நாட்டுப்பற்று எனப்படுவது யாதெனில் ??

நாட்டுப்பற்று என்றால், டெண்டுல்கரின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்வது, அப்துல்கலாமின் பொன்மொழிகளைப் பகிர்வது, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் அதிக இந்தியர்கள் பணிபுர்வது, இந்திய ராணுவத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வது, இந்தியா பல்லாயிரம் கோடி செலவில் செயற்கைக் கோளை ஏவினால் பெருமை கொள்வது, கிரிக்கெட்டில் வென்றால் பெருமை கொள்வது, அவ்வப்போது ஜெய் ஹிந்த் போடுவது இவைகளா ?


ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேர்ந்தது. ஒலிம்பிக் அணிவகுப்பின் போது இந்திய அணியினர் நடந்து செல்வது போல இருந்த அதில் சானியா சிரித்தபடி சென்று கொண்டிருந்தார். அதில் நடந்து சென்ற அனைவரின் கையிலும் இந்தியக் கொடி இருந்தது. சானியாவின் கையில் அது இல்லை. இதை வைத்து சானியாவைச் சாடி இருந்தனர். முதலில் இது போட்டோஷாப்பில் வைத்து மாற்றப்பட்ட படம் என்பதால் இது ஒரு பொருட்டாகவே கருதப்பட வேண்டியதில்லை. அப்படியே அவர் கையில் கொடி இல்லாவிட்டால் என்ன குடியா முழுகிப் போய்விடும் ?


தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்று வருவதால் நாட்டுப்பற்றுணர்வு தூசிதட்டப்பட்டுக் கிளப்பப் பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பதக்கம் பெறும் நபர் கொண்டாடப் படுவார். போட்டிகள் முடிந்தவுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கண்டுகொள்ளப்பட மாட்டார். அவருக்குத் திறமையிருந்தால் ஏதாவது நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக மாறினால் ஊடகங்களிலும் அந்நிறுவனத்தின் பொருட்கள் விற்கும்  அங்காடிகளிலும் அங்கங்கே அவரது முகத்தைக் காட்டுவார்கள். ஏனென்றால் நாட்டுப் பற்றை வணிகம் செய்யத் தோதானவர்கள் கிரிக்கெட் வீரர்கள்தான்.

இந்த நாட்டுப்பற்றுதான் என்னவென்று எனக்குப் புரியவில்லை. இந்தியாவின் நாட்டுப்பற்று எனப்படுவது என்னவென்றால் முதலில் வருவது பாகிஸ்தானை வெறுப்பது(அதே போர்வையில் முஸ்லிம் வெறுப்பு), சீனாவை வெறுப்பது. அதே பாகிஸ்தானியாக இருந்தால் இந்தியாவை வெறுப்பது பாகிஸ்தானிய தேசப்பற்றாக இருக்கும். (அமெரிக்க தேசபக்தி என்றால் ரஸ்யாவை வெறுப்பது. இலங்கை தேசபக்தி என்றால் தமிழர்களை வெறுப்பது.) சொந்த நாட்டை நேசிப்பதை விட எதிரி எனக் கருதப்படும் நாட்டை வெறுப்பது, சாடுவது, நக்கலடிப்பது நாட்டுப்பற்றாக இருக்கிறது. பிறகு பொத்தாம் பொதுவாக அரசியல்வாதிகளை வெறுப்பார்கள். அதே சமயம் அம்பானியைப் போற்றுவார்கள். ஏனென்றால் அவர் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் என்பார்கள். இது போன்ற பெரும் பணக்காரர்கள் என்றாலே அவர்கள் தாமிருக்கும் நாட்டின் ஏழை பாழைகளை சுரண்டித்தான் சொத்து சேர்க்க முடியும். அரசாங்கத்தையே ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள். அமெரிக்காவின் வால்மார்ட் என்றால் சிறிய வணிகர்கள் எத்தனையோ பேரின்  வயிற்றலடித்துத்தான் அவர்கள் ஆதிக்கம் செய்ய முடிகிறது. வால் மார்ட் இந்தியாவிற்கு வந்தால் பல வணிகர்கள் தூக்கில்தான் தொங்க வேண்டும்.

அதே போல்தான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் வந்த பிறகு எத்தனை தள்ளுவண்டிக்காரர்களுக்கு பிழைப்பு போனது என்பது தெரியாது. ஆனால் இவர்கள்தான் முன்மாதிரிகளாகக் கொண்டாடப்படுகிறார்கள். இந்தியப்பொருளாதாரத்தைக் கையில் வைத்திருக்கும் இவர்கள் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தியவர்களாகக் கொண்டாடப் படுகிறார்கள்.

அடுத்ததாக கிரிக்கெட் காரர்கள் நாட்டுப் பற்றின் அடையாளமாகக் கொண்டாடப் படுகிறார்கள். முதலில் விளையாட்டுப் போட்டிகள் என்பவையே நட்புணர்வை வளர்ப்பதற்காகத்தான் நடத்தப்படுகின்றன. ஆனால் உண்மையில் எதிரி நாட்டுடன் நடக்கும் போரைப் போலவே சித்தரிக்கப்படுகின்றன. வணிக நோக்கில் திட்டமிட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றன. நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகள் பிரபலமாக இருப்பதே இப்போலி நாட்டுப்பற்றின் முகத்திரையைக் கிழிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் கிரிக்கெட்டுக்குப் பதிலாக கால்பந்துப் போட்டிகள். கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால் ஏதோ இந்தியாவே வென்று விட்டது என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் உலக அழகிப் போட்டிகள், பிரபஞ்ச அழகிப்போட்டிகள் தவறாமல் வெளிச்சம் கொடுக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இந்திய அழகிக்கு இம்முறை இத்தனாவாது இடமே கிடைத்தது என்று உச் கொட்டுகிறார்கள். இதில் தோற்றதற்கெல்லாம் இந்தியர்களை வருத்தப்பட வைக்கிறார்கள். வென்று விட்டாலோ பெருமைப்படச் சொல்கிறார்கள்.

கிரிக்கெட் பற்றி சொல்லும் போதெல்லாம் எதற்கெடுத்தாலும் உலகிலேயே என்ற சொல்லை முன்னால் போட்டுக் கொள்கிறார்கள். உலகிலேயே யாரும் செய்யாத சாதனையைச் செய்து விட்டார் பெருமைப்படுங்கள் என்கிறார்கள். டெண்டுலகர் சொன்னார். எனது சாதனையை ஒரு இந்தியர் முறியடிக்க வேண்டும். இப்படிச் சொல்வதன் மூலம் தனது இந்தியப் பற்றைக் காட்டிக் கொள்கிறார். ஆனால் இவரே ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்கிறார். நான் இந்தியாவிற்காக மட்டுமே விளையாடுவேன் என்று சொல்லவில்லை. எல்லா நாட்டின் நிறுவங்களின் தயாரிப்புக்களையும் விளம்பரம் செய்கிறார். ஒப்பந்தம் செய்கிறார். ஆனால் இவரையே ஒருமுறை இந்தியக் கொடியின் நிறத்திலிருந்த கேக்கை வெட்டியதால் இந்தியக் கொடியை அவமானப்படுத்தி விட்டார் என்று பிரச்சனை செய்தார்கள். இரண்டு நடிகர்களை எதிர் துருவங்களாக நிறுத்தி தொடர்ந்து விளம்பரப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான சந்தையை திரைப்பட முதலாளிகள், ஊடகங்கள் அதிகமாக்கி அதன் மூலம் தானும் இலாபமீட்டுகிறார்கள். ஒரு நடிகனின் படம் தோல்வியடைந்தால் எதிர்நடிகனின் ரசிகர்கள் மகிழ்வதும், தன்னுடைய விருப்ப நடிகனின் படம் வென்றால் மகிழ்வதும் அடிப்படையே எந்த ஒரு இல்லாவிட்டாலும் தொடர்ந்து நடக்கிறது.

இந்த நாடுகள் எனப்படுகின்றவையே பிரிட்டிஷ் காரனால் பிரித்தும், சேத்தும் வைக்கப்பட்டுக் கீறப்பட்டக் கோடுகள்தான். இந்த எல்லைகள்தான் நாடுகளாக அறியப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெருமை பேசிக்கொள்கிறார்கள். ஒரு முறை பாகிஸ்தானிய இணையதளமொன்றில் பார்த்தது நினைவிருக்கிறது. சிந்து சம்வெளி நாகரிகம் கண்டறியப்பட்ட பகுதி தற்போது பாகிஸ்தானியர் வசமிருப்பதால், பாகிஸ்தான் நாகரிகம்தான் உலகிலேயே சிறந்தது, பழமையானது என்ற வகையில் எழுதியிருந்தார்கள். இதுமாதிரியான கதைகளை தமிழ்த் தேசியம், இந்துத்துவம் ஆகியவற்றைப் பரப்புகிறவர்களும் தங்கள் நோக்கத்திற்கேறப் வளைத்தும் திரித்தும் பயன்படுத்தி வருகின்றனர். நானும் கொஞ்ச காலம் இந்தப் போலி நாட்டுப் பற்றில்தான் மூழ்கிக் கிடந்தேன். அதாவது ஒரு போட்டியில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் விளையாடும் போது, ஒரு இந்தியன் பாகிஸ்தான் தோற்க வேண்டுமென நினைத்தால் அது இந்திய தேசபக்தியாகாது, அது பாகிஸ்தான் வெறுப்பு மட்டுமே.

இந்த நாட்டுப்பற்று உண்மையில் கடைப்பிடிக்க முடியாதது. எல்லா நாடுகளுமே பிறரைச் சார்ந்துதான் இருக்கின்றன. இவ்வகையான நாட்டுப்பற்றைப் பின்பற்றுகிறவர்களின்படி பார்த்தால், வெளிநாடுகளுக்குப் பிழைக்கச் செல்கிறவர்கள், படிக்கச் செல்கிறவர்கள், வேலை கிடைத்துச் செல்கிறவர்கள் தேசத்துரோகிகள்தான். ஃபேஸ்புக்கில் இன்னொரு பகிர்வும் உலா வருகிறது, இது 1950 காலத்து ஏகாதிபாத்திய எதிர்ப்பு பாணியிலிருந்தது. அதாவது இந்தியத் தயாரிப்புகளை வாங்குங்கள், வெளிநாட்டு தயாரிப்புக்களை வாங்காதீர்கள் என்று. எடுத்துக்காட்டாக பாரதி ஏர்டெல்லை ஆதரியுங்கள், வோடஃபோனைப் புறக்கணியுங்கள் என்று. சரி அப்படியே இந்தியத் தயாரிப்புக்களை ஆதரித்தாலும், அந்த நிறுவனம், அதன் முதலாளி பணக்காரனாகலாம். சராசரி இந்தியனுக்கு ஒரு நன்மையுமில்லை. இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் வளர்ச்சியில்லை. அதிருக்கட்டும், இதை அப்படியே வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியத் தயாரிப்புக்களுக்கு எதிராகச் செய்தால் இந்திய தேசபக்தர்கள் என்ன செய்வார்கள்.

ஒரு பொருள் தேவை கருதித்தான் ஏற்றுக் கொள்வதா நிராகரிப்பதா என்று பார்க்க வேண்டுமே தவிர எந்த நாட்டிலிருந்து வருகிறதா என்றா பார்க்க முடியும். புற்று நோய்க்கான மருந்து அமெரிக்காவிலிருந்து வருகிறது. அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வால்மார்ட்டையோ, கோக், பெப்சி மற்றும் நொறுக்குத்தீனி ஆகிய வற்றை ஏற்றுக் கொள்ளாம எதிர்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு மருந்து கிடைக்காத பட்சத்தில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பின்னைய பொருட்கள், இங்கு ஏற்கெனவே பல பேருக்கு வாழ்வளித்து வரும் தொழில்களை அழித்து, அதைனைச் சார்ந்தவர்களையும் அழித்து, ஒரு புதிய நுகர்வுக் கலாச்சாரத்தை நிறுவி, இயற்கையையும் பாழாக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு தேநீரை பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியபோது அவை போதைப் பொருட்கள் என்று கருதி எதிர்க்கப்பட்டன.

எல்லா நாட்டு அரசும் பணக்காரனுக்கு ஆதரவாகவும் ஏழைகளுக்கு எதிராகவும்தான் இருக்கின்றனர். எல்லா நாட்டிலும் ஏழைகள்தான் சிரமப்படுகின்றனர். பட்டினியால் வாடுகின்றனர். எல்லைக் கோடுகள்தான் அவர்களைப் பிரிக்கிறது. நம் நாட்டு ஏழைகள் சிரமப்படக் கூடாது என எந்த நாட்டுப் பணக்காரனும் நினைப்பதில்லை.

நிலைமை இப்படி இருக்க ஒரு கொடியை வைத்து இதைப் பிரச்சனையாக்குகிறவரைப் பார்த்தால் எரிச்சல் வருகிறது. நம் நாட்டின் தேசிய கீதம் என்று ஒரு பாடல் இருக்கிறது. அதன் பொருள் என்ன தெரியுமா ? அதில் வரும் சில பகுதிகளின் பெயர்கள் இருக்கிறதல்லவா, விந்திய மலை திராவிட குஜராத்தி மராத்தி என்வெல்லாம் வருகின்றன. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியா வந்த போது அவரை இந்த (விந்திய மலை திராவிட குஜராத்தி மராத்தி) பகுதிகளெல்லாம் வாழ்த்துகின்றன என்ற பொருளில் பாடப்பட்டதுதான் அந்த பாடல், அதுதான் இன்னமும் தேசிய கீதமாக இருக்கிறது.

இந்தப் புகைப்படத்தை வைத்து அவர் இந்தியாவை மதிக்காமல் பாகிஸ்தானியாகிவிட்டார், என்று சொல்ல முனைகிறார்கள். அவர் முஸ்லிம் என்பதால் இந்த வெறுப்பை விதைக்கிறார்கள். சானியா குட்டைப்பாவாடையும், இறுக்கமான பனியனும் அணிந்ததால்தான் பிரபலமானார் என்று சொல்கிறவனுக்கும், சானியாவை போர்ன் புகைப்படங்களில் மார்ஃபிங் செய்தவனும் இந்த நாட்டுப்பற்றுப் புரளியைக் கிளப்புகிறவனும் ஒரே வகையானவர்கள்தான். இந்தக் குப்பையெல்லாம் நாம் புறந்தள்ளுவோம். இந்த மாதிரியான நாட்டுப்பற்றுதான் பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் மகிழ்ச்சியடையச் செய்கிறது. நமக்கு அவ்வளவு நாட்டுப்பற்றெல்லாம் கிடையாது. குண்டு எங்கு வெடித்தாலும் கவலைப்படும் தேசத்துரோகம்தான் என் கட்சி.

அண்ணா ஹஸாரே, அப்துல் கலாம் வகையில் அடுத்த நாட்டுப்பற்றில் முக்கியமான ஒரு பிரபலம், சத்யமேவ ஜயதே அமீர்கான். இவர் பல உண்மைகளைப் பேசினார் தனது நிகழ்ச்சியில், இல்லையென்று சொல்ல வில்லை. அதற்கு ஒரு மிகப்பெரிய வணிக விளம்பர நோக்கங்கள் நிறைந்த நிகழ்ச்சி என்பது சந்தேகமில்லை. இவர் பேசியவற்றில் இரண்டு, குழந்தைகள் பாலியல் வன்முறை, இன்னொன்று தண்ணீர் வளப்பாதுகாப்பு மாதிரியான ஒன்று. அமீர்கான் நினைத்தால் பாலிவுட் காரர்களை துகிலுரிப்பு நடனங்களைக் கைவிடுமாறு கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவையும் பாலியல் வன்முறையைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடுத்து தண்ணீர் குறித்தது. இவருக்கெல்லாம் எந்தத் தகுதியும் இல்லை தண்ணீர் குறித்து பேச. காரணம் இந்தியா பாலைவனம் ஆனால் அதற்கு முக்கியக் காரண்மாக இருக்கப்போவது கோக்கும், பெப்சியும்தான் இவர் கோக்கின் தூதுவர் இவருக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது. லகான் என்ற படத்தில் இது போன்ற போலி தேசபக்தியை, வெறியை, உணர்ச்சியைத் தூண்டிக் கல்லாக் கட்டினார். இன்னொரு போலி தேசபக்திப் படம், ரங்தே பசந்தி, பகத் சிங்காக நடித்து தமது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார் அந்தப் படத்தில் அங்கங்கே கோக்கின் மறைமுக விளம்பரங்கள். இவர் நிகழ்ச்சியில் பேசும் பிரச்சனைகளுக்காக பலர் தமது வாழ்க்கையே அர்ப்பணித்துப் பேசியும், போராடியும் இருக்கிறார்கள். ஆனால் இவர் போன்ற நடிகர்கள் பேசினால்தான் கேட்பேன் பீல் பண்ணுவேன் என்று மக்கள் இருக்கிறார்கள். பிரபல நடிகர்கள் சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்று சொன்னால் கூட கன்னத்தில் போட்டுக் கொள்ளும் திரைப்பட பக்தர்கள் இருக்கும் வரை இவர்கள் கொடி பறக்கும்.

அடுத்தவர் ஷாரூக். சக் தே படத்தில் இது போன்ற போலி தேசபக்தி உணர்வைத் தூண்டி பணம் பார்த்தார். கோக் பெப்சி தடை செய்யப்பட்ட பின்பு இவர்தான் அமெரிக்க பெப்சிக்கு ஆதரவாகப் பேசினார். ஆனா அதே அமெரிக்கா இவர் முஸ்லிம் பெயரை வைத்து இவரை அவமானப் படுத்தியது. அதற்காக இவருக்கு உதவி செய்யச் சென்றது யார் ? பெப்சிக்காக இவர்  எதிர்த்து பேசிய இந்திய அரசு. இதுதான் அரசு. இவர்கள் சொல்கிறார்கள் எது நாட்டுப்பற்று எது துரோகம் என்று.  இப்போது நாட்டுப் பற்று என்றால் அது அணு உலையை எதிர்ப்பதுதான். அதை யார் ஆதரிக்கிறார்கள் யார் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் தெரியும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

உயர்த்தப்பட்டவன்


அவன் கால்கள் பதிந்ததால் அந்த மண்ணை நான் விலக்கி வைக்கவில்லை
அவன் கைகள் களை பறித்ததால் அந்தத் தாவரத்தை நான் சமைத்துண்ணாமல் இருக்கவில்லை
எங்கோ அவன் கைகள் பட்டு வரும் பணத்தைத் தொடுவதற்கும் நான் கூச்சப்படவில்லை
அவன் அறுத்து வெட்டித் தந்த ஆட்டை தின்பதற்கும் எனக்கு கசக்கவில்லை
அவன் நுரையீரல் தொட்டதால் காற்றை நான் சுவாசிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை
அவன் உழைப்பில் விளைந்ததை நான் ஏற்றுக் கொள்ள மறுத்ததில்லை
இருப்பினும் அவனை நான் மனிதனாக மதித்ததில்லை
வீட்டிற்கு அருகில் அனுமதித்ததில்லை
பெரியப்பா வயது மனிதனாகிலும் அவனை டேய் என்றேயழைப்பேன்
அதட்டும் தொனியிலேயே நலம் விசாரிப்பேன்
ஏனென்றால் நான் உயர்த்தப்பட்டவன்
காட்டை விற்றுக் கள்ளைக் குடித்தாலும்
நான் குடியானவனே, குடிகாரனில்லை
ஏர் பிடித்த பரம்பரையைச் சார்ந்தவன் ஏற்றம் பெற வேண்டும்
ஏரைப் பிடிக்காமலேயே !
அவன் மட்டும் எனக்கு குடைபிடிக்க வேண்டும்
ஏனென்றால் நான் உயர்த்தப்பட்டவன்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கறுப்பு ஜூலை - நிமலரூபனின் வடிவில் இன்னும் தொடரும் ஈழத்தின் சோகம்

நான் பிறந்ததிலிருந்தே இதுவரையிலும் எந்த ஒரு நல்ல செய்தியும் கேள்விப்பட வில்லை. போர் முடிந்த மூன்று வருடங்களிலோ ஒரே வகையான செய்திகளை மட்டுமே கேட்க இயலுகிறது.

தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும்.

இந்தியா வலியுறுத்தும்.

தமிழர் பகுதியிலிருந்து இராணுவம் திரும்பப் பெற மாட்டாது.

சிங்களர் குடியேற்றம்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விளக்கம் கோரி மக்கள் போராட்டம்

வெள்ளை வாகனத்தில் அடையாளம் தெரியாதவரால் கடத்தல்

இராணுவக் கட்டுப்பாடு

இந்தியாவிலிருந்து ஏதாவது ஒரு கெழடு இலங்கைக்குப் பயணம், தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்க வலியுறுத்தல்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா நலத்திட்ட உதவி

மேற்கண்ட செய்திகள்தானே திரும்பத் திரும்பக் காண முடிகிறது. போர்க்குற்றம் ஆ ஊ எனப் பூச்சாண்டி காட்டியவர்கள், ஆவணப்படம் எடுத்தவர்கள், ஐநாவில் முறையிட்டவர்கள் மகிந்தவை விருந்தினராக அழைக்கின்றனர்.

29 வருடங்களுக்கு முன்பு இந்த நாளில்தான் சிங்களப் பேரினவாதத்தின் கோரமுகத்தில் உச்சத்தை ஈழம் சந்தித்தது. போர் முடிந்து 3 வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் அவர்களது வாழ்வில் எந்த ஒரு வசந்தமும் வரவில்லை. சொல்லப்போனால் 29 வருடங்களுக்கு முன்பு அல்லது கலவரத்தின் பின் போர் தொடங்கிய பின்பு நடந்த கைதுகள் காட்டிக் கொடுப்புகள், சித்ரவதைகள், கொட்டடிக் கொலைகள் இன்னும் தொடருகின்றன. போர் மட்டும் இல்லை. சிங்களப் பேரினவாதம் இன்னும் வளர்ந்து தமது கோரப்பசிக்கு சிறுபான்மையினரை விழுங்கி வருகிறது.

எங்கும் இராணுவ ஆட்சியே நடக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 650 பேர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளனர். இதில் லலித், குகன் முக்கியமானவர்கள். சிங்கள இராணுவமே இதில் ஈடுபடுகிறது. ஆக்ரமிக்கப்பட்ட தமிழ் நிலங்களில் புதிது புதிதாக புத்தர் சிலைகளும், சிங்கள ராணுவமும் குடியேற்றப்படுகின்றனர். இஸ்லாமியரின் பள்ளிவாசல்கள் புத்த பிக்குகளின் தலைமையில் இடிக்கப்படுகின்றன.


தற்போது புலி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபன் என்ற இளைஞனின் கதை குட்டிமணி, ஜெகனின் கொலைகளை நினைவூட்டுகிறது. இந்த நிலையில் சிங்களர் தரப்பிலிருந்தும் சிலர் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர் என்பது மட்டுமே நம்பிக்கை அளிக்கும் செய்தியாகும். 
இத்தனை பிரச்சனைகளை சிறுபான்மையினர் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இந்தியா தமிழீழம் என்ற கோரிக்கையை, விடுதலைப் புலிகளின் பேரால் தடை செய்திருப்பது என்ன வகை நியாயம் என்பது நன்றாகவே புரிகிறது. இதற்குக் கருணாநிதியைச் சாடிப் பயனில்லை. 


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

எமது பணி குறை சொல்லிக் கிடப்பதே !- இவர்கள் இப்படித்தான் - 2

இந்த வலைப்பூ, அல்லது ஃபேஸ்புக், கூகிள் ப்ளஸ் இன்னும் நாம் பல இடங்களில் இணையத் தளங்களில் தமிழில் எழுதவும் படிக்கவும் பரிமாறிக் கொள்ளவும் இயல்கிறது. இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும். யாரோ ஒருவரின் தனிப்பட்ட ஆர்வம் அதே ஆர்வமுடைய பலருடன் இணைந்து கூட்டு முயற்சியால்தான் உருவாகியிருக்கிறது. அவரகள் கடின உழைப்பின் பலனைத்தான் நாம் நோகாமல் நொங்கு தின்பது போல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு அரசு செய்ய வேண்டிய வேலையையெல்லாம் தனிநபர் ஆர்வத்தாலும் அவர்களின் தன்னலம் கருதா உழைப்பினாலும்தான் அனைவருக்கும் சாத்தியமாகியிருக்கிறது. இது அவர்கள் மொழியின் மீது கொண்ட தீராத காதலினால்தான் அவர்கள் உந்தப் பட்டிருக்கிறார்கள்.

எம்புருசனும் கச்சேரிக்கி வந்திருக்கிறான் என்ற பாணியில் சிலர் நக்கலடிக்கிறார்கள். எதை ? ஃபேஸ்புக், ஃபைர்ஃபாக்ஸ் முதலியவற்றை முறையே முகநூல், நெருப்பு நரி என மொழிமாற்றம் செய்து சிலர் பயன்படுத்துவதை. எனக்குக் கூட இதில் பெரிய ஆதரவு இல்லை. காரணம் பெயர்ச்சொல்லை நாம் மொழிமாற்றம் செய்து பயன்படுத்தினாலும் அந்நிறுவனம் சொல்லும் பெயரே அறுதியானது. அதை நம் தமிழார்வத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டாலும் அப்பெயரை பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனத்தைச் சுட்டாது. நிற்க! பின்பேன் நான் அதற்கு கொடி பிடிக்க வேண்டுமென்றால் வேறு எப்படித்தான் தமிழார்வத்தை வளர்ப்பதாம் !! நம்மைப் போன்ற சாமானியர்கள்தான் இதைக் கடைப்பிடித்துப் பரப்ப வேண்டும். வேறு யார் செய்வது ?

இதே போல் நக்கல்களையும் நையாண்டிகளையும் தாண்டித்தானே இணையத்தில் தமிழைப் புகுத்த முடிந்தது. இப்போது படிக்காதவர்கள் கூட ABCD தெரியாதவர்கள் கூட வேண்டுமென்றே ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கின்றனர். ஆங்கிலத்தில் பேச முயற்சிப்பதை வரவேற்கலாம். ஆனால் வேண்டுமென்றே ஆங்கிலத்தை இடையிடையே புகுத்துவதுதான் சகிக்க முடியவில்லை. என்னுடன் ஒரு ஓட்டுநர் தங்கியிருக்கிறார். அவருக்கு அலைப்பேசியிலுள்ள ஆங்கிலத்தில் பதிவு செய்திருப்பதால் பெயர்களையே வாசிக்க சிரமப்படுவார். அவர் பேசும்போது அடிக்கடி சொல்வது I "means"  என்று சொல்லிவிட்டு நான் என்ன சொல்றன்னா? என்பார். பிறகு நான் சொல்லித் திருத்தி விட்டேன். இது எதற்கு ஆங்கில மோகமா இல்லை வேறு எதாவதா ? இன்னும் பல வாகன ஓட்டுநர்கள் வண்டி நிற்க வேண்டிய இடம் வந்தால் கத்துவார்கள் ஓஓஓஓல்ல்டீங்க் !! என்று. "Hold on" என்பதைத்தான் Hold in ஆக்கி ஓல்டீங் என மாற்றி விட்டார்கள். உலக மகா எரிச்சலைக் கிளப்பும் இன்னொரு வசனம் நீங்களும் கேட்டிருக்கக் கூடும். பட்டானா வந்து (Butஆனா வந்து என்று கொள்க),  "நடு சென்டரு". இவர்களைக் கிண்டல் செய்வதற்காக நான் இவைகளைச் சொல்ல வில்லை. இப்படிப் பாமரர்களையும் ஆங்கில மோகம் ஆட்டிப் படைக்கிறதே என்பதுதான் என் கவலை. அதற்குத் தமிழிலேயே பேசிட்டுப் போவதற்கென்ன. இல்லை ஆங்கிலத்திலேயே But அல்லது center என்று சொல்ல வேண்டியதுதானே ? ஆங்கிலச் சொல்லின் பின்னால் ஊ போட வேண்டாமே!

ஒரு முறை நான் முன்பு வேலை செய்த அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. என்னுடைய மேலாளர் உரை நிகழ்த்தினார். அப்போது சில கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. இடையில் தமிழில் கூட உரையாடினோம்.  அப்போது அவர் "Ethics & Values" குறித்துப் பேசினார். அப்போது "ethics" என்றால் என்ன என்று கேட்டார். எல்லோருக்கும் தெரிந்ததுதானே விதிகள் அல்லது விதிமுறைகள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் Values என்றால் என்ன ? மதிப்பு என்பது சரியாகுமா ? ஒரு சில இடங்களில் மதிப்பு என்ற சொல் சரியானது. ஆனால் இவ்விடத்தில் விழுமியம் என்பதே சரியானது. இதை நான் ஒரு நூலில் கண்டது நினைவிருந்தது. அதைச் சொன்னேன். அதிலும் விழுமியத்தில் வருகின்ற "ழு" என்பதை அழுத்திச் சொன்னேன். எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஒரு பெண் "எங்களுக்குத் தெரியலங்கறதுக்காக சும்மா என்ன வேணாலும் சொல்லாதிங்க" என்று கிண்டலடித்தார். இல்லை அவர் தமிழைக் கிண்டலடித்தார் என்று நான் சொல்ல வரவில்லை. என்னை ஒரு நட்புரிமையில்தான் அப்படிச் சொன்னார். எனது கவலை என்னவென்றால் இப்படியே ஒவ்வொரு சொல்லாக ஆங்கிலத்திற்கு மாறினால் அல்லது தமிழ்ச்சொல்லை அறியாமல் சென்றால் பின்பு என்னவாகும்.

எனக்கு ஆங்கிலம் சரியாக வராது. இருந்தாலும் அலைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பும்போதோ அல்லது ஆர்குட், ஃபேஸ்புக், மின்னஞ்சல் அரட்டையிலோ நான் ஆங்கிலத்தில்தான் செய்வேன். ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக என்பது முதல் காரணம். ஆங்கில எழுத்தில் தமிழில் எழுதுவது எனக்குப் பிடிக்காதது இரண்டாவது காரணம். ஆங்கில எழுத்தில் தமிழில் எழுதுவது என்பதைக் காட்டிலும் ஆங்கிலத்திலேயே எழுதுவது சுலபம். நிறையப்பேர் என்னை விட ஆங்கிலம் சிறப்பாக எழுதவும் பேசவும் இயன்றவர்கள் கூட தமிழை ஆங்கிலத்தில்தான் எழுதி கருத்தினை, பின்னூட்டமிடுகிறார்கள். சிலர் நிலைத்தகவல் கூட ஆங்கில எழுத்தில் தமிழை இடுகிறார்கள். ஏன் தமிழ்தான் சுலபமாக வருகிறது. தமிழில் தட்டச்சு செய்வது ஆங்கிலம் போல எளிதாக இருந்தால் நிறையப்பேர் தமிழில்தான் செய்வார்கள்.

இப்படி இணையத்தில் தேவையில்லாதவற்றையெல்லாம் தமிழ்ப்படுத்துவதாக கொக்காணி காட்டுகிறவர்கள், வேறு மாற்றுவழியிருந்தால் தெரிவிக்கவும். தங்கள் பொன்னான யோசனையைச் செவிக் கொண்டு தமிழை வளர்ப்பவர்கள் தொண்டு செய்வார்கள். அம்மா, ஆத்தா, விலைமகள் வகையிலான வசைச் சொற்களையெல்லாம் தூயதமிழில் பயன்படுத்துகிறார்கள். அதே நேரம் ப்ளீஸ், ப்லாக், போஸ்ட், கமென்ட்டு, ஷேர், ஸ்டேசன், டவுட்டு, ஃபேக்ட்டு, சார் என்றெல்லாம் திரைப்படங்களின் குப்பை வசனங்களையெல்லாம் மாய்ந்து மாய்ந்து ஆங்கிலத்தில் எழுதுவதேன். இப்படிக் கண்ட மேனிக்கு ஆங்கிலத்தைக் கலந்து எழுதிவிட்டு தம்மை பெருமைப்படுத்திக் கொள்கிறவர்கள் இருக்கும்போது, தமிழார்வலர்களில் சிலர் தமது அதிகப்படியான ஆர்வக் கோளாறினால் முகநூல், நெருப்பு நரி என்றெல்லாம் மொழிபெயர்த்தால் உமக்கு என்ன ஓய் ? மகிழுந்து, எழுதுகோல் என்றெல்லாம் உங்களை முற்றிலும் தூய தமிழில் எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்த வில்லை. உங்களுக்கு தெரிந்த தமிழ்ச்சொல்லை இயன்றளவில் பயன்படுத்துவதில் என்ன குறை கண்டீர் ஐயன்மீர் ?
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கையாலாகாதவன்

                        
                                                   இணையப் புரட்சி

தோட்டத்தில் உழைத்துக் களைத்தபின் நீ குளிப்பதற்குப் பயன்படுத்தும் நீரைக்
கொட்டாங்குச்சியில்  பருகி வாசலில் உன் செருப்பிடும் வழக்கமான
இடத்திற்கு சற்றுத் தள்ளி இலைபோட்டு பசியாறி  வெளியே
நிறுத்தப்பட்ட மனிதனைக் கண்ட பிறகும்
வீட்டில் முகப்பில் ஜாதியை எதிர்க்கத் துப்பில்லையாம் !
முகநூலின் முகப்பில் பெரியாராம் !
நட்புக்களின் திருவாயிலிருந்து புறப்படும் பெண் மீதான வசைகளை
சகித்துக் கொண்டு மௌனச் சாமியாராய் நடந்திடு !
பெண்ணியவாதியின் நிலைத்தகவலுக்கு மட்டும் பின்னூட்டம் இட்டிடு !
புரட்சி செய்திட இருக்கவே இருக்கின்றன முத்தொழில்கள்
விரும்பல் பகிர்தல்  கூட்டல்
மூன்றையும் செய்திடு வலைப்பூவில் பதிந்திடு
உள்ளத்தின் அரிப்பைச் சொரிந்திடு
மறக்காமல் நன்றியும் நவின்றிடு

                             முற்போக்குத் தோல்வியின் முனகல்

ஐந்திலக்க ஊதியமில்ல அரசாங்க வேலையுமில்லை
கொள்கைக்கு மட்டும் குறைவில்லை !
பின்பற்றவும் துப்பில்லை உதறிவிடவும் இயலவில்லை
படுத்தால் உறக்கம் வர மறுக்க  உண்டாலும் உடல் ஏற்க மறுக்க
அமெரிக்க கடிகாரத்திற்கு உடல் இயங்க மறுக்க
அன்னமிடும் அன்னையின் அன்பும் உடன்பிறப்பின் உரையாடலும்
விருந்தினர் வருகையும் உறவினனின்  உபசரிப்பும் கூட அச்சம் தருகிறது
அவைகளின் இறுதி நோக்கம் ஊதிய உயர்வைக குறித்து கேட்பதால் !
நண்பா நானும் உனைப்போலவே இருந்திருக்கலாமோ
பார்வையால் சொல்லால் புணர்ந்து கொண்டும்
வாரம் தவறாமல் ஊற்றிக் கொண்டும்  திரையரங்கை மொய்த்துக் கொண்டும்
எப்போதாவது கடவுளிடம் சென்றுவிட்டும்
பாழாய்ப்போனவைகளைப் படிக்காமல் நினைக்காமல் வருந்தாமல்
வண்ணத்திரையுடன்  நிறுத்தியிருக்கலாம்
போராளியாக நினைத்து கோமாளி ஆகியிருக்க மாட்டேன் பாவியாய்
உணர்ந்திருக்கமாட்டேன்
துவண்டிருக்க மாட்டேன்
மனசாட்சியிடம் தப்பியிருப்பேன்


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

டெசோ மாநாட்டுக்கு முன்னர் தமிழ் ஈழத்துக்கு இந்தியா விதித்த தடை !!


இது கருணாநிதிக்கு சோதனைக்காலம். பேசாமல் இந்த மாநாட்டை அறிவிக்காமலே இருந்திருக்கலாம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு போன்றே இதையும் நடத்தி சரிந்திருக்கும் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு (Tamil Eelam Supporters Organisation) மாநாட்டை அறிவித்தார். ஆனால் கெடுவாய்ப்பாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீட்டித்த அமைச்சகம், அதோடு நில்லாமல் தமிழீழம் என்ற கோரிக்கையோ கருத்தோ கூட இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்று அறிவித்திருக்கிறது. 

இதற்குப் பின்னர் பேட்டியளித்த கருணாநிதி தமிழீழக் கோரிக்கை வைக்கப்படாது என்று கூறிவிட்டார். மற்ற கேள்விகளும் மடக்கி மடக்கி கேட்கப்பட, எல்லாவற்றுக்கும் சமாளிப்பாகப் பதில் அளித்திருக்கிறார். ஒரு வேளை கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருந்தால் மத்திய அரசுக்கு எதிராக கருணாநிதி மாநாடு என்று தினமலர் தலைப்புச் செய்தியில் தீட்டு தீட்டென்று தீட்டித் தள்ளியிருக்கும்.

இதற்குப் பின்னர் வழக்கம் போலவே கருணாநிதி காய்ச்சி எடுக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து கருணாநிதி மட்டும் குறி வைத்து குதறப்படுகிறார். இப்படிக் கருணாநிதியைக் கேவலபடுத்துகிறவர்கள் உண்மையில் ஈழத்திற்கு ஆதரவான நிலையின் காரணமாக செய்கிறார்கள் என்றால் இல்லையென்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்த மாநாடே  பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் அமைய, இந்திய அரசுக்குகோரிக்கை வைப்பதற்காகத்தான் நடத்தப் போவதாகக் கருணாநிதி கூறியிருந்தார். 

அப்படியிருக்க இந்திய அரசே தமிழீழம் என்ற கோரிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று அறிவித்து அதைத் தடை செய்தும் விட்டது. இதற்காக ஈழ ஆதரவாளர்கள் உண்மையில் இந்தியாவின் மீதுதானே கோபப்பட வேண்டும். அதுதானே நியாயம். இதற்கு கருணாநிதியைத் திட்டி என்ன செய்யப்போகிறோம். ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறவர்கள் அனைவருமே தமது தன்னல அடிப்படையிலேயே செய்கிறார்கள்.  இதில் கருணாநிதி மட்டும் விதிவிலக்கா என்ன ? 

இந்தியாவையும், அமெரிக்காவையும் ஈழத்தில் தலையிடச் சொல்லும் இவர்கள் கருணாநிதியை மட்டும் எதிர்க்கிற காரணம்தான் என்ன ? கோட்சே தமிழ்ஈழத்தை ஆதரித்தால் ஆதரிப்போம், காந்தி எதிர்த்தால் அவரை எதிர்ப்போம் என்ற சீமான் கருணாநிதியை ஏன் ஆதரிக்க மறுக்கிறார். ஜெயலலிதாவை பெரிதாக விமர்சிக்கும் திராணியற்ற இவர்கள் கருணாநிதியைப் போட்டுத்தாக்கிக் கொண்டே இருப்பதேன். தமிழர்க்காக கட்சி தொடங்கிய சீமானும் இந்திய இறையாண்மையைக் காப்பதாகத்தானே அறிக்கையில் சொன்னார். அப்படியிருக்க கருணாநிதி மட்டும் எப்படி இந்தியாவை எதிர்த்து மாநாடு நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை.  தற்போது சிறைநிரப்பும் போராட்டம் நடத்தி கெத்துக் காட்டியுள்ள திமுகவினர் பெரிய எழுச்சியை உருவாக்கி விடுவார்கள் என்று அஞ்சி, திமுக மாநாட்டின் எழுச்சிக்கு பயந்துதான் அரசு தமிழீழத்தைத் தடை செய்தது என்று சொல்லலாமல்லவா ?

தமிழீழத் தடையின் காரணமாக இனிமேல் ஈழத்தைப் பற்றிப் பேசினாலே குற்றம் என்று கூறி சிறையில் அடைப்பார்கள். தமிழீழம், தனித் தமிழ்நாடு என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்பது கண்கூடாகவே தெரிகிறது. இதற்காக இந்தியாவை எதிர்க்குமளவிற்கு தமிழர்களுக்கு தெம்பு இருக்கிறதா ?; ஈழத்தமிழர்களை நிம்மதியாக வாழவிட தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் சும்மா இருந்தாலே போதும். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கத்தான் இந்தியாவும் இலங்கையும் போரை நடத்தினார்களா ? இவர்கள் திரும்பத் திரும்ப இந்தியாவை வலியுறுத்துவதன் நோக்கம்தான் என்ன ? போரை நடத்த ஆயுதமும் பணமும், உளவுத் தகவலும் வழங்கிய உலக நாடுகள் போர் முடிந்த பின்பு போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் பொருளாதார ஆதிக்க நோக்குடன்தான் இலங்கையைத் தம்பக்கம் திருப்ப நெருக்கடி கொடுக்கிறார்களே அன்றி தமிழர்கள் நலனோ போர்க்குற்றமோ அவர்களின் இலக்கு இல்லை. 

போர் நடந்த போது இலங்கையின் இறையாண்மையில் தலையிட முடியாது என்று கூறி போரை நிறுத்தாத இந்தியா தற்போது தமிழீழம் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று சொல்கிறது. அதனால்தான் அதைத் தடை செய்திருக்கிறது என்று கூறுகிறது. இப்போதுதான் முறைப்படி தடையை அறிவித்திருந்தாலும், இதற்கு முன்பிருந்தே தமிழீழம் என்றதை இந்தியாவோ அதன் அரசியல் கட்சிகளோ ஆதரித்ததோ இல்லை. முன்பு புலிகளுக்கு பயிற்சி கொடுத்ததே இலங்கை அரசைப் பணியவைக்கத்தான். விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் முரண்பட்டபோது 25 வருடங்களுக்கு முன்பே இந்திய ஈழப்போர் மூண்டது. பின்பு 3 வருடங்களுக்கு முன்பு அதற்காகத்தான் கொடிய போரை ஏவி விடுதலைப் புலிகளை அழித்தது. இன்று வரை தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கையில் சிங்கள இனவெறியர்கள் இந்திய எதிர்ப்பு பேசுகிறார்கள், காந்தி சிலையை உடைக்கிறார்கள். இந்தியாவிடமிருந்து எதிர்வினையே இல்லை. 

யாரோ சொன்னார்கள் தமிழீழம் அமைவதை இலங்கை அனுமதித்தாலும் இந்தியா அனுமதிக்காது என்று. அதுதான் உண்மை. இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இன விடுதலையை இந்தியா அனுமதிக்கவே செய்யாது. இந்தியாவே பல தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இருக்கிறது. இதில் காஷ்மீர், சில வடகிழக்கு மாநிலங்களில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு எதிரானவராகத்தான் இருக்கின்றனர். இவர்களுக்கென்று மற்ற மாநிலங்களுக்கு இருப்பதை காட்டிலும் சலுகை சட்டங்கள் உள்ளன. இம்மாநிலங்களில் தொடர்ந்து இராணுவக் கண்காணிப்பு நடைபெறுகிறது. ஒரு வேளை இந்திய ஆதரவுடன் இலங்கையில் தனிநாடு அமைகிற பட்சத்தில் இம்மாநிலங்கள் பற்றி எரியும். இது இந்தியா தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும்.

சீனாவிற்கு எதிரி என்ற நிலையிலிருந்தே தலாய் லாமாவை இந்தியா ஆதரித்து வருகிறது. அதற்கு பதிலடியாக சீனா காஷ்மீருக்கு தனி விசா அளிக்கிறது. அதே எதிரி என்ற நிலையில்தான் வங்க தேசத்தையும் உருவாக்கியது. ஆனால் இலங்கையோ ஒரு சீனாவையும் பாகிஸ்தானையும் ஒத்ததல்ல. அது கிட்டத்தட்ட இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ளது போலத்தான். இலங்கை மசியாமல் போக்குக் காட்டியதால்தான் விடுதலைப்புலிகளை ஆதரித்தது, புலிகள் தமக்கு ஒத்துவராத போது அவர்கள் மீதும் போர் தொடுத்தது. 

உலகமயக் காலமான இன்று நாடுகளின் எல்லைகளே கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி வருகின்றன. இந்நிலையில் தனி ஈழமே தமிழ்நாடோ எந்தளவு சாத்தியமென்று தெரிந்தும் இன்னும் அதையே பேசி வருகின்றனர். தெற்கு சூடான் அது வேறுகதை. சொல்லப்போனால் விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலேயே தமிழ் ஈழம் சிற்சில குறைகளுடன் அமைந்தேதான் விட்டது. அதற்கு அங்கீகாரம் மட்டும்தான் இல்லாமலிருந்தது. தனிநாட்டைப் போலவே பல நிறுவனங்களையும் நடத்திவந்தது புலிகள் இயக்கம். போரினால் அனைத்தும் அழிக்கப்பட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டதை நான் சதாம் உசேனும், முவம்மர் கடாஃபியும் அழிக்கப்பட்டதைப் போலவே பார்க்கிறேன். என்ன அவர்கள் இறையாண்மை உடைய ஒரு நாட்டின் அதிபர்களாக இருந்தவர்கள். பிரபாகரனோ அங்கீகாரமில்லாத நாட்டின் அதிபர் என்பதே எனது கணிப்பு. 

இராஜீவோ, இந்திரா காந்தியோ, ம.கோ. இராமச்சந்திரனோ உயிருடனிருந்திர்ந்தாலும் தமிழீழம் அமைந்திருக்காது. ஏனென்றால் அது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது. இது தெரிந்தும் சிலர் நம்பாதது மாதிரியே நடிக்கிறார்களா அல்லது அவர்களுக்கு புரிவதே இல்லையா என்பது அவர்களுக்கு வெளிச்சம். இப்படி கருணாநிதி எதிர்ப்பாளர்கள் யாரும் தமிழ் ஈழத்தைத் தடை செய்த இந்தியாவின் மீது கோபப்படாமல் கருணாநிதியை மட்டும் இந்திய இறையாண்மையை மீறச் சொல்கிறார்கள்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கண்டுகொள்ளப்படாத மக்கள் போராட்டங்களும் கொட்டி முழக்கப்படும் கோமான்களின் போராட்டமும் !!

இன்று நடைபெற்ற திமுகவினரின் சிறைநிரப்பும் போராட்டம்தான சூடாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவினரைப் பிடிக்காதவர்கள் இந்தப்போராட்டத்தை நக்கலடித்து நாறடிக்கிறார்கள். திமுகவினரோ தமது கட்சியின் வலிமையைக் காட்டி விட்டதாக சிலாகிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட திமுகவினரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டிவிட்டது. ஒன்றரை இலட்சம் இருக்கலாம் என்றும் தெரிகிறது. தோராயமாக ஒரு திமுககாரர் தினமலரிலும் தினமணியிலும் போட்ட கருத்திலிருந்து எடுத்த எண்ணிக்கை.

"ஈரோடு மாவட்டத்தில் 5000 பேரும், விழுப்புரத்தில் 20,000 பேரும், திண்டுக்கல்லில் 25,000 பேரும், திருவண்ணாமலையில் 5000 பேரும், திருவள்ளூரில் 5000 பேரும், திருச்சியில் 7000 பேரும், கிருஷ்ணகிரியில் 5000 பேரும், தேனியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர். அதேபோல கடலூரில் 10,000 பேரும், தஞ்சையில் 15,000 பேரும், நாகையில் 10,000 பேரும், கன்னியாகுமரியில் 2000 பேரும், வேலூரில் 15,000 பேரும் கைதாகியுள்ளனர். திருப்பூரில் 10,000, தர்மபுரியில் 10,000, தூத்துக்குடியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 20,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மு.க.அழகிரியின் கோட்டையாக கூறப்படும் மதுரையில் 10,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 50,000 பேர் கைதாகியுள்ளனர். இதில் வட சென்னையில்தான் அதிகபட்சமாக 25,000 பேர் கைதாகியுள்ளனர். தென் சென்னையில் 15,000 பேர் கைதாகியுள்ளனர்.மத்திய சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம்"
 

இதே போராட்டத்தை அதிமுக நடத்தியபோது 20000 பேர்கள் கூட தேறியிருக்கவில்லை என்று கூறுகின்றனர்.

ஆக இவ்வளவு பெரிய மக்கள் திரளைக் கொண்டுள்ள ஒரு கொள்கையுடைய இயக்கம் தனது கட்சிக்காரர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடத்தியுள்ள போராட்டத்தில் தமது வலிமையைக் காட்டியுள்ளது. அதுவும்  கலைஞரின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தன்னிச்சையாக போராட்டத்தில் ஈடுபட விரும்பிய தொண்டர்களின் எண்ணிக்கையே இவ்வளவு. முதலில் கருணாநிதி போராட்டம் தொடங்கிய போது அறிவித்தது > 50000 பேர்கள் வரையே!! ஆனால் கைது எண்ணிக்கை ஏறக்குறைய இலட்சத்தைத் தாண்டி விட்டது என்ற நிலையில் அவருக்கே இது இன்ப அதிர்ச்சிதான். இவர்கள் இன்னும் தீவிரமாக ஈடுபட்டால் இதைப்பொன்று சில மடங்கு கூட்டத்தைத் திரட்ட முடியும், திரட்டிப் போராடினால் தமிழகத்தில் சில பிரச்சனைகளைத் தீர்க்க விரைவில் அது வழிவகுக்கும் ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டார்கள் இவர்கள். இதில் தயாநிதி மாறனெல்லாம் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார். நம்மைப் போன்ற நடுத்தர வர்க்க மங்காணிகளைப் போலல்லாமல் பணக்காரராக இருந்தும் போராடி சிறை சென்று வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். இத்தனை பேரின் போராட்டம் எதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தின் அருகே 30 ஏழைகளின் நிலங்களை அபகரித்த வழக்கில் திமுகவின் வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்காக. ஏறக்குறைய 50 கோடிகள் தேறும் அந்த நிலத்துக்காக கடந்த திமுக ஆட்சியிலிருந்தே அப்பகுதியைச் சார்ந்தவர்கள் போராடி வந்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தையும் அவரது சக போராளிகளையும் ஏழைப் போராளிகளையும் எதிர்த்துப் போராடிய அம்மக்களுக்கு 4 வருடங்களுக்குப் பிறகே சட்டரீதியிலான நீதிமன்றத் தீர்ப்பு  அவர்களுக்கு சாதகமாக வந்து விட்டது. இதன் பின்னணியில்தான் வீரபாண்டியார் கைது செய்யப்பட்டார். இதில் அரசியல் உள்நோக்கம், பழிவாங்கல் என்பதும் இருக்கலாம். ஆனால் அபகரிக்கப்பட்டது மக்கள் நிலம் நிலத்தை மீட்கப் போராடியது வென்றது பொதுமக்கள்தானே அன்றி அதிமுகவினர் இல்லை.  இதில் என்ன தவறு இருக்கிறது. ஈழத்தில் தமிழர்களின் நிலங்களை சிங்கள அரசு பேரினவாத விரிவாக்கலுக்கு அபகரிக்கிறது. இங்கே தமிழினத்தலைவரின் கட்சிக்காரர்கள் ஏழைத்தமிழர்களின் நிலங்களை அபகரிக்கிறார்கள். இந்த ஏழைப் பங்காளனைக் காக்க மிகப்பெரும் போராட்டம் நடத்தும் திமுகவினர் மக்களுக்காகப் போராடியதுண்டா ?

மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த வலிமையைக் காட்டியிருக்க வேண்டியதுதானே ? ஈழப்போர் உக்கிரமான நிலையை எட்டியபோது கலைஞர் தொலைக்காட்சியின் கிளையான சிரிப்பொலி தொடக்கப்பட்டது வரலாறு. சரி அங்கு பல அரசியல் சிக்கல்கள் உள்ளன தொலையட்டும். தற்காலத்திய மக்கள் பிரச்சனைகளில் எத்தகைய போராட்டங்களை நடத்தியிருக்கிறது திமுக. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்வதே அப்போதைய ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பில் எதிர்க்கட்சியினருக்கு வாக்களிக்கின்றனர். வெறுப்பை வடிகட்டி அப்போதைய எதிர்கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. ஒரு வருடத்தில் அம்மாவின் ஆட்சியில் தமிழகம் மூச்சுத் திணறுகிறது. இதில் வெறும் அறிக்கைகள் மட்டுமே வெளியிட்ட மாபெரும் கட்சி, மக்களுக்காக என்ன செய்தது ? பேருந்துக் கட்டணம், பால் உட்பட இன்னபிற இன்றியமையாப் பொருட்கள் விலையுயர்வு ஒரு எடுத்துக்காட்டு.

சரி அதையும் விடுவோம். தமிழ்வெறுப்பு ஜெயலலிதா தற்போது அண்ணா நூலகத்தை திருமணத்திற்காகத் திறந்து விட்டதற்காக இரத்தக் கண்ணீர் மட்டும் வடிக்கிறார். பார்ப்பன ஜெயலலிதா சித்திரை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தை எதிர்த்து என்ன போராட்டம் நடந்தது ? சமச்சீர் கல்விக்கு எதிராக ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு என்ன எதிர்ப்பைத் திமுக காட்டியது ? ஒரு வருடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க, உறுதிமிக்க அணு உலை எதிர்ப்புப் போராட்டமாம் இடிந்தகரைப் பிரச்சனையில், திமுக கூடங்குளம் அணு உலையும் திறக்கப்பட வேண்டும் என்கிறது. இந்த இரு கட்சிகளில் எது ஆண்டால் தமிழகத்துக்கு என்ன பெரிய மாற்றம் வந்து விடப்போகிறது. இப்படி மக்களின் எல்லாப் பிரச்சனைக்கும் தள்ளியிருந்து விட்டு, தமது கட்சிக்காரரின் கைதுக்கு மட்டும் போராட்டம் நடத்துகிறது திமுக. ஆனால் மற்றொரு புறத்தில் மக்களுக்கான போராட்டம் தொடர்ந்து நடக்கிறது, இடிந்த கரை, ஈழ அகதிகள் போராட்டம், முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணைக்கு எதிராக, தனியார் பள்ளிகளுக்கு எதிராக என எல்லா இடங்களிலும் மக்களின் தன்னிச்சையான போராட்டம் தொடர்கிறது. உதயகுமாரும், முத்துக்குமாரும், செங்கொடிகளும் தமிழர்களாகப் பிறந்தவர்கள்தான். இவர்களெல்லாம் இழிவு செய்யப்பட்ட போது போராடாத தமிழர்கள்தான் தற்போது தலைப்புச் செய்திகளில் தெரிகிறார்கள். இவர்கள் என்ன செய்தாலும் பேசப்படு பொருளாகின்ற நிலையில் சமகாலப் பிரச்சனைகளுக்கு இவர்கள்தானே பொறுப்பு. இனத்தலைவர் என்று பட்டப் பெயர் போட்டுக் கொள்பவர் இனத்தின் பிரச்சனைகளுக்குப் போராட தமது தொண்டர்களுக்குக் கட்டளையிடுவதில்லை.

இதே கேரளாவில் எடுத்துக் கொள்வோம்!! முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அது தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடு என்பது தனிக்கதை. அதில் அனைத்துக் கட்சியினரும் மக்கள் பிரச்சனை என்ற வகையில் ஒன்று பட்டு நிற்கிறார்கள். மேற்கு வங்கத்தில், கேரளத்தில் மக்களையும், மற்ற அரசியல் கட்சிகளையும் மீறி அணு உலை கட்ட இயலாது. ஆனால் தமிழகத்தில் ??!!

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment