கற்பழிப்பு என்ற சொல்லின் பொருள்தான் என்ன ?

தற்போது  டெல்லி நிகழ்வு பரபரப்பான பேசப்படு பொருளாகியிருப்பதால் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வரை எல்லா இடத்திலும் கற்பழிப்பு என்ற சொல்லைக் காணவும் கேட்கவும் வேண்டியிருக்கிறது. எல்லோரும் சொல்லி  வைத்த மாதிரி கற்பழிப்பு கற்பழிப்பு என்று எழுதித் தள்ளுகிறார்கள். அதன் பொருள்தான் என்ன ? ஒரு சொல்லின் பொருள் தவறு என்று தெரிந்த பின்னும் இன்னும் திரும்பத்திரும்பப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன ? அறியாமையா இல்லை அலட்சியமா ?

ஒரு சொல்லில் மூலம் வரலாற்றையெ மாற்றிச் சொல்லி விட முடியும். பல உதாரணங்கள் இதற்குக் குறிப்பிடலாம்.

ஆரியர் வருகை முகலாயர் படையெடுப்பு - ஆரியரும் படையெடுத்துத்தானே வந்தார்கள் ?

கொலம்பஸ் அமெரிக்காவைக் "கண்டுபிடித்தார்" - அது அங்கேதானே இருந்தது பிறகென்ன கண்டு பிடிப்பது. இந்த கவர்ச்சியான செய்தியில் கொலம்பஸ் என்ற கொலைகாரன் வரலாறு வரை பல செய்திகள் மறைக்கப்படுகின்றன.

அன்னை இந்திரா காந்தி - இவரது உண்மையான பெயர் இந்திரா கான் என்று இருந்திருக்க வேண்டும். இவர் மணந்தது ஒரு பார்சி முஸ்லிமை. இவரது கான் என்ற (முஸ்லிம்) குடும்பப் பெயர் இந்தியாவை ஆள்கின்ற குடும்பத்திற்கு வரக்கூடாது என்பதற்காக காந்தி தனது பெயரை விட்டுக்கொடுத்தார்.

அடுத்து அண்ணல் காந்தியடிகள் மஹாத்மா காந்தியடிகள் என்று பல இடங்களில் பெயர் சொல்லி புகழ்கிறார்கள். காந்தியை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர், ஜாதியை ஒழிக்கப் பாடுபட்டவர் என்றும் பல பிரச்சனைகளுக்கு சர்வரோக நிவாரணியாக எடுத்துக் காட்டுகிறார்கள். மராட்டியத்தைச் சேர்ந்த ஜாதி எதிர்ப்பாளர் ஜோதிராவ் பூலே என்பவரைத்தான் முதன் முதலில் மகாத்மா என்று அழைத்தனர். அதே போல் அம்பேத்கர் அண்ணல் என்று அழைக்கிறோம். இவர்களது பட்டப்பெயரை காந்திக்குத் தாரை வார்த்து விட்டதால் மேற்கண்டவர் யாரேன்றே எவருக்கும் தெரியாது. அதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளுக்குப் போராடிய பல போராளிகளை இருட்டடிப்பு செய்கின்றனர்.

ஜப்பானில் அணு குண்டு வீசியதை மறக்கடிக்க கொண்டாடப்படும் உலக நட்பு நாள்.

இப்படிப் பலவாறு சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது கற்பழிப்புக்கு வருவோம்.

                                                         

இதைத் தெரிந்துதான் பயன்படுத்துகிறீர்களா இல்லை அறியாமலா ? நான் சொல்வது பாலியல் வன்முறை, வன்புணர்ச்சி, வன்கலவி, வல்லாங்கு என்று பல சொற்கள் இருக்கின்றன. இருப்பினும் தொடர்ந்து கற்பழிப்பு என்றே எல்லாரும் சொல்கின்றனர்.

ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று எழுதுவது தேவையில்லாததும், தவறானதும் ஆகும். ஆனால் ஆர்வத்தினால் அப்படி எழுதுகின்றனர். இதை மட்டும் ஏன் இப்படி ? இன்னொன்று பெண்களை ஃபிகர் என்றுதான் எழுதுவேன் என்று அடம் பிடிக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் போய் கற்பழிப்பு என்று சொல்ல வேண்டாமே என்று சொல்ல சலிப்பாக இருக்கிறது.

இந்த கற்பு என்பதே பெண்களை அடக்கி வைத்து ஆண்கள் ஊர்மேய்வதற்கு உருவான ஒரு கருத்து. இதை இன்னும் பயன்படுத்துவதன் உள்நோக்கம் என்ன ? ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் போது அவளை ஒரு விபத்தைச் சந்தித்தவளாகவே நடத்த வேண்டும் அல்லாது களங்கப்பட்டவள் என்ற குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடாது. ஒரு வெறிநாய் கடித்து விட்டால் ஏற்படும் பரிதாப உணர்ச்சி மட்டுமே ஏற்பட வேண்டும். அய்யய்யோ வாழ்க்கையே போச்சே என்ற நிலையை ஏற்படுத்துகிறார்கள்.

முதலில் கற்பு என்றால் என்ன ? அதை எப்படி அழிக்க முடியும். கன்னித்தன்மை பறிபோனதைச் சொல்கிறார்களா ? கன்னித்தன்மை போனால் அது எப்படி கற்பழிப்பாகக் கருத முடியும். சரி பருவமடையாத குழந்தைகள் கூட வன்முறைக்கு ஆளாகிறார்கள் அதை எப்படி கற்பழிப்பு என்று சொல்கிறார்கள். கற்பு என்பது மனம் தொடர்பானது என்று கதை சொல்வார்கள். குழந்தைகளுக்கு பாலியல் குறித்தும் அதன் ஒழுக்கும் நேர்மை கலாச்சாரம், கற்பு இதெல்லாம் என்னவென்றே தெரியாது. பிறகெப்பப்படி பாலியல் வன்முறையின் போது அவர்களின் கற்பு அழியும்.

கற்பு, ஒழுக்கம், நடத்தை, கள்ளக்காதல் எனப் பல சொற்களும் பெண்களைக் குறிவைத்தே எழுதப்படுகின்றன. இந்த டெல்லி நிகழ்வு பெரிய பரபரப்பானதால், பலரும் உச் கொட்டினார்கள். இதில் நாளும் பார்வைகளாலும், பேச்சுக்களாலும் பெண்களை வன்முறை செய்து வரும் பலரும் இதைப் பற்றி பேசினார்கள் கோபப்பட்டார்கள்.

என்னுடைய நட்பு வட்டாரத்தில் ஒரு உள்ளம் இனிமே அந்தப் பொண்ணு வாழ்றதே வேஸ்ட்(மானம் போயிடுச்சாம் எல்லாருக்கும் தெரிஞ்சிரிச்சாம்) என்று திருவாய் மலர்ந்தது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பாதிப்பேராவது இப்படித்தான் நினைத்திருப்பார்கள். இப்படிச் சொல்ல வைப்பது என்ன வகையான மனப்பான்மை. கற்பழிப்பு என்ற கருத்துப் பொதிந்த சொல்லை பயன்படுத்துவதும் ஒரு காரணமில்லையா ?

ஆணுக்கும் கற்பு உண்டு என்று காளை மாட்டில் பால் கறக்கச் சொல்கிறார்கள். குப்புசாமி கற்பழிக்கப்பட்டார் என்று செய்தியைத் தலைப்பாகப் போட்டால் எல்லாரும் சிரிப்பானுகளா இல்லையா ? பிறகெதற்கு இந்த நோக்காடு ?

மாற்றுத்திறனாளர்களை ஊனமுற்றவர் என்றும், திருநங்கைகளை அலி என்றும் எழுதுங்களேன் பார்ப்போம், அதை மட்டும் பக்குவமாக மாற்றிக் கொண்டு எழுதும்போது இதை எழுதுவதற்கு மட்டும் ஏன் வலிக்கிறது.

ஏதோ ஒரு இடத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் பட்டியல் பார்த்தென் அதில் பெண்களுக்கான பெயர்களில் கற்பு என்று இருந்தது.

கற்பழிப்பு என்று எழுதுவதை நிறுத்துவது அவ்வளவு கடினமா என்ன ? நிறுத்துங்களேன். எத்தனை முறைதான் மெனக்கெட்டுச் சொல்வது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஆகையினால் பெண்ணுடலை சிதைக்கிறோம்


உன்னை வன்புணர்ந்தது என் குற்றமல்ல
நீ இரவில் சுற்றுவது எனக்கு உறுத்துகிறது
நீ உடலைக் காட்டுவது எனக்கு விறைக்கிறது

உன்னை இடிப்பதென்னுரிமை
இரவு விடுதிக்குச் செல்வது உனதுரிமை என்றால்
உன்னை உரசுவது எனதுரிமை
ஊர்சுற்றுவது உனதுரிமை என்றால்


உன்னை வன்புணர்ந்தது என் குற்றமல்ல
நீ எதிர்த்துப் பேசியதால் எனக்குக் கோபம் வந்தது
உன்மேல் அமிலம் ஊற்றியது என் குற்றமல்ல
நீ காதலை மறுத்ததால் எனக்கு எனக்கு வெறி வந்தது
மகளாய் இருந்தாலும் உன்னை வெட்டுவது என் குற்றமல்ல
நீ மாற்றானை காதலித்ததால் என் மானம் போனது

நீ ஏமாந்ததற்கு நான் பொறுப்பல்ல
இசைந்ததால் உன்னை மென்புணர்ந்தேன்
மறுத்தால் வன்புணர்வேன்

என் கண்கள் உன்னை மேய்வதற்கு நான் காரணமல்ல
நீ தெருவில் நடப்பதே காரணம்
நீ வயதுக்கு வராத சிறுமியாய் இருப்பது என் குற்றமல்ல
மதுவில் மயங்கியிருந்த என்னிடம் சிக்கியதே உன் குற்றம்

நாங்கள் இச்சை தீர்க்க உங்களைப் புணரவும்
மானம் காக்க உங்களைக் கொல்லவும்
வரம் பெற்றவர்கள்

எங்கள் கொண்டாட்டத்தை காஸநோவா 
என்று சிறுமைப்படுத்திக் கொண்டோம்
உங்கள் திண்டாட்டத்தையோ தேவடியா
என்று பெருமைப்படுத்தினோம்

நீங்கள் பாதுகாப்பாய் இருக்க கற்பை உங்களுக்காக
விட்டுக் கொடுத்திருக்கிறோம் நாங்கள்
கால்களுக்கிடையில் வைத்து காத்துக் கொள்ளுங்கள்
என்றாவதொருநாள் என்னினத்தைச் சார்ந்த ஒருவன்
உங்கள் உயிரை எடுத்தாவது அதை அழிக்கும் வரையில்

யான் கற்றதன் சாரம் இதுவே
எங்களால் மாற்றவியலாததாகும்
ஆம் இயற்கையாக
நீங்கள் பெண்கள் நாங்கள் ஆண்கள் 

ஆகையினால் வன்கலவி செய்கிறோம்
எம்மைப் பிறப்பித்த உம் உறுப்பை சிதைப்பதில்
உம்மீதான எம் உரிமையை
நாங்கள் உயிர்ப்பிக்கிறோம்


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கருத்து சுதந்திரமும் கார்த்தி சிதம்பரமும்


கொள்கைக்கும் செயலுக்கும்தான் எத்தனை தொலைவு. ரவி ஸ்ரீனிவாசன் என்ற் ட்விட்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் செய்த குற்றம் ஒரு செய்தியை பகிர்ந்தது மட்டுமே. இது என்ன சைனாவா இல்லை இந்தியாவா என்ற ஐயமே வந்து விட்டது. இந்த செய்திக்குத்தான் வலைப்பூவினரும், கீச்சருமாகிய நாம் பதறியிருக்க வேண்டும். அவர் வெறும் 16 பேரை மட்டுமே பின்தொடர்பாளர்களாக வைத்திருந்தாராம். இப்போது 2000 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.  

ரவி ஸ்ரீனிவாசன்

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் - என்ற வால்டேரின் மேற்கோளை முகப்பில் வைத்து

சமூகம் ஒரு மேம்படுத்துதளை நோக்கி பயணிக்க யத்தனிக்கும்போது முதலில் கருத்தளவிலான ஜனநாயகத்திற்குமான கதவுகளைத் திறந்து வைத்து இருக்க வேன்டும். அதற்கான சூழலை உருவாக்கி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை - என்ற கடமையை அனைவருக்கும் வலியுறுத்தி

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 -(1)(ஏ) எல்லோருக்கும் கருத்து மற்றும் வெளிப்பாட்டிற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலும் எல்லா ஜனநாயக நாடுகளின் அரசியல் சட்டங்களும் இதை வலியுறுத்துகின்றன. என்ற சட்டத்தினை எடுத்துக் காட்டி ஆரம்பிக்கப்பட்ட கருத்து.காம் என்ற இணையதளத்தில் உள்ள வாசகங்கள்.

இந்த இணையதளத்தை கி.பி 2005 ஆம் ஆண்டில் இறுதியில் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழி, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் இணைந்து உருவாக்கினர். எதற்காக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு அஞ்சும் சூழல் உருவாகியிருக்கிறது. அதைப் போக்க ஒரு அமைப்பு தேவை. அனைவரும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாகவும்,வெளிப்படையாகவும் வெளியிடும் வகையில் ஒரு அமைப்பைத் தொடங்கினால் என்ன என்று இருவரும் சேர்ந்துபேசியதன் விளைவாக உருவானதே, கருத்து என்ற புதிய அமைப்பு.

அமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்னர் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. 2005 இல் நடிகை குஷ்பு திருமணத்திற்கு முன்னர் உடலுறவு தவறில்லை எனவும், ஆண்கள் மனைவியாக வரும் பெண் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்கிற பாணியில் ஒரு கருத்து வெளியிட்டார். இது இந்தியாடுடே வார இதழுக்காக எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விபரத்திற்காக எடுக்கப்பட்டது. இது போன்ற புள்ளி விபரங்கள் இந்தியாடுடே வார இதழில் அடிக்கடி, மேல்தட்டு மக்களின் பாலியல் நுகர்வுப் பண்பாட்டை ஆதரித்து ஊக்குவிக்க எழுதப்படுபவை.

