ஜனநாயகத்தின் இரண்டகம்

அராஜகம் நடந்திருக்கிறது. காலையில் ரகசியமாக தூக்கிலடப்பட்டு பின்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரிகள் மீதான அடுத்த உளவியல் தாக்குதல் இது.

அஜ்மல் கஸாப் தூக்கில் இடப்பட்டது போலவே அஃப்ச
ல்குருவும் ஒரு அதிகாலையில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். கொலைகார பயங்கரவாதி அஜ்மல் கஸாப்பிற்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு நாம் எதிர்ப்பு சொல்ல முடியாது. தூக்கு தண்டனை எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து வெறும் கோரிக்கை, அல்லது கண்டனம் மட்டுமே சொல்ல முடிந்தது. ஆனால் குற்றமே நிரூபிக்கப்படாத அல்லது போலி வழக்குகளால் சூழப்பட்ட ஊடக வெள்ளத்தில் பயங்கரவாதியாக்கப்பட்டு, தூக்கு தண்டனைக்குத் தகுதியானவர் என்ற கருத்து வலுவாக்கப்பட்டு, இப்போது அவசர அவசரமாகத் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.

இவரும் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் போலத்தான். நேரடியாக குற்றம் செய்யவில்லை. குற்றம் செய்தவர்கள் அங்கேயே கொல்லப்பட்டார்கள். அவர்களுடன் தொடர்புடையவர்கள்.

இதற்கு தேசத்தின் மனசாட்சியைத் திருப்திப் படுத்துவதற்காக என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த தேசத்தின் மனசாட்சி என்பது நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல், 9 பேர் கொலை, இந்தியாவுக்கு அவமானம் எனவே இவனைத் தூக்கிலிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. அவன் குற்றவாளியா என்று ஆராயக் கூடத் தேவையில்லை. வெறும் அனுமானம் மட்டுமே போதுமாக இருக்கிறது. அதே நியாயம்தான் ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கும். இன்று வரையிலும் அவர்களை ராஜீவ் கொலையாளிகள் என்றே எல்லா நாளிதழ்களும், தொலைக்காட்சி செய்திகளும் சொல்லி வருகின்றன.

இந்திய ஜனநாயக்த்தின் கோயிலின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி என்று மிகையுணர்ச்சி ஊட்டும் தலைப்புக்கள் இவன்தான் குண்டை வீசியவன் என்றே நம்ப வைக்கப் போதுமானவை.

இந்த தேசத்தின் மனசாட்சி, தேசபக்தி என்பதே இவர்கள் கட்டமைக்கு போலியான ஒன்றுதான். இதைக் கட்டமைப்பவர்கள்தான் தேசபக்திக்கும், தேசத்தின் மனசாட்சிக்கும் எதிரானவர்களாக இருக்கிறார்கள். இதையெல்லாம் ஒரு காரணமாக ஏற்க முடியாது.

மோடியின் குற்றத்தை மறைக்க குஜராத் வளர்கிறது, திறமையான முதல்வர் என்ற போலி பிம்பம் கட்டப்படுவதைப் போலவே அஃப்சல் போன்றவர்கள் மீதான பயங்கரவாத முத்திரையும் தொடர்ந்து குத்தப்படுகிறது. தண்டனைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

இவர்களையெல்லாம் தூக்கில் போடாமல் வைத்திருப்பது இந்திய அரசின் கையாலாகாத்தனம் என்றும் சட்டம் இன்னும் கடுமையாக வேண்டுமென்றும் இருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தையும் தூக்கிலிட்டுவிடத் துடிக்கிறார்கள்.

