பிரபாகரன் படுகொலையும் தமிழர்களின் கள்ள மௌனமும்

 இந்த  வருடத்துடன்  4ம்  ஈழப்போர்  முடிந்து  இரு  வருடங்கள்  முடிந்தும்  விட்டன.  இதுவரையில்  பிரபாகரன்  படுகொலையைப்  பற்றி  பிரபாகரனை  ஆதரித்தவர்கள்  எனப்படுபவர்கள்  ஒரு  மூச்சையும்  விடவில்லை.  மாறாக  பிரபாகரன்  உயிருடன்  இருப்பதாகவும்  திரும்பவும்   வருவார்கள்  என்றெல்லாம்  கூறியவர்கள்  மக்களின்  மறதியை  மனதில்  கொண்டே  சொல்லியிருக்கக்  கூடும்.  ஈழப்படுகொலைகளை  நினைவு  கூரும்  வேளையில்  புலித்தலைவர்கள்  படுகொலைகளை  மட்டும்  பேச  மறுக்கிறார்கள்.  பொத்தாம்  பொதுவாக  இனப்படுகொலைகளை  பற்றிப்  பேசி  உணர்ச்சிவயப்படுத்தி  பிரபாகரன்  கொலை  செய்யப்பட்டதை  மட்டும்  சாதுரியமாக  பேசாமல்  தவிர்த்து  விட்டு  அவரைப்  புகழ்ந்து  பேசி  கைதட்டல்  வாங்கிக்  கொள்கிறார்கள்.

இருவருடங்களுக்கு  முன்பு  போர்  முடிந்த  மாதங்களில்  இருந்த  மனநிலையின்  காரணமாக  ஒரு  வகையான  ஆறுதல்  செய்தியாக  அதை  நம்பும்  நிலையில்தான்  அனைவருமிருந்தனர்.  மிகப்பெரும்  தோல்வியின்,  இனப்படுகொலையின்  மாற்றாக  தேசியத்தலைவர்  உயிருடன்  இருக்கிறார்  என்ற  செய்தி  பெருமூச்சு  விடும்  வகையில்  நம்பிக்கையின்  ஒளிக்கீற்றாக  அனைவருக்கும்  இருந்தது.  ஆனால்  அவர்கள்  கொல்லப்படக்  காரணமாக  இருந்தவர்களுக்கோ  பிரபாகரனை  உயிருடன்  இருப்பதாக  ஒரு  கருத்தினை  பரப்பி  அதை  உயிருடன்  வைத்திருப்பது தமது  பிழைப்பிற்கான  அரசியல்  தேவையாக  இருந்தது.  புலத்தில்  இருந்த  புலித்தலைவரான  கேபி  முதலில்  பிரபாகரன்  நலமாக  இருப்பதாகவும்  தாம்  அவருடன்  பேசியதாகவும்  தெரிவித்திருந்தார்.  பின்பு  அவரே  நிகரற்ற  தலைவர்  தலைவர்  பிரபாகரன்  வீரச்சாவடைந்து  விட்டதாகக்  கூறினார்.  புலிகளின்  தலைவராகவும்  தம்மை  அறிவித்துக்  கொண்டார்  கேபி.  பின்பு  இலங்கை  உளவுத்துறையால்  கடத்தப்பட்டாரா  அல்லது  பாதுகாப்பாகக்  கொண்டு  செல்லப்பட்டாரா  என்று  தெரியவில்லை,  தற்போது  நம்பிக்கைதான்  முக்கியமென்று  போரில்  பாதிக்கப்பட்ட  மக்களிடம்  நம்பிக்கையாக  பேசி 
வந்தார் பின்பு ஒரு தகவலுமில்லை.

மாறாக  இன்னொரு  குழுவினரோ  பிரபாகரன்  உயிருடன்  இருப்பதாகவும்  வன்னிக்காட்டுக்குள்  சில  ஆயிரம்  புலிகளுடன்  பதுங்கியிருந்து  போருக்குத்  தயாராவதாகவும்  கதையளந்தனர்.  இன்னும்  சிலரோ  அவர்  ஏற்கெவே  தப்பிச்  சென்றுவிட்டாரென்றும்  கனடாவிலோ  இந்தோனேசியாவிலோ  இருப்பதாகவும்  செய்திகளோ  உலவின.  தமிழ்நாட்டுப்  புலி  ஆதரவத்  தலைவர்கள்  பிரபாகரன்  உயிருடன்  இருப்பதாக  உறுதியளித்தும்  5  வது  ஈழப்போர்  குறித்தும்  ஈவு  இரக்கமின்றியும்  பேசியும்  வந்தனர்.  பிரபாகரனின்  உடலை  இரண்டாவது  நாளிலேயே  இலங்கை  அரசு  வெளியிட்டு  விட்டது.  ஆனால்  அது  போலி  என்றும்  சிங்கள  அரசு  தமிழர்களை  ஏமாற்ற  செய்யும்  சதி  என்றும்  கூறினார்கள்.  ஏனெனில்  பிரபாகரன்  போன்ற  தோற்றமுடைய  ஒரு  உடலைக்  காட்டியும்  தந்திரமாக  புலித்தலைவர்  இறந்துவிட்டதாகக்  கூறுவதன்  மூலமாக  தமிழர்களின்  போராட்டத்தை  சீர்குலைக்கும்  ஒரு  திட்டமாகவும்  சித்தரிக்கப்பட்டது.  தொலைக்காட்சியில்  காட்டப்பட்ட  உடல்  பிரபாகரனுடையது  இல்லையென்றும்,  அவர்  பத்திரமாகவும்  நலமாகவும்  இருப்பதாகவும்  அனைவரும்  நம்ப  வைக்கப்பட்டார்கள்.  அவர்  இறந்து  விட்டார்  என்று  கூறுவதே  தமிழினத்திற்குச்  செய்யும்  துரோகம்  என்ற   கருத்தும்  பரவலாக  இருந்தது. 

