தமிழன் என்றாலும் இனவெறி இனவெறியே !!

கடைசியாக நடந்த ஐபிஎல் போட்டிகளில் இலங்கையின் நுவன் குலசேகரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அதை ஒரு பிரச்சனையாக்காத போது தமிழ்நாட்டில் இது போன்ற குறுகிய இன உணர்வு இனவெறி சார்ந்த அரசியல் நடைபெறாது என நிம்மதியாக இருந்தது.

சிங்கள அரசின் இனவெறி பேசும் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ, ராணுவத்தினரோ இந்தியா வருவதை பயிற்சி பெறுவதை எதிர்ப்பதே அரசியல் நடவடிக்கையாகும். அதை விட்டு விட்டு விளையாட வருகிறவர்கள், சாமி கும்பிட வருபவர்களை, பிழைக்க வருகிறவரைத்  துரத்துவது என்ன எழவோ தெரியவில்லை.

ஈழத்தமிழர்களுக்கு ஒரு சிறிய வடிவில் விடிவு வருவதையும் தடுப்பார்கள் தமிழ்நாட்டுப் புலி ஆதரவாளர்கள். இந்தக் கும்பல் மீது இருந்த மதிப்பெல்லாம் போய்விட்டது. பகுத்தறிவு பேசும் பெரியார் திக இயக்கத்தவரே இனவாதிகளைப் போல சில மாதங்களுக்கு முன்பு பைக் பந்தையத்திற்காக கோவை வந்திருந்த சிங்களர்களை ஆர்ப்பாட்டம் நடத்தி வெளியேற்றினர்.

தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேவலத்தை ஏற்படுத்தி விட்டார்கள். வந்தாரை வாழ வைக்கும் சென்னை, விருந்தோம்பலில் சிறந்தவர்கள், பண்பாட்டில் சிறந்தவர்கள் என்றெல்லாம் புகழப்படும் தமிழ்ப் பண்பாட்டினைக் கேவலப்படுத்தி விட்டார்கள் இந்தத் தமிழினப் போராளிகள். இந்தத் தமிழினப் போராளிகள் பேட்டி கொடுக்கும்போது அடிக்கடி சொல்வது ஈழப்போரில் 2 இலட்சம் தமிழர்கள் கொல்ல்பட்டார்களாம். தமிழர்களை அதிகமாக சாகடிப்பது இவர்கள்தான்.

முதலாவதாக தமிழகத்தைப் படாத பாடு படுத்தி வரும் தமிழக முதல்வர், தமிழர்களின் உணர்வுகளை மதித்து, கொழும்பிலிருந்து வந்திருந்த கால்பந்து வீரர்களையும், பயிற்சியாளர்களையும் திருப்பி அனுப்பி, அவர்களை அனுமதித்த ஒருவரை பணிநீக்கம் செய்து தமிழினத்தின் மானம் காத்தார்.

அடுத்து ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே போராடும் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த செயல் வீரர்கள் உட்பட தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் சாமி கும்பிட வந்த சிங்களர்களுக்கெதிராகப் போராடி தமது கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளனர். இவர்கள் போன்ற சிங்கள பக்தர்கள் வழக்கமாக பல வருடங்களாக வருகின்றனர். இப்போது மட்டும் என்ன வந்தது ?

தமிழ்நாட்டிலிருக்கும் ஈழ அகதிகளுக்கே இங்கு சிறையில் இருப்பதைப் போலத்தான் சிரமப்பட்டு வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்களே தப்பி ஆஸ்திரேலியாப் பக்கம் ஓடுகிறார்கள். அவர்கள் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் காண விழையாமல் இந்த அறிவாளிகள் சாமி கும்பிட வருகிறவன் கால்பந்து விளையாட வருகிறவனையெல்லாம் துரத்தி புறநானூற்று வீரத்தைக் காட்டியுள்ளனர்.