அஜ்மல் கஸாப் தூக்கிலிடப்பட்ட போது, அப்சல் குருவுக்கு எப்போது தூக்கு என்று கேட்டவர் வாழும் புத்தரான மோடி அவர்கள். பால்தாக்கரே சிறைக்குக் கூடச் செல்லாமல் இயற்கையாக செத்துப் போனார். அது போல அத்வானியும் சாவார். மோடி பிரதமர் ஆகிவிடுவார். அப்சல் குரு போன்றவர்கள் தூக்கில் தொங்கி செத்த மனசாட்சிகளைத் திருப்திப் படுத்துகிறார்கள். இந்தியாவின் ஜனநாயகம் என்பது சிலருக்கு மட்டுமே அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது. நம்மைப் போன்ற மாநிலங்களில் இருக்கும் ஜனநாயகம், வட கிழக்கில் இல்லை. அங்கே ராணுவ ஆட்சியே நடைபெறுவதாக அறிகிறோம். அது போன்ற சூழலில் ஒரு குண்டு வெடிப்பை நடத்தியோ அல்லது குண்டு வெடிப்பு நடந்தாலோ பயங்கரவாதிகள் கைது செய்யப்படுவது குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்காமலே சிறையில் வாடுவது, அல்லது தூக்கில் தொங்குவது வரை நடக்கிறது. காஷ்மீர் தொடங்கி தமிழகம் வரை முஸ்லிம்களின் நிலை இதுதான். இலங்கையில் தமிழனின் நிலை போல.

தூக்கு தண்டனை நியாயமானதாக இருந்தால்

அத்வானி, மோடி, தாக்கரே இவர்களையெல்லாம் சட்டம் நெருங்கவே முடிவதில்லை. இன்னும் கொஞ்ச நாள் போனால் இவர்களெல்லாம் என்ன செய்தார்கள் என்று கேட்பார்கள். பால் தாக்கரே சாவை ஒரு போராளியின் சாவைப் போலவே செய்திகள் வெளியிட்டன. அதே போல் மோடியின் வெற்றியையும் ஒரு வித கொண்டாட்டத்துடனே தலைப்புச் செய்தியாக்கி வெளியிட்டன. இது போன்ற கொலைகாரர்கள் எல்லாம் பிரதமராகவும், தலைவர்களாகவும் நீடிக்க முடிகிறது, மற்றொரு பக்கம் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள், கலவரங்கள், என்கவுண்டர்கள், தூக்குதண்டனைகள், சிறைத்தண்டனைகள், கைதுகள், பிணை மறுப்புக்கள், அடையாள அரசியல் என்று சீரழிக்கின்றன.

ஒரு புறம் தூக்கு தண்டனைக்குத் தகுதியானவர்கள் பிரதமராகத் தகுதியானவர்களாகிறார்கள். இன்னொரு புறம் சராசரிக் குடிமகனாக வாழ்ந்தவர்கள் சிறையாளிகளாகவும், நிரூபிக்கப்படாத குற்றத்தைச் செய்தவர்கள் தூக்கிலும் தொங்குகிறார்கள். இதுதான் குடிநாயகத்தின் இரண்டகம்.

தேசபக்தி என்பது பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவனை தூக்கில் போட வேண்டும் என்று துடிப்பது மட்டும்தானா ? அதிலும் அவனொரு முஸ்லிமாக இருந்து விட்டால் ? இன்னும் தேசபக்தி அதிகமாகி விடுகிறது.

கோவையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இரு குழந்தைகளை வன்கலவிக்கு உள்ளாக்கிய இருவரை காவல்துறை மோதல் கொலைகள் மூலம் படுகொலை செய்தது. சட்டத்திற்கு புறம்பான காவல்துறையின் இக்கொலைக்கு பொதுமக்கள் ஆதரவு பெருமளவில் இருந்தது. சட்டத்திற்குள்ளானது என்று இல்லாத போதும், அதில் கொல்லப்பட்டவர்கள் மிகவும் கொடிய குற்றவாளிகள் என்ற நியாயம் இருந்தது.

அதே போல் சென்னையில் 5 வட இந்திய இளைஞர்கள் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரிலும், காவல்துறையினரால் போலி என்கவுண்டர் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். பொது மக்களிடம் அதற்கும் குறிப்பிடத் தக்க ஆதரவு இருந்தது.

கூடங்குளத்தில் கூட சுட்டுத் தள்ள வேண்டும் அந்த தேசதுரோகிகளை என்று கருத்துச் சொன்னவர்கள் இருக்கிறார்கள்.

