மறக்க முடியாத வண்ணத்துப்பூச்சிகள்


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு நாள். இந்த நாள் மிராபல் சகோதரிகள் என்ற மூன்று  பெண்களின்   நினைவாக உலகமெங்கும் நினைவு கூரப்படுகிறது. அவர்களின் பெயர் பேட்ரியா மெர்சிடிஸ் மிராபல் (Patria Mercedes Mirabal), பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்  ரேய்ஸ்(Bélgica Adela "Dedé" Mirabal-Reyes), மரியா அர்ஜென்டினா மினர்வா மிராபல் (María Argentina Minerva Mirabal), அன்டனியோ மரியா தெரசா மிராபல்(Antonia María Teresa Mirabal). இவர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த இவர்கள் நால்வரும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். இவர்களில் மூன்று சகோதரிகள் (பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்-ரேய்ஸ் தவிர்த்து ) அந்த நாட்டின் சர்வாதிகாரியான ட்ரூஜில்லோவிற்கு எதிரான இயக்கம் நடத்தியதற்காக சிறையிலடைக்கப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டனர். இம்மூவரும் படுகொலை செய்யப்பட்ட நாள் நவம்பர் 25, 1960. அவர்களின் மறைவிற்கு 20 ஆண்டுகளிற்குப் பின்பிலிருந்து அதாவது 1980 ம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 - என்பதை பாலியல் வன்முறைக்கெதிரான நாளாகவும், அவர்களின் படுகொலையை நினைவு கூரவும் ஒரு அடையாளமாக முன்னெடுக்கப்படுகிறது. நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரையிலான 16 நாள்கள் "பால்நிலை வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வு" (Days of Activism Against Gender Violence) ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த 16 நாள்கள் நவம்பர் 25 thethi  பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women), நவம்பர் 29 உலக பெண்கள் மனித உரிமை காப்பாளர் நாள் (International Women Human Rights Defenders Day), டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாள், டிசம்பர் 10 உலக மனித உரிமைகள் நாள் என்று முடியும் வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

                                            


சர்வாதிகாரி ட்ரூஜில்லோ 

சர்வாதிகாரிகளை வரலாற்றிற்கு அள்ளி வழங்கிய இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசில் 26 ஆண்டுகள் ஆண்டவர்தான் ரஃபேல் லியோனிடாஸ் ட்ரூஜில்லோ மோலினா (Rafael Leonidas Trujillo Molina). இவர் 1930 - 1938 வரையிலும், பின்பு 1942 - 1961 வரையிலும் நாட்டை ஆண்டார். இவர் மூன்று திருமணங்கள் செய்தார். பல இளம்பெண்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். தம்முடன் இணங்காத இளம்பெண்களை அவர்களின் குடும்பங்களை அச்சுறுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றும் பெண்பித்தனாகவும் கொடூரமானவனாகவும் இருந்தார். இவர் மீது பாலியல்வன்முறைக் குற்றச்சாட்டுக்களுமுண்டு. அண்டை நாடான ஹெய்தியின் எல்லையிலிருந்த கறுப்பர்கள் பல 10000 பேர்களைக் கத்திகளால் வெட்டிக் கொலை செய்தனர் இவரது படையினர். இறுதியாக 1961 - ல் CIA - ஆல் கொல்லப்பட்டார். நாட்டின் தலைநகருக்குத் தனது பெயரைச் சூட்டினார். தனக்குத்தானே பல பட்டங்களையும், விருதுகளையும் ( உதாரணமாக "நாட்டின் மிகச் சிறந்த வள்ளல்"(Great benefactor of the nation) , "புதிய டொமினிக்கின் தந்தை"(Father of the new Dominion)) கொடுத்துக் கொண்டார். மிராபெல் சகோதரிகளைப் பற்றிய ஒரு புதினம் "வண்ணத்துப்பூச்சிகளின் காலத்தில்" (In the time of the Butterflies). அதில் ட்ரூஜில்லோ தனது படத்தையும் யேசுவின் படத்தையும் அடுத்தடுத்து வைத்துக் கொள்வதாகச் சித்தரித்திருப்பார் அதன் ஆசிரியரான ஜூலியா அல்வரேஸ்
                                          
                                                      

மிராபல் சகோதரிகள்

மிராபலின் சகோதரிகளின் தந்தை வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தார். அவர்கள் நால்வருக்குமே திருமணமாகியிருந்தது. ட்ருஜில்லோ அதிபரானதும் நாட்டின் வளங்களைக் கையகப்படுத்தினார். இதனால் மிராபல் குடும்பத்தின் பெரும்பாலான உடைமகள் பறிக்கப்பட்டன. நான்கு சகோதரிகளில் ஒருவரான மினர்வா மட்டும் ட்ரூஜில்லோவின் அரசினைக் கவிழ்ப்பதில் மிகவும் முனைப்புடன் இருந்தார். அவர் சட்டம் படித்து வழக்கறிஞரானவர். இருப்பினும் அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற உரிமம் வழங்கப்படவில்லை. காரணம் ட்ருஜில்லோவின் வழக்கமான "காதலை" அவர் நிராகரித்துவிட்டார்.அதனால் அவருக்கு உரிமம் வழங்காமல் இருக்குமாறு உத்தரவிட்டார் ட்ரூஜில்லோ.

 பின்பு ட்ருஜில்லோவிற்கு எதிராக மிராபல் சகோதரிகள், அவர்களது கணவர்கள் இணைந்து தலைமறைவு இயக்கத்தை தோற்றுவித்தனர். அதன் பெயர் ஜூன்14 இயக்கம். இந்த இயக்கம் உருவாக முன்னோடியாக இருந்தது டொமினிக் விடுதலை இயக்கமாகும்(Dominican Liberation Movement).  இது ஃபிடல் காஸ்ட்ரோவின் உதவியுடன் ட்ரூஜில்லோவின் அரசை தூக்கியெறியும் புரட்சியில் ஈடுபட்டது. அது தோல்வியில் முடிந்தாலும் பலரை ட்ரூஜில்லோவிற்கு எதிரான இயக்கத்தில் இணைவதற்கு வழிசெய்தது. மிராபல் சகோதரிகள் இயக்கத்திற்குள் "வண்ணத்துப்பூச்சிகள்" என்ற அடைமொழியுடன் அறியப்பட்டனர். அதுவே பிற்காலத்திலும் அடையாளமாயிற்று. இருப்பினும் மிக விரைவாகவே இயக்கத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மிராபல் சகோதரிகளும், அவர்களது கணவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது கைதை கத்தோலிக்கத் திருச்சபையும் கண்டித்தது. சிறையில் அடைக்கப்பட்ட மிராபல் சகோதரிகள் பலமுறை சித்ரவதைகளுக்கும், வன்கலவிக்கும் ஆளாக்கப்பட்டனர். 

படுகொலை

இவ்வாறு பலமுறை சிறையிலடைக்கப்பட்டும் அவர்கள் ட்ரூஜிலோவிற்கு எதிராக  தீவிரமாக இருந்தனர். அவர்கள் உடைமைகளனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டாலும் அவர்களது செல்வாக்கு அதிகமாக இருந்தது. 1960 நவம்பர் 25 - ல் கனமழையுடன் கூடிய இரவில் ஒரு வாகனத்தில் சிறையிலிருந்த தமது கணவன்மாரைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் மறிக்கப்பட்டு, அருகிலிருந்த கரும்புத்தோட்டத்திற்குள் தனித்தனியாகக் கொண்டு செல்லப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர், அவர்களது வாகன ஓட்டுனரும் கொல்லப்பட்டார். அவர்களது உடல்கள் அவர்கள் வந்த வாகனத்தில் (Jeep) வைத்து மலைமுகட்டிலிருந்து தள்ளிவிடப்பட்டு, மோசமான மழையினால் வாகன விபத்து ஏற்பட்டது போன்று சித்தரிக்கப்பட்டது. இது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் ட்ரூஜில்லோவால் செய்யப்பட்டது என்றே நம்பப்படுகிறது. 

இரண்டாவது சகோதரியான பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்-ரேய்ஸ் மட்டும் இந்த இயக்கத்தில் ஈடுபடாததால் இன்னும் உயிருடன் இருக்கிறார். மிராபல் சகோதரிகள் தமது கலகத்திற்காக டொமினிக் குடியரசின் தேசிய நாயகிகளாகப் போற்றப்படுகின்றனர். உலக அளவில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பின் சின்னமாகவும் "மறக்கமுடியாத வண்ணத்துப்பூச்சிகள்(Unforgettable Butterflies)" என்று  முன்னிறுத்தப்படுகின்றனர்.

தகவல்களுக்கு நன்றி  : விக்கிபீடியா 


எழுதத் தூண்டிய பதிவுகள்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Womenபெண்களுக்கு y


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

  1. வரலாறை புட்டு புட்டு வைச்சிட்டீங்க தமிழ்வினை! நல்ல முயற்சி.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குட்டிப்பையா விக்கிபீடியாவின் உதவியால்தான் எழுதினேன்

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்