இன்னும் ஒரு கும்பல், பேருந்தில் சென்ற சிங்களர்கள் மீது கற்கள் செருப்புக்களை வீசித் தாக்கியுள்ளனர். 184 பேர்களில் 65 ஆண்கள், 36 குழந்தைகள், 83 பெண்கள். இதில் பெரும்பான்மையினராக இருந்தவர்கள் பெண்களும் குழ்ந்தைகளும்.  இவர்களைத் தாக்கியதன் மூலம் தமிழர்களின் வீரம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இந்தக் கயவர்கள் வீசிய கல்லொன்று குழந்தைகள் மீது பட்டுத் தொலைத்து ஒன்று கிடக்க ஒன்று ஆகியிருந்தால் அவ்வளவுதான்
தமிழ்நாட்டின் மானத்தை கிழித்துத் தொங்கவிட்டு இருப்பார்கள். இலங்கையில் இதை வைத்தே தமிழர்களை இன்னும் நொறுக்கியிருப்பார்கள். சிங்களர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்த காவல்துறையினருக்குப் பாராட்டுக்கள்.கேவலத்திலெல்லாம் கேவலம் அந்த சிங்களர்கள் தமிழில் கதறி அழுததாகும். இதற்கெல்லாம் என்ன சொல்லப்போகிறார்கள் இந்தக் கயவர்கள். ஆக நடப்பவைகளிலிருந்து தெரியவருவது என்னவென்றால் ஈழத்தமிழர்களுக்காகப் போராடுகிறவன் என்பவன் இனவெறியனாகவே இருக்க வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்துகிறாரகள்.  இலங்கையில் போர் முடிந்து வெவ்வேறு அரசியல் மாற்றங்கள் வந்து விட்டன. போர்க்குற்றவாளிகளில் ஒருவரான பொன்சேகா பங்காளிச் சண்டையில் சிறையில் அடைக்கப்பட்டு விட்டார். இனவெறியர்களே பல பிரிவாக இருக்கின்றனர். பல சிங்கள இனவாத இயக்கங்கள், இனவெறிக்கு எதிரான இயக்கங்கள் அரசுக்கு எதிராகவும் இருக்கின்றன. 

அரசுக்கு எதிராக சிங்கள மாணவர்கள்
தற்போது இந்தியாவின் கொள்கைகள், ஒப்பந்தங்கள் உட்பட தம் வசதிக்காக ஆட்சி நடத்தும் மஹிந்த அரசின் நடவடிக்கைக்கு எதிராக, கல்வித்துறையை பொதுத்துறையிலிருந்து விலக்கி தனியார்மயமாக்கும் முயற்சிக்கு எதிராக சிங்கள மாணவர்கள் மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தினார்கள். அப்படி இலங்கை அரசின் முயற்சியால் கல்வி தனியார்மயமான பின்னர்தான் தமிழ்நாட்டுக் கல்வி வள்ளல் பச்சை முத்து, இலங்கையில் கடை வைக்க முடிந்தது. துணிச்சலிருந்தால் எஸ் ஆர் எம் நிறுவனரைத் தாக்குங்கள். இப்படியான நிலைகள் அதிகமாகும்போது அதாவது இலங்கை அரசும் இந்தியாவின் பெரிய நிறுவனங்களும் ஒப்பந்தங்கள் போடும்போது, குறிப்பாகத் தமிழ்நாட்டைச்சேர்ந்த தொழில் அதிபர்கள் சிங்களரின் பணம் எனக்கு வேண்டாமென்று நின்று விடுவார்களா என்ன ? . சன் குழுமம் சிங்கள மொழியில் ஒரு அலைவரிசை தொடங்கும் காலம் வராமலா போய்விடும் ?

இலங்கையில் கல்விக் கடை விரித்திருக்கும்  இந்தியாவின் முதல்தரப் பல்கலைக் கழகம்
 ஆனால் இதை சிங்களர்கள் நினைத்திருந்தால், இலங்கையைத் துண்டாட நினைக்கும் தமிழ்நாட்டிலிருந்து வரும் தமிழனின் பல்கலைக்கழகத்தை இலங்கை மண்ணில் அனுமதிப்பதா என்று இனவெறியைக் கிளப்பியிருக்க முடியாதா ? இதெல்லாம் இந்தத் தமிழ் இனவெறியர்களின் தலையில் ஏறுமா ?

புலம்பெயர்ந்த புலிகள் ஆதரவாளர்கள், புலிகள் இயக்கத்திற்கு நிதி வசூலித்து பல கோடிகளை வைத்திருப்பவர்களே சிங்கள அரசுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக அங்கங்கே செய்திகள் வருகின்றன. அதே நேரம் தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்படுவதும், தமிழர்களின் நிலங்கள் இராணுவத்தால் ஆக்ரமிப்பு செய்யப்படுவதும் நடக்கிறது. தற்போது சிறுபான்மை முஸ்லிமக்ளுக்கு எதிராகவும் இனவெறி தூண்டப்பட்டு வருகின்றது.

என்னவோ எல்லா சிங்களர்களும் தமிழர்களைக் கொல்லும் வெறியோடு இருப்பது போலவும்தான் இவர்கள் நடந்து கொள்கிறார்கள். அரசும், இனவெறியர்களும், அரசியல்வாதிகளும் செய்வதற்கு பொது மக்கள் என்ன செய்வார்கள். சில மாதங்கள் முன்பு வங்கியைக் கொள்ளையடித்து விட்டதாகக் கூறி அம்மா அவர்களின் காவல்துறை 5 பிஹாரிகளைக் சுட்டுக் கொன்று தள்ளியது. இதனால் பிகார் மாநிலம் அதிர்ச்சியில் உறைந்தது. அதை அவர்கள் தமிழ்நாட்டுக்காரன் என்றால் கொலைகாரன் என்று மொத்தத் தமிழர்களையும் வெறுத்து ஒதுக்கினால் அதை நாம் ஏற்றுக் கொள்வோமா ?