மே  மாதம்  2009  ம்  ஆண்டு  15  லிருந்து  17  வரையிலான  நாட்களுள்  ஏதோ  ஒரு  நாளில்தான்  மிகப்பெரும்  இனப்படுகொலையில்  வாயிலாகவே  புலித்தலைவர்களின்  படுகொலையும்  நிகழ்ந்திருக்கிறது.  போரில்  சிக்கிக்கொண்ட  இலட்சக்கணக்காணவர்கள்  மீது  தாக்குதல்  நடத்திப்  இனப்படுகொலையை  நடத்தி  முடித்த  பேரினவாத  பாசிச  பயங்கரவாதிகள்  சரணடைந்தவர்களையும்  கொடும்  சித்ரவதைகளின்  பின்னால்  கொன்றனர்.  பெண்கள்  மீது  பாலியல்  வன்முறையை  ஏவிய  பின்பு  கொன்றனர்.  இவர்கள்  கொல்வதையும்,  இன்ன  பிற  சித்ரவதைகள்  செய்வதையும்  இரசனையுடன்  கைபேசிகள்,  கேமராக்கள்  மூலமாகவும்  பதிவு  செய்தனர்.  கொல்லப்பட்ட  பின்பும்  பிணங்களின்  அருகில்  நின்று  பல்லைக்  காட்டியபடி  படமெடுத்துக்  கொண்டனர்.  இவைகளை  தம்மைச்  சேர்ந்தவர்களிடம்  காட்டி  பெருமை  பேசுவதற்காகவும்,  வக்கிர  உணர்வுக்கான  வடிகாலாகவும்  செய்தவைகளாக  இருந்தன.  இவ்வாறு  இவர்கள்  பரிமாறிக்கொண்ட  சில  புகைப்படங்களும்,  வீடியோக்களும்  மனசாட்சி  உறுத்திய  சிங்களர்களின்  உதவியால்  வெளிவந்திருக்கக்  கூடும்.  இவ்வாறு  வெளிவந்த  சில  போரின்  காட்சிகளை  ஓரளவிற்கு  வெளிக்கொண்டுவந்தன.  குறிப்பாக  நிர்வாணப்படுத்தப்பட்டும்,  கைகள்  பின்புறமாகக்  கட்டப்பட்ட  நிலையிலும்  சுட்டுக்  கொல்லப்பட்ட  காட்சிகள்,  இசைப்பிரியாவின்  பிணத்திலிருந்து  துணியை  விலக்கி  படம்பிடிக்கும்  ஆணாதிக்கப்  பாலியல்  பயங்கரவாதமும்  அதிர்ச்சியை  உண்டாக்கின.  இவையெல்லாம்  போர்  உச்சமாக  நடந்த  கடைசி  மாதங்களின்  சாதாரணமான  நிகழ்வுகளாகவே  இருந்திருக்கும்.  ஆனால்  இவையெல்லாம்  சிங்களப்  பேரினவாதப்  பயங்கரவாதிகளை  ஒன்றும்  செய்யவில்லை.  மாறாக  இவையெல்லாம்  ஒரு  பொருட்டாகவே  கருதவில்லை.  புலிகளே  செய்ததாகவும்,  இது  போன்ற  போர்க்குற்றக்  காட்சிகளைப்  பற்றி  பேசுவது  போரில்  ஈடுபட்டு  தேசத்தைக்  காத்த  வீரர்களை  அவமானப்  படுத்துவதாகவும்  கூறியது  சிங்கள  அரசு. 

இது  போன்ற  கொடிய  போர்க்குற்றமாகிய  தம்மிடம்  உயிருக்குப்  பாதுகாப்பு  கிடைக்குமென்ற  உறுதியின்  பேரில்  சரணடைந்த  புலித்தலைவர்களைக்  கொடும்  சித்ரவதைக்குட்படுத்திக்  கொலை  செய்தது,  மேலும்  புலிகள்  மட்டுமல்லாது  போரில்  ஈடுபடாமல்  இருந்த  புலிகளின்  குடும்ப  உறுப்பினர்களையும்  கொலை  செய்திருக்கிறார்கள்.  வெள்ளைக்  கொடியுடன்  சரணடைந்தவர்களில்  எத்தனை  பேர்  கொல்லப்பட்டார்கள்,  எத்தனை  பேர்  உயிருடன்  இருக்கிறார்கள்  என்பதும்  தெரியவில்லை.  தமிழ்செல்வனின்  மனைவி  மட்டும்  சில  மாதங்களுக்கு  முன்பு  விடுதலை  செய்யப்பட்டார்.  மற்ற  உலக  நாடுகளும்  பொத்தாம்  பொதுவாக  சரணடைந்தவர்களை  கொன்றது  குற்றம்  என்றும்  குற்றம்  சாட்டி  வந்தன.  ஏனென்றால்  அவர்களும்  அதற்கு  (புலித்தலைவர்கள்  சரணடைவதற்கு  உத்தரவாதமளித்த  சில  மேற்கத்திய  தூதுவர்கள்  உதாரணத்திற்கு  எரிக்  சோல்கைம்)  உடந்தையாக  இருந்ததால்  முழுவதும்  சொல்லாமல்  போர்க்குற்ற  விசாரணை  என்ற  பெயரில்  இலங்கையை  அச்சுறுத்தும்  ஒரு  துருப்புச்  சீட்டாகவே  வைத்திருக்கிறார்கள்.


