மெரினாவில் அடக்கம் செய்ய மறுக்கப்பட்ட போது கருணாநிதிக்கே இந்நிலையா என்று எண்ண வைத்து விட்டது ஆதிக்கத்தின் வன்மம். இது சாதாரண ஊழல், குடும்ப அரசியல், எதிர்கட்சி என்ற எதிர்ப்பால் வரும் வன்மம் அன்று என்று உங்கள் உடலுக்குக் கிடைத்த மதிப்பு எடுத்துக் காட்டி விட்டது. அடக்கம் செய்வதற்கே நீதி மன்றம் சென்றுதான் வெல்ல வேண்டியிருக்கிறது. இந்த உரிமைக்காக கருணாநிதியே போராட வேண்டியிருக்கிறது என்றால், இன்னும் எத்தனை போராட்டத்தை சந்திக்க வேண்டுமோ இச்சமூகம் ?
உங்கள் ஆன்மா என்றும் எங்களிடம் சாந்தி அடையக் கூடாது என்று சொல்வதே உங்களுக்கு அஞ்சலி செலுத்தும் முறை. இன்னும் செய்திருக்க முடியும் என்ற போதிலும் இதெல்லாம் செய்தே இருக்கக் கூடாது என்ற போதிலும் தவிர்க்க முடியாத ஆளுமையாகவே இருந்தீர்கள். உங்களிடம் கற்றுக் கொண்டதும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளன. எதிரிகள் உங்களைத் தாக்கும் போதெல்லாம் என்னைப் போன்றவர்களின் பெரும்பான்மைக் கொள்கையை(திராவிடம்) நீங்கள் தாங்கி இயங்கியதால் எங்களையும் சேர்ந்த்தே தாக்கியதாக உணர்ந்தோம். உங்களைத் தாக்குகிறவர்கள் கருணாநிதி என்ற தனி மனிதரையல்ல ஒரு சித்தாந்தத்தையே அதை ஏற்கும் எங்களையே தாக்குகிறார்கள். எனவே உங்களைத் தாங்கி ஏந்த வேண்டியது எங்களுக்குக் கடமையாகிறது. உங்களை விமர்சித்ததும் விமர்சிப்பதும் எங்கள் கடமை. உங்களை ஆதரிப்பதும் எங்களுக்குக் கடமை.
#ThankYouMK