இன்னும் சில எண்ணங்கள்
சமீபத்தில் இரு தற்கொலை செய்திகள் கேட்டு வருந்தினேன். 

முதலாவது இலங்கைத் தமிழர்க்கு நேர்ந்த துயரம் கேட்டு ஒரு இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தற்கொலை செய்து கொண்டார். இப்பேர்ப்பட்ட மனிதர்களும் நம்முடன் வாழ்கிறார்கள். தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு துணிந்துவிட்டவர்கள் கொஞ்சம் வாழ்ந்தால் இன்னும் எத்தனையோ செயல்களைச் செய்ய முடியும். உயிருக்கே துணிந்தவரகள், வேறு எதைத்தான் செய்யத் துணியமாட்டார்கள். வாழவே தகுதியில்லாத, வாழவே கூடாத கொலைகாரர்களெல்லாம் மகிழ்ச்சியாக பவனிவரும் வேளையில் நீங்கள் ஏன் சாகவேண்டும். இவர்கள் சாவதால் தன்னலவாதிகளான அரசியல் தலைவர்கள் மாலை போட்டு இரங்கல் தெரிவித்தும் பயன் பெறுகிறார்கள். தமிழர்களுக்கு மட்டுமே தற்கொலை செய்துகொள்வதும், இரங்கல் தெரிவிப்பதுமே தொழிலாகிப் போனது. பொறியியல் முடித்து, வேலையில் இருந்தவர், இப்படி தற்கொலை செய்வதால் இலங்கைத் தமிழர்களுக்கு என்னதான் விடிந்துவிடும் ? உங்கள் குடும்பத்தினர் சிக்கல் இன்னும் அதிகமாகும். மற்றபடி துரும்பைக் கூட நகர்த்த முடியாது. இதற்காக தற்கொலை செய்து கொண்டவர்களது ஈகத்தை கொச்சைப்படுத்துவதாக பொருளில்லை. போர் நடந்த போது முத்துக்குமார் தொடங்கி 17 பேர்வரையில் தீக்குளித்து தம்மை மாய்த்துக் கொண்டார்கள். அது போர்நடந்த சூழலி உணர்ச்சிகரமாக இருந்ததெனக் கொள்ளலாம். இதில் கேவலம் அவர்களது ஈகமும் தன்னலவாதக் கட்சிகள் எவ்விதம் தமது லாபத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் எனபதையும் நாம் கண்டோம். இது போல் தற்கொலை செய்து கொள்ள அரசியல் கட்சிகள் அப்பாவிகளைத் தூண்டுவதாகவும் தெரிகிறது.
இரண்டாவது, கோவையைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தவறாக வந்த அழைப்பில் தொடங்கி, அலைப்பேசியிலேயே காதலை வளர்த்துள்ளார். பேசிய பெண்ணின் குரல் மிகவும் இனிமையாக இருந்ததாம். பின்பொருநாள் இருவரும் சந்தித்துள்ளனர், முதன்முறையாக. அப்போது குரல் இனிமையாக இருந்ததை வைத்து ஆளும் அழகாக இருப்பாள் என்று கணக்குப் போட்டிருந்திருக்கிறார். ஆனால் அந்தப் பெண் அழகாக இல்லையென்பதைக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறார். இதை நண்பர்களிடமும் சொல்லிப்புலம்பியிருக்கிறார். பின்பு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம். என்ன அபத்தமிது ? காதலி அழகாக இல்லை என்பதற்காக தற்கொலை செய்வதா ?  என்னதான் சொல்வது இதற்கு ? அழகை விமர்சிக்கலாமா வேண்டாமா தெரியவில்லை. இருந்தாலும் சிலவற்றைச் சொல்லவேண்டும்.

அழகை மட்டுமே நேசிப்பது காதலா ? ஒரு பெண்ணுடன் பழகினால்தான் (அவள் So called அழகாக இல்லாவிட்டாலும்) அவள் அழகியாகத் தெரியும் அதிசயம் தெரியும். இது என்னுடைய சொந்த அனுபவம் கூட. ஆண்களுக்கோ கண்களுக்கு அழகாக இருந்தால்தான் பழகுவதற்கே விரும்பும் மனநோய். உருவம் பார்த்துத்தான் நட்பு கொள்ளலாமா என்றே சிந்திக்கிறார்கள். ஒரு பெண்ணை மதிப்பிட வைத்திருக்கும் ஒரே சொல் அவள் அழகற்றவள். ஆண்களின் மொழியில் அல்லது வழக்கு  மொழியில் சொல்லப் போனால அட்டு ஃபிகர், மொக்க ஃபிகர், சப்ப ஃபிகர். இப்படியாக போகிறது கதை. 

பெண்ணை அழகாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் ஆணாதிக்கமாகவே கருதமுடியும். ஆணாதிக்கமென்றால் என்ன ? தான் (ஆண்) எப்படியெல்லாம் இருக்கத் தேவையில்லையோ வேண்டியதில்லையோ அப்படியெல்லாம் இருக்க வேண்டுமென பெண்ணை எதிர்பார்ப்பது. அது போல்தான் அழகும். ஆணுக்கு அழகு தேவையில்லை ( வேறு எதுதான் தேவை? ஒன்றுமே தேவையில்லை என்றுதானே நினைக்கிறார்கள்) , பெண் மட்டும் அழகாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறான். இந்த என்னமோ சொல்வாங்களே மென்மை, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, மசிரு, மட்ட என்பதைப் போல அவைகளையெல்லாம் தள்ளி பெண்களுக்கான மதிப்பீடுகளில் இந்த அழகு முதலிடம் பிடித்திருக்கிறது. 

அழகு என்றால்தான் என்ன ? முதலில் வருவது சிவப்பு நிறம். இதிலேயே பாதிபேர் வரமாட்டோம். நல்ல முகவெட்டு, சீரான பல்வரிசை, அளவான உயரம், உடல்வாகு. இது எல்லோர்க்கும் அமையாது. யாரும் வேண்டுமென்றோ அழகில்லாமல் பிறக்க விரும்பவில்லை. என்ன செய்வது ? பிறந்த உருவத்துடன்தான் வாழமுடியும். நாட்டில் பாதிப்பேர் அழகில்லாமல்தான் இருக்கிறார்கள். எல்லோரும் திருமணம் செய்து கொண்டுதான் வாழ்கிறார்கள்.

சரி அப்படியே அழகா இருந்தாலும் நாள் முழுவது இருந்து கொஞ்சிக்கொண்டே இருக்கமுடியுமா ? அழகாக இருப்பதால் ஊரில் இருக்கும் நாய்களெல்லாம் நோட்டமிடும். அந்த அழகு எத்தனை நாளைக்குத்தான் இருக்கும் ? திருமணம், குழந்தை என்றான பிறகு குண்டாகி அழகே போய்விடுகிறது. எல்லோரும் மோனிகா பெலுச்சியில்லையே ! பிறகென்ன செய்வது ? ஆண்கள் வேறு அழகிகளைத் தேடத் தொடங்குகிறார்கள். சில நயன்தாராக்களும் இருக்கிறார்கள் அவர்களுக்காக !. 

எல்லா ஆண்களும் தன்னுடைய துணை அழகாக இருக்க வேண்டுமென பேராசைப்படுகிறார்கள். காரணம் அவர்கள் அழகான பெண்களை மட்டுமே பெண்களாக மதிக்கிறார்கள். அழகில்லாத பெணகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை.(அழகான பெண்களையும் மனிதர்களாக மதிப்பதில்லை ஃபிகராக அதாவது துய்க்கப்பட வேண்டிய பொருளாக மட்டுமே கருதுகிறார்கள்.) அழகில்லாத பெண்களை காதலிப்பவர்களை காதலிப்பவர்களை மணந்து கொண்டவர்களை இவர்கள் கேலி செய்கிறார்கள். 

சில வக்கிரங்கள்

உம்மூஞ்சிக்கு சரியான ஜோடிதான்டா அது.

இதெல்லாம் ஒரு ஃபிகர்னு சுத்திட்டிருக்கியேடா ?

உனக்கு டேஸ்ட்டே இல்லையாடா? 

சத்தியமா சூப்பரா இருக்குதுடா நம்புடா 

இந்த ஃபிகருக்குத்தான் இத்தனை பில்டப்பு குடுத்தியா ?

இவ பின்னாடிதான் இத்தன நாள் அலஞ்சியா?

இதே மறைமுகமாக பேசினால்...

யப்பா அவன் ரொம்ப பெரிய மனசுக்காரன்டா! எப்படித்தான் அந்த மூஞ்சிகூட குடும்பத்த நடத்துறானோ ?

அடத்தூ சரியான அட்டு அது. பாத்தாலே வாந்தி வந்திரும் அது கூட போய் .

ரெண்டும் அழகோ அழகு கொஞ்சிக்கறதப் பாத்தா எட்டி ஒதக்கலாம்னு இருக்கும். 

இன்னும் சிலர் சாலையில் செல்வோர்க்கெல்லாம் ஜோடிப்பொருத்தம் பார்த்து விமர்சனம் செய்வார்கள்.

ஆணும் பெண்ணும் நடந்து சென்றால் உடனே ஒரு கருத்துச் சொல்லாவிட்டால் இவர்களுக்கு அடங்காது. அவர்கள் அண்ணன் தங்கையாக இருக்கலாம். நண்பர்களாக இருக்கலாம், உறவினராக இருக்கலாம், காதலராகவோ, இணையர்களாகவோ இருக்கலாம்.

அந்த ஆண் அழகற்றவனாக இருந்தால் என்ன சொல்வார்கள். 

இந்த மூஞ்சிக்கேல்லாம் எப்பேர்ப்பட்ட ஃபிகர் கிடைச்சிருக்கு பாரு!

அந்த பெண் அழகில்லாமல் இருந்தால் 

இதெல்லாம் ஒரு மூஞ்சினு தள்ளிட்டுப் போறாம் பாரு!

இது போன்ற வசனங்களையெல்லாம் கேட்டுக் கேட்டு எனக்கு இன்னும் தாழ்வு மனப்பான்மை அதிகமானது. வெள்ளையானவர்களின் அருகிலிருந்து புகைப்படம் எடுத்துக்ககொள்ளும்போதோ (ஒரு புகைப்படத்தினைப் பார்த்து அப்படியே ப்ளாக் அண்ட் வொய்ட் படம்பார்த்த மாதிரி இருக்குடா! என்றார்கள்) அல்லது நண்பியுடன் நடந்து போகும்போதோ எந்த கருமம் என்ன நினைக்குமோ என்றெல்லாம் கவலைப்படத் தோன்றுகிறது. 


ஒரு நண்பன் சொன்னான். வெளி நாட்ல சர்வே எடுத்தாங்களாம். அதில நெறயா பொண்ணுங்க கருப்பா இருக்கற ஆணைத்தான் பிடிக்கும்ணு சொன்னாங்களாம்." இதில் அவன் சொன்ன "பொண்ணுங்க" என்பதன் பொருள் அழகான பெண்கள். அவர்கள் ஏற்றுக் கொள்வது இருக்கட்டும், இவன் கருப்பாக இருக்கும் பெண்களை இவனுக்கு பிடிக்காததால்தான் அழகான பெண்கள் கருப்பான தன்னை விரும்பவேண்டுமென நினைக்கிறான். வெளிநாடுகளில் வெள்ளை ஆண்கள் நீக்ரோ பெண்களை மணப்பதோ இவன் கண்களுக்கு அதிசயமாகத் தெரியவில்லை. அதற்காக அங்கு நிறபேதம் இல்லை என்று சொல்ல வரவில்லை. இவனது மனப்பான்மைக்குக் காரணம் அவன் மட்டுமல்ல. சமூகத்தில் அழகானவர்க்கு கிடைக்கும் அங்கீகாரமும்தான் காரணம். அதனால்தான் வரப்போகும் மனைவி கருப்பாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறான். 

பெரும்பாலும் அழகான பெண்களே காதலிக்கப்படுகிறார்கள், காதலிக்கிறார்கள். சராசரி பெண்களெல்லாம் காதலிக்கப்படுவதில்லை. இவர்கள் எப்படிக் காதலிக்கத் தொடங்குகிறார்கள் என்று பார்த்தால், போகவர பெண்களையெல்லாம் சைட்டடிக்க வேண்டியது அதிலொரு ஃபிகரை வட்டம் கட்டி, அதை இலக்காக வைத்து, மடக்க வேண்டியது. பின்பு அவளை அவனவன் தராதரத்திற்கு ஏற்ப காதலிப்பதோ, திருமணம் செய்துகொள்வதோ, அல்லது நட்பு பாராட்டுவதோ, கடலை போட்டு பொழுதைப்போக்குவதோ, அல்லது அனுபவித்துவிட்டு கழட்டிவிடுவதோ நடக்கிறது. 

அழகாக இருக்கும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் எத்தனை என்று அவர்களுக்குத்தான் வெளிச்சம். சாலையில் நடந்தால் அனைவரது கண்களும் வன்கலவிக்கு ஒப்பாக மொய்க்கும். பேருந்துகளிலும், நெரிசல்களிலும் புட்டங்களும், மார்புகளும் கசக்கப்படும். ஆண்களின் கலைக்கண்ணோட்ட விமர்சனத்துக்கு ஆளாகும். பொது இடங்களில் பார்க்கும் பெண்களையெல்லாம் இப்படித்தான் பார்க்க வேண்டுமென்பது ஆணுரிமையாகக் கருதுகிறார்கள் (தங்களுடைய ஃபிகர்கள் ரசிக்கப்படுவதை மட்டும் விரும்பவில்லை). பெண்களும் இதை ஆண்களின் இயலபே அப்படித்தான் என்று சாதாரணமாகக் கருதி விடுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவதையெல்லாம் கொஞ்சம் கேட்டால் அழுதே விடுவார்கள், ஏன்தான் அழகாய் இருக்கிறோமென்று. 

இது சில சமயம் ஆண்களுக்கும் நேர்கிறது பெண்கள் அளவுக்கல்ல என்றாலும். வழக்கம் போல இதற்கும் நான் திரைப்படங்கள், விளம்பரங்கள், ஊடகங்களையே சாடும் சடங்கையே நடத்த வேண்டியிருக்கிறது. இந்த விளம்பரங்கள்தான் பெண்களை அழகாகவே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றன. 6 வாரங்களில் "சிவப்பழகு" நிறமேன்மை போற்றும் "ஃபேர் அண்ட் லவ்லி" மாதிரியான அழகுசாதனப்பொருட்களின் விளம்பரஙகள் சக்கை போடு போடுகின்றன. இது போன்ற முகப்பூச்சு, சோப், வாசனைத் திரவிய விளம்பரங்களில் அழகான பெண்களை சிரிக்கவைத்து காட்டுகிறார்கள். இதைப் பயன்படுத்தினால் அழகாகலாம் என்கிறார்கள். என்ன கொடுமையிது ? உண்மையில் ஒப்பனையில்லாமல் இவர்கள் எப்படியிருப்பார்கள் என்பது அவர்களது ஒப்பனைக்கலைஞர்களுக்கே தெரியும். இது போன்ற விளம்பரத்தில் சிவப்புநிறமில்லாத அசினும், ப்ரியாமணியும் நடிக்கிறார்கள். ரஜினியும், விஷாலும் நடிக்கட்டும் நான் நம்புகிறேன்.

தமிழ்ப்படங்களைக் காணுமளவுக்கு எனக்குத் துணிச்சல் இல்லை, இருப்பினும் சில நேரம் பார்க்க வேண்டிய கட்டாயத்தினால் சிலவற்றைப்பார்க்க வேண்டியிருக்கிறது. பார்த்தீங்கனா வேலைக்குப்போகாம ஊர்சுத்துறவன், தண்ணியடிச்சுட்டு ரவுசு பண்றவன், காத்தாடி உடறவன், சாவக்கட்டுக்குப் போறவன், பொம்பளப் பொறுக்கி இந்தமாதிரியான ஆண்களையெல்லாம் நயன், தப்ஸி, சமந்தா, தமன்னா, காஜல் மாதிரியான முழங்கைகள் கூட சிவந்திருக்கும் வெள்ளைத்தோல் பணக்கார அழகிகள் தேடி வந்து காதலிப்பார்களாம், அறிவுரை கூறித் தேற்றுவார்களாம். அட ராமா !

இது போன்ற மனநிலையில் வாழும் ஆண்களுக்கு இந்தத் மாதிரியான படங்கள் மிகவும் பிடிக்கின்றன. நமக்குத்தான் நடக்காது படத்திலாவது பார்க்கலாம் என்று தேற்றிக் கொள்கிறார்கள். இதில் குறிப்பிடத்தகுந்த விடயம் என்னவென்றால் இதில் நாயகிகள் அனைவரும் அழகாக இருப்பார்கள். நாயகர்கள் மட்டும் சராசரியாக இருப்பார்கள். அப்படியிருந்தும் அவர்கல் பெரிய இடத்து பணக்கார ஃபிகர்களை மடக்குவதே சாதனையாக ரசிகனால் வியந்து பார்க்கப்படுகிறது. அதே நேரம் சராசரி பெண்கள் இந்த அழகிகளுடன் தோழியாக வந்து நாயகியின் அழகு இன்னும் அதிகமாகக் காட்டப்படுகிறது. இதல்லாமல் அழகற்ற பெண்களை வைத்து சில அயோக்கியர்கள் செய்யும் நகைச்சுவை அருவருப்பின் உச்சம், சந்தானம், விவேக், கவுண்டமணி, வடிவேலு போன்றவரகளெல்லாம் மேலை நாடுகளில் இருந்திருந்தால் நிறவெறிக் கருத்துக்கும், மாற்றுத் திறனாளிகளைக் கிண்டலடித்தற்கும் வழக்கே தொடுத்திருப்பார்கள்.

இவர்கள்தான் இப்படியென்றால் தபூசங்கர் பாணியில் 

"உன் கண்ணில் உள்ளதடி மின்சாரம்
நீ ஆக வேண்டுமடி என் சம்சாரம்
பொன்னகை எதற்கடி எனக்கு
உன் புன்னகை போதுமடி "

என்றெல்லாம் காதல் கவிதை எழுதுகிறவர்களும் பழைய ருஷ்ய பெண்களின் ஓவியங்கள், ஜப்பானிய, சீனத்து இளம்பெண்கள், வெள்ளைக்கார இளைஞிகளை, அல்லது அனுஷ்கா போன்ற அப்போதய பிரபல நாயகிகளின் புகைப்படங்களைப் போடுகிறார்கள். இந்தக் கவிதைகளை நானும் ரசிக்கிறேன். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இவையெல்லாம் காதலியின் உடல் வனப்பை, அழகை கவிதையாக, ஓவியமாக, வாசனையாக மிகைப்படுத்திப் போற்றுவதாகவே, காதலியை, காதலை போற்றாமல் உள்ளன, அதற்கு அந்த புகைப்படங்கள் சாட்சி சொல்கின்றன. இப்படியும் ஒரு பார்வை இருக்கிறது என்று சொல்ல வருகிறேன். (கவிதை குத்துமதிப்பாக எழுதினேன் உண்மையில் யாராவது எழுதியிருந்தால் பொறுத்துக் கொள்ளவும் சுட்டினால் நீக்கி விடுகிறேன்.)

இப்படியாக பெண்ணின் அழகே எல்லா இடத்திலும் முதன்மைப்படுத்தப்படுகிறது. அழகில்லாததாலேயெ பெண்களின் திருமணமும் நடக்காமல் தள்ளிப்போகிறது.  அதனால்தான் இந்த "அழகு' என்ற சொல்லே எனக்கு ஆபாசமாகத் தெரிகிறது. (அழகானவரகள் மன்னிக்க எனக்கு வேறு வழியில்லை). இந்த அழகு பற்றிய மயக்கமெல்லாம் குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்காது. அழகான பெண்ணை காதலித்து மணந்தவர்கள், காதலிப்பவர்கள் காதலிக்குத் தெரியாமல் இன்னொரு ஃபிகரிடம் வழிவதும், மடக்குவதற்கும் எத்தனிப்பதும் இயல்பாகவே இருக்கிறது. காதலிக்கும் போது கையை அறுத்துக் கொண்டவரகள், பல் பேருடன் சண்டை போட்டவரகள், வீட்டினருடன் போராடித் திருமணம் செய்தவர்கள் இப்படியாக அனைத்து நண்பர்களையும் நானறிவேன். அனைவரும் மனைவிக்குத் தெரியாமல், இன்னொரு ஃபிகருடன் "நட்பை" வைத்துக் கொண்டுள்ளார்கள், கொள்ள விரும்புகிறார்கள். இதற்குத்தான் பெண்கள் அழகாக இருக்க வேண்டுமென ஆண்கள் விரும்புகிறார்கள். பெண்கள் அழகாக இருக்க வேண்டியதும் இல்லை, அழகாக இருப்பதும் அவரக்ள் கையில் இல்லை என்ற நடைமுறை எதார்த்தத்தையும் ஒத்துக் கொள்ள வேண்டும் ஆண்களும் சரி பெண்களும் சரி. எனவே அழகென்பதே உருவத்தில் (மட்டும்)  அன்று, பண்பில், அன்பில் கூட காணமுடியும் என எல்லோரும் சொல்வதையே சொல்லி முடிக்கிறேன். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தொகுப்புகள்


மீண்டும் மீனவர் கொலை

ராமநாதபுரத்திலிருந்து கடந்த 2 ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் திரும்பவேயில்லை. இந்நிலையில் இரு நாட்களுக்கும் முன்பு த்லையில்லாத உடலொன்று புதுக்கோட்டை மாவட்ட மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம் எனும் ஊரில் கரை ஒதுங்கியுள்ளது. மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அருகே பாசிப் பட்டணம் கடற்கரையில் ஒதுங்கிய இரு உடல்களும் அடையாளம் காணப்பட்டன. இன்னொரு மீனவரின் உடல் யாழ்ப்பாணத்தில் கிடைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவர்கள் யாவரும் சிங்கள் இனவெறி பிடித்த இலங்கைக் கடற்படையாலேயே கொல்லப்பட்டிருக்க முடியும். இவர்கள் கிரிக்கெப் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடந்த அன்று மீன்பிடிக்கச் சென்றவர்கள் என்ப்தே இதற்கு மேலும் ஐயமுற வைக்கிறது. கிடைத்த உடல்களை கண்டபோது அவர்கள் மிகவும் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுக் கொலை செய்ய்ப்பட்டிருப்பது தெரியவருகிறது. கிரிக்கெட்டில் இலங்கை தோற்றுவிட்டதால் இந்த வெறிநாய்கள் கொலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பினும் இது ஒரு மேம்போக்கான நொண்டிச் சாக்குதான். மீனவர்களை தொழிலிருந்து அப்புறப்படுத்துவதையே கொள்கையாக வைத்திருக்கும் ஆட்சியாளர்கள் இதற்கு மூலகாரணம். இது இந்திய இலங்கை அரசுகளின் அனுமதிக்குட்பட்டே அவர்கள் மேற்பார்வையிலேயே இது நடைபெறமுடியும். அத்துமீறி மீன்பிடித்ததால்தான் சுட்டோம், முதலில் எச்சரித்தோம், கேட்காததால்தான் சுடவேண்டிவந்தது என்று சொல்வார்கள்.

இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்தியமீனவர்களின் அதிகமான புழக்கத்தினால்தான் மீன்வளம் அழிந்தது. இந்தியமீன்பிடிதான் தடைசெய்யப்பட்ட இழுவைப்படகுகள் மூலமாக மீன்பிடிக்கின்றனர். இவர்களின் இயந்திரப்படகுகள் இலங்கை மீனவர்களின் வலைகளையும் அறுத்துச் சென்றுவிடுகின்றனர். இதனால் இலங்கைத் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இந்திய மீனவர்கள் மீது எதிர்ப்புணர்வுடன் இலங்கை மீனவர்கள் உள்ளனர். இந்த எதிர்ப்புணர்வை சிங்கள இனவெறி கடற்படை பயன்படுத்திக் கொண்டு தமிழக மீனவர்களைச் சுட்டும், சித்ரவதை செய்தும், கொள்ளையடித்தும் பயன்படுத்திக் கொள்கிறது. இவர்கள் இலங்கை மீனவர்களுக்காகத்தான் தமிழக (இந்திய) மீனவர்களைக் கொல்கிறார்கள் என்பது கொடூரமான நகைச்சுவை. கொல்லப்படும் மீனவர்கள் அனைவரும் கன்னத்தில் டொக்கு விழுந்த ஏழை மீனவர்கள்தானே ஒழிய இயந்திரப்படகுகளில் வந்து இலங்கை மீனவர்களில் வளத்தை அழிக்கும் பெரும்மீன்பிடியாளர்கள் அல்ல. ஒவ்வொருநாளும் உயிருக்கு உத்தரவாதமில்லாத தொழிலில் சிங்களனிடம் சிக்கினால் கொல்லப்படுவது உறுதி என்ற நிலைதான் எதார்த்தமாக இருக்கிறது. சிங்கள இனவெறிக்கு அப்பாற்பட்டு இந்திய இலங்கை அரசுகளின் உள்நோக்கமும் இந்தக் கொலைகளில் மறைந்துள்ளது. இருவருமே எல்லை தாண்டுவதையே காரணமாகக் கூறி அப்படித்தான் கொல்லப்படுவீர்கள் என்கிறார்கள். நம்மால் ட்விட்டர்களிலும், வலைப்பூக்களில் மட்டுமே அட்டைக்கத்தி வீச முடியும் என்று கண்டுவைத்துள்ளனர். 

மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டுமென்பது நம்தலையில் நாமே  கொள்ளிவைத்துக் கொள்வதற்கு ஒப்பானது. அவர்கள் மீன்பிடிப்பதற்கே அரும்பாடு படவேண்டியிருக்கிறது. சிங்களக் கடற்படை நிராயுதபாணியாக இருக்கும்போதே இத்தனை கொலைகளைச் செய்கிறான். ஆயுதமும் கொடுத்து விட்டால் முதலில் இந்திய மீனவர்கள்தான் சுட்டார்கள் நாங்கள் தற்காப்புக்காகச் சுட்டோம் என்று கொத்துக் கொத்தாக கொலைகள் செய்வான். முன்பு புலிகள் ஆயுதம் கடத்துகிறார்கள் என்பார்கள் இன்றோ எல்லை கடத்தல் என்பது மட்டும் போதுமானதாக இருக்கிறது. சோமாலியக் கொள்ளையர்களையெல்லாம் விரட்டி விரட்டிப் பிடிக்கும் இந்திய கடற்படை, பாகிஸ்தானிய மீனவர்களை ஒப்படைப்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும் அரசு கேவலம் இந்த சிங்கள் அரசை பணியவைக்க முடியாதா ? மீனவர்களைக் கடலிலிருந்து அப்புறப்படுத்தி பணக்காரர்களுக்கு தாரை வார்க்கும் உலகமய அரசியலுக்கு ஏற்ப இந்திய அரசும் இலங்கை அரசும் கொலைகளை அரங்கேற்றி வருகின்றன. 

விபச்சாரத்தில் தள்ளப்படும் பழங்குடியினச் சிறுமிகள்

மத்தியப் பிரதேசத்திலுள்ள மண்டசௌர் மாவட்டம் நீமுச் (Neemuch) தொடங்கி ரட்லம் (Ratlam) வரையிலான நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் பஞ்ச்சாடா(Banchchada) பழங்குடியினப் பெண்களைப் பார்க்க முடியும். அவர்கள் நிர்வாணமாக இருப்பார்கள், பட்டப்பகலில். அந்தப்பகுதி சுற்றுலாவுக்கும் பெயர் பெற்றது. அதனால்தான் இங்கு பல ரக வாகனங்களும் செல்லும் நெடுஞ்சாலையாக இருக்கிறது. 

இவர்கள் பல வாகன ஓட்டுநர்கள் முதல் சுற்றுலாப்பயணிகளையும் கவர்வதற்கே வெற்றுடலுடன் காணப்படுகின்றனர். இவர்களை "பஞ்ச்சடாக் கறி" (Banchchada Dish) என்று அழைக்கிறார்கள். இவர்க்ளின் பாரம்பரியம் இடைக்காலத்திலிருந்தே தொடங்குகிறது. இப்பகுதிகளில் கொள்ளையடிக்க வரும் முகலாயார், இராஜபுத் இராணுவத்தினருக்கான பெண்களின் தேவைக்காக இவர்கள் பயன்பட்டார்கள். தற்போது சுற்றுலாப்பயணிகள், மற்றும் வாகன ஓட்டுநர்கள், மற்ற வாடிக்கையாளர்கள் ஆகியவர்க்காக பல சிறுமிகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கடத்தப்படுகிறார்கள். இவர்க்ள் 1 லிருந்து 8 வயது வரையிலான சிறுமிகள். இங்கு வந்த பிறகு இயக்க ஊக்கிகள் (steroids) கொடுக்கப்பட்டு இயற்கைக்கு மாறாக பருவமடைய வைக்கப்படுகிறார்கள். பின்பு சந்தைக்கு ஆயத்தமாகிறார்கள். இவ்வாறு கொடுக்கப்படுவதால் எதிர்காலத்தில் நிரந்தர சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஆளாக நேரிடும். 

மண்டசௌர் மாவட்ட எஸ்பி. ஜீ.கே. பதக் என்பவரின் துரித நடவடிக்கை காரணமாக இதுவரை 869 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். 34 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 வாரங்களில் மட்டும் 21 சிறுமிகள் மீட்கப்பட்டனர் வயது 1 - 8 வரையிலானவர்கள்.

சரத் பவாரை சாடும் வந்தனா சிவா !

சமூக ஆர்வலரும் சுற்றுச் சூழல் போராளியுமான வந்தனா சிவா வேளாண்துறை அமைச்சரானா சரத் பவாரை பதவி விலகக் கோரியுள்ளார். என்டோசல்ஃபன் பூச்சிக்கொல்லியை தடை செய்யாமல் அதற்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய வந்தனா இந்திய கிரிக்கெட் அவைக்கு (ICC) வழங்கிய 30 % வரித்தள்ளுபடி செய்ததன் மூலம் கிடைத்த இலாபத்தை என்டொசல்ஃபன் பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் கூறினார். முன்பு இராசாயனங்கள் போரில் பயன்படுத்தப்பட்டன. தற்போது உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய அரசின் செயல்பாடுகள் மக்கள் நலத்திற்கு எதிரானவை என்றும் குறிப்பிட்டார். 


                                என்டோசல்பனால்   பாதிக்கப்பட்டவர் -   நன்றி தெஹல்கா

என்டொசல்ஃபன் 60 நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும், 40 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக சந்தையில் 80 விழுக்காடுகள் இந்தியாவில் விற்பனையாகிறது. இந்தியாவில் பாதிப்புகள் கண்டறியப்பட்டதன் விளைவாக கேரளா, கர்நாடகத்தில் மட்டும் தடைசெய்யப்பட்டுள்ளது.


இலங்கையின் போர்க்குற்றம்

ஐக்கிய நாடுகள் சபை அமைத்த நிபுணர் குழு இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாக அறிக்கை அளித்துள்ளது. ஏன் இந்த ஈர வெங்காயமெல்லாம் முன்பே தெரியாதா? குற்றம் நடக்கும் வரை உடனிருந்து உதவி வழிகாட்டிவிட்டு, சும்மாவாச்சும் பம்மாத்துப் பண்ணுவதுதான் இந்த ஐநாவின் வேலை போலும்.  உலகின் 6 வது பிரபலமான மனிதப் பிறவி மஹிந்தவை என்ன்தான் செய்யப்போகிறார்கள். ஏதாவதுஒரு குழுவை அமைக்கிறார்கள். அறிக்கையை வெளியிடுகிறார்கள் அவ்வளவுதான்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சில பகிர்வுகள்


நாம் தமிழர் இயக்கத்தவரின் இழிசெயல் !

இது ஒரு நண்பர் சொன்னது.கோவைக்கு அருகிலுள்ள சிங்கா நல்லூரில் சீமானின் நண்பரொருவர் இருக்கிறார். சீமான் வரும்போதெல்லாம் அங்கு வருவார். அதனால் அங்கு சீமானுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்நிலையில் அங்கு தேர்தல் பரப்புரை நடதுவதற்காக வெளியூரிலிருந்து நாம் தமிழர் கட்சி இயக்கத்தவர்கள் சிலர் (10 -15 பேர் இருக்கலாம்) வந்தார்களாம், மைக்கை எடுத்தவுடன் கொஞ்சமும் பண்பாடின்றி தெருப்பொறுக்கிகளின் மொழியில் பேசத் தொடங்கி விட்டார்களாம். திமுக- பேராயக் கட்சிக்கு எதிராக பேச வந்தவர்கள் எடுத்தவுடன், " சோனியா ஒரு தே...... ! என்று ஆரம்பித்தவர்கள் இன்னும் என்னவெல்லாம் பேசினார்களோ தெரியவில்லை. மற்ற கட்சியினர் வந்து இருவருக்கும் தகராறு பண்ணியிருக்கிறார்கள். பின்பு காவல்துறையினர் வந்து சமாதானப்படுத்தினர். பின்பு மீண்டும் மைக்கை எடுத்தவர்கள் "கருணாநிதி ஒரு சொட்டத் தா......!
என்றார்களாம்.  பின்பு மீண்டும் அடிவாங்கியிருக்கிறார்கள்.

வடிவேலு   விஜயகாந்தை ஒருமையில் கொச்சையாகவே அழைக்கிறார். பீஸு, அந்தாளு, குடிகாரன் என்றெல்லாம் (சில நேரம் கலைஞரின் முன்பிலேயே) சொல்கிறார். தம்மை கலைஞர் என்றழைக்காமல், கருணாநிதி என்றதற்கே சங்கடப்பட்டவர் இதை மட்டும் ரசிக்கிறார்.

இவர்களுக்கெல்லாம் என்னதான் சொல்வது, இவனுங்கெல்லாம் என்னதான் செய்யப்போறான்கள் அரசியலில் ஈடுபட்டு? எல்லாம் நம்ம தலையெழுத்து இவனுங்க பேசறதெல்லாம் ஒரு அரசியல், கொள்கை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு...!

வெளிநாடுகளில் பணிப்பெண்கள் அனுபவிக்கும் நரக வாழ்க்கை

இதை பெண்ணியம் இணையத்தில் கண்டேன். நன்றி பெண்ணியம்

Maid in Lebanon from Forward Production on Vimeo.


Maid in Lebanon 2 : Voices from Home from Forward Production on Vimeo.


கிரிக்கெட் சில சகிக்க முடியாத வக்கிரங்கள்

கிரிக்கெட் என்றாலே எனக்குப் பல விசயங்களில் பற்றிக் கொண்டு வரும். அதில் சிலவற்றை மட்டும் இங்கே பகிர்கிறேன். 

"Indian team penalized by animal activists for hunting 11 Kangaroos last thursday, and to pay penalty by hunting 11 street dogs for today. Jai hind." 

இந்தக் குறுஞ்செய்தி இந்திய பாக். அணிகளுக்கிடையே போட்டி தொடங்கும் முன்பு வந்தது. பலரும் இதை படித்திருக்கவும் பகிர்ந்து கொண்டிருக்கவும் கூடும். இதில் வரும் "street dogs" என்பதற்குப் பதிலாக "terrorists" என்றும் சிலர் அனுப்பியிருந்தனர்.இதுதான் கிரிக்கெட் வளர்க்கும் தேசபக்தி. எதிரணி வீரர்களை வக்கிரமான விமர்சனங்களைக் கொண்டு ஏளனமாக சித்தரிப்பதுதான் இந்திய தேசபக்தி. கிரிக்கெட் நடக்காத வேறு நாளில் தேசபக்தியைப் பற்றிப் பேசினாலே எள்ளி நகையாடுவார்கள், கிரிக்கெட் நடக்கும் போது பொங்கும் தேசபக்தியை விமர்சித்தாலோ கொலையே செய்தாலும் செய்வார்கள். இன்னும் சிலர் தமது சொந்த அரசியல் கருத்துக்களைக் கொண்டுபோய் கிரிக்கெட் போட்டிகளில் திணிக்கிறார்கள்.

"உலகக்கோப்பை வெற்றி மும்பைத் தாக்குதலில் இறந்தவர்களுக்குச் சமர்ப்பணம்." - கௌதம் காம்பிர்.

இது பாகிஸ்தான் எதிர்ப்புக்காக மட்டுமே சொல்லியிருக்கிறார் ,  மும்பை கலவரத்தில் இறந்த முஸ்லிம்களோ அல்லது விதர்பா விவசாயிகளோ கிரிக்கெட் வெற்றியை சமர்ப்பிக்குமளவுக்குத் தகுதி பெறவில்லை போலும்.

"உலகக்கோப்பை வெற்றி போரில் இறந்த (சிங்கள)வீரர்களுக்குச் சமர்ப்பணம்"  -  சங்கக்காரா
நேர்மையிருந்தால் லசந்த விக்ரமதுங்காவிற்கு சமர்ப்பித்திருக்கலாம்.

"உலகக்கோப்பை வெற்றி (புலிகளுக்கெதிரான) போரில் பெற்ற வெற்றிக்கு இணையானது"  -  சிறையில் களிதின்னும் சரத் ஃபொன்சேகா. 

மகிந்தாவுடன் கருத்து வேறுபட்டு தேர்தலில் தோற்று, போர்க்குற்றங்களை வெளியிடத் தொடங்கிய்போது கைது செய்யப்பட்டு, தற்போது சிறையிலிருப்பதால் இந்திய எதிர்ப்பு பேசி சிங்கள தேசபக்தர்களைக் கவர்கிறார். 

சிங்கள இனவெறிக் கடற்படையினர் இந்திய - இலங்கைப் போட்டிகளின்போது தமிழக மீனவரை அடிப்பதற்கு இதை ஒரு காரணமாகவும் சொல்வானுகளாம்.

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதைப் போல இன்னும் சில ஈழத்தமிழர்கள் இந்திய அணி இலங்கையத் தோற்கடித்ததை எண்ணி மகிழ்கிறார்கள். இலங்கையில் உள்ளதமிழர்கள் இந்திய வெற்றியைக் கொண்டாடி சிங்களர்களுடன் மோதலும் நடந்திருக்கிறது. இலங்கை வெற்றி பெற்றிருந்தாலோ புலிகளுடனான போரில் பெற்ற வெற்றிக்கு இணையாகவே கொண்டாடியிருப்பார்கள், அவர்கள் தமிழர்களை இந்தியர்களாகவே பார்ப்பவர்கள், அதைத்தானே சரத் பொன்சேகா எதிரொலித்தார்.

இப்படியாக தமது அற்பமான உணர்வுகளை வெளிப்படுத்த கிரிக்கெட்டைப் பயன்படுத்துகிறார்கள். 

ஒரே ஆறுதல் ஷாகித் அஃப்ரிடிதான்!

தோற்றுப்போய் நாடு திரும்பியவுடன், பாகிஸ்தானின் தோல்விக்கு மன்னிப்புக் கேட்டார். தன்னுடன் விளையாடி  வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்கு வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்தார். "கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள். நாம் இந்தியாவின் விளம்பரங்கள், திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் என அனைத்தையும் விரும்பிப் பார்க்கிறோம். திருமணச்சடங்குகள் அனைத்திலும் இந்தியர்களுடன் ஒன்றுபடுகிறோம். பின்பு ஏன் இந்தியர்களை வெறுக்க வேண்டும் ?" என்று பாகிஸ்தானிய வெறியர்களிடம் எதிர்கேள்வி கேட்டுள்ளார். இந்தியாவில் பாகிஸ்தான் வெறுப்பை ஓயாமல் வளர்க்கும் ஊடகங்கள் போலவே பாகிஸ்தானில் இந்திய வெறுப்பை வளர்க்கின்றன. கிரிக்கெட் அதற்கு ஒரு முக்கிய கருவியாகவே அங்கும் இருக்கிறது, இந்தியாவைப் போலவே.சில வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் அன்றைய தலைவரும், சானியாவின் கணவருமான ஷோயப் மாலிக் சொன்னது நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் நடந்த போட்டி என்று நினைக்கிறேன். போட்டி முடிந்தவுடன் சொன்னார்.

"பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளித்த முஸ்லிம்களுக்கு நன்றி"

இதனுடன் ஒப்பிடுகையில் அஃப்ரிடி எவ்வளவோ மேன்மையாகவே சொல்லியிருக்கிறார். 

மேலும் ஐபிஎல் போட்டிகளில் பாரபட்சமாக நடந்து கொண்டு   பாகிஸ்தான் வீரர்கள்  சேர்க்கப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். "இதில் மட்டும் பாகிஸ்தான் வீரர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தக் கூடாது, அதனால் நாங்கள் மிகவும் புண்பட்டுள்ளோம்" என்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.   

நாங்கள் இந்தியாவில் விளையாடுவதற்கு எந்த ஆட்சேபமுமில்லை, தற்போது உலகக்கோப்பையில் விளையாடினோம். நான் ஐபிஎல் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்பது இதன் பொருளல்ல. இளம் வீரர்களுக்கு இது ஒரு அடித்தளமாக இருக்கும். அவர்கள் தமது முத்திரையைப் பதிக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் "இரு நாடுகளுக்கிடையே இன்னும் அதிக போட்டிகள் நடப்பதன் மூலம் பதட்டத்தைத் தவிர்க்கலாம், ஊடகங்கள் வளர்க்கும் தேவையற்ற பரபரப்பையும் குறைக்கலாம்" என்றார்

அது சரிதானே ? அவர் பணத்துக்காக விளையாட விரும்புவதாகவே இருக்கட்டும், மற்றவர்கள் மட்டும் எதற்கு விளையாடுகிறார்களாம்? சில வருடங்களுக்கு முன்பெல்லாம் உலகக் கோப்பை, மற்ற போட்டிகளில் இல்லாத போது இந்திய, பாகிஸ்தான் உட்பட அனைத்து வீரர்களும் இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்காக விளையாடி பணம் பெறுவார்கள். தற்போது ஐபிஎல் அவ்வளவுதான் வேறுபாடு. 2009-இல் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் காரணமாக முதல் ஐபிஎல் தவிர வேறு எதிலும் பாகிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படவில்லை. இவர்களுக்கு பாகிஸ்தானைப் புறக்கணிக்க வேண்டுமெனில் உலகக்கோப்பையில் புறக்கணித்திருக்க வேண்டும். பரபரப்பையும், வெறியையும் ஏற்றி ஆயிரம் கோடிகளுக்குச் சூதாட்டங்கள் வரை பல திருவிளையாடல் நடக்கும் என்று தெரிந்துதானே உலகக் கோப்பையில் பாகிஸ்தானையும் சேர்த்தார்கள். இது என்ன வகை தேசபக்தியோ ? உண்மையில் ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தானியரையும் சேர்த்தால் இரு நாடுகளுக்கிடையே இன்னும் நல்லுறவு வளரும் என்பது என் தாழ்மையான கருத்து ஏனென்றால் கிரிக்கெட் போட்டிகளால் நட்புறவு வளரும் என்றுதானே பாகிஸ்தானின் பிரதமரை அழைத்தார்கள்.

ஐபிஎல் மூலம் நடந்த ஒரே நல்ல விசயம் அந்த (போலி) தேசபக்தி ஒழிந்ததுதான். கிரிக்கெட் எப்படி தேசபக்தியின் அடையாளமாகும்? பிரியாணிக்குள் ரசத்தை ஊற்றியது போல பொருந்தவில்லையே ? ஆனால் வெற்றிகரமாக அது இரண்டையும் கலந்துதான் பலகோடிகள் கல்லா கட்டுகிறார்கள்.

கிரிக்கெட்டை gentleman's play என்று சொல்வார்கள் எதற்காகவோ ? 


அந்துமணியின் அக்கிரமம்

இன்று வாரமலரில்  அந்துமணியாரின் பதில்களைப்படித்துத் தொலைத்தேன். உலகமகா எரிச்சல் !

"மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்படாமல் இருந்து, ஆட்சி மொழியாக ஒரே மொழி மட்டும் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?" என்ற கேள்விக்கு அந்துமணியின் பதில் 

"மொழிவழி மாநிலங்களாகப் பிரித்ததில் தமிழகம் மட்டுமே, "மெயின் ஸ்ட்ரீமில்' சேராமல் பின்தங்கி விட்டது. பிறமொழி அறியாத சில தான்தோன்றிகளும், சுயலாபம் கருதிய சில அரசியல்வாதிகளும் இதற்குக் காரணமாகி விட்டனர். மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்ததால், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் குறுகிய நோக்கம் கொண்ட சில கும்பல்கள் தோன்றி, பிற மொழி பேசும், குறிப்பாக, தமிழர்களை தங்கள் பகுதிகளை விட்டு வெளியேற போராடுகின்றனர். மொழிவழி மாநிலங்களாக பிரிக்கப்படாமல் இருந்திருந்தால், இப்பிரச்னைகள் தோன்றி இருக்காது."

என்னவொரு வெறி! மொழிவாரியான மாநிலங்களாகப் பிரித்ததற்கே இவருக்குப் பொறுக்கவில்லை.அதை ரொம்ப விவரமாக தமிழர்கள் தாக்கப்படுவதுடன் தொடர்புபடுத்தி நஞ்சைக் கக்கும் லந்துமணி  இதற்குமேலும் தன்னாட்சியெல்லாம் கேட்டால் என்னதான் செய்வார் நாமெல்லாம் பாவம்!

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment