மெட்ராஸ் கஃபே - தமிழர்களுக்கு எதிரான விஸ்வரூபம் ?

 

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியைக் கண்டால் ஈழப் போரை அடிப்படையாகக் கொண்ட கதைக் களம் போல் தெரிகிறது.  இந்தப் படம் முதலில் ஜாஃப்னா (Jaffna ) என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு மாற்றப்பட்டது. இலங்கை வரைபடத்தினைப் பின்புலமாகக் கொண்டு நிற்கும் ஜான் ஆப்ரஹாம் இந்திய உளவுத்துறை ஒற்றன். விடுதலைப் புலிகள் கடத்திச் செல்வதாகவும் காட்டுகிறார்கள். ஈழப் போரை மையமாக வைத்து, இந்திய உளவுத்துறையின் நாதாரித்தனத்தை நாயகத்தனமாக சித்தரிக்கும் திரைப்படமாக இருக்கும் போல் தெரிகிறது. கிளுகிளுப்புக்காக ஆங்கிலப் படத்தின் பாணியிலேயே ஒரு பெண் நிருபரையும் சேர்த்திருக்கிறார்கள். எத்தனையோ போர் (war) படங்களைப் பார்த்திருக்கிறேன், பெரிய அளவில் வருந்த வில்லை. இப்போது ஈழப்போரைப் பின்னனியாகக் கொண்ட ஒர் சண்டைப் படம் வருகிறது அதிலும் இந்திய உளவாளியை நாயகனாகக் கொண்டு எனும்போது உலகமகா எரிச்சலாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இப்படித்தானே அந்தந்தப் போரைப் பின்னனியாகக் கொண்ட ஒவ்வொருவருக்கும் தங்கள் நாட்டைப் பற்றிய ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போது இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கு ஏதோ ஒரு கருவியைக் கண்டுபிடித்தார் என்பதற்காக ஒரு தமிழரைப் புகழ்கிறார்கள். ஈழப்போரை நடத்தியது இந்தியாதான் என்று தெரிந்த பின்னும் இன்னும் இந்தியாவை விடாமல் நம்புகிறார்கள் ஈழத்தமிழர்கள் சிலர். மிச்சமிருக்கும் சில லட்சம் தமிழர்களை இந்தியா கொன்றாலும் அவர்கள் இந்தியாவின் புகழ் பாடிக் கொண்டிருப்பார்கள். நம்மைப் போன்றவர்களால்தான் அதை சகிக்க முடிய வில்லை. அத்தகைய தமிழர்கள் மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை எப்படி எதிர்ப்பார்கள் அவர்கள் இந்தியாவையும் நம்புகிறவர்கள் அமெரிக்காவையும் ஆதரிப்பவர்களாயிற்றே ?!

எட்வர்ட் ஸ்னோடன், பிராட்லி மானிங்க், அஸாஞ்ஜே என பலரும் அமெரிக்காவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியும் அமெரிக்காவின் ஆதரவை வேண்டித் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். ஒசாமா பின் லேடனைக் கொல்லவும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்றனர். ஆனால் அமெரிக்காவோ அதற்கு நன்றியாக தமிழர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக தமிழரை அழித்த சிங்களப் பேரினவாத பயங்கரவாத ராணுவத்தினருடன் ராணுவக் கூட்டுப் பயிற்சி நடத்துகிறது. தமிழர்களின் ஒரே நம்பிக்கையான இந்தியா இன்னும் அகதிகளைக் கூட அவமானப்படுத்தியே வருகிறது.

திரிகோணமலையில் சிங்கள - அமெரிக்க ராணுவத்தினர் பயிற்சி
விஸ்வரூபம் படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தது ஏனென்றால் அது இஸ்லாமியரைப் புண்படுத்தியது, தாலிபன்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. அமெரிக்காவைப் புகழ்கிறது. அவ்விவகாரத்தில் எனக்கு இப்போதும் அதே நிலைப்பாடுதான். இஸ்லாமியர்களின் தம்மை தீவிரவாதியாக சித்தரிப்பதையும், ஆப்கானியர்களைத் தீவிரவாதியாகவும் அமெரிக்கனை யோக்கியனாகக் காட்டுவதாகவும் எதிர்த்தது நியாயமானதே. 30 வருடங்களாக வல்லரசு நாடுகளின் ராணுவ ஆக்ரமிப்பால் 2 மில்லியன் ஆப்கானியர்கள் கொல்லப்பட்டும், பலர் ஊனமுற்றும், அகதியாகவும் அலைகின்றனர். இதை கேவலப்படுத்தி அமெரிக்காவை ஆப்கானியத் தீவிரவாதிகள் வைக்கும் குண்டு வெடிப்பிலிருந்து காக்கும் அமெரிக்காவைப் போற்றும் படமாகவும் அமெரிக்காவால் ராணுவ ஆக்ரமிப்புக்குள்ளாகியிருக்கும் ஆப்கானியரைக் கேவலமாகவும் காட்டி இருப்பதை எதிர்ப்பது நியாயமானது. ஆனால் இஸ்லாத்தை இழிவு செய்கிறது, இஸ்லாமியரைப் புண்படுத்துகிறது, என்று மத உணர்வு ரீதியாக எதிர்த்துப் படத்தையே தடை செய்யக் கேட்டது தவறே.

விஸ்வரூபம் பற்றிய பதிவில் இஸ்லாமியரின் எதிர்ப்பை கொச்சைப்படுத்துகிற தமிழர்களுக்கு என்று நான் எழுதியது இதுதான், //இப்போது கற்பனையாக, விஸ்வரூபம் படத்திற்கு பதிலாக மலையாள இயக்குநரின் ஒரு பாலிவுட் படம் கமலுக்குப் பதிலாக சல்மானும் அமெரிக்க இராணுவத்திற்குப் பதிலாக இந்திய அமைதிகாக்கும் ராணுவம், தாலிபனுக்கு பதிலாக புலிகள், ஆப்கனுக்குப் பதிலாக ஈழத்தை ஆகிரமிக்கிற கதைக்களன், "இந்திய ராணுவம் பெண்களை பாலியல் வன்முறை செய்யாது" என்று ஒரு ஈழத்தமிழன் பேசுகிற மாதிரி வசனமும் வைத்து இருந்தால் நாம் எதிர்ப்போமா மாட்டோமா ? // அது இப்போது மெட்ராஸ் கஃபே வடிவில் ராணுவத்திற்குப் பதிலாக உளவாளியாக மாறி  சிறு அளவில் உண்மையாகி விட்டது.

இந்த மெட்ராஸ் கஃபே படமும் இந்தியாவை யோக்கிய சிகாமணியாகக் காட்டப்போகிறது. இரு தரப்பும் இலங்கையில் போர் புரிந்தனர் என்று பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் ரசிகர்கள். இந்தியாவிலிருந்து போய் இலங்கையில் நாடு கேட்டால் அவன் சும்மாயிருப்பானா, ராஜீவைக் கொன்ற தீவிரவாதிகளுக்கு இதுதான் சரியான தண்டனை  என்று முற்றுமறிந்த ரசிக சிகாமணிகள் வக்கனை பேசுவார்கள். இந்திய உளவுத்துறை அதிகாரி உயிரைப் பணயம் வைத்து என்ன சாகசம் செய்யப் போகிறாரோ தெரியவில்லை. 

விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகளாகவும், இந்திய உளவுத்துறை அதிகாரியை கடத்துவதாகவும் காட்டியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல போராளிகளே, இந்திய உளவுத் துறையினரைக் கடத்த மாட்டார்கள் அவர்கள் இந்தியாவின் நண்பர்கள் என்றெல்லாம் சொல்லி அப்படத்தைத் தடை செய்யச் சொல்லி விளம்பரம் தேட மாட்டார்கள் "தமிழர்கள்"  என்று நம்புகிறேன்.

படம் வெளியான பின்பு திரைப்படத் திறனாய்வு (விமர்சனம்) எழுதும் வலைப்பதிவர்கள் இப்படத்தைக் கிழித்துத் தொங்கவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஹாலிவுட் படங்களில் ராம்போ, ஜேம்ஸ்பாண்ட், மிஷன் இம்பாஸிபிள், இன்னும் பல ராணுவத்தின் பெருமைகளை பீற்றிக் கொள்ளும் படங்கள்  உளவுத்துறை அமெரிக்காவின் பெருமை சொல்பவை. இப்படங்களைப் பார்ப்பவர்கள் உலகிலேயே ஜனநாயகத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடுகிறவர்கள் அமெரிக்க ராணுவத்தினர்கள், சிஐஏ எஜென்ட்கள் ஆகியோர்கள் என்றுதான் நம்புவார்கள். நானும் அப்படித்தான் நம்பினேன். நம் இந்தியப் படங்களில் ராணுவத்தை, காவல்துறையை வைத்து போலி தேசபக்தியைத் தூண்டும் படங்கள் எடுக்கப்படுகின்றதுன . இப்போது டான்கள், கேங்ஸ்டர்கள், மாஃபியாக்கள் போன்ற அயோக்கியர்களை நாயகர்களாகக் காட்டும் இந்தியப் படங்கள் வருகின்றன. அதே போல் உளவுத்துறை,  உளவாளிகள் செய்யும் சாகசங்கள் வரத் தொடங்கி விட்டன. ஏஜென்ட் வினோத், கமோன்டோ, ஏக் தா டைகர்  ஆகியன எடுத்துக்காட்டுகள். அடுத்ததாக இந்த மெட்ராஸ் கஃபே. இந்த உளவுத்துறையினர் எனப்படுகிறவர்கள், இறையாண்மையுடைய இன்னொரு நாட்டுக்குள் புகுந்து அந்நாட்டிற்கெதிரான பாதுகாப்புக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்கள். இறையாண்மையுடைய இலங்கையில் இந்தியா தலையிடாது என்று சொன்னார்கள்.  வாய்கிழியப் பேசினார்கள். இப்போது இந்திய உளவாளியை இலங்கைக்கு அனுப்புவது இலங்கை என்ற நட்பு நாட்டிற்குச் செய்யும் துரோகம். எனவே இந்த இயக்குநர் இந்தியாவை கேவலப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால், உளவாளியை அனுப்பி வீரதீர சாகசத்திற்கெல்லாம் இடம் கொடாமல் இலங்கை அரசு இந்திய அரசு மிகச் சிறந்த நட்பு நாடுகளாகவே இருக்கின்றன.பார்ப்போம்.

விடுதலைப் புலிகளுக்குள் ஊடுருவும் இந்திய உளவாளி என்று இத்திரைப்படம் விமர்சிக்கப்படுகிறது. இதில் ஒன்றும் நடக்காததல்ல. புலிகள் உட்பட அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களும் இந்திய உளவுத்துறையால், இஸ்ரேலிய உளவுத்துறையால்  பயிற்றுவிக்கப்பட்டவர்களே , அது போல் உலகெங்கும் உள்ள் இஸ்லாமிய இயக்கங்களும் அமெரிக்க உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்டவர்களே. இவ்வியக்கங்களுக்குள் பல உளவாளிகள் ஊடுருவி போராட்டங்களுக்கு உலை வைத்ததும் ஈழம் வரை நடந்த வரலாறு. இதிலெல்லாம் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது ? ஒரு வேளை இப்போது நாம் எதிர்பார்ப்பது போல இந்திய உளவாளி புலிகளுக்குள் ஊடுருவி ரகசியங்களைக் கறந்து வருவது போலவோ அல்லது பணயக் கைதிகளை மீட்பது போலவோ இருந்தால் நாம் என்னவென்று அதைப் புரிந்து கொள்வது ? இந்திய உளவுத்துறை என்ன செய்யுமோ அல்லது செய்ததோ அதைத்தான் கொஞ்சம் திரைப்பட மசாலாத்தனத்துடன் வேறுவிதமாக படம் காட்டியிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான். என்ன சிங்கள ராணுவம் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மனிதாபிமான உதவிகள் படத்தில் வரும் அதை சகித்துக் கொள்ள வேண்டும்.

என்ன இதனால் சங்கடப் படப் போகிறவர்கள் இந்தியாவை நம்பிக் கொண்டிருப்பவர்கள்தான். எனக்கு இதையெல்லாம் கேட்டு சலித்து விட்டது. 

அமெரிக்காவில் அமெரிக்க அரசை விமர்சித்துக் கூட ஹாலிவுட் படம் எடுக்க முடியும். அத்தகைய சுதந்திரம் இந்தியாவில் இல்லை. ரசிகர்களும் அவ்வளவும் பக்குவமானவர்கள் இல்லை. இந்திய இயக்குநர்கள் படமெடுத்தால் இந்தியாவின் பங்கை மறைப்பார்கள், தமிழர்கள் எடுத்தால் புலிகளின் தவறுகளை மறைப்பார்கள். இந்திய அரசை விமர்சித்துப் படமெடுத்தால் படம் தடை செய்யப்படும். புலிகளைப் பற்றி எடுத்தால் தமிழர்கள் எதிர்ப்பார்கள். நடுநிலையுடன் நேர்மையாக படம் எடுக்க இங்கு சூழ்நிலையோ ஆட்களோ இல்லை. தமிழர்கள் இதைத் தடை செய்யக் கோரினால் நமக்குத்தான் கெட்ட பெயர் உண்டாகும். சீமான்களை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

இஸ்லாமியர் ஏன் திரைப்படங்களில் தவறாக சித்தரிக்கப் படுவதை எதிர்க்கின்றனர் என்று இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அதே போல் தடை செய்ய வேண்டும், வெளியிட வேண்டாம் என்று முரட்டுத்தனமாக செயல்படுவதால் என்ன நேர்ந்தது என்றும் அவர்களிடமிருந்தே தெரிந்தும் கொள்ளலாம். தமிழர்களை இனவெறியர்களாகக் காட்டுவதற்கு வட இந்திய ஆங்கில ஊடகங்களும், சோ ராமசாமிகளும், சுப்ரமணிய சாமிகளும் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

நீ என் நிறைவேறாத கனவு


உன் புகைப்படத்தைக் காண்கின்ற போதெல்லாம் 
ரசிக்க முடியாத கவிதை ஒன்றை எழுதி வைக்கிறேன்
ஓவியமாக உன்னை தீட்ட முனைந்து தோல்வியுறுகிறேன்
உன்னுடன் இருந்த சில விநாடிகளை பலமுறை நினைத்து
மீண்டும் வாழ்வதாக நினைத்துக் கொள்கிறேன்
அந்த தருணங்களின் இனிமையில் மூழ்குகிறேன்
உன் நினைவூட்டும் அழகிய வெறுமை உணர்வை 

மீண்டும் எதிர்நோக்கியே எனது தனிமையைக் கொண்டாடுகிறேன்
ஒரு முறை அழுது தீர்த்துவிட்டு மறக்கலாம் என்று நினைக்கிறேன்
மறந்து விடலாம் என்று மீண்டும் நினைக்கிறேன்
மீண்டும்
மீண்டும் உன்னையே நினைக்கிறேன்
 நீ என் நிறைவேறாத கனவு 
நினைத்து  மட்டும் பார்க்க முடிந்த நினைவு 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சிற்றரசு, இளவரசன் மற்றும் பலர் :((

இப்போது இளவரசன் தற்கொலை செய்துவிட்டதால் எனக்கு பெரிய துக்கமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஜாதியப்பேச்சுக்களையும், சடங்குகளையும் இன்ன பிற எழவுகளையும் வேறு வழியின்றி சகித்துக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பவன். ஜாதிக்கு எதிராக எதையும் இது வரையில் செய்ததில்லை. அதனால் இது போன்ற நிகழ்வுகள் இப்படியும் இருப்பார்களா ஜாதி வெறிபிடித்த மனிதர்கள் என்று அதிர்வதில்லை. ஜாதி வெறி பிடித்தவர்கள் நினைப்பதை விடவும் மோசமானவர்கள்.

அவர்களுக்கு பெற்ற மகளின் உயிரை விடவும் ஜாதிக் பெருமிதம் மேன்மையானது. ஜாதியப் பெருமை என்று இல்லாதவொன்றைக் காப்பாற்றுவதாகக் கருதிக் கொண்டு கொலைகாரனாக மாறவும் துணிவு தருவதே ஜாதியம். மகள் தாலியறுத்தாலும் வாழ்க்கையே போனாலும், பரவாயில்லை என்று கருதுகிறார்கள்.

ஆதிக்க ஜாதிக்காரப் பெண் தலித்தை மணந்தால் கொலை, அதே தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் அருந்ததிய ஆணைத் திருமணம் செய்தாலும் கொலை இப்படிப்போகிறது ஜாதியத்தின் கதை. 


2008 ஆம் ஆண்டு சோமனூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிற்றரசு என்பவர் தன்னுடன் வேலை பார்த்த தொழிலாளியான கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து எதிர்ப்புக்களுக்கிடையில் திருமணம் செய்து கொண்டார். பின்பு சில முறை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு, இறுதியாக தலை நசுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் சிற்றரசு. அவரது மனைவியிடம் அப்போது கைக்குழந்தையும் இருந்தது. அந்தப் பெண்ணின், குழந்தையின் எதிர்கால வாழ்க்கையைக் கூட நினைத்துப் பாராமல் கொலை செய்தனர் கொங்கு வேளாளக் கவுண்டர் ஜாதிக்காரர்கள். 


இப்போது இளவரசன்  பல்வேறு பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்குள்ளாக்கப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். (இது தற்கொலை என்று இன்னும் நான் நம்பவில்லை என்ற போதிலும்) இவருக்கும் திருமணமாகிவிட்டது என்ற போதிலும் காதலர்களைப் பிரிப்பதில் ஜாதி வென்று விட்டது. ஜாதியத்தால் கொலையுண்டவர்களில் இவர்களிருவரும் அதிகமான குற்றவுணர்ச்சியையும், பாதிப்பையும் ஏற்படுத்தினர். 


 தற்கொலையாகட்டும், கொலையாகட்டும் ஜாதியம்தான் காரணமாக இருக்கிறது. ஆதிக்க ஜாதிக் கட்சிகளுக்கு இருக்கும் தலித்களுக்கு எதிராக குற்றம் சாட்டுவது இரண்டு காரணங்களுக்காக.

வன்கொடுமை சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது. (எதிர்த்தரப்பினர் ஆதிக்க ஜாதியாக இருக்கும் பட்சத்தில் வேறு பிரச்சனைகளுக்காக தன் மீது ஆதிக்க ஜாதிக்காரர் வன்கொடுமை செய்தார் என்று புகாரளிப்பது)

பெண்களை காதலித்து விட்டுச் சென்று, பின்பு பெற்றோரிடம் பேரம் பேசி பணம் பறிப்பது.

இது இரண்டும் உண்மைகள். இந்தக் கட்டப் பஞ்சாயத்துக்குத் துணை நிற்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். இக்காரணங்களைக் கொண்டே வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஆதிக்க ஜாதிக் கட்சியினர் கோருகின்றனர். கலப்புத் திருமணங்களை எதிர்க்க வேண்டும் சட்டம் போட வேண்டும் என்று சொல்கின்றனர். ஒரு படி மேலே போய் பெண்களுக்கு சொத்துரிமை கூடாது என்கின்றனர். இதை வைத்து ஜாதிய உணர்வைத் தூண்டி வாக்கு வங்கி அரசியலுக்கு ஆதாயம் தேடுகின்றனர். எனவே நாம் ஆதிக்க ஜாதிக் கட்சிகளையும் ஆதரிக்கக் கூடாது இந்த தலித் அடையாள அரசியல் செய்யும் தலித்  கட்சிகளையும் ஆதரிக்கக் கூடாது.

முன்பொரு முறை இதே போல் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.  வன்னிய பெண், தலித் ஆண் கலப்புமண தம்பதியர் வலுக்கட்டாயமாக நஞ்சு ஊட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். பாமக அன்புமணி அப்போதைய நடுவண் அமைச்சராக இருந்தார். விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஒரே கூட்டணியில் இருந்தனர். கொல்லப்பட்ட தலித் ஆணின் தந்தை தனது மகன் கொல்லப்பட்டதற்காக வன்னியர் ஜாதி வெறியர்கள் மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கைத் திரும்பப் பெறுமாறு வழக்குக் கொடுத்தவரை வற்புறுத்தினர் விசி கட்சியினர். காரணம் அவர்களிருவரும் ஒரே கூட்டணியிலிருந்தனர். இக்கொலையை முதன்முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததும் விடுதலைச் சிறுத்தைகள்தான். அவர்களே அதை திரும்பப் பெறக் கோரினர். இதுதான் தலித் கட்சிகளின் உண்மை முகம். (கடலூர் மாவட்டம் கண்ணகி - முருகேசன் கொலை வழக்கு)
 
தற்கொலை செய்து கொண்டதன் மூலம், நாடகத் திருமணம் என்ற அவதூறுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் இளவரசன் என்ற இளைஞன்.

காதல் என்பது பொய், பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள் என்று சாடும் பெற்றோர்களுக்கு, பெற்றோருக்கு பயந்துதானே காதலர்கள் ஓடிப்போய்த் திருமணமும், திருட்டுக் கல்யாணமும் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. பெற்றோர்களிடமிருந்து உயிருக்குப் பயந்தும் ஓடிப் போக வேண்டியுள்ளது.

காதலுக்காக காதலித்தவர்கள் தற்கொலை செய்கிறார்கள். காதலித்து ஜாதிப் பெருமையைக் குலைத்த காரணத்திற்காக பெற்றோர்களே பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிறார்கள். எது உயர்ந்தது காதலா ?  ஜாதியா ?
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment