வாழ்த்துக் கூறுதல் என்பது ஒரு நல்ல செயலை எதிர்நோக்கியிருக்குமாறு சொல்வது. நல்ல செயல் நடக்கும் என்று நம்பிக்கை சொல்வது. தேர்வில் தேர்ச்சி அடைவாய், தொழிலில் வெற்றி பெறுவாய், வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதை எல்லோரும் உண்மையிலேயே உள்ளத்திலிருந்து சொல்கிறார்களா என்றால் இல்லை. திருமணத்திற்குச் செல்கிறார்கள் அங்கே எத்தனை பேர் மணமக்களை உள்ளப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள். போகிறார்கள், விருந்து எப்படி இருந்தது என்று பேசுகிறார்கள், சைட்டடிக்கிறார்கள், பெண்கள் மற்ற பெண்களின் உடை, நகை ஒப்பனை குறித்து ஒப்பிடுகிறார்கள். மணமக்களின் உடை, நகை, புறத்தோற்றம், ஒப்பனை குறித்து விவாதிக்கிறார்கள். சீதனம் எத்தனை சொத்து இத்தனை இத்யாதிகள் பற்றிப் பேசுகிறார்கள். கலைகிறார்கள்.
ஆண்கள் பழைய நண்பர்களுடன் இணைந்து சரக்கடிப்பதற்காகவே திருமணத்திற்கு வருகிறார்கள். திருமண "வரவேற்பு" காலையில் நடக்கிறதென்றால் முந்தைய இரவே அடித்த போதை தெளியாமல் மல்லாந்து கிடக்கிறார்கள். எல்லாம் முடிந்து கடைசி பந்தியில் உண்டு விட்டுப் போகிறார்கள். திருமணத்திற்கு வந்து வாழ்த்துவதெல்லாம் அவர்கள் நோக்கமில்லை.
அனைவரும் வந்து வாழ்த்தினால் மணமக்கள் நன்றாக வாழ்வர் என்ற நம்பிக்கையில்தான் இவர்கள் அழைக்கபடுகின்றனர். வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வே திருமணம். இவர்கள் இப்படி இருக்கையில் என்ன நடந்து விடுகிறது என்பது புரியவில்லை. எல்லாமே சம்பிரதாயத்திற்காகவும், பகட்டுக்காகவும் எந்திரத்தனமாக நடந்தேறுகிறது.
இந்த புத்தாண்டு வாழ்த்துக்களும் அப்படித்தான். எல்லாரும் சொல்கிறார்கள் எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்த்து பரிமாறிக் கொள்கின்ற நாள் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் நல்லதாகத் தோன்றவில்லை. சரக்கடிப்பதற்கு ஏற்ற நாளாகத்தான் இதை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதுவும் சரியாக 12 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, அல்லது அழைத்து வாழ்த்துச் சொல்வது, நண்பர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது போலத்தான். அதை சொல்பவர்களும் மகிழ்கிறார்கள், வாழ்த்து பெறுகின்றவர்களும் மகிழ்கிறார்கள். வாழ்த்தாமல் இருந்து விட்டால் இருவரும் சங்கடப் படுகிறார்கள்.
இரு இணைபிரியா நண்பர்கள் என்ன நினைவு வைத்தா சொல்கிறார்கள். எல்லோருக்கும் செல்பேசியின் காலண்டர், ஃபேஸ்புக்கிலோ நோட்டிஃபிகேசன் வந்து விடுகிறது. டெம்ப்ளேட் செய்தியையோ வாழ்த்தையோ தட்டி விடுகிறார்கள். பிறகு ட்ரீட் ஆரம்பமாகிறது. இதில் அன்பு எங்கே இருக்கிறது.
புத்தாண்டில் வாழ்த்துத் தெரிவித்தால் அவ்வருடம் முழுதும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. வாழ்க்கை ஏற்படுத்தும் துயரங்கள் இவ்வருடத்தில் முடியும் என்ற நம்பிக்கையில் அனைவரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால் வாழ்க்கை என்னவோ பழைய மாதிரிதான் பெரும்பான்மையினருக்கும் தொடரப் போகிறது. அந்த சில நிமிட மகிழ்ச்சிக்காகத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா ?
மற்ற எந்த நாளாக இருந்தாலும் பேருக்கு வீட்டில் கொண்டாடி விட்டு, வெளியில் இரகசியமாய் சரக்கடிப்பார்கள். ஆனால் புத்தாண்டில் மட்டும்தான் சரக்கடித்து விட்டு பொதுவிலேயே ஆட்டம் போடலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது. கோவையில் இந்த புது வருடத்தின் முதல் நாள் மட்டும் நான்கரைக் கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது. வழக்கத்திற்கு ஒரு நாளில் 3 கோடிக்கு மட்டுமே இருந்த விற்பனை ஒன்றரைக் கோடிக்கு அதிகமாகியிருக்கிறது, இது போன்ற போதையில் சமூகத்தை ஆழ்த்துவதற்குத்தான் ஒரு மண்ணுக்காகாத இந்த பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் பிரபலப்படுத்தப் பட்டு பொதுவாக்கப்படுகின்றன.
ஒரு நல்ல செயலைத் தொடங்கவோ அல்லது தம், தண்ணி, கஞ்சா போன்ற கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கும் ரிசொல்யூசன்களை எடுக்க ஒரு சாக்காக இந்த ஆண்டுப் பிறப்பைச் சொல்லிக் கொள்கிறார்கள். அதை விட நினைப்பவர்கள் உண்மையிலே அதுதான் நோக்கமென்றால் அக்கணமே தொடங்க வேண்டியதுதானே. அதற்கென்ன வேண்டிக் கிடக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு. இது ஆங்கிலப் புத்தாண்டே இல்லையாம், லத்தீன் புத்தாண்டு வேறயாம். தமிழ்ப்புத்தாண்டு என்பது எப்படி சமஸ்கிருதத் திணிப்போ அது போல. இப்படி பெயரும் பெயர்க்காரணமுமே எல்லாருக்கும் தவறாகப் பரப்பப் பட்டு கொண்டாடப் படுகிறது.
யாரோ எப்படியோ கொண்டாடினாலோ மகிழ்ச்சியாக இருப்பதால் நமக்கென்ன வயிற்றெரிச்சல் வந்து விடுகிறது. ஆனால் அப்படியில்லை. இவை நம்மீதும் திணிக்கப்படுகிறது. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இது போன்ற கொண்டாட்டங்களிலெல்லாம் நம்மையும் ஈடுபடுத்துகிறார்கள் அல்லது நாமே பங்கெடுக்க வேண்டியதாகிறது. பொங்கள் தவிர தீபாவளி, பிறந்த நாள், ஜனவரி 1 போன்றவறையெல்லாம் கொண்டாடுவது எனக்கு அறவே பிடிக்காது ஆனால் நண்பர்களும், உறவினர்களும் கையை குலுக்கியோ, கைபேசியால் அழைத்து நம் வாயிலிருந்து வாழ்த்தைப் புடுங்கி விடுகிறார்கள். பிடிக்காது, நம்பிக்கையில்லை, விருப்பமில்லை என்று என்ன சொன்னாலும் விடுவதில்லை. இவர்கள் விளக்கம் சொன்னால் மனத்தை வேறு புண்படுவதாகக் கூறுவார்கள். நாளும் புதிதாக நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். ஒவ்வொருவரிடம் சலிக்காமல் நாம் கொள்கை விளக்கம் அளித்துக் கொண்டா இருக்க முடியும் ?
மனிதர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்வூட்டிக் கொள்ளவும் உற்சாகமாக செயல்படவும் கொண்டாட்டங்கள் கேளிக்கைகள் இன்றியமையாத தேவைகள். ஆனால் சமூகத்திற்கும், தனிமனித சீரழிவுக்கும் வழிகொள்ளும் இவ்வகை திடீர் மிகை உணர்ச்சிக் கொண்டாட்டங்கள், காலத்திற்கொவ்வாத மதப் பண்டிகைகள், நுகர்வுப் பண்பாட்டைப் ஊக்குவிக்கும் போலிக் கொண்டாட்டங்கள் என்ன பயனைத் தரும் என்று பார்த்தால் ?? இவைகளைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.