பிரபாகரன்  படுகொலைக்கு  வருவோம்.  பிரபாகரன்  சாகவில்லை  என்பவர்கள்  என்னதான்  சொல்ல  வருகிறார்கள்  என்றால்,  அது  சிங்கள  அரசின்  பொய்ப்பரப்புரை,  தமிழர்களின்  போராட்டத்தை  சீர்குலைக்கச்  செய்யும்  சதி  என்கின்றனர்.  அந்தப்  பொய்யை  உடைக்க  பிரபாகரன்  உயிருடன்  இருக்கிறார்  என்று  ஆதாரமில்லாமல்  கூறி   வருகின்றனர்.  ஒரு  வேளை  அவர்  உயிருடன்  இருந்திருந்தால்  ஒரிரு  நாட்களிலேயே  அவர்  உரை  நிகழ்த்தும்  ஒரு  வீடியோவை  வெளியிட்டிருப்பார்கள்.  அது  கூட  நடக்கவில்லை.  கொஞ்சமும்  கூச்சப்படாமல்  இன்னும்  அதே  பொய்யைச்  சொல்கிறார்கள்.  பிரபாகனைப்  பிடிக்கவே  முடியாது,  அப்படியே  பிடித்தாலும்  அவரது  பிணம்  மட்டுமே  கிடைக்கும்  அல்லது  பிணத்தைக்  கூடப்  பிடிக்க  முடியாது  என்றெல்லாம்  பிரபாகரனைப்  பற்றிய  கருத்துக்கள்  இருந்தன.  பிரபாகரன்  மட்டுமன்றி  மற்ற  புலிததலைவர்களும்  எதிரிகளிடம்  சரணடைய  மாட்டார்கள்  என்றே  அனைவரும்  நினைத்திருந்தார்கள்.  ஆனால்  அரசியல்  பிரிவினரான  நடேசன்,  புலித்தேவன்  ஆகியோர்  வெள்ளைக்  கொடியுடன்  சரணடந்தனர்  அதன்  பின்பு  சித்ரவதை  செய்யப்பட்டுக்  கொல்லப்பட்டனர்  என்பதை  மட்டும்  ஒத்துக்  கொள்கின்றனர்.  ஏன்  அவர்கள்  மட்டும்  புலிகள்  இல்லையா  ?  இவர்கள்  சரணடைந்ததால்  புலிகளின்  மீதான  கௌரவம்   குறைந்து  விடாதா  ?வெறும்  அரசியல்  தலைமை(நடேசன்,  புலித்தேவன்)  மட்டும்  சரணடைந்தது,  இராணுவத்  தலைமை(பிரபாகரன்,  பொட்டம்மன்,  சொர்ணம்,  சூசை  பொன்றவர்கள்)  தப்பி  விட்டது  என்றும்  சொன்னார்கள்.  2009  ம்  ஆண்டு  மே  மாதம்  இரண்டாவது  வாரத்தில்  புலிகளும்,  3  இலட்சம்  மக்களும்  ஒரிரு  கிலோமீட்டர்  சுற்றளவுக்குள்  முடக்கப்பட்டு  விட்டார்கள்.  பின்பு  புலிகள்  "ஆயுதங்களை  மௌனிப்பதாக"  அறிவித்தனர்.  இதற்குப்  பின்பு  சிங்கள  அரசிடமிருந்து  போரில்  இலங்கை  அரசு  வெற்றி  பெற்றது,  புலித்  தலைவர்கள்  கூட்டாகத்  தற்கொலை  செய்து  கொண்டார்கள்  முதலில்  செய்தி  வந்தது  (சிஎனென்  ஐபிஎன்  தொலைக்காட்சியில்  இவ்வாறு  சொன்னார்கள்). 

பின்பு  பிரபாகரன்  ஆம்புலன்ஸ்  வண்டியில்  தப்பிச்  செல்ல  முயன்றபோது  சுட்டுக்  கொல்லப்பட்டார்  என்று  அறிவித்தது.  இதன் மூலம் அவரை அவமானப்படுத்தும் விதமாக தப்பியபோது கொல்லப்பட்டார் என்று வெளியிடக் காரணம் என்னவென்றால் இதை வெளியிடாமல், சரணடைந்து கொல்லப்பட்டார் என்று கூறியிருந்தால் தமது போர்க்குற்றத்தை தாமே ஒத்துக் கொண்டதாகி விடுமென்பதால்தான். இச்செய்தியில்தான்  பிரபாகரன்  உடல்  காட்டப்பட்டது.  அவரது  மகன்  சார்லஸ்  ஆண்டனி  சீலன்,  பிரபாகரன்  ஆகியோரது  தலையில்  ஆழமான  காயங்கள்  இருந்ததைக்  கொண்டே  அவர்கள்  எப்படிக்  கொல்லப்பட்டிருக்கலாம்  என்பதையும்  யூகிக்கலாம்.  இந்த  நிலையில்  ஜோர்டானுக்கு  போயிருந்த  அதிபர்  மகிந்த  "பயங்கரவாதம்  முற்றிலும்  ஒழிக்கப்பட்ட"  தனது  நாட்டுக்குத்  திரும்புவதாகக்  கூறி,  தனது  பயணத்தை  பாதியிலேயே  முடித்துக்  கொண்டு  விமானத்தில்  வந்திறங்கியவுடன்  இலங்கை  மண்ணை  முத்தமிட்டார்.  இத்தனைக்குப்  பிறகு  விடுதலைப்புலிகளின்  இணையதளங்கள்  பிரபாகரனும்  சூசையும்  முற்றுகையை  ஊடறுத்துத்  தப்பிவிட்டதாகக்  கூறத்  தொடங்கின.  பின்பு  பாதிப்பேர்  பிரபாகரன்  உயிருடன்  இருக்கிறார்  என்று  நம்பினர்.  (உண்மையில்  பிரபாகரன்  இறந்துவிட்ட  செய்தியை  எதிர்கொள்ளுமளவுக்கு  அந்நாளில்  யாருக்குமே  மன  வலிமை  இருந்திருக்காது.  இரு  வருடங்களுக்கு  முன்பு  போர்  நடந்த  போது  இருந்த  மனநிலையை  நம்  வாழ்வில்  நாம்  இனி  சந்திக்கவே  போவதில்லை  எனுமளவிற்கு  போரின்  வெப்பமும்,  நமது  தலைவரகளின்  கையாலாகாத்தனமும்  நம்மை  பாதித்திருந்தது.)  பின்பு  நிறையப்  பேர்  பிரபாகரன்  உயிருடன்  இருக்கிறார்  என்பது  போலவே  பேசவும்,  எழுதவும்  அறிவிக்கவும்  தொடங்கினர்.  பல  மாதங்களாக  "புலித்தலைவர்கள்  கொல்லப்பட்டதாகக்  கூறப்படும்  சம்பவங்களை"  என்று  அதை  கிண்டலடித்தே  பேசினார்கள்.  அச்சு  ஊடகத்திலிருந்து  இணையத்தில்  எழுதியவர்கள்  வரை.  வைகோ,  சீமான்,  நெடுமாறன்,  திருமாவளவன்  ஆகியோர்  அடித்துச்  சொன்னார்கள்  இன்றுவரையிலும்  மறுக்கவில்லை. 


இதன்  பின்போ  புலத்தில்  புலிகள்  இரண்டாகப்  பிளவுற்றனர்.  கேபி  தலைமையிலான  குழுவினரொ  பிரபாகரன்  வீரச்சாவடைந்து  விட்டதாகக்  கூறி,  இனி  நாம்  ஜனநாயக  வழியில்  போராட்டத்தினைத்  தொடர்வோம்  என்றனர்.  இன்னொரு  குழுவினரோ  பிரபாகரன்  இறந்துவிட்டாரென்பது  தமிழினத்துரோகம்  என்றும்  உயிருடன்  இருக்கிறார்  என்றும்  கூறத்  தொடங்கினர்.  புலித்தலைவர்கள்  சரணடைந்தனர்  பின்பு  கொல்லப்பட்டனர்  என்பதை  மறுப்பவர்கள்,  மக்களின்  உணர்வைப்  பயன்படுத்தி  ஆதாயமடைந்த  புலத்துப்  புலிகள்.  இவர்கள்தான்  நாடுகடந்த  தமிழீழம்  வரை  வந்தவர்கள்.  பிரபாகரன்  இறந்துவிட்டதைச்  சொன்னால்  தமிழர்களை  ஏமாற்றி  அரசியல்  செய்வ்தெல்லாம்  நடக்குமா?  ஈழத்தமிழர்களின்  உணர்வைப்  பயன்படுத்தியும்,  விடுதலைப்புலிகளின்  பேரிலும்  சொத்துக்களை  வைத்து  வசதியுடன்  வாழும்  புலத்து அரசியல்வாதிகளைக்காட்டிலும்  புலிகளை  மிகத்தீவிரமாக  ஆதரித்த  ஈழ  ஆதரவாளர்கள்,  பிரபலங்கள்,  மக்கள்  இயக்கங்கள்,  தமிழார்வலர்கள்,  இன  உணர்வாளர்கள்  போன்றவர்களும்  பிரபாகரன்  படுகொலை  குறித்தும்  பேசவில்லை.  இதில்  எவருமே  தாம்  நேசித்த  தலைவருக்காக  ஒரு  மெழுகுவர்த்தியைக்  கூட  ஏற்றவில்லை.  ஏனென்றால்  பிரபாகரன்  இறக்கவில்லை  என்று  முதலில்  நம்பினார்கள்,  பின்பு  காலப்போக்கில்  பிரபாகரன்  வரப்போவதில்லை  என்று  உணர்ந்த  போதும்  பிரபாகரனுக்காக  என்ன  செய்வதென்று  தெரியவில்லை.  எல்லாவற்றிற்கும்  மேலாக  பிரபாகரன்  இறந்துவிட்டார்  என்று  கூறுகிறவர்கள்  "புலி  எதிர்ப்பாளர்கள்"  எனப்படுபவர்களாக  இருக்கின்றனர்.  அவர்கள்  புலிகள்  இருந்தவரையிலும்  அவர்கள்  அழிந்த  பின்னும்  புலிகளையும்  புலிகளின்  அரசியலை  கடுமையாக  எதிர்த்தவர்களாக,  எதிர்ப்பவர்களாக  இருக்கின்றனர்.  இதில்  சிலர்  இந்திய  இலங்கை  அர்சின்  ஆதர்வாளர்களாகவும்  இருக்கின்றனர்.  நடுநிலையாளர்களும்  இருக்கின்றனர்.  இவர்களின்  புலிகளின்  மீதான  விமர்சங்களையெல்லாம்,  புலி எதிர்ப்பு,  தமிழினத்  துரோகம்,  சிங்கள  விசுவாசம்,  அவதூறு  என்ற  வகையிலேயே  புலி  ஆதரவாளர்கள்  எதிர்கொண்டு  வந்திருக்கின்றனர்.  அதே  பார்வையில்தான்  பிரபாகரன்  சரணடைந்து   கொல்லப்பட்டார்  என்ற  கருத்தையும்  பார்க்கிறார்கள்.  இதை  பிரபாகரன்  மீதான  அவதூறாகக்  கருதுகிறார்கள்.  பிரபாகரன்  சரணடைந்து  கொல்லப்பட்டார்  என்பதற்காக  அவர்கள்  சிங்களனிடம்  உயிர்ப்பிச்சை  கேட்டுப்போனார்  என்பதல்ல,  வரலாறு  முழுவதும்  நடந்தது  போலவே  அவர்களிடம்  துரோகிகளால்  காட்டிக்  கொடுக்கப்பட்டார்  எனபதுதான்.  புலிகள்  இந்தியாவையும்,  மேற்குலகையும்,  ஐநாவையும்  பெரிதும்  மதிப்பவர்களாக  இருந்தார்கள்.  இந்தியா  போரை  நடத்திக்  கொண்டிருக்க  புலிகளோ  இந்தியாவின்  உண்மையான  நண்பன்  தாங்கள்தானென்றும்  சிங்கள  அரசை  நம்பவேண்டாமென்றும்  இந்தியாவைக்  கெஞ்சிக்  கொண்டிருந்தார்கள்.  இவர்கள்  கொடுத்த  உறுதிமொழியை  நம்பித்தான்  உயிருக்குப்  பாதுக்காப்பளிக்கப்படுமென்றுதான்  அவர்கள்  வெள்ளைக்கொடியுடன்  வந்தார்கள்.  வந்தவர்கள்  பேரினவாதப்  பயங்கரவாதிகளிடம்  சிக்க  வைக்கப்பட்டார்கள்.  இதில்  இந்திய  உளவுத்துறை  அதிகாரிகள்  வரை  இருந்திருக்கிறார்கள்.  இந்தப்  போரை  நடத்தியதே  இந்தியாதான்  என்றிருக்கையில்  போரின்  இறுதிக்காட்சியையும்  இவர்கள்தான்  தீர்மானித்தார்கள்.  இந்தியாவைச்  சார்ந்த  ஐநா  அதிகாரியான  விஜய  நம்பியார்  வந்த  பிறகுதான்  ஆயுதங்கள்  புலிகளால்  மௌனிக்கப்பட்டன.  இந்தப்  போரில்  இலங்கை  இராணுவம்  நேரடியாக்  ஈடுபட்டாலும்  போர்த்திட்டங்கள்,  ஆயுதங்கள்  என  இந்தியாவின்  போராகவே  இது  நடைபெற்றது.  இதனால்  இந்திய  உளவுத்துறை  அதிகாரிகள்  இராஜிவ்  கொலையில்  குற்றம்  சாட்டப்பட்டிருந்த  பிரபாகரனையும்,  பொட்டு  அம்மனையும்  விசாரித்திருக்கவும்  கூடும்.  எந்த  ஒரு  புலித்தலைவரையும்  சிறையில்  வைத்திருப்பதுமோ  அல்லது  உயிருடன்  இருப்பதாலோ  உலகெங்கும்  வாழும்  தமிழர்களிடம்  மிகப்பெருமளவில்  ஒன்றினைத்துவிடும்  போராட்டம்  வெடிக்கும்  என்பதாலும்  அவர்கள்  கைது  செய்யப்பட்டும்  வெளியில்  யாருக்கும்  தெரிவிக்கப்படாமல்  போர்க்களத்திலேயே  வைத்துக்  கொல்லப்பட்டனர்.  முப்பதாண்டுகளாகக்  காத்திருந்த  வெறியை  புலித்தலைவர்களைக்  கொடூரமாகக்  கொன்றதன்  மூலமாகப்  பழி  தீர்த்துக்கொண்டனர்  சிங்கள்ப்  பேரினவாதக்  கொலைகாரர்கள்.  எல்லாவற்றிற்கும்  மேலாக  தாம்  செய்யும்  கொலைகளையெல்லாம்  படம்பிடித்துப்  பரவசமடைந்த  இராணுவத்தினர்  பிரபாகரனை  மட்டும்  சும்மா  விட்டிருப்பார்களா  என்ன  ? சீரான  இடைவெளியில்  இலங்கையிலிருந்து  போர்க்குற்றம்  தொடர்பான  வீடியோக்களும்,  புகைப்படங்களும்  கசிந்து  கொண்டேயிருக்கின்றன. 

புலித்தலைவர்களுள்  ஒருவரான  இரமேஷ்  சிங்கள  இராணுவத்தினரால்  விசாரணை  செய்யப்படுவதையும்  அருகிலிருந்த  மற்ற  சில  வீரர்களும்  அதனை  தமது  கைப்பேசிக்  கேமராவினால்  படம்பிடிப்பது  போலவும்  வெளியாகியிருந்தது.  மற்றொரு  புகைப்படத்தில்  அவர்  கொலை  செய்யப்பட்டுக்  கிடக்கும்  காட்சியிருந்தது.  இதிலிருந்தே  அறியலாம்,  புலித்தலைவர்கள்  விசாரணையின்  பின்புதான்  கொலை  செய்யப்பட்டார்கள்  என்று.  நடேசன்,  பிரபாகரன்  போன்றவர்கள்  சித்ரவதை  செய்யப்ப்ட்டுத்தான்  கொல்லப்பட்டார்கள்  என்ப்தும்  அவர்க்ளின்  உடலிலிருந்த  காயங்கள்  மூலமாகவே  புரிந்து  கொள்ள  முடியும்.  இதெல்லாம்  அப்போதே  அரசல்  புரசலாக  வெளிவந்திருந்தன.  பிரபாகரனின்  இளைய  மகன்  பாலச்சந்திரனை  பிரபாகரன்  கண்முன்னேயே  தரையிலடித்துக்  கொன்றதும்,  கருணா  உட்பட  தமிழ்  ஆயுதக்குழுவினர்  இதற்கு  உடனிருந்ததும்  உறுதிப்படுத்தப்  படாத  செய்தியாக  வெளியாகியிருந்தது.  பிணங்களை  அடுக்கிவைப்பது  முதல்,  பெண்போராளிகளின்  இறந்த  உடலில்  துணியை  விலக்கிவிட்டு  அதனருகில்  நின்று  புகைப்படமெடுததுக்  கொள்வது  போன்ற  பல  வகையில்  போர்க்குற்ற  ஆவணங்கள்  வெளியாகி  வருகின்றன.  சில  நாட்களுக்கு  முன்பு  இலங்கை  புலத்து  புலிகள்  மீது  ஒரு  குற்றம்  சாட்டியிருந்தது.  பொதுவாக  இது  போன்ற  போர்க்குற்ற  ஆவணஙகள்  வெளியாகும்  போதெல்லாம்  அது  பொய்யென்றும்  புலிகளின்  சதியென்றும்  கூறும்.  அதே  போல்  இம்முறையும்  பிரபாகரன்  கொல்லப்படுவது  போன்ற  வீடியோவை  புலிகள்  தயாரித்து  வருகின்றனரென்றும்  அதனால்  இலங்கையரசின்  பெயரைக்  கெடுக்க  எத்தனிப்பதாகவும்  கூறியிருந்தது.  இதிலிருந்து  ஏதாவது  புரிகிறது  இல்லையா?  இது  போன்ற  பல  ஆதாரங்கள்  அரசினால்  அழிக்கப்பட்டிருக்கின்றன.  மேலும்  புலித்தலைவர்  உயிருடன்  இருக்கிறார்  என்ற  கருத்தினால்  ஆதாயமடைபவர்கள்  யாரோ  அவர்களினாலும்  அழிக்கப்பட்டுள்ளன.  மேலும்  போர்க்குற்றங்கள்  குறித்து  பெரிதாகக்  கவலைப்படுவது  போல்  நடிக்கும்  மேற்குலக  நாடுகளும்  இந்த  சித்து  விளையாட்டில்  ஈடுபட்டுள்ளன.  இறுதிப்போரில்  முள்ளிவாய்க்கால்  வரை  சென்று  உயிர்பிழைத்த  சிலரை  நார்வேயிலிருந்து  வந்த  சில  அதிகாரிகள்  இலங்கை  அரசுக்கு  டிமிக்கி  கொடுத்துவிட்டு  தம்முடன்  கூட்டிச்  சென்று  விட்டனர்.  அவர்களை  தமது  நாட்டில்  வைத்து  போர்க்குற்ற  ஆதாரங்களைப்  பெற்று  அதன்  மூலமாக  இலங்கையரசை  தமது  நலனுக்கேற்ப  ஒத்துழைக்க  வைப்பதாகவும்  ஒரு  செய்தி  வெளியாகியிருந்தது.  இதற்கெல்லாம்  மேலாக  தற்போது  லிபிய  அதிபர்  கடாபி  கொல்லப்பட்டதை  நினைத்துப்  பாருங்கள்  ஒரு  நாட்டின்  அதிபரைக்  கொலை  செய்வதை  வீடியோவாக  ஊடகங்கள்  செய்தி  வெளியிடுகிறது  அவர்  சர்வாதிகாரியாகவே  இருக்கட்டுமே.  அதே  போல்தான்  சதாம்  ஹுசைனும்  தூக்கிலிடப்படுவதற்கான  முந்தைய  நிமிடம்  வரையிலான  காட்சிகளையும்  வெளியிட்டார்கள்.  இதன்  மூலம்  சர்வாதிகாரம்  ஒழிக்கப்பட்டு  குடிநாயகம்  நிலைநாட்டப்பட்டது  என்றார்கள்.  