இலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வன்முறை செலுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கலவரம் தொடங்கிய ஆரம்ப வருடங்களில் தமிழர்கள் மீது கொடிய கொலை வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட சிங்களப் பேரினவாத வெறி காரணமாக தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை கொலைகள் ஏவப்பட்டன. அதன் விளைவாக தமது வன்முறையை வெவ்வேறு கொடிய வழிகளில் வெளிப்படுத்திய காட்டுமிராண்டிகள் கொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களின் மார்பகங்களின் மீது ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை எழுதித் தனது வெறியைத் தணித்துக் கொண்டனர் என்று படித்திருக்கிறோம். இன்றும் ஸ்ரீலங்கா என்ற அந்நாட்டின் பெயர் அதன் இனவாதத்தைப் பறைசாற்றி நிற்கிறது. நிற்க.
தற்போது தமிழகத்தில் எங்கெங்கு காணினும் ஒரு நச்சுக் காளானைக் காண முடிகிறது. வீதிகளெங்கும் நிறைந்திருக்கும் கடைகளின் பெயர்ப்பலகைகளைக் கண்டால் கடைகளின் பெயர்களில் முன்னோ பின்னோ ஒட்டிக் கொண்டிருக்கும் "ஸ்ரீ". குழந்தைக்குப் பெயர் வைப்பதிலிருந்து பெரும் நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது வரையில் ஸ்ரீ என்ற ஒரு எழுத்து இல்லாமல் பெயரையே காண முடிவதில்லை. எல்லாம் சிவமயம் என்று கேட்டிருக்கிறோம். இங்கே எல்லாம் ஸ்ரீ மயமாகி இருக்கிறது. ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் இருந்தால் நன்மை நடக்கும் என்ற மூட நம்பிக்கையே இதற்குக் காரணம். இந்த மூட நம்பிக்கையைப் பரப்புவதோடு அல்லாமல், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள்.
இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு வட ஹிந்தியர்கள் 70 வருடங்களுக்கு முன்பே வைத்திருக்கும் பெயர்களைத்தான் வைக்கிறார்கள் தமிழகத்தினர். இன்னும் சில முண்டங்கள் நடிகைகளின் பெயர்களையும் பயங்கரமான ட்ரென்டியாக, ஃபேஷனாகக் கருதி வைக்கிறார்கள். 5 வருடங்களில் அந்த நடிகையே இருக்க மாட்டார். அந்த பெயரும் காணாமல் போகும். எனக்குத் தெரிந்து மட்டும் மூன்று பேர்கள் தங்கள் குழந்தைக்கு ஹன்சிகா என்று பெயர் சூட்டியுள்ளனர். எனது நண்பன் ஒருவன் பெயர் கணேஷ்குமார். அவனது அப்பா ஏன் அவனுக்கு அந்தப் பெயரைச் சூட்டினாரென்று பெயர்க்காரணம் சொன்னான். அந்தப் பெயருக்கு வட இந்தியாவில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்குமாம். தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கு வேலை தேடிப்போன காலத்தில் உருவான மனநிலை, அவனுக்குப் பிடித்த மாதிரி பெயர் வைத்துக் கொண்டு பல்லிளித்தாள் அவன் உடனே அருள் பாலிப்பானா ? வட இந்தியர்கள் தென்னிந்தியாவுக்கு வேலை தேடி வரும் இக்காலத்திலும் தொடர்கிறது இந்த முட்டாள்தனம். போன தலைமுறைகளில் அதிக அளவில் வைக்கப்பட்ட சுரேஷ், ரமேஷ், தினேஷ், ஷங்கர், ராஜேஷ் போன்ற ஹிந்தித் திரைப்படம் பார்த்து பெயர் வைத்த மூடத்தனத்திலிருந்து இன்றைய தலைமுறையினர் மாறிவிட்டனர். இவர்கள் வைக்கும் பெயர்களைக் கேட்டால் வருங்காலத்தில் பாருங்கள் "நம்மை விட ஹிந்தி மொழியுணர்வு மிக்கவனாக இருப்பவன் தமிழன்" என்று வட இந்தியர்களே தலை சுற்றிக் கீழே விழுவார்கள்.
தமிழ்நாட்டில் வைக்கப்பட்ட பெயர்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொலைக்காட்சிகளில் வரும் குழந்தைகளுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லும் நிகழ்ச்சியைப் பார்த்தால் தெரிந்து விடும். ஜாதியையும் அதன் சடங்குகளை மட்டும் ஒரு அங்குலம் விட்டுக் கொடுக்காமல் பின்பற்றும் தமிழர்கள் தமிழில் பெயர் வைப்பதை மட்டும் இழிவாகக் கருதி சமஸ்கிருதப் பெயர்களை வைக்கின்றனர். கண் தெரியாதவன் இருட்டுக்குள் கருப்புப் பூனையைக் கண்டதாக சொல்வது போல அடுத்த வீட்டுக்காரனைப் பார்த்தே தன்னை ஒப்பிட்டுக் கொண்டு வாழும் இவர்கள் பெயர் வைக்கவும் என்ன ஏதென்றே தெரியாமல் வாயிலேயே நுழையாத பெயரை வைக்கின்றனர். கட்டாயமாக ஹ ஷ, ஜ என்ற எழுத்துக்கள் வழியில் தொடங்கும் பெயரையோ அல்லது அந்த எழுத்துக்களில் ஒன்றாவது பெயரின் இடையிலாவது வந்து விட வேண்டும். ஸ்ரீ என்ற எழுத்தை முன்னர் சேர்த்து வைப்பதில் பெயரியல் விதிகள் இடிக்கிறதா ? ஸ்ரீ நந்தினி /ஸ்ரீ வித்யா என்று வைக்க விரும்பியவர்கள் வித்யா ஸ்ரீ/நந்தினி ஸ்ரீ என்று வைத்துக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது மட்டுமல்ல பெரிய தொழிற்சாலைகளோ, பள்ளி, கல்லூரிகள் தொடங்குகிறவர்களும் முன்பு ஸ்ரீ என்ற எழுத்தை ஏதோ கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்பது போல் சேர்த்துக் கொள்கின்றனர்.
இதையெல்லாம் (முதல் பத்தியை இங்கு தொடர்பு படுத்திக் கொள்ளவும்) பார்க்கும் ஈழத்தமிழன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவான். சிங்களனோ அடடா ஈழத் தமிழனுன்களை விட இவனுகளாகவே நம்ம வழிக்கு வந்துட்டானுகளே என்று இன்ப அதிர்ச்சி அடைவான்.
சரி மனிதர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும்தான் மட்டும்தான் வைக்கிறார்களா என்றால் இல்லை. தங்கள் குலதெய்வங்களுக்கும், இன்ன பிற கடவுளின் பெயருக்கு முன்னரும் ஸ்ரீ என்ற எழுத்தை சேர்த்துக் கொள்கின்றனர். ஏன் கடவுளுக்கே பெயரை மாற்றுகிறோமே அந்த கடவுளிடம்தான் தங்கள் தலையெழுத்தை மாற்றும்படி வழிபாடு செய்கிறார்கள் கடவுளின் பெயரையே மாற்றி வைக்கும் பக்தர்கள். என்னவொரு முரண்நகை. செல்லாண்டியம்மன், கோட்டை மாரியம்மன், பிடாரியம்மன், முத்துமாரியம்மன், அய்யன் என எல்லா அம்மன்களும், ஆத்தாக்களும், அப்பன்களும் தங்கள் திருப்பெயரின் முன் ஸ்ரீயுடன்தான் காட்சி தருகிறார்கள். எல்லாவற்றையும் மீறும் வகையில் தமிழ்க்கடவுள்களான சிவனுக்கும், முருகனுக்கும் கூட ஸ்ரீயைச் சேர்த்தாயிற்று. திருச்செந்தூர் முருகன் பேக்கரி/ட்ராவல்ஸ்/வாட்டர் சப்ளையர்ஸ் என்ற பெயர்களுக்குப் பதிலாக ஸ்ரீ செந்தூர் முருகன் என்று எழுத்துக்களைக் காண நேரிடுகிறது. ஸ்ரீ சிவன் என்ற பெயரைக் கண்டு எங்கே முட்டிக் கொள்வது என்று தோன்றியது. ஆழ்வார்களும், நாயன்மார்களும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். திருமறைக்காடு வேதாரண்யம் ஆனது போதாதா ?
தமிழ் தனித்தியங்கும் தன்மை பெற்றிருந்தாலும் பிறமொழி சொற்களையும், எழுத்துக்களையும் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது. வடமொழிப்பெயர்கள் தமிழ்த் தன்மையுடன் இருப்பதற்காகத்தான் எடுத்துக்காட்டாக ராம் என்ற பெயரை முன்னர் "இ" சேர்த்தும் இறுதியில் "அன்" விகுதியும் இராமன் சேர்த்துத் தமிழாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தமிழ் வெறுப்பாளர்கள் சாதாரணமாக இருக்கும் சராசரி தமிழ்ப் பெயர்களையுமே கூட செங்கிருத ஒலியமைப்புடன் வரும்படி மாற்றிக் கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். மிகச் சொற்பமான அளவிலேயே தமிழ் செல்வன், தமிழரசன், தமிழ் செல்வி, தமிழரசி வகையிலான பெயர்கள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த சமஸ்கிருதப் பித்து வெள்ளமெனப் பாய்ந்து பரவி வருகிறது.
ஆங்கிலப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். அதில் நகைச்சுவையைக் கூட்ட வேண்டும் என்பதற்காக வைக்கப்படும் "அது நம்மள நோக்கித்தான் வருது", எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க" நீங்க வடக்குப் பக்கம் போங்க" போன்ற வசனங்களை எல்லோரும் பேசிச் சிரித்து மகிழ்கின்றனர். அது மொழிமாற்றம் செய்ததன் குறையல்ல. உண்மையிலேயே ஆங்கிலப் படங்களில் பேசும் வசனமே அதுதான். நமக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவர்கள் என்னமோ பயங்கரமான விஞ்ஞானம் பேசுவதாக நினைத்துக் கொள்கிறோம். அது போலத்தான் இந்த சம்ஸ்கிருதப் பெயர்களும் வெறும் கடவுளின் பெயர்களும், வினைப் பெயர்களும் தான். அது நமக்குப் புரியாத மொழியில் இருப்பதால் அது நமக்கு மிக உயர்ந்ததாகத் தெரிகிறது,
ஸ்ரீ என்பது திரு எனப் பொருள்படும் சம்ஸ்கிருத ஹிந்தி சொல்தானே. இப்போது எல்லோரும் சரிங்க் "ஜி" வாங்க"ஜி" என்று வயது பார்க்காமல் மரியாதை நிமித்தம் சொல்லப்படுவது போல.
ரஜினிகாந்த் பேசும் போது கலைஞர் "ஜி", மோடி"ஜி" என்பாரல்லவா .
அதுவே கமல் போன்றவர்கள் பேசும்போது பாலச்சந்தர் ஐயா "அவர்கள்", சிவாஜி ஐயா அவர்கள் என்பார்.
தொலைக்காட்சி விவாதங்களில் "தலைவர் கலைஞர் அவர்கள்" "புரட்சித் தலைவி அம்மா அவர்கள்" என்பனவற்றின் எளிய வடிவம்தான் ஜி என்பது.
அது போலவே திரு.கருணாநிதி, திரு.வைகோ திரு. நரேந்திரமோடி என்று சொல்வோம் (திருமிகு, திருமின் என்று பெண்பாலுக்கு இடலாம்)
ஹிந்திப் பித்துக்குளிகள் தமிழில் அடிக்கும் சுவரொட்டிகளிலேயே "ஸ்ரீ நரேந்திர மோடி ஜி அவர்கள்" வருகை புரிகிறார் என்று போடுவார்கள். வீரத் துறவி "ராமகோபாலன் ஜி" உரையாற்றுகிறார் என்றும் போடுவார்கள்.
குழந்தைக்கு பெயர்வைக்கிறவர்கள் ரொம்ப விவரமாக அந்தப் பெயருக்கு என்ன பொருள் என்று கேட்டுத்தானே வைக்கிறார்கள் இல்லையா. ஸ்ரீ - க்கு மட்டும் சும்மா புனிதம் என்று விட்டுவிடுகிறார்களா. ஸ்ரீ க்கு என்ன பொருளென்று வினவினால் திரு என்று வரும். அந்த திரு என்ற சொல்லைத்தான் எல்லாப் பெயர்களுக்கும் மெனக்கெட்டு வைக்கிறார்களா ? ஸ்ரீமதி என்றெல்லாம் வைக்கிறார்களய்யா.
வித்யா விகாஸ் என்று ஒரு பள்ளி இருக்கிறது. பெயரின் பொருளென்ன. ஒன்றுமில்லை கனவான்களே !
வித்யா - கல்வி (அறிவு, ஞானம், கலை போன்ற பல பொருள்கள் தரும் சொல்) விகாஸ் - வளர்ச்சி, முன்னேற்றம், போன்ற பலபொருள்கள் கல்வி என்ற பொருளும் இதில் அடக்கம்)
கல்வி வளருமிடம், அறிவு முன்னேற்றம் இவ்வளவுதான் அதன் பொருள். இதையே தமிழில் சொல்லும்போது இவ்வளவுதானா என்று வெத்தாகத் தோன்றுகிறது. சம்ஸ்கிருதத்தில் வைத்தால் கெத்தாக இருக்கிறது
நமக்குத் தெரியாத ஒன்றை உயர்வாக நினைக்கும் போக்குதான் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்
சிவபெருமான் = ஷிவா
பிள்ளையார் = விக்னேஷ், கணேஷ், விநாயக்..
(மூர்த்தி என்றால் சிலை, கணேஸ் மூர்த்தி என்றால் வியாகர் சிலை, நாராயண மூர்த்தி என்றால் பெருமாள் சிலை என்று கிண்டல் செய்யலாம். எப்படி அருமையாக இருக்கிறது பாருங்கள்)
காளியாத்தா, கொற்றவை - துர்கா
அம்மன் - அம்பா
கலைமகள் - சரஸ்வதி
திருமால் - விஷ்ணு
இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். குமாரன் என்று தமிழ்த்தன்மையுடன் இருந்ததை மாற்றி குமார் என்று வைத்தார்கள். சிவக்குமார் என்ற எனது பெயரை யாராவது ஷிவா- என்று அழைத்தாலோ, shiva என்று எழுதினாலோ எரிச்சலாக இருக்கிறது. ஆனால் நிறைய பேருக்கு அதுதான் இயல்பாக இருக்கிறது. நடிகை ஸ்ரேயா-வின் பெயர் உண்மையில் ஸ்ரீயா என்பதுதான். அதை ஊடகப் புண்ணியவான்கள் எப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். எங்கோ தொடங்கி எங்கோ வந்து விட்டேன். திரும்புகிறேன்.
நீலம், பச்சை, சிவப்பு போன்ற கண்ணைப் பறிக்கும் ஆடை அணிபவர்களை எள்ளி நகையாடும் விடலைகள் அதே நிறத்தில் ஃபேஷன் என்று வரும்போது பெருமிதத்துடன் அணிவதில்லையா அது போலவே பெயர் வைக்கும் நகைச்சுவையும் அரங்கேறுகிறது.
தமிழ் மொழியின் வழியில் வந்த இந்துக்களே இப்படி என்றால் எப்போது கிறித்தவ, இஸ்லாமியர் தமிழில் பெயர் வைக்கத் தொடங்குவது ?.
குறிப்பிட்ட அளவு கிறிஸ்தவப் பெயர்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் மதம் சார்ந்த நூல்களை கருத்துக்களை சிறப்பாகத் தமிழ்ப்படுத்தியிருந்தாலும் இஸ்லாமியர் யாரும் (மணவை முஸ்தபா என்ற தமிழறிஞர் தவிர) வைத்த மாதிரி தெரியவில்லை. அப்படிப் பெயர் வைப்பது ஹரம் ஒன்றும் இல்லைதானே. இன்னும் ஏன் அன்பன் என்று இல்லாமல் ஆஷிக், மணிமகள் என்றல்லாமல் ஃபாத்திமா என்றெல்லாம் வைக்கிறீர்கள்.
இப்படியே ஸ்ரீ பைத்தியம் பிடித்து அலையும் தமிழ்நாட்டினர் கொஞ்சகாலத்தில் ஊர்ப்பெயர்களையெல்லாம் ஸ்ரீப்பூர், ஸ்ரீநெல்வேலி, ஸ்ரீசெந்தூர் என்று மாற்றுவார்கள். தமிழ் நாட்டின் பெயரையும் ஸ்ரீ தமிழ் நாடு என்று மாற்றுவார்கள் இல்லை ஸ்ரீ நாடு என்றே மாற்றுவார்கள். ஏன் தமிழ் மொழியின் பெயரையுமே ஸ்ரீ தமிழ் என்று அழைப்பார்கள் இல்லை இல்லை ஸ்ரீமிழ் என்றே ஆக்குவார்கள்.
வாழ்க ஸ்ரீ வளர்க ஸ்ரீ !