28 வருடங்கள் முன்பு சிங்களப் பேரினவாதிகளால கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் சரி, 4 வருடங்களுக்கு முன்பு போர் உச்சத்திலிருந்த போதும் சரி இனவெறி இல்லாத சிங்களர்கள் தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்தார்கள், உயிருக்குப் பாதுகாப்பும் அளித்தார்கள். அதிகமான தமிழர்கள் சிங்களர்ளுடன் கலவர அச்சம் இன்றியே இன்னும் வாழ்ந்து வருகின்றனர். அதே நேரம் அரசியலில் இல்லாத அப்பாவி சிங்களர்கள் தமிழ் விடுதலை இயக்கங்களால் கொல்ல்பட்ட நிகழ்வுகளும் உண்டு. 50 ஆயிரம் தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கை அரசுதான் 30 வருடங்களுக்கும் முன்பும் ஜேவிபி போராட்டத்தை அழிப்பதற்காக 60 ஆயிரம் சிங்களர்களைக் கொன்றது.

தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தமிழக அரசுக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம் நடத்து நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாதாராண உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. இந்த லட்சணத்தில் தமிழீழம், தனித் தமிழ்நாடு என்று காலத்திற்கொவ்வாத கருத்துக்களெல்லாம் விவாதிக்கப்படுகின்றன.

ஒரிரு வருடங்களுக்கு முன்பு தெலுங்கானப் போராட்டம் வெடிந்திருந்தது. அதன் காரணமாக ராகுல் காந்தி தெலுங்கானா தனி மாநிலமாக்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். உள்துறை அமைச்சர் சிதம்பரமும் இது குறித்து கருத்துக்கள் பகிர்ந்திருந்தார். இதைக் கண்டித்து ஆந்திராவிலிருந்த தெலுங்கானாவுக்கு எதிரான கட்சியைச் சேர்ந்த அமைச்சரொருவர் குறிப்பிட்டார். சிதம்பரம் என்ற தமிழர் ஆந்திராவைத் துண்டாட முயற்சிக்கிறார், அவர் வேண்டுமென்றால் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கட்டும் என்றார். இனவாத அரசியல் என்பது
இதுதான். மக்களிடம் ஏற்கெனவே ஒற்றுமை இருக்கிறது இது போன்ற இனவாதிகள் இனவெறியர்கள்தான் திட்டமிட்டு அதை பிரிக்கிறார்கள்.

மதவெறி, தேசியவெறி, இனவெறி, ஜாதிவெறி என எல்லாமே அது சார்ந்த பொது மக்கள் அனைவரையும் எதிரியாகக் கருத வைக்கிறது. இது போன்ற இன்வெறியை நாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். உண்மையான மக்கள் சாரந்த போராட்டங்களை ஆதரிப்போம். தமிழின வெறிக்கு எதிர்ப்பு தெரிவிப்போம். இனத்தை விட மனிதம் பெரியது. இதே இலங்கையில் தமிழர்கள் இடத்தில் சிறுபான்மையினராக சிங்களரும், பெரும்பான்மையினராக தமிழர்களும் இருந்திருந்தால் நான் சிங்களர்களைத்தான் ஆதரித்திருப்பேன். அதுதான் நேர்மையாக இருக்க முடியும். 

இது மாதிரியான செயல்கள் சிங்கள இனவெறி அரசுக்கு நன்கு பயன்படுமே ஒழிய இலங்கைத் தமிழர்களுக்குப் பயன்படாது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

 1. உங்கள் நியாயமான கருத்து. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல

   நீக்கு
 2. பெயரில்லா7/9/12 3:10 பிற்பகல்

  அருமையான பதிவு சகோ. சிங்களவர்களை எதிர்ப்பதால் மட்டும் தமிழர்களுக்கு தீர்வு வந்துவிடாது... சிங்களவர்களில் உள்ள மிதவாதிகள், சிறுபான்மையினர்கள், மாற்று சிந்தனையாளர்களோடு கைக் கோர்ப்பதன் மூலமே ஈழத் தமிழர்களுக்கு விடிவு வரும் என்பதே எமது எண்ணமும்.. இல்லை என்றால் இருக்கும் சிங்கள அப்பாவி மக்களையும் கூட நாம் இனவெறியாளர்களாக மாற்றிவிடுவோம் என்பதில் ஐயமில்லை.

  மஹிந்தா கடந்த முறை தேர்தலில் நின்ற போது 40 சதவீதக்கும் அதிகமான இலங்கையர்கள் அவனுக்கு எதிராகவே வாக்களித்தனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இக்பால் சிங்கள நடுநிலையாளர்களை நம்முடன் சேர்த்துக் கொள்வதே ஒரே வழி. ஆனால் இனவாதிகளின் பிழைப்பில் மண் விழும் என்பதால் அதை அவர்கள் விரும்புவதில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

   நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்