அது போலவே இதையும் பார்க்கிறேன். முதலில் ஒரு பயங்கரவாதியை தூக்கில் ஏற்றி விட்டு பின்பு, போலியாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவனையும் தூக்கில் ஏற்றும் போது அவனுக்கான நியாயமும் செத்து விடுகிறது.

காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையை பாஜகவுக்கு ஏற்படுத்தியிருக்கிறது இந்தத் தூக்கு. இனி காங்கிரஸின் கையாலாகாத்தனம் என்று எந்த பாஜக தலைவனும் விமர்சிக்க முடியாது என்பதற்காக குருவைத் தூக்கிலிட்டிருக்கிறார்கள்.

சதாமுக்கு தூக்கு சரி - புஷ் - க்கு என்ன தண்டனை

பின் லேடன், கடாஃபி, பிரபாகரன் படுகொலை சரி - ஒபாமாவுக்கும், மஹிந்தவுக்கும், சர்கோஸிக்கும் என்ன தண்டனை

இதுதான் உலக ஜனநாயகமாக இருக்கிறது. கசாப், அப்சல் குருவுக்கு தூக்கு - மோடி, அத்வான் இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை. இவர்கள் நெஞ்சு வலி வந்தோ, சிறுநீரகம் பழுதாகியோ சாவதுதான் ஜனநாயம் இவர்களுக்கு வழங்கும் தண்டனை.

ஈழத்து அகதிகளை முகாம்களுக்குள் அடைத்து வைத்து விட்டு, மஹிந்தவை திருப்பதிக்குள் விடுவதுதான் ஜனநாயகம். கோத்ரா வுக்கு தூக்கு பெஸ்ட் பேக்கரிக்கு ஆயுள் என்பதும் ஜனநாயகம்.

தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்ற பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது.

டெல்லி பாலியல் வன்முறைக்கு பிறகு வன்கலவி கொலையில் ஈடுபடும் நபர்களுக்கு அவர் யாராக இருப்பினும் அரசியல் தலைவர், ராணுவ வீரர், அதிகாரி, காவலர் என மரண தண்டனை அல்லாமல் / கடுமையான தண்டனைகள் வழங்கும் படிக்கு வர்மா ஆணையம் கேட்டுக் கொண்டது. ஆனால் அரசோ பெண்களுக்கு சாதகமான கருத்துக்களை ஒதுக்கி விட்டு, வெறும் மரண தண்டனை என்று ஆரவாரமான தண்டனைக்கு மட்டும் அனுமதித்துள்ளது. இங்கு மரண தண்டனை கூடாது வேண்டும் என்ற விவாதத்திற்கு சொல்லவில்லை. பாலியல் வன்முறையில் ஈடுபடும் இராணுவ, காவல்துறை, அரசு அதிகாரிகள் மீதான சலுகைகள அந்த சட்டம் பரிசீலிக்க வில்லை என்பது முக்கியமானது.

இதன்மூலம் வன்புணர்ச்சி போன்ற குற்றங்களுக்காக தெருப்பொறுக்கிகள் மட்டுமே தூக்கிலிடப்படுவார்கள். பாலியல் வன்முறையை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தும் ராணுவத்தினர், அரசியல்வாதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் போன்றவர்களுக்கு இது போன்ற தண்டனைகள் செல்லாது என்ற நிலை நீடிக்கிறது.

அதே போல்தான் இந்த பயங்கரவாத எதிர்ப்பில் பயங்கரவாதிகளை, அல்லது அப்படி சொல்லப்படுகிறவர்களைத் தூக்கில் போடுவதை முன்னிலைப்படுத்தும் அரசு, கூட்டம் கூட்டமாகக் கொலை செய்வது கலவரம் செய்வது போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் காணோம். குஜராத் படுகொலைகளைப் பற்றி காங்கிரஸ் பேசினால் பாஜக வினர் சீக்கியர் படுகொலை பற்றிப் பேசி ஆப்படிப்பார்கள். தான் முதலில் யோக்கியனாக இருந்தாலல்லவா குற்றங்களை நேர்மையாகப் பரிசீலிப்பதற்கு ?

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்