விநோதினிக்கு அஞ்சலி - ஆணாதிக்கத்துக்கு எப்போது அஞ்சலி செலுத்துவது ?

விநோதினி இறந்து விட்டாள். கொல்லப்பட்டுவிட்டாள். மிகவும் கொடிய வதையை அனுபவித்துவிட்டு இறந்து விட்டாள். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனும் தன்னைப்போலவே துன்பத்த்தை அனுபவிக்க வேண்டும் என்ற இறுதி ஆசையுடன் உயிரை விட்டு விட்டாள். 


டெல்லி கொடூரத்தால் இறந்த ஜோதியைப் போலவே விநோதினியும் நான் வாழவேண்டும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் வாழக்கூடாது என்ற ஆசையை வெளிப்படுத்தினார்கள். தாம் அனுபவித்த கொடிய இன்னலிலிருந்து வெடித்த ஆத்திரம்தான் அது.

ஒரு வேளை ஜோதி உயிர் பிழைத்திருந்தாலோ, அவளது சிறுகுடல் பாதிக்கப்பட்டதால், நீர் ஆகாரம் மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்திருக்க முடியும். விநோதினிக்கோ பார்வையே பறிபோய் விட்டது. வன்முறையை எதிர்கொண்ட போதே அவர்கள் பாதி செத்து விட்டார்கள். மீதியும் மருத்துவர்களின் தோல்வியில் போனது.

இந்த கேடுகெட்ட வெறிபிடித்த உலகத்தில் பிறந்ததால் ஆயிரமாயிரம் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களின் எடுத்துக் காட்டுகள்தான் ஜோதி சிங் பாண்டேக்களும், விநோதினிகளும்.

பாலியல் வன்முறையும், ஆணாதிக்க வெறியும் சேர்ந்து பழிவாங்கிய உயிர்கள், ஆணாகப் பிறந்ததற்காக எத்தனை முறைதான் வெட்கப்படுவதும், வேதனைப்படுவதும் ?

இனிமேல் மரண தண்டனை எதிர்த்துப் பேசவும் வெட்கமாயிருக்கிறது. அதைத் தவிர்த்து விட்டு, இனி விநோதினிகள், ஜோதிகள் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே கவலைப் பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்குக் காரணமாக இருப்பது, அவர்களை உணர்வுடையவர்களாகக் கருதாததே ஆகும். அவர்களை வெறும் பொருளாகவே காண்கிறார்கள் ஆண்கள். இதற்கு ஆணாதிக்க சிந்தனையே முதற்காரணமாகும். இதை போற்றி வளர்க்கும் சமூகமும் அதை ஊற்றி வளர்க்கும் ஊடகங்கள், வணிகங்கள், சடங்குகள் என அனைத்துமே இதற்கான காரணிகளே ஆகும்.

 ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ - சிறிதுகூட உரிமையே கிடையாது என்று சொல்லுகிறோம்.
-பெரியார் (குடிஅரசு, 18.1.1931)


பாலியல் வன்முறையாகட்டும், அமிலம் ஊற்றுவதாகட்டும், அல்லது கருணைக் கொலையாகட்டும் எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆணாதிக்க உணர்வு மட்டுமே. பாலியல் வன்முறை என்பது கலவி அல்லது உடலுறவு என்பதை மட்டும் கொண்டு உடைதான் காரணம் நடத்தை தான் காரணம் என்று அளவிடக் கூடாது. அது ஆதிக்க உணர்வு வன்முறை ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

இவை வெவ்வேறு மத கலாச்சார சமூகங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. ஒரு ஆண் தன் மகள் கீழ்ஜாதிக்காரனை மணந்து கொண்டதால் பெற்ற மகளென்றும் பாராமல் கொல்கிறான். அவளது உயிரை விட தனது, கௌரவம் என்று தான் நம்பும் ஜாதிப்பெருமை அவன் கண்ணை மறைக்கிறது. அதற்காக மகளைக் கொன்ற தந்தை என்ற பட்டத்தை சுமக்கவும் பெருமிதத்துடன் கொல்கிறான். ஜாதிகள் நிறைந்த இந்து மதத்தில் மட்டுமல்ல, பாகிஸ்தான், ஈராக், வங்கதேசம் போன்ற முஸ்லிம்கள் சமூகத்திலும், சீக்கிய சமூகத்திலும் கேள்விப்படுகிறோம். இதில் பெண் ஒருவனை மணக்க் விரும்புவது அவர்கள் குடும்பத்திற்கு இழுக்கு என்று கருத வைப்பது எது ? தான் சொன்னவனை, தகுதிக்கு உட்பட்டவனாகக்கருதும் ஒருவனை மட்டுமே மணமுடிக்க வேண்டும் என்று பெண்ணின் உரிமையை மறுக்கும் ஆணாதிக்கம். அதற்காக பெற்றவளென்றும் பாராமல் கொலை செய்யக் கூடத் தயங்குவதில்லை.

அடுத்து அமிலம் ஊற்றும் அசிங்கம் பிடித்த எண்ணங்கள் ஏன் வருகின்றன. இது போன்று அமிலத் தாக்குதலுக்குப் பெரும்பாலும் பெண்களே ஆளாகின்றனர். பெரும்பாலும் திருமணமாகாத இளம்பெண்கள். செய்கிறவர்கள் இளைஞர்கள். இவர்களிருவருக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் தகராறா இருக்கப்போகிறது, காதல், பாலியல் உறவு, திருமணம் உறவுச் சிக்கல் அரிதாக வேறு பிரச்சனைகள். இதில் முக்கியமானது காதல், ஒரு பெண் காதலிக்கும் உரிமைக்கு அப்பா என்ற ஆண் குடும்பம், கௌரவம் என்ற ஆணாதிக்கக் கருத்தியல்களால் எதிர்க்கும் அதே நிலையில், ஒரு ஆண் தன்னைக் காதலிக்காத பெண் அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்ற வெறியில் அவள் மீது அமிலத்தை ஊற்றுகிறான். அவளுக்குத் தன்னை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ கூட உரிமை இருப்பதாக எண்ணிப் பார்ப்பதில்லை. அல்லது ஆணாதிக்கம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. கொலை செய்வதில் இருக்கும் வக்கிரத்தை விடப் பல மடங்கு கொடூரமானதும், கேவலமானதுமான  பெண்ணின் முகத்தில் அமிலத்தை ஊற்றி அவள் தனது தன்னம்பிக்கையாகக் கருதும் அழகைச் சிதைப்பதில் இன்பமடைகிறது இந்து கருமாந்தரங்கள்.

தெருவில் போகும் தனக்கு தொடர்பில்லாத உரிமையில்லாத ஒரு பெண் தனியாளாக இருப்பதால் சீக்கியடிப்பதும், கேலி பேசுவதும் உரிமை நினைக்கும் ஆணாதிக்க ஓநாய்கள், இரவு நேரமென்றால் அவளை வன்புணர்ந்து கூடப் பாடம் கற்பிக்க தனக்கு அதிகாரமிருப்பதாய் நினைப்பது எத்தகைய கேவலமான மனநோய்.

சமூகத்தின் தாக்கமின்றி வெளியில் வாழும் ஒரு மனிதனுக்குப் பெண் மீது எத்தகைய கண்ணோட்டம் இருக்கிறதோ அதே கண்ணோட்டம்தான் ஒரு சிறந்த பண்பட்ட குடும்பத்தில் பிறந்து வளரும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கிறது. ஒரு இளைஞனோ, சிறுவனோ பெண்கள், பாலியல் குறித்த கருத்துக்களை சமூகத்திலிருந்தே, ஊடகங்கள், திரைப்படங்கள் மூலமே கற்கிறான். அவை என்ன கற்பிக்கின்றனவென்று நமக்குத் தெரியும். பாலியல் குறித்த அறிவியல் கண்ணோட்டமின்றி அவை வெறும் கிளுகிளுப்பாகவும், அருவருப்பானதாகவும், பெண்களுக்கு ஒழுக்கக் கேடாகவும், ஆண்கள் மறைவாக அன்பவித்துக் கொள்ளவும் ஏற்றவாறே இருக்கிறது.

திரைப்படங்களை இதற்கு ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லலாம். திரைப்படங்கள் நம்மை நேரடியாகத் தாக்குவதில்ல. அதை நாம் அப்படியே பின்பற்றுவதில்லை. ஆனால் எல்லா வகையிலும் நம்மை ஆக்ரமித்திருக்கிறது. ஏன் தமிழ்மணத்திலேயே பெருமாலும் திரைப்படம், அதனைச் சார்ந்த செய்திகள்தான்.

திரைப்படப் பாடல்கள், நடிகர்கள், வசனங்கள், பட்டப் பெயர்கள் எல்லா இடத்திலும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

திரைப்படத்தில் என்னத்தைக் காட்டுகிறார்கள் பெண்களைப் பற்றி.

பெண்கள் திரைப்படத்தில் வருவதே ஆண்கள்/ நாயகர்களால் காதலிக்கப்படுவதற்குத்தான், அவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களும், அழுவதும், சிரிப்பதும், துடிப்பதும், ஓடுவதும் காதலுக்காகவே/காதலனுக்காகவே/

காதலன் என்பவன் அயோக்கியனாக இருந்தாலும், அவனிடமிருந்து ஒரு நல்ல காரணத்தைக் கண்டுபிடித்து அவனைக் காதலிப்பாள்

அவளைக்கவர்வதற்காக நாயகன்/ என்ன பொறுக்கித்தனம் செய்தாலும் அது நாயகத்தனமாகவே சித்தரிக்கப்படுகிறது. அவன் அவளைத் துரத்தலாம், கடத்தலாம், துன்புறுத்தலாம், புணரலாம், ஏன் கொலை செய்யக் கூட முயலலாம். இது பருத்தி வீரன், பாலாவின் அனைத்துப் படங்களும், தனுஸ், சிம்பு, கார்த்தி படங்கள். புதிய பாதை மூவேந்தர்.

பெண்களைக் கேலி செய்யும் ஈவ் டீஸிங், உடலைக் கிண்டல் செய்வது என்பது போல பெண்களைக் கிண்டல் செய்வது, மேலும் கீழும் தொட்டு விளையாடுவது, உரசுவது, இடிப்பது, உடைகளை பிடித்து இழுப்பது போன்ற பாடல்கள் சிவாஜி, மகோராமச்சந்திரன் காலத்திலிருந்து மாஸ்டர் மகேந்திரன் காலம் வரை தொடரும் பாரம்பரியம். அது நகைச்சுவையாம். பெண்கள் மீது ஒழுக்கத்தை வலியுறுத்தவும் தயங்குவதில்லை.

பாடல் காட்சிகள் பாதி செமிபோர்ன். இடுப்பில் முத்தம் கொடுப்பது, மார்பில் முகத்தை மோதுவது, மொத்த உடலையும் மோப்பம் பிடிப்பது தடவுவது இன்னும் பலதும்.

விவேக், விஜய், சிம்பு, தனுஷ், சந்தானம் வகையறாக்கள் சொல்லும் பெண்களுக்கான வியாக்கியானங்களை எல்லாம் ஆண்களுக்கு தம் ஆணாதிக்க அரிப்பை சொறிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம் கொடுக்கின்றன. பீயை மிதிச்சது போல முகத்தைச் சுளித்துக் கொண்டு சந்தானம் "மச்சா இந்தப் பொண்ணுங்க இருக்காளுங்களே" என்று தொடங்கினான் என்றால் பெண்கள் உட்பட அனைவரும் சிரிக்கத் தொடங்கினால் அந்தக் கருத்தைக் கேள்விகளின்றி நாம் ஏற்றுக் கொண்டோமென்றுதானே பொருள்.

கொல்றா அவள, வெட்றா அவள, கொலவெறி வகைப் பாடல்களெல்லாம் ஆண்களைத் தியாகியாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறையையும், வெறுப்பையும் எவ்வளவு அழகாகச் சொல்கின்றன. காதல் தோல்விப் பாடல்கள் என்றால் காதலியை நோக்கிப் பாடுவதாக இல்லாமல் "பெண்கள் என்றால் பொய்யா" என்று மொத்தப் பெண்களையே கேள்வி கேட்கிறதே. வெறுப்பைக் காட்டுகிறதே

அதே நேரம் ஆண்களின் பொறுக்கித் தனத்தைக் கொண்டாடுகிறது.

பெண்களிடமிருது ஒதுங்கியிருக்கும் ஆண் சமூகம் இது போன்ற திரைப்படங்களிலிருந்து எதைக் கற்கும் ? பெண்கள் என்றால் காதலிக்க, செக்ஸ், ஒழுக்கம் என்பதைத்தவிர வேறு என்னதான் இவை சொல்கின்றன.

பாலியலிலிருந்து எல்லாவற்றையும் தேவைப்படும் ஏற்ற இறக்கங்களுடன் வெளிப்படையாக விவாதிப்பதே ஒரே வழியாக இருக்கும். பெற்றோர்க்கு தனது மகன் தம்மடிப்பதோ, தண்ணியடிப்பதோ எப்படித் தெரிவதில்லையோ அது போலவே அவன் பொது இடங்களில் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.

என் மகன் ஒரு போதும் திருட மாட்டான், கொலை செய்ய மாட்டான் என்பது எல்லாப் பெற்றோரின் நம்பிக்கை. அது பெரும்பான்மையாக உண்மையாக இருக்கலாம். ஆனால் பெண்கள் பற்றி என்ன நினைக்கிறான், தன் தங்கை, அக்கா, அம்மா வயதிலிர்க்கும் பிற பெண்கள் மீது அவன் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தால், ஒவ்வொரு அம்மாவும் நொந்து போவாள்.

பெண்கள் மீதான ஆண்கள் கொண்டிருக்கும் கருத்துகளே வன்முறைகளுக்கு மூலமாகக் கருதுகிறேன். பெண்குழ்ந்தைகளை வளர்ப்பது போல் ஆண் குழந்தைகளையும் ஒழுக்கமுடன் வளர்க்க வேண்டும். பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதையும் பெண்களால் மட்டுமே செய்ய முடியும். என் மகனால் எந்தப் பெண்ணுக்கும் துன்பம் நேராது என்று நம்பிக்கையுடன் சொல்லும்படி வளர்க்க வேண்டும்.

இந்த விநோதினி காதலிக்க மறுத்ததால் மட்டுமல்ல, ஏற்கெனவே இவர்களிருவரும் காதலர்களாக இருந்தவர்கள்தான் என்றும் சொல்கிறார்கள். காதலர்களாக இருந்தாலும் ஒரு நபருக்குப் பிடிக்க வில்லை என்றால் விலகிவிடுவதுதான் முறை அது கசப்பாக இருந்தாலும். விநோதினி செய்தது தவறில்லையா என்றால், எத்தனையோ ஆண்கள் வயிற்றில் புள்ளையைக் கொடுத்து விட்டு கம்பி நீட்டுகிறார்கள். பெண்கள் என்ன அமிலத்தையா ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஊற்றுவதென்றால் எத்தனை ஆண்கள் மீது ஊற்ற வேண்டும்.

டெல்லி வன்புணர்வுக்காக வாழ்க்கையிலேயே முதன்முறையாக பாலியல் வன்முறைக்கு எதிராக வாயைத் திறந்தவர்கள், உச் கொட்டி விட்டுப் பின்னர் இவளுங்க ஒழுங்கா இருந்தாத்தான ? என்று வெறியேற்றுகிறார்கள். கணவனாக இருந்தாலும் பெண் விருப்பமின்றி உடலுறவு கூடாது என்பதுதான் நியாயம். பெண் ஆபாசமாய் உடையணிந்தால் வன்முறை செய்யலாம் என்று உரிமை கோரும் மனநோயாளிகளுக்கு இதுதான் பதில்.

பெண்களுக்கு எதிரான எல்லா வகையான கருத்துக்களையும் இயன்ற வழியிலெல்லாம் எதிர்க்க வேண்டும். ஒரு கருத்து சமூக அளவில் ஏற்றுக் கொள்ளப்படும்பொது ஏனென்றால் அது வன்முறைகளையும் குற்றங்களையும் நியாயப்படுத்தும்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

1 கருத்து:

 1. கல்வெட்டு வலையிலிட்ட பின்னூட்டம்

  http://kalvetu.balloonmama.net/2013/02/blog-post_14.html?showComment=1360894586408#c4748868659506692567

  நன்று. மொத்தமாக ஆண் பெண் சிக்கலுக்கான தீர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. இது போன்ற எதிர் கருத்துக்களை ஒரே பதிவில் சராசரியான அல்லது எதிரான மனப்பான்மை கொண்டவர்களால் மாற்றிக் கொள்வது கடினம். காதல், பாலியல், சுதந்திரம், புரிதல் என்பதற்கு இந்தியாவுக்கும் மேலைநாடுகளுக்கும் மிகத் தொலைவாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாறி வருகிறது. பொருளாதார சுதந்திரம் முன்னேற்றம் ஓரளவுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அது பக்குவம் என்ற அளவில் அல்லாமல் நுகர்வு என்பதாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வெளிநாடு சென்று வாழ்கிறவர்கள் ஓரளவுக்கு தனிமனித சுதந்திரம் பற்றி புரிதலுடன் இருப்பதால், பெண்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் வெளிநாடு சென்ற பல இந்தியர்களுக்கு அதை ஏற்றுக் கொள்ளாமல் மினிஸ்கர்ட்டைப் பார்த்தால் நல்ல தரிசனம் என்றுதான் குதூகலிக்கத் தோன்றுகிறது சராசரி மனத்துக்கு.

  இந்தியத் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் என்பதே ஒரு வகையில் போர்ன் மாதிரிதான் இருக்கிறது. அமெரிக்காவில் பிகினி போன்றவை சாதாரணமாக இருந்தாலும் பல ஹாலிவுட் படங்களில் பெண்கள் உள்ளாடையில் இருப்பதை ஆண்களுக்காகவே வைக்கும் காட்சிகளாகத் தோன்றுகிறது.

  //மேலைநாடுகளில் காதலர் தினத்தில் யாருக்கு வேண்டுமானாலும் Happy Valentine's Day என்று வாழ்த்துகள் சொல்லலாம் .// இங்கும் கூட அதுமாதிரித்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். வானொலிகள் நிறைய வந்துவிட்டன. நடிகர்களின் பிறந்த நாளுக்குக் கூட நாள் முழுக்க கும்மியடிக்கிறார். காதலர் தினமென்றால் கேக்கவா வேண்டும் ? வாலன்டைன் டே கொண்டாட்டத்தில் காதலல்லாமல் பிடித்தவர்களுக்கும் வாழ்த்துக் கூறலாம் மாதிரியான கருத்துக்களும் சொல்கிறார்கள்.

  அந்த விநோதினி பிரச்சனை ஒருதலைக்காதல் அல்ல. அவர்கள் ஏற்கெனவே காதலர்கள், படிப்பதற்குக் கூட அந்த நபர் உதவி செய்து வந்ததாகவும், பின்பு பிரிந்ததால்தான் பிரச்சனை என்றும் கேள்விப்பட்டேன்.

  பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்