குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
குறள் - 504
மக்களுக்கு எதிராக என்ன கிறுக்குத்தனம் செய்தாலும், அவர்களின் வாழ்வையே பறித்துக் கொண்டாலும் இந்து மதம் ஆபத்தில் இருக்கிறது, பாகிஸ்தான் சதி, பொருளாதாரம் வளர்கிறது, ஊழல் ஒழிந்து விட்டது, ராமன் கோயில் கட்டுவோம் என்றெல்லாம் அடித்து விட்டால் போதும் அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம்.
மக்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறார்களோ அந்த அளவில்தானே கட்சிகளும் இருக்கும்.
காவி பயங்கரவாதிகளுக்கு எதிரான ஃபாசிசத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்பதை நக்கலடிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பேராயக் கட்சி (congress) என்ன யோக்கியமா அவர்களும் ஃபாசிஸ்ட்டுகள்தான் என்று அவர்களுடைய பழைய குற்றங்களை எடுத்துக் காட்டுகின்றனர். இப்போது பாஜகவில் இருப்பவர்கள் பேசுவதைப் போலத்தான் 75 வருடங்களுக்கு முன்பிருந்த காங்கிரஸ் ஆட்கள் பேசிக்கொண்டிருந்தனர். இன்னமும் காங்கிரஸ் கட்சி அப்படியேதான் இருக்கிறதா ?. திமுகவின் காங்கிரஸ் கூட்டணிக்கும், முன்பு பாஜவுடன் கூட்டணி வைத்ததற்கும் எதிர்ப்பது நியாயம்தான். ஆனால் நிலவரம் எப்படி இருக்கிறது ?
இல்லை நாம்தான் புரட்சி செய்து கொண்டிருக்கிறோமா ? இல்லையே அப்படி இருவரையும் சமமாக எதிர்ப்பதாக இருந்தால் இந்நேரம் மாஓ-இயர்களாக, நக்சல்களாக துப்பாக்கி ஏந்தி காட்டுக்குள் வாழவில்லையே. சுகமாக ஃபேஸ்புக்கில் வடிவேலு படம் போட்டு அரசியல் பேசிக்கொண்டிருக்கிறோம்தானே ?
பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் வந்தால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று யாரும் நம்பவில்லை. இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை சொன்னவர்களல்ல இப்போது பாஜகவிற்கு மாற்றாக காங்கிரசை சொல்பவர்கள். காங்கிரசை எதிர்த்தனரே அன்றி பாஜகவை பரிந்துரை செய்யவில்லை. அது சில அரை வேக்காடுகள் தந்நலவாதிகள் செய்ததுதான்.
நமது அச்சம் என்ன ? நமக்கிருக்கும் சில உரிமைகளும் பண்பாடும் பறிபோய், கீழ்த்தரமான மனிதர்களால் ஆளப்படுவோம் என்பதுதான். இப்போது இருக்கும் ஆட்சி தொடர்ந்தால் என்ன ஆகும் மொழி, தேசிய இன உரிமைகள் பறிக்கப்பட்டும், சீனாவைப் போன்ற ராணுவ சர்வாதிகாரமும், முஸ்லிம் நாடுகளைப் போன்ற மதவாத அடக்குமுறைகளும், ஜாதிய அடிமைத்தனங்களும் இன்ன பிற ஒழிக்கப்பட வேண்டிய மனித குலத்திற்கு எதிரான அனைத்தும் தலைவிரித்தாடும் என்ற அச்சமும்தான். இது ஒன்றன்பின் ஒன்றாக நம் மீது கட்டப்படும்.
பாஜக/ஜாதிக் கட்சிகள் வன்முறை செய்வதற்கும் மற்ற கட்சியினரின் வன்முறைக்கு என்ன வேறுபாடு இருக்கின்றது ? பாஜக அல்லது ஜாதிக் கட்சிகள் அடையாள அரசியல் செய்பவை. நாம் அவர்கள் என்று உணர்வுப் பூர்வமாக பிரித்து அதன்மூலம் பூசல் வெறுப்புணர்வு வளர்த்து அதன் மூலம் வன்முறை செய்பவை. இது அரசியல் சாராத பொதுமக்களையும் உணர்வுரீதியாக இணைத்து மற்றொரு பிரிவினர் மீது வன்முறை செய்பவை. இந்தியாவில் பொதுவாகவே பெரும்பான்மை மக்கள் தம்மை ஜாதியுடனும் மதத்துடனும்தான் இணைத்து தம்மை அடையாளப்படுத்த விரும்புகின்றனர். இப்படி இருக்க இவர்கள்து பொருளாதார ரீதியான பிரச்சினைகள் திசை திருப்ப மதவாதம் ஜாதியம் தேசப்பற்று என கவர்ச்சியான காரணங்கள் போதும் இதைக் கொண்டே மற்றவர்கள் மீதும் வன்முறையை ஏவவும் முடியும்.
மதவாதம்/ஜாதி/ இனவாதம் அல்லாத கட்சிகள் செய்யும் வன்முறை என்பது அக்கட்சியின் அதிகாரப் போட்டி காரணமாக குழுக்களுக்கிடையே போட்டி பொறாமை தனி நபர்களுக்கிடையேயான போட்டி பொறாமை காரணமாக விளைவது, அல்லது தனிநபரின் பொறுக்கித்தனம் ரௌடித்தனம் காரணமாக விளைவது இதனால் மிகச்சில பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இது நியாயம் என்றோ சாதாரணம் என்றோ சொல்ல வரவில்லை. இது போன்ற கட்சியிலிருப்பவர்களும் கூட ஜாதி மத வெறியின் காரணமாக கொலைகள் செய்வதுண்டு என்றாலும், இது கட்சியின் கொள்கை காரணமாக விளைவதில்லை என்பதுதான் இங்கே முக்கியமானது.
10 வருடங்களுக்கு முன்பு ஈழப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டில் பரவலாகப் போராட்டம் நடந்த போது இந்திய அரசுக்கு எதிராகவும், இறையாண்மைக்கு எதிராகவும் பரவலான முழக்கங்கள் எழுந்தன. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராஜிவ் படுகொலையை முதன்மைப் படுத்தியும், விடுதலைப் புலிகளுக்கு (தீவிரவாத எதிர்ப்பாம்) எதிராகவும் பேசினர். அதற்காக தமிழ்நாட்டை இழிவும் செய்தோ வெறுப்போ காட்டவில்லை. அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தனர்.
தற்போது பாருங்கள். தமிழ்நாட்டில் எந்தவொரு வாழ்வாதாரப் போராட்டம் நடந்தாலும் கட்சியிலேயே இல்லாத காவி பயங்கரவாதிகள் டுமிலன், போராளீஸ் என்றெல்லாம் என்னமா நக்கலடிக்கிறார்கள் ? இத்தனைக்கும் தேர்தலில் ஈடுபடும் கட்சிகள் கூட இது போன்ற போராட்டங்களில் முன்னிறுத்தப்படவில்லை. இப்படி சராசரி மக்களின் போராட்டத்தையே இப்படி வெறுப்பு காட்டி நக்கலடிக்கும் காவி இழிபிறவிகள், தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நாக்பூர் பயங்கரவாதிகளின் காலை நக்கி தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் சங்கிகளை எதிர்க்க வேறு என்ன வழி ? இங்கே பெரும்பான்மை மக்களும், ஏன் படித்து முடித்த அறிவாளிகளே ஜனநாயக உணர்வற்ற, அரை வேக்காடுகளாக சங்கிகளாக ஜாதி வெறியன்களாக இருக்கும் நிலையில் நாம் வேறு என்ன செய்ய முடியும் ?
காங்கிரஸ் மட்டுமல்ல இங்கு மூன்று தேசியகட்சிகளுமே இந்தியாவின் ஏதோ ஒரு இனப்படுகொலையில் கைநனைத்தவைதான்.
இப்போது காங்கிரஸை எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள் என்னென்னா ? காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்கள் தேசிய இனங்கள் மீதான ராணுவ கொடூரங்கள், மாநிலங்களின் தன்னாட்சி உரிமை இன்ன பிற குறித்து காங்கிரசின் நிலையும் பாஜக நிலையும் ஒன்றுதான் என்கின்றனர்.
இந்திரா காந்தி வெறியாட்டம் போட்ட அவசர நிலை ஆட்சி, பிந்த்ரன்வாலே காலத்தில் பொற்கோயில் ராணுவ நடவடிக்கை, பஞ்சாப் படுகொலைகள் மற்றும் பல. இந்திரா படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய இனப்படுகொலையுடன் அரசியலில் இறங்கிய ராஜீவ் நடத்திய ஃபாசிச ஆட்சி, இந்திய அமைதிப்படை நடத்திய ஈழப்படுகொலை இப்படி எல்லாமே இருக்கின்றன. 30 ஆண்டுகள் முந்தைய நிலை இது.
அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக தலையெடுக்கும் முன்பு காங்கிரஸ் ஆடிய வெறியாட்டம் இப்போது இருக்கும் பாஜகவுக்கு நிகரானது அல்லது அதிகமானது. இந்தியாவின் நிலை, இந்தியாவின் ஆளும் கட்சியின் நிலை இப்படியிருக்க இலங்கையில் சிங்கள-புத்த பேரினவாத தமிழ் வெறுப்பு நச்சு இலங்கை முழுவதும் பரவலாக ஈழத்தமிழினத்தை குதறி எடுத்துக் கொண்டிருந்தது. தமிழ் ஆயுதக் குழுக்கள் எழுச்சி இராணுவத் தாக்குதலையும் ஈழத்தமிழனை கொன்று குவிக்கத் தொடங்கியிருந்தது. இப்படி இலங்கையின் பயங்கரவாத ஃபாசிஸத்திற்கு எதிரான ஆயுதமேந்திய தமிழர்கள்
ஏன் ஏன் ஏன்
இந்தியாவின் தேசிய இனங்களை வேட்டையாடியும், அடக்கியும் வைத்துள்ள இந்தியாவிடம், ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம், இந்திய ராணுவத்திடம், உளவுத் துறையிடம் வந்து, ஆயுதமும் பணமும் பயிற்சியும் பெற்றார்கள் என்பதை விளக்கினால் நலம். அப்படி வந்தவர்களிடம் ஏன் காங்கிரசின் யோக்கியதை விளக்கிக் கூறி தடுக்க வில்லை.
ஃபாசிச எதிர்ப்பிற்காகத்தானே?
அப்படி வந்து ஆயுதப் பயிற்சி பெற்றவர்களை ஆதரிப்பவர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை. இல்லை புலிகள் ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தலைப் புறக்கணித்து, ரணிலைத் தோற்கடித்து தனக்குத்தானே குழி தோண்டியதைப் போல பெரிய திட்டத்தோடேவா ?
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்