கலவரம் பயங்கரவாதம் மற்றும் தூக்கு தண்டனை !!!


80 மேற்பட்டோரைக் கொலை செய்த மெர்விக்கிற்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்ற செய்தியுடன் தொடங்குகிறேன். அஜ்மல் கசாப்பிற்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்ப்பதா வேண்டாமா எனக் கேட்டால் என்னிடம் பதில் சொல்லத் துணிவில்லை. பொதுவில் நான் கொலைத் தண்டனையை எதிர்க்கிறேன். ஏனென்றால் ஏற்கெனவே சொல்லிச் சொல்லி அலுத்துபோன அதே காரணங்களுக்காகத்தான். ராஜீவ் கொலைவழக்கில் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களின் போது பொது முழக்காமாக இருந்தது மூவரை விடுவிக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், தூக்கு தண்டனையை முற்றிலும் விலக்க வேண்டும் என்பதே. இந்தியா இன்னும் குடிநாயகமாக மாற வேண்டுமேயன்றி, இந்தியாவை விட ஜனநாயகத் தன்மை குறைந்த பாகிஸ்தான், ஈரான் அல்லது இஸ்லாமிய நாடுகள், சீனா போன்று மாறுவதை நான் விரும்ப வில்லை. குறைந்த பட்ச உதாரணமாக நான் காட்டுவது சில ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ஸ்காண்டிநேவியன் நாடுகள்.

தற்போது கசாப் தூக்கு தண்டனையை 99% பேர் ஆதரிக்கிறார்கள். 0.5% பேர்கள் எதிர்க்கிறார்கள். மீதி 0.5% பேர்கள் மௌனம் காக்கிறார்கள். நான் மூன்றாவது வகை. தூக்கு தண்டனை சரியா என்பது குறித்துப் பல விவாதங்கள் நடந்தாலும் கடைசியில் வேண்டாம் என்ற கட்சியின் பக்கமே சாயத் தோன்றுகிறது. ஏனெனில் கசாப்பிற்காக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், கசாப்பை விட கொடியவர்களையெல்லாம் சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறது. அவர்களே கசாப்பை தூக்கில் போடச் சொல்லும் கொடிய நகைச்சுவையையெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது. கசாப்பை தூக்கில் போட வேண்டும் என்ற வேட்கை அல்லது அறச்சீற்றம் உண்மையாக இருக்கலாம். அதே பல ஆயிரம் பேர்கள் கொல்லப்படக் காரண்மானவர்கள் மீது சிறிய சீற்றம் கூட இருக்கவில்லை இருப்பதில்லை அல்லது விரும்பவில்லை என்பதாலேயே கசாப்பின் தண்டனை அதிகப்படியாகத் தோன்றுகிறது.

கசாப் கொல்லப்படுவதற்கு ஏன் இத்தனை ஆதரவு எனில், அவன் 200 வரை கொல்லப்படக் காரணமானவர்களில் ஒருவன், பாகிஸ்தானியன், பயங்கரவாதி, ஒரு முஸ்லிம். எல்லாவற்றுக்கும் மேலாக பயங்கரவாதத் தாக்குதல் என்பது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதனால் எல்லோருக்கும் அதன் மீதான வெறுப்பு ஊட்டப்பட்டது. அவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது. சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் சென்னை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற மோதல் தொலைக்காட்சியில் காட்டப்பட்டபோது ஏற்பட்ட மனநிலையைக் கணக்கில் கொண்டால் தெரியும். அவ்வப்போது மேல்ஜாதி வெறியர்களால் வன்கொடுமை கொலைகள் பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதே ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் திருப்பி அடித்தது பெரிய அதிர்ச்சியை அவர்கள் மீதான வெறுப்பை உருவாக்கியது. அதற்குக் காரணம் அது திரும்பத் திரும்பக் காட்டப்பட்டதுதான்.
அதே போல்தான் கசாப் மீதான கருத்தும், நரேந்திர மோடியின் மீதான கருத்தும் வேறுவிதங்களில் எடுத்துக்காட்டப்படுகின்றன.

பயங்கரவாதமும் கலவரமும்

200 பேர்கள் கொல்லப்பட்ட இத்தாக்குதல் பயங்கரவாதம் என்று சித்த்தரிக்கப்படுகிறது. அதே 2000 பேர்கள் கொல்லப்பட்ட குஜராத் படுகொலையானது குஜ்ராத் கலவரம் என்றே அழைக்கப்படுகிறது. அதுவும் கர சேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் என்றே செய்திகளில் வாசிக்க நேர்கிறது. அதாவது முஸ்லிம்கள் 50 கரசேவகர்களை எரித்துக் கொன்றனர். அதன் பின்னர் கலவரம் மூண்டது.
இங்கு 50 இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர் என்பது அழுத்தமாகக் கூறப்படுகிறது. பின்பு 2000 முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது கலவரம் என்ற சொல்லில் பூசி மெழுகப்பட்டு, அதன் உண்மைத்தன்மை மழுங்கடிக்கப்படுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைக் கொலைகாரர்களாகவும் சித்தரித்து, அவர்களின் பாதிப்பை கலவரம் என்ற சொல்லின் மூலம் எந்த அதிர்ச்சியும், அவமானமும் இந்து மனங்களில் ஏற்காதவாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. 

குஜராத் கலவரக்காரர்களிடம் தன்னைக் கொல்ல வேண்டாமென்று கெஞ்சும் குத்புதீன் அன்சாரியின் கண்ணீரும், நரோடா பாட்டியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் கண்ணீரும் - இதில் இரண்டாவது படத்திற்குப் பதில் தூக்கு தண்டனைக் கைதி கசாப் கண்ணீர் விட்டு அழுவதைப் போடலாமா ? அதுதானே நியாயம் ?

உண்மை என்பது கரசேவகர்கள் இறந்தது விபத்தினால்தான். ஆனால் குஜராத் படுகொலையை ஆதரிப்பவர்கள் இதைக் முஸ்லிம்கள் நிகழ்த்திய படுகொலை என்று கூறுகிறார்கள். முஸ்லிம்கள் கொல்லப்பட்டத்தை எதிர்வினை என்று கூறுகிறாரகள். சரி அப்படியே பார்த்தாலும் 40 பேரைக் கொன்றவர்களுக்கு என்ன தண்டனை தரவேண்டுமோ அதைவிட 2 மடங்கு அதிக தண்டனைதான் 2000 முஸ்லிம்களைக் கொன்றவர்களுக்குத் தரவேண்டும்.

இதேபோல பாபர் மசூதி இடிப்பின்போது கொல்லப்பட்டவர்களுக்கான நீதியும் எத்தனை கிலோ கிடைத்தது எனத் தெரியவில்லை. ஆனால் குண்டு வெடிப்புகளுக்கு மட்டும் நீதி கிடைத்தது. 3000 சீக்கியர்களை டெல்லியின் தெருக்களில் கொலை செய்து வீசியதால் அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை. அதை முன்னின்று நடத்தியவர்கள் எல்லாரும் இயற்கையாகவே இறந்து போனார்கள். மீதமிருப்பவரும் இயற்கையாகவே இறப்பார்கள் யாருக்கும் தூக்கு இல்லை. சிறையும் இல்லை. ராஜீவ் மட்டும் வேறு அரசியல் காரணங்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படி ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்படுவது கலவரம் என்று பூசி மெழுகப்படுகிறது, அதே நேரம் குண்டு வெடிப்புகள் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி அது மிகப்பெரிய எதிர்வினையை உண்டாக்குகிறது. குண்டு வெடிப்புக்களைக் காட்டிலும் மிகப்பெரியா பாதிப்புக்களை ஏற்படுத்தும் கும்பல் கலவரங்கள் மிகச் சாதாரணமாக மறந்து போய்விடுகிறது.

ராஜீவ், அத்வானி, பால்தாக்கரே, மோடி இவர்களின் கட்சிக்காரர்கள், இயக்கத்தவர், அடியாள்கள் மிகப்பெரிய அளவில் கலவரங்களை நடத்தினார்கள். சீக்கியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இதில் அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டன, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். ஆனால் இத்தலைவர்கள் மீதான வெறுப்புணர்வு என்பது பொதுமக்களிடம் இல்லை.

இதுதான் பாரபட்சமாக இருக்கிறது. இதனால்தான் கசாப்பின் தூக்கு தண்டனையை ஏதோ பெரிய நீதியை நிலை நாட்டி விட்டதாகக் கூறப்படுவதை சகிக்க முடியவில்லை. கசாபின் தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் சூழலிதான் குஜராத் படுகொலை, சீக்கியர் படுகொலை, மும்பை, உத்தரப் பிரதேசத்தில் நடந்த கலவரங்களை நினைவூட்டிக் கொண்டு, அக்குற்றவாளிகளை சுதந்திரமாக அரசியல் நடத்துவதன் மூலம் பாரபட்சமான நீதி வழங்கப்படுகிறதைக் காணலாம்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

19 கருத்துகள்:

  1. பெயரில்லா31/8/12 2:15 AM

    //இதில் யாருடைய கண்ணீர் வலியது ..?//


    உங்களின் சிந்தனை சிறக்க பிரார்த்தனை செய்கிறேன்...


    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோ,
    நல்ல பதிவு.

    மரண தண்டனை நாட்டின் சட்டங்களில் இருக்க கூடாது என்பது நாகரிக உலகை நோக்கி செல்லும் முதல் படி.உயிரை நம்மால் கொடுக்க முடியாத போது எடுக்க வேண்டாம்.

    சரி மனித விரோத செயல் செய்யும் கொடியவர்களை என்ன செய்வது? நிச்சயம் தண்டிக்க வேன்டும்? 100 வருட (தனிமை) தண்டனை கொடுக்கலாம். மிக எளிய உணவு,அதனையும் அவர்கள் கடின உடல் உழைப்பிலேயே ஈடு கட்டும் வண்ணம் தண்டனை அமைய வேன்டும். இது மரணத்தை விட கடுமையானது என்பது நம் கருத்து.

    நம் நாட்டு சட்டங்கள் பாரப்ட்சம் காட்டுகின்றன என்பதும் உண்மை என்றாலும் மரண தண்டனை மீதான விவாதத்தில் இது தேவையற்றது .

    கசாப்பின் செயல்,நாடு,மதம் சார்ந்து அவனுக்கு மட்டும் மரண தண்டனை என கருத்து கூறாமல் ஒதுங்கும் மரண தன்டனை எதிர்பாளர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி சார்வாகன்.

      பல குழப்பங்களுக்கு அப்பால் தூக்குதண்டனை வேண்டாமென்றே தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் தண்டனை ஏற்புடையதாக இருக்கிறது

      நீக்கு
  3. பெயரில்லா31/8/12 6:13 AM

    செம காமெடி...
    //உண்மை என்பது கரசேவகர்கள் இறந்தது விபத்தினால்தான்.///
    குஜராத்தில் 2001 பிறகு இது போன்ற விபத்து ஏன் நடக்க வில்லை...??? கொஞ்சம் தெரிந்தால் சொல்லுங்களே. ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் உங்கள் கருத்து ஸ்பாமுக்குச் சென்று விட்டதை இப்போதுதான் பார்த்தேன். அதாவது முஸ்லிம்களுக்கு பதிலடி கொடுத்ததால் அடங்கி விட்டார்கள் என்கிறீர்களா ? ஒரே மாதிரியான விபத்துக்கள் தொடர்ந்து நடக்குமென்பது விதியா என்ன ? பாஜக ஆளும் மாநிலத்தில் கரசேவகர்களை எரித்துக் கொன்றால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாதா ?

      நீக்கு
  4. ஸலாம் சகோ.தமிழ்வினை, செய்த குற்றத்துக்கு ஏற்ப... கசாப்புக்கு மரணதண்டனை மட்டுமே சரியான தீர்ப்பு என்பதே எனது கருத்து. கசாப்புக்கு தூக்குத்தண்டனை தரவில்லை என்றால் அது ஏனைய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு குற்றங்கள் புரிய உற்சாகத்தை அளித்துவிடக்கூடும். அது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து. மரணதண்டனை வேண்டாம் எனில்... தமது வரிப்பணத்தை செலவழித்து அவனுக்கு ஆயுள் முழுக்க வேளாவேளைக்கு சோறுபோட்டு வாழ்க்கை அளிக்க யார் தயார்..? நரோடா பாட்டியா கொலையாளிகளான மாயாவுக்கும், பாபு பஜ்ரங்கிக்கும் மற்றும் பலருக்கும் கூட 28 வருஷம் 16 வருஷம் நாம் காசில் சோறு போடுவதை நான் விரும்பவில்லை. இவர்களுக்கும் மரண தண்டனையையே நான் விரும்புகிறேன். இது ஒருபுறமிருக்க, மரண தண்டனை தவறு என்றால்............... "மணியடிச்சா சோறு மாமியார் வீடு" சிறை தண்டனை தவிர்த்து, 'வேறு என்ன சரியான தீர்ப்பு தருவது சரி' என்று நீங்களே சொல்லுங்களேன்..! இதை சொல்லாத வரை..................... 'மரணதண்டனை வேண்டாம்' என்ற வெற்றுக்கோஷம் உளுத்துப்போகும்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆஷிக்

      இங்கு மனிதாபிமான அடிப்படையில் எதிர்க்கிறோம் மரண தண்டனையை, இன்னொரு காரணம் இங்கு நீதித்துறையும் பாரபட்சமாக இருக்கிறது. இங்கு பெரும்பான்மை இந்துதுத்வ இயக்கங்கள் சிறுபான்மையினர் மீது கலவரங்களை நடத்த, நீதி கிடைக்காத சிறுபான்மையினர் போலி வழக்குகளில் சிறை செல்ல நேரிடுகிறது சில நேரங்களில் பயங்கரவாத செயல்களைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு அது ஒட்டு மொத்த சமூகத்திற்கும் எதிரானதாக மாறுகிறது. பாகிஸ்தானில் இருக்கும் குழப்ப நிலையில் இன்னும் பல கசாப் களை அவர்கள் உருவாக்கி அனுப்ப முடியும். எடுத்துக்காட்டாக பேரறிவாளன், அப்சல் குரு போன்ற அப்பாவிகள் கொலை தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். இங்கு இது போன்ற செயல்கள் நாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரானதாக குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டு விடுகிறது. அதே நேரம் சிறுபான்மையினர் மீதான கலவரம் பயங்கரவாதமாகவோ, அல்லது இறையாண்மைக்கு எதிரானதாகவோ கருதப்படுவதில்லை. அதனால் அவர்களைப் போன்றவர்கள் மரணதண்டனையை எதிர்நோக்கும் அபாயம் இல்லை. ஏனெனில் அவர்கள் அரசுக்கு எதிரானவரகளில்லை.

      இன்னொன்று சிறையில் இருப்பது எளிதான காரியமில்லை. உணவு வேளா வேளைக்கு சுட சுட வருமென்பது செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களுக்கு சாத்தியம். சராசரி மனிதர்களுக்கு சிறைவாசம் என்பது கொடிய தண்டனை. ஒரே அறையில் இருப்பது குறித்து சிந்தித்துப் பார்க்கவும். அது வாழ்நாளையே அரித்து விடும். கோவை குண்டுவெடிப்பில் போலியாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்களுக்கு அதன் இழப்பு ஈடு செய்ய முடியாததேயாகும். சிறையில் இருப்பதும் கொடிய தண்டனை. அவர்களுக்கு(மாயாவுக்கும், பாபு பஜ்ரங்கிக்கும்) உடல் வலிமை இருக்கும் வரை வேலை செய்யப்பணித்து அந்த ஊதியத்தில் உண்டு சிறைவாசத்தைக் கழிக்குமாறு தண்டனை அளிக்கலாம்.

      நீக்கு
    2. //கசாப்புக்கு தூக்குத்தண்டனை தரவில்லை என்றால் அது ஏனைய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு குற்றங்கள் புரிய உற்சாகத்தை அளித்துவிடக்கூடும்//

      இதனால் இந்துத்துவா தீவிரவாதம் அடங்காது, அதற்கு மறைமுகமான அரசு ஆதரவும் உண்டு

      நீக்கு
    3. முதற்கண் தங்கள் விரிவான பதிலுக்கு மிகவும் நன்றி சகோ.தமிழ்.

      எனினும் 'கொலையால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்மனநிலையில் கொலையாளிக்கு மரண தண்டனை அவசியமே' என்று மனது இன்னும் சொல்கிறது. பெரும்பாண்மையினக்கு ஒரு நீதி சிறுபான்மையினருக்கு ஒரு நீதி என்று இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். உதாரணம்.... 'கோத்ரா ரயில் பெட்டி தீ' ஒரு விபத்து என்று ஒரு விசாரணை கமிஷன் சொன்னாலும், 11 பேருக்கு அவர்கள் அப்போது கோத்ராவில் அப்போது இருந்தார்கள் எனபது நிரூபணம் ஆனதால்... தூக்குத்தண்டனை வழங்குகிறது கோர்ட். அப்சல் குருவுக்கு எதிராக எந்த சாட்சியமும் இல்லாவிட்டாலும் இந்திய பெரும்பான்மையினர் மன திருப்திக்காக என்று தூக்குத்தண்டனை வழங்கியது. இதே அளவுகோல்தான்... பெரும்பான்மையினர் சமூகத்து கொலையாளிகளுக்கு தூக்குத்தண்டனை அளிக்கபப்டுவதில்லை..!

      எனவே... தாவூத் இபராஹிம்களுக்கும்... அப்சல்களுக்கும்... கசாபுகளுக்கும்... தூக்குத்தண்டனை தரப்படுமேயானால்... மோடிகளுக்கும்... அத்வாநிகளுக்கும்... தாக்கரேக்களுக்கும்... அதே தண்டனை தரப்பட்டே ஆகவேண்டும் என்ற பார்வையே நீதியாக இருக்க முடியும்..!

      ////அவர்களுக்கு(மாயாவுக்கும், பாபு பஜ்ரங்கிக்கும்) உடல் வலிமை இருக்கும் வரை வேலை செய்யப்பணித்து அந்த ஊதியத்தில் உண்டு சிறைவாசத்தைக் கழிக்குமாறு தண்டனை அளிக்கலாம்.///---இதெல்லாம் எழுத்தில் எழுத நன்றாக இருக்கும் சகோ.தமிழ்..!

      ஆனால், உண்மையில் நடப்பது இப்படியாக இருக்கும் :- அதாவது... ஒரு நாள் வேலை பார்த்துவிட்டு நெஞ்சுவலி என்று வயிற்றை பிடித்துக்கொண்டு தரையில் விழுந்து விடுவார்கள்..! மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று... மறுநாள் "இவர்களின் ஆபத்தான உடல்நிலைக்கு காலம் முழுக்க வேலை பார்க்க கூடாதவர்கள்" என்று மெடிக்கல் செர்டிபிகட் வாங்கி வந்து விடுவார்கள்..! ஹா..ஹா..ஹா........!

      நீக்கு
    4. ஆமாமா அவர்கள் நிச்சயமாக செய்வார்கள்தான். நன்றி !!! :)))


      அப்சலும் அத்வானியும் ஒரே தராசினால் அளக்கப்படட்டும் பின்பு பார்ப்போம்

      நீக்கு
  5. இந்தியாவில் குண்டு வெடிப்புகளில் இறந்தவர்களைக்காட்டிலும் மதக்கலவரங்களினால் மாண்டவர்களே அதிகம். கலவரங்களில் தான் கொத்துக்கொத்தாக கொல்லவும், சொத்துக்களை சூறையாடவும் பின்னர் எந்த வழக்கும் இன்றி சுதந்திரமாக நடமாடவும் முடியும். அதனால் தான் இந்துத்துவா தீவிரவாதம் கலவரங்களை தேர்ந்தெடுக்கிறது. முஸ்லிம்களின் மேல் கலவரம் நடத்த "ரேட்" பேசிய கொடுமையும் இங்கு தான் நடந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மைதான் உதயம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  6. அஜ்மல் கசாபுக்கு கொடுத்து வந்த பிரியாணி இனிமேல் பாபு பஜ்ரங்கிக்கு போகுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போனாலும் பிர்ச்சனையில்ல அவருதான் மக்களின் கருத்தில் "பயங்கரவாதி" இல்லையே !!

      நீக்கு
  7. சகோ சார்வாகன் பதிவில் நீங்களிட்டு பின்னோட்டத்தை வைத்து உங்களை நான் கணித்தது நீங்க ஒரு மார்க்ஸீயவாதி, கம்யூனிஸஂட். ஆனா நீங்க அவர்கள் மாதிரி இல்லாம, இஸ்லாமிய மதவாதிகள் மத புத்தகத்தை கட்டி பிடித்து கொண்டு அலைபோல்போல் மார்க்ஸின் புத்தகத்தை கட்டி பிடித்து கொண்டு திரியாமல்,முதலாளித்துவநாடுகள் என்ற கம்யூனிஸஂட்களின் போலித்தனமான வசை பாடுதல்களில்லாம யாதார்த்தம் பற்றி மக்கள் நல்லாக வாழவேண்டும் என்கின்ற சிந்திக்க தொடங்கியிருக்கிறீர்கள்.
    //இந்தியா இன்னும் குடிநாயகமாக மாற வேண்டுமேயன்றி இந்தியாவை விட ஜனநாயகத் தன்மை குறைந்த பாகிஸ்தான் ஈரான் அல்லது இஸ்லாமிய நாடுகள் சீனா போன்று மாறுவதை நான் விரும்ப வில்லை. குறைந்த பட்ச உதாரணமாக நான் காட்டுவது சில ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ஸ்காண்டிநேவியன் நாடுகள்//
    இது உங்க நேர்மையான கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி !! என்னை அவ்வளவு உன்னிப்பாகவா கவனித்தீர்கள் என்பது ஆச்சரியம். நான் ரொம்ப சாதாரணமான ஆள். எனக்கு மார்க்சியம், பரிணாமம், பெரியாரியம் இப்படி எந்தவொரு சிந்தாந்தமும் நுனிப்புல் மேய்ந்தவன் கதைதான். நான் இந்தவாதி என்று சொல்லுமளவுக்கு ஒன்றை கடுமையாக எதிர்க்கும், அல்லது ஆதரிக்கும் அளவுக்கு சித்தாந்தத் தெளிவு இல்லை. அதனால்தான் விவாதத்தில் பங்கெடுக்க முடிவதில்லை. என் அறிவுக்குத் தோன்றியதை சொல்றது வழக்கம். மத்தபடி தெரியாது என்பதை தயக்கமின்றி ஒப்புக்கொள்வேன். அதே போல் முடியாது என்பதையும் ஒத்துக் கொள்வேன். மார்க்சியம், பெரியாரியம் எனக்குப் பிடிக்கும் அது பற்றி அறிய விரும்புகிறேன். மார்க்சியவாதிகள் வரிக்கு வரி பின்பற்றுமாறு சொல்வதில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் பேசுவது எதார்த்தமான உண்மையாகவே எனக்குத் தோன்றுகிறது.

      நீக்கு
    2. உங்க பதிலுக்கு மிகவும் நன்றி.
      //என் அறிவுக்குத் தோன்றியதை சொல்றது வழக்கம்//
      அதையே தொடர்ந்து செய்யுங்கள். அதன் மூலம் தான் உங்க சிறந்த கருத்துகளை நாம் கேட்க முடிகிறது.
      //இந்தியா இன்னும் குடிநாயகமாக மாற வேண்டுமேயன்றி இந்தியாவை விட ஜனநாயகத் தன்மை குறைந்த பாகிஸ்தான் ஈரான் அல்லது இஸ்லாமிய நாடுகள் சீனா போன்று மாறுவதை நான் விரும்ப வில்லை. குறைந்த பட்ச உதாரணமாக நான் காட்டுவது சில ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ஸ்காண்டிநேவியன் நாடுகள்//
      இஸ்லாமிய உளுத்து போன மத புத்தகங்ககள் மற்றும் மார்க்ஸின் புத்தகங்களின் அடிப்படையில்லாம உங்க சொந்த மக்கள் நலன் சார்ந்த சிறந்த கருத்துகளை இது போல் தொடர்ந்து வையுங்கள். நன்றி.

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்