலிருந்து, மதவெறியைத் தூண்டுவதிலிருந்து, கொலை செய்வது வரை எல்லாவற்றையும் கவனித்து வரும் எங்களை போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களை எதிர்த்தே வந்திருக்கிறோம். இப்போதும் எதிர்க்கிறோம். இன்னும் புரியும்படி சொன்னால் RSS பயங்கரவாதிகளின் பசுவதை எதிர்ப்பு, மதவெறி போன்ற கருத்துக்களின் விளைவாகத்தான் இந்தக் கொலைகள் நடக்கின்றன. இதை செய்கிறவர்கள் இந்து மதவெறிப் பயங்கரவாதிகள் என்ற போது பின் யாரை எதிர்க்க வேண்டு என்கிறார்கள். கோமாதாவைக் வதைப்பவனைக் கொலை செய்ய வேண்டும், பாகிஸ்தானுக்குத் துரத்த வேண்டும், இந்து மதத்தைப்பழிப்பவனை நாக்கை அறுக்க வேண்டும் என்றெல்லாம் பகிரங்கமாகப் பேசி ஜனநாயக்த்தையே கேவலப்படுத்தும் ஆட்கள் இந்த பயங்கரவாதிகள்தான். அதனால்தான் இந்த எதிர்ப்பு. இவர்களை எதிர்ப்பவர்களையெல்லாம் பெயர் வைத்து சமாளிக்கும் சல்லித்தனம்தான் இவன் முஸ்லிம் பயங்கரவாதி, இவன் இடது சாரி, இவன் கிறிஸ்தவ மிஷனரி என்று திட்டி விட்டு பதில் சொல்லாமல் மழுப்புவார்கள். இதைத்தவிர இவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. எடுத்துக்காட்டாக தனது மதப்பெயர், அடையாளமின்றி ஒரு சம்ஸ்கிருதப் புனைப்பெயரில் இயங்கும் மனுஷ்யபுத்திரனை அப்துல் ஹமீது என்றுதான் விளிப்பார்கள் (அவர் முஸ்லிம் என்பதால்தான் இந்துக்களை எதிர்க்கிறார்கள் என்று புரியவைக்கிறார்களாம்). பெரியாரை ராமசாமி நாயக்கர் என்றுதான் விளிப்பார்கள்(அவர் நாயக்க ஜாதிவெறியராம். பெரியார் என்று சொல்லப் பிடிக்கவில்லையென்றால் ஈவெரா என்று சொன்னால் போயிற்றா பின்பெதற்கு இத்தனை வன்மம்)
படாத பாடு பட்டு முக்கியும் இவர்களால் தமிழ்நாட்டில் வளர முடியவில்லை. எனவே எல்லாவிதக் கேவலங்களையும் செய்து இங்கே காலூன்றப் பார்க்கிறார்கள். தமிழ் ஆர்வலர் தருண் விஜய் - திருக்குறள் புராணம் ஒரு உதாரணம். இதற்கு ஊடக வணிகர்கள் பக்கபலமாக நின்று ஒத்து ஊதுகிறார்கள். நாளிதழ்கள் என்று பார்த்தால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான வாசகர்களைக் கொண்டிருக்கும் தினத்தந்தி. அதற்கடுத்து தினமலம் என்று அழைக்கப்படும் தினமலர். இது பாஜக ஆதரவாளர்களே வெட்கப்படுமளவிற்கு பாஜக ஆதரவு நாளிதழ். அடுத்து நடுநிலைபோர்வையில் வரும் தினமணி- அதன் ஆசிரியர் வைத்தியநாதனும் இந்துத்துவா-பாஜக ஆதரவு நாளிதழ். இதில் இந்து முன்னணிப்பிரமுகருக்கு ஆண் குழந்தை என்ற செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்து இயக்கங்களுக்கு அவ்வளவு வெளிச்சம் கொடுக்கும் நாளிதழ். இதைப்படிக்கும் வாசகர்களுக்கு இவர்கள் எந்தளவுக்கு இந்துத்துவா நஞ்சை ஊட்டியிருப்பார்கள்.
இல்லாத ஒன்றை மோடி அலை வீசுவதாகப் புரளி பரப்பிய புதிய கொலைமுறையின் மீதே குண்டு வீசினர் பயங்கரவாதிகள். கள்ளக்காதல் செய்திகளை வெளியிட்டு கல்லாக் காட்டிய தந்தி, தனது தொலைக்காட்சியில் இது போன்ற ஆட்களை வைத்து விவாதம் நடத்துகிறது. அய்யா ரங்கராஜ் பாண்டேவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இனி தமிழ்நாட்டில் இந்த பயங்கரவாதிகள் வளர்ந்து அவர்களால் விளையும் வன்முறைகளுக்கு இந்த ஊடகங்களும் முழுப்பொறுப்பாவார்கள். அப்போது நடுநிலையாக செய்திகளைச் சொல்வார்கள். கலவரத்தில் இத்தனை பேர் பலி என்று ரன்னிங்க் கமேன்ட்ரி கொடுத்து டி ஆர்பி ரேட்டிங்க் ஏற்றிக் கொண்டிருப்பார்கள்.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்