கண்டுகொள்ளப்படாத மக்கள் போராட்டங்களும் கொட்டி முழக்கப்படும் கோமான்களின் போராட்டமும் !!

இன்று நடைபெற்ற திமுகவினரின் சிறைநிரப்பும் போராட்டம்தான சூடாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவினரைப் பிடிக்காதவர்கள் இந்தப்போராட்டத்தை நக்கலடித்து நாறடிக்கிறார்கள். திமுகவினரோ தமது கட்சியின் வலிமையைக் காட்டி விட்டதாக சிலாகிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட திமுகவினரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டிவிட்டது. ஒன்றரை இலட்சம் இருக்கலாம் என்றும் தெரிகிறது. தோராயமாக ஒரு திமுககாரர் தினமலரிலும் தினமணியிலும் போட்ட கருத்திலிருந்து எடுத்த எண்ணிக்கை.

"ஈரோடு மாவட்டத்தில் 5000 பேரும், விழுப்புரத்தில் 20,000 பேரும், திண்டுக்கல்லில் 25,000 பேரும், திருவண்ணாமலையில் 5000 பேரும், திருவள்ளூரில் 5000 பேரும், திருச்சியில் 7000 பேரும், கிருஷ்ணகிரியில் 5000 பேரும், தேனியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர். அதேபோல கடலூரில் 10,000 பேரும், தஞ்சையில் 15,000 பேரும், நாகையில் 10,000 பேரும், கன்னியாகுமரியில் 2000 பேரும், வேலூரில் 15,000 பேரும் கைதாகியுள்ளனர். திருப்பூரில் 10,000, தர்மபுரியில் 10,000, தூத்துக்குடியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 20,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மு.க.அழகிரியின் கோட்டையாக கூறப்படும் மதுரையில் 10,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 50,000 பேர் கைதாகியுள்ளனர். இதில் வட சென்னையில்தான் அதிகபட்சமாக 25,000 பேர் கைதாகியுள்ளனர். தென் சென்னையில் 15,000 பேர் கைதாகியுள்ளனர்.மத்திய சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம்"
 

இதே போராட்டத்தை அதிமுக நடத்தியபோது 20000 பேர்கள் கூட தேறியிருக்கவில்லை என்று கூறுகின்றனர்.

ஆக இவ்வளவு பெரிய மக்கள் திரளைக் கொண்டுள்ள ஒரு கொள்கையுடைய இயக்கம் தனது கட்சிக்காரர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடத்தியுள்ள போராட்டத்தில் தமது வலிமையைக் காட்டியுள்ளது. அதுவும்  கலைஞரின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தன்னிச்சையாக போராட்டத்தில் ஈடுபட விரும்பிய தொண்டர்களின் எண்ணிக்கையே இவ்வளவு. முதலில் கருணாநிதி போராட்டம் தொடங்கிய போது அறிவித்தது > 50000 பேர்கள் வரையே!! ஆனால் கைது எண்ணிக்கை ஏறக்குறைய இலட்சத்தைத் தாண்டி விட்டது என்ற நிலையில் அவருக்கே இது இன்ப அதிர்ச்சிதான். இவர்கள் இன்னும் தீவிரமாக ஈடுபட்டால் இதைப்பொன்று சில மடங்கு கூட்டத்தைத் திரட்ட முடியும், திரட்டிப் போராடினால் தமிழகத்தில் சில பிரச்சனைகளைத் தீர்க்க விரைவில் அது வழிவகுக்கும் ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டார்கள் இவர்கள். இதில் தயாநிதி மாறனெல்லாம் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார். நம்மைப் போன்ற நடுத்தர வர்க்க மங்காணிகளைப் போலல்லாமல் பணக்காரராக இருந்தும் போராடி சிறை சென்று வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். இத்தனை பேரின் போராட்டம் எதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தின் அருகே 30 ஏழைகளின் நிலங்களை அபகரித்த வழக்கில் திமுகவின் வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்காக. ஏறக்குறைய 50 கோடிகள் தேறும் அந்த நிலத்துக்காக கடந்த திமுக ஆட்சியிலிருந்தே அப்பகுதியைச் சார்ந்தவர்கள் போராடி வந்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தையும் அவரது சக போராளிகளையும் ஏழைப் போராளிகளையும் எதிர்த்துப் போராடிய அம்மக்களுக்கு 4 வருடங்களுக்குப் பிறகே சட்டரீதியிலான நீதிமன்றத் தீர்ப்பு  அவர்களுக்கு சாதகமாக வந்து விட்டது. இதன் பின்னணியில்தான் வீரபாண்டியார் கைது செய்யப்பட்டார். இதில் அரசியல் உள்நோக்கம், பழிவாங்கல் என்பதும் இருக்கலாம். ஆனால் அபகரிக்கப்பட்டது மக்கள் நிலம் நிலத்தை மீட்கப் போராடியது வென்றது பொதுமக்கள்தானே அன்றி அதிமுகவினர் இல்லை.  இதில் என்ன தவறு இருக்கிறது. ஈழத்தில் தமிழர்களின் நிலங்களை சிங்கள அரசு பேரினவாத விரிவாக்கலுக்கு அபகரிக்கிறது. இங்கே தமிழினத்தலைவரின் கட்சிக்காரர்கள் ஏழைத்தமிழர்களின் நிலங்களை அபகரிக்கிறார்கள். இந்த ஏழைப் பங்காளனைக் காக்க மிகப்பெரும் போராட்டம் நடத்தும் திமுகவினர் மக்களுக்காகப் போராடியதுண்டா ?

மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த வலிமையைக் காட்டியிருக்க வேண்டியதுதானே ? ஈழப்போர் உக்கிரமான நிலையை எட்டியபோது கலைஞர் தொலைக்காட்சியின் கிளையான சிரிப்பொலி தொடக்கப்பட்டது வரலாறு. சரி அங்கு பல அரசியல் சிக்கல்கள் உள்ளன தொலையட்டும். தற்காலத்திய மக்கள் பிரச்சனைகளில் எத்தகைய போராட்டங்களை நடத்தியிருக்கிறது திமுக. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்வதே அப்போதைய ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பில் எதிர்க்கட்சியினருக்கு வாக்களிக்கின்றனர். வெறுப்பை வடிகட்டி அப்போதைய எதிர்கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. ஒரு வருடத்தில் அம்மாவின் ஆட்சியில் தமிழகம் மூச்சுத் திணறுகிறது. இதில் வெறும் அறிக்கைகள் மட்டுமே வெளியிட்ட மாபெரும் கட்சி, மக்களுக்காக என்ன செய்தது ? பேருந்துக் கட்டணம், பால் உட்பட இன்னபிற இன்றியமையாப் பொருட்கள் விலையுயர்வு ஒரு எடுத்துக்காட்டு.

சரி அதையும் விடுவோம். தமிழ்வெறுப்பு ஜெயலலிதா தற்போது அண்ணா நூலகத்தை திருமணத்திற்காகத் திறந்து விட்டதற்காக இரத்தக் கண்ணீர் மட்டும் வடிக்கிறார். பார்ப்பன ஜெயலலிதா சித்திரை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தை எதிர்த்து என்ன போராட்டம் நடந்தது ? சமச்சீர் கல்விக்கு எதிராக ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு என்ன எதிர்ப்பைத் திமுக காட்டியது ? ஒரு வருடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க, உறுதிமிக்க அணு உலை எதிர்ப்புப் போராட்டமாம் இடிந்தகரைப் பிரச்சனையில், திமுக கூடங்குளம் அணு உலையும் திறக்கப்பட வேண்டும் என்கிறது. இந்த இரு கட்சிகளில் எது ஆண்டால் தமிழகத்துக்கு என்ன பெரிய மாற்றம் வந்து விடப்போகிறது. இப்படி மக்களின் எல்லாப் பிரச்சனைக்கும் தள்ளியிருந்து விட்டு, தமது கட்சிக்காரரின் கைதுக்கு மட்டும் போராட்டம் நடத்துகிறது திமுக. ஆனால் மற்றொரு புறத்தில் மக்களுக்கான போராட்டம் தொடர்ந்து நடக்கிறது, இடிந்த கரை, ஈழ அகதிகள் போராட்டம், முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணைக்கு எதிராக, தனியார் பள்ளிகளுக்கு எதிராக என எல்லா இடங்களிலும் மக்களின் தன்னிச்சையான போராட்டம் தொடர்கிறது. உதயகுமாரும், முத்துக்குமாரும், செங்கொடிகளும் தமிழர்களாகப் பிறந்தவர்கள்தான். இவர்களெல்லாம் இழிவு செய்யப்பட்ட போது போராடாத தமிழர்கள்தான் தற்போது தலைப்புச் செய்திகளில் தெரிகிறார்கள். இவர்கள் என்ன செய்தாலும் பேசப்படு பொருளாகின்ற நிலையில் சமகாலப் பிரச்சனைகளுக்கு இவர்கள்தானே பொறுப்பு. இனத்தலைவர் என்று பட்டப் பெயர் போட்டுக் கொள்பவர் இனத்தின் பிரச்சனைகளுக்குப் போராட தமது தொண்டர்களுக்குக் கட்டளையிடுவதில்லை.

இதே கேரளாவில் எடுத்துக் கொள்வோம்!! முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அது தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடு என்பது தனிக்கதை. அதில் அனைத்துக் கட்சியினரும் மக்கள் பிரச்சனை என்ற வகையில் ஒன்று பட்டு நிற்கிறார்கள். மேற்கு வங்கத்தில், கேரளத்தில் மக்களையும், மற்ற அரசியல் கட்சிகளையும் மீறி அணு உலை கட்ட இயலாது. ஆனால் தமிழகத்தில் ??!!

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்