மகளைப் பிரசவிக்கும்போது ஏற்பட்ட வலியைத்
தாங்கிக் கொண்ட அம்மாவால்
மகள் பிரசவிக்கும்போது ஏற்படும் வலியைத் தாங்கிக்
கொள்ள முடிவதில்லை
தம்பியோ தங்கையோ பிறக்கையில் அரைத்தாயாக
மாறும் அம்மா தம் சொந்த வயிற்றில்
சுமந்து பிறப்பிக்கும்போது முழுத்தாயாகிறார்
தம் பிள்ளைகளின் பிள்ளைகளை வளர்க்கும்போதில்
தாய்மையை விஞ்சும் பெருந்தாய்மையை அடைகிறார்
அதற்கான பெருந்தன்மையுடனேயே பிறக்கிறார் அம்மா
அடுத்தவரிடம் அடக்கமும் அமைதியும் உருவானவராகப்
பெயர் பெற்ற பிள்ளைகளும் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளும்
வடிகால்தான் அம்மா
அம்மா பேசினாலே சலித்துக் கொள்ளும்
அலுத்துக் கொள்ளும் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை
அம்மாவின் மொக்கைத்தனமே கடிந்து கொள்வதையும்
காயப்படுத்துவதையும் சகித்துக் கொள்கிறது
தொடர்ந்து அம்மாவை அம்மாவாகவே நீடிக்கச் செய்கிறது
நாம் நல்லவரென்று நம்மையும் கருதச் செய்கிறது