உங்க ஊர்ல தேன்மொழி கனிமொழினு எவளாவது வாய்க்கால் வரப்புல திரிவா அவளத் தேடித் தேடி லவ் பண்ணு உனக்கெல்லா நான் செட்டே ஆக மாட்டேன்.
வெள்ளைத்தோல் மலையாளியை வைத்து சராசரி தமிழச்சிகளை கீழாகக் காட்டும். இது அட்லி எழுதிய வசனம். இதை தமிழ்நாட்டில் ரசிக்காதவன் எவன்? எவள் ?
இந்த வசனத்தை கொகொட்டிச் சிரித்து மகிழ்ந்த அதே உள்ளங்கள் இயக்குநர் அட்லியின் உருவத்தையும் நிறத்தையும் வைத்து அவரது மனைவியுடன் இருக்கும் படங்களைக் கிண்டலடிப்பதாக நினைத்து தன்னைத்தானே இழிவு படுத்துகின்றனர், அட்லி இந்தப் படத்தில் இந்த வசனத்தின் மூலம் இழிவு செய்தது போல.
இத்தனைக்கும் கனிமொழி என்கிற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு ஆளுமையை வைத்துக் கொண்டே. தேன்மொழி கூட அத்தனை இழிவான பெயரும் இல்லை.
ஒருவரின் உருவத்தைப் பழிப்பதே மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. ஒரு பொம்பளையக் கிண்டல் பண்ணனும்னா அது மொக்க ஃபிகர் இல்லைன்னா ஆன்ட்டின்னு சொன்னா முடிஞ்சது. ஒரு நகைச்சுவைத் துணுக்குக்கு சிரிப்பதை வைத்தோ, ஒரு மீமை பகிர்வதை வைத்தோ, ஒரு கருத்தை விரும்புவதை வைத்தோ கூட நாம் நிறவெறியர்கள் என்பதை நிரூபித்து விடலாம். இப்ப நாமெல்லாம் ஒரு நிறவெறியர்கள் என்பதற்கான சிறிய உதாரணங்கள்.
நமக்கு எதிரிகள் என்பதற்காகவே தமிழிசையை பரட்டை என்று மீம் போடுவது, அதைப் பரப்புவது.
திராவிடக் கட்சியின் குலக்கொழுந்து உதயநிதி சாக்கடை சந்தானத்துடன் ஒரு சராசரி தமிழச்சியைப் பார்த்து இதெல்லாம் ஒரு மூஞ்சியாடா த்தூ என்றெல்லாம் உளறுவதைப் பார்த்து நாம் சிரிக்கவில்லையா ?.
நடிக்க வந்த புதிதில் அதே உதயநிதியின் பழைய புகைப்படத்தைப் போட்டு காசிருந்தா காக்காவும் மயிலாகும் என்று தமிழர்கள் ஃபேஸ்புக்கில் தங்களது நகைச்சுவை உணர்வைக் காட்டினார்கள்.
ராஜகுமாரன் படத்துல வர்ற கவுண்ட மணி, செந்தில், வடிவேல் மற்றும் தங்கச்சி மணிமேகலை காட்சி. அதை எல்லாம் என்ன நியாயம்னு நினைச்சு சிரிச்சோம் நாமல்லாம்.
சுமாரான, அழகில்லாத ஆண்கள் எல்லாரும் அழகான பெண்ணை காதலிக்க, திருமணம் செய்ய நினைப்பார்கள். அதே இன்னொருவன் அழகான பெண்ணின் காதலனாகவோ, கணவனாகவோ இருந்தால் எலுமிச்சப்பழத்தைக் காக்கா கவ்விடுச்சு, இவன் மூஞ்சிக்கெல்லாம் இந்த ஃபிகர் ஓவர் என்று நினைப்பார்கள்.
தன்னைச் சார்ந்த பெண்கள் என்றால் குணங்களைப் பற்றிப் பேசுவார்கள் ஆண்கள். தன்னை சாராத பெண்களைக் குறித்த சராசரி ஆண்களின் உளவியல் என்ன ?. என்னுடைய கணிப்பு இரண்டே இரண்டுதான்.
அழகான பெண்ணைப் பார்த்தால், ஆகா இவளைக் கட்டிக்க எவனுக்குக் குடுத்து வச்சிருக்கோ ?
திருமணமானவராக இருந்தால் நம்ம பொண்டாட்டி இது மாதிரி இல்லையேன்னு ஏக்கமும் திருமணமாகதவராக இருந்தால் இந்த மாதிரி ஒருத்திதான் நமக்கு வரணும்னும் இருக்கும்.
அழகாக இல்லாத பெண்ணைப் பார்த்தால். த்தூ ! இதையெல்லாம் எவன் பார்ப்பான் ? கட்டுவான் ?
ஆக நமது உளவியல் அழகை வைத்து ஒருவரை குறிப்பா பெண்களை எடை போடுவதுதான். இது கொடிய மனநோய்தான். நாமேதான் சிரமப்பட்டு மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒருவரை அழகு என்பதாலேயே இன்னொருவரை அழகில்லாதவர் என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறோமே இது தவறில்லையா ? மாற்ற முயல்வோம்.
x