நந்திகிராமை நினைவூட்டும் வகையில் கூடங்குளம் போராட்டத்தின் மீது அடுத்த அவதூறு - நக்சல்கள் தொடர்பாம்

கூடங்குளம் போரட்டத்தில் நக்சல் தொடர்பு என நாராயணசாமி சொல்லியிருக்கிறார். அடுத்து நேரடியாகவே பாகிஸ்தான் தொடர்பு மாவோயிஸ்டுகள் மற்றும் சீனாவின் சதி என்று தொடங்கினாலும் ஆச்சரியமில்லை. இடிந்த கரையில் உதயகுமாருக்குப் பதிலாக உபயதுல்லாவோ உமர் முகமது என்ற பெயரில் தலைவரும், கிறித்தவர்களுக்குப் பதிலாக இசுலாமியர்களும் இருந்திருந்தால் மிக எளிமையாக வேலையை முடித்திருப்பார்கள் ஐ எஸ் ஐ உளவாளிகள் பாகிஸ்தான் சதி என்று. இன்னும் எத்தனையெத்தனை அவதூறுகள் கொண்டுவந்து கொட்டினாலும் இவர்கள் வெற்றி பெறப்போவதில்லை. இது போன்ற மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எந்த வகையான திட்டங்களைக் கொண்டுவரும்போதும் வெளிப்படும் பரவலான மக்கள் எதிர்ப்பை ஊடகங்கள் மறைத்தே வருகின்றன. போராட்டம் வலுவாக இருக்கும்போது பேச்சுவார்த்தை, வேலைவாய்ப்புக்கான உறுதிப்பாடு, நலத்திட்ட உதவி, இழப்பீடு என்ன அனைத்துப் பித்தலாட்டங்களையும் செய்து ஆசை காட்டுவார்கள். மசியவில்லையெனில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் வேறு ஒரு தளத்திலிருந்து பேசுவது வேறுவகையில் செய்தியை வெளியிடுவது வேலைக்கு உத்தரவாதமளிப்பது, பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பது என்ற பொய் வாக்குறுதிகள், அணு உலை பாதுகாப்பானது என்ற பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வது.
பேஸ்புக்கில் ஒருவரிடமிருந்து எடுத்தது


அடுத்து உளவியல் போரை நிகழ்த்த வேண்டியது. போராளிகளை ஆளுமைக் கொலை செய்வது. வெளிநாட்டுப் பண உதவி, மதவாதம், தீவிரவாதம், தேசதுரோகம், பொருளாதார வளர்ச்சி என்று ஊடகங்கள் மூலமாக அவதூறுகளையே வெளியிட்டு அதைப் பொதுக்கருத்தாக்கிப் பின்பு காவல்துறையையும் இராணுவத்தையும் விட்டு வன்முறை வெறியாட்டங்களை நடத்த வேண்டியது. இதுதான் நந்திகிராமில் நடந்தது. இடிந்தகரையிலும் நடக்கிறது. இது காந்தி நாடு இல்லை என்று எப்போதும் ஆட்சியாளர்கள் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள், எதில் என்றால் காந்திய வழியில் நடக்கும் போராட்டங்களைக் கூட நாங்கள் எப்படி எதிர்கொளவோம் என்று இராணுவத்தையும் துப்பாக்கிகளையும் வைத்துப் பதில் சொல்லுகிறார்கள். கொலை செய்து விட்டு கலவரத்தில் இறங்கினார்கள் சுட்டோம் என்று முடிப்பார்கள். மிச்சத்தை தினமலம் பார்த்துக் கொள்ளும். நந்திக்கிராம் போராட்டம் நடந்த போது மாவோயிஸ்டுகள் சதி என்றார்கள், மகிழுந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கவும் விவசாயிகளிடமிருந்து முப்போகம் விளைந்த விவசாய நிலங்களைப் பிடுங்கவென்று வெறியாட்டம் போட்டார்கள். அங்கு பெருமளவில் முஸ்லிம்கள் இருந்தார்கள் நந்திகிராம் வெறியாட்டம் முடிந்தபின்பு சிபிஎம் இல்லாத மற்றக் கட்சித்தலைவர்கள் மக்களைப் "பார்வையிட" சென்றார்கள். அங்கிருந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் தாய்மார்கள் சிபிஎம் கட்சியினராலும் காவல்துறையினராலும் நடந்த கொடுமைகளை அத்வானியிடம் சொல்லி அழுதார்களாம்.

இப்படி எதிரியிடமே சென்று அவர்களைக் கதற வைத்த கொடுமையைச் செய்தனர் அன்றைய மேற்கு வங்க ஆட்சியாளர்கள். இன்று அம்மா அவர்கள் தமது கொடுங்கரங்களை ஏவியுள்ளார். அதற்கு ஒத்தூதிய தோழர் தா பாண்டியன் கூடங்குளம் மக்கள் பண்த்தை  வாங்கிக்கொண்டு வெளியேற வேண்டும் என்று வெறிபிடித்துக் கத்தியுள்ளார். இதனால் மனம் நொந்த எழுத்தாளர் பொன்னீலன் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். இது மிகத் தாமதம் என்றாலும் இது சரியான முடிவுதான். இதே தா பாண்டியன் இரு வருடங்களுக்கு முன்பு பேசியதை மறக்க முடியாது. ஈழப்போரின் போது அம்மா திடீரென்று ஈழ ஆதரவ அவதாரமெடுத்தார் வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டு. அப்போது ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்தையும் நடத்தினார். அதில் கலந்து கொண்ட வைகோ, தா. பாண்டியன் ஆகியோர் அம்மாவுக்குப் புகழாரம் சூட்டினார்கள். அதில் பாண்டியன் ஒரு உலகமகா வக்கிரம் பிடித்த ஒரு பொய்யைச் சொன்னார். அது "அம்மா உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார் என்று தெரிந்த ஒரு ஈழப்பெண் வவுனியாவிலிர்ந்து தொலைபேசியில் இவரிடம் பேசினாராம். அவர் சொன்னாராம் அம்மா உண்ணாவிரதம் கேட்டு மிகவும் மகிழ்ந்த அவர் இனிமேல் என் தலையில் குண்டு விழுந்தாலுமே பரவாயில்லை என்று. என்ன ஒரு வக்கிரம் இது போலெல்லாம் பொய்யடிக்க யாரால்தான் முடியும்.

உள்ளம் பதைக்க வைக்கிறார்கள் என்னவாகுமோ என்று. உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவமாகிவிட்டதாம். இது போன்று போராட்டங்களெல்லாம் கொச்சைப் படுத்தப்படுகின்றன. ஊடகங்கள் அடுத்து அண்ணா ஹசாரேயின் போராட்டத்திற்கு முரசு கொட்டத் தொடங்கிவிட்டன. 200 நாட்களுக்கும் மேலாக துளி வன்முறையில்லாமல் நடந்து வரும் போராட்டத்திற்கு முடிந்த வர கேவலப்படுத்தும் வேலைகளும் எதிர்க்கருத்து உருவாக்கும் வேலைகளும் செவ்வனே நடக்கின்றன. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தினமலம் தொடர்ந்து வேலையைக் காட்டி வருகின்றது. அரசியல் கட்சிகள் வழக்கம் போ உயிர்நாடியான பிரச்சனையான கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பதை விட்டு தமது வேலையில் ஆழ்ந்துள்ளன. வாக்கு வங்கிக் கட்சிகள் ஆயிரமாவது முறையாக தமது புத்தியைக் காட்டியுள்ளன. சுரணை கெட்ட தமிழர்கள் கூடங்குளம் போராட்டத்தை தமது வயித்தெரிச்சல்களால் கரித்துக் கொட்டுகிறார்கள். என்னவோ உலை திறந்தவுடன் ஒரு பொத்தானை அமுக்கியவுடன் நாளையே மின்வெட்டு நீங்கி விடும் என்று கனவு காண்கிறார்கள். நாளையே உலை வெடித்து ஆயிரம் பேர் இறந்தாலும் குற்ற உணர்வு கொள்ள மாட்டார்கள் இவர்கள். அடுத்து அம்மா துரோகம் செய்து விட்டார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள் சிலர். நிச்சயம் அம்மா துரோகம் செய்ய மாட்டார். அதில் அவர் நேர்மையானவர். கருணாநிதியைப் போல அல்ல அவர். அவரை நம்பியது யாருடைய தவறு. ஈழமாகட்டும் கூடங்குளமாகட்டும் அவர் இப்படித்தான் செய்வார். ஈழ ஆதரவாளர்களுக்கு இடிந்த கரை ஒரு பாடம்தான் ஆனால் அதற்குக் கொடுக்கும்  விலைதான் அதிகம். ஒருவேளை 2009 - இல் நடந்த தேர்தலில் கருணாநிதி தோற்று அம்மா வென்றிருந்தால் இப்படித்தான் ஆப்படித்திருப்பார். ஈழப்போர் வழக்கம் போலவே நடந்து முடிந்திருக்கும்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தில் கன்னடர்கள், மலையாளிகள் மற்றும் பினாயக் சென்

முல்லைப் பெரியாறு பிரச்சனையின் போது எனது மலையாள நண்பர்கள் தமிழ்நாட்டின் இரட்டை விளையாட்டு என்று தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தினைப் பகிர்ந்திருந்தார்கள். அதில் 100 ஆண்டுகள் பழமையான அணையை வலுவானது பாதுகாப்பானது என்றும், அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அனல் மின்நிலையத்தை (இந்தியாவின் பெருமிதமான திட்டம் என்ற அடைமொழியுடன்) பாதுகாப்பில்லாதது என்றும் இரட்டை வேடம் போடுகிறது தமிழ்நாடு என்ற செய்தியுடன் இருந்தத்டு அப்புகைப்படம். அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தமிழர்கள் எந்தளவுக்கு அல்லது எந்தளவுக்கு முல்லை பெரியாறு விவகாரத்திற்கு ஆதரவளித்தார்கள் என்று. பாதித் தமிழர்கள் மலையாளிகளைத் திட்டுவதற்கே முல்லைப் பெரியாறு விடயத்தைக் கையிலெடுத்தார்கள் மாறாக முல்லைப் பெரியாற்றினால் பயன்பெறும் மக்களின் எதிர்காலம்  குறித்த கவலையிலல்ல.

