குமுதம் திருந்தாது !!


ஒரு நடிகையின் படத்தைப் போடுவதற்கு ஏதாவது ஒரு கருத்தோ அல்லது கிசு கிசுவோ அல்லது பயோடேட்டாவோ போடுவார்கள்.

ஆனால் ஒரு பொம்பள இறந்தால் கூட அவள் சின்ன வயசுல ஜட்டியுடன் இருக்கும் படத்தைப் போடுமளவிற்கு தரம் தாழ்ந்த அச்சு இதழ்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒரு வேளை பிணம் நிர்வாணமாக இருந்து விட்டால் அதையும் வெளியிடத் தயங்குவதில்லை இவர்கள்.

இவர்கள் வெளியிடும் செய்திகள் திரைப்பட நடிகர்களைக் குறித்ததாக இருப்பின் முடிக்கும் போது ஆம் ஆம் என்றுதான் முடிப்பார்கள். சொல்லிவிட்டாராம், பேசிவிட்டாராம், முடித்துவிட்டாராம் என்று ஒரே ராம் புராணாமாக இருக்கும். இப்படிச் சொன்னால்தான் கிசு கிசு பரவும்.

அதற்கு தற்போதைய உதாரணம்; தோழர் காஜல் அகர்வால் அவர்கள் தமிழ் படத்தை விடவும் தெலுங்குப் படத்தில்தான் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார். பாரதிராஜா உணர்ச்சி வசப்பட்டு, காஜலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் என்று அவரது எதிர்வினையை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியில் பாரதிராஜா வின் படத்தையும், கூடவே ஒரு நடுநிலை கருத்துச் சொன்ன ஜனனியின் புகைப்படத்தையு சிறிய அளவில், பிரசுரித்து விட்டு, காஜலின் சேலை விலகி வயிறு தெரியுமாறு இருக்கும் செக்ஸியான படத்தையும் போட்டிருக்கிறார்கள். நான் படம் பாடல்கள் பார்ப்பதை ஏறக்குறைய நிறுத்தி விட்டதால், எது எந்தப் படம் என்பது குறித்த பொது அறிவு குறைவு. ஆனால் காஜலின் அந்தப்புகைப்படம் தெலுங்குப் படத்தில் வருவதாக இருக்கலாம். ஒரு வேளை இதைத்தான் தெலுங்குப் படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

எனக்கு என்ன ஐயமென்றால், இங்கே தமிழர்களைக் கேவலப்படுத்திய காஜல் மீது ஆத்திரம் வரவேண்டுமா அல்லது காஜலின் புகைப்படத்தைப் பார்த்து வேறெதாவது உணர்ச்சி வர வேண்டுமா? அந்த உணர்ச்சி வந்த பின் ஏதாவது நடக்க வேண்டுமா? என்ன விரும்புகிறது குமுதம்.

இதே பதிவு கொஞ்ச நாளுக்கு முன்புதான் எழுதினேன் எந்த மாற்றமுமில்லாமல். குமுதம் அப்படியேதான் இருக்கும். எனக்கு மீண்டும் பல முறை இதே பதிவை எழுதவைக்கும். 

குமுதம் ரிப்போர்ட்டர் என்ற புலனாய்வு வார இதழ் குஷ்புவையும், முகவையும் பெரியார் மணியம்மையாகச் சித்தரித்து நூறாவது தடவையாக தனது இயல்பை வெளிப்படுத்தியிருக்கிறது. அப்படியெல்லா
ம் யோசிப்பதற்கு, வெளியிடுவதற்கு, இது போன்ற நடிகைகளின் செக்ஸியான படங்களைப் போட்டு இல்லாததும் பொல்லாததுமான செய்திகளை நாட்டு நடப்புக்கு இணையான செய்திகளாக்குவதும்தான் காரணம். இறுதியில் அஃசல் குருவின் தூக்குத் தண்டனையை ஆதரித்து தனது பொது மனசாட்சியைக் காட்டியிருக்கிறது.