இதை  செய்தவர்கள்  யாரென்றால்  அமெரிக்க  ஐரோப்பிய  ஏகாதிபத்தியங்கள்  அந்தந்த  நாட்டிலுள்ள  தமது  அடிமைகள்  மூலம்  செய்தார்கள்.  நிற்க  இதை  ஏன்  சொல்கிறேனென்றால்  ஒரு  நாட்டின்  அதிபரைக்  கொலை  செய்து  அதையே  ஜனநாயகம்  மீண்டது  என்ற  பெயரில்  துணிச்சலாக  வெளியிட்டார்கள்.  இங்கோ  புலிகள்  உலக  நாடுகளால்  பயங்கரவாதிகள்  என்று  தடை  செய்யப்பட்டவர்கள்,  மேலும்  இந்தியப்  பிரதமரைக்  கொன்றதற்காகவும்  குற்றம்  சாட்டப்பட்டவர்கள்.  இவர்களைக்  கொன்றால்  யாருமெதுவும்  கேட்க  முடியாது.  இந்தியா  சீனா  உட்பட  அனைத்து  நாடுகளுக்கும்  புலிகள்  தேவையில்லாதவர்களாக  இருந்தார்கள்.  இந்தியா  ஆயுதங்களைக்  கீழே  போடுமாறு  புலிகளைத்  தொடர்ந்து  வலியுறுத்தி  வந்தது.  புலிகள்  மேற்குலகின்  ஆதரவையும்  எப்போதோ  இழந்து  விட்டிருந்தனர்.  இந்தியாவின்  நண்பனென்றுதான்  புலிகள்  தம்மை  அழைத்துக்  கொண்டாலும்  இந்தியாவின்  முழு  அடிமையாக  இருக்காததாலும்  இந்தியாவிற்கும்  புலிகள்  அழிக்கப்படவேண்டியவர்களாகவே  இருந்தார்கள்.  புலிகளின்  அரசியல்  என்பது  இந்தியாவிற்கு  எல்லாவகையிலும்  இடைஞ்சலாகவே  இருந்தது.  இந்தியா  என்பதே  வெள்ளைக்காரர்கள்  வெளியிலிருந்து  வசதியாக  ஆள்வதற்காக  மூன்று  டஜன்  தெசிய  இனங்களைக்  கட்டி  உருவாக்கப்பட்ட  ஒரு  போலித்  தேசியம்,  வடகிழக்கில்  இதற்கெதிராக  இன்னும்  குருதி  சிந்தப்படுகிறது.  இதற்கும்  மேலாக  காஷ்மீர்  என்ற  தனக்கு  உரிமையில்லாத  பகுதியில்  இராணுவத்தை  வைத்து  அடக்கியாள்கிறது.  இந்த  இலட்சணத்தில்  ஈழத்தினைப்  பிரித்துக்  கொடுப்பது  தனது  முந்தானையில்  தானே  தீ  வைத்துக்  கொள்வதற்குச்  சமமென்று  பாரதமாதாவுக்குத்  தெரியாதா  ?  பாகிசுதானிடமிருந்து  வங்காளதேசத்தைப்  பிரித்துக்  கொடுத்தது  போல  இந்தியா  இலங்கைக்குச்  செய்யாது.  பாக்,  சீனா  ஆகியவை  சம  அல்லது  வலுமிகுந்த  எதிரி  நாடுகள்  என்பதால்  வங்காள  தேசம்,  திபெத்  என்று  விடுதலை  கேட்கிறது.  ஆனால்  இலங்கையோ  மிகச்  சிறிய  நாடு  இந்தியாவின்  (பொருளாதார,  அரசியல்  ரீதியாக)  அடிமை  நாடு.  அதை  ஒன்றாக  வைத்திருப்பதுதான்  இந்தியாவிற்கு  வசதியானது.  இப்படி  தேசிய  இனங்களைக்  இரும்புப்பிடிக்குள்  வைத்து,  தலையில்  எரிமலையாகிய  காசுமீரையும்  வைத்துக்  கொண்டிருக்கையில்  தனது  காலுக்குக்  கீழே  ஒரு  சில  இலட்சம்  பேர்களைக்  கொண்ட  ஒரு  தேசிய  இனத்தைச்  சார்ந்த  போராளிகள்  வான்படை  வைத்துக்  கொண்டு  தாங்கள்  எதிர்த்துப்  போராடும்  நாட்டின்  தலைநகரத்திலேயே  வானவேடிக்கை  நடத்தி  வருவதை  இந்தியா  எப்படிச்  சகித்துக்  கொள்ளும்  ?.  புலிகளின்  அரசியலின்படி  இலங்கை  சீனாவிற்கு  ஆதரவானது,  தாங்கள்தான்  இந்தியாவிற்கு  ஆதரவானவர்கள்  என்று  சொல்கிறார்கள்,  அதன்படியே  பார்த்தாலும்,  சீனாவின்பக்கம்  இலங்கை  சாயாமல்  இருப்பதற்குத்  தமிழர்களை  ஆதரிப்பதற்குப்  பதில்  தமிழர்களைப்  பலி  கொடுத்து  இலங்கைக்கு  உதவி  அதை  தன்  கட்டுக்குள்  வைத்திருப்பதுதானே  இந்தியாவிற்கு  வசதியானது.


எல்லோர்க்கும்  புரியாத  புதிர்,  அனைவரது  மண்டையிலும்  குடைந்தெடுக்கும்  விடை  தெரியாத  கேள்வி  ஒன்று (எனக்கு  அப்படித்தான்),  இறுதிப்போரின்  போது  புலிகள்  ஏன்  கரந்தடிப்  போரில்  (Guerilla  war) இறங்கவில்லை  என்பது.  விடுதலைப்புலிகளின்  பட்டப்பெயரே  உலகின்  தலைசிறந்த  கொரில்லா  இயக்கம்  என்பது.  ஆனால்  அவர்களோ  தாம்  தோல்வியுறும்  தருணத்தில்  கூட  கரந்தடிப்  போருக்கு  மாறாமல்  இறுதிவரை  தற்காப்புப்  போரென்ற  பெயரில்  இருந்த  இடத்திலிருந்தே  போரிட்டார்கள்.  மேலும்  மக்களைத்  தம்முடன்  கட்டாயப்படுத்தி  வைத்திருந்து  அவர்களின்  பிணங்களைக்  காட்டிப்  போர்நிறுத்தம்  கோரினார்கள்.  எல்லைகள்  சுருங்க  சுருங்க  ஊடறுப்புத்  தாக்குதல்  நடத்தாமலும்,  தப்பிச்  செல்லாமலும்  சிறு  மூலையில்  ஒதுங்கி  தாமாகவே  பொறியில்  சிக்கிக்  கொண்டார்கள்.  இதன்  மூலம்  தமிழர்களுக்குத்  துன்ப  அதிர்ச்சியையும்,  எதிரிகளுக்கு  இன்ப  அதிர்ச்சியையும்  கொடுத்தார்கள்  புலிகள்.  மஹிந்தவே  நக்கலடித்தார்,  நானாக  இருந்திருந்தால்  கொரில்லாப்  போருக்கு  மாறியிருப்பேன்  என்றார்.  கொரில்லாப்  போரில்  உலகம்  காணாத  வகையில்  தம்  எதிரிகளை  வென்றும்  (மரபு  வழிப்போரிலும்  கூட  இலங்கை  இராணுவத்தால்  புலிகளை  வென்றிருக்க  முடியாது  தனியாக  வந்திருந்தால்)  அசைக்கமுடியாத  இயக்கமாக  இருந்த  புலிகள்,  எதிரி  உலக  ஆதரவுடனும்  இந்திய  இராணுவ  உதவியுடனும்  மிகப்பலமாக  முன்னேறிவருகையில்   ஏன்  அரைகுறையான  தமது  மரபு  வழிப்போரில்  ஈடுபட்டார்கள்  என்பது  பிரபாகரனைக்  காட்டிக்  கொடுத்தவர்களுக்கு  மட்டுமே  தெரிந்த  சேதி.  தனது  கடைசி  மாவீரர்  உரையிலும்  பிரபாகரன்  "சிங்களம்  உலக  ஆதரவுடன்  பேரழிவுப்பாதையில்  வருவதாகவும்,  இது  (போர்)  தமக்குப்  புதியனவோ  அல்லது  பெரியனவோ  இல்லையென்றும்  வாசித்தார்."  இது  வழக்கமான  போர்தானென்று  புலிகள்  நினைத்துவிட்டார்களா  ?  அல்லது  முன்பு  நடந்தது  போல்  யாராவது  காப்பாற்றுவார்கள்  என்று  நினைத்துக்  கொண்டார்களா?  1980  களில்  ஜெயவர்த்தனா  காலத்தில் 
வடமராச்சியை சுற்றி வளைத்து  இலங்கைப்  படைகள்  பிரபாகரனை  நெருங்கியிருந்த  போது  இந்திய  மிராஜ்  போர்விமானங்கள்  எல்லை  தாண்டிவந்து  இலங்கையை உணவுப்  பொட்டலங்களை  வீசுவது  என்ற  போர்வையில் ஜெயவர்த்தனவை அச்சுறுத்தின.  இந்திய  இராணுவம்  ஈழத்தை  ஆக்ரமித்திருந்த  போது  சமாதானத்திற்காக  பேச  வந்த  பிரபாகரனைக்  கொன்று  விடுமாறு  இராஜிவ்  இரகசியமாக  உத்தரவிட்டிருந்தார்.  ஒரு  நேர்மையான  இராணுவ  அதிகாரி  ஒருவரால்  அது  நடக்காமல்  தவிர்க்கப்பட்டது.  இந்திய  ராணுவத்திற்குமிடையே  போர்  மூண்டிருந்த  வேளையில்,  பிரபாகரனை  இந்தியப்  படைகள்  நெருங்கியிருந்தன,  அப்போதைய  அதிபர்  பிரேமதாசாவின்  அழுத்தம்  காரணமாகவும்,  இந்தியப்  பிரதமர்  விபிசிங்  முடிவினாலும்  இலங்கையிலிருந்து  இந்திய  இராணுவம்  விலக்கப்பட்டது.  இப்படியாக  சில  முறை  புலித்தலைவர்கள்  காப்பாற்றப்பட்டார்கள்.  இதற்கு  நேர்மாறாக  2000  இல்  என்று  நினைக்கிறேன்.  யாழ்குடாவில்  ஏறக்குறைய  20000  இலங்கை  இராணுவத்தினர்  புலிகளால்  சுற்றி  வளைக்கப்பட்டனர்.  பின்பு  இந்தியாவின்  தலையீட்டின்  பின்னர்  அவர்கள்  தாக்கப்படாமல்  புலிகளால்  விடப்பட்டனர்.  இதுபோல்  இம்முறையும்  யாராவது  தலையிட்டுக்  காப்பார்கள்  என்று  நம்பினார்களா  புலிகள்?   இதைவிடக்கொடுமை  இந்தியாவில்  நடந்த  தேர்தலை  நம்பித்தான்  மே  மாதம்  வரை  தாக்குப்பிடித்தார்களா  ?  மே  13  இல்  இந்தியத்  தேர்தலின்  முடிவுகள்  வெளியான  பின்பு  புலிகள்  ஆயுதத்தை  மௌனித்தார்கள்.  காங்கிரசின்  ஆட்சி  கவிழ்ந்து  பாஜக  ஆட்சியைப்  பிடிக்கும்  பின்பு  போரை  நிறுத்திவிடும்  என்றெல்லாம்  புலிகள்  நம்பியிருக்கிறார்கள்.  அல்லது  அமெரிக்காவோ  ஐநாவோ  தலையிட்டுப்  போர்நிறுத்தம்  செய்யும்  என்றே  புலித்தலைகள்  நம்பியிருக்கிறார்கள்.  சில  மாதங்களுக்கு  முன்னர்  சிறையிலிருக்கும்  முன்னாள்  இராணுவத்தளபதி  பொன்சேகா  "புலிகளிடமிருந்து  கைப்பற்றப்பட்ட  200  கிலோ  தங்கம்  எங்கே  என்று  கேட்டிருந்தார்"  இலங்கை  அரசுக்கு  எதிராக.  ஆக  இதுபோல்  புலிகளிடம்ருந்து  பல  செல்வங்கள்  கொள்ளையிடப்பட்டிருக்கின்றன.  போரின்  இறுதிக்கட்டத்தின்  போதும்  புலிகளால்  மறைத்தும்,  புதைத்தும்  வைக்கப்பட்டிருந்த  போர்க்கருவிகள்  சிங்களப்படைகள்  கைப்பற்றின.  அவையனைத்தும்  பல  கோடிகளுக்கும்  பெறுமானமுடையவை.  இவை  மஹிந்த  கூட்டம்  விற்றுக்  கொள்ளக்காசை  கல்லாக்  கட்டிவிட்டது.  பெயருக்கு  சில  துப்பாக்கிகளையும்,  வெடிகுண்டுகளையும்  காட்டிவிட்டு  அனைத்தையும்  விற்றுக்  காசாக்கியிருக்கிறார்கள்.  இத்தனை  பணத்தையும்,  ஆயுதங்களையும்,  தங்கத்தையும்  மற்றும்  ஆவணங்களையும்  (புலிகளால்  தமிழிலேயே  அச்சிடப்பட்ட  போர்,  போர்க்கருவிகள்,  தந்திரங்கள்  தொடர்பான  நூல்கள்  உட்பட  பலவும்  சிங்களனிடம்  சிக்கின,  இவைகளெல்லாம்  பழைய  தமிழிலக்கியங்கள்  அழிந்தது  போல  வெளிவராமலே  அழிக்கப்படும்)  காப்பாற்றத்தான்  கொரில்லாப்  போருக்கும்  மாறாமல்  உயிரைப்  பணயம்  வைத்து  தற்காப்புப்  போரை  நடத்தினார்களா  புலிகள்  ?.  இப்படி  இவர்களை  அழித்துத்தான்  தற்போது  புலத்திலிருக்கும்  புலியின்  சொத்துக்காக  வெட்டுக்  குத்தை  நடத்திக்  கொண்டிருக்கிறார்கள்  தற்போதைய  புலிக்குழுக்கள்.  யாரின்  வழிகாட்டுதலால்  புலிகள்  இறுதிவரை  கொரில்லாத்  தாக்குதல்  நடத்தாமல்  இருந்த  இடத்திலேயே  இருந்து  போரிட்டு  எதிரிக்கு  வேலையை  எளிதாக்கினார்கள். 


