திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது தமிழினப் படுகொலையில் பங்கெடுப்பது ஆகுமா ?

திமுக-பேராயக்கட்சி-பொதுவுடமைக் கட்சிக் கூட்டணிக்கு வாக்களிப்பது ஈழத் தமிழர் இனப்படுகொலையை மறந்து விட்டதாகவும், ஈழத்தமிழர்க்கு துரோகம் செய்துவிட்டதாகவும் சொல்கின்றனர். இது உண்மையா என்று பார்க்கலாம். ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் இது உண்மை போலத் தோன்றும்.

தேர்தல் புறக்கணிப்பு செய்பவர்களுக்கு அல்ல, 

ஃபேஸ்புக் போராளிகள், களப்போரளிகளாக இருந்து கொண்டே + வாக்களிப்பது கடமை என்றும் தமிழ் நாட்டை நேசிப்பவர்களுக்கும், சில தமிழ் உணர்வாளர்களுக்கும் மற்றும் குற்ற உணர்ச்சி கொண்ட அனைவருக்கும். 

வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை பெற்றுத் தந்த ஒரு மிகப்பெரிய அறிவாளரையே ஜாதிக்கண்ணாடியைப் போட்டுப் பார்க்கும் இந்திய சமூகத்தில், அந்த உரிமையைக் கொண்டே தம் ஜாதிக்காரனுக்கு வாக்களிக்கும் நாட்டில்,

மதவெறியில் வாக்களிப்பவர்கள், நம்மாளு என ஜாதிக்காக வாக்களிப்பவர்கள், ஒரு கட்சி பிடிக்காமல், ஒருவரின் ஜாதி/மதம்/இனம் பிடிக்காமல் எதிர்கட்சிக்கு வாக்களிப்பவர்கள், மாற்றத்துக்காக புதியவர்களுக்கு வாய்ப்பு தருவோம் என்பவர்கள், இனத்துக்காக வாக்களிப்போம் என்பவர்களுக்கும், எவனும் வேண்டாம் என்று NOTA வுக்கு வாக்களிப்பவர்கள், கடமைக்கு வாக்களிப்பவர்கள் போன்றவர்களுக்கு எவ்விதக் குழப்பங்களும் இருந்ததில்லை. அதனால் பாஜக, அதிமுக இன்னபிற ஜாதிக்கட்சிகளுக்கு பிரச்சனை இல்லை. அதுவே ஜாதி ஒழிப்பு, தமிழ் உணர்வு, ஜனநாயகம், சமத்துவம், மனித உணர்வு, பெண்களுக்கு சம உரிமை இன்னும் பல கொள்கைகளைக் கொண்டவர்களுக்குத்தான் எத்தனை தயக்கங்கள், சங்கடங்கள் ? 

காங்கிரசும் பாஜகவும் ஒன்னு (தேசியக் கட்சிகள்)
திமுகவும் அதிமுகவும் ஒன்னு (திராவிடக் கட்சிகள்)
பாமகவும் விசிகவும் ஒன்னு (ஜாதிக் கட்சிகள்)
புலிகளும் சிங்கள அரசும் ஒன்னு (இனவெறியர்கள்)

என்றெல்லாம் கூட நாம் சொல்லிக் கொண்டே போகலாம் நமக்கு நேர்மையும் அக்கறையும் இல்லாவிடில். 

ஆனால், காங்கிரசை கேரளத்தில் எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆதரிக்கிறார்கள் என்று கம்யூனிசக் கட்சியினரைச் சொல்கிறார்கள். ஏன் இடம் பொருள் ஏவல் காலம் தேவை என்று எல்லாவற்றையும் பார்த்துத்தானே இதெல்லாம் நடக்கிறது.

பாஜக உள்ள வந்துரும் என்பது வெறும் நகைச்சுவையா ? மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உடனே ராணுவத்தைக் கொண்டு வந்து நம் தெருவில் நிறுத்தமாட்டார்கள். ஆனால் படிப்படியாக செய்வார்கள். ஒவ்வொன்றாக செய்வார்கள். ராணுவத்தைக் கொண்டுவராவிட்டாலும் நம்மையெல்லாம் தெருவுக்கு கொண்டு வருவார்கள். 

பாஜக வந்தால் நாமெல்லாம் படிக்க முடியாது என்று 2014 -இல் சொன்னால் திடீர் பாஜக மோடி ரசிகர்கள் எல்லாரும் சிரித்திருப்பார்கள். ஆனால் NEET,  5 ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு, புதிய கல்வித் திட்டம் என்று வரிசையாக வருகிறது இல்லையா ?

இந்திய அரசு என்பது பார்ப்பன-பனியா முதலாளிகளின் நலனுக்காகச் செயல்படுகிறது. இதைத் தாண்டித்தான் நம்முடைய வாழ்க்கை நடக்கிறது. அவர்களுக்கு எதிரான நம்முடைய உரிமைகள் பறிக்கப்படுவதும் நடக்கிறது. ஈழப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளை ஆதரிக்காதவர்கள் கூட ராஜபக்சே அரசுக்கு எதிராகத்தான் இருந்தனர். அதற்காக அவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்று பொருளில்லை. 

தேர்தல் அரசியல் கட்சிகள் என்பதெல்லாம் தேசிய முதலாளிகளுக்கு ஊழியம் செய்வதற்கும், பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு ஏற்ற திட்டங்களைத் தீட்டுவதற்கும்தான் என்றும் எல்லாமே உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற ஏகாதிபத்திய அமைப்புகளால் ஏவப்படுகின்றது என்ற அளவுக்கு உலக அரசியல், பொருளாதரம் எல்லாம் தெரிந்தவர்களே கூட, கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் Minority திமுக என்று எதிர்க் கட்சியால் ஏளனம் செய்யப்பட்ட ஒரு மாநிலக் கட்சி நடுவணரசுக்கு தனது ஆதரவை விலக்கி இனப்படுகொலை தடுக்க வில்லை என்று சொல்வது என்ன நியாயம் ?. 

இதன் மூலம் இனப்படுகொலைக்குயில் பங்கு வகித்த, மற்ற மேற்கு நாட்டு வல்லரசுகள், ஒற்றர்கள், தூதர்கள், புலத்திலிருந்து புலிகளை தவறாக வழிநடத்தியவர்கள் இன்னும் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட நபர்கள், அரசியல்  என அனைவரையும் தவிர்த்து விட்டு இவர்களை மட்டும் எதிர்க்கிறார்கள். இல்லை தமிழகத்தில் அதிமுகவும், நடுவணரசில் பாஜகவும் இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும் ?

இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கிறது. இதில் பெரும்பான்மையான இனங்கள் மக்களாட்சியின் உரிமைகள் பெற்றுத்தான் வாழ்கின்றன. காஷ்மீர், வடகிழக்கில் சில மாநிலங்கள் ராணுவ அடக்குமுறையின் கீழ் வாழ்கின்றன. பல மாநிலங்களில் பழங்குடியினர் நக்சல்கள்களுக்கு எதிரான போரில், துணை ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கும் ஆளாகின்றன. 

இப்படி அடக்குமுறையை ஏவும் இந்திய அரசிடம் வந்து ஏன் புலிகள் ஆயுதப்பயிற்சி பெற்றார்கள். இந்தியாவின் உதவியை ஏற்றுக் கொண்டதால் இந்தியாவின், மற்ற தேசிய இனங்களின் மீதான அடக்குமுறையைப் புலிகள் ஏற்றுக் கொண்டார்கள் என்று பொருளா ? இல்லை இந்திய அரசுக்கு ஈழத் தமிழர்கள் விடுதலை பெற வேண்டும் என்ற விருப்பமா ?

பாலஸ்தீனம் என்ற நாட்டை ஆக்ரமித்து வந்தேறிகளால் கட்டியெழுப்பப் பட்ட இஸ்ரேல் என்ற நாட்டிடமும் பயிற்சி பெற்றனர். அதனால் அவர்கள் பாலஸ்தீன ஆக்ரமிப்பை ஆதரிக்கிறார்கள் என்று பொருளா ?

1987 - இல் இந்திய அமைதிகாக்கும் இராணுவம் புலிகளை அடக்கத் துவங்கியபோது சிங்கள ராணுவத்திடம் ஆயுதங்களை வாங்கி இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராடியது புலிகள் இயக்கம்.  அதனால் சிங்கள அரசுக்கு புலிகள் எதிரி இல்லை என்றாகவில்லை. அதன் பிறகு இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவியை செய்யாமலில்லை. 2002 இல், புலிகளின் ராணுவ முற்றுகையில் சிக்கிய 20000 சிங்கள ராணுவ வீரர்களை சந்திரிகா அரசு, இந்திய அரசின் உதவியுடன் புலிகளிடமிருந்து மீட்டது. 

ஜேவிபிக்கு எதிராக நடந்த போரில் சிங்கள அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிகழ்த்தியது போலவே ஜேவிபி ஆதரவாளர்களைக் (சிங்களர்கள்) கொன்று குவித்தது. அப்போது தமிழ் அகதிகளுக்கு அடைக்கலமும் அளித்தது. 

ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் போது இந்தியாவின் தலைவர்கள் இலங்கை இறையாண்மை உடைய நாடு அதன் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்று வியாக்யானம் பேசிக் கொண்டிருந்த போது, புலிகள் தாங்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம் சிங்கள அரசு சீனாவுக்குத்தான் ஆதரவளிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எந்த இந்தியாவுக்கு ? தங்களை அழிக்க ஆயுதமும் ஆதரவும் இலங்கைக்கு தந்து கொண்டிருக்கின்ற இந்தியாவுக்கு. தமிழ்நாட்டிலும், இன்ன பிற நாடுகளிலும் ஈழ இனப்படுகொலைக்கு எதிராக போராடுகிறவர்கள் இங்கே மாநில அரசையும், நடுவணரசையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்க ஈழத்திற்கு போராடுகிற புலிகள் இந்தியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். அவர்களின் நிலை அதுவாக இருந்தது. 

தனக்கு வேலை "தந்த" "சோறு போடும்" முதலாளிக்கு எதிராகத்தான் இயக்கம் கட்டி தொழிலாளர்கள் போராடுகிறார்கள். அது போல,

அவசரநிலை அமல்படுத்தப்பட்ட போது, பேராயக் கட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட கட்சி திமுக. இப்போதும் திமுக காங்கிரசுடன் கூட்டணி வைக்கிறது. 

மாநில தன்னாட்சிக்காகப் போராடும் திமுக மாநில உரிமைகள் நசுக்கும் ஒரு தேசியக் கட்சியுடன்தான் கூட்டணி வைக்கிறது.

சூத்திர ஜாதிவெறிக்கு எதிராகப் போராடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சூத்திரர்கள் நிரம்பிய கட்சியுடன்தான் கூட்டணி வைக்கிறது.

அருந்ததியர்கள் கட்சித் தலைவர் அதியமானும், அருந்ததியர்களை ஒடுக்கும் கவுண்டர்களின் ஜாதிவெறிக் கட்சியான கொமதேக ஈஸ்வரனும் ஒரே கூட்டணியில் உள்ளனர்.

இந்திய இறையாண்மையைக் காப்போம் என்று கட்சிக் கொள்கையில் இருப்பதால் நாம் தமிழர் கட்சி இந்திய தேசியத்துக்கு ஆதரவளிப்பது ஆகி விடுமா ?. கட்சிக் கூட்டங்களில் பெரியார் படத்தையும் வைத்துக் கொள்வதைப் போல, நாளை திமுக உடன் கூட்டணியும் வைத்தால் போகிறார்கள். அதற்காக அவர்கள் திராவிடம் பேசுகிறார்கள் என்று சொல்ல முடியுமா ? 

இவையெல்லாம்தான் தேர்தல் ஜனநாயகம் வழங்கும் வாய்ப்புகள். அவரவர் வளர்ச்சிக்கு கொள்கையை மறந்து கூட்டணி வைக்கிறார்கள். 

மாநிலங்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய பாஜக என்ன செய்கிறது எல்லா மாநிலக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்து அவைகளை அழித்து அந்தந்த மாநிலங்களின் முக்கிய எதிர்க்கட்சியாக மாறுகிறது. எந்தக் கொள்கை உடைய எந்தக் கட்சியிலிருந்து எப்பேர்ப்பட்ட குற்றவாளி வந்தாலும் ஏற்றுக் கொள்கிறது. இப்படி என்ன செய்தாலும் அதனுடைய அடிப்படைக் கொள்கை மாறவே இல்லை. 

அவர்கள் ஆணவப் படுகொலையும் ஆதரிக்கிறார்கள். இந்து ஒற்றுமையையும் ஆதரிக்கிறார்கள். உயர்ஜாதியினர்க்கு ஆதரவாக 10% இட ஒதுக்கீடு, NEET என்று கொண்டு வருகிறார்கள். அதிகமான பட்டியலினத்தவர்கள் எங்கள் கட்சியில்தான் இருக்கிறார்கள் என்றும் பெருமை பேசுவார்கள். இதற்காக காவிகள் கடுகளவும் கூச்சப்படுவதில்லை. 

நமக்கு மட்டும் ஏன் இத்தனை யோசனைகள். என்ன வாய்ப்பு உள்ளதோ அதைப் பயன்படுத்த வேண்டியதுதான். எதிர்க்க வேண்டியதை எதிர்க்க வேண்டியதுதான். ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்க வேண்டியதுதான். ஒருவரை ஆதரிப்பதால் அவர்கள் செய்யும் எல்லாவற்றுக்கும் நாம் பொறுப்பேற்கவோ பதில் சொல்லவோ வேண்டியதில்லை. 

எனக்கும் தேர்தலில், முதலாளித்துவ ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. பயங்கரவாதத்துக்கு பதிலடி பயங்கரவாதமே. நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்று நம் எதிரியே தீர்மானிக்கிறான். எனவே நடுவிரலை மனதுக்குள் காட்டி விட்டு எனது ஆட்காட்டி விரலை தேர்தல் பணியாளரிடம் நீட்டினேன். அவர் மையைத் தடவி அனுப்பினார். நான் வாக்கு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி விளக்கு எரிந்ததைக் கண்டு வேட்பாளரின் பெயரும் சின்னமும் திரையில் தெரிந்ததை உறுதிப் படுத்திக் கொண்டு திரும்பினேன். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்