எரிச்சலைக் கிளப்பும் விநாயகர் சதுர்த்தி எதில் சேர்த்தி ?

இந்த விநாயகர் சதுர்த்தி என்று மதவெறியைத் தூண்டும் ஒரு நச்சுக் கலாச்சாரத்தை கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் வெற்றிகரமாகப் பரப்பியுள்ளது இந்து முண்ணனி என்ற RSS-இன் ஒரு பிரிவைச் சார்ந்த வன்முறைக் கூட்டம். இந்த இந்து முன்னணி தென்காசியில் தனது அலுவலகத்திற்குத் தானே வெடிகுண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியப் பயங்கரவாதிகள் சதி என்று விளம்பரம் தேடியது. விநாயகர் சிலைக்கு செருப்புமாலையை இவர்களே போட்டு விட்டு திக காரர்கள் என்றும் பழி போட்டு பின்பு மாட்டிக் கொண்டது. தமிழகத்தில் மட்டும் மூன்று பாஜக காரர்கள் தம் வீட்டுக்கு தாமே பெட்ரோல் குண்டுகள் வெடிகுண்டுகள் வீசியும் (இந்து இயக்கத் தலைவர்களாகிய) தாம் பயங்கரவாதிகளால் ஆபத்தில் இருப்பதாகக் காட்டிக் கொண்டு விளம்பரம் தேடி மாட்டியுள்ளனர்

இந்த ஊர்வலம் தொடங்கும் இரு வாரங்கள் முன்பிருந்தே இந்த சிலைக்குக் காவல்துறை பாதுகாப்புப் போட வேண்டும். காவல்துறைக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அவர்கள் இந்த விநாயகர் சதுர்த்தியையே தடை செய்வார்கள் என்ற அளவுக்கு அவர்களை எரிச்சலின் உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள் இந்த நாறிப்போன ஊர்வலத்தை நடத்துகிறவர்கள். ஊர்வலம் செல்லும் போது பல வாகனங்களில் கூச்சலிட்டபடியும் மோளமடித்துக் கொண்டும் செல்வார்கள். சமகாலத்திய குத்துப்பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியபடியும் செல்வார்கள். இதில் எங்கே பக்தி இருக்கிறது ? கலாச்சாரம் இருக்கிறது.


வெள்ளைக்காரன் காலத்தில் ப்ளேக் நோய் பரவுவதைத் தடுக்க எலிகளையெல்லாம் கொல்ல வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டதாம், அதை எதிர்த்த திலகர் என்பவர் எலிகளெல்லாம் வியாகனின் வாகனங்கள் அதைக் கொல்லக் கூடாது என்று தொடங்கப்பட்டதே விநாயகர் ஊர்வலம் என்று கூட கேள்விப்பட்டிருக்கிறேன். அது இத்தனை ஆண்டுகளில் வெறியாட்டம் போடும் ஊர்வலமாக இந்துத்துவா வன்முறையாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.


கொடும கொடுமன்னு கோவிலுக்குப் போனா அங்கொரு கொடுமை தலைவிரிச்சு ஆடுச்சுன்னு சொல்றதற்கு சரியான உதாரணம் இதுகதான். வட இந்தியக் கலாச்சாரமான காட்டுமிராண்டிக் குத்தாட்டத்தை சகிக்க முடியல. புள்ளையார் ஆண் பெண், வயசு பேதமில்லாம, எல்லார்க்கும் புடிச்ச சாமியாதான் இருந்தாரு. இனி அப்படி இருக்காது. காரணம் இவாதான். எதிர்காலத்தில என்னவெல்லாம் நடக்கும்னு நினைச்சாலே குலைநடுங்குது


வருசா வருசம் ஊர்ல இருக்கற மொத்த சல்லிப் பசங்களும் ஐயப்பனுக்கு மாலை போடறேன்னு சீனைப் போடுவானுங்க பாருங்க. ஆனா விநாயகர் சதுர்த்தின்னு சொல்லிட்டு வரும் இவர்கள் பண்ணும் அக்கப்போருக்கு ஐயப்ப பக்தர்கள் 100 மடங்கு தேவலாம். ஆலயக்கட்டணத்தை இரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டியது, ஆனா விநாயகர் சதுர்த்தி சிலையைக் கரைக்க வசூல்னு நாலு பேர் சேர்ந்தாப்ல கெளம்பி வர்றவன் போறவங்கிட்டையெல்லாம் ஒரு நோட்டெடுத்துட்டுப் போய் நின்னு காசு குடுன்னு நச்ச வேண்டியது.


சாமி கும்பிட வர்றவனெல்லாம் தலை தெறிக்க ஓடற மாதிரி வெறி புடிச்சு கத்த வேண்டியது. விநாயகர் சதுர்த்திக்கு எதுக்குடா ராமன் கோயில் முழக்கமெல்லாம் !! இவனுக கொள்கைக்குக் கூட்டமே வராதுன்னுதான் சிவனேன்னு சாமி கும்பிட கூடற கூட்டத்தையெல்லாம் தன் பக்கம் திருப்ப கூச்சல் போடறானுக. இவனுகளை கொண்டு போய் எந்த பிரச்சனையும் பண்ணாம சேக்கறதுக்குள்ள காவல்துறை கதிகலங்குது. அதிலும் பிள்ளையார் தேவாலயம் மசூதி முன்னால ஊர்வலம் போகும்போது மட்டும்தான் பக்தர்களுக்குக் கொஞ்சம் அருளை கூட்டியே பாலிப்பார். இதுபத்தாதுன்னு இருக்கற சந்து பொந்து முதற்கொண்டு நீதிமன்றம் வரைக்கும் விநாயகர் சிலைகளையும் கோயில்களையும் கட்டி வருகிறார்கள்.


திருப்பூர்ல பாக்கறேன், டவுன்ஹால் புள்ளையார் கோயில் சுவற்றில் பாஜகவின் ஃப்ளக்ஸ் பேனர் தொங்க விட்டிருக்காங்க. கோயில் சுவற்றில் எதுக்கு கட்சி விளம்பரம்கறேன் ?


தினமணி என்ற நாளிதழ் இந்த ஊரில் இந்து முன்னணி சார்பில் இத்தனை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை என்று பல சிறு செய்திகள் வெளியிட்டு இந்து முன்னணிக்கு இலவச விளம்பரம் கொடுக்கிறது. சுற்றுச் சூழல் சீர்கேடுகள் பற்றி பல்வேறு விதமான கட்டுரைகளை தினமணி வெளியிட்டுள்ளது, ஆனால் இந்த விநாயகன் சிலையைக் கரைப்பதால் வரும் சீர்கேடுகள் குறித்து எந்தவொரு கட்டுரையும் வெளியானதா என்று தெரியவில்லை.


இவர்களின் இன்னொரு கோரிக்கை இந்துக்களின் ஆலயங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கக் கூடாது. அவை இந்துக்களிடம் இருக்க வேண்டும். இந்துக்கள் என்றால் யாரிடம் வரும் என்று சொல்லத் தேவையில்லை. பிறகு அனைத்து ஜாதியினர் அர்ச்சகராவதெல்லாம் கனவிலும் நடக்காது. கோயில்களின் வரலாறுகளில் மாற்றம் நிகழும், இருக்கும் கொஞ்ச நஞ்சத் தமிழ் வழிபாடும் முழு சமஸ்கிருதமாக மாறும். விநாயகர் சதுர்த்தி போன்ற வன்முறையைத் தூண்டும் ஊர்வலங்களுக்குக் காசு சேர்க்கும் கவலை இருக்காது, கோயில்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் "இந்து"க்களே அதற்கு நன்கொடைகளை வாரி வழங்குவார்கள். அப்பாவி இந்துக்களின் பெயரில் இவர்கள் தாண்டவமாடுவார்கள்.


இந்த இந்துத்துவாக்களின் நோக்கமென்னவாம். பிறமதத்தினரெல்லாம் தமது தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்ப வேண்டுமாம். உண்மையிலேயே மதத்தின் மீது நாட்டம் கொண்டவர்கள் மதத்தின் தவறை ஒத்துக் கொண்டு, மதத்தை சீர்திருத்த வேண்டும். ஆனால் இவர்கள் செய்வது இருக்கும் கொஞ்ச நஞ்ச சகிப்புத் தன்மையையும் ஒழித்து சீர்கேடுகளான ஜாதியை, வன்முறையை வெறுப்பை அங்கீகரித்து வளர்ப்பதுதான். அதிலும் தேவாலயம், மசூதிகளின் முன்பு வெறிக்கூச்சல் போட்டால் அவன் இந்து மதத்திற்கு மாறுவானா என்ன அறிவாளித்தனம் ?! அங்கே போய் வம்பிழுக்க வேண்டியது, அவனிடம் செருப்படி வாங்க வேண்டியது பின்பு இந்துக்களைத் தாக்கும் பிற மத்ததவர்கள் எங்கே மதச்சார்பின்மை வியாதிகளே, இந்துக்களுக்கு  இந்த நாட்டில் பாதுகாப்பில்லை என்று ஒப்பாரி வைக்க வேண்டியது. இவர்கள் இந்துக்களின் காவலர்கள் என்றெல்லாம் இந்துக்கள் நம்பவில்லை. தமிழகத்தில் சராசரி இந்துக்களின் நம்பிக்கையை வெறியாக மாற்றும் நோக்கம் நிறைவேறாது. நாட்டில் அமைதி தவழ வேண்டுமெனில் இது மாதிரியான RSS இயக்கங்களைத் தடை செய்தாலே போதும்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment