உயர்த்தப்பட்டவன்


அவன் கால்கள் பதிந்ததால் அந்த மண்ணை நான் விலக்கி வைக்கவில்லை
அவன் கைகள் களை பறித்ததால் அந்தத் தாவரத்தை நான் சமைத்துண்ணாமல் இருக்கவில்லை
எங்கோ அவன் கைகள் பட்டு வரும் பணத்தைத் தொடுவதற்கும் நான் கூச்சப்படவில்லை
அவன் அறுத்து வெட்டித் தந்த ஆட்டை தின்பதற்கும் எனக்கு கசக்கவில்லை
அவன் நுரையீரல் தொட்டதால் காற்றை நான் சுவாசிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை
அவன் உழைப்பில் விளைந்ததை நான் ஏற்றுக் கொள்ள மறுத்ததில்லை
இருப்பினும் அவனை நான் மனிதனாக மதித்ததில்லை
வீட்டிற்கு அருகில் அனுமதித்ததில்லை
பெரியப்பா வயது மனிதனாகிலும் அவனை டேய் என்றேயழைப்பேன்
அதட்டும் தொனியிலேயே நலம் விசாரிப்பேன்
ஏனென்றால் நான் உயர்த்தப்பட்டவன்
காட்டை விற்றுக் கள்ளைக் குடித்தாலும்
நான் குடியானவனே, குடிகாரனில்லை
ஏர் பிடித்த பரம்பரையைச் சார்ந்தவன் ஏற்றம் பெற வேண்டும்
ஏரைப் பிடிக்காமலேயே !
அவன் மட்டும் எனக்கு குடைபிடிக்க வேண்டும்
ஏனென்றால் நான் உயர்த்தப்பட்டவன்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்