குஷ்பு வெளியிட்ட இந்தக் கருத்தை, தினமலரின் தரத்தை விஞ்சும், செய்திகளை 150% சரியாகவும் நேர்மையாகவும் வெளியிடும் நாளிதழான சன் குழுமத்தின் தினகரன் தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கற்பில்லையா என்று குஷ்பு சொன்னதால் பரபரப்பு என்று நீட்டி முழக்கி விட்டது. ராமதாஸும் தொல்.திருமாவளவனும் அப்போதுதான் முதல் முதலாக கூட்டணி சேர்ந்திருந்தனர். அப்போது ரஜினி திரைப்படங்களில் சிகரெட் குடிப்பது, திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது(மும்பை எக்ஸ்பிரஸ்) என திரையுலகை எதிர்க்கும் விளம்பரப் போராட்டங்களை நடத்தி வந்தனர். காற்று வாங்கிக் கொண்டிருந்த அவர்களின் அரசியல் களத்திற்கு குஷ்புவின் இக்கருத்து வராது வந்த மாமணியாய் வந்து விழ குஷ்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தமிழ் அரசியல், தமிழ்ப்பெண்களின் கற்பு என்ற உணர்ச்சிகர நிலையில் நடத்தினர். குஷ்புவுக்கு வந்த எதிர்ப்பைப் பார்த்து நடிகை சுஹாசின் தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்று வாய் விட்டு விட்டார். இதன் பின்பு குஷ்புக்கு எதிராக நடந்த போராட்டங்களை விட சுஹாசினிக்கு எதிராக அதிகமான போராட்டங்கள் செருப்பு, துடைப்பக்கட்டை, கழுதை ஊர்வலங்கள் நடந்தன. விலங்கு நல வாரியங்கள் அதைக் கண்டித்தனர். குஷ்புவின் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. பின்பு அதே குஷ்பு, ராமதாஸும் திருமாவளவனும் கூட்டணி வைத்திருந்த திமுகவில் சேர்ந்தது முத்தாய்ப்பான நிகழ்வு.

இந்த நிலையில்தான் கருத்து சுதந்திரம் பற்றிய விவாதங்கள் நடந்தன. இதன் பின்புதான் கனிமொழியும் கார்த்தியும் இணைந்து கருத்து என்ற அமைப்பைத் தொடங்கினர்.

இதைத் தொடங்கியவ நடுவண் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பற்றி ஒரு மிகச் சாதாரணமான கருத்து ஒன்றைப் பகிர்ந்த குற்றத்திற்காக ஒரு ட்விட்டர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் அன்னா ஹஸாரே இயக்க ஆதரவாளர் போல் தெரிகிறது. அன்னா ஹஸாரே, அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து பெரிய அளவில் எனக்கு நம்பிக்கை இல்லையெனிலும் இக்கைது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். கூடவே கருத்துரிமைக்கும்.

அதிகாலையில் 5: 30 மணியளவில் வீடு வரை சென்று ஸ்ரீனிவாசனைக் கைது செய்ய வேண்டிய அளவுக்கு அவர் என்ன ட்விட்டரில் சொல்லி விட்டார் என்றால் இதுதான்.

"got reports that karthick chidambaram has amassed more wealth than vadra"

கார்த்தி அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பியதும் கைது செய்திருக்கிறது.

சொல்லுக்கும் செயலுக்கும் எத்தனை தூரம் ? அலட்சியத்தால் சாவு நிகழ்ந்தால் இருவருட தண்டனை அதே நேரம் ட்விட்டர், மின்னஞ்சல் ஆகியவற்றுக்கு 3 வருட தண்டனை ? இந்தச் சட்டம் யாருக்காக வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறதா ? (நன்றி: தி ஹிந்து செய்திகள்)

இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*
இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*
முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 

இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சின்மயி - ராஜன் வழக்கு ஆதரவு எதிர்ப்பு மற்றும் சில குழப்பங்கள்


சென்ற பதிவின் நீட்சியாகவே இதை எழுதுகிறேன். முந்தைய நிலையில் எந்த மாற்றமுமில்லை. ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் எந்த நிபந்தனையும், ஐயமுமில்லை. இன்னும் வினவு கட்டுரை ஏன் வெளியிடவில்லை என்பது தெரியவில்லை. ராஜன் அதிகப்படியான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நிரூபிக்கப் படாத குற்றத்திற்காக. அதனால் அவர் விடுதலையாக வேண்டுமென்பது குறித்து எந்தத் தயக்கமுமில்லாமல் நாம் கோர முடியும். குழலி, விமாலாதித்த மாமல்லன், சவுக்கு ஆகியோரின் கட்டுரைகள் நேர்மையாகத் தெரிகிறது நான் படித்தவைகளில். 


இதில் பல தவறான கருத்துக்கள், தகவல்கள் இடம்பெறவும் வாய்ப்புண்டு, அதற்கு என் அறியாமைதான் காரணம் விருப்பு வெறுப்பு எதுவுமிருக்காது. 


மற்றபடி ஃபேஸ்புக் விவாதத்தில் லீனா மணிமேகலை, ஷோபா சக்தி, ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோர் சின்மயிக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியதிலிருந்து இது இன்னும் வேறு வழியில் போய் அவர்கள் அணி எதிரணியும் கருத்து மோதலில் இறங்கியுள்ளன. லீனா மணிமேகலை-ஷோபா சக்தி கூட்டணி அவர்கள் எதிர்ப்பவர்கள் அரசியல் கருத்து வேறுபாடுகள் குறித்து என் சிற்றறிவுக்கு எட்ட வில்லை. ஜெயமோகன் பற்றியும் எனக்குத் தெரியவில்லை. அவர் இந்துத்துவாவை தத்துவ ஞானம் என்று எழுதுகிறார். அதற்கு பதிவர்கள் சிலர் கடுமையான எதிர் வினையை வைப்பார்கள் என்பது மட்டுமே எனது புரிதல். சின்மயி பார்ப்பனப் பெண் என்பதால் அவர் ஆதரவு தெரிவித்திருக்கலாம். நியாயமாக எழுதிய சில கருத்துக்களோடும் தொடர்பில்லாமல் 15 இலட்ச ரூபாய் கைதானவர்களைக் காக்க வசூலித்திருக்கிறார் என்று அவதூறு செய்திருக்கிறார். அடுத்து சாருநிவேதிதா ஏன் இக்கைதை ஆதரித்தார் என்றால், ராஜன் எப்போது
ம் அவரது பதிவை எடுத்து வரிக்கு வரி கீழ்த்தரமாக நக்கலடித்து வெளியிடுவார் எப்போது அந்தக் கடுப்பில் எதிர்வினையை வைத்திருக்கிறார். இதை சின்மயி ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். தமிழச்சி எழுதிய சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை என்ற கட்டுரை சின்மயி அறிந்திருக்க வில்லை போல.

சின்மயி பல பொய்களைச் சொல்லியிருக்கிறார். அவர் பூர்விகம் உட்பட. அவர் மொத்தம் மூன்று வகையான வழக்குகளைப்போட்டிருக்கிறார். மந்திர மூர்த்தி என்பவர் திருமணம் செய்ய மறுத்ததால் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்டது, ட்விட்டரில் ஆபாசமாகப் பேசிய ஆறு பேர்கள் மீது, வேறொரு தயாரிப்பாளர் பணம் கொடுக்காதது குறித்து என. இதில் ட்விட்டரில் ஆபாசமாகப் பேசிய இரண்டு பேரை மட்டும் கைது செய்திருக்கிறார்கள்.

இது இப்போதைய நிலவரம். ராஜன் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். தமிழ் வளம் மிக்க கவிதைகள் பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாமியார்கள் எதிர்ப்பு, அன்னா ஹஸாரே போராட்டத்தில் பங்கெடுத்தது, மேலும் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனையாக இருந்த மீனவர் படுகொலை எதிர்ப்பு, மே 18 போராட்டம் இது குறித்தெல்லாம் எழுதியுள்ளார். இது அனைத்து பொதுநலம் சார்ந்து எழுதப்பட்டது. மற்றபடி திரைப்பட விமர்சனம், கிண்டல் பதிவுகள், சாருநிவேதிதாவைத் தழுவி எழுதப்பட்ட நக்கல்கள். அவ்வளவே அவர் பின்னூட்டங்களில் நக்கல் இருக்கும், சில அபத்தமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். குறிப்பாக இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் கீழ்த்தரமானவை. விமர்சனம் செய்யலாம் இந்த மொழி வெறுப்பை வளர்க்கும். சிபி செந்தில் குமார் மனைவியிடம் பேட்டி எடுப்பது போல ஒரு பதிவு ஒரு சிலருக்கு அது ஆபாசமாகத் தெரியும். ஆனால் அது அவரது மனைவியைக் கிண்டல் செய்வது போல எழுதப்பட்டதல்ல அவர் மனைவி சிபி செந்தில் குமாரை திட்டும் பாணியில் எழுதப்பட்ட நக்கல். ஆனாலும் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். நண்டு நொரண்டு, ருத்ரன் போன்றவர்களின் தளத்தில் மரியாதையாகவும், பின்னூட்டமிட்டிருக்கிறார். பல பேரை மரியாதையின்றி நக்கலடித்திருக்கிறார். உதாரணமாக ஏதோ ஒரு பார்ப்பன எதிர்ப்பு பின்னூட்டத்திற்கு பெரியார் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்பதை இப்படிச் சொன்னார். பெருசு சரியாத்தாஞ் சொல்லிருக்கு. என்று. இப்படி. சுருக்கமாக மிகுந்த பண்புடனும், மொழியாளுமையுடனும் பேசுவார், எடுத்தெறிந்தும் பேசுவார் கோயம்புத்தூர் குறும்பு எனும் பொருள்பட.

முக்கியமாக பதிவுலகில் அதிகமாக விவாதிக்கப்பட்ட, சந்தனமுல்லை விவகாரத்திலும், சாருநிவேதிதா விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பதிவெழுதியவர் ராஜன். அதனால் அவரை செக்ஸிஸ்ட் என்றோ ஆணாதிக்க வாதி என்றோ சொல்ல முடியாது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களை வரம்பு மீறி வசவியதன் மூலமாக ராஜனின் மேற்கண்ட இயல்புகளை ஏற்றுக் கொள்ள, அந்த ட்வீட்களைப் பார்ப்பவர்கள் நம்ப மாட்டார்கள்.

இதனால் ராஜன் சின்மயி என்ற ஒரு பெண் மீது பாலியல் ரீதியில் பேசியிருக்க மாட்டார் என்று 99% நம்பலாம். அந்த 1 % ஜெயலலிதா உட்பட மற்ற பெண்கள் மீதான கருத்துக்களுக்காக. சின்மயி மீது ராஜனின் பாலியல் வசை தொடர்பான ட்வீட் ஒன்றும் இதுவரை இல்லை. இருக்கவும் முடியாது.

மேலும் பெண்கள் மீது சென்டிமென்ட் அதிகமென்பதால், ரேவதி, ஆதிரை (ராஜனின் மனைவி, குழந்தை) என்ற இரு பெண்களுக்காக ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பது சின்மயி என்ற பெண்மணியின் மனசாட்சிக்கு விட்டு விடுவோம்.

மேலும் குழந்தையைக் குதறிக் கொன்ற கொலைகாரன் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதையே எதிர்த்த நாம் இந்த அபத்தமான குற்றச்சாட்டிற்காக தனிப்பட்ட உத்தரவின் பேரில் சென்று கடமையைச் செய்ததைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

சின்மயி தரப்புப் பொய்கள்:

சின்மயி சொல்வது போலி ஐடிகள் மூலம் இழிவு செய்கிறார்கள் அதை எனக்கு டாக் செய்து ராஜனுடைய ட்விட்டருக்கும் அனுப்பி வைத்தார்கள் என்று கூறுகிறார். இதை ராஜன் என்று எப்படி முடிவு செய்தார் இதைத்தான் ராஜனும் தனது பதிவில் கேட்டிருந்தார். அவர்கள் செய்த அவதூறுக்காக ராஜனை ஏன் குறிக்க வேண்டும் என்பது புரியவில்லை.

இதற்கு சின்மயி பதிலெதிவும் சொன்னதாகத் தெரியவில்லை.

ராஜனின் பணி பறிபோகுமளவிற்கு அவர் என்னவகை மன ரீதியான உளைச்சலுக்கு சின்மயியை உண்டாக்கினார் என்பது கேள்விக்குறி.

அதிகாரம் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அரை நாளில் கைது செய்யப்பட்டது குறித்து சொல்லத் தேவையில்லை. செய்யாத குற்றத்துக்கு பணி பறிப்பு, மன உளைச்சல் உட்பட சமூகத்தில் அவர் எதிர்காலம் உட்பட சின்மயி உலை வைத்திருக்கிறார். என்ன ஒரு கொடிய மனப்பான்மை.

ராஜனது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிடில் வரதட்சணை வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்குக்களைப் பயன்படுத்தி அப்பாவி ஆண்களைப் பழிவாங்கும் பெண்களில் ஒருவராகப் போகிறார் சின்மயி.

முதலில் நடந்த ட்விட்டர் உரையாடலில் சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்ன சின்மயிக்கு மீனா கந்தசாமி, தியாகு, ஏழர ஆகியோர் எடுத்துச் சொல்கின்றனர். மீனா தாழ்ந்தவர்களல்ல தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொடுக்கிறார். ஏழர அமெரிக்காவிலும், ஸ்ரீலங்காவிலும் போய் சோகால்ட் ரேஸிசம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார். இதன் மூலம் சின்மயி  புரிந்து கொண்டிருக்க முடியும்.

ஆனாலும் தொடர்ந்து இட ஒதுக்கீடு எதிர்ப்பு டிவீட்டுகிறார். இது உணர்ச்சி வசப்பட்டதாக வைத்துக் கொள்வோம். ராஜ்மௌலியின் தாழ்த்தப்பட்ட ஜாதித் தலைவர்கள் குறித்து டிவீட்டுகிறார்.. இதற்காக எதிர்ப்பு வருகிறது என்று முன்பே அறிந்திருந்தும் தொடர்ந்து இட ஒதுக்கீடு எதிர்ப்புக்காக பல டிவீட்டுகளை பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்ப்பன வெறியாகவே கருத முடியும் சின்மயி.

பல ட்வீட்களை சின்மயி அழித்து விட்டதாகக் கூறுகிறார்கள். அதையெல்லாம் சைபர் கிரைம் காரர்கள் நேர்மையுடன் தேடி எடுத்து விசாரித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதில்தான் சின்மயியின் நேர்மையை நம்மால் அறவிட முடியும்.

மேலும் வேறொரு பத்திரிக்கையாளர் ராம் இவர் மீது வழக்குத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார்.

ஜனவரியிலிருந்து தமிழில் தன்னைத் தாக்கி தமிழில் பல ட்வீட்கள் வந்ததாகச் சொல்லும் சின்மயி ஏன் வந்தது என்று சொல்ல வில்லை. ஒரு வேளை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களால் வந்திருக்கலாம்

ஹையங்கார் என்பது நீங்கள் நகைச்சுவைக்குப் போட்டதாக உங்கள் மற்ற டிவீட்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏற்க முடியவில்லை.

மேலே நான் எனக்குத் தெரிந்த வரையிலெல்லாம் ராஜன் மீதான் நியாயத்தைச் சொல்லிவிட்டேன். உடனடியாக ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில், அவர் பணியும் திரும்ப வழங்கப்பட வேண்டுமென்பதில் (வேலையில்லாமையின் சுமையை நன்கு அறிந்தவன் நான்) எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை.

ராஜன் தரப்புப் பொய்கள்:

தன்மீது வந்த அவதூறு ட்விட்டர்களை ப்ளாக் செய்திருக்கிறார். வெவேறு ஐடிக்களில் வந்து தொல்லை கொடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

சின்மயி #TNFisherman இல் சேராததற்குக் காரணத்தை சொல்லியிருக்கிறார். அதில் அவரால் ப்ளாக் செய்யப்பட்டவர்கள் இருப்பது மட்டுமல்லாமல், பல தலைவர்கள் கேவலமான முறையில்  விமர்சிக்கப்பட்டிருந்ததால் அதில் தன் பெயரும் இணைக்க விருப்பமில்லை எனவும் தனிப்பட்ட முறையில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார். இதற்கு தமிழர்களுக்கு எதிரானவள் சின்மயி என்று தன்னை இழிவு செய்தார்கள் என்கிறார். சின்மயி.

#அசிங்கப்பட்டாள்சின்மயி

வந்த காரணம்: சின்மயி ராஜன் மீது வன்மம் கொண்டதற்காக ராஜனும் மற்றவர்களும் சொல்லும் ஒரு காரணம் மஹேஸ்மூர்த்தி என்ற ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் நிருபர் பிரபலங்கள் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் மக்களைக் கவர்ந்த பொழுதுபோக்காளர்கள் என்ற பட்டியலில் நான்காவாதாக சின்மயியும், ஐந்தாவதாக ராஜன் லீக்ஸ் - ஐயும் குறிப்பிட்டிருந்தார். இதனால் சின்மயி ராஜனின் பெயரை நீக்கச் சொல்லி மகேஸிடம் சண்டை போட்டார் என்கிறார்கள். இது முழுவதும் உண்மையல்ல.

சின்மயி அவருடன் சண்டையிடக் காரணம் வேறு. அதில் ஷ்ரேயா கோஷல், சின்மயி ஆகியோரை (ப்ளாக், ட்விட்டர் முகவரிகளை) ப்ளாக்கர்கள், ட்விட்டர்கள் வகையில் வரிசைப்படுத்தியிருந்தார் மகேஸ்மூர்த்தி. ஷ்ரேயா கோஷல் தனது பெயரில் இருந்த இணையத்தளம் தன்னுடைய சொந்தத்தளமல்ல தனது ரசிகர்களால் நடத்தப்படுகிறது என்று மகேஸ் மூர்த்திக்கு மென்கடிதம் எழுதினார். பின்பு ஷ்ரேயாவின் ப்ளாக்கை அந்தக்கட்டுரையிலிருந்து மகேஸ் நீக்கிவிட்டார். சின்மயிக்குக் கொடுத்திருந்த வரையரறையில் சின்மயி பாடகர் எனற முறையில் பிரபலமானவர் என்பதை விட ட்விட்டரில் எழுதி பிரபலமானவர் என்று எழுதியிருந்தார். இதைத்தான் சின்மயி எதிர்த்தார். அதே போல் ராஜனை விட 10 மடங்கு அதிகம் வாசிக்கப்படும் மதன் கார்க்கி, வைரமுத்து ஆகியோரின் தளத்தை ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டிருக்கிறார். மகேஸ் அது என்னுடைய சொந்தக் கட்டுரை அதனால் நீக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். (ராஜனை நீக்கும்படி தன்னிடம் கேட்டதாகவும், பல ட்வீட்களை சின்மயி அழித்து விட்டதாகவும் மகேஸ் சொல்கிறா. சின்மயி அழிக்க வில்லை என்கிறார்.) அந்தக் கட்டுரையின் கருத்துரைகளைப்படித்தால் தெரியும் அது ஒரு தவறாக எழுதப்பட்ட கட்டுரை, ராஜனே சொல்லியிருக்கிறார் 7 படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதியிருக்கும் தன்னை எப்படி சேர்த்தார் என்று தெரியவில்லை என.

தன்னைப் பற்றி பாடகராக இல்லாமல் ப்ளாக்கில் பிரபலமானவர் என்பதை சின்மயி ஏன் எதிர்க்கக் கூடாது ? இதில் சின்மயியின் வன்மம், பிரபலம் என்ற திமிர் இருக்கிறதா ? இதில் சின்மயியின் பேச்சைக் கேட்டு அதை நீக்காததால் #அசிங்கப்பட்டாள்சின்மயி என்று அவரைக் கிண்டலடித்திருக்கிறார்கள் இங்கே ராஜன் சின்மயி தன் மீது வெறுப்புடன் இருப்பதால்தான் அதை எதிர்த்ததாகத் தவறாகப்புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு அசிங்கப்பட்டாள்சின்மயி# என்று டாக் தொடங்கி கிண்டலடித்திருக்க வேண்டும். அந்த டாக் உடன் ராஜனுட மற்றவர்களின் சின்மயி மீது தொடுத்த ஆபாச ட்வீட்களுக்கும் சேர்த்து ராஜன் மீது சின்மயிக்கு ஐயம் வந்திருக்க வேண்டும். இது என் கணிப்பு. ராஜன் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் இது பெண் மீதான தாக்குதல்தான்.

இன்னொன்று சின்மயி மீனவர்கள் மீனைக் கொல்வதால், சிங்கள ராணுவம் மீனவர்களைக் கொல்லலாம் என்று சொன்னார் என்பது மிகப்பெரிய பொய். வேறொரு சந்தர்ப்பத்தில் சின்மயி மீன்களைக் கொல்றது மட்டும் பாவமில்லையா என்று கேட்டதை என்று கேட்டதை ராஜன் சும்மா கிண்டலுக்கு டிவிட்டியதே அந்த டிவிட். அது உண்மையல்ல. ஆனால் அதை ஃபோட்டோ ஷாப் செய்து உண்மை என்று பரப்பி விட்டார்கள். அதை இங்கே விமலாதித்த மாமல்லன் பதிவில் காணலாம். என்ன வக்கிரமான எண்ணம் இது ? இதை இன்னும் பலர் நம்புகின்றனர். பரப்புகின்றனர்.

கார்ட்டூனிஸ்ட் பாலா அது உண்மையா இல்லையா என்று கேட்காமலேயே தமிழர்கள் முகத்தில் காறித்துப்பிய சின்மயியை கண்டிக்கிறேன் என்று போட்டு விட்டார். இப்படி சின்மயி தமிழர்களுக்கு எதிரானவர் என்று கருத்து பரப்பப்பட்டது.

இன்னொன்று அதை உண்மையா என்பதை தமிழ் மான் என்பவர் கேட்க, (இல்லை என்பதை ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதில் சொல்லணுமா என்ற பொருள்பட) உங்களுக்கு தனியா டாக் பண்ணி சொல்லணுமா என்று கேட்டிருக்கிறார். தன் மீது தவறான கருத்து பரப்பப்படுகிறது என்று ஒரு  சின்மயி போட்டிருந்த போஸ்ட்டின் கீழே இதை அவர் கேட்டார். இல்லை என்பதைத்தான் சின்மயி அப்படிச் சொல்லியிருக்கிறார். அவர் பல இடங்களில் இதைக் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தவறாகப்புரிந்து கொண்டு சின்மயி ஆமாம் என்று சொன்னாதாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பல பேருக்கு டாக் பண்ணி விட்டார் அவர். அவர் புகாரளித்ததே தான் மீனவர்கள், தமிழர்கள், ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சிலர் சித்தரிக்கிறார்கள் என்றுதான். அதைத்தானே இன்னும் செய்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து இவர் சொன்னது உண்மை, ஆனால் மீனவர்கள் குறித்து சொல்லப்பட்டது முழுப்பொய். ஒரு கொலை செய்தவன் மீது 3 கொலை செய்ததாகச் சொல்வது போல இது. ராஜன் மீது சொல்லப்பட்ட அவதூறு போன்றதே இதுவும். இருப்பினும் இருவரும் சமமல்ல என்பதும் சரிதான்.  எப்படி ராஜனின் சில ட்வீட்களை மட்டும் வைத்து அவரது இயல்பைத் தீர்மானிக்க முடியாதோ அது போலத்தான் சின்மயிக்கும். இணைய ஊடகங்களும், தினத்தந்தி போலத்தான் இது போன்ற பொய்ப்பரப்புரைகள் சின்மயி மனிதநேயமற்றவர் என்ற பிம்பத்தை காலத்திற்கும் ஊன்றி விடும். அதனால் இந்தப் பொய்யை நம்பக்கூடாது

பெண்கள் மீதான வன்மம்

அதே நேரம் இன்னொன்றையும் நான் முக்கியமாகப் சொல்ல வேண்டியுள்ளது. ராஜனுக்கு ஆதரவு பெருகி இருப்பதால், அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் மட்டுமல்லாமல், பெண்களை இழிவு செய்கிறவர்கள், பெண்ணியம் பேசுகிறவர்களைக் கிண்டல் செய்கிறவர்கள், கற்பு வேண்டும் இல்லையென்றால் நீதி கிடைக்காது, பெண்கள் கிண்டல் செய்வது என்னுரிமை, அவள் மட்டும் யோக்கியமா என்ற கருத்துக் கொண்டவர்களெல்லாம் கிடைத்த சந்தில் சின்மயி மீது வன்மத்துடன்  ராஜனை ஆதரிக்கிறேன் என்று கூட்டத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களின் கருத்துக்கள் சின்மயியின் பின்புலம், அவரது பழிவாங்கும் வெறி, பொய் ஆகியவைகளைத் தவிர்த்து, சின்மயி ஒரு பெண் என்ற ரீதியில் மட்டும் இழிவு செய்கிறார்கள். இது சின்மயி அல்லாத வேறு எந்தப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக காவல்துறையை நாடி இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியவையாகும். சின்மயி ஓவரா சீன்போடறா என்பது போலவும், கற்பில்லாதவள் நீதி கேட்கக்கூடாது என்ற கருத்துக்களை இவர்கள் சொல்கிறார்கள்.

ஆண்களால் பாலியல் ரீதியாகப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதற்கு பெண்களின் தவறான கருத்தே காரணம் என்ற ஆபத்தான கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற கருத்துள்ள பேர்வழிகளை ராஜனே எதிர்த்திருப்பார். என் அம்மா, சகோதரிகள், உறவினர் பெண்கள் அனைவருமே இது போன்ற கருத்துக்களை வெளியிடக்கூடியவர்கள். கிராமத்திலிருக்கும் உயர்த்தப்பட்ட ஜாதிப் பெண்கள் அனைவரின் இயல்பும் இது. இது தவறுதான் என்றாலும் பாலியல் தாக்குதலுக்கு இது ஒரு நியாயமான காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எனது நண்பனொருவனின் தந்தையார் திகவில் இருந்தவர் அவன் வீட்டிலும் இதே நிலைதான்.

மீனா பார்ப்பனீய எதிர்ப்பு பேசியதால் பாலியல் ரீதியான மொழியில் தாக்கப்பட்டார், சின்மயி பார்ப்பனியம் பேசியதால் தாக்கப்பட்டார். இதே போல் ஃபேஸ்புக்கில் நிலவுமொழி செந்தாமரை என்ற பெண்ணும் ஜாதி எதிர்ப்புக்காகத் தாக்க்ப்பட்டார். இப்படிப் பல பேர் காரணங்கள் வேறு வேறாக இருந்தாலும் அவர்கள் பெண் என்பதால் மட்டுமே இதை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும் இங்கே சின்மயியை இழித்தவர்கள் கோபத்தில் கொந்தளித்ததாகத் தெரியவில்லை, அவரைக் கிண்டல் செய்ய ஒரு டாக் ஆரம்பித்து அதில் கண்டபடி செய்திருக்கிறார்கள். இதில் தாழ்த்தப்பட்ட, அறியாதோரின் அடித்தட்டு மக்களின் வசவு மொழியன்று நான் கண்டது, முற்போக்குவாதிகளின் ஆணாதிக்க வன்மம் மட்டுமே.

அப்படிப்பார்த்தால், சிங்கள மாணவர்களைத் திருப்பி அனுப்பிய ஜெவைக் கண்டித்து வரைந்த கார்ட்டூன் சரி. கனிமொழி ஊழல் செய்ததால் அவர் மீதான கருத்துக்கள் சரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். போர் நடந்தால் மக்கள் சாவது இயற்கைதான் என்று சொன்ன ஜெயலலிதா ஈழ்த்தாயாக மாற்றப்பட்டார்.
எல்லோரிடமிருந்து பெரிய பாலியல் ரீதியான தாக்குதல் வரவில்லை. அது போல ஆபாசமாக சின்மயியை ஏசாமல் இருந்திருந்தால் அவருக்கு எதிராக கேட்டிருக்கலாம். ஆபாசமாகப் பேசிவிட்டு அதை நியாயப்படுத்த தலித், தமிழ் என உணர்ச்சி அரசியலின் பின்னர் ஒளியக்கூடாது.

ராஜன் மட்டுமே சின்மயி மீது பாலியல் மொழியில் தாக்குதல் செய்யவில்லை தவிர மற்றவர்கள் செய்திருக்கிறார்கள். ராஜனின் நண்பர்களாக இருந்தவர்கள் இது போலப்பேசியதற்கான ட்விட்டுகள் இருக்கின்றன. இதற்காக ராஜனைக் குற்றவாளியாக்கியது மன்னிக்க முடியாதுதான்.

அவரது பதிவிலும் இது போல் சிலர் பின்னூட்டமிடுவார்கள். அதுபோலவே ட்விட்டரிலும் சிலர் இருப்பார்கள் போலத் தெரிகிறது. இவைகளெல்லாம் கோபத்தில் வெளிப்பட்ட உணர்ச்சியில் தெரியாமல் வெளிவந்த கெட்ட வார்த்தைகள் அல்ல. பெண்கள் மீது ஆண்களுக்கு இருக்கும் மதிப்பீட்டில் வருகின்றவை. அதனால்தானே அம்மாவை கடலைக்கு யூஸ் பண்ணிக்கலாம் என்று பேச வைக்கிறது. திரைப்படங்களில் பார்த்தால், நாயகனின் அம்மாவைப் பற்றித் தவறாகப் பேசினால் அவன் கொந்தளித்து சண்டை போடுவது போலவும், நாயகியின் தங்கையையோ, அம்மாவையோ பற்றிப் பேசுவது நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. (எ.கா ஃபிகரோட சேர்ந்து அவ அம்மாவையும் உசார் பண்ணிருப்பேன் வகையில்)

இது போன்றவர்களைச் சிரிக்க வைப்பதற்காக ராஜன் எழுதியிருக்கிறார் என்பது என்ன முரண் நகை. ஜெயலலிதாவின் கார்ட்டூனைக் கண்டித்த கையோடு அதை நையாண்டி செய்தது மட்டுமே உலகிற்குத் தெரிந்திருக்கிறது என்பது வேதனை.

இந்த வழக்கு மிகவும் சிக்கலாக எந்தப்பக்கம் சாய்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதில் பெண்ணின் மீதான பாலியல் தாக்குதல் என்பதற்காக பெண்ணை ஆதரிப்பதா இல்லை அதிகார வர்க்கத்தினால், பழிவாங்கப்பட்ட பாமரனா என்றால் அப்பாவியின் பக்கம்தான் நிற்கத் தோன்றுகிறது. I support Rajan (with conditions apply). ராஜனின் விடுதலையை மட்டும் தீவிரமாக ஆதரிக்கிறேன். அவர் ஆதரவாளரின் கருத்துக்களை எதிர்க்கிறேன்.

இருப்பினும் சின்மயி ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்ற நிலையில் அவர் மீதும் கரிசனம் உண்டு.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சின்மயி வேறு என்னதான் செய்ய வேண்டும் ?


பெண்கள் மீதான வசைச் சொற்களைக் கண்டு வெம்பியதால் இது குறித்து அழுத்தமாக எழுதத் தோன்றுகிறது. அடிக்கடி இது குறித்து எழுதுகிறேன். அதனால்தான் சின்மயியின் பிரச்சனை குறித்தும் எழுதுகிறேன். எல்லாக் கோணங்களிலும் ஆராய விருப்பமும் இல்லை. பெண்களை இழிவுபடுத்துவதை எதிர்ப்பதற்கு மட்டுமே ஒரு சந்தர்ப்பமாகக் கருதி இதைச் சொல்கிறேன். மாட்டிக்கொண்டவர்களை கும்முவதும் மகிழ்வதும் எனக்குப் பிடிக்காது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீதான ஆதாரம் சரவணக்குமார் என்பவர் மீது மட்டும் இருக்கிறது. ராஜன் முன்பு டிவிட்டரில் சின்மயியிடம் விவாதத்தில் ஈடுபட்டு, அவரை அதிகம் கேலி பேசியதால் எரிச்சலடைந்த சின்மயி அவரை ப்ளாக் செய்துவிட்டார். பின்பு எதுவும் சொல்லவில்லை என்கிறார். ஆனால் சின்மயி தொடர்ந்து வெவ்வேறு முகவரிகளில் வருகிறார்கள் தொல்லை தருகிறார்கள் என்று இதற்கு முன்பே ஒரிரு முறை சொல்லி வந்தார். ராஜன் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையாளர் சின்மயியுடன் பிரபலமானவர்களில் ஒருவராக ராஜனையும்  சேர்த்து எழுதியதால் சின்மயி அப்பத்திரிக்கையாளருடன் சண்டயிட்டார். பின்பு தொடர்ந்து ராஜனால் தொல்லை ஏற்படுவதாகவும் கூறியிருக்கிறார். இதற்கு ஆதாரமெல்லாம் இல்லை. ராஜன் தனது ஃபாலோயர்களை சிரிக்க வைக்க வேண்டும் எனபதற்காக மிகவும் கீழ்த்தரமான கீச்சுக்களை, பதிவுகளை எழுதியுள்ளார். பல அரசியல் தலைவர்களை நடிகர்களை இழிவு செய்துள்ளார்.

ஆனால் சின்மயியை தனிப்பட்ட முறையில் தாக்கி இவ்வாறு எழுதவில்லை சும்மா கிண்டல் மட்டுமே செய்துள்ளார். என்பதில் உறுதியாகத் தெரிகிறது. அதுவும் சின்மயி ப்ளாக் செய்த பிறகு எதுவும் எழுதவில்லை எனவும் சொல்லியிருக்கிறார். எழுதியவர்கள் மற்றவர்களாக இருக்கிறார்கள். இதனால் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட முடியுமா ? ராஜனை மட்டும் முன்னிலைப்படுத்துவதன் காரணம் புரியவில்லை.  

ஆதாரமும் இல்லைஇது பாரபட்சமான தனிப்பட்ட வெறுப்பாகத் தெரிகிறது. 

3 வருடங்களாக பதிவுலகில் இருப்பதால் அவர் தனிப்பட்ட பெண்கள் மீது பாலியல் அவதூறு செய்ய மாட்டார். சந்தனமுல்லை, சாரு நிவேதிதா விவகாரங்களில் அவர் எழுதிய பதிவுகள் அதற்குச் சான்று. ஆனால் அவரே இவ்வளவு கீழ்த்தரமான ட்வீட்டுகளும், பதிவுகளும் எழுதியது முரண்.

தினத்தந்தி வழக்கம் போல ஈனத்தனமாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்கள் கைது என்று படமெல்லாம் போட்டிருக்கிறார்கள். கூகிளிலும் ராஜன் படம் வருகிறது. இதெல்ல்லாம் அதிகபட்சமானது. உலகமகாக் கொலைகாரன்களுக்கே தூக்கு தண்டனை வேண்டாம் என்கிறோம். இது போன்ற வசைபாடல் ஆபாசமாக வர்ணிப்பது என்பதற்கெல்லாம் இவ்வளவு தண்டனை வேண்டாம். சராசரிப் பெண்களையெல்லாம் வன்கலவி செய்தவன்களெல்லாம் நடமாடுகிறார்கள். அதே நேரத்தில் இது போன்ற இணையத்தில் தொடர்ந்து தொல்லை கொடுப்பது பெண்களின் தற்கொலை வரை கொண்டு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்த கண்ணியமான காவல்துறை கூடங்குளத்தில் என்ன செய்தது ? .

தன் குழந்தையைத் தேடிச் சென்ற லவீனாவிடம் அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவின் உடலைத் தீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?''

இது மாதிரி பலரிடம் உதயகுமாருடன் தொடர்புபடுத்தி, பாலியல் ரீதியாக கேள்வி கேட்டிருக்கின்றனர். இது குறித்துப் பல புகார்கள், மனித உரிமை மீறல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன காவல்துறையினர் மீது. இவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படாது.

சைபர் கிரைம் குறித்து 18 பெண்கள் புகாரளித்தும் சின்மயியின் புகார் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அவர் தனிப்பட்ட செல்வாக்கப் பயன்படுத்தியிருக்கிறார்.

அவ்வப்போது ஜாதிப் பெருமிதத்துடனும் திமிருடனும் பேசியிருக்கிறார்.

இட ஒதுக்கீடு, மீனவர்கள் மீனைக் கொல்வது, சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என வன்மமாகக் கருத்து வைத்திருக்கிறார்.

புகழ்விரும்பி எக்செட்ரா......

இதெல்லாம் சரியென்று ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் மற்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சின்மயியின் தவறுகளைக் கண்டிக்கும் அதே நேரம் மற்றொன்றையும் கண்டிக்க வேண்டும்.

அவர் பார்ப்பனத் திமிருடன் நடந்து கொண்டார் என்கிறார்கள். இட ஒதுக்கீடு குறித்துப் பலருக்கு மாற்றுக் கருத்து உண்டு, தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் உட்பட.

ஃபேஸ்புக்கில் பலரும் இந்துத்துவாவாதிகளின் இட ஒதுக்கீடு எதிர்ப்பு, பசுவதை எதிர்ப்பு போன்ற பகிர்வுகளை பகிர்ந்து வருகிறார்கள். அவர்கள் யாரும் இந்துத்துவாவாதிகளோ பார்ப்பனர்களோ அல்ல.

அதே போல் உதயகுமாரைப்பற்றி இழிவு செய்பவர்கள் எல்லோரும் பார்ப்பன இந்துத்த்வாக்களா ?

அதே போல் மீனைக் கொல்வது பாவமில்லையா என்று கேட்டதை, மீனவர்கள் மீனைக் கொல்லும்போது, சிங்களப்படை மீனவர்களைக் கொல்லலாம் என்று சொல்லிவிட்டார் என்பதை ஏற்கமுடியவில்லை. இதற்கு ஒரு ஸ்க்ரின் ஷாட்டை வைத்திருக்கிறார்கள். அதில் அவர் ஆமாம் என்று சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. அதை யாரும் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.

எல்லோரையும் பெண்களையும் தலைவர்களையும் இழிவு படுத்தி இருப்பதை அவர் எதிர்க்கிறார், கண்டிக்கிறார் இதில் என்ன தவறு கண்டீர்.

திட்டம் போட்டு சிக்க வைத்தார் என்கிறார்கள். அவர் அம்மாவைப்பத்தித் தவறாகப் பேசினால் அவர் கோபப்படக்கூடாதா என்ன ?

அவர் தமிழச்சி என்று சொல்வதை எதிர்க்கிறார்கள். அவர் தெலுங்குப்பெண் என்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் தமிழ்நாட்டில்தான் இப்படித் துணிச்சலாகத் தெலுங்கு என்று சொல்லியிருக்க முடியும். அதே  நான் பிராமணப் பெண் என்று சொல்லியிருந்தால் கிழித்துத் தொங்க விட்டிருப்பார்கள்.

தமிழ்ப் பெண் என்று சொன்னால் அதையும் நக்கலடிக்கிறார்கள்.

இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையை நாடினார், அதே போல்தானே அவரை ஆபாசமாகப்பேசியவர்களும் தலித் ஆதரவு, மீனவர் ஆதரவு என்று உணர்ச்சி அரசியலை தனக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டு நியாயம் தேடுகிறார்கள். இது மட்டும் தவறில்லையா ?

ஒரு பெண் எதிர்க்கருத்து வைத்தார் என்பதற்காக அதை பாலியல் ரீதியில் வசைபாடுவதை ஆண்கள் மிகச் சாதாரணமாக எடுத்து கொள்வதையும் அதைக் கடந்து சென்று விடுவதையும் தவறே இல்லையெனப்பார்ப்பதும்தான் எனக்கு வலிக்கிறது. அவர் பார்ப்பனப் பெண்ணாகவே இருக்கட்டும் அதற்காக தமிழ்ப்போர்வையைப் போர்த்திக் கொண்டு அவர்களை பாலியல் ரீதியாகக் கொச்சைப்படுத்துவது சரியாகுமா ?

படித்தவர்கள் பண்பாளர்கள் நிரம்பிய இணைய, டிவிட்டர், பதிவுலகில் பல அன்பர்களின், அறிவாளர்களின், முற்போக்குவாதிகளின் வன்மத்தையும், வக்கிரத்தையும் கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது. மலையாளியோ, சிங்களனோ தமிழ்ப் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்தால் ஒருநிலையும் , தமிழன் செய்தால் ஒரு நிலையும் எடுக்கிறார்கள்.

பெண்கள் மட்டுமல்லா பிற அரசியல் தலைவர்களையும் கண்டமேனிக்கு காய்ச்சுகிறார்கள். சில வருடங்களாக வலைப்பூக்களைப் படித்ததிலிருந்தே இது தெரிகிறது.

சரி சின்மயிக்குப் பதிலாக ஜெயலலிதா குறித்த ட்வீட்டுகள் வேறொரு உளவுத்துறையின் மூலம் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போயிருந்தால் என்ன செய்வார் ?

களத்தில் போராடும் உதயகுமார் போன்ற தலைவர்கள் அபத்தமாக வாய் விடுவதில்லை. ஆனால் இணையத்தில் அனைவரும் மனம் போன போக்கில் போட்டுத் தாக்குகிறோம் இல்லையா

3 வருடங்கள் முன்பு ஈழப்போர் நடந்த போதுதான் பதிவுலக அறிமுகத்தில் படிக்கத் தொடங்கினேன். ஒரு பதிவர் எல்லாளன் என்று பெயர், புலிகளின் செய்திகள் அருமையான மொழிநடையில் உடனுக்குடன் கிடைப்பதால் அதில் படிப்பது வழக்கம். ஜெயலலிதா புலிகளின் மீது வெறுப்பான அறிக்கைகள் வெளியிட்ட காலத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில் ஜெயலலிதாவின் பழைய புகைப்படம் ஒன்று மினிட்ரௌசருடன் இருப்பது போல் வெளியிட்டு, சீலை தூக்கிய சிங்காரி என்பதை அதன் தலைப்பாக வத்திருந்தார்.

கருணாநிதி ஃபேஸ்புக்கில் வந்த போது வசவுகளாகப் போட்டு ஒரே நாளில் அவரை வெளியேற்றினார்கள்.

கனிமொழி ராசாவைப் பற்றி வந்த செய்திகள்

மன்மோகன் சோனியாவை இணைத்து வெளிவரும் கேலிப்படங்கள்

நடிகர் விஜய் குறித்து வருகின்றவை

இதெல்லாம் இணையத் தமிழர்கள் செய்கின்றவைதான். இதுதான் எரிச்சலாக இருக்கிறது. மேலே இருக்கின்ற ஒரு செயலை நாகரீகமாக எதிர்ப்பவர்கள், இன்னொன்றை உறுத்தலின்றிச் செய்கின்றனர்.

என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை வைத்து அரட்டைக் கும்மியடிக்கின்றனர். மற்றவர்களை சொம்படிப்பவன், இணையப் பொரச்சி, அல்லக்கை பட்டங்களை அள்ளி  வீசுகின்றனர்.

இப்படி இவர்கள் செய்தது சரியென்றால் கவிஞர் மீனா கந்தசாமி மாட்டுக்கறித் திருவிழாவை ஆதரித்ததாக சந்தித்த வசைகளும் சரிதான். அவர் தலித் அல்லது தமிழர் என்பதால் அதை மட்டும் எதிர்க்கக் கூடாது சரிதானே. ஏனென்றால் இந்துத்துவாக்களுக்கும் ஒரு நியாயம் இருக்கும். அவரை ஒருவன் Bitch I want to fuck you  என்று ட்வீட்டியிருந்தான். 

நன்றி சவுக்கு
 நீங்கள் என்ன மகத்தான கொள்கைக்காகப் போராடினாலும் பெண்களை பாலியல் ரீதியில் தாக்கும் போது அதன் வீரியம் போய்விடுகிறது. பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற எண்ணமே தெரிகிறது.

பெண்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள் எனபதே இப்பதிவின் நோக்கம்.

இதைப் போன்ற சிறிய நிகழ்வுகளைப் பெரியதாக்கி இணைய சுதந்திர வெளிக்குப் பூட்டுப் போடவும், கருத்துரிமைக்கு ஆப்பு வைக்கவுமே வழிவகுக்கும். ஏற்கெனவே பல தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனவாம்.

இது போன்ற தனிநபர் தாக்குதல் மட்டுமன்றி "கண்ணியமான" எதிர்க்கருத்தாளர்களும் அரசால் நசுக்கப்படும் போலத் தெரிகிறது.

2 வாரங்களுக்கு முன்புதான் இதே மாதிரி ஒன்றை எழுதினேன்.

http://thamizvinai.blogspot.com/2012/10/blog-post_4.html
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

திருமணச் சந்தையின் நிலவரம் அச்சமாக இருக்கிறது - இவர்கள் இப்படித்தான் - 3

என்னவாகப் போகிறது தெரியவில்லை. எதிர்காலத்தில் திருமணத்திற்கான சடங்குகளும் செலவுகளும் மிகப் பெரிய அளவில் பரிணமிக்கப்போகின்றன என்பது  மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மாப்பிள்ளை வீட்டினரின் பேராசை தெரிந்த்த கதைதான். தற்போது அது முன்னேறி பெண் வீட்டுக்காரர்கள் ஆட்டம் போடத் துவங்கியுள்ளனர்.

பெரும்பான்மையான பெண்கள் இன்னும் 50 வருடம் பின்னோக்கியே வாழவேண்டிய சூழலில் வசதியும் வாய்ப்பும் ஓரளவு வாய்க்கப் பெற்றவர்களோ, தமக்குக் கிடைத்த வாய்ப்பை வேறுவழியில் பயன்படுத்தி வருகின்றனர். வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான வழக்குகளை தவறாகப் பயன்படுத்துகிறவர்கள், பாலியல் வன்முறை வழக்குகளைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்கள் என பட்டையைக் கிளப்புகின்றனர். இதே போல் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளையயும் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதையே சாக்காக வைத்து இது போன்ற வரதட்சிணைக் கொடுமை, தீண்டாமை, பாலியல் வன்முறை வழக்குகளெல்லாமே பொய்யாக சித்தரிக்கப்படுபவை என்று சொல்லி வருவதையும் நாம் காண்கிறோம்.

தற்போது கணவர் சங்கம் வைத்து ஆண்கள் உரிமைக்காகப் போராடும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். இதில் நான் சொல்ல வந்தது திருமணம் அதன் செலவு குறித்து. இப்போது நடுத்தரக் குடும்பங்களில் மாப்பிள்ளை பார்ப்பவர்கள் மிகப் பெரிய தகுதிகளை எதிர்பார்க்கின்றனர். பெண்கள் குறைந்த பட்சம் இரண்டு பட்டங்கள் பெற்றவர்களாக இருக்கின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களின் கணக்கு வேறு. இவர்கள் திருமணம் செய்து வைப்பதற்காகவே வளர்க்கப்படுகின்றனர். திருமணம் நடக்கும் வரை சும்மாயிருக்க வேண்டாமே என்று படிக்க வைக்க அனுப்பப்படுகின்றனர்.

படித்த முடித்தவுடன், ஏற்ற துணை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இவர்கள் படித்ததைக் கொண்டு ஒரு பணியைத் தேடிக்கொள்ளவும் முடியாது. கல்யாணம் ஆகப்போற பொண்ணு வேலைக்கு ஏன் போக வேண்டும் என்றுதான். இவர்களுக்குப் படிப்புச் செலவு, திருமணம், நகை, சீதனம், இன்ன பிற பொருட்கள், சீமந்தம், குழந்தை பிறந்தால் ஆகும் செலவு என ஏகப்பட்ட சடங்குகள். செலவுகள். இதையெல்லாம் செய்து முடிக்க ஆகும் செலவு நிச்சயம் கடன் வாங்காமல் முடியாது அதை அடைக்க ஆகும் பல வருடங்கள் இல்லையென்றால் பரம்பரை சொத்து கொஞ்சம் விற்க வேண்டும். இதெல்லாம் பெண்கள் பக்கப் பிரசச்சனைகள்.

ஆண்களுக்கு வேறு பிரச்சனை. பாதிப்பேருக்கு நிரந்தர வேலையே தொழிலோ இல்லை. எல்லா நடுத்தரப் பெற்றோரும் அதிகமாக எதிர்ப்பார்க்கத் தொடங்கி விட்டனர். முன்பெல்லாம் வரதட்சணை என்ற சொல் எல்லாரையும் அச்சுறுத்தும். தற்போது பெண் வீட்டுக்காரர்களின் விதிமுறைகள் மூச்சு முட்ட வைக்கிறது. 

50000 சம்பளம், சொந்த வீடு, சொத்து என அவர்களின் நிலைக்கேற்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒருவர் நிலைத்தகவல் போட்டிருந்தார்கள் இப்படி, வரதட்சணை கேட்பது தவறு ! ஆனால் சொந்த வீடு கார், ஒரு இலட்சம் சம்பளம் உள்ள பையன் வேண்டும் என கேட்பது தவறில்லையா என. அது உண்மைதான் கிட்டத்தட்ட.

போதாக்குறைக்கு ஜாதகம் என்ற ஒன்றைப் பார்க்கிறார்கள். ஜோதிடர்களுக்கும், தரகர்களுக்கும் செமயான வணிகம் அது. யார் இது வேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள் என்று பார்த்தால், 25 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு ஜாதகம் பார்க்காமலே திருமணம் செய்து வாழ்ந்து காட்டிய இன்றைய பெற்றோர்தான். பல நவீன சடங்குகளை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் ஒழித்துக் கட்ட வேண்டிய ஜாதகம், சீதனம் என தேவையில்லாத காலத்திற்கொப்பாத பெண்ணடிமைச் சடங்குகளையெல்லாம் இன்னும் கட்டிக் கொண்டு அழுகின்றனர்.  படித்த பெண்களே இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அலட்டிக் கொண்டாலும் யாரும் கேட்பதாயில்லை. அதை நினைக்காமலிருந்தால் மனச்சுமை படத் தேவையில்லை அவ்வளவே.

முன்பு இலையில் அருந்தியது போய் பஃபே முறைக்கு மாறிவிட்டார்கள். பிளாஸ்டிக் டம்ளருக்கு மாறியாகிவிட்டது. இனி இலை மட்டும்தான் மிச்சம். அதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தொடங்கினாலும் இன்னும் நவீனமாகிவிடும். ஆனாலும் ஜாதிக்குள் திருமணம், தாலிகட்டுவது, காரை சீதனமாகக் கொடுப்பது, அதை திருமண வரவேற்பிலேயே முன்னாடி நிற்க வைத்து ஒரு காட்டு காட்டுவது என்று நடந்து கொண்டிருக்கிறது.

அதே நேரம் சொந்த ஜாதியில் பெண் கிடைக்காவிட்டால் வேறு ஜாதியில் பெண் எடுப்பதும் நடக்கிறது. மேலே போய் மலையாள நாட்டில் போய் வெள்ளைத் தோல் பெண்கள் எடுத்து வரும் மறத் தமிழர்கள் இருக்கிறார்கள். அதே போல், ஜாதகம் பொருந்தவில்லை எனினும், இரண்டு வீட்டினருக்கும் பிடித்துப் போய்விட்டால் திருமணம் நடந்து விடுகிறது. ஜாதகத்தைக் கண்டுகொள்வதில்லை. இல்லையென்றால் இன்னொரு ஜோசியத்தைப் பார்த்து ஏதாவது ஒரு பரிகார பூஜையை நடத்தி விட்டால் போச்சு. ஜாதகம் என்பதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கே. இன்னும் சில ஜோதிடர்கள் இரண்டு பேரை சேர்க்க வேண்டுமென்றால் அதற்குத் தக்கபடி மாற்றியும் கொடுத்து விடுகிறார்கள். இப்படித் தேவைப்பட்டால் எந்த சம்பிரதாயத்தையும் சடங்கையும் மாறி செய்கின்றனர். ஆனால் அதே ஒரு பருவமடைந்த வேறு ஜாதியில் ஆணும் பெண்ணும் தனிப்பட்ட முறையில் மனமொன்றித் திருமணம் செய்வதை மட்டும் எதிர்க்கின்றனர்.

3 என்ற படத்தில் பாடல் பார்த்தேன். அதில் நாயகன் நாயகிக்கு சாராயக் கடையில் வைத்து தாலிகட்டுவான். இது  போன்றதுதான் சடங்குகளும். காதலனும், காதலும் ஒன்றாக மதுக்கடைக்குச் செல்வது வரை ஜாலி, என்டெர்டெயின்மென்ட் என்று எடுத்துக்கொள்வார்கள், அதே திருமணம் என்றால் தாலியைத்தான் கட்ட வேண்டும் என்ற கற்பிதம் இருக்கிறதே அதுதான், நம்மாளுகள் தேவையில்லாத சடங்கை விடுவதில்லை ஆனால் நாகரீகம் என்ற பெயரில் சீரழிவை மட்டும் ஏற்றுக் கொள்வார்கள்.

என்து உறவினர் சொன்ன ஒரு செய்தியைக் கேட்ட பின்னர்தான் இதை எழுதத் தோன்றியது. தெரிந்த இரு குடும்பத்தினர் பற்றிச் சொன்னார். ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்று இப்போதுதான் 4 -வது படிக்கிறது. அதற்கு இப்போதே 80 பவுன் தங்கநகை வாங்கி வைத்து விட்டார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகும்போது, 200 சவரன் போட வேண்டுமென்பதினை இலக்காக வைத்திருக்கிறார்களாம். இன்னொருவரின் வீட்டில் இதே கதைதான் ஆனால் பெண் குழந்தை பிறந்த உடனே வாங்கிச் சேர்க்க ஆரம்பித்து விட்டார்களாம்.

தங்கம் விற்கும் விலைக்கு யாரும் அடிபட்டதாகத் தெரியவில்லை. மேலும் மேலும் ஆட்டம்தான் போடுகிறார்கள். ஆமா சீதனம் வாங்கிறது தப்பா இல்லையா என்ற விவாதமெல்லாம் போயே போச்சு. பெண்ணடிமைத்தனம் என்று அதிகமாகப் பேசுகிறோம். ஆணுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது திருமணத்தில். ஒரு ஆண் தான் விரும்பியபடி வேறு ஜாதியில் உள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் பெற்றோரிடம் வாங்கிவிட முடிகிறதா ? இன்னும் முக்கால்வாசிப்பேர் ஜாதியை விட மாட்டார்கள். எனக்கு வரதட்சணை வாங்க விருப்பமில்லை என்று சொன்னால் விட்டு விடுவார்களா ?

பொண்ணப் பெத்தவனெல்லாம் இனித் துண்டப் போட்டுட்டு போக வேண்டியதுதான் -

இனியெல்லாம் பசங்களுக்குப் பொண்ணு கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம்தான் -

இவையிரண்டும் திருமணச் சந்தையின் இருவேறு துருவங்கள்

என்னவோ புலம்பனும்னு தோணியது அவ்வளவுதான்.
 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

விடுதலைப்புலிகளின் துரோகம் ??

தற்போது எரிக் சோல்ஹைம் வெளியிட்டிருந்த கருத்தின் மூலம் பிரபாகரனின் தவறான முடிவு முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு வழிவகுத்தது என்று தெரியவருகிறது. ஆனால் எரிக் சோல்ஹைம் புலித் தலைவர்கள் சரணடையும் போதும் உடனிருந்தவர். அதன் பின்பும் அவர்கள் கொல்லப்பட்டார்களே. அதனால் இவர் சொன்னது முழுவதும் உண்மை என்றும் சொல்ல முடியாது.

2009 ஆம் ஆண்டில் போர் உச்ச நிலையை எட்டியிருந்தது. ஜனவரி மாதம் புலிகளின் தலைநகரான  கிளிநொச்சி வீழ்கிறது சிங்கள ராணுவத்திடம். அங்கிருந்து புலிகள் முல்லைத்தீவுக்கு இடம் பெயர்ந்தனர். புலிகளின் தோல்வியானது கிளிநொச்சியின் வீழ்ச்சியின்போதே ஏறக்குறைய முடிவானது. அதுவரையிலும் தற்காப்பு தாக்குதல் நடத்தி வருகிறோம். கிளிநொச்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறி வந்த புலிகள், 2008 - நவம்பர் மாதம் மாவீரர் நாள் உரையை பிரபாகரன் நிகழ்த்தினார். அதன் பின்பு ஒரு மாதம் வரை கிளிநொச்சியைத் தன் பிடிக்குள் வைத்திருக்க புலிகளால் முடிந்தது.

முல்லைத்தீவில் புலிகள் முடங்கியதும், இராணுவத்தின் தாக்குதல் மிகவும் உச்சத்தில் இருந்தது. உலக அளவில் இலங்கை அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது. புலிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தாமல் அவர்களை வெளியிட வேண்டும் என்றும் இலங்கை அரசு வற்புறுத்தி வந்தது. தமிழகத்திலும் எதிர்ப்பு வலுத்து வந்தது. தீக்குளிப்புகள் நடந்தன. அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பும் என்றெல்லாம் செய்திகள் வந்திருந்தன. மனித அழிவுகளை நிறுத்த ஏதாவது செய்யப்படும் என்பது போன்ற  நிலைப்பாடு மேற்கு நாடுகளில் நிலவியது.

இந்நிலையில் எரிக் சோல்ஹைமின் இவ்வாறு கூறியுள்ளார்.

//ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐநா மன்றமும் இதன் பின்னணியில் இருந்தது. அன்றைய நிலைமையில் போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம். அந்த திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்டபிறகு தான் முடிவுசெய்யப்பட்டிருக்கும்.

 ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பிவைப்பது என்றும், அதில் ஐநா மன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம். அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.

அப்படி நடந்திருந்தால், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள். ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

விடுதலைப்புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசுக்கு அதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள்.
//


இப்படியெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் அப்படி சரணடைந்திருந்தால் கொல்லப்படாமலிருந்திருப்பார்களா ? உறுதியாகக் கூறமுடியாது. இறுதியில் அனைவரும் வெள்ளைக்கொடியுடன் சரணடந்தவர்கள்தான் கொல்லப்பட்டார்கள். புலிகள் தலைவர்கள் மட்டுமல்ல, இவர்கள் மன்னிப்புக்குரியவர்களாகக் கூறப்பட்ட பல பொதுமக்கள், போரில் ஈடுபடாத புலிகள் எடுத்துக்காட்டாக இசைப்பிரியா போன்றவர்கள் கூட கொல்லப்பட்டார்கள்.

புலிகள் ஆயுதத்தைக் கீழே போட வேண்டுமென இந்தியா உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் புலித்தலைவர்கள் தமக்கு ஆபத்து வரும்வரை சரணடையும் முடிவை எடுக்க வில்லை. சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள் முடக்கப்பட்ட பின்னர்தான் போர் ஒரிரு நாளில் பெரும் மக்கள் கூட்டத்தின் பிணங்களின் குவியலுக்குப் பின்னர் முடியும் தறுவாயிலிருந்தது. ஆனால் இந்நிலை ஏற்படும் முன்னரே புலிகள் சரணடைந்தனர், ஆனாலும் அதன் பின்னும் பெரிய அளவிலான படுகொலைகள் நடைபெற்றது. இன்று வரையில் அரசியல் கைதிகள் கொலைகள் நடந்தேறி வருகின்றன.

இந்தப் போர் புலிகளை முற்றிலும் அழிப்பதற்காகவே நடைபெற்றது. இருப்பினும் அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகள் புலிகளை காப்பாற்றவும் முயற்சிகள் எடுத்தது போலக் காட்டிக் கொண்டனர். அவர்கள் உண்மையில் புலிகளைக்காக்க விரும்பினார்களா என்பது கேள்விக்குறி. புலிகளைக் காக்க விரும்பினாலும், அது அவர்களுக்குத் தேவையானவரையில்தான். ஒரு வேளை இலங்கை அரசுடன் ஒரு ஒப்புதலுக்கு இவர்கள் வந்த பிறகு அவர்களுக்கு அதோ கதிதான்.  இவர்கள் சொல்லும்படி சரணடைந்திருந்தாலும் புலித்தலைவர் பிரபாகரனுக்கும், பொட்டு அம்மனுக்கும் தூக்குதண்டனைதான் கொடுப்பார்கள். இல்லை அப்படியே கொன்றாலும் கொன்றிருப்பார்கள்.

இப்போது எரிக் சோல்ஹைம் புலிகள் நினைத்திருந்தால் பேரழிவைத் தடுத்திருக்கலாம் என்கிறார். இவர் சொன்னது ஜனவரி மாதம் இந்த திட்டம் ஆலோசனையில் இருந்தது என்பது. 2009 ஜனவரி மாதத்தில்தான் கிளிநொச்சி வீழ்ந்தது. புலிகள் முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள். புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை. தோல்வியை நோக்கியிருந்தாலும் அப்போதும் போராடி மீளும் வாய்ப்பு இருந்தது. மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளோ, இந்தியாவோ போரை நிறுத்தும் என்றும் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

புலிகளின் துரோகம்;

புலிகள் இறுதிப்போரில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர். இறுதியில் முல்லைத்தீவில் முடங்கிய போது இது அதிகமாக இருந்தது. தப்பிச் சென்றவர்களையும், செல்ல முயன்றவர்களையும் கொன்றனர். குழந்தைகளைப் பிடித்துக் கட்டாயமாக போருக்கு அனுப்பினர். இறுதியில் தம் உயிரைக் காக்கவே சரணடைந்தனர். இவையெல்லாம் உண்மை.

புலிகள் ஆரம்பம் முதலே உலகக் கொலைகாரன்களுடன் நட்பு பாராட்டியே வந்துள்ளனர். இந்தியாவிடம்தான் பயிற்சி பெற்றனர். இஸ்ரேலிடமும் பயிற்சி பெற்றனர். சர்வதேசம் என்று இவர்கள் நட்பு பாராட்டிய நாடுகள்தான் உலகின் பலநாடுகளின் மீது படையெடுத்தும், தேசிய இன விடுதலைப் போராட்டங்களை நசுக்கியும் வந்துள்ளனர். குறிப்பிட்ட நாட்டின் அரசுகள் தன்னுடன் ஒத்துழைக்காத போது அந்நாட்டு  அரசுக்கு எதிரான போராளிகளுக்கு ஆதரவும் அளிப்பவைதான் இந்த சர்வதேசம் எனப்படும் ஏகாதிபத்திய வல்லரசுகள்.

புலிகள் இனவிடுதலைக்குப் போராடியதாகச் சொல்லிக் கொண்டாலும் மற்ற பயங்கரவாத இயக்கங்கள் நிகழ்த்திய அத்தனை இழிசெயலையும் பயங்கரவாதத் தாக்குதலையும் நடத்தினார்கள் 25 வருடங்களாக, பாசிஸ இயக்கமாகவே நடந்து கொண்டார்கள்

மற்ற இயக்கத் தலைவர்கள் போராளிகள் கொல்லப்பட்டது.

இந்திய உளவுத்துறையிடம் 50 கோடியை வாங்கிக் கொண்டு, அநுராதபுரத்தில், 146 சிங்கள அப்பாவிகளைக் கொன்று குவித்தனர். இதை சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவும், அரசைப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைப்பதற்காகவும் எனவும் நியாயப்படுத்தினர். அப்பாவிகளின் மீதான புலிகளின் முதல் பயங்கரவாதத் தாக்குதல் இது.

பல பத்தாயிரம் இஸ்லாமியர்களை விரட்டி அவர்கள் சொத்தைக் கொள்ளையடித்தது. தமிழ் இஸ்லாமியப் பிரிவினையை அதிகமாக்கியது இந்த நிகழ்வு.

அரசியல் தலைவர்களைக் கொன்றது, ராஜீவ், ப்ரேமதாஸா, லட்சுமண் கதிர்காமர் போன்றோர் இதன் மூலம் மிகப்பரவலான வெறுப்பை மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டனர், இதை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

குறிப்பாக ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிலேயே தற்கொலைத் தாக்குதல் நடத்திக் கொன்றதன் மூலம் புலிகள் எதிர்களுக்கு தங்கத்தட்டில் வைத்து ஒரு வாய்ப்பை வழங்கிவிட்டனர். தனக்கான ஆதரவையும் இழந்தனர். இதனால் ஈழத்தின் மீதான் அனுதாபம் மறைந்து, இந்திய ராணுவத்தின், ராஜீவின் கொடூர முகம் மறைக்கப்பட்டு புலிகளின் மீதான வெறுப்பு அதிகரித்தது. பயங்கரவாத முத்திரை ஆழமாக விழுந்தது.

இதெல்லாம் போக சிங்களப் பொதுமக்கள் மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தினர். பேருந்து, இரயில், பொது இடங்களில் குண்டு வைத்தல், தற்கொலைத் தாக்குதல், மசூதி, புத்த விகாரைகளின் மீதான தாக்குதல் என எல்லாவற்றையும் செய்தனர். இது போன்ற எல்லாத் தாக்குதலையும் புலிகள்தான் செய்தார்கள் என்று கொள்ள முடியாது.

இறுதியாக நடைபெற்ற தேர்தலில் தமிழ்மக்களை வாக்களிக்க முடியாமல் தேர்தல் புறக்கணிப்பை நிகழ்த்தினர். இதன் மூலமாக சிங்கள இனவெறியர்களை ஆட்சியில் அமர வைத்தனர். ராஜபக்சேவிடம்  பணம் பெற்றுக் கொண்டு தேர்தலைப் புறக்கணித்தனர் புலிகள் என்ற செய்தியும் உண்டு.

போர் தொடங்கிய பின்பு, கோத்தபாய, சரத் பொன்சேகா ஆகியோரின் மீது நடத்தப்பட்ட (தோல்வியடைந்த)தற்கொலைத்தாக்குதல்.

இதெல்லாமே தமிழீழ விடுதலைக்கு உரம் சேர்ப்பதா அல்லது குழி வெட்டுவதா ?

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை புலிகளுக்கு பல கடுமையான எச்சரிக்ககளை விடுத்தனர், சமாதான வழியில் தீர்வுகாண வலியுறுத்தினர். பின்பு புலிகளின் இவ்வகையான பயங்கரவாதத் தாக்குதலை வைத்து பயங்கரவாத இயக்கமாக அறிவித்தனர். இலங்கை அரசுக்கு ஆயுதமும் நிதியும் வழங்கினர்.

இதற்குப்பின்னரும் புலிகள் இவர்களை நம்பி இருந்தனர். இந்தியாவுடன் போரை நடத்தியும், ராஜீவைக் கொன்றபிறகும் புலிகள் இந்தியாவின் நண்பர்கள் என்றே கூறி வந்தனர். இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கொழும்பின் மீது விமானத் தாக்குதல் நடத்துமளவிற்கு பலம் பெற்றிருந்த புலிகள், இந்திய ராணுவத்தையே எதிர்த்த புலிகள், சிங்கள ராணுவத்திடம் எப்படித் தோற்றுப் போனார்கள் என்பது பெரிய கேள்வி. இலங்கை அரசுக்கு உலக ஆதரவு ஆயுதம் படைகள் இருந்தது உண்மை. ஆனாலும் மிகவும் வலுவான புலிகளுக்கு அதை சமாளிப்பது என்பது முடியாத காரியம் இல்லை.

மரபுச் சமரில் முடியாது என்று தெரிந்த பின்னரும் தொடர்ந்து அதே வழியில் போரிட்டனர். கிளிநொச்சி வீழ்ந்த பிறகும் கரந்தடிப்போர் (கொரில்லாப் போர்) முறைக்கு மாறாமல் தந்திரோபாயப் பின்வாங்கல், தற்காப்புத் தாக்குலை நடத்திக் கொண்டிருந்தனர். கொரில்லாப் போருக்கு மாறாமல், தாக்குதலை நடத்தாமல் யாரோ இழுத்துப்பிடித்து வைத்துக் கொண்டிருந்தனர் போலத் தோன்றியது. இதோ தாக்குவார்கள், அதோ தாக்குவார்கள் புலிகள் என்று அனைவரும் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். நூற்றுக்கணக்கான புலிகள் கொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். இறுதிவரையிலும் இருந்த இடத்திலிருந்தே போராடி, தானாகவே தோற்று சிங்கள ராணுவத்தின் வேலையை எளிதாக்கினர்.

இதையெல்லாம் புலித்தலைவர்கள் சிந்திக்காமலா இருந்த இடத்திலிருந்தே போரிட்டிருப்பார்கள்.

பிரபாகரனுக்கு அவ்வளவு அதிகாரம் இருந்ததா என்பது குறித்து, மேற்கண்ட செயல்களெல்லாம் பிரபாகரனால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டவைதானா ?  அல்லது வேறு யாருடையே யோசனை அல்லது உத்தரவின் பேரில் இதை செய்தனர் என்பது விடை தெரியாத கேள்வி. பிரபாகரனுக்குப் பின்னாலிருந்த அவரை ஆட்டுவித்தவர்கள் யார் இதெல்லாம் இன்னும் வெளிவராத ரகசியங்கள். இதனால்தான் பிரபாகரன் அதிகமாக முன்னிறுத்தப்படுவதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. பிரபாகரன் பிம்பத்தின் ஒளியில் பல துரோகிகள் ஒளிந்திருக்கிறார்கள். கருணாவை விட இவர்களின் பங்குதான் புலிகளின் தோல்வியை நிர்ணயித்திருக்கும்.

எரிக் சொல்வது போல் சரணடைந்திருந்தாலும் இப்போது நடப்பதுதான் நடந்திருக்கும். எரிக் யாருடைய பேராளராக இருக்கிறார். உலகம் முழுதும் போரை நடத்தும் வல்லரசுகளின் பேராளர். இவர்கள் கண்ணீர் வடிப்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக அல்ல. 30 வருடப் போர் பல பேருக்கு வணிகமாகியிருக்கிறது. ஆயுதம் வழங்குவதிலிருந்து, அபிவிருத்தித் திட்டங்கள் வரைக்கும். தமிழர்கள், சிங்களர்கள் இந்தியா சீனா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், நார்வே எனப் பலர் இவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது. நமக்குக் காட்டப்படுவதெல்லாம் பிரபாகரன், ராஜபக்சே இவர்களிருவர்தான். இவர்களின் கைகளால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள்தான் (புலத்து) புலிகள். இதற்கு பலி கொடுக்கப்பட்டவர்கள் புலித்தலைவர்கள், போராளிகள் மற்றும் மக்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

குமுதம் அரசுவின் அக்கப்போர் !!


மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக ஒரு கேள்வி பதிலை குமுதம் அரசு பதில்கள் பிரிவில் வெளியிட்டுள்ளனர். தற்போதைய திருவாய் மலர்ந்தருளிய செய்தி - வேறென்ன ஹிந்தியைப் படிக்க விடாமல் திராவிட இயக்கத்தின் துரோகம் குறித்துத்தான். தமிழர்களைப் படிக்கவிடாமல் செய்தது திராவிட இயக்கங்களின்  துரோகம்தானே என்று ஒரு வாசகி கேட்க, அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி கற்கும்படி பார்த்துக் கொண்டார்கள் அதுதான் துரோகம் என்று பதிலளித்து இருக்கிறார். திராவிட இயக்கங்களைக் குறை சொல்ல வேறு 100 காரணங்கள் இருக்கின்றன. 

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களுக்கு எதிரானது என்பதாகவும்,  ஹிந்தியைப் படிப்பது துரோகம் என்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அடடா என்ன கைங்கரியம். ஹிந்தி திணிப்பதை எதிர்ப்பதும், அல்லது ஹிந்தியைக் கற்பதும் துரோகமாம். தேவைப்படுபவன் கற்றுக் கொள்வதில் யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை, அதே நேரம் கட்டாயத் திணிப்பை எதிர்ப்பதில் நியாயமிருந்தது. இப்போது ஆங்கிலத் தாக்கத்தினால் தமிழ் மொழி குறித்து கவலைப்படும் நாம் ஆங்கிலம் கற்றுக் கொள்வது துரோகம் என்று சித்தரிப்பதில் என்ன நேர்மையிருக்கிறதோ அது போலத்தான் இதுவும்.

எத்தனை முறை கரடியைப் போல் கத்தினாலும் தேசிய மொழி ஹிந்தியைக் கற்க விடாமல் செய்தது திராவிட இயக்கம் என்று திரும்பத் திரும்ப முதலிலிருந்த தொடங்குகிறார்கள். இதைப்பார்த்தால்தான் கொதிக்கிறது.

ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதைக் கற்காததால் என்ன இழப்பு ஏற்பட்டு விட்டது, ஹிந்தியல்லாத வெறொரு மொழி தெரியாததால் ஏற்படும் தொல்லைகள்தானே ஒழிய வேறொன்றும் தனிச் சிறப்பாக ஏற்படவில்லை. சில இணைப்புகள் தருகிறேன். வேறு ஏதேனும் சிறப்பான கட்டுரைகள் ஹிந்தி திணிப்பு குறித்து இருந்தால் தெரியப்படுத்தவும்

வெட்கம் கெட்டவர்களுக்காக !   (கோவி கண்ணனின் பதிவில் சில இணைப்புக்களும் உள்ளன. )என்னுடைய பதிவு


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

புற அழகைப் பழிப்போரின் அக அழகு


இப்போது, யார் வேண்டுமானாலும் ஓர் புகைப்படத்தை போட்டோஷாப்பில் எடிட் பண்ண கற்றுக் கொள்ள முடியும். தமிழிலும் அதன் மீது எழுதிவிடலாம். இதனால் சகட்டு மேனிக்கு இணையத்தில் புகைப்படங்களைப் புழங்க விடுகிறார்கள். அது ஒவ்வொன்றும் அருவருப்பாக இருக்கிறது. இதில் அதிகமாக இருப்பவை பெண்களைக் கிண்டல் செய்பவை.

அடுத்ததாக திரைப்பட நடிக நடிகையரின் படங்களைப் போட்டு திரையரங்கில் படம் ஓடும்போது என்னவெல்லாம் சொல்லிக் கத்திக் கூச்சலிடுவார்களோ அதையெல்லாம் வசனமாகப்போட்டு புகைப்படங்களை ஃபேஸ்புக்கிலும் கூகிள் ப்ளஸ்சிலும் பகிர்கிறார்கள்.

இது சற்றும் மனிதாபிமானமில்லாமலும், சக மனிதர்களை இழிபிறவிகளாகவும் சித்தரிக்கின்றன. இதைப்பார்த்து சிரிக்கும் அளவுக்கு அனைவருக்கும் மனசாட்சி மரத்துப் போய்விட்டது. இதில் திரைப்பட நடிக நடிகையர்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளையும் சகட்டு மேனிக்கு இழிவு செய்கிறார்கள். கருத்து சுதந்திரம் இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காக ரொம்பவும் தறிகெட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இவை மிகச் சாதாரணமாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுகின்றன. நக்கலடிக்கப்படுகின்றன. இது போன்ற சில பன்னாடைகளைக் கொண்டே ஃபேஸ்புக் போன்ற ஊடக சுதந்திரம் பறிக்கப்படலாம். 

அரசியல்வாதிகளில் கருணாநிதியை அதிகமாக கேவலப்படுத்துகிறார்கள். அதுபோல நடிகர்களில் விஜயை படுகண்றாவியாக சித்தரித்து வைத்திருக்கிறார்கள் இந்த போட்டோஷாப் நிபுணர்கள். யாரும் இதுவரை இது குறித்துப் புகாரளிக்காதது அதிசயமாக இருக்கிறது.


இது ஒன்றும் அமெரிக்கா அல்ல என்பதையும் நினைவூட்டிக் கொள்ளவும். 

அடுத்ததாக திரைப்படப் பைத்தியங்கள். திரைப்பட நடிகர்கள் மிகை மனிதர்களாகவே ஊடகங்களால் சித்தரிக்கப்படுகின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் செய்தியாகிறது. அவர்கள் ஊருக்குப் போவதை, திரைப்படம் பார்த்ததை, கருத்து சொல்வதை ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் கூட போட மாட்டார்கள் ஆனால் அது நாளிதழ், வார இதழ்களில் துணுக்குகளாக வெளிவருகின்றன. இந்த விளம்பரங்களைக் கொண்டுதான் அவர்களின் செல்வாக்கு சராசரி மனிதர்களிலிருந்து உயர்த்தி வைக்கப்பட்டு அவர்கள் மீதான செய்திகளை ஆர்வமூட்டப்பட்டு அவர்கள் கைகழுவும் செய்தியைக் கூட பெரிய செய்தியாக்குகிறார்கள்.

அதனால் அவர்கள் நடித்து வெளியாகும் படங்களுக்கு பெரிய பரபரப்பை உண்டாக்கி காசு பாக்க முடிகிறது. இதன் மூலம்தான் இந்த நட்சத்திர அந்தஸ்தைப் பயன்படுத்தி அவர்களும் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடிகிறது. இதே எதிர்வினையாக ஒரு குறிப்பிட்ட நடிகை, அல்லது நடிகர்களைப் பற்றி படுகேவலமான தொனியில் விமர்சிப்பதும், அதைத் தொடர்ந்து செய்வதுமாக இருக்கின்றனர். இதைத் திரையரங்கில் ஏதோ குடிகாரப் பொறுக்கிகள் மட்டும்தான் செய்வார்களில்லை. 

இதில் சில உதாரணங்கள் 

விஜயின் மனைவியுடன் விஜயின் தந்தையை இணைத்து சஞ்சயின் அப்பா அம்மா என்று எழுதியிருந்தார்கள். அங்கங்கே தல வாழ்க என்ற அஜீத்
புராணமும் இருந்தது.

ஏதே இரு மேல்நாட்டு ஜோடிகளின் டிஸ்கோதே கிளப்பில் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பதை, சோனியா- மன்மோகன், மாயாவதி-ப்ராணாப் முகங்களை ஒட்டி வைத்திருந்தார்கள்,

மன்மோகனும் சோனியாவும், மன்மோகனும் காதோடு பேசுவது போன்ற புகைப்படத்தில் இருவரும் முத்தம் கொடுப்பது போன்ற விளக்கத்துடன் பகிரப்பட்டிருந்தது.

காந்தி நேரு ஆகியோர் வெள்ளைக்காரப் பெண்மணிகளுடன் இருப்பதைப் போன்ற புகைப்படங்களும் அதன் விளக்கங்களும். விமர்சிப்பதற்கும் ஒரு தரம் வேண்டும்.

இப்படிப்பலவாறு இருக்கின்றன. 

நடிகர் விஜயின் முகத்தை ஆப்ரிக்கர்களின் உடலிலோ அல்லது மனநிலை சரியில்லாத ஒரு பிச்சைக்காரரின் உடலில் ஒட்டி விட்டால் அது "கலாய்த்து விட்டதாகக்" கருதப்படுகிறது. இது என்ன ஒரு வக்கிரமான மகிழ்ச்சி !! ஏன்னா ஆப்ரிக்காக் காரன் கருப்பாக அசிங்கமாக இருப்பான் என்ற எண்ணம் உயர்வு மனப்பான்மை,  கூலி வேலை செய்பவனின் மீதான ஏளனப் பார்வைதான். 


இந்த நடிகர்களின் ரசிகர்கள் ஒரு மன்நோயாளிகள் என்பதில் எந்த ஐயமும் வேண்டியதில்லை. எந்த நடிகனுமே இயக்குநர் சொல்லி, நடன இயக்குநர் சொல்லித்தான் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். யாருக்கும் எந்த மேனமையும் கீழ்மையும் கிடையாது. ஆனால் எந்த ரசிகர்கள் ஒரு நடிகனை கடவுளைப் போல ஏற்றி வைக்கிறார்கள், தனக்குப்பிடிக்காத இன்னொரு நடிகனை படு கீழ்த்தரமாக கேவலப்படுத்துகிறார்கள். 

விஜயை மற்ற எல்லோரும் கிண்டல் பண்ணுகிறார்கள் என்றால், இன்னும் சிலர் சூர்யாவை கிண்டல் செய்வதாக நினைத்து அவரது உயரத்தைக் கிண்டல் செய்கிறார்கள். இந்த மன்நோயாளிகளின் அடிப்படையெல்லாம் ஒன்றுதான். உருவத்தைக் கிண்டல் செய்தல், இதை அதிகமாக பெண்களின் மீது ஏவப்படும் வன்முறை அவ்வப்போது ஆண்களின் மீதும் ஏவப்படுகிறது.

இதில் அதிகமாக செய்வது,

கருப்பாக இருப்பவர்கள் - இவர்கள் கேவலமானவர்கள் இவர்களைப்பார்த்தாலே சிரிக்க வேண்டும், கருப்பு என்றால் சிரிக்க வேண்டும். ரஜினி கருப்பு என்பதை ரஜினையைப் பிடிக்காதவர்கள் சொல்வார்கள். அதே நேரம் ரஜினியைப் பிடித்தவர்களெல்லாம்  கருப்பு நிறத்தைப் பழிக்காதவர்களல்ல.

குண்டாக இருப்பவர்கள்

அடுத்தது சூர்யாவைப்பிடிக்காதவர்கள் சொல்வது குள்ளமாக இருக்கிறார் என்பது.

அஜீத்தைப் பிடிக்காதவர்களுக்கு உள்ள பிடி, நடனமாடத் தெரியாது, தொப்பை இருக்கிறது என்பது போல இருக்கும்,

விஜய டி, ராஜேந்தர், பவர் ஸ்டார் இவர்களையெல்லாம் குரங்கு, கழுதை படங்களுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்திருக்கிறார்கள்.

கனிமொழியையும் ராசாவையும் இணைத்து பேசி இன்பம் காண்பவர்கள்

நயன்தாரா, ரஞ்சிதா ஆகியோரெல்லாம் இவர்களுக்குக் கிடைத்த புளியங்கொம்புகள், பெண்களாக இருந்தும் விட்டால் போதும் பொங்கல் வைத்து விடுகிறார்கள்.

இவர்களின் அரிப்புக்குத் தோதாக அவ்வப்போது சிவகாசி ஜெயலட்சுமி, சஹானாஸ் என ஒரு தீனி கிடைத்து விடுகிறது.

இதில் தற்போது ஹினா ரப்பானி கர் நல்ல வேளை அவர் இந்தியாவில் இல்லை.

இந்தப் பன்னாடைகளையெல்லாம் என்ன சொல்லித் திருத்துவது. ஒரு குறிப்பிட்ட உருவம் இருப்பவர் தனக்கு வேண்டப்பட்டவர் என்றால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை அதே நேரம் அவர் தனக்கு வேண்டப்படாதவராகவோ ஒரு  பொது வாழ்வில் இருப்பவர்களாகவோ இருந்து விட்டால் அவ்வளவுதான் தனது கழிசடைத்தனத்தையெல்லாம் காட்டி விடுவார்கள்.

இதையே ஒரு கருத்தாக வைத்துத்தான் வடிவேலு, கவுண்டமணி,விவேக், சந்தானம் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள். அதனால் இதற்கும் படத்தில் இது போன்ற காட்சிகளை வைக்கும், புண்ணியவான்கள்தான் பதில் சொல்ல வேண்டும். கருப்பாக இருப்பது, குள்ளமாக இருப்பதையெல்லாம் நகைச்சுவையாக சித்தரித்து படமெடுப்பவர்கள், கவிதை, கதை, நிலைத்தகவல், பதிவு எழுதுகிறவர்களின் மனசாட்சியைப் பொறுத்தது.

இதையெல்லாம் செய்பவர்களுக்கு - உமக்கொரு நிலை வரும்வரை ஆடுங்கள்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

உலகின் மிக அழகான பெண் - 2


தன்மானம் ஊட்டிய காரிகை, தறுதலைகளுக்கு தக்க பதில் தந்த தாரகை என்றெல்லாம் தலைப்பு வைக்கலாமா என்றும் யோசித்தேன். இவரைப் பற்றி எழுதியாவது எனது பாவத்தைக் கொஞ்சம் கழுவிக்க் கொள்ளலாம் என்ற நப்பாசையில்தான் இதை எழுதுகிறேன். அனைவருக்குமே இருக்கும் ஒரு மோசமான சமூகத் தொற்று நோய் என்ன உருவத்தை வைத்து எடை போடுதல், எள்ளி நகையாடுதல், எகத்தாளம் செய்தல், ஏற்றிப் பேசுவது என அனைத்தும் அடங்கும். இதை பல பேர் கருத்தளவில் ஏற்றுக் கொண்டாலும் ஏதாவதொருவகையில் அதே நோய்த்தன்மையுடன் நாம் நடந்து கொண்டு விடுகிறோம். பல பேர் இதை ஒரு தொழிலாகவே வைத்துக் கொண்டுள்ளார்கள்.

நான் இதிலிருந்து முக்கால்வாசி வெளி வந்து விட்டாலும் எனது தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மை இன்னும் முழுவதுமாகப் போய்விடவில்லை. கறுப்பு நிறம், பூ விழுந்த பற்கள், நரைக்கத் தொடங்கிய முடிகள், தாடி, லேசான சொட்டை என சராசரி ஆண்களிடம் காணப்படும் "குறைகள்" அது குறித்த கவலைகள் எனக்குண்டு. பலருக்கும் உண்டு. அதை ஏற்றுக் கொள்ள முழுவதும் நம்மால் முடியவில்லை ஏன். அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம். ஏனென்றால் இப்படி நினைப்பவர்கள்தான் அடுத்தவரை இது மாதிரி எடை போடுவார்கள். இது போன்ற அசிங்கமான மனப்பான்மையை மிகச் சிலர் எளிதில் உதறித்தள்ளி நம்மை வெட்கப்பட வைத்து விடுகிறார்கள்.

பெண்களும் தமது உருவம் குறித்து மிகவும் கவலை கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல. சமூகம் ஊடகம் என அனைத்துமே அவர்களை அது குறித்துத்தான் கவலை கொள்ள வைக்கிறார்கள். சிலர் மட்டுமே இதிலிருந்து வெளியே வருகிறார்கள். பெண்கள் முகத்தில் முடி இருந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள், அதை நீக்கவே ஆணும் சரி பெண்ணும் சரி விரும்புவார்கள்.

தன்னை இழிவு செய்தவனை செய்ய நினைத்தவனை மன்னித்து அவனுடன் நகைச்சுவையாகப் பேச எத்தனை பேருக்கு சாத்தியம். ஒரு பெண் செய்திருக்கிறார். அவர் பெயர் பல்பிரீத் கவுர். இவர் ஒரு சீக்கியப் பெண். இவருக்கு ஆண்களைப்போல முகத்தில் லேசான மீசையும் தாடியும் வளர்ந்திருக்கிறது. இப்படி ஒருவரைப் பார்த்தால் நம்மாட்கள் என்ன செய்வார்கள், அவரை ஏற இறங்கப் பார்த்தே கொன்று தள்ளிவிடுவார்கள். ஏண்டா பிறந்தோம் என்று அவரை வேதனைப்படுத்தி விடுவார்கள். அதே போலத்தான் ஒரு நல்ல உள்ளம் இவரைப்பார்த்து இவருக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்து ஒரு தளத்தில் வெளியிட்டு விட்டார். அதற்கு இவர் விட்டிருந்த கருத்து - இப்படத்தைக் குறித்து என்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை ("I'm not quite sure what to conclude from this") (ஆணா இல்லை பெண்ண எனத் தெரியவில்லை). பல ஆண் உத்தமர்கள் தெருவில் போகும் நிற்கும் பெண்களைப் படமெடுத்து அதை இணையத்தில் பகிர்ந்து கைமைதுனம் செய்பவர்கள். அது குடித்து விட்டுக் கிடக்கும் பெண்களாக இருக்கலாம், எதுவும் செய்யாமல் வெறும் அழகான பெண்ணாக இருக்கலாம், அல்லது அசிங்கமாக இருக்கும் பெண்ணாக இருக்கலாம், அல்லது குட்டைப் பாவாடை அணிந்திருக்கலாம் அல்லது குனிந்தவாறு நின்றிருக்கலாம் இப்படி எந்த மாதிரி இருந்தாலும் அதைப் படம் பிடித்து இணையத்தில் பரவவிடுவதில் இவர்களுக்கு ஆனந்தம். இவர்களை விட போர்னோகிராபி எடுப்பவன் 10 மடங்கு மேலானவன்.

இது போன்ற ஒரு மன நோயாளி எடுத்து இவரின் படத்தை வெளியிட அது ஃபேஸ்புக் வரை பரவி பின்பு அக்குறிப்பிட்ட பெண்ணுக்கும் செய்தி சேர்ந்து விட்டது. அதற்கு இவர் வெளியிட்ட கருத்து இவரின் மீதான மதிப்பை அதிகப்படுத்தி இப்படத்தினைப் பகிர்ந்தவனுக்கு மன்னிப்பையும் கேட்க வைத்து விட்டது. 

பல்ப்ரீத்  கௌர்
அவர் வெளியிட்டிருந்த கருத்து இதுதான், "ஹாய் நான் பல்ப்ரீத்  கௌர், ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் சொல்லும்வரை இப்படம் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. இதை எடுத்தவர், என்னைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டிருந்தால் நான் புன்னைகைத்திருப்பேன் :). எப்படியாகினும் இப்புகைப்படம் வெளியானதால் அல்லது நேர்மாறான கவனத்தை இப்புகைப்படம் பெற்றதாலோ நான் அவமானமோ, துன்பமோ அடைந்ததாகக் கருதவில்லை ஏனென்றால் புகைப்படத்தில் இருப்பது நான் மட்டுமே. நானொரு ரோமத்துடன் கூடிய திருமுழுக்குப்(ஞானஸ்நானம்) பெற்றசீக்கியப் பெண். ஆம் எனது பாலினம் பல நேரங்களில் குழப்பம் தருகிறது நான் மற்ற பெண்களிடமிருந்து வேறுபட்டுத் தெரிகிறேன். திருமுழுக்குப்பெற்ற சீக்கியரின் நம்பிக்கைப்படி, புனிதமான இவ்வுடல் பாலின வேறுபாடற்ற தெய்வத்தினால் அருளப்பட்டது, இதை அப்படியே கெடாமல் தெய்வத்தின் விருப்பமாக வைத்திருக்க வேண்டியது, ஒரு குழந்தை தனது பெற்றோரின் பரிசை எப்படி நிராகரிக்காமல் வைத்திருக்கிறதோ அது போல சீக்கியர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட உடலை நிராகரிக்கக் கூடாது. என்னுடைய உடல் என்று அழுதுவாறே உடலை மாற்றிக் கொள்வதன் மூலமாக நாம் அகம்பாவத்தில் வாழ்வதால் நமக்கும் நமக்குள் வாழும் தெய்வத்திற்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக் கொள்கிறோம். சமூகத்தில் அழகை மேம்படுத்திக் காட்ட நான் எனது செயல்களின் மீதே கவனம் செலுத்துவேன். என்னுடைய அணுகுமுறை, சிந்தனைகள் மற்றும் செயல்கள் மட்டுமே மதிப்புக் கொள்ளும் என்னுடல் இறுதியில் சாம்பலாகப் போவதால் நான் ஏன் உடலினைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும் ?நான் இறந்த பிறகு என் தோற்றம் எப்படி என்பதை யாரும் நினைவு கொள்ளப் போவதில்லை என் குழந்தைகள் எனது குரலை மறந்து விடுவார்கள். பௌதீக நினைவுகள் மெதுவாக மங்கிவிடும். எனினும் என்னுடைய தாக்கமும் பாரம்பரியமும் நிலைத்திருக்கும். நான் என்னுடைய தோற்றத்தைக் கவனம் செலுத்துவதை விட்டு, உள்நிலை சார்ந்த பண்புகளையும் நம்பிக்கைகளையும் வளர்த்து, இவ்வுலகிற்காக எனது வாழ்க்கை முறையை மாற்றுவதில் எனது நேரத்தை செலவிடுவேன். எனவே எனக்கு முகமல்ல அதன் பின்னுள்ள புன்னகையும் மகிழ்ச்சியும் மட்டுமே இன்றியமையாதது :-) எனவே என்னை யாராவது ஒஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் கண்டால் வந்து ஹலோ சொல்லுங்கள். நான் இங்கே எனது புகைப்படத்தில் கண்ட அனைத்து நேர் எதிர்மறைக் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் இவ்விசயத்தில் நான் என்னையும் மற்றவரையும் தெளிவாகவே புரிந்து கொண்டுள்ளேன். அனைத்து சமய இளையஞர் மையம் (Interfaith Youth Core) கொடுத்த பேண்ட்டும், டீஷர்டும் வசதியாக உள்ளது. இந்த விளக்கம் தேவைக்கு அதிகமாக இருக்கும் என நம்புகிறேன், ஏற்பட்ட குழப்பத்திற்கும், நான் யாரையாவது புண்படுத்தியிருந்தாலும் மன்னிக்கவும் வேண்டுகிறேன்."


அதற்கு அந்தப் புகைப்படத்தை பகிர்ந்தவரின் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்தப் பெண்ணிடமும், சீக்கியரிடமும் அந்த படத்தை வெளியிட்டு அவப்பெயர் தேடித்தந்ததற்காக அந்த இணையத்தளத்திடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பெண்களின் உருவத்தைக் கிண்டல் செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் இது அர்ப்பணம். 

இன்னும் பல பேர் தெரிவித்த கருத்துக்கள் இங்கே,

பல்ப்ரீத்தின் ட்விட்டர்
 
 சில வருடங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த சபீனா பேகம் என்ற பெண் தாடியுடன் இருப்பதைப் போன்ற புகைப்படமொன்று தினகரனில் வெளியாகியிருந்தது அதனால் எனக்குக் கவலையெதுவுமில்லை என்றும் அந்தப் பெண் கூறியிருந்தார். என்பதும் நினைவுக்கு வருகிறது.
ஐரோம் ஷர்மிளா குறித்து எழுதியபோது வைத்த தலைப்பே இதற்கும் வைத்து விட்டேன்
 உலகின் மிக அழகான பெண்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இளைய ராஜாவின் இசையுடன் இசைந்தேன்

எனக்கு இசையைத் திறனாய்வு செய்யுமளவுக்கு பேரறிவெல்லாம் இல்லை. எனக்குப் பிடித்த பாடல்கள் அல்லது இசை ஆகியவற்றை நான் நேசிக்கிறேன். அதை எல்லோரும் என்னைப்போலவே ரசிக்க வேண்டும் என்ற நப்பாசையெல்லாம் எனக்கில்லை. குறிப்பிட்ட இசையமைப்பாளரின் பாடலைக் கேட்டால் உணர்வுப்பூர்வமாக இனிமையாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒருவரிருப்பார். எனக்கு இளையராஜா. நான் எல்லோருடைய இசையையும் கேட்பது வழக்கம். இன்னாரின் இசையமைப்பில் வெளிவந்த பாடல் என்று அதை வெறுப்பது கிடையாது. பரத்வாஜ், வித்யாசாகர் ஆகியோரும் பிடித்தவர்கள். 

தற்போதுதான் நீதானே என் பொன் வச்ந்தம் பாடல்கள் கேட்டேன். இரண்டு பாடல்கள் நான் எதிர்பார்த்தபடியும் வழக்கமாக நான் விரும்பும் பாடல்களைப் போலவும் இருந்தது. பெண்கள் என்றால் பொய்யா வகைப் பாடல்களையெல்லாம் நான் எப்போதும் விரும்புவது இல்லை, கருத்திலும் சரி இசையிலும் சரி. பலரும் பாடல்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்று சொல்லி விட்டார்கள். 

நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் நான் எதிர்பார்த்தபடிதான் இருந்தது. இதில் போதாமை என்று கருதினால் இளையராஜாவின் காலத்தை வென்ற சில பாடல்களைக் கொண்டு இதனுடன் ஒப்பிட்டால் அப்படித்தான் தோன்றும். அதே நேரம் இளையராஜா தான் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒரிரு பாடல்களை நான் மிகவும் விரும்பிக் கேட்பதுண்டு. மற்ற பாடல்கள் படத்தின் காட்சிக்குத் தோதாக அமைக்கப்பட்டிருக்கும்.
நாம் இசையைத் திரைப்படத்தின் வாயிலாகவே கேட்கிறோம். உண்மையில் இசை என்பதே திரைப்படங்களுக்கு உயிர் கொடுப்பவை. திரைப்படங்கள் என்பவை பெரும்பாலும் வணிக ரீதியிலானவை. ரசிகனுக்கு அலுப்புத் தட்டக்கூடாது என்பதற்காக சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல், சண்டைக்காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் பாடல் காட்சிகள் என நவரசமத் துண்டுகள் சேர்க்கப்பட்டு, மசாலாவாகப் பரிமாறப்படுகிறது. இது போன்ற பல அற்பமான படங்களின் துணையாகவே இசை இருக்கிறது. அதையே நாம் கேட்க முடிகிறது. எல்லாக் கலைஞர்களும் பாடலாசிரியர்கள், கதை ஆசிரியர்கள் என அனைவருமே மசாலா திரைப்படங்களுக்காக தமது தனித்தன்மைய விட்டு வணிகத் திரைப்படத்திற்குத் தேவையானதைத் தர வேண்டியுள்ளது. அக்குறிப்பிட்ட வட்டத்துக்குள் தமது திறமையை வெளிக்காட்ட வேண்டியுள்ளது. 

இப்படியான பல நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜா அப்படங்கள் மறந்து போனாலும் பாடல்கள் இன்னும் நிற்கின்றன. ரஹ்மானும் வேதனைப்பட்டார் ஒரு முறை இசை என்றாலே திரைப்படங்கள் மட்டும்தானா என்று. வெளிநாடுகளில் இசைக்கென்று ஒரு தனி இண்டஸ்ட்ரியே இருக்கிறது என்று யுவன் சொன்னார். அது உண்மைதான் வெளிநாடுகளில்தான் இசைக்கலைஞர்களுக்கு தனி ஒளி வட்டம் இருக்கிறது. அது கொஞ்சம் அதிகம்தானென்றாலும், ஆட்டுவிக்கப்படும் பொம்மை நடிகர்களுக்கிருக்கும் புகழை விட அது பொய்யானதில்லை. ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்ததால்தான் அவர் சிறந்த இசையமைப்பாளர் என்பது இசையை இழிவு படுத்துவதாகும். ஆஸ்கர் என்பவை அமெரிக்க ஹாலிவுட் படங்களுக்கு கொடுக்கப்படும் விருது மட்டுமே. ஒரிரு வெளிநாட்டுப்படங்களுக்கும் கொடுப்பார்கள். அது அமெரிக்காவின் விருது என்பதால் மட்டும் அது பெரிதாகப் புகழப்படுகிறது. ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் ஆனால் ஆஸ்கர் என்பது அதற்குரிய அங்கீகாரமல்ல. நடிகர்களுக்கு அதிகமான புகழ் நிறைந்த இந்தியாவில் ரஹ்மான் மட்டுமே நடிகரல்லாமல் அதிகம் பேரை கவர்ந்த கலைஞராக இருக்கிறார். 

ஒருவரைப் பிடிக்கிறது என்பதற்காக மற்றவரை மட்டம் தட்டி அவரை விட இவர் சிறந்தவர் என்ற சண்டைக்கெல்லாம் நான் போவதில்லை. இளையராஜாவின் இசை எனக்குத் தனித்துவமாகத் தெரிகிறது அவ்வளவே. 

இளையராஜா பழைய அளவுக்கு இசையமைப்பதில்லை, சரக்கு தீர்ந்து விட்டது என்று சொல்வதையும் நான் ஏற்கவில்லை. அவரது முத்திரையை அவ்வப்போது அவர் பதித்துதான் வருகிறார். 80 களில் இருந்த இசை வேறு, 90 களில் வேறு 2000 களில் வேறு தற்போது வேறு. இசை திரைப்படத்தைச் சார்ந்துதான் வெளியாகிறது. திரைப்படங்களைப் பொறுத்தும் இசையின் தன்மை மாறுபடுகிறது. வேகமாக வந்து போகும் காலத்தில் தாம் தூமென்று தட்டிப் போட்டால்தான் இசை இப்போது இறக்குமதியாகும் ஒரு மாதம் முடியும் முன்பு மறக்கப்பட்டு காற்றில் போய்விடும். இங்குதான் இளையராஜாவின் சரக்கு விற்பனையாவதில்லை. அதனால் அது தாழ்ந்தது என்று பொருளில்லை. 

அன்னக்கிளி உன்னைத் தேடுதே - அன்னக்கிளி - 1976 - ஒரு காலம்

நீதானே என் பொன்வசந்தம் - நினைவெல்லாம் நித்யா - 1982 - ஒரு காலம்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி - 1991 - ஒரு காலம்

இளங்காத்து வீசுதே - பிதாமகன் - 2003 - ஒரு காலம் 

என்னோடு வா வா - நீதானே என் பொன்வசந்தம் - 2012 - ஒரு காலம் 

இதில் என்னைத் தாலாட்ட வருவாளா என்ற பாடல்தான் எனக்குத் தெரிந்து நீண்ட நாட்களாக விரும்பிக் கேட்கப்பட்டது. 

இளையராஜாவின் பழைய சாதனைகளுடன் ஒப்பிடும்போது இது நிறைவில்லை என்றாலும் எனக்கு பெரிய குறையொன்றுமில்லை. இதற்கு முன்பு நான் கேட்ட பாடல்கள் படத்திற்கு ஒன்று வீதம் என்னைக் கவர்ந்தது. 


நண்பர்களுடன் FM கேட்டுக் கொண்டிருந்த போது தில் படத்திலிருந்து உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா -  பாடல் போட்டார்கள். அதைக்கேட்ட நண்பர்கள் இதைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றார்கள். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல், கவிதையைப் போன்று எழுதப்பட்டது. இப்படிச் சொன்னவுடன் எனக்கு எரிச்சலே வந்து விட்டது இவர்களுக்கெல்லாம் ரசனையே இல்லை என்று.  அவர்களோ "முப்பொழுதும் உன் கற்பனைகள்" பாடல் வரிகளை மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அது எனக்குக் கொஞ்சம் கூட ஒட்ட வில்லை. இசை அவரவர் விருப்பம் சார்ந்தது. 

எந்த இசை உங்களை மயக்குகிறதோ அதில் கரையுங்கள். நானும் அப்படியே எனக்கு இளையராஜாவின் இசை. பவதாரிணி, சுஜாதா, ஷ்ரேயா கோஷல் போன்றோரின் குரல்வளத்துக்கு நானடிமை.

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் எனக்கு பிடித்த பாடல்கள். 

என்னோடு வா வா . 


வானம் மெல்லக் கீழிறங்கி வந்ததே 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment