திருந்தித் தொலையுங்கள்

குமுதம் என்ற வார இதழில் வரும் அரசு பதில்கள் நான் விரும்பிப் படிக்கும் ஒரு பகுதி. அதில் பதிலளிப்பவர் உலக அளவிலான பல துறைகள் சார்ந்தும் பதிலளிப்பார். அதே நேரம் ஒரு குப்பைக்கும் ஆகாத நடிகைகள் குறித்த கேள்விகளுக்கும் பதிலளிப்பார். அதை நான் விமர்சிக்க விரும்புகிறேன். காரணம் பெண்களைக் கிண்டல் செய்வது எனக்கு அருவருப்பானது. தனக்குத் தெரியாத, உறவுமில்லாத ஒட்டுமில்லாத ஒரு பெண்ணை ஒரு பெண் என்ற காரணத்திற்காகவே தனது அரிப்பை சொறிய ஒரு ஆண் செய்யும் கிண்டல் பற்றி நான் சொல்ல வருவது.

டெல்லி பாலியல் வன்முறை தொடங்கும் முன் ஜோதியையும் அவளது நண்பனையும் கிண்டல் செய்து பின்னர் ஜோதி சண்டை போட்ட பின்னரே தொடங்கியது. எனவே இந்த ஈவ் டீஸிங் என்பது ஒரு குற்றம் என்று சொல்ல வருகிறேன். மேலும் இதை செய்பவர்கள் இது ஒரு தவறு என்பதைக் கூட உணர்வதில்லை. அதையே இவர்கள் தனக்கு வேண்டிய பெண்களை இது போன்று விமர்சிக்க மாட்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

டெல்லி பாலியல் வன்முறைக்கு எதிராக பல இளம் பெண்களும் ஆண்களும் தெருவுக்கு வந்ததை நாம் அறிவோம். ஒரு போராட்டம் மும்பை கேட் அருகே நடந்த போது போராட்டம் நடத்திய இளம் பெண்களைப் பார்த்து இரண்டு ஆண்கள் விசில் அடித்தார்களாம். என்ன புதுமையென்றால் அந்த ஆண்களும் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட வந்தவர்களாம். எப்படியிருக்கிறது பாருங்கள் கதை.

இன்னொரு உதாரணம் நச்சென்று புரியவைக்கும் இதன் இரு வேறு பரிமாணங்களை.

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக இருக்கும் புகழேந்திக்கு ஒரு அழைப்பு தொலைபேசியில் வரும். ஒரு இளம் பெண் தலையில் வழியும் குருதியைத் துடைத்து கொண்டு அழுது கொண்டே இங்க ஈவ் டீஸிங் தொல்ல தாங்க முடியல சார் என்பாள். நாயகன் சென்று அந்தப் பொறுக்கிகளை அடித்து நொறுக்கி உள்ளாடையுடன் "பெண்கள் நம் கண்கள்" என்று சொல்லிக் கொண்டேமுட்டி போட்டு நடக்கச் செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றுவார். இது பெண்களைக் கேலி செய்தவர்களுக்கு எதிரான ஒரு அறச்சீற்றக் காட்சி.

பாய்ஸ் படத்தில், 5 விடலை நாயகர்களும் அறிமுகப் பாடல்களில் தூள் கிளப்புவார்கள். ரங்கநாதன் தெருவில் தன் அம்மாவின் வயதுள்ள பெண்களை பின்னால் உரசுவார்கள், வேண்டுமென்றே இடிப்பார்கள். குழந்தையைத் தூக்கும் சாக்கில் முலையில் உரசுவார்கள். மிகவும் சிரித்த முகத்துடன் இதையெல்லாம் செய்வார்கள்.

பின்பு பலத்த எதிர்ப்புக்களின் பின்பு இக்காட்சிகள் நீக்கப்பட்டன. நடப்பதைத்தானே காட்டியிருக்கிறார் என்று பலர் விளக்கம் நியாயம் சொன்னார்கள். அந்தப் படம் பார்க்கும் வரை அது மாதிரி நடப்பது எனக்குத் தெரியாது என்பதையும் சொல்லிக்கிறேன். நடப்பதைக் காட்டலாம் அதை ஒரு நாயகத்தனமாகக் காட்டியது தவறு. முதல்வன் படத்தில் வரும் ஈவ் டீஸிங்க் கூட நடப்பதுதான் அதை எப்படி தவறாகக் காட்டினார். அதை விடக் கேவலமாக இதை ஒரு குறும்பைப்போலவும், தமாசாகவும் நாயகத்தன்மையாகக் காட்டியது என்ன நியாயம். இதை எஸ் ஜே சூர்யாவோ சிம்புவோ, தனுசோ செய்திருந்தால் பரவாயில்லை. சமூகப்பிரச்சனையை மையமாகக் கொண்டு படமெடுக்கும் இயக்குநர் என்று சொல்லப்பட்ட ஷங்கரின் புத்தியே இப்படி கோணலாக இருக்கிறதென்றால் மற்ற ஆண்களுக்கு எப்படியிருக்கும்.

பாலியல் வன்முறைகளின் ஒரு வகைதான் ஈவ் டீஸிங்  என்பதும். பெண்களைக் கேலி செய்வது. எப்படிப் பார்ப்பது, எப்படிக் கமென்ட் அடிப்பது என்பனவற்றையும் சொல்லிக் கொடுப்பவை ஊடகங்கள். முக்கியமானது திரைப்படம். அடுத்ததாக வருகின்றவைதான் குமுதம் போன்ற இதழ்களில் வரும் இது போன்ற கண்டு பிடிப்புகள், விவரிப்புகள். கேட்டால் நக்கலடிக்கத் தோன்றும்தான். ஆனாலும் இதுதான் உண்மை. பெண்களின் அழகைக் கிண்டல் செய்வது, உடல் அசைவுகளை, உடல் பாகங்களைக் கிண்டல் செய்வது, உடையைக் கிண்டல் செய்வது என எல்லாமே இதில் அடங்கும். இதை மிகவும் சிறப்பாக செய்வது அரசுவின் பாணி. என்ன இவர் அதிகமாக நடிகைகளை வர்ணிப்பார். அவ்வப்போது  பொதுவிலும் பெண்களைக் கிண்டல் செய்வார்.

என்ன காரணம் என்றால் பெண்களைக் கிண்டல் செய்வது ஆண்களின் பிறப்புரிமை. அது அழகான பொழுது போக்கு. அது தவறில்லை என்ற எண்ணம். இதை செய்கிறவன் பொறுக்கியாகத்தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் பழைய கற்பிதம். நல்லவன், வல்லவன், க்யூட் பாய்ஸ், ஸ்மார்ட் பாய்ஸ், அறிவிலி, அறிவாளன் என்ற எந்த பேதமுமில்லை. பின்நவீனத்துவம் பேசுகிற ஆண்களிலிருந்து பொம்பளப் பொறுக்கிகள் வரைக்கும், வயசு வந்த விடலைகளிலிருந்து நாடி நரம்பெல்லாம் ஆடிப்போன கெழ போல்டுகள் வரை இதுதான் வழக்கம்.

இதைத்தான் பாலியல் வன்முறை செய்கிறவனும் நினைக்கிறான். பெண்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், கிண்டலடிக்கலாம் என்று எண்ணுகிற ஆண் ஒரு கலாச்சார அடிப்படைவாத, மத அடிப்படைவாத ஆண் போலவே பெண்களின் ஒழுக்கத்தையும் கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறான். கலாச்சார, மதவாதிகள் ஒழுக்கம் பற்றிப் பேசுவதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. அவன் ஒரு சில கட்டுப்பாடுகள், கொள்கைகளாவது வைத்திருக்கிறான். ஆனால் சைட்டடிப்பதையும், ஈவ் டீஸிங் செய்வதையும் மட்டுமே தொழிலாகக் கொண்டவர்களும் ஒழுக்கத்தைப் பேசுகிறார்கள் என்பது எரிச்சலோ எரிச்சல்.

எனது எரிச்சலுக்குக் காரணம் போனவாரம் குமுதத்தில் அரசு பதில்களில் ஒரு கேள்வி ?

நயன்தாரா தமன்னா (வேறு யாரோ நினைவில்லை) எந்த நடிகைக்கு போலிஸ் அதிகாரி வேடம் நன்றாக இருக்கும் ?

 அரசு சொல்கிறார். ஏன் நடிகர்கள் நெஞ்சைத் தூக்கிக் கொண்டு நடப்பது பிடிக்கவில்லையா ?.

இன்னொரு கேள்வி:

நான் நிர்வாணமாகச் சென்றாலும் என்னை வன்புணர யாருக்கும் உரிமை  இல்லை என்கிறாரே பிரியங்கா சோப்ரா ?

அரசு : நம் வீடு என்றாலும் பாத்ரூமிற்கு கதவு இருக்கிறது என்பதை பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் உணர வேண்டும்.

மேலே முதல் கேள்வியில் பெண்களின் உடலைக் கிண்டல் செய்யும் கருத்து இது ஒரு செக்ஸிஸ்ட் ஜோக்தான். ஏன்னா அது சும்மா ஜாலிக்கு. எது பெரிசு எது சிறிசு இப்படியெல்லாம் சொல்வது ஃபன். இரண்டாம் கேள்வியில் அபச்சாரம் அபச்சாரம் என்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் அறிவுரை சொல்கிறது. நூல் முழுக்கவும் கவர்ச்சிப்படங்களைப் போட்டுக் கொண்டு கண்ட கமெண்டுகளையும் எழுதிக் கொண்டு விற்பனையாகும் இது போன்ற இதழ்களே பெண்களை, பெண் உடலை ஒரு மாஸ்ட
ர்பேசன் ஆப்ஜெக்ட் ஆக்கிவிட்டு, பெண்களுக்கு அறிவுறைகளையும் அள்ளி வழங்குகின்றார்கள்.


 ஸ்ரீயாவின் பிகினி படத்தையும் பிரசுரித்துகொள்ள வேண்டியது, கீழே அய்யோ இதுக்கு இன்னும் ட்ரெஸ்ஸே போடத்த் தெரில என்ற கமெண்ட்டையும் போட்டுக் கொண்டு யோக்கியனாக காட்டிக் கொள்ள வேண்டியது. அவ்வப்போது பெண்களுக்கு அட்வைஸ் மழை.

இந்த மனநிலையில்தான் எல்லா ஆண்களும் இருக்கிறார்கள். தாம் செய்யும் பொறுக்கித்தனத்தை எல்லோரும் இயல்பாகக் கருதுகிறார்கள். பெண்கள் கருத்துச் சொன்னால் பாதுகாப்பின் அவசியம் பற்றிப்பேசுவார்கள். டெல்லியின் வீரத்தலைமகன் ஆண்மையின் சின்னம் ராம்சிங் சொன்னது தனியாக இரவில் வந்த பெண்ணுக்குப் பாடம் புகட்ட நினைத்தேன். அதே கருத்தைத்தான் எல்லோரும் வழிமொழிகிறார்கள்.

ஆணாதிக்க அல்பைகள் ஒழுங்காக உடையணியவும், அந்த பெண் ஏன் தனியாகப் போனாள், இரவில் போனாள் என்ற அபத்தமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது, அதற்கெதிராக போராடிய இளம் பெண்கள் என்னை எப்படி உடையணிய வேண்டும் என்று சொல்லாதே, பாதிக்கப்பட்டவளைக் குற்றவாளியாக்காதே, உடை அணிவது என் உரிமை என்ற பொருள் தரும் கருத்துக்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டிருந்ததை ஊடகங்கள் வழியாகக் கண்ட ஆண்களுக்குப் பொறுத்துக்க முடிய வில்லை. அது போன்றதுதான் அரசுவின் இரண்டாவது பதில். இந்த வாரம் குமுதத்தில் ஒரு கேள்வி பதில்

எந்த நடிகை காலில் டாட்டூ குத்தியிருக்கிறார் ?

அரசு: நான் கால்களைப் பார்ப்பதில்லை.

இன்னொரு கட்டுரை கீற்றுவில் படித்தேன். அதில் வன்னி அரசு என்பவர்  திரைப்படங்கள் தாக்கத்தின் காரணமாக பெண்களைக் குறிப்பிடும் ஃபிகர் என்ற சொல்லைப் பற்றி எழுதியிருந்தார். அதில் அழகில்லாத பெண்களை ஆண்கள் கிண்டல் செய்யும் ஒரு சொல் அட்டு ஃபிகர் என்பதாகும். இந்த அட்டு என்ற சொல் "Hut" என்ற குடிசையைக் குறிக்கும் சொல்லிலிருந்தே வந்திருக்கும். "Hut Figure" என்று குடிசையில் வாழும் தலித் பெண்களை இழிக்கப் பயன்படுத்திய சொல்லே இது போன்று மாறியிருக்கலாம் என்கிறார். அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் அழகில்லாத பெண்களை ஆண்கள் என்ன சொல்கிறார்கள். மொக்க ஃபிகரு, அட்டு ஃபிகரு, சப்பை ஃபிகரு, டம்மி பீசு இவைகள் போக மேல்ஜாதி ஆண்கள் சொல்வது சக்கிலிச்சி மாதிரியே இருக்கா, கொறத்தி மாதிரி, பறச்சி மாதிரி என்று சொல்வார்கள். இதெல்லாம் "ஜாதிகள் இல்லாத" நகரத்தில் கம்பியூட்டர் யூத்கள் கூடப் பேசுகிறார்கள். எனவே அவர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம்.

என்ன ஃபிகர் என்று சொல்வதை விடவும், ஃபிகர் என்று சொல்வதே தவறு என்கிறேன். புறத்தோற்றத்தை வைத்து கிண்டலடிப்பது, ஜாதியைச் சொல்லிக் கிண்டலடிப்பது என்று வந்தாலும் இது அனைத்தும் பெண்களைக் கிண்டலடிக்கும் ஆணாதிக்க மனநோயே ஆகும். இதைத் தவறென்று எண்ணுவதற்குக் கூட ஆண்களுக்கு மனம் வருவதில்லை. புரிந்தவர்கள் திருந்திக் கொள்ளுங்கள், அடுத்தவரையும் திருத்துங்கள். திருந்தாதவர்கள் திருந்தித் தொலையுங்கள்.

இன்னொரு விசயம் டெல்லி பாலியல் நிகழ்வில் பலபேர் ஜோதி தனியாக சென்றதாகவும், இரவில் சென்றதாகவும், காதலனுடன் சென்றதாகவும், உல்லாசமாக இருந்ததாகவும் அடித்து விடுகிறார்கள். அவர்கள் செல்ல வருவது அவர்கள் இருவரும் "அது" செய்வதற்காகவே வெளியில் திரிந்து விட்டு வந்தார்கள் அவர்கள் மீதும் குறிப்பாக அந்தப் பெண்ணின் மீது தவறு இருக்கிறது. அதாவது சுருக்கமாக ஜோதி கற்பில்லாதவள், ஒழுக்கமற்றவள்.

அவர்கள் சென்றது நள்ளிரவிலல்ல, 9 மணி வாக்கில்தான். திரைப்படத்திற்குத்தான் சென்றிருக்கிறார்கள். அவள் தன்னிடம் திருமண ஆசை குறித்துச் சொல்லவில்லை எனவும், அந்தப் பையன் வேறு ஜாதி என்பதால் அதற்கு வாய்ப்பில்லை, அவள் படிப்பில்தான் ஆர்வமாக இருந்தாள் எனவும் ஜோதியின் தந்தை குறிப்பிட்டிருந்தார். தன் மகள் மீது தவறு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஜோதியைக் குதறியதில் அந்த 6 பிசாசுகள் தவிர்த்து, பெண்களின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்பவர்கள் அதற்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பவர்கள் ஏனென்றால் குற்றவாளி ராம்சிங்கின் கருத்தைத்தான் அவர்களும் சொல்கிறார்கள்.

அந்த நண்பன் காதலனாக இருந்தாலும், அவர்கள் கலவி செய்யத்தான் வெளியே சுற்றி விட்டு வந்திருந்தாலும் கூட எனது நிலையில் எந்த மாற்றமுமில்லை. ஜோதி சிங் பாண்டே குற்றமற்றவள்தான். சொக்கத் தங்கம்தான். 

அந்தப் பொறுக்கி *@#$%^%^% யை சிறுவன் என்று சொல்லி வெளியில் விடக்கூடாது. இதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மற்றவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையே இவனுக்கும் முடிந்தால் இன்னும் கூடுதலாகவும் பரிந்துரைக்கலாம்.

அடுத்ததாக கமலஹாசன் ஷ்ருதிக்கு முத்தம் கொடுப்பதை பெரிய கலாச்சாரா அதிர்ச்சியாக சித்தரிக்கிறார்கள். பெற்றவன் மகளுக்கு முத்தம் கொடுப்பதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதி விளக்கம் தர வேண்டியிருக்கிறதே. காதல் குற்றம், முத்தம் குற்றம் நல்ல கலாச்சாரம். இந்த கலாச்சாரம் சீரழவு குறித்து விமர்சிப்பவர்கள் நம்முடைய கலாச்சாரா வரலாற்றையும், ஜாதியையும் வைத்தே சொல்லி விடலாம் எவ்வளவு அருமையான கலாச்சாரம் என்று. 


 கூடுதல் தகவலாக கமல் தனது 49 பிறந்த நாளின் போது விருமாண்டி படம் வெளியாகும் முன்பு , மேடையிலேயே வைத்து நடிகை காந்தி மதி கமலுக்கு முத்தம் கொடுக்க, கமலும் திருப்பி முத்தம் பல கொடுத்தார். அதையும் விமர்சிக்கலாம்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

  1. காந்திமதியின் முகமலர்ச்சியில் நடிப்பு இல்லை; எனக்கு தாய்மை தான் தெரிகிறது. ஒரு மகன் தன தாயை அணைததால்--இப்படிதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நம்பள்கி, அதேதான் நானும் சொல்றது, ஷ்ருதிக்கு முத்தம் கொடுக்கும் போதும் தந்தையின் பாசம்தான் தெரிகிறது. ஷ்ருதியின் முகமும் பூரித்துப் போய்தான் இருக்கிறது. எனக்கொன்றும் தவறாகத் தோன்றவில்லை. இது மாதிரியான பிரபலங்கள் அணைப்பது, முத்தமிடுவதெல்லாம் சாதாரணம்தானே. இதையெல்லாம் போய் குறை ஏன் சொல்லனுமேன்னுதான். இன்னொரு தரப்பு இதை எதிர்க்கிறேன் என்று இறக்குந் தறுவாயில் முகமது நபி முத்தம் கொடுத்ததையும், பிஜெவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சிக்கிறார்கள். இது இரண்டுமே தேவையில்லன்னு சொல்றேன்.

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்