இது மட்டுமல்ல, ஆர்யா தமிழ் ரசிகர்களைக் கேவலப்படுத்தியது மாதிரியான தமிழகத்தின் மானம் காக்கும் முக்கியமான செய்திகளைச்சொல்வது பிரச்சனையைக் கிளப்புவது. இப்படியாக குமுதம் கிளப்பிய பிரச்சனைதான் ஜெயராம் கருத்த தமிழ்ப் பொண்ணு என்று தனது பணிப்பெண்ணை வர்ணித்ததை, தமிழர்களைக் கேவலப்படுத்தி விட்டதாகத் திரித்து பிரச்சனையாக்கியது.

ஆனால் இது வெளியிடும் பெண்கள் யாரும் தமிழ்ப் பெண்களாக இருக்க மாட்டார்கள், வட இந்திய, மலையாளப் பெண்களின் படங்களை மட்டுமே வெளியிடும் ஏனென்றால் அவர்கள்தான் பெருந்தன்மையாக உடையணிபவர்கள், குமுதத்திற்கு அந்த மாதிரியான படங்கள்தான் தேவை. என்னதான் ஃபாரின் பிகர்ஸ் பார்த்தாலும், நம்ம ஊரு ஃபிகருகளை சைட்டடிப்பதுதான் சுகமே என்று கருதும் வாசகர்களும் இருப்பதால், அப்பப்ப ஏதாவதொரு கல்லூரியில் சென்று 10 கல்லூரி மாணவிகளின் கருத்துக்கள் என்று இந்தியா முன்னேற்றமோ அல்லது, பிடித்த நடிகர்கள் குறித்த கருத்துக்களை விவாதங்கள் என்று போட வேண்டியது வெறும் படங்களைப் போடக்கூடாதல்லவா இதென்ன வலைப்பூவா இல்லை ஃபேஸ்புக்கா வெறும் பொம்பளப் படங்களை பகிரவும், வெளியிடவும் ஒரு நியாயம் வேண்டாமா. ஏதாவது மாடலிங், மிஸ் சென்னை, மிஸ் ஆசியா, அல்லது ஏதாவதொரு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார், அவர் சென்னையைச் சேர்ந்த சுத்தத் தமிழ்ப் பெண் என்று பல பேரைப் போட்டிருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் தமிழ்ப் பெண்கள் என்றுதான் தெரியவில்லை.

சிறுகதையில் கூட வரையப்படும் படங்களில், முந்தானை நூல் மாதிரிதான் சுருண்டு கிடக்கும், ரவிக்கை தாழ்வாகவும் இருக்கும் நடுவில் ஒரு கோட்டை தவறாமல் வரைந்திருப்பார்கள். தொப்புளையும் வரைந்திருப்பார்கள், யார்தான் உலகத்தில் அப்படியெல்லாம் சேலை கட்டுவார்களோ தெரியவில்லை. சுடிதாராக இருந்தால் நன்றாக உடலைக் கவ்விப் பிடித்து வடிவைக் காட்டும்படி இறுக்கமாக இருக்கும். க்லீவேஜ் நிச்சயம்.

விளையாட்டு வீராங்கனகளின் படங்களைப் போடுகிறார்கள். அவர்கள் ஸ்போர்டி அல்லது மினி ட்ரொசர் மாதிரியான உடைகளுடன் இருக்கும் படங்கள் போடுகிறார்கள். இதை தவறானதாக சொல்ல வில்லை. குமுதத்தின் வாசகர்களாக இருப்பவர்களுக்கு குமுதம் எதனைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து கிசுகிசுக்களை மானாவாரியாகப் பரவவிடுவது, ஏதாவதொரு படத்தில் பிகினியில் நடித்தைப் படமாகப் போடுவது, இல்லை செய்தியாக முடியாவிட்டால் இரு அனுமானமாகவாவது போடுவது. இதையெல்லாம் படிக்கும் காணும் குமுதம் வாசகனுக்குப் பெண்ணைப் பார்த்தாலே சைட்டடிக்கவும், மார்க் போடவும், அளவெடுக்கவும், கேலி செய்யவும், கமெண்ட் அடிக்கவும்தான் கற்றுக் கொடுக்கிறது. அந்த மன்நிலையுள்ளவன் சானியாவையோ சாய்னாவையோ, தீபிகா பல்லிகலையோ அல்லது வேறு யாராவது விளையாட்டு வீராங்கனையையோ பற்றிய செய்திகளையும், புகைப்படத்தையும் வெளியிடும்போது அவைகளை என்ன கோணத்தில் பார்ப்பான் என்று குமுதம்தான் சொல்ல வேண்டும்.

இன்னொரு பிரச்சனையை சில நாட்களுக்கு முன்பு கிளப்ப முயன்றது குமுதம். நடிகை சுஹாசினி சொன்னார். கதாநாயகன் முடிவெட்டாமல், சவரம் பண்ணாமல் எப்படி இருந்தாலும் கதாநாயகி மட்டும் அனுஷ்கா மாதிரி அழகாக இருக்கிறார்கள். எங்களுக்கு மட்டும் அழகான ஹீரோக்களைப் பார்க்கணுன்னு ஆசையிருக்காதா ? எம்ஜிஆர், கமல், அரவிந்த் சாமிக்கு அப்பறம் ஹேண்ட்சம் ஆன ஹீரோக்களையே பாக்க முடியல என்று சொல்லியிருந்தாராம். அதை அப்படியே தமிழ்ப்படங்களில் அவர் சொன்னதையே செய்து கொண்டிருக்கும் சில் இயக்குநர்கள், நடிகர்களிடம் சொல்லி அவர்களின் கருத்தை வாங்கி அதை, சுஹாசினிக்கு எதிராகப் பொங்கும் தமிழ் ஹீரோக்கள் என்று ஒரு பிரச்சனையாக சித்தரிக்க முயன்றது. அப்புக் குட்டி, தருண்கோபி, விதார்த், இன்னும் யாரோ இருவர். இவர்களெல்லாம் சொன்னது சுஹாசினி அப்படியெல்லாம் சொல்லியிருக்கக்கூடாது, தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான ஆண்கள் சராசரியான தோற்றம் கொண்டவர்கள்தான் என்ற பொருளில் என்று சொல்லி வருத்தப்பட்டிருந்தார்கள். இதில் யார் சொன்னது சரி தமிழ் திரை ரசிகர்கள் எல்லாரும் சொல்வதைத்தான் சுஹாசினி சொன்னார். இந்த நடிகர்கள் எல்லாம் சராசரியான ஆணின் தோற்றம் அல்லது பொறுக்கியாக இருக்கும் ஒருவன் அந்த வட்டாரத்திலேயே அழகான கதாநாயகியைக் காதலிப்பதாக அல்லது ஆசைபடுவதாகக் காட்டி அந்தக் காதலை வெற்றி பெற வைத்து ஆண்களை பரவசப்படுத்தும் கதைகளை எடுப்பவர்கள் அல்லது நடிப்பவர்கள். இதை என்னவோ பெரிய சண்டையாக கோர்த்து விட முயன்றது குமுதம்.

குமுதம் கிளப்பி விட்டு கதையெழுத நினைத்த பல கிசுகிசுக்கள் பிசுபிசுத்துப் போயின. காஜல் - கார்த்தி காதல், விஷால்- ரீமா காதல், மாதவன் - பூஜா காதல், சித்தார்த்- ஷ்ருதி காதல், இருப்பதிலேயே மிகவும் மோசமாக எழுதப்பட்ட கிசு கிசு கமல் - சிம்ரன் காதல்தான். குமுதம் மட்டுமல்லா எல்லா இதழ்களும் செய்தன.. அதை விடவும் கேவலமாக எழுதப்பட்டது ஷ்ருதி ஹாசன் - தனுஸ் காதல்தான். அதற்கு ஷ்ருதி மறுப்பு வெளியிட்டு அதையே குமுதம் வெளியிடுமளவுக்கு கீழ்த்தரமாக இறங்கியது குமுதம். நன்கு காசு பார்த்த கிசுகிசுக்கள் நயன் - பிரபுதேவா, நித்யானந்தா - ரஞ்சிதா.

ரஜினி படையப்பா படம் முடிந்து 5 வருடங்கள் கழித்து நடித்த பாபா படம் தோல்வி அடைந்திருந்த நிலையில் ரஜினி படத்தில் மீண்டும் நடிப்பாரா அல்லது நிறுத்தி விடுவாரா என்ற சந்தேகம் இருந்தது, ரஜினி இமயமலைக்குக் கீது சென்று விட்டால் ஏதாவது கதை கிதை எழுதி காசுபாக்க முடியாது, எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் விஜய்யா விக்ரமா,தனுசா என்ற முக்கியமான பிரச்சனையை எழுப்பியது. இப்படியாக குமுதத்தின் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை.

அரசியல் ரீதியான விமர்சனத்தில், இப்படி பாலியல் ரீதியாக விமர்சிப்பது எந்த வகை நியாயமென்று தெரியவில்லை. இதற்கு முன்பு கனிமொழி-ராசாவை இணைத்து நகைச்சுவைக்காகக் பேசப்படும் கிசுகிசுக்கள், மன்மோகச் சோனியாவை இணைத்துப் பேசப்படும் கிசுகிசுக்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

குமுதம் மட்டுமல்ல தினகரன், நக்கீரன், தினத் தந்தி, தினமலர் என்ற எதுவும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் முதலிடம் தினகரனுக்கே. கடந்த திமுக ஆட்சியின் போது தினகரனில் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை சோபனுடன் இணைந்து வாழ்ந்த (Living together) ஜெயலலிதாவின் யோக்கியதையைப் பாரீர் என்று திராவிட அறிவாளிகளுக்கே உரிய தரத்துடன் வெளியிட்டிருந்தது. இதுதான் இவர்களின் யோக்கியதையே.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

8 கருத்துகள்:

 1. விரிவான அலசல்...குமுதம் ஒரு மட்டமான இதழ் என்பது எப்போதே தெரியுமே...

  பதிலளிநீக்கு
 2. ஒரே நேரத்தில் நாம் இருவரும் ஒரே கருத்தை நமது பதிவுகளில் எழுதி இருக்கிறோம்.

  நான் எழுதாமல் விட்ட பல விஷயங்களை (குறிப்பாக அவர்கள் சிறுகதைகளுக்கு வரையப்படும் படங்கள் குறித்து ) சொல்லி இருக்கிறீர்கள்.

  குமுதம் நாளுக்கு நாள் மட்டமாகி கொண்டிருக்கிறது என்பதே நிஜம் .அவர்களுக்கு அந்த வாரம் விற்றுவிட்டால் போதும்.போன வாரம் என்ன எழுதினோம் இப்போ இப்படி எழுதுறோமே என்பதெல்லாம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. scenecreator நன்றிகள். இன்னும் எழுத வேண்டும் என்று நினைத்தேன் சலிப்பாக இருக்கிறது.

   நீக்கு
 3. குமுதம் பற்றிய உங்கள் மதிப்பீடு மிகச் சரியானது.

  எவ்வளவு திட்டினாலும் அதற்கு உறைக்காது.

  பத்திரிகை விற்பதும் பணம் பண்ணுவதுமே அதன் குறிக்கோள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பசி பரமசிவம் - உண்மை. பாராட்டுக்கு நன்றிகள்.

   நீக்கு
 4. குமுதம் எப்போதோ தன் தனித் தன்மையை இழந்து விட்டது !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கலாகுமரன் உங்கள் கருத்து ஸ்பேமுக்குச் சென்றுவிட்டதால் அதை கவனிக்க வில்லை. குமுதத்தின் தனித்தன்மையே இதுதான்.

   நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்