புலிகளை  இப்படி  முட்டுச்சந்தில்  சிக்கவைத்துவிட்டு,  இணையங்கள்  மூலமாக  புலிகளைத்  தோற்கடிக்கவே  முடியாதென்றும்,  அவர்கள்  தற்காப்புத்  தாக்குதல்  நடத்திவருகிறார்கள்  சிங்கள  இராணுவத்தை  உள்ளே  விட்டு  அடித்துவிடுவார்கள்,  பின்வாங்கித்  தாக்கப்போகிறார்கள்  என்றெல்லாம்  கட்டுரைகளை  எழுதித்  தள்ளினார்கள்.  உண்மையில்  புலிகள்  தாக்குப்பிடிக்க  முடியாமல்தான்  பின்வாங்கிக்  கொண்டிருந்தார்கள்.  புலிகள்  தமது  கட்டுப்பாட்டுப்  பகுதிகளிலிருந்து  அப்புறப்படுத்தப்பட்டு  பின்பு  கிளிநொச்சிக்குள்  முடக்கப்படும்  வரை  இந்தக்  கதைகளையே  சொன்னார்கள்.  பின்பு  ஜனவரியில்  கிளிநொச்சி  வீழ்கிறது.  அங்கிருந்த  அனைவரும்  புலிகளுடன்  முல்லைத்தீவுக்குள்  முடங்கினர்.  புலிகள்  "ஆளில்லாத  நகரத்தைத்தான்(கிளிநொச்சி)  இலங்கை  இராணுவம்  கைப்பற்றியிருக்கிறது,  சேதத்தைத்  தவிர்க்கவே  கிளிநொச்சியிலிருந்து  பின்வாங்கியதாகவும்"  கூறினார்கள்.  பின்பு  முல்லைத்தீவு,  புதுக்குடியிருப்பு  என  வரிசையாக  வீழத்தொடங்கின,  அப்போதும்  புலிகள்  கொரில்லாப்  போரில்  ஈடுபடாமல்,  விமானத்திலேயே  தற்கொலைத்தாக்குதலை  நடத்தினர்.  இப்படி  ஒவ்வொன்றாக  இழந்தபின்பு  சில  கிலோமீட்டர்களுக்குள்  வளைக்கப்பட்ட  புலிகள்  சரணடந்தனர்,  பலர்  கொல்லப்பட்டனர்.  முதலில்  சிங்களனால்  புலிகளை  வெல்லவே  முடியாது  என்றனர்,  புலிகள்  தாக்குப்பிடிக்கமுடியாது  பின்வாங்கியபோதும்,  அதை  தந்திரோபாயப்  பின்வாங்கல்  என்றனர்,  புலிகள்  பெருமளவு  சேதத்தைக்  கண்டபின்னர்,  புலிகளை  அழிக்கமுடியாது  என்றனர்,  கிட்டத்தட்ட  அழிவின்  விளிம்பிற்கு  வந்தபின்னர்  பிரபாகரனைப்  பிடிக்கமுடியாது  என்றனர்,  பிரபாகரன்  கொல்லப்பட்ட  பின்னரோ  பிரபாகரன்  தப்பி  விட்டார்,  இனி  வந்து  ஈழம்  பெற்றுக்  கொடுப்பாரென்றனர்.  இப்படியாக  புலிகளை  வெல்லமுடியாது  என்பதிலிருந்தை   பிரபாகரன்  தப்பிவிட்டாரென்பது  வரை  எப்படி  தமிழர்களின்  உளவியல்ரீதியாக  நம்பவைத்துள்ளனர்.  தமிழர்களால்  அதிகம்  நேசிக்கப்பட்ட  ஒரு  தலைவனுக்கு  தமிழர்கள்  தமது  ஒரு  சொட்டுக்  கண்ணீரைக்  கூட 
சிந்தாமல்  போனதுதான்  வரலாற்றின்  விந்தை.  சென்ற இருபத்தைந்து வருடங்களில் கொல்லப்பட்ட, அல்லது வீரச்சாவடைந்த புலிகள்,  தலைவர்கள் எடுத்துக்காட்டாக திலீபன், குட்டிமணி, ஜெகன், கிட்டு, தமிழ்செல்வன் போன்றவர்களின்  முடிவுகள் தமிழர்களிடம் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன, அதே நேரம் பெரும்பான்மைத் தமிழர்களால் அதிகம் மதிப்புடன் நேசிக்கப்பட்ட பிரபாகரன் (மற்ற தலைவரகளும்),  எதிரிகளின் முற்றுகையில் சிக்கவைக்கப்பட்டு நயவஞ்சகமாகவும், கொடூரமாகவும் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டதை மறைப்பதன் நோக்கம்தானென்ன ? அவர் பெயரைச் சொல்லிப் பிழைப்பது அன்றி வேறென்ன இருக்கமுடியும் ? தாமிருந்த வரை புலிகள் மற்றவர்களுக்கு நிகழ்த்திய கொடுஞ்செயல்களை மறைத்தவர்கள், நியாயப்படுத்தியவர்கள், விமர்சனம் செய்யாதவர்கள், பாராமுகமாக இருந்தவர்கள் இப்போது அதே போல் புலிகளுக்கு நிகழ்ந்த கொடுமையை மறைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும். 


பிரபாகரன் உடல் பரிசோதனை (இளகிய மனமுடையவர்கள் பார்க்க வேண்டாம் )


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment