ஒலிம்பிக் துளிகள் !!


ஒலிம்பிக் என்பது பரவசப்படுத்தும் விடயமாகும். உண்மையாகவே நாடுகளின் ஒற்றுமை இதனால் ஓங்கா விட்டாலும் அத்தனை நாடுகளிலிருந்து வரும் விதவிதமான முகங்கள், நெகிழ்ச்சியூட்டும் வெற்றிகள், கண்ணீர் சிந்த வைக்கும் தோல்விகள் என பலவகையான பரிமாணங்களைக் கொண்டதுதான் ஒலிம்பிக்.


கடந்த 5 ஒலிம்பிக் போட்டிகளையும் கண்டு வருகிறேன். இதில் அனைத்து போட்டிகளையும் காண்பதில்லை, அறிந்து கொள்ள ஆவலும் இருப்பதில்லை. காண்பதற்கான வாய்ப்பும் முழுவதும் கிடைப்பதில்லை. முன்பு தொலைக்காட்சி இருக்கவில்லை. தற்பொது நேரம் இருப்பதில்லை. இருந்தாலும் தொடர்ந்து பார்க்க முடிவதில்லை. முடிவுகளை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் நோக்கம். எனக்குப் பிடித்த போட்டிகள் என்றால் 1996 அட்லாண்டா, 2000 சிட்னி, 2008 பெய்ஜிங் மற்றும் 2012 இலண்டன். ஏதென்ஸில் நடந்த 2004 - ம் ஆண்டு ஒலிம்பிக் குறித்து சரியாக நினைவில்லை.

தற்போதைய ஒலிம்பிக்கில் நினைத்தது போலவே வழக்கம் போலவே அமெரிக்கா முதலிடம் பிடித்து விட்டது. விளையாட்டிற்காக அதிகமாக மெனக்கெடும் நாடு அமெரிக்கா என்பதால் தொடர்ந்து இதை சாதிக்க முடிகிறது. அவ்வளவு பணமும் இருக்கிறது. மற்ற நாடுகள் குறிப்பிட்ட போட்டிகளைத் தவிர அதிகமாக ஆட்டங்களில் கவனமோ கவலையோ கொள்வதில்லை. சீனா தற்போது அதிகமான போட்டிகளை வளர்ப்பதில் மிகப் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

இது வரை அமெரிக்கா 2000 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறது கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில். இது எந்த நாட்டாலும் முறியடிக்க முடியாத சாதனையாகும். இது வரையில் நடை பெற்ற போட்டிகளில் அதிகமான முறை முதலிடம் வகித்த நாடு அமெரிக்காதான். அமெரிக்கா தவிர முதலிடம் பெற்றவை இங்கிலாந்து, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா கடந்த ஒலிம்பிக்கில் அவ்வளவுதான். அமெரிக்காவுக்கு சவால் விடுமளவுக்கு விளையாட்டுப் போட்டிகளில் வெல்வது இபோதைக்கு சாத்தியமில்லை. சோவியத் ஒன்றியமுமில்லை. எதிர்காலத்தில் சீனா  வெல்லும் வாய்ப்புக்கள் இருக்கிறது. 1984 ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வாங்கிய சீனா 28 வருடத்தில் 200 வது தங்கப்பதக்கத்தைக் கடந்திருக்கிறது. சென்ற ஒலிம்பிக்கில் முதலிடம் பெற்றது. இது சீனாவின் பிரமாதமான வளர்ச்சி. ஆனாலும் இது குறைவுதான்.

இந்த முறை அதிகமான தங்க, வெள்ளிப்பதக்கங்களை அமெரிக்காவும் அதிக வெண்கலப் பதக்கங்களை ரஷ்யாவும் வென்றுள்ளன. சீனா அதிக  நாட்களாக பதக்கப்பட்டியலில் முதலிடத்திலிருந்தாலும் கடைசி 4 நாட்களில் 10 க்கும் மேற்பட்ட தங்கங்களை வென்று முதலிடம் பெற்று விட்டது. ஒவ்வொரு நாளும் பதக்கப்பட்டியல் மாறிக்கொண்டேயிருக்கிறது. அதற்கு இன்னொரு முக்கியக் காரணம் அதிகமான ஆட்களுடன் பங்கேற்பதுதான் கிட்டத்தட்ட 500க்கும் மேலான வீரர்கள் பங்கேற்றார்கள், சீனா சார்பில் பங்கேற்றவர்கள் 400 க்கும் குறைவு.

நீச்சலில் மட்டும் 16 தங்கங்களை அள்ளியிருக்கிறது அமெரிக்கா. பெல்ப்ஸ் & அணியின் வெற்றிகளால். ஆனால் அடுத்த ஒலிம்பிக்கில் இது தொடருமா என்று தெரியாது, இரண்டு ஒலிம்பிக்கிலும் மைக்கேல் ஃபெல்ப்ஸ் மூலம்தான் அமெரிக்கா அதிக பதக்கங்களை வென்றது. அடுத்த முறை இது போன்ற ஒரு அதிசயப் பிறவி கிடைத்தால்தான் அமெரிக்கா வெல்லும்.

18 தங்கம் உட்பட 22 பதக்கங்களுடன் உலக சாதனை படைத்த மைக்கேல் பெல்ப்ஸ் ஓய்வு பெறுகிறார். அடுத்த ஒலிம்பிக்கின் போது அவருக்கு 30 வயதில் நன்றாக நீந்த முடியாதாம். பல வருடப் பயிற்சி, இறுதியில் ஓலிம்பிக் போட்டியில் வென்றால் மட்டுமே புகழ். முப்பது வயதுக்குள் ஓய்வு, ஜிம்னாஸ்டிக் என்றால் 20 வயதுக்குள் ஓய்வு. ஒரு வேளை தோற்றால் அத்தனை உழைப்பும் வீண். வெற்றி பெற்றவர்களே இப்படி அரிதாக நினைவு கொள்ளப்படும்போது, இதில் தோற்றவர்களின் நிலை என்னவாகும்.

சில நிமிடக் காணொளியைக் காட்டினார்கள். வீரர்கள் அழுவதை அவர்கள் தோல்வியாலும் தவறினாலும் வாய்ப்பை இழந்த்தால் அழுததைக் காண எனக்கும் கண்ணீர் முட்டி விட்டது. பொதுவாக எனக்கும் மனவலிமை குறைவு என்பதால் எந்த விளையாட்டுப் போட்டியையும் காண்பதில்லை. ஏதோ ஒரு அணியையோ ஒரு வீரருடனோ மனம் ஒன்றிவிட அவர் தோற்றால் நமக்கு அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. என்றாலும் சில போட்டிகளைக் காணாமல் இருக்க முடியவில்லை. அப்படி ஏற்றுக் கொள்ள முடியாத தோல்விகள் டென்னிஸில் ஷரபோவாவும், ஃபெடரரும் கொஞ்சம் கூட போராடாமல் தோற்றது. அடுத்து ஜப்பான் கால்பந்து பெண்கள் அணி இறுதிப் போட்டியில் அமெரிக்காவிடம் தோற்றது.

தடைதாண்டும் போட்டியில் மொனாக்கோ வீராங்கனை பாதியிலேயே காலில் பட்டுவிட்டதால் தரையில் அடித்துக் கொண்டு அழுதது, சீனாவின் தடகள வீர காயம் காரணமாக வெளியேறியது இவர் கடந்த முறையும் காயம் காரணமாக வெளியேறியது இப்படிப் பல.

தடகளம் என்றாலே அது ஜமைக்காவினருக்குத்தான் என்று எழுதி வைக்காத குறை. உசைன் போல்ட் யோஹான் ப்ளாக் என அள்ளி விட்டார்கள். பேட்மிண்டனில் எப்போதும் சீனர்கள். அரையிறுதியில் தோற்ற சீன வீராங்கனைக்கு காயம் காரணமாக வெளியேற சாய்னாவுக்கு ஒரு வெண்கலம் கிடைத்து விட்டது. இம்முறை அதிகம் பதக்கங்கள் பெற்று ஆச்சரியப்படுத்திய நாடுகள் இங்கிலாந்து மூன்றாமிடம் 29 தங்கங்களுடன், அடுத்து தென்கொரியா 13 பதக்கங்களுடன் 5 ஆம் இடம். வட கொரியா முதல் வாரத்திலேயே 4 தங்கம் வாங்கி விட்டது. பின்பு கடைசிவரை மேலும் இரு வெண்கலம் மற்றுமே வெல்ல முடிந்தது. நியூஸிலாந்து 5 தங்கங்களை வாங்கியிருந்தது. பின்பு குண்டு எறியும் போட்டியில் பெலாரஸ் வீராங்கனையின் பதக்கம் பறிக்கப்பட்டதையடுத்து வெள்ளி வாங்கிய நியூஸி வீராங்கனை தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. மற்ற எல்லா நாடுகளும் குறிப்பிட்டளவு பதக்கங்களை வாங்கியிருந்தன. குட்டி குட்டியான ஐரோப்பிய நாடுகளும் பால்டிக் நாடுகளும், லத்தீன் அமெரிக்க நாடுகள், அரேபிய, ஆப்ரிக்க நாடுகள் தலா ஒரு அல்லது இரு  தங்கம் என்ற வகையில் இருந்தன.

வழக்கமாக 10 க்கும் மேலான தங்கப்பதக்கம் வரை வெல்லத் தகுதியான நாடுகள் இம்முறை சோபிக்க முடியவில்லை. ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா க்யூபா ஆகியன. மிகக் குறைவாக வாங்கிய நாடு கிரீஸ் இரண்டே வெண்கலம் மட்டுமே. 


இதுவரை கலந்து கொண்ட ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஒலிம்பிக்கில்  இந்தியா  வளர்ச்சி  கண்டுள்ளது.  நான்  பார்த்த  16  வருட  ஒலிம்பிக்கில்  1996  அட்லாண்டாவில்  லியாண்டர்  பயஸும்(வெண்கலம்),  2000  சிட்னியில்  மல்லேஸ்வரியும்(வெண்கலம்),  2004  ஏதென்ஸில்  ராஜ்யவர்தன்  சிங்  ரத்தோடும்(வெள்ளி)  ஒரு  பதக்கம்  பெற்றவர்கள்.  ஆனால்  2008  பெய்ஜிங்கில்  3  (ஒரு  தங்கம்  இரு  வெண்கலம்) 2 வெள்ளி 3 வெண்கலத்துடன் 55 வது இடம் தங்கம் வாங்காத நாடுகளில் இந்தியாவுக்குத்தான் முதலிடம். இதுவே எதிர்பாராத பெரிய வெற்றிதான். இதை வைத்து அதிகமான பதக்கங்களை வாங்கும் என்பதற்கெல்லாம் எந்த உத்தரவாதமுமில்லை. 15 பதக்கங்கள் கூட வெல்லலாம் அல்லது ஒன்று கூட கிடைக்காமல் போகலாம். அதற்கு உதாரணம்தான் கிரீஸ். 

ரோஹுல்லா நிக்பாய்

சீனாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற திபெத் வீராங்கனை, முதல் பதக்கம் வென்ற ஆப்கானிய வீரர் என அங்கங்கே ஆச்சரியத் துளிகள். ஆப்கானில் பிறந்து ஈரானுக்கு அகதியாக வெளியேறி பின் மீண்டும் தாயகம் திரும்பியவர் ரோஹுல்லா நிக்பாய். 1936 லிருந்து பங்கேற்றாலும் ஆப்கன் எந்த பதக்கமும் வாங்கியதில்லை. கடந்த 2008 ஒலிம்பிக்கில் ஆப்கனுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் (வெண்கலம்). இம்முறையும் வெண்கலமும் பெற்றா டேக்வாண்டோ வீரர். ஆர்வமூட்டிய ஒரு வீரர்களில் ஒருவர். இந்தப் புகைப்படம் அவர் 2008 இல் பதக்கம் வென்ற போது ஆப்கானியர்கள் அவரை வரவேற்றுக் கொண்டாடியபோது. வலது புறமிருப்பது தற்போதைய புகைப்படம். இவர் பதக்கம் வென்றதை ஈரானியத் தொலைக்காட்சி ஒன்று இனரீதியாக  மட்டம் தட்டிப்பேசியது. இவர் முடிதிருத்தகராக வேலைபார்த்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இப்படி இன்னும் பல பரவசங்களுடன் மனதைக் கொள்ளையடித்தது இந்த் ஒலிம்பிக்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்