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டுமென்பது ஒவ்வொரு கேரளத்தைச் சார்ந்தவனின் எண்ணமாக இருந்தது. ஏனெனில் அரசாங்கமே அப்படி ஒரு கருத்தைச் சார்ந்துதான் இயங்கியது. நாளிதழ்கள், வார இதழ்கள் இக்கருத்தைப் பரப்பின. சில இலட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து என்று அனைவருமே நம்பினார்கள். அணை எந்நேரமும் உடையலாம் என்ற நிலையில்தான் இருந்தது. இதன் அடிப்படியில் தான் இனவெறியும் இருந்தது. ஆனால் சில தமிழர்கள் தமிழ்நாட்டிலுள்ள மலையாளிகளை விரட்ட வேண்டும் கடைகளைத் தாக்க வேண்டும் என்ற நிலையில் வெறித்தனமாக இருந்தனர். இதில் முல்லைப் பெரியாற்றைக் காக்க வேண்டும் என்பதற்கான நோக்கத்தில் அல்ல.

அதே வகையில் கூடங்குளம் எதிர்ப்பில் தமிழகம் ஒற்றுமையாக இல்லை. அப்பகுதி மக்கள் சில அறிவாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்,  எழுத்தாளர்கள் என்ற சிறு அளவிலான தரப்பே இதை எதிர்த்து வருகின்றனர். பின்பு திட்டமிட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது இலக்கு வைத்து எதிர்ப்பரப்புரை திட்டமிட்டு நடுவண் அரசு தினமலர் போன்ற பார்ப்பன இதழ்களால் தொடர்ந்து அவதூறுகளாகப் பரப்பப்பட்டு வந்தது. அணுமின் நிலைய ஆதரவாளர்கள் என்றால் நாட்டு பற்றாளர்கள், அறிவியல் வளர்ச்சிக்கு ஆதரவாளர்கள் என்றும் எதிர்த்தரப்பினரோ தேசத்துரோகிகள், அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், மதவாதிகள், அமெரிக்கக் கைக்கூலிகள் என்ற சித்தரிப்புகள் ஆரம்பம் முதலே வைக்கப்பட்டு வந்தன. இந்தப் போரட்டத்தின் வீச்சாகத்தான் நடுவண் அரசால் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஊதிப் பெருக்கப்பட்டது. இதன் மூலம் கூடங்குளம் போராட்டத்தில் அம்மக்களுக்குத் துணை நின்ற மலையாளிகள், கேரள அறிவாளர்கள் (Intellectuals) முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக இதிலிருந்து பிரிந்து கேரளாவிற்கு ஆதரவாகச் சென்று விட்டனர்.

தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு அணையை எந்நேரமும் உடைந்து விடும் என்ற நிலையில் அணைகள் என்பவை தண்ணீர் வெடிகுண்டுகள் என்ற பரப்புரை கேரளாவின் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டு புதிய அணை கட்டப்படவேண்டும் என்றே கருதுகின்றனர். அரசியல் கட்சிகள், திரைப்படத் துறையினர், அறிவாளர்கள் ஒன்றாக இருக்கின்றனர். இதில் சில விதிவிலக்குகள் நேர்மையான தீர்வுக்காகப் போராடுகின்றனர் அது வேறு. ஆனால் தமிழகத்திலோ காலாவதியாகிப் போன அணுகுண்டுகளை மடியில் கட்டிக் கொண்டிருப்பதற்கு இணையான அனல் மின் நிலையங்களை எதிர்க்கும் உணர்வில்லாமல் தன்னலவாதிகளாக மாறியிருக்கின்றனர். இதற்காக அப்பகுதி மக்கள் மட்டுமே போராடுகின்றனர். இது தமிழகத்தின் பிரச்சனை என்ற அளவில் இது கவனம் பெறவில்லை. அரசியல் கட்சிகள் மக்களுக்கு எதிராக இருக்கின்றனர். அதே போல் மக்களுக்கும் கூடங்குளம் திறந்தால் போதும் என்ற அளவில் மாற்றப்பட்டு விட்டனர் மாதக்கணக்காக செயற்கையாக மின்வெட்டு உருவாக்கப்பட்டு இக்கருத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்று விட்டனர். அதன் ஒரு பகுதியாகத்தான் கூடங்குளம் விவகாரத்தில் ஆதரவு எதிர்ப்பு என இல்லாமல் நடுநிலை என்ற போர்வையில் போராட்டத்திற்கு எதிராக இருந்த ஜெயலலிதா தேர்தல் முடிந்தவுடன் காவல் துறையை ஆயிரக்கணக்கில் அனுப்பி தனது பாணியில் போராட்டத்தை முடக்கக் காத்திருக்கிறார் எவ்விலை கொடுத்தேனும்.

இத்தனை கேவலங்களுக்கு மத்தியிலும் அண்டை மாநிலங்களில் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும், போராட்டக்காரர்களின் மீதான அரசின் ஒடுக்கு முறைக்கெதிராகவும் அணு உலை எதிர்ப்பாளர்கள் இனம் கடந்து தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். திருச்சூரில் மனித உரிமைப் போராளி பினாயக் சென் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். திருச்சூரிலுள்ள சாகித்ய அகாடமி நிறுவனத்தில் இது நடத்தப்பட்டது அணு உலைக்கு எதிரானவர்கள் அமைப்பு இதை நடத்தியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள், அணு உலை எதிர்ப்பாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.


பினாயக் சென்


பெங்களூரில் நடந்த மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கெதிராகவும், போராட்டக் காரர்களுக்கு தமது ஆதர்வைத் தெரிவித்துள்ளனர்.  இதில் உரை நிகழ்த்திய மனோஹர் என்ற சமூக ஆர்வலர் "இப்போராட்டத்தினை கூடங்குளத்து மக்கள் போராட்டமென்றோஎன்றோ அல்லது தமிழர்கள் போராட்டமென்றோ சுருக்கக் கூடாது, இது மனித குலத்துக்கெதிரான அணுவாற்றல் அரசியலால் திணிக்கப்படும் அநீதி. தமிழக நடுவண் அரசுகள் ஏகாதிபத்திய அரசுகளின் வழிகாட்டலின் அடிப்படையில் செயல்படுகின்றன, சட்டப்பூர்வமான மக்களின் போராட்ட வடிவத்தைக் குற்றம் சாட்டுகின்றனர். இது அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும்" என்றார். இந்தியாவில் இயங்கும் அனைத்துவிதமான அணுவாற்றல் அடிப்படையிலான திட்டங்கள் திரும்பப் பெறப்படவேண்டும் என்றும், அணு உலையை இயக்கக் கோரும் தமிழக அரசின் திட்டம் திரும்பப் பெறப்பட வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட அணு உலை எதிர்ப்பாளகள் விடுவிக்கப்படவேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்துல்கலாமுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அறிவாளர்கள், உரிமை ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்ட மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டம் டவுன் ஹாலில் நடந்தது. குடிமக்கள் விடுதலைக்கான மக்கள் ஒன்றியம் (People’s Union for Civil Liberty ) என்ற அமைப்பு Vimochana, SICHREM, People’s Democratic Forum, Sangama, New Socialist Alternative ஆகிய அமைப்புகள் என பலருடன் சேர்ந்து நடத்தினார்கள்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஈழம் - மறைக்கப்படும் போர்க்குற்றங்களும் உண்மைக்குற்றவாளிகளும் !!

தற்போது சேனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படத்தைத் தொடர்ந்து செயற்கையான ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. என்னவோ இந்த புகைப்படங்களும் காட்சிகளும் இது வரையில் வெளியிடப்படாதது போன்று ஒரு சித்தரிப்பும் இதில் நிலவுகிறது. எதிர்பார்த்தது போன்றே பிரபாகரன் அவரது மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்படும் காட்சிகள் இதில் வெளிவரவில்லை. இந்த ஆவணப்படம் ஏற்கெனவே வெளியாகியிருந்த காட்சிகளும், புகைப்படங்களும் தொகுக்கப்பட்டு போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற ரீதியில் பேசுவதாகத் தெரிகிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அரசியல் செய்பவர்களின் ஆதரவுக்கான ஒரு தரவாகவே இந்தத் திரைப்படம் இருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது இது சும்மா இலங்கையை அச்சுறுத்திப் பணிய வைக்கும் அமெரிக்க நாடகம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. இதற்கு ஒத்து ஊதுவது ஐக்கிய நாடுகள் சபை என்ற அமெரிக்கக் கைப்பாவை. முதலில் ஏன் இந்த இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என்பது செல்லாக்காசு அல்லது தமது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள எத்தனிக்கும் அமெரிக்க, மேற்குலக நாடுகளின் நடவடிக்கை என்று சொல்லலாம்.

முதலாவதாக மனித உரிமை மீறல் குறித்துப் பேச அமெரிக்காவுக்கு எந்த அருகதையும் கிடையாது. அமெரிக்கா உலகம் முழுக்க மனித உரிமை மீறலை நிகழ்த்துகிறது, அல்லது தமது நலனுக்காக மனித உரிமையை மீறுபவர்களை ஆதரிக்கிறது. இதை கொண்டுவருவதன் மூலமாக அமெரிக்கா உட்பட மேற்குல வல்லரசுகள் தாம் மனித உரிமையை காப்பவர்கள் என்று காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.

அடுத்ததாக இவர்களும் போரை ஆதரித்தவர்கள்தான். இரு வருடங்களுக்கு முன்பு போர் நடந்த போது அதை எதிர்க்காமல் தற்போது போலவே ஒப்புக்கு மனித உரிமை மீறல் நடக்கிறது, புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று பேசினார்கள். இவர்கள் விடுதலைப்புலிகளின் கடந்த கால செயல்பாடுகள் தற்கொலைத் தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், குழந்தைகளை போரில் ஈடுபடுத்தியது வகையிலான காரணங்கள், தமது ஆலோசனையான மேலும் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முயலாமல் போரில் இறங்க முயன்றது, எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் நடக்கும் போர் தமது தடையற்ற வர்த்தகத்திற்கு, முதலீட்டிற்கு தடையாக இருந்ததால் இலங்கையில் "அமைதியை" வேண்டியது போன்ற காரணங்களால் புலிகளுக்கு கடும் எச்சரிக்கைகள் பின்பு புலிகள் பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்துத் தடை செய்தார்கள். மறைமுகமாக புலிகளுக்கு எதிரான நிலையையே கொண்டிருந்தன இந்நாடுகள். இங்கிலாந்து, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் போர்த்தளவாட விற்பனை, நிதி வழங்கல் என்று இலங்கையின் பக்கமே நின்றன.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அந்த போரை திட்டமிட்டு வழிவகுத்து நடத்தியது இந்திய அரசே ஆகும். இப்படிப் போர்க்குற்றவாளிகளே தமக்குள் நடத்தும் நாடகத்தில் இலங்கை அரசை மட்டும் தனிமைப்படுத்துகிறார்கள். உலக பயங்கரவாதி அமெரிக்கா கொண்டுவரும் தீர்மாணம் இலங்கைக்கு எதிராகவாம். இதை அடுத்த போர்க்குற்றவாளி இந்தியா ஆதரிக்க வேண்டுமாம். நல்ல கூத்து இது. தன்னுடைய இனவாத கொள்கைகளினால் இலங்கையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக குருதியை ஆறாக ஓட வைத்த இலங்கையின் சிங்கள இனவாதிகள் தான் விதைத்ததை அறுவடை செய்வதன் மூலமாக இலங்கையை மொத்தமாக அமெரிக்காவிடமும் இலங்கையிடமும் அடகு வைத்து விட்டனர்.

இன்னொன்று இந்த இனப்படுகொலை போர்க்குற்றம் ஆகியவற்றுக்குத் தீர்வும் நீதியும் வேண்டி நிற்பவர்கள் இந்தியாவின் தயவையும் அமெரிக்காவின் தயவையும் வேண்டி நிற்பதுதான் அசிங்கமாக இருக்கிறது. அதாவது எய்தவன் (இந்தியா) அம்பை (இலங்கை) ஆதரிக்கக் கூடாது என்கிறார்கள். சரி இந்தியாவின் போர்க்குற்றத்தை யார் விசாரிப்பது.

போரைத் திட்டமிட்டு வழிநடத்தி ஆயுதங்கள் வழங்கிய இந்தியா

செயற்கைக் கோள்கள் உட்பட அதிநவீன தொழில்நுட்ப உதவிகளுடன் உளவுத் தகவல்களை இந்தியாவுடன் இணைந்து இலங்கைக்கு வழங்கிய அமெரிக்கா

இங்கிலாந்தும் இப்போருக்கு நிதியளித்ததாக குற்றச்சாட்டுக்கள் உண்டு

இது குறித்தெல்லாம் இந்த ஆவணப்படம் பேசவில்லை

இலங்கை இராணுவத்துடன் இந்திய இராணுவத்தினர் நிற்கும் காட்சிகள் - ஈழப்போரின் இறுதி மாதங்களில் முல்லைத் தீவு முற்றுகையின் போது எடுக்கப்பட்டவை இப்புகைப்படங்கள்.


ஜனவரி 2009 -இல் இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் மாலத்தீவுகள், ஜப்பான், அமெரிக்கா, வங்கதேசம் ஆகிய நாடுகளின் இராணுவ அதிகாரிகள். இவர்களுடன் இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் இராணுவ அதிகாரிகள் ஒன்றாக இருக்கும் கண்கொள்ளாக் காட்சி
 
முல்லைத்தீவுக்குள் புலிகள் முடக்கப்பட்ட பின்பு கல்மடுக்குளம் அணையைத் தகர்த்து மிகப்பெரும் சேதத்தைப் புலிகள் இலங்கை இராணுவத்திற்கு ஏற்படுத்தினர் (இதில் 200 இந்திய இராணுவத்தினர் இறந்ததாகவும் ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி அல்லது வதந்தியும் நிலவியது அந்நாட்களில்). அதற்குப் பின்னர் சிங்கள இராணுவத்திற்கு அனுப்பப்பட்ட பீரங்கிகள் தமிழ்நாட்டின் வழியாக அனுப்பப்பட்ட அரிய காட்சி.
 Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பிரபாகரன், பாலச்சந்திரன் குறித்த காணொளிகள் வெளியிடப்படுமா ?

பிரபாகரனும் அவரது குடும்ப உறுப்பினர் உட்பட அனைத்து சரணடைந்த புலிகளின் தலைவர்களும் சித்ரவதையின் பின்னர்தான் கொல்லப்பட்டனர் என்பது ஓரளவுக்கு அனைவருமே ஊகித்துணர முடியும். தற்போது செய்திகள் கிளப்பப்படுவதைப் பார்த்தால் வீடியோக்கள் நிறைய சேனல் 4 இடம் இருப்பது போல் தெரிகிறது. அதற்கு வெள்ளோட்டமாக இசைப்பிரியாவின் உடலை சற்றே அருகில் இருந்து படம் பிடித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது ஏறக்குறைய இதற்கு முன்பு வெளியிடப்பட்ட புகைப்படங்களை விடவும் மிகவும் அருகில் காணக்கூடியதாகவும் கொலையின் கொடூரத்தை காட்டுவதாகவும் இருந்தது. மேலும் அவர்களிடமுள்ள காணொளிகளில் பிரபாகரன் உள்ள காட்சிகளும் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதை நினைக்கையிலேயே எனக்கு ஈரக்குலை நடுங்குகிறது. கடாஃபி கொல்லப்படுவதை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு வேளை வெளிவரும் பட்சத்தில் அது முன்னெப்போதுமில்லாத வகையில் கொடூரமாகவே இருக்கும். இதற்கு முன் வெளியிடப்பட்டிருந்த புலிகள் தளபதி ரமேஷ் விசாரணை செய்யப்படும் காணொளியும் குறிப்பிட்ட செய்திகளைக் கொண்டு வெட்டப்பட்டு சில பகுதிகள் மட்டுமே வெளியிடப்பட்டன. அது போலவே இம்முறையும் செய்யக்கூடும். எப்படியென்றாலும் இதயத்தைத் திடப்படுத்திக் கொள்ள இயலவில்லை. இதை வைத்து புதிய போர்க்குற்றம் வீடியோ அதிர்ச்சி பரபரப்பு கொடூரம் என்று தலைப்பில் போட்டு வணிகமாக்கவும் சிலர் தயங்கவில்லை. 

 பல வீடியோக்களும், புகைப்படங்களும்  வந்து கொண்டேயிருக்கின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள பாலச்சந்திரன் புகைப்படம் ஏற்கெனவே இரு ஆண்டுகளுக்கு முன்பே வெளியானதுதான். தமிழரங்கம் இணையத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பே போர் முடிந்த சில நாட்களிலேயே வெளியிடப்பட்டது. மேலும் பிரபாகரன் படுகொலையைப் பற்றி எழுதப்பட்டிருந்த கட்டுரையைக் காட்டி செய்திகளில் ஜெயா தொலைக்காட்சி மட்டுமே ஒளிபரப்பியது. மற்றவை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் அல்லது மர்மம் நிலவுகிறது என்றே செய்தி வெளியிட்டன. பிரபாகரன் கொலை செய்யப்பட்டபின் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வந்து விட்டன. பிரபாகரன் நிர்வாணப்படுத்தப்பட்டதும், சித்ரவதையின் பின்னர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டதும் இதுவரை கிடைத்த புகைப்படங்களிலேயே அறியலாம். சரணடைந்த புலிகள் விசாரிக்கப்படும்,  படுகொலை செய்யப்படும் காட்சிகள் நிச்சயமாக வீடியோவும் எடுக்கப்பட்டிருக்கும். அது நிச்சயம் பல பேரின் கைகளில் இல்லாமல் இருக்காது. அது வெளிவரவும் சாத்தியமில்லை. அது அவர்களுக்கு  அவர்களே தோண்டும் சவக்குழியாகும்.

இது குறித்து நான் எழுதிய கட்டுரையும் அதன் இறுதியில் பிரபாகரன் உடல் சோதனை காணொளியும் உள்ளது.

பிரபாகரன் படுகொலை பாலச்சந்திரன் படுகொலை குறித்து தமிழரங்கம் தளத்தில் வெளியான கட்டுரைகள்.


ஆனால் சேனல் 4 இதைத் தற்போது வெளியிடப்படவேண்டிய நோக்கமென்ன ? இலங்கை அரசுக்கெதிராக மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் தமிழ் உலகின் கவனத்தைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது. இதற்கும் முன்பு சில போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. 10 பேர்கள் கைகள் கட்டப்பட்டு கீழே உட்கார வைக்கப்பட்டிருந்தனர். இசைப்பிரியா உட்பட இன்னும் பலர் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தனர் இவை வெளியிடப்பட்டது எப்போது தெரியுமா மகிந்த ஏதோ உரை நிகழ்த்துவதற்காக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக்த்திற்கு வரவேற்கப்பட்டிருந்தார். அங்கே இந்த போர்க்குற்றக் காட்சிகளின் வெளியிட்டதன் விளைவாக தமிழர்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பில் அங்கே மகிந்தனுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

இதன் விளைவாக அவர் தனது உரையை நிகழ்த்தாமலே வெளியேற நேர்ந்தது. அந்த ஆத்திரத்தில் நாடு திரும்பிய மகிந்த ஈழத்திலிருந்த தமிழ் மக்களைக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்க்கெதிராக ஜனாதிபதியை அவமதித்ததற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வைத்து தமது அரிப்பைத் தீர்த்துக் கொண்டார். இப்படி மகிந்தாவின் இங்கிலாந்து வருகையின் போதே சேனல் 4 அந்த போர்க்குற்றக் காட்சிகளை வெளியிட்டு எதிர்ப்பைத் தூண்டியது. தற்போது அதே போல் இலங்கைக்கெதிராக மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுக்கத் துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே இந்த போர்க்குற்ற ஆவணங்களை வெளியிடக்கூடும் என்று தோன்றுகிறது. மேலும் இந்த தீர்மானத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை. இலங்கை தண்டிக்கப்படும் பட்சத்தில் போரினை தயாரித்து வழங்கிய இந்தியாவும் இதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக போர்க்குற்றம், மனித உரிமை நாடகமாடும் மேற்குலகும் அமெரிக்காவும் அதைத்தான் ஆஃப்கானிலும், ஈராக்கிலும், ஈரானிலும் செய்து வருகின்றன. மேலும் ஈழப்போருக்கு 200 கோடிகளை இங்கிலாந்து வழங்கியதும் எப்போதோ வெளிவந்த உண்மை. போரின்போது புலிகள் தொடர்பான உளவுத் தகவல்களை அமெரிக்கா வழங்கியதும் இரகசியமில்லை. புலிகளுக்கே இது தெரிந்திருந்தது. புலிகளை அழிக்க வேண்டுமென்பது அனைத்து நாடுகளின் தேவையாக இருந்ததுதான். தற்போது இலங்கையின் மீதான ஆதிக்கம் செய்யவதற்கு ஏற்பட்ட பங்காளிச் சண்டையில் மேற்குலகும், அமெரிக்காவும் ஒரு புறமும் இந்தியா, சீனா இரஷ்யா, இரான் போன்ற நாடுகளும் எதிரெதிர் நிலையில் நிற்கின்றன. போர்க்குற்றம் மறுவாழ்வு என்ற தமிழர்க்கான நீதி இதில் சிக்கி சின்னாபின்னமாகிறது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

திமுகவில் முளைத்த சுயமரியாதைச் சிங்கங்கள் !

இந்த அதிசயம் தமிழ்நாட்டின் அதிசயமான கூடங்குளத்தில் நடந்துள்ளது. இந்த சுயமரியாதை எனும் சொல் ஒரு காலத்தில் தமிழ்நாட்டைப்பிடித்து உலுக்கியது. இன்று வரை அது வீரியம் மிக்க சொல்லாக உள்ளது. தற்போது திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாடிய இத்தருணத்திலோ அந்தக் கட்சியும் அதன் தலைவருக்கும் உள்ள மதிப்பு எந்தளவுக்கானது என்பது தெரியும். திராவிடம் என்றாலென்னவென்ற தலைமுறையும் உருவாகியிருக்கிறது இதற்குப் பெரியார் காரணமல்ல. திராவிட இயக்கம் சிறு சிறு மாற்றங்கள் முதல் பெரிய மாற்றங்கள் வரை அனைத்து வகையிலும் ஓரளவு வெற்றியீட்டியுள்ளது என்பதையும் மறுக்க இயலாது.

எடுத்துக்காட்டாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி, அரசுப் பணி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் உரிய பிரதிநிதித்துவம், பிராமணரல்லாத மற்ற சமுதாய மக்களுக்கும் இவ்விஷயங்களில் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தையும் உரிமையையும், மாநில மற்றும் மத்திய அரசு இரண்டிலும் பெற்றுத் தந்ததில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு அளப்பறியது. அதிலும் மத்திய அரசுப் பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை சட்ட ரீதியாக பெற்றுத் தந்ததில் டாக்டர் கலைஞர் அவர்களுடைய உழைப்பும், பங்களிப்பும் வேறு எவரையும் விட முன்னிலை வகிப்பதாகும். (நன்றி
). இதெல்லாம் அண்ணா பெரியாருடன் முரண்பட்டு திராவிடர்கழகத்திலிருந்து பிரிந்து திமுகவைக் உருவாக்கி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றாமல் சாத்தியமாகியிருக்காது. சமச்சீர் கல்விக்கான தொடக்கப்புள்ளியாக கொண்டுவரப்பட்ட பாடத்திட்டம், இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

அதே நேரம் திராவிட இயக்கம் பெரியாரால் எந்த நோக்கத்துடன் துவங்கப்பட்டதோ அதற்கு நேரெதிரான விளைவுகளுக்கும் காரணமாக இருந்தது திமுக தான் என்பதையும் மறுக்கவியலாது. எடுத்துக்காட்டாக ஜாதிக்கட்சிகளை வளர்த்து விட்டதைச் சொல்லலாம். இன்னும் எத்தனையோ உண்டு. இருப்பினும் எத்தனை வகையில் பித்தலாட்டம் செய்தும், மற்ற எந்த மாநிலத்தைச் சேர்ந்த சராசரிக் கட்சிகள் செய்யும் அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்தாலும் அதற்கென்று ஒரு தனித்துவமிருந்தது. பெரியாரின் வழிவந்த கட்சி என்பதுதான் அது. ஓரளவிற்கு பார்ப்பன எதிர்ப்புடன் இருந்தே வந்தாலும் 30 வருடங்களுக்கு முன்பிருந்தளவுக்கு வீரியமில்லாமல் பல்லில்லாப் பாம்பாகவே இருக்கிறது. அதுவும் கருணாநிதி, பாஜகவுடன் கூட்டணி வைக்குமளவுக்கு ஆனபின்பு எல்லாவற்றுக்கும் கொள்கையை உரிமையை விட்டுக் கொடுத்து தனது அரசியல் அதிகாரத்தை, ஆதாயத்தைத் தேடிக்கொள்ளத் தவறியதேயில்லை.

இப்படியான சமரசப்போக்கிலான அரசியல்தான், எல்லா தீமைகளுக்கும் காரணமாக இருந்து, திமுகவின் நிறுவனராகிய அண்ணாவின் பெயரிலேயே அதற்கு எதிரான அரசியல் கட்சி உருவாகி, பார்ப்பனர் ஒருவரே அதன் தலைமையைக் கைப்பற்றியிருப்பது பெரியாரிய அரசியலுக்கே ஒரு நெத்தியடிதான். அடுத்து பெரியாரின் கொள்கைக்கு நேரெதிர் கொள்கைகளைப் ஊடகங்களின் வழியாகப் பரப்பி கல்லா கட்டுன் கருணாநிதி உறவினரின் சன் குழுமம், அழகிரியின் தாதா ராச்சியம், காங்கிரசுடன் கூட்டணி வைத்ததுக் கொண்டு, ஊழல்கள் உட்பட எந்த ஒரு தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகளின் கீழ்த்தரமான செய்கையில் ஈடுபடுவது. உலகெங்குமில்லாதவகையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியது, இலவசத்தின் பெயரால் மக்களை ஏமாளியாக்குவது என இன்னும் நீள்கிறது. இது பெரியாரின் தோல்வியல்ல. சமரசப்போக்கில்லாமல் தேர்தல் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது என்று சமாதானம் பேசும் கருணாநிதி ஆதரவுக் குரல்கள், இதற்குப் பதில் சொல்ல முடியாது. எதை வைத்துக் கொண்டு கருணாநிதியை ஆதரிப்பது என்றால் அதிமுக ஜெயலலிதாவின் செயல்களோடு ஒப்பிட்டு இந்தளவுக்கு திமுக மோசமில்லை என்றளவில்தான் இருக்கிறது. அடுத்து ஓரளவு பார்ப்பன எதிர்ப்பாளர்களாக இருப்பது போல் காட்டிக் கொள்வது.

இபடியாக இருக்கும்போத, இதற்கெல்லாம் மகுடம் சூட்டியது போல் 3 வருடங்களுக்கு முன்பு ஈழப்போர் நடந்த போது காங்கிரசுடன் சேர்ந்து நடத்திய நாடகங்கள் உச்சகட்ட வெறுப்பை திமுகவை சம்பாதிக்க வைத்தன. ஈழப்போர் உச்சத்திலிருந்த போதுதான் கலைஞர் தொலைக்காட்சியின் நகைச்சுவைப் பதிப்பான சிர்ப்பொலி அலைவரிசை தொடங்கப்பட்டது. போரை நிறுத்துவதற்காக 6 மணிநேரம் உண்ணாநிலை இருந்த கருணாநிதி போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்து உண்ணாநிலையை முடித்தார் பின்பு போர் நிற்கவில்லையே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மழை நின்ற பின்பு நீடிக்கும் தூறலைப் போன்றே இதையும்(போர் நிறுத்தப்படாததை) கருத வேண்டுமென்றார். இது போன்ற செய்கைகள் மிகவும் எரிச்சலூட்டியதாகும். தனது வாய் சாமர்த்தியத்தை இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று இந்துத்துவாக்களைக் கேட்ட போது ரசித்து சிலிர்த்தேன் ஆனால் அதையே ஈழப்போரின் போது தனது நக்கலைக் காட்டிய போது எரிச்சல்தான் வந்தது. இப்படித் தனது பித்தலாட்டங்களுக்கெல்லாம் சாமர்த்தியமாகப் பதிலளித்து சமாளிப்பவர்தான் கலைஞர். இவர் என்ன செய்தாலும் ஆதரிப்பார்கள் திமுகவினர். இத்தனைக்கும் அவர்கள் சாமானியர்கள் அல்ல. வரலாறு, பெரியாரியம் அறிந்த சுயமரியாதைக்காரர்கள், இப்படி சுயமரியாதைக்கெதிராக எந்த செயலைச் செய்தாலும், அதை ஆதரிப்பார்கள் தனது திறமையான வாதத்தைக் கொண்டு, இதை ஜெயலலிதா என்ன செய்தாலும் அதை நியாயப்படுத்தும் சோ வைப் போன்றவர்கள்தான். மக்களின் சராசரியான நாளும் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக போராடாதா ஒரு கட்சியாகவே திமுக சராசரி மக்களிடமிருந்தே தனிமைப்பட்டுப் போய்விட்டது.

தற்போது தலைப்புக்கு வருவோம். இப்படியாக சுயமரியாதையையும் கொள்கையையும் தமது ஆட்சிக்காகவும், பதவிகளுக்காகவும் துறந்த திமுகவினரில் சில பேர்கள் தமது சுயமரியாதையை மீண்டும் காட்டியுள்ளனர்கள், முத்தாய்ப்பாக திமுக தலைவருக்கெதிராகவே. காரணம் தமது பிரச்சனைக்கு ஆதரவு தராத தலைவர் எதிர்களுக்கு ஆதரவாகப் பேசியதால்தான் கட்சியைத் துறந்து கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்கள் கூடங்குளம் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த போராட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த திமுகவினர். பொதுவாக வாக்குக் கட்சிகளின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாகக் கட்சியிலிருந்து விலகுவதும், மற்றொரு கட்சியில் சேர்வதும் இயல்பானதுதான். ஆனால் இங்கோ தமது வாழ்வாதாரப் பிரச்ச்னைக்கு எதிராக தலைவர் குரல் கொடுத்ததால் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டார்களாம், கரை வேட்டியை எரித்தார்களாம்,. தமது ஆரம்பகால சுயமரியாதையை மீட்ட சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள். 

நன்றி கீற்று

தமது ஆரம்பகால சுயமரியாதையை மீட்ட சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள். இது குறித்த கட்டுரையைக் கீற்று இணையத்தில் வாசிக்கலாம்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment