கண்டு கொள்ளப்படாத மகளிர் கிரிக்கெட்


தற்போது மகளிர்க்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்து விட்டன. அது பெரிய அளவில் பேசப்படவில்லை. ஏனோ ? கிரிக்கெட் நடிகர்கள் ஆடினால் கூட கொஞ்ச பேர் பார்க்கிறார்கள், ஏன் நடிகைகள் கூட ஆடினால் பார்க்கிறார்கள். பெண்கள் கிரிக்கெட் மட்டும் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அதுவும் கிரிக்கெட்டின் மிகப்பெரும் சந்தையான தெற்காசியாவில் கூட பெண்கள் கிரிக்கெட் மிகப்பெருமளவில் போணியாகவில்லை.

இந்த நிலையில் இப்போது ஆண்களும் பெண்களும் கலந்து விளையாடும் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கப்போகிறார்கள். ஏன் அப்படியாவது பிரபலப்படுத்தலாமென்றா ? சும்மா கிளுகிளுப்பாகவாவது பார்க்க வைத்துவிடமுடியுமென்றா ?

பெண்கள் கிரிக்கெட் கொஞ்ச நேரம் பார்த்தேன், ஆண்கள் அளவுக்கு துடிப்பாக இல்லையென்றாலும், பெண்கள் ஒரு வித நளினத்துடனும், மிதமான பரபரப்புடனும் நன்றாகவே விளையாடினார்கள். சிலருக்கு இன்னும் பேட்டிங் வரவில்லை. இறங்கி ( ஓரடி முன் வைத்து) அடிக்கும் போது முழங்கை வளைந்து, மண்வெட்டியில் வெட்டுவது போல் அடித்தார்கள் சிலர்.

பெண்கள் விளையாடும் விளையாட்டிலேயே கிரிக்கெட் மட்டுமே விளம்பரத்திற்கு உதவாத உடைகளை அணிந்து விளையாடுகிறார்கள். மினி ஸ்கர்ட், மினி ட்ரொஸர் மாதிரியான உடைகளை அணிந்து இதை விளையாட முடியாது என்பதால்தான் ரசிகர்கள் இவர்களைக் கண்டு கொள்ளவில்லையா ?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு போட்டியில் தனிநபராக ஓட்டங்கள் அதிகம் அடித்தது ஒரு பெண் - பெலிண்டா கிளார்க் 229*


ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த அணி நியூஸிலாந்து - 459

இதில் எதிராக ஆடிய பாகிஸ்தான் 47 ஓட்டங்கள் மட்டுமே பதிலுக்கு எடுக்க முடிந்தது, 408 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி. அல்லது நியூஸி வெற்றி.

இது இரண்டுமே ஆண்கள் கிரிக்கெட் "சாதனை"யை விட அதிகம். இது இரண்டுமே 1997 இல் செய்யப்பட்ட சாதனைகள்.

ஆஸி பெண்கள் அணி 6 முறை உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. இதையெல்லாம் ஆண்கள் கிரிக்கெட்டில் எப்போதுமே முறியடிக்க முடியாது. பார்ப்போம்.

எல்லிஸ் அலெக்ஸாண்ட்ரா பெர்ரி

இந்தச் சிறுமி ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இருப்பவர் கால்பந்து அணியிலும் இருப்பவர். தமது 16 ஆம் அகவையில் நுழைந்தார் ஆஸ்திரேலியாவின் கால்பந்து அணியிலும், கிரிக்கெட் அணியிலும் ஒரு சேர. கால்பந்து உலகக் கோப்பையிலும் பங்கெடுத்திருக்கிறார், கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இருக்கிறார். இந்த மாதிரி கிரிக்கெட், கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒரு சேரக் கலந்து கொண்டவரென இதுவரை கேள்விப்பட்டதேயில்லை. கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கடந்த முறை ஆஸி வென்ற போது இவரது பங்கு குறிப்பிடத் தகுந்தது. 


(தற்போது குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்கிறார், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப். அவர் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம்)

மைக்கேல் பெல்ப்ஸ் என்ற நீச்சல் வீரர் அதிக பதக்கங்களை ஒலிம்பிக்கில் வென்றவர் என்ற பெருமையப் பெற்றதோடு, அரை நூற்றாண்டு காலம் அதிக பதக்கங்களை வென்ற சாதனையை வைத்திருந்த ரஷ்யாவின் (முன்னாள் சோவியத் ஒன்றியத்தின்) ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லாரிஸ் லாட்டினினாவின் சாதனையையும் முறியடித்தார். இதில் லாரிஸ் லாட்டினினா இரு ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமெ பங்கேற்றவர், அதிலும் ஒரு போட்டியில் பங்கேற்ற போது அவர் கர்ப்பமாக இருந்தார். மைக்கேல் பெல்ப்ஸ் மூன்று ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.

இது மாதிரி சாதனைகள் எல்லாம் கண்டுகொள்ளப்படாமலே போகின்றன.

இப்படி மிகப்பெரும் சாதனைகளைப் பெண்கள் படைக்குமளவிற்கு திறமை இருக்கும்போது அவர்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த டென்னிஸ் போட்டிகளுக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் மாடலாகவும் இருக்கின்றனர். ஷரபோவா வருடத்திற்கு 70 கோடிகள் வரை விளம்பர மாடலாகவே சம்பாதிக்க முடிகிறது. விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பெரிய நிறுவனங்கள் இவர்களின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்காகவே புதுப் புது பிரபலங்களை உருவாக்குகின்றனர்.


அதே நேரம் ஆண்களின் கிரிக்கெட் எவ்வளவு மெனக்கெட்டு பரப்பப் படுகிறது. கிரிக்கெட் வீரர்கள் பெரிய நடிகர்களுக்கு இணையான செலிபிரிட்டிகளாக இருக்கிறார்கள். எல்லா விளம்பரங்களிலும் வருகிறார்கள். நடிகைகளுடன் கிசு கிசு எழுதுமளவிற்கு பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இருக்கும் தகுதி கிரிக்கெட் வீரர்கள் என்பது மட்டுமே.

இவர்கள் தேசத்தின் மானத்தைக் காப்பவர்கள் போல சித்தரிக்கப்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதே தேசபக்தி என்ற அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் பற்றிய செய்திகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பரப்பப் படுகிறது என்று பார்த்தால்,

வரும் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இன்னார் நீக்கப்பட்டார், இன்னார் தேர்வு செய்யப்பட்டார், இன்னாருக்கு வாய்ப்பில்லை

இந்திய அணி நாளை போட்டி நடக்கு இடத்திற்குப் போய் சேருகிறது.

இந்திய வீரர்கள் இன்று பெங்களூரு வந்தனர், அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணி இன்று வெற்றி பெறுமா ?

வெற்றி பெறுவோம் கேப்டன் நம்பிக்கை.

கிரிக்கெட் போட்டியை வர்ணிப்பதுதற்குத்தான் தொலைக்காட்சிச்செய்திகள் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்கின்றனர்.

போட்டி முடிந்தவுடன் வெற்றிக்குக் காரணம், தோல்விக்குக் காரணம் குறித்த அலசல்கள்.

இவையெல்லாம் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் கூட வெளிவருகின்றன. 



கிரிக்கெட் சாதனைகள் என்று சொல்லப்படுகின்றவை எல்லாம் நல்ல நகைச்சுவைகளே.

"அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை" என்பதற்கு முன்னால் எவையெவையெல்லாம் இணைக்கப்பட முடியும் பாருங்கள்.

இந்த வருடத்தில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இந்த அணிக்கு எதிராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இத்தனாவது விக்கெட்டிற்கு "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

ஒரே நாளில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இத்தனாவது இன்னிங்க்ஸில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

ஃபாலோ ஆன் பெற்றும் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இரண்டாவது பேட்டிங்கில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

குறைந்த நேரத்தில் அல்லது பந்துகளில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

அணித்தலைவராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

விக்கெட் கீப்பராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

பந்து வீச்சாளராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இப்படியாக நகைச்சுவைகள் தொடரும் நீளம் கருதி நிறுத்துகிறேன். இவயெல்லாம் போட்டித் துளிகள் அல்லது ஹைலைட்ஸ் என்று பெட்டிச் செய்தியில் போட்டு விளையாட்டுச் செய்தியின் பக்கங்களை நிரப்புவார்கள்


கிரிக்கெட் ஒரு மதமாக போற்றப்படும் அதே நேரம்  இன்னொரு புறத்தில் மற்ற விளையாட்டுக்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை. வெறும் பெட்டிச் செய்திகளில் மட்டும் வெளிப்படுகின்றன. சொந்தக் காசையும், முயற்சியும் செய்து உயிரைக் கொடுத்துப் பயிற்சி எடுத்து ஒலிம்பிக்கில் எவனாவது பதக்கம் வாங்கினால் அந்த ஒரு மாதத்திற்கு மட்டும் "இந்தியர்கள்" பெருமைப்பட்டுக் கொண்டு மீண்டும் அவர்களை மறந்து விடுவார்கள். ஏன் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வாங்க முடியவில்லை என்று விவாதிப்பார்கள். கிரிக்கெட்டைக் கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். ஐபிஎல்லை வழிபடத் தொடங்கி விடுவார்கள்.

ஆளுக்குப் பத்துக்கும் மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற போதும், மகேஷ் பூபதியும், லியாண்டரும் பெரிய அளவில் கொண்டாடப் படவில்லை. சானியா மட்டுமே டென்னிசின் அடையாளமாக இருக்கிறார். அவர் பிரபலமானதும் டென்னிஸ் என்ற விளையாட்டின் காரணமாக அல்ல. ஏதாவது ஒரு (வெப்பமான பெண் - அதாவது) ஹாட் கேர்ள் கிடைக்க வேண்டு ஊடகங்களுக்கு ஊதிப் பெருக்கிவிடுவார்கள். அதே நேரம் உயிரைக் கொடுத்து விளையாடும் சாய்னா நேவாலை பெரிய அளவில் ரசிகர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

விளையாட்டாக இருந்தாலும், அழகு + செக்ஸி மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது போலும். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற 20/20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஸ்ரீலங்காவின் சியர் லீடர்ஸ் பற்றி கிரிக்கெட்+தேச பக்தர்கள் பலரும் தமது சங்கடத்தைத் தெரிவித்தனர். அவர்கள் அழகாக இல்லை. பாமர ரசிகர்கள் மொக்கை ஃபிகரெல்லாம் எவன்டா சீர்லீடர்ஸா போட்டான் என்று அலுத்துக் கொண்டனர். நிலைத்தகவல் போட்டு எதிர்ப்பைக் காட்டினர்.

விளையாட்டுபோட்டிகளில் எதற்கு சீர் லீடர்ஸ்கள் வந்து குட்டைப்பாவாடையில் ஆட வேண்டும், கேமராக்கள் பாவாடைக்குக் கீழிருந்து படம் பிடிக்க வேண்டும். கிரிக்கெட் போட்டிகளே தேசபக்தர்கள் பார்ப்பது, தேசபக்தி பொங்கி வழிந்தோடும் போது, எதற்கு இந்தக் கிளுகிளுப்பு வேண்டிக் கிடக்கிறது. தேசபக்தி பேசும் அர்ஜுன் படங்களில் குத்தாட்டம் இருப்பது போல என்று கொள்வோம்.

டிடி ஸ்போர்ட்ஸில் உயரம் தாண்டும் போட்டிகள் போட்டிருந்தார்கள். ஒரு ஈரானியப் பெண்ணைக் காட்டினார்கள். அவர் பர்தா போன்றதொரு ஆடையை அணிந்து அது தலையிலிருந்து விழாமல் இருக்க ஒரு பேன்டையும் கட்டியிருந்தார். கை முழுவதும் மறைக்கும் ஆடை. அதே நேரம் இன்னொரு ஐரோப்பியப் பெண் ஏறக்குறைய இரு துண்டு ஆடை அல்லது பிகினி என்ற அளவிற்கு அணிந்திருந்தார். உடலை மறைப்பது ஒத்துக் கொள்ளக்கூடியது, மணிக்கட்டுவரையும், தலையையும் மறைக்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதெல்லாம் என்னளவில் ஒத்துக் கொள்ள முடியாது. என்னைக் கேட்டால் இந்த பர்தா, பிகினி இரண்டுமே விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஒத்து வராதது.

மத்திய கிழக்கு அல்லது இஸ்லாமிய நாட்டுப்பெண்கள் பெரும்பாலும் இதை அணிந்துதான் விளையாட வேண்டியிருக்கிறது. மற்ற நாட்டினர் நீச்சலுடை மாதிரி, அல்லது பிகினி மாதிரி அணிகிறார்கள். இதற்குத் தயங்கியே இந்தியா மற்றும் முஸ்லிம் நாடுகளின் பெண்கள் இது போன்ற போட்டிகளில் சேரத் தயங்குவார்கள் போல் தெரிகிறது.

நன்றி : ஹஃபிங்க்டன் போஸ்ட்
இந்த உடைகளை வடிவமைப்பவர்கள், விதிமுறையாளர்கள் எல்லாம் வணிக நோக்கத்துடன் நடத்தப்படும் போட்டிகளில் பெண்களுக்கு வசதிப்படி வடிவமைப்பார்களா அல்லது ஆண்கள் ரசிக்கும்படி வடிவமைப்பார்களா என்று சொல்ல வேண்டியதில்லை. சில நாட்களுக்கு முன்பு, ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்பவர்கள் குட்டைப் பாவாடை மட்டுமே அணிய வேண்டும் என்று விதியை மாற்றினார்கள். அதற்கு பாகிஸ்தான், எகிப்து நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதெல்லாம் எதற்கு ? ஏன் ட்ரௌசர் அணிந்து விளையாடினால் என்ன கெட்டு விடும்.

ஆண்கள் விளையாட்டு வீரர்களாக இருக்கும்போது அணியும் ஆடைகளுக்கும் பெண்களுக்கும் எத்தனை வேறுபாடுகள் பாருங்கள். ஆண்கள் உடைகளால் அவர்கள் சிரமப்படுவதேயில்லை. அதே நேரம் பெண்களைக்கவனித்தால் ?? அதென்ன விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் அணியும் உடைகள் முழங்கால் வரையில் அல்லது தொடை வரையாவது மூடியிருக்கும்படியும், பெண்கள் என்றால் புட்டத்தில் பாதியை மட்டும் மறைக்கும்படியும் இருந்தால் அதன் காரணம் என்ன ?

எந்த உடை பற்றியும் நான் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. இதையெல்லாம் சொல்லக் கூடாதுதான். ஆனால் விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில்தான் சீர்லீடர்ஸ், கடற்கரைக் கைபந்து போன்ற போட்டிகளில் வேண்டுமென்றே பெண்களை ஆடை அவிழ்ப்பு செய்விக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து ஆண்கள் அள்ளித் தெளிக்கும் கருத்துக்களுக்காகத்தான், திரைப்படங்கள், விளம்பரங்கள், இசைக் காட்சிகள், நடனக் காட்சிகள் இவைகளில் பெண்கள் காட்டப்படும் விதத்திலிருந்தே இந்த விளையாட்டுப் போட்டிகளில் காட்டப்படுவதையும் இணைத்துப் பார்க்க நேரிடுவதால் இதையெல்லாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது.  பெண்கள் உடை பற்றிப் பெரிய விவாதத்திற்கெல்லாம் கூட போக வேண்டியதில்லை. ஆண் வீரர்கள் அணிந்து விளையாடுவதையே பெண்கள் அணிந்தால் வேலை முடிந்தது. அதற்காகத்தான் பெண்கள் கிரிக்கெட் பற்றிச் சொல்ல வந்தேன்.

இன்னொன்றையும் சொல்ல மறந்தேன். சானியாவாகட்டும், சாய்னாவாகட்டும் அல்லது ஷரபோவாவாக இருக்கட்டும். பந்தை ஆக்ரோஷமாகத் திருப்பி அனுப்புகிறார் என்ற விவரிப்புடன் தினமணி, தினமலர், தினத்தந்தி உட்பட பெரும்பான்மை நாளிதழ்கள் வெளியிடும் புகைப்படங்களில் அவர்களது மேலுடை சற்றே உயர்ந்து தொப்புள் தெரிகிற மாதிரிதான் இருக்கிறது. இல்லையென்றால் பாவாடை பறக்கிற மாதிரித்தான் இருக்கிறது. இதை பல முறை நான் கவனித்திருக்கிறேன். இது இயல்பாக நடக்கிறதா ? வேறு போஸே கிடைக்கவில்லையா ? பாவாடை பறப்பதை ஸ்னாப் ஷாட் எடுத்துத்தான் போட வேண்டுமா கனவான்களே ?  பெண்களை செக்ஸியாகத்தான் உடை அணிய வேண்டும் என்று திணிப்பதாலேயே இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

இதைப் பார்ப்பதற்கென்றே பலரும் இப்போட்டிகளைக் காண்கின்றனர். பெண்கள் பங்கேற்கும் உலக அழகிப் போட்டியளவிற்கு, உலக அழகன் போட்டி பிரபலமாகவில்லை. கடற்கரைக் கைப்பந்துப் போட்டிகளில் பெண்கள் அளவுக்கு ஆண்கள் போட்டி பிரபலமாகவில்லை. இதெல்லாம் அதன் எதிர் விளைவுகள்தான். ஒவ்வொரு முறையும் உலக அழகிப் போட்டியும், பிரபஞ்ச அழகிப் போட்டியும் நடக்கும் போதெல்லாம், செய்திகளில் சொல்லப்படுவது என்னவென்றால், இந்திய அழகிக்கு இத்தனாம் இடமே கிடைத்தது, இந்திய அழகி ஏமாற்றம். இதற்கெல்லாம் இந்தியர்கள் வருத்தப்பட வேண்டுமாம்.




இப்படியாக பெண்கள் என்றால் ரசிப்பதற்கே என்ற நிலை இருக்கும் வரை, அதை வணிகத்திற்காகப் பயன்படுத்தப்படும் வரை திறமையைக் காட்டி வென்ற பெண்களை விட உடலைக் காட்டிய பெண்களே வெற்றி பெற்ற பெண்களாக வலம் வருவர்.

சன்னி லியோன், பூனம் பாண்டே, ஷெர்லின் சோப்ரா, வீணா மாலிக் இவர்களெல்லாம் என்ன செய்தார்கள் என்று நமக்கு நாளும் நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்