பெண்ணை ஏன் அப்படிப்பார்க்க வேண்டும் ?


பல நாட்களாகவே உறுத்திக் கொண்டே இருக்கும் ஒரு சிலவற்றில் இதுவும் ஒன்று. மிகச்சிலரைத் தவிர்த்து இதுநாள்வரையிலும் என்னுடன் பழகிய பல நண்பர்களும் என்னால் ஏற்க முடியாத கருத்துக்களையே கொண்டுள்ளனர். ஒருவேளை அவர்கள் சரியாகத்தான் சிந்திக்கிறார்களோ, நான்தான் அடிப்படையில் கோளாறாக சிந்திக்கிறேனா, இல்லை சேலம் சித்தவைத்தியரைப் பார்க்கவேண்டுமோ என்ற ஐயமும் சிலமுறை வரும். ஒரு பெண் என்பவள் வெறும் காட்சிப்பொருளாகவே பார்க்கப்படுகிறாள் என்பது எனது வேதனை. நான் உடன் பிறந்த, பிறவாத சகோதரிகளைக் கொண்டிருப்பதாலும், பல பெண் நண்பர்களைக்கொண்டிருந்ததாலும் அவர்களது இயல்புகளையும், உணர்வுகளையும் அறிந்தவன் என்ற முறையில் இது போன்ற செயல்கள் எனக்கு அதிகமாகக் கவலையளிக்கின்றன. பெண்ணை ஒரு வெறும் போகப்பொருளாகவும், துய்க்கப்பவேண்டியவளாகவும் உணர்வுள்ள ஒரு சக மனித உயிராக மதிக்கப்படாமல் பாலியல் பண்டமாகப் பார்க்கப்படவேண்டுமென்பதும் ஆண்களின் நாடி நரம்பெங்கும் ஊட்டப்பட்டுள்ளது.பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளுக்கு ஆளாவதற்கு இவைகளே தூண்டுகோல். ஒரு ஆணின் மனம் தனக்கு சம்பந்தமில்லாத பெண்ணை எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம் என்பது இயல்பாக இருக்கிறது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது பெணணுக்கு வைத்திருக்கும் புனைப் பெயர்களான ஃபிகர், கலர், பீஸ், கட்டை, குஜிலி, குட்டி,  ஜிகிடி, ஐட்டம், ஆன்ட்டி, மேட்டர், பட்சி  இன்னும் பலவும். இதில் ஃபிகர் என்பது ஓரளவு பெண்களிடமும் புழங்குகிறது. இந்தப் பெயர்களைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட பெண்ணைக் குறிப்பிடப் பயன்படுத்துவதில்லை. தனக்கொரு நியாயம் ஊரானுக்கொரு நியாயம். இதை எனதருமை நண்பர்களிடம் எனக்கேற்பட்ட அனுபவங்களின் மூலம் கூறுகிறேன். 

நிகழ்வு 1

ஒரு முறை ஒரு நண்பனிடம் புகைப்படங்களைக்காட்டிக் கொண்டிருந்தேன். அதில் சில பெண்களின் புகைப்படமும் இருந்தது. ஒரு புகைப்படத்தைப்பார்த்து புன்னகையுடன் கேட்டான். 

"டேய்! இந்த ஃபிகர் சூப்பரா இருக்குது. யார்ரா இது?"

"என்னோட தங்கச்சி"

என்று நான் சொன்னதும் அவனுக்கு ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது. நான் கோபப்பட்டுவிடுவேன் என்று அஞ்சிவிட்டான். இந்த மாதிரி பேசினால்  எனது எதிர்வினை நெளிவது மட்டும்தான். எப்போதும் போல நெளிந்தேன், அவ்வளவுதான். அவனுக்கு எந்தப்பெண்ணைப்பாத்தாலும் இது போல வர்ணிப்பதும், வரையறுப்பதும் வழமையாக இருந்ததால் எனக்கு எதுவும் அதிர்ச்சியில்லை, கோபமுமில்லை.என்னைச் சார்ந்தவர்களுக்காக தனிப்பட்ட முறையில் பொங்கவும் மாட்டேன். அது நேர்மையுமல்ல. 


இது போன்று பெண்களை விளிப்பதை நான் விரும்புவதில்லை. யாரைச் சொன்னாலும் ஒரே சங்கட உணர்வுதான் எனக்கு ஏற்படும். இங்கு என்னிடம் அறிமுகமான அல்லது வேண்டிய ஒரு பெண்ணை அவ்வாறு கூறிவிட்டதால் எனக்கு ஒரு சலனமுமில்லை. ஆனால் அவனுக்கு மட்டும் ஏன் குற்ற உணர்ச்சி வரவேண்டும் என்பது கேள்வி

"சாரிடா, உன்னோட தங்கச்சி எனக்கும் தங்கச்சி, எதுவும் மனசில் வச்சுக்காத"   என்றான். 

நிகழ்வு 2

இன்னொரு நண்பன் தான் "பல்ப்" வாங்கிய கதையொன்றைச் சொன்னான். மேலே சொன்னது போலத்தான். 

"மச்சி ஒரு நாள் ஊர்ல பசங்கெல்லாம் திருவிழாவுக்கு போயிருந்தோம். அப்ப ஒரு பொண்ணு வந்துச்சு. ஃப்ரண்ட கூப்பிட்டு,மச்சா  அங்க பார்ரா அந்த ஆன்ட்டி செமையா இருக்குதுன்னு சொன்னேன். அவன் பார்த்துட்டு அவுங்க என் அண்ணிடா அப்படின்னு சொன்னாம் பாரு, எனக்கு அப்படியே ஒரு மாதிரியாய்டுச்சு. சாரிடா சாரிடா அப்படின்னு நெறையா தடவ சொன்னேன்".

இது போல் பலபேர் பேசிவிட்டு சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டு நல்லபுள்ளயா அசடு வழிவதையும் பார்த்திருப்போம்

நிகழ்வு 3

ஒரு வட மாநில நண்பன். அவனுக்கு ஒரு காதலி வேற அவங்க ஊர்ல இருந்தாங்க. அவங்க பெயர் X. இங்க வஞசனையில்லாமல் எந்தவொரு பெண்ணையும் ஏற இறஙகப் பார்க்கிற மாதிரியான வேலையெல்லாம் ரொம்ப ஆர்வமா செய்வான். அது பிரச்சனையில்லை. கல்லூரியில் வேறு ஒரு பெண்ணைப் பார்த்து இவருக்கு காதல் வந்துவிட்டது. அந்தப் பெண்ணிடம் பேச முடியாம ரொம்பவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். சில மாதங்கள் சோகமாகவே சுற்றிக் கொண்டிருந்தவன், பின்பு மறந்துவிட்டான். இது போல் ஊரில் காதலியை வைத்துக்கொண்டு வந்த இடத்தில் நட்புக்கும் காதலுக்கும் நடுவில் ஒரு உறவைப்பேணுவதற்காக பெண்களைத் தேடும் ரோமியோக்கள் பலரையும் சந்த்தித்த அனுபவம் அனைவருக்குமே இருக்கும். இது பற்றி ஒரு முறை அவனிடம் கேட்டேன் .

"X இருக்கும் போது நீ இன்னொரு பெண்ணை நினைச்சது சரியா?, இது மாதிரி X செய்தால் ஒத்துக்குவியா?. 

"I don't know machi. I just wanted to speak with her and make her as my friend." என்றான்.

ஒருமுறை அவன் X  ஏதோ ஒரு விழாவிற்காக கல்லூரிக்கு வந்திருந்தான். அப்போது வகுப்புகள் ஏதும் நடைபெறாது கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆங்காங்கே அலைந்து கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்திலேயே சொல்லாமல் இருவரும் போய்விட்டனர். அவர்களைக் காணாமல் நண்பனொருவனிடம் கேட்டபோது, 

"எங்க போனாலும் எல்லாப் பசங்களும் X-யே பாத்தானுங்க,  காண்டாயி சீக்கிரமே திரும்பிப் போய்ட்டான்டா" 

என்று கூறினான். ஓரு முறை X உடன் ஜோடியாக இரயிலில்(தாம்பரம் - கடற்கரை) போயிருக்கிறான். இவர்களைப் பார்த்த பன்னாடை ஒருவன் X - க்காட்டி இவனிடம் "சூப்பரா இருக்கு" என்பதாக சைகை காட்டியிருக்கிறான். இதனால் என்னிடம் வந்து தமிழ்நாட்டில் எவனுக்கும் கலாச்சாரமே இல்லை என்று புலம்பித்தள்ளிவிட்டான். 

பொதுவில் பெரும்பான்மையான ஆண்கள் தமது காதலியர் வேறொரு ஆடவனுடன் கொள்ளும் இயல்பான நட்பினைக் கூட விரும்பாத அளவில் இருக்கின்றனர். ஆனால் வேறொரு ஃபிகரை பொழுது பொக்குக்காக மடக்குவதை விரும்புகின்றனர்.

நிகழ்வு 4 

கல்லூரியில் வகுப்பில் ஒரு நண்பன், நண்பியுடன் பேசியது.

உனக்கு கூட பிறந்தவங்க எத்தன பேருடி?

ஒரு தங்கை மட்டுமதான்.

அழகா இருக்குமா? 

ம்

அப்ப நல்ல ஃபிகரா?  உன்ன மாதிரி இல்லயா?

ஆமாண்டா, சனியனே!

இங்கு இதே தோழி இருந்த இடத்தில் ஒரு தோழனை வைத்துக் கேட்பதற்கு ஒரு ஆணால் முடியுமா ? முடியாதெனில் அதற்குப் பெயரென்ன ? குறைந்த பட்சம் உன் ஆளு அல்லது தங்கை "அழகாக இருக்கிறாள்" என்று கண்ணியமான முறையில் சொல்வதையோ அல்லது சொன்னால் ஒத்துக் கொள்ளும் பக்குவமும் ஆண்களுக்கு இருக்கிறதா ? அதே இடத்தில் ஒரு பெண்ணாக இருக்கும்பட்சத்தில் உங்கக்காவையோ தங்கச்சியையோ கரெக்ட் பண்றேன் பார்டி ! என்று "நகைச்சுவையாக" பேசுமளவுக்கு இருக்கும் துணிச்சலுக்குக் காரணமென்ன ? 

இதையே பெண்கள் பேசும் போது "மச்சி உன் அண்ணன் ஸ்மார்ட்டா இருக்காண்டி" என்றோ "உன் ஆத்துக்காரர் செம ஹேண்ட்சம் ஐ ரியல்லி ரிக்ரெட்" என்றோ சொல்லும்போதும் அவர்களுக்குள் இயல்பாக எடுத்துக் கொள்வது போல் ஆண்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் ஆண்களுக்கே தெரியும் அவர்கள் பார்வை தவறானது என்று.  ஆண்களின் பார்வையானது தவறான உள்நோக்கம் கொண்டது, பாலியல் ரீதியிலானது, பாகுபாடானது, கோழைத்தனமானது, திருட்டுத்தனமானது சில நேரங்களில் வக்கிரமானது . சம்பந்தப்பட்ட நபர் இல்லாத போது வேண்டுமானால் இரகசியமாக மூன்றாம் நபரிடம் சொல்வார்கள் "அவனோட ஆளு (அல்லது wife) செம ஃபிகர்டா" என்று.

இது போன்று எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். நீளம் கருதி இதனுடன் நிறுத்திக் கொள்கிறேன். 

                               


ஆக இவைகளிலிருந்து என்ன புரிகிறது. தான் செய்தால் தவறில்லை என்பது அடுத்தவன் செய்தால் எப்படி தவறாகிறது. தனக்கு தெரியாத, வேண்டப்படாத எந்தப் பெண்ணையுமே ஜேம்ஸ்பாண்ட் பார்வையில் பார்ப்பதும், நமது பெண்கள் என்றால் தாலிபானாக மாறுவதும் என்ன நியாயம்? அவர்களுக்கிருப்பதும் அதே உணர்வுகள்தானே? ஏன் சாலையில் செல்லும் பெண்ணைப்பார்க்கும்போது ஏதோ செவ்வாய்கிரகத்திலிருந்து வந்த உயிரியைப் பார்ப்பது போல் பார்வையில் துகிலுரிய வேண்டும்?. இந்த விதி ஆண்களுக்கு மட்டும்தான், தோழியின் தங்கையென்றால் அவள் ஃபிகர். சில சமயம் அவளுடைய அக்காக்களும், அம்மாக்களும் "ஆன்ட்டி சூப்பர்". இதே தோழனின் தங்கையென்றால் அவள் சிஸ்டர். இதுதான் அவர்கள் நியாயம். ஆண்கள் மச்சான், மச்சி என்று தமக்குள் அழைத்துக் கொள்வதில் "உன்னுடைய ஆள்" (மட்டும்) எனக்கு சிஸ்டர் என்ற இரகசிய உடன்படிக்கையும் இருக்கிறது. ஏனைய பெண்கள் அனைவருக்குமான பொதுச்சொத்துக்கள்தான். அவர்களை எப்படி வேண்டுமானாலும் வர்ணித்துக் கொள்ளலாம். இதற்கு அவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. ஊர், உலகமே அப்படித்தான் இருக்கிறது. 

பொதுவாக ஏதாவது ஒரு துன்பமான நிகழ்வு நடந்தால் அதற்கு என்னால் கோப்பபடவும், வேதனைப்படவும் மட்டுமே முடிகிறது. ஆனால் இப்படியெல்லாம் நடக்குமா? என்ற அதிர்ச்சி ஏற்படுவதில்லை  (சமீபத்தில் கோவையில் குழந்தைகள் கடத்திக்கொல்லப்பட்ட நிகழ்வு). காரணம் இந்த உலகத்தின் எதார்த்தமாக எந்தவொரு குற்றங்களும் ஏற்படுவதற்கு ஏற்ற சூழல் இங்கு ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சமூகத்தில் பாலியல் என்பது பொதுவான இயற்கைத் தேவை என்பதற்கு மாறாக, தவறானது, கூச்சப்படவேண்டியது என்ற போலித்தனமான ஒழுக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிய கூச்சத்துடனே வாழ வேண்டியுள்ளது. அதனால்தான் அதற்கு "தப்பு பண்றது" என்ற பெயரோ?. ஆனால் மறுபுறம் நமது பாலியல் உணர்வு எல்லாவகையிலும் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. குழந்தைக்குப் பாலூட்டும் உறுப்பு பாலியல் உணர்வைத் தூண்டுவதற்கான உறுப்பாக மாற்றப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையை செய்வதற்கு முன் ஒருவன்  பலநாட்களாக பல்வேறு வகையில் தூண்டப்படுகிறான். மஞ்சள் இதழ்களைப் படித்தல், நீலப்படங்கள் பார்த்தல் போன்றவைகளைத் தேடி, அதில் மேலும் மேலும் மிகையான சாத்தியமற்ற கற்பனைகளையும், வன்முறைகளை அவனது மனம் உள்வாங்கிக் கொள்கிறது. இதற்கான வடிகால் இல்லாத நிலையில் இது ஒருவகையான வெறுப்பாக மாறி ஏக்கத்தில் உழல வைக்கிறது. ஒரு பலவீனமான இரை மாட்டும்போது இந்த வெறுப்பே ஒருவகையில் பாலியல் வன்முறையாக வெளிப்பட்டுக் கொலையில் முடிகிறது. இதற்கு குற்றவாளி மட்டுமே காரணமல்ல.  இந்த தூண்டுதல்களை ஊடகங்கள் செவ்வனே செய்கின்றன.


                                                                  


சன்தொலைக்காட்சி (உதாரணம் நித்தி விவகாரத்தில்) முதலிடம் பிடிப்பதற்காக எந்தவொரு செயலைச் செய்யவும் தயங்காது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. ஒருமுறை சன் செய்திகளில் தவறான அறுவை சிகிச்சையால் 35 பேருக்கு பார்வை பறிபோனது என்பது ஒரு செய்தி. அதற்கு அடுத்து நடிகை ரம்பா எதற்காகவோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதை ரம்பா காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி என்ற தகவலால் பரபரப்பு என்ற தனக்கே உரிய பாணியில் கிசுகிசு செய்தியைச் சொன்னது. அந்த செய்தியில் நமக்கெல்லாம் ரம்பா எப்படியிருப்பார் எனத் தெரியாதல்லவா? அதனால் "அழகிய லைலா" பாடலில் பாவாடை பறக்கும் காட்சியைக் காட்டியது. 

அடுத்ததாக நாளிதழ்கள், வார இதழ்கள் அனைத்தும் கவர்ச்சிப்படங்கள் இல்லாமல் வருவதேயில்லை. குமுதத்தில் அரசு பதிலகளில் தூக்கத்தைப்பற்றிக் கேள்வி வந்தால் போதும், உடனே நமீதா தூங்கும் படத்தைப் போட்டுவிடுவார்கள். கோவிலைப்பற்றிய வரலாறு ஒரு பக்கத்தில் இருக்கும். அடுத்த பக்கம் மடோன்னாவின் உள்ளாடை ஏலம் போன செய்தியைப் போட்டு உள்ளாடையுடன் நிற்கும் மடோன்னாவை நாம் ரசிக்கலாம். நடிகைகளின் படம் போடாமல் இருக்கமுடியாதா என்றால், நடிகை படம் போடவில்லையென்றால் நீங்கள் வாங்கவே மாட்டீர்கள் என்று வாசகர்கள் மீதே பழி போடுவார்கள். நானும் 15 வருடங்களாகப்பார்க்கிறேன். ஒரு நடிகையின் படம் போடவேண்டுமென்றால் அது கவர்ச்சிப்படத்திற்கே முன்னுரிமை. கவர்ச்சி வேறு, ஆபாசம் வேறு என்று கௌதமியிலிருந்து, ஸ்ருதி வரை ஒரே மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இவர்களின் விளம்பரம் என்றால் இது போன்றுதான் இருக்கும் இரண்டு செய்திகள் எனில் பேருந்து மோதி 10 பேர் பலி, காதலனுடன் கவர்ச்சி நடிகை கும்மாளம் அவ்வளவுதான், செய்தி பரபரப்பாக அல்லது கிளுகிளுப்பாக இருக்க வேண்டும். தினத்தந்தியில் வரும் கற்பழிப்புச் செய்திகளைக் கிளுகிளுப்புக்காகப் படிப்பதை கண்டிருக்கிறீரா? நக்கீரன்தான் இது போன்ற செய்திகளின் மன்னன். பல விடயங்களை அம்பலப்படுத்துகிறது எனினும் அதன் விளம்பரங்கள் கீழ்த்தரமானவை. இளம்பெண்ணை சீரழித்த காமுகன் என்று செய்தியிருக்கும். அதற்கு முந்தானையில்லாமல் நிற்கும் பெண்ணின் படத்தைப் போட்டிருப்பார்கள். நாளிதழ்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அழகிகள் கைது என்று செய்திகளை கிளுகிளுப்பாக வெளியிடுவது, யோக்கியன் என்று காட்ட பொது இடங்களில் காதலர்கள் அத்துமீறல் - ஆபாசக்கூத்து என்று செய்தியை வெளியிட்டு லாவணி பாடுவார்கள். இந்தியா டுடே  ஆண்கள் பெண்ணுடலின் எந்தபாகத்தை அதிகம் ரசிக்கிறார்கள், முகமா, கழுத்தா, இடுப்பா, அல்குலா, காலழகா, பின்னழகா, முன்னழகா என்பது போன்ற சமூகத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புகள், அறிக்கைகளை வெளியிடும். மேலும் கணவன்/மனைவி மற்றவர் அறியாமல் வேறு உறவு வைத்திருப்பவர்கள் எத்தனை விழுக்காடு என்பது பற்றிய நகரங்கள்தோறும் எடுத்த கணக்கெடுப்புகளும் உண்டு.

திரைப்படங்களைப்பற்றிச் சொல்லவே தேவையில்லை 35 வருடங்களாகக் கதாநாயகர்கள் துகிலுரிந்துகொண்டேயிருக்கிறார்கள். 150 கோடிகள் செல்வில் ஆங்கிலப்படத்திற்கிணையாக எடுக்கப்படுகின்ற படத்தில் கூட ஐஸ்வர்யாராயைக் குனிய வைத்துக் கைதட்டல் வாங்கவேண்டிய அவலம். ஈரானியப்படங்கள் தவிர்த்து உலகப்படங்கள் என்றாலே  குளியலும், கூடலும் காட்சிப்படுத்தப்படுவது கட்டாயம். ஒரு நடிகை நடிக்க வந்தால், முக்கால்வாசி உடலைக் காட்ட வேண்டியிருக்கிறது. நம்மவர்கள் கவர்ச்சி உடையில் நாயகியை நடக்கவிட்டு ஒரு ஆணாதிக்கக் குப்பை வசனத்தையும் எச்சரிக்கையாக வைப்பார்கள். "கணவனுக்குக் காட்ட வேண்டிய" உடம்பைக் கண்டவனுக்குக் காட்டுவதைக் கண்டித்து, பொண்ணுன்னா கையெடுத்துக் கும்புடற மாதிரி "இருக்கணும்", கைதட்டிக் கூப்புடற மாதிரி இருக்கக்கூடாது என்று "எப்படியெல்லாம் இருக்கப் வேண்டும்" என்ற அவளது கடமையைச் செய்யச் சொல்லி வசனம் பேசுவார் நாயகன். ஆனால் பாடல் காட்சிகளில் நடிகையின் கணவனே காணமுடியாத கோணங்களிலெல்லாம் நாம் கண்டுகளிக்கலாம். அந்த நடிகை தனது கணவனுக்குக் காட்டவேண்டியவற்றை கேமரா முன் காட்டாவிட்டால் படமே இல்லை. வெள்ளைக்கார அம்மணிகள் பிகினியில் வலம்வந்து நாயகனைச் சுற்றி நின்று தடவும் பாடல்கள் அதிகமாகிவிட்டன. சாராயக்கடைக் குத்தாட்டங்கள், காபரே பாணி நடனங்கள் இல்லாத படங்களே இல்லை. திரைப்படங்களால் சமூக சீர்கேடுகள் வளர்வதில்லை எனபது உண்மையில்லை. திரைப்படத்தைப்பார்த்தவுடன் ஒருவன்  கொலை செய்யக் கிள்ம்பிவிடுவதில்லை. ஆனால் சிலவற்றை எளிதில் பரப்பிவிடும். அது தூண்டுவதில் பங்கு வகிக்கிறது. பெரியம்மா வயதுள்ள  பெண்ணின் பின்னால் முட்டும் "ஆன்ட்டிகளை உரசும்"நாயகத்தனங்களையெல்லாம் ரங்கநாதன் தெருவிலிருந்து எட்டுத்திசையிலுமுள்ள தெருப்பொறுக்கிகளுக்கும் கற்றுக் கொடுத்தது திரைப்படம்தான்.


விளையாட்டுககளை எடுத்துக் கொண்டால் முடிந்தவரை கவர்ச்சியைப்(அல்லது ஆபாசம்) புகுத்திவிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக cheerleaders. கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு பெண்ணாதிக்கம் நிலவும் துறைகளில் பிரபஞ்ச, உலக அழகிப் போட்டிகளுக்கடுத்தது பெண்கள் டென்னிஸ். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம், இரட்டையர் போட்டிகளில் விம்பிள்டன் உட்பட 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்த லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி (11 பட்டங்கள்)  பெறாத இடம் ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் அதுவும் பூபதியுடன் இணைந்து பெற்ற சானியாவுக்கு எப்படிக் கிடைத்தது அவர் கவர்ச்சிப் பொம்மையாகவே வெளிப்படுத்தப்பட்டார். இங்கு அவரை நான் குறை சொல்லவில்லை. ஒரு இந்தியப் பெண் டென்னிஸ் விளையாட்டில் உலக அளவில் முதல் 50 இடங்களுக்குள் வருவது சாதனைதான்.  அழகுப்பதுமையாகவே அந்தக்கண்ணோட்டத்திலதான் அவரைப் பார்ப்பதே எனது கவலை. சில தமிழ்  நாளிதழ்கள் அவரை அழகுப்புயல் என்றெல்லாம் விளிக்கின்றன. முடிதிருத்தகங்களில் ஒட்டப்படும் கவர்ச்சிக்கன்னிகளுடன் அவரது படத்தையும் ஒட்டும் நிலைதான் இருக்கிறது. சச்சினுக்கு முன்பே ஒரு நாள் ஆட்டங்களில் இரட்டை சதம் அடித்தவர் ஒரு பெண். 1997 -ம் வருடத்திலேயே டென்மார்க் அணியுடனான போட்டியில் 229 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தவர் ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவர் பெலிண்டா கிளார்க் என்பது பல கிரிக்கெட் ரசிகர்களுக்கே தெரியாது.  ஆண்கள் கிரிக்கெட்டிற்கு இருக்கும் புகழ் பெண்கள் கிரிக்கெட்டிற்கு இல்லாததற்குக் காரணம் அது விறுவிறுப்புக்குறைவு மட்டுமல்ல, அதில் கவர்ச்சியாகக் காட்ட எதுவுமில்லை என்பதும்தான். 

இப்படியாகக் காணுமிடமெல்லாம் வரைமுறையில்லாமல் காமம் திணிக்கப்படுவதால் அனைவரும்  காமவெறிபிடித்தவர்களாக மாற்றப்பட்டு நல்ல பிள்ளைகளெல்லாம் பெண்கள் விடயத்தில் மட்டும் மன்மதன்களாகிவிடுகின்றனர். இதுதான் காணும் பெண்களையெல்லாம் காமத்துடன் பார்க்க வைக்கிறது. பெண்கள் ஆபாசமாக உடையணிவதால்தான் ஆண்கள் பார்க்கிறார்கள், சும்மா பார்ப்பதில் என்ன தவறு, அழகை ரசிப்பதில் தவறில்லை, ஆண்கள் சைட்டடிப்பதை பெண்கள் உள்ளுக்குள் ரசிப்பார்கள், ஆண்கள் நேரடியாகப் பார்க்கிறார்கள், பெண்கள் யாருக்கும் தெரியாமல் பார்ப்பார்கள், இனக்கவர்ச்சி, கலைக்கண்ணோட்டத்தில் பாத்தா என்ன தப்பு  என்பதெல்லாம் மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமாகவும், உண்மையாகவும் தோன்றும். ஆனால் இதனால் பாதிக்கப்படுவது யார் என்பதே முதன்மையானது. காமம் என்பதே மனம் சார்ந்த்தன்றி உடல்சார்ந்ததன்று . பெண்ணின் உடல்பாகங்களுடன் காமத்தைத் தொடர்புபடுத்துவது தவறானது. எதிலும் புனிதமும் இல்லை ஆபாசமும் இல்லை. ஒவ்வொரு உறுப்புமே இயற்கையின் இயல்பான தேவைக்கானது. பெண்களின் உடல்பாகங்கள் வெளியே தெரிவதால்தான் காமம் தூண்டப்படுகிறதெனில், பாலியல் வன்முறைகள் பெண்களுக்கு நடப்பதை விட அதிகளவில் குழந்தைகளுக்கு (ஆண் குழந்தைகளுக்கும் சேர்த்து) நடக்கிறதே. கொஞ்சினால் கூட வாடிவிடும் குழந்தைகளிடம் காமவெறிப்பேய்களின் உணர்வைத் தூண்டும்படியாக உறுப்புகள் எதுவும் இல்லையே.அவை ஏன் குதறப்படுகின்றன. ஒருவேளை குழந்தைகள் ஆபாசமாக உடையணிவதுதான் காரணமா?.சில வட இந்தியப் பெண்கள் (ராஜஸ்தானிகள் ?) தலையில் முக்காடு போட்டு மறைத்திருப்பார்கள், ஆனால் பாதிவயிற்றையும், இடுப்பையும் வெளித்தெரியுமாறு இருக்கும்.  இது  அவர்கள் கலாச்சார உடை, வேண்டுமென்றே காட்டுகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில ஆதிவாசி இனங்களில்  திறந்த மார்புடன்தான் அனைவரும் இருப்பார்கள், அங்கெல்லாம் பாலியல் வன்முறைத் தொல்லையில்லை நமது நாகரீக உலகில் இருப்பது போல. ஆபாச இணையதளங்களில் இருக்கும் ஒளித்துவைத்துப் படமெடுக்கப்பட்ட தம்பதியினரும் சராசரிப் பெண்களெல்லாம் என்ன பாரிஸ் ஹில்டனைப் போன்று புகழ்விரும்பிகளா? பெண்ணின் நிர்வாணத்தைக் காணத்துடிக்கும் ஆணின் இச்சையால்தானே இதெல்லாம்?கணவனுக்கும், மனைவிக்கும் படுக்கையறையில் கூட சுதந்திரமில்லை. பேசினாலும் அதைச் சுட்டு இணையத்தில் பரப்பி விடுகிறார்கள்.   இதில் மட்டும் அனைவரும் பொதுவுடமைவாதிகளே! தான் பெற்ற இன்பத்தை பெறுக இவ்வையகமென்று தாம் அனுபவித்ததை அரங்கேற்றி விடுகிறார்கள். 

இதை எப்படி முடிப்பதென்று தெரியவில்லை. கற்பழிப்பவனுக்கும் பெண்ணை just சைட்டடிப்பவனுக்கும் ஒரே அளவுகோலை வைக்கவில்லை, அவை இருவர்களுக்கிடையே அளவு (quantity) வேறாகவும், தரம்(quality) ஒன்றாகவும் இருக்கிறது என்கிறேன். ஜொள்ளுவிடுவதும், கடலை போடுவதும், இன்ன பிறவும்  காதலியுடனும், மனைவியுடனுமிருப்பது வரை ஒன்றுமில்லை. மச்சினியைப் பார்ப்பதில்தான் பிரச்சனையே. பார்வைகளும் ஒருவகையில் துன்புறுத்தும் வன்முறையே ! ஆகவே அறமில்லாத தவறான காமக்கண்ணோட்டத்தை விட்டு உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் நண்பர்களே!
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

20 கருத்துகள்:

  1. நல்ல கருத்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல அலசல்..அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  3. துளசி கோபால்

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    சுரேஷ் குமார்
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பயணமும் எண்ணங்களும்
    தொடர்ந்து ஊக்கம் கொடுக்கும் உங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. அருமையாய் அலசியிருக்கிறீர்கள் நண்பரே.. இது போல நீண்ட பதிவு வரும் போது.. அதை சிறிது சிறிதாக பிரித்து.. மூன்று நான்கு பதிவுகளாக பிரசுரித்தால்... இன்னும் நல்லா ரீச் ஆகும்னு நினைக்கறேன்..

    பதிலளிநீக்கு
  5. உங்களின் இந்த பதிவை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_03.html

    நனறி

    பதிலளிநீக்கு
  6. HVL வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ரமேஷ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. நானும் அப்படித்தான் 3 பதிவுகளாக எழுத நினைத்திருந்தேன். ஆனால் தற்போது என்னுடைய தளத்திற்கு மிகச்சிலரே வருவதால் இப்போதைக்கு ஒன்று போதும் என்று முடிந்த வரை சுருக்கி எழுதினேன். வரும் நாள்களில் எழுதலாம் என்றிருக்கிறேன் .

    அருண் பிரசாத் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். வலைச்சரத்தில் என்னைப் பற்றி எழுதியதற்கு உங்களுக்கு மீண்டும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. இன்னும் கொஞம் செம்மை படுத்தலாம் என்று தோன்றுகிறது..உங்கள் கோபத்தை நேரடியான வார்த்தைகளாக, கேள்விகளாக வைக்காமல் அப்பிரச்சனை சமூக கருத்தாக எப்படி மாறுகிறது, அதன் விளைவுகள் என்ற கோணத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
    நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. மிகவும் மகிழ்ச்சி படித்ததற்கும் பின்னூட்டத்திற்கும் நூறு நன்றிகள் கொற்றவை. தொடக்கமும் முடிவும் குறித்தே சிந்திக்காமல் எழுதியது, வரும் காலங்களில் மேம்படுத்த இயலும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி அமுதா கிருஷ்ணா

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா7/10/12 1:14 AM

    Good writing. Thanks.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you very much. பாராட்டும்போது உங்கள் பெயரைச் சொல்லியிருக்கலாம். திட்டும்போது பயன்படுத்தத்தான் அனானிமஸ் வசதி :))

      நீக்கு
  11. || "சாரிடா, உன்னோட தங்கச்சி எனக்கும் தங்கச்சி, எதுவும் மனசில் வச்சுக்காத" என்றான். ||

    பார்க்கின்ற எவரையும் இப்படி நாகரிகமில்லாமல் ஃபிகர் என்று விளித்து விட்டு, மன்னிப்பு கேட்கிறாயே,உனக்கு வெட்கமாக இல்லையா? உனது தங்கை புகைப் படத்தை உனது நண்பன் பார்த்துவிட்டு இதுபோல் ஃபிகர் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் உனது உணர்வு எப்படி இருக்கும்? என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.

    இரண்டாவது, இந்தப் பதிவின் இரண்டாவது பகுதி,-புகைப்படத்திற்கு கீழுள்ளது- வளவளவென்று திசை தெரியாது சுற்றுகிறது. இன்னும் சுருக்கி இருக்க வேண்டும்.

    மூன்றாவது, தமிழர்களின்-அல்லது இந்தியர்களின்-இந்த சீர்கேட்டுக்கு முக்கியக் காரணமும் காரணியும், நமக்கு இருக்கும் திரைப்படம் சார்ந்த மோகம் ! நமது ஆதர்சங்களிலிருந்து, தலைவரிலிருந்து, காதலிக்கும் முறை வரை நமது வாழ்க்கை திரைப்படங்கள் சார்ந்து இருக்கிறது..இந்த நச்சுத் தொடர்பை உடைக்க வேண்டும்.

    அந்த திரைப்படங்களை எடுப்பவர்கள் 97% அற்பத் தனங்களையே படங்களாக எடுத்து வெளியிருகிறார்கள்..
    நாம் நமது வேர்களுக்குத் திரும்பினால் ஒழிய(நமது வரலாறு,வாழ்க்கை, இலக்கியங்கள், நீதிநூல்கள்) சமூகம் சீரழிவதைத் தடுப்பது இயலாத ஒன்று.


    ஆண் என்ற உயிருக்கு, பெண் என்ற உயிர் மேல் இருக்கும் கவர்ச்சி ஆதாரமானது;அனால் இந்தக் கவர்ச்சி வரைமுறையற்று விலங்குகள் நிலைக்கு நம்மை இழுப்பதற்கு இருக்கும் காரணம் மேற் சொன்னவாறு ஒன்றே ஒன்றுதான் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கேயாவது எப்போவாவது சொன்னால் சொல்லலாம். சுற்றியிருப்பவர் அனைவருமே எப்போதுமே சூப்பர் ஃபிகர் அட்டு ஃபிகர் ஆன்ட்டி என்று பேசிக் கொண்டிருப்பவர்க்ள்தான். அதனால் எனக்கு சொல்வ்தற்கு வெறுப்பாகவும் சலிப்பாகவும் இருக்கிறது. டாஸ்மாக்கில் போய் கோக்கின் தீமையைப் பேசுவது போன்றது இவர்களிடம் சொல்வது. அதையும் இன்னொருவனிடம் சொல்லிப் பார்த்து விட்டேன் அவனென்னடாவென்றால் நான் என் அக்காகிட்டயே சொல்வேன். அந்தப் பொண்ணு செம ஃபிகர் இந்தப் பொண்ணு செம ஃபிகர்னு அப்படின்னான். பெண்களே இது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. ஒரு வேளை நாந்தான் தப்பா நினைக்கிறேனோன்னு ஒரு எண்ணம்.

      ஆம் எழுதி 2 வருடமாகப்போகிறது. இன்னும் சரியாக எழுத வரவில்லை. அப்போ இன்னும் மோசமா எழுதிக் கொண்டிருந்தேன். அதனால்தான். ஏதோ நினைச்சதையெல்லாம் புலம்பி விட்டேன்.

      ஆண்கள் குழந்தையாகவே சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். வேறு வழியே இல்லை. இவர்கள் பாலியலை சமூகத்திடமும் ஊடகத்திடம் கற்பதால் வெறும் ஆணாதிக்கம், பாலியல் வக்கிரம் மட்டுமே வளர்கிறது. எல்லா வயது ஆண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

      நீண்ட பின்னூட்டத்திற்கு பெரிய நன்றி அறிவன் ஐயா !!

      நீக்கு
  12. பெயரில்லா17/10/12 4:32 AM

    மிகவும் அருமையான கருத்துக்கள் நண்பரே ..

    பதிலளிநீக்கு
  13. Sema post. Same thoughts are running in my mind also. Nowadays i too get frustrated when my friends are talking like this though I was one of them in past.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷான், நன்றி, ஊருக்கு ஒருவராவது நம்மைப் போல இருக்கிறார்கள் என்பதுதான் மகிழ்ச்சி. ஒருவர் மட்டுமே என்பதுதான் சோகம்

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்