அழகு என்பதில் அழகில்லை

உங்க ஊர்ல தேன்மொழி கனிமொழினு எவளாவது வாய்க்கால் வரப்புல திரிவா அவளத் தேடித் தேடி லவ் பண்ணு உனக்கெல்லா நான் செட்டே ஆக மாட்டேன். 
                                     
வெள்ளைத்தோல் மலையாளியை வைத்து சராசரி தமிழச்சிகளை கீழாகக் காட்டும். இது அட்லி எழுதிய வசனம். இதை தமிழ்நாட்டில் ரசிக்காதவன் எவன்?  எவள் ? 


இத்தனைக்கும் கனிமொழி என்கிற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு ஆளுமையை வைத்துக் கொண்டே. தேன்மொழி கூட அத்தனை இழிவான பெயரும் இல்லை. 

ஒருவரின் உருவத்தைப் பழிப்பதே பயங்கரமான நகைச்சுவையாக இருக்கிறது. ஒரு பொம்பளையக் கிண்டல் பண்ணனும்னா அது மொக்க ஃபிகர் இல்லைன்னா ஆன்ட்டின்னு சொன்னா முடிஞ்சது. ஒரு நகைச்சுவைத் துணுக்குக்கு சிரிப்பதை வைத்தோ,  ஒரு மீமை பகிர்வதை வைத்தோ, ஒரு கருத்தை விரும்புவதை வைத்தோ கூட நாம் ஒரு நிறவெறியர்கள் என்பதை நிரூபித்து விடலாம். இப்ப நாமெல்லாம் ஒரு நிறவெறியர்கள் என்பதற்கான சிறிய உதாரணங்கள். 

நமக்கு எதிரிகள் என்பதற்காகவே தமிழிசையை பரட்டை என்று மீம் போடுவது, அதைப் பரப்புவது. 

திராவிடக் கட்சியின் குலக்கொழுந்து உதயநிதி சாக்கடை சந்தானத்துடன் ஒரு சராசரி தமிழச்சியைப் பார்த்து இதெல்லாம் ஒரு மூஞ்சியாடா த்தூ என்றெல்லாம் உளறுவதைப் பார்த்து நாம் சிரிக்கவில்லையா ?. நடிக்க வந்த புதிதில் அதே உதயநிதியின் பழைய புகைப்படத்தைப் போட்டு காசிருந்தா காக்காவும் மயிலாகும் என்று தமிழர்கள் ஃபேஸ்புக்கில் தங்களது நகைச்சுவை உணர்வைக் காட்டினார்கள். 

இன்னொன்னு அந்த ராஜகுமாரன் படத்துல வர்ற கவுண்ட மணி, செந்தில், வடிவேல் மற்றும் தங்கச்சி மணிமேகலை காட்சி. அதை எல்லாம் என்ன நியாயம்னு நினைச்சு சிரிச்சோம் நாமல்லாம்.

சுமாரான, அழகில்லாத ஆண்கள் எல்லாரும் அழகான பெண்ணை காதலிக்க, திருமணம் செய்ய நினைப்பார்கள். அதே இன்னொருவன் அழகான பெண்ணின் காதலனாகவோ, கணவனாகவோ இருந்தால் எலுமிச்சப்பழத்தைக் காக்கா கவ்விடுச்சு, இவன் மூஞ்சிக்கெல்லாம் இந்த ஃபிகர் ஓவர் என்று நினைப்பார்கள். 

தன்னைச் சார்ந்த பெண்கள் என்றால் குணங்களைப் பற்றிப் பேசுவார்கள் ஆண்கள். தன்னை சாராத பெண்களைக் குறித்த சராசரி ஆண்களின் உளவியல் என்ன ?. என்னுடைய கணிப்பு இரண்டே இரண்டுதான்.

அழகான பெண்ணைப் பார்த்தால், ஆகா இவளைக் கட்டிக்க எவனுக்குக் குடுத்து வச்சிருக்கோ ?
திருமணமானவராக இருந்தால் நம்ம பொண்டாட்டி இது மாதிரி இல்லையேன்னு ஏக்கமும் திருமணமாகதவராக இருந்தால் இந்த மாதிரி ஒருத்திதான் நமக்கு வரணும்னும் இருக்கும்.

அழகாக இல்லாத பெண்ணைப் பார்த்தால். த்தூ ! இதையெல்லாம் எவன் பார்ப்பான் ? கட்டுவான் ? 

ஆக நமது உளவியல் அழகை வைத்து ஒருவரை குறிப்பா பெண்களை எடை போடுவதுதான். இது கொடிய மனநோய்தான். நாமேதான் சிரமப்பட்டு மாற்றிக் கொள்ள வேண்டும். 

ஒருவரை அழகு என்பதாலேயே இன்னொருவரை அழகில்லாதவர் என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறோமே இது தவறில்லையா ? மாற்ற முயல்வோம்.
x
Download As PDF
Bookmark and Share

Post Comment

அன்பில்லா கணவா

அப்படியென்னதான் உன்னிடம் கேட்டுவிட்டேன்
முகம் கொடுத்தாவது பேசேன் என்றுதானே
அதற்கும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால்
நானெங்கே போவது இல்லை என்னை என்ன செய்வது ?
உனக்கோ எனதன்பின் பதிலாக எரிச்சலேன் வருகிறது
கொஞ்சிப் பேச மாட்டாயாவென கெஞ்சியே கேட்கிறேன்
உன்னிடம் நான் கேட்பது அன்பைத் தவிர வேறென்ன

உன்னைப் போலவே நானும் வேலைக்குச் செல்கிறேன்
உன்னைப் போலவே வெளியில் எனக்கும் தொல்லைகள்
மனத்தின் அழுத்தத்துடன்தான் வீட்டிற்கு வருகிறேன்
உன்னைப் போல் உண்ணும் உணவுக்குக் காத்திருப்பதில்லை
நீ உண்ணும் உணவை உண்டாக்கிக் காத்திருக்கிறேன்
உன்னைக் காணும் ஆசையில் அழுத்தம் ஆனந்தமாகிறது
உன்னைக் கண்டதும் களைப்பு களிப்பாகிறது
ஊனெங்கும் உற்சாகமாகி காதல் களைகட்டுகிறது
உனக்கோ களைப்புதான் பெரிதாகத் தெரிகிறது

உன்னை அனைவரும் நல்லவன் என்கிறார்கள்
நான் கொடுப்பினை செய்தவளென்று உனைக்காட்டி ஊரார் சொல்ல
என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான் குறையில்லை
அதனால்தானென்னவோ எனக்கு உன்மேல்
அன்பு குறைவில்லாம் ஊற்றெடுக்கிறது
குறை எனதன்பிலா உன் புரிதலா உன் மனநிலையா
எதுவாயினும் மிகத்துயரம் என் நிலை
என் மீது சாய்வு கொள்ளுமோ உன் நிலை ?
அள்ளித் தராவிட்டாலும் தாழ்வில்லை
என் ஏக்கத்திற்கு ஏனென்ற கேள்வி கூட இல்லையா ?
இப்படி என் துக்கத்திற்கு அடித்தளமாகிறாயே ?

நீ எல்லோருடனும் அன்பாய் இருக்கிறாயாம்
எனக்கும் பெருமைதான் கசக்கவா செய்யும் கணவனின் நற்பெயர்
ஆனால் என்னிடம் மட்டும் ஏன் அப்படி இல்லை ?
எனக்கு மட்டும் நீ ஏன் அப்படித் தோன்றவில்லை
என்னிடம்தானே எரிந்து விழுகிறாய்
எரிசொற்களை வீசுகிறாய்
கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாய்
சிறுதவறுகளையும் பொருட்படுத்துகிறாய் குற்றம் காண்கிறாய்
என்னை ஏசுகிறாய் குறை சொல்கிறாய்
எனக்குத்தானே தெரிகிறது நீ எத்தனை நல்லவனென்று ?
உன் கோபக்கொடுக்கை அறிந்தவள் யானே
நான்கு சுவர்களுக்கு நடுவிலும் நான்கு பேருக்கு அருகிலும்
என்னிடம் அன்பாக பேசமாட்டாய் புன்னகை பூக்க மாட்டாய்
இத்தனையும் தெரிந்தும் உன்னை நல்லவனென 
ஊரார் சொல்வது எனக்கு உவப்பாகவே இருக்கிறதே
இதுதான் நான் என்று புரிகிறதா ?
என் அன்பு எத்தகையதென்று தெரிகிறதா
உன்னிலும் சிறந்தவள் நானன்றோ ?

 உனது நீதியும் நேர்மையும் எனக்குத் தேவையில்லை
உனது சாக்குகளும் போக்குகளும் நான் பொருட்படுத்துவதில்லை
உனது கொள்கையும் கோட்பாடும் எனக்குக் குப்பைகள்
உனது மனநிலையும் தோல்வியும் எனக்கு புரளிகள்
உனது இன்பமும் துன்பமும் மட்டுமே நான் காண்பவை
உனது தீண்டல் மட்டுமே
உனது அணைப்பு மட்டுமே
உனது முத்தம் மட்டுமே
உனது ஆசைப்பேச்சு மட்டுமே
என்னைக் கொஞ்சுவது மட்டுமே
அவை அனைத்தும் எனக்கு மட்டுமே
நான் வேண்டுவது இவை மட்டுமே
அன்புக்கு ஏங்குவதே என் பிறவிக்குணம்

அன்பு செய்வதெப்படியென
சமையல் செய்வதெப்படியென
சமர்த்தாக நடந்து கொள்வதெப்படியென
சினந்து பேசாமல் சிரித்து பேசுவதெப்படியென
பொங்கியெழாமல் பொறுமை காப்பதெப்படியென
என்பதெல்லாம் கற்றுக்கொள் என்னிடம்

திருமணமான ஆண்களுக்குக் காதல் சற்றே கடினம்தான்
மனைவியைக் காதலிப்பது என்னவோர் சாதனை பாரேன் கணவா
உனக்கு வேறுவழியில்லையே என்ன செய்ய ?
என்னை நேசிக்கக் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
அதில் கிடைக்கும் தெவிட்டாத இன்பம் நான் உத்தரவாதம்
இயலாத காலத்தில் இன்பம் அனுபவிக்காது போனோமே
என்றெண்ணி ஏங்கி வாடும் நிலை உனது முதுமைக்கு
வேண்டாமே என் கணவா புரிந்து கொள்வாய் என் கணவா
அன்றேல் என் வாழ்க்கை போய்விடும் வெறும் கனவா
Download As PDF
Bookmark and Share

Post Comment

கூகிளின் அடுத்த அருட்கொடை - நமது குரல்/பேச்சு எழுத்துக்களாக மாறும் அதிசயம்

அடுத்த அற்புதத்தை நிகழ்த்தி விட்டது கூகிள். ஆம். நாம் பேசினால் அது எழுத்துக்களாக மாறுகிறது. இதற்காக நாம் எழுத்துக்களை குரலாக மாற்றித்தான் வாழ்கிறோம். ஆனால் குரலையே எழுத்துக்களாக மாற்றும் தொழில்நுட்பம் ஆங்கிலத்தில் ஏற்கெனவே வந்து விட்டது. கூகிள் நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். உங்களது ஆண்ட்ராய் திறன் பேசியில் இதைப் பயன்படுத்தலாம். தட்டச்சு செய்யும் வாய்ப்பில்லாதவர்கள், நேரமும் வாய்ப்பும் கிடைக்காதவர்கள் கூட இதைப் பயன்படுத்தி தனது கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பை இந்த கண்டுபிடிப்பு நமக்கு அளித்திருக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகம் கூகிளுக்கு கடமைப்பட்டுள்ளது. இதன் வேகம் தட்டச்சு செய்வதைக் காட்டிலும் மும்மடங்கு வேகத்தில் இருக்கிறது என்று கூறுகிறது கூகிள். 

கையால் ஒரு பலகையில் எழுதுவது போல் எழுதினால் கூகிள் அதை எழுத்தாக மாற்றித் தரும் வசதியான தமிழ் ஈர்த்தறி வசதி (Tamil Handwriting Recognition Facility) என்ற அற்புதத்தின் அடுத்த மைல்கல்லாக விளங்கப் போகிறது இந்த கண்டுபிடிப்பு. இதற்கு மேலும் என்னதான் வேண்டும் சொல்லுங்கள். 

இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஆண்ட்ராய்ட் அலைபேசியில் Gboard - எனப்படும் கூகிளின் தட்டச்சுப் பலகை செயலியை நிறுவ வேண்டியதுதான். பின்பு languages - என்ற பகுதியில் சென்று தமிழை தேர்ந்தெடுக்கவேண்டும். பின்பு பேசிக் கொண்டே இருக்கலாம். இதைக் கொண்டு இணைய உலாவிகளில் தேடல்களை நிகழ்த்தலாம். மின்னஞ்சல், ஃபேஸ்புக், கட்செவி அஞ்சல் (whatsapp) என அனைத்து செயலிகளிலும் பயன்படுத்தலாம். அதிகம் மெனக்கெட்டு தட்டச்சு செய்து அழித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.        இவ்வாறு தன்னால் இயன்ற வரையில் எல்லாம் மொழிகளுக்கு தனது கடமையை ஆற்றிக் கொண்டிருக்கின்றன சில நிறுவனங்கள். ஆனால் இன்னும் தமிழை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று இறுமாப்பாக இருப்பவர்கள் இதைப் பயன்படுத்துவார்கள் என்று நம்பலாம். இனிமேல் தமிழில் தட்டச்ச முடியாமல்தான் ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, தமிழில் உரையாடும் அட்டூழியம் இனியாவது ஒழிய வேண்டும். ஆயிரம் நன்றிகள் இதை சாத்தியமாக்கிய கூகிள் ஊழியர்களுக்கு. 
     தமிழ் வாழ்க ! தொழில்நுட்பம் வாழ்க ! கூகிள் வாழ்க !


Download As PDF
Bookmark and Share

Post Comment

மீண்டும் நானாக

உனது ஊர் எனக்கும் உறவாக இருந்தது
எனது உறவு உனக்கு ஊராக இருந்தது
நாம் இயங்கும் இடம் நமக்கான பாலமாய் இருந்தது
இருந்தும் எனக்கில்லை அந்தக் கொடுப்பினை
உனது இயல்பே எனது அன்பானது
உனது புறக்கணிப்பே பதிலானது
நீயோ எனது உலகமாக இருக்கிறாய்
நானோ உனதுலகத்தில் கூட இல்லாதவனாய்
எனது சொற்களில் அன்பை நிறைத்து அனுப்புகிறேன் 
நீயோ உன் பதில்களில் சலிப்பைக் காட்டுகிறாய்
உன்னைக் கண்டு புன்னகைக்கவே காத்திருக்கிறேன்
என்னைக் கண்டதால் வேறுவழியின்றி புன்னகைக்கிறாய்
நீ எனக்கு மற்றவரில் ஒருவரல்ல என்று நிறுவ முனைகிறேன்
நான் உனக்கு மற்றவராகக் கூட இல்லை என்று நிறுவுகிறாய்
எதிர்ப்பட்டால் கூட ஏறெடுத்தும் பார்க்காத நீ
எப்பொழுதும் ஏங்கிக் கொண்டிருக்கும் நான்
எதற்காக நம் சந்திப்பு நிகழ வேண்டும்
உன் அலட்சியம் உன்னையே இலட்சியமான
எனை ஏன் இகழ வேண்டும்
என்ன விந்தை இது ?
என்ன கொடுமை இது ?
ஓர் உயிர் இன்னோர் உயிரை ஓயாது நினைக்க
இன்னோர் உயிர்க்கோ இப்படியோர் உயிர் இருப்பதே
அறியாமல் இருக்க நம்பிக்கையற்ற ஒன்றிற்காக
கிடைக்காத ஒரு வரத்திற்காக 
இல்லாத கடவுளிடம் தவமெதற்கு
விரும்பாத ஒருவரைக் கூட நான் இப்படி விட்டதில்லை
ஆம் இப்படியே செல்லட்டும் என் காலம்
இப்படியெல்லாம் நினைந்திருந்தவன் மாறிவிட்டேன்
உனது நீண்ட கூந்தல் ஈர்ப்பு தரவில்லை
உனது வடிவான உடல் சிலிர்க்க வைக்கவில்லை
கூரிய புருவங்களும் கண்களும் கலக்கம் தரவில்லை
உனது கொலுசொலி இதயத்துடிப்பை அதிகரிக்கவில்லை
உனது உடைகளின் நேர்த்தியில் அதிசயிக்கவில்லை
உன்னுடன் பேசும் தருணத்திற்கு ஏங்கவில்லை
உன்னுடைய பேச்சுக்களை அசைபோட்டு களிக்கவில்லை
உன்னுடைய சிரிப்பின் அழகை நினைத்துப்பார்க்கவில்லை
உன்னை சிரிக்க வைத்தேன் என்று பெருமிதப்படவில்லை
உன்னுடன் பழகிவிட்டேனே என்று பெருமைப்படவில்லை
உன்னை வெல்லவில்லை என வருத்தப்படவில்லை
முன்பு போல் உனது வருகையும் செல்கையும் சலனப்படுத்தவில்லை
நீ யாரோவாக மாறி விட்டாய்
நான் நானாகவே திரும்பி விட்டேன்
உன்னைப் போலவே இயல்பானவனாக மாறிவிட்டேன்

Download As PDF
Bookmark and